இன்றையப் பெண்ணியப் படைப்பாளர்கள்
முனைவர் சு. தங்கமாரி
முன்னுரை
பழந்தமிழரின் தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் இன்றளவும் நம்மிடையே இருந்து வருகின்றன. இருப்பினும், சொத்துடைமை சமூகத்தினுடைய பிற்போக்கான சிந்தனையினால் நம் நாட்டினைப் பொருத்தமட்டில் பெண் அடிமைத்தனம் எனும் மோசமான கருத்தாக்கம் பல வழிகளிலும் நம்மைப் பிடித்துள்ளன. இப்பெண் அடிமைத்தனம் எனும் கொடிய சிந்தனையின் வெளிப்பாட்டுச் செயலாக்கமாகப் பெண்களுக்குக் கல்வி மறுத்தல், பால்ய மணம் செய்வித்தல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை மேற்கொள்ள வற்புறுத்துதல் போன்றவை இருந்து வந்தன. இதன் அடிப்படியில் ஆணுக்குப் பெண் அடிமை என்னும் மையத்தைக் கைக்கொண்டு சில பழமொழிகளையும் உருவாக்கத் தொடங்கினர். இதற்குப் பிற்கால அவ்வையாரின் ‘உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு’ என்ற கருத்தும் வலு சேர்த்தது. பின்பு ‘சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை’. ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பன போன்ற பழமொழிகளும் உருவாகின. இப்படி, ஓர் இருண்மை நிறைந்த கருத்தாக்கங்களைக் கொண்ட சமூகத்தில் ஒரு விடிவெள்ளியாக, புதுமையின் தொடக்கமாக, வெளிச்சத்தினைப் பாய்ச்சத் தொடங்கிய காலம் கி. பி. 20ஆம் நூற்றாண்டு ஆகும். இச்சிந்தனை மாற்றத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்கள் இருவர். இவ்விருவருள் ஒருவர் தந்தைப் பெரியார்; பிறிதொருவர் மகாகவி பாரதியார். ஆயினும் தந்தைப் பெரியார் இலக்கியத் தளத்தில் நின்று இயங்கவில்லை. மகாகவி பாரதியாரோ புதிய இலக்கியத் தளத்தின் அனைத்துப் புள்ளிகளையும் தொட்டுத் தொடங்கிய பெருமைக்குரியவர்.
தொடக்க நிலை
எழுபதுகளில், மேலைநாட்டுப் பெண்ணிய இயக்கங்களின் தாக்கம் தமிழ் மண்ணில் தடம்பதிக்கத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பன புதிய கண்ணோட்டத்தில் விளக்கம் பெறத் தொடங்கின. அந்தப் புதிய கண்ணோட்டமானது இலக்கியத் தளத்திலே கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், நாடகங்களாவும் வெளிப்படத் தொடங்கின. நாளெல்லாம் சமையலறையில் அடைபட்டு, இல்லறக் கடமைகளில் மூழ்கி, தங்களுடைய சுயத்தினை அடையாளம் காணத் தெரியாது குழம்பிய பெண் சமூகமானது இத்தளத்தின் வாயிலாகப் புதிய பார்வையினைப் பெற முயன்றதும் முடிந்ததும் இக்காலக்கட்டத்திலே ஆகும். இவ்வாறு 20ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை பெண்ணிய எழுத்துகள் சீர்பட்டும், வளர்ச்சி கண்டும், மரபினை உடைத்தும் புதிய தயத்தினைப் பதித்தது சிறப்புடையதாகும்.
