சுப்ரதீபக் கவிராயரின் படைப்பாளுமை
முனைவர் ப. ஈஸ்வரி

“சுப்ரதீபன்” என்றால் “கீர்த்தி பெற்றோன்” என்று பொருள். இவ்வுலகில் உண்டு உறங்கிக்கொண்டு காலத்தைப் போக்கும் மனிதர்களிடையே தன் கