தாராபாரதி கவிதைகளில் சமூகச் சீர்திருத்த நோக்கு
முனைவர் ப. ஈஸ்வரி
தமிழ்க் கவிதைக்கு முதன் முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் பாரதி. ஒருவகை மனப்பான்மையும், பொதுவுடமைக் கோட்பாட்டையும், அறிவியல் முறையில் கவிதையில் புகுத்தியவர் இவரே. தமிழ், தமிழினம், காதல், பெண் விடுதலை, தனிமனிதத்துதி, அரசியல் என்று கூறுகள் பிரித்து தமிழ்க் கவிதைகளைப் படைத்தனர். இன்றைய உலகம், கவிதை உலகம் என்று கூறும் அளவிற்கு கவிதையாசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர் தாராபாரதி. ஏழைகளின் வாழ்வியல் நிலைகளைத் துல்லியமாகத் தன் கவிதையின் மூலம் வெளிக்காட்டுகிறார்.
வள்ளுவரின் வாழ்வியல் நெறியும், இளங்கோவின் இன உணர்வும், பாரதியின் விடுதலை வேட்கையும், பாவேந்தரின் மொழிப்பற்றும் கொண்டு அனைத்தையும் ஒன்றாகப் பாடக்கூடிய ஒரு ஒப்பற்ற கவிஞர் ஆவார். அவருடைய “தாராபாரதியின் கவிதைகள்” என்ற தொகுப்பிலிருந்து சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைக் காணலாம்.
சமூக உண்மைகள்
சமூகத்தின் கொடூரக் குணங்களாகப் படிந்திருக்கும் சாதிக் கொடுமைகளைப் பற்றி,
“சாதிக்கா பிறந்தவர் நாம்? புதுமை தன்னைச்
சாதிக்கப் பிறந்தவர்கள்”
“உதவிகளைத் தருகையிலே வர்ண பேதம்;
பணியிடத்தில் தனியிடத்தில் பாகுபாடு;
சதவீதம் சாதிகளைப் பிரிக்கும்போது
சமதருமம் எப்படித்தான் உருவாகும்?”
என்று சாதி, மதம், பேதம் சமுதாயத்தில் வேரூன்றி மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடிய நிலையைக் கூறுகிறார்.
இந்தச் சாதிப்பிரிவுகள் என்பது ஆரம்பத்தில் உருவானவை அல்ல. அவை மனிதனால் நடுவில் உருவாக்கப்பட்ட நச்சு விதைகளாக,
“பாதியிலே தீட்டி வைத்த
நால் வருணங்கள் - பொதுப்
பாதையிலே தூவிவிட்ட
நச்சு விதைகள்!
கருவறையில் வர்ணபேதம்
போகவில்லையே - இங்கு
கல்லறைகள் கூட ஒன்று
சேரவில்லையே!”
என்று சாட்டையடியாகச் சாடுகிறார்.
தீண்டாமை
இந்த நாட்டைச் சூழ்ந்திருக்கக் கூடிய தீண்டாமை, ஆதிக்க வெறியர்களால் உருவாக்கப்பட்ட தீண்டாமையைத் தீயணைப்பு செய்யவும், ஏற்றத்தாழ்வு இன்றி மனிதர்கள் எல்லோரும் ‘இணை கோடாய்’ வாழ்ந்து வேற்றுமையை, இந்த மண்ணிலே விதைத்த மூடர்களை தீக்கரையாக்கி உள்ளங்கள் ஒன்றுபட வேண்டுமென்பதை,
“தொடுகோடு இல்லாத தனிவட்டம்தான்?
ஏற்றங்கள் தர அந்த வட்டத்திற்கு
இதயங்கள் தொடுகோடு போட வேண்டும்”
என்று நின்றால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று தொட்டதற்கெல்லாம் வெட்டுப்பட்ட தீண்டாமைப் பேய்களைப் பற்றி,
“தீட்டுப்பட்டால் நீங்கள்
தீர்த்தத்தில் மூழ்குவீர்;
தீட்டுக் குலம் தொட்டால்
தீர்த்தமும் தீட்டென்பீர்!
தீட்டை அகற்றுகிற
தீர்த்தமும் தீட்டானால்
தீட்டை விலக்குவதற்கு
தீக்குளிக்கப் போவீரா”
என்று தீமையிருள் அகன்று நன்மையொளி பரவ வேண்டும் என்கிறார்.
ஊழலில் வாழும் அரசியல்
சரிவு கண்டு போன சமூகத்தின் அடையாளமாய், அவமானமாய் நாறிக் கொண்டிருக்கும் ஊழலான அரசியலை,
“சொந்தத்தில் ஒரு கட்சி
தொடங்குவார்; பின்னதனை
சோற்றுக்கு விற்றிடுவார்”
என்றும் நிலையில்லாத மனிதாபிமானமற்ற அரசியலையும், ஊரை ஏய்த்துச் செல்வத்தைச் சேர்க்கின்ற ஊழலையும் நோக்கி,
“ஊரை ஏய் - என்பதுதான்
உயிரெழுத்து;
உடம்பெல்லாம் பொய் - அதுதான்
மெய்யெழுத்து;
ஊழலும் இலஞ்சமும்
உயிர் மெய்யெழுத்தென்றால்
‘அடி உதை’ என்பது தான்
ஆய்த எழுத்தாகிறது!”