பெண்ணியப் படைப்பாளர்கள்
புதிய பெண்ணியச் சிந்தனை மரபினை இலக்கியவாதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்து வந்தனர். மகாகவி பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், கு . ப. ராஜகோபாலன், அகிலன், ந. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சமுத்திரம், பிரபஞ்சன் போன்ற ஆண் எழுத்தாளர்களும், லெட்சுமி, ராஜம்கிருஷ்ணன், அம்பை, உமாமகேஷ்வரி போன்ற பெண் எழுத்தாளர்களும், பெண்களின் பிரச்சனைகளை மையமிட்டே மிகச் சிறப்பான படைப்புகளைப் படைத்துள்ளனர். அப்படைப்புகள் சில நேரங்களில் பெண் பிரச்சனைகளை மட்டும் முன்வைப்பதாகவும், சில நேரங்களில் அப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் சுட்டிக் காட்டியுள்ளன. மகாகவி பாரதியாருடைய படைப்புகளில் முதன்மையான தளம் புதுக்கவிதையாக நிருந்து வந்துள்ளது. இருப்பினும் சிறுகதையிலும், இவர் தம் வீச்சு இன்றியமையாத ஒன்றாகும். இவரது ‘கந்தாமணி’ சிறுகதை இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். காந்தாமணி ஓர் அழகிய இளம்பெண். அவள் இளம் வயதிலேயே 55 வயது கிழவனுக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றாள். ஆனால் கந்தாமணிக்கு அவ்வாழ்க்கையில் விருப்பமில்லை. எனவே, தான் சிறுவயதில் காதலித்த மலையாளத்து வாலிபனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இந்தக் கதையில் புரட்சிகரமான இரு திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. அன்றைய காலத்தில் இக்கதை மிகப்பெரிய புதுமை நோக்குதலைக் கொண்ட பிரச்னையை ¨மாயப்படுத்தியது ஆகும்.
கல்கி
கல்கி எனும் புனைப்பெயரில் எழுதிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி சமூகப் பிரச்னைகளைப் பற்றி தம் படைப்புகளைத் தரலானார். அவை நாவல், சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்து நின்றன. இச்சமூகப் பிரச்னைகளின் பிரச்னைகளாகப் பெண்ணியப் பிரச்னைகளை மையப்படுத்தி, இவர் எழுதிய எழுத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ஆகும். இவரது ‘கடிதமும் கண்ணீரும்’ எனும் சிறுகதை குழந்தை மணம், குழந்தை கல்வியின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணினத்தின் துன்பங்களை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளது.
மணிக்கொடி காலம்
மணிக்கொடி எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் கு. ப. ரா. ஆவார். இவருடைய கதைகளில் பாலுறவை மையப்படுத்திய சிக்கல்கள் மிகத் துணிச்சலாக வெளிப்பட்டுள்ளன. இவருடைய ‘திரை’ எனும் சிறுகதை ஒரு விதவைப் பெண்ணின் இயல்பான அதேவேளையில் நியாயமான உணர்வுகளை வெளிக்காட்டும் எழுத்தாகும். ஓர் இளம் விதவைப் பெண், தன் தங்கை கணவரிடம் காட்டும் அன்பு - பண்பாட்டுச் சூழலில் சரியானது அன்று எனும் கருத்து நிலைப் பெற்றாலும் அவ்வுணர்வு இயற்கையானது என்பதை மிகத் தெளிவாகப் படைத்துக் காட்டியது சிறப்பு. பெண்ணடிமைப் பண்பாட்டினை மீறி சமூகத்தின் திரையினைக் கிழிக்கும் புரட்சிக் கதையாக இக்கதை அமையப் பெற்றுள்ளது.
தமிழ்ச் சிறுகதைகளை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரிய எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஆவார். இவரது கட்டுடைப்புக் கதைகள் மிகவும் போற்றுதற்குரியவை. அதேவேளையில் சமூகப் பெண்ணடிமை போற்றும் பிற்போக்குச் சிந்தனையாளர்களின் விமரிசனசத்திற்கு ஆளானவை. புதுமைப்பித்தன் கதைகளில் ‘சாப விமோசனம்’, ‘பொன்னகரம்’ போன்றவை அதிகம் விமரிசனத்திற்கு ஆளானவை.இரண்டுமே, சமூகத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்தினைக் கேள்விக்கு உட்படுத்துவன. இவ்விரு கதைகளிலும் ஆணாதிக்க உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார். மேலும், ‘கற்பு’ என்று கதைக்கப்படும் ஒரு பொய்யான உடலியல் புணர்வுகளைப் புறந்தள்ளிச் செல்வது சிறப்பிற்குரியது.
இவ்வழியிலே சிட்டியின் ‘கெளரவநாசம்’ என்னும் சிறுகதையும் இன்றியமையாத ஒரு கதையாகும். மேலும் விந்தனின் ‘மாட்டுத்தொழுவம்’, கலைஞரின் ‘நளாயினி’, அசோகமித்ரனின் ‘கணவன், மகள், மகன்’, ஜெயகாந்தனின் பெரும்பான்மை சிறுகதைகள், அய்க்கண்ணின் ‘ஓர் அகலிகையின் மகள்’, பிரபஞ்சனின், ’நேற்று மனிதர்கள்’, வண்ணநிலவனின் ‘இரண்டு பெண்கள்’ போன்றவை ஆண் எழுத்தாளர்களால் பேசப்பட்ட பெண்ணியச் சிந்தனைகள் ஆகும். இச்சிறுகதைகள் மிக அழகான விதையினைப் பதியம் போட்டுச் சென்றது.
பெண் பெண்ணியப் படைப்பாளர்கள்
தமிழ் எழுத்தாளர் உலகில் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே பெண் எழுத்தாளர்களும் காலந்தோறும் தம் எழுத்துகளின் வாயிலாகப் பெண்ணியச் சிந்தனை மரபினைத் தோற்றுவித்து வந்துள்ளனர். 20ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை உள்ள காலக்கட்டத்தைப் பெண் எழுத்துகளைப் பெண்களே எழுதும் சூழலுடைய தளத்தில் நான்கு கட்டங்களாகப் பகுத்துக் காண இயலும்.
1. முதல் கட்டப் படைப்பாளர்கள்
கிருபை சத்தியநாதன், விசாலாட்சி அம்மாள், வை.மு.கோ., கு.ப.சேது அம்மாள், கிரிஜா தேவி, மூவலூர் இராமாமிர்தம், சகோதரி பாலம்மாள்.
2. இரண்டாம் கட்டப் படைப்பாளர்கள்
குமுதினி , குகப்பிரியை, வசுமதி ராமசாமி, அநுத்தம்மா, குயிலி ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, கோமதி சுப்பிரமணியம்.
3. மூன்றாம் கட்டப் படைப்பாளர்கள்
இராஜம் கிருஷ்ணன், கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஜோதிர்லதா கிரிஜா, சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி, உஷா சுப்ரமணியம், லட்சுமி சுப்ரமணியம், லட்சுமி இராஜரத்தினம்.
4. நான்காம் கட்டப் படைப்பாளர்கள்
அம்பை, காவேரி, சிவகாமி, தமயந்தி, பாமா, ஆண்டாள் பிரியதர்ஷினி, உமா மகேஸ்வரி, அனுராதா, அனாமிகா, அமரந்தா.
5. புலம்பெயர் எழுத்தாளர்கள்
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், காஞ்சனா தாமோதரன், சுமதி ரூபன், லதா உதயன்.
எழுத்துகளை வாசிப்பவர்கள் எனும் தளத்தினைத் தாண்டி படைப்பாளர்களாகத் தங்களை முன்னிருத்திக் கொண்டு எழுதுவதற்கு இத்தனைப் பெண் படைப்பாளர்கள் படைப்புத் தளத்தில் களமாடத் தொடங்கியுள்ளது வரவேற்கத் தகுந்ததாகும்.
பெண்ணியத் தளத்தில் பெண்
திரிபுர சுந்தரி எனும் இயற்பெயர் கொண்ட லட்சுமி ‘தகுந்த தண்டனை’ எனும் பெயரில் முதல் கதையினை எழுதினார். இவரது ‘ஏன் இந்த வேகம்’ என்ற சிறுகதை குறிப்பிடத்தகுந்த பெண்ணியச் சிந்தனை சிறுகதை ஆகும். வாஸந்தியின் ‘நஞ்சு’ எனும் சிறுகதை பெண் சிசுக் கொலை கொடுமையினை மிகத் துடிப்பாகக் காட்டியுள்ளது. ஜோதிலதா கிரிஜாவின் ‘நான் ஒன்றும் நளாயினி இல்லை’ எனும் சிறுகதை பெண்ணியப் பிரச்னையின் சிக்கலுக்கான தீர்வினைச் சொல்லும் மிக அழகான படைப்பாகும்.