என்று மனசாட்சியை விற்று, தாய்மண் புகட்டிய அறங்களையெல்லாம் தாய்ப்பாலோடு மறந்தவர்களும், தன்மானத்தைத் துறந்தவர்களும், சமயம் தேடிப் பதவியை நாடி சந்ததியை விற்பவர்கள் என்று எல்லாத் துறைகளிலும் அரசியலையும், ஊழலையும் மூடு மந்திர முனகல்களையும், அரூப அலறல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
தன்னம்பிக்கையும் - சுய முன்னேற்றமும்
போர்க்குணம் வாய்ந்த மனிதாபிமானம், புரட்சிக்குரலாய் நம் செவிப்பறைகளில் மோதுகிறது. காலம் வந்தால் எல்லாம் தானாய் மாறும் என்னும் தளர்வுத் தத்துவம் தூக்கி எறியப்பட்டுக் காலத்தை மாற்றும் மிகப் பெரிய சக்தியாக நம்பிக்கையை,
“வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!”
என்று இளைஞர்களின் உள்ளத்திலே அச்சத்தைத் தவிர்த்து ‘என்னால் எதுவும் சாதிக்க முடியும்’ என்கிற ஆணிவேரை நிலைக்கச் செய்கிறார்.
பெண்ணியம்
தலைமுறைத் தலைமுறையாகப் பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற பணிச்சுமையை ‘ஆணுக்கு நிகர் பெண்’ என்று பாரதி கூறியிருப்பது போல, ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளிலும் சரிநிகர் சமானமாக சாதித்துக் காட்டும் வலிமையும் திறமையம் பெண்களுக்கு உண்டு என்பதை,
“சூரியனைக் கூட சொக்கட்டான் ஆடலாம்”
என்ற கவிதையில் பெண்ணினத்தின் மேன்மையைக் கூறுகிறார்.
தட்சணை - சடங்கு
வரதட்சணைக் கொடுமையால் முதிர் கன்னியாகி நாட்டுப்புறப் பெண்களும், நகர்ப்புறப் பெண்களும் அடைகின்ற இன்னல்களை,
“ஆசையை நெஞ்சில் எரிக்கின்றேன் - அதை
ஆடைகள் கட்டி மறைக்கின்றேன்!
“காதுப் பொத்தலை மூடவில்லை - என்
கல்யாணம் கை கூடவில்லே!
சீதனம் கொடுக்க ஏதுமில்லே!
சிரிப்பும் இப்போ மீதமில்லை”
என்பதையும், வரதட்சணைக் கொடுமையால் புகுந்த வீட்டை விட்டுப் பிறந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் நிலைமையை,
“சீதையை எரிக்க
ராமன் வில்லே
விறகாய் ஆகிறது;
சீதனமின்றித் தாய்வீடே - சிலர்
சிறையாய் மாறுகிறது!”
என்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன.
சீர்த்திருத்தம்
கலப்புத் திருமணம், விதவை மறுமணம் போன்றத் திருமணங்களை,
‘விதவை என்று
விலக்கி வைப்பது
சிதை வைப்பதற்கா?
சிந்தித்துப் பார்!”
என்று விதவைத் திருமணத்திற்கு அச்சாகவும், கலப்பு மணத்திற்குப் புரட்சி வேராகவும் பெண்களைச் சித்தரிக்கிறார்.
வறுமைக்கோடு
உலகத்தைத் தாங்குகிறவன் உழைப்பாளி. ஆனால் அவன் எதையெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்பதையும், தங்களுடைய தேவைகளுக்கே ஏழைகள் ஏங்க வேண்டியிருப்பதையும் தங்களுடைய,
“இரைப்பை எங்களுக்கு
இன்னொரு சுவாசப்பை!”
என்ற வரிகள் ‘ஏழைகளின் வறுமை நிலையை’ துல்லியமாகக் காட்டுகின்றன.
இவ்வாறு சமூகத்தின் குணங்களாகப் படிந்திருக்கும் சாதிக்கொடுமைகள் மீதும், சரிவு கண்டு போன சமூகத்தின் அடையாளமாய், அவமானமாய் நாறிக்கொண்டிருக்கும் ஊழல்கள் மீதும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் தன்னுடைய கவிதையில் காட்டுகிறார் கவிஞர் தாராபாரதி.
குறிப்புகள்
1. கவிஞர் தாராபாரதி கவிதைகள்
2. புதுக்கவிதை வரலாறு
3. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் சி. பாலசுப்பிரமணியம்
4. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு - முனைவர் அ. அ. மணவாளன்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.