அம்பையின் ‘வீட்டின் மூளையில் ஒரு சமையலறை’ என்ற கதை, இல்லத்திற்குள் ஒரு சிறு மூலையில் நாளெல்லாம் அடைந்து கொண்டு, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல்,குடுப்பத்தினர் நலனுக்காக உழைத்துச் சாகும் சாமானியப் பெண்ணினத்தின் உரிமைக் குரலை முன் வைக்கிறது. சிவசங்கரியின் ‘ஒரு வார்த்தை’ என்ற கதை, மிருக உணர்வுடைய கணவன் இனி, தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கும் இளம் பெண்ணின் நிலைப்பாட்டைப் பேசுகிறது. இன்றைய துடிப்புமிக்க பெண்ணியப் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் திலகவதி ஆவார். இவரது ‘போன்சாய்ப் பெண்கள்’ எனும் சிறுகதை மிக எதார்த்தமான உருவகத் தன்மை கொண்ட கதை ஆகும். அழகு என்ற பார்வையில் வளர்ச்சியினைத் தடை செய்யும் மிகக் குறுகிய எண்ணம் கொண்ட ஆண்வர்க்கத்தின் அடிமனதினை மிகத் தெளிவாக இந்தச் சிறுகதை படம்பிடித்துக் காட்டும் படைப்பாகும். சிவகாமியின் ‘யுகசந்தி’ பெண் விடுதலையின் நவீன சிந்தனைப் போக்கை அடையாளம் காட்டும் கதை ஆகும். பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் மன உறுதி ஆணாதிக்கதிற்கு எதிரான போர்க்குரலாக வெளிப்படுகின்றது. உமா மகேஸ்வரியின் ‘கரு’ போன்ற கதைகளும், சமூகத்தில் குடும்பச் சூழலில் அகப்பட்டுக் கொண்ட பெண்களின் மனப் போராட்டங்களை மிக அழகாகப் பதிவு செய்யும் விதம் சிறப்புடையது ஆகும்.
முடிவுரை
பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் வரதட்சணை எதிர்ப்பு, மணவிலக்கு, மறுமணம், ஆண்பெண் நட்பு, சுயமரியாதை, சமூக விழிப்புணர்வு போன்றவை மிக அழகாகக் கதையின் கருவாக்கப்பட்டுள்ளன. ஆண்கள் எழுத்தை விட பெண்கள் எழுத்தில் தீவிரக் குரல் வெளிப்படுகின்றது. ஆண் எழுத்தில் பெண்களை அடிமைப்படுத்திய ஆண்கள் மீதான கோபம் வெளிப்படவில்லை. அதனிடத்தில் அடங்கிப் போன பெண்கள் மீதான அக்கறை மட்டுமே வெளிப்பட்டுள்ளது. இன்றைய காலச்சூழலில் புதுமைப் பெண்ணின் புரட்சி எழுத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் இதன் ஆழமும் வீச்சும் இன்னும் வேகமாக இருக்க வேண்டும். பெரியா வழிச் சொல்ல வேண்டுமாயின் கருப்பையினை அறுத்தெறிந்து வரும் பெண்மையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய காலச்சூழலினை தோற்றுவித்துக் கொள்ள முற்படுவோம்.
துணை நூல்கள்
1. தமிழ் இலக்கிய வரலாறு - சு. பாலசுப்ரமணியன்
2. பெண் மையச் சிறுகதைகள் - இரா. பிரேமா(தொ.ஆ)
3. பெண் ஏன் அடிமையானாள் - தந்தைப் பெரியார்
4. சிவசங்கரன் கதை - மகாகவி பாரதியார்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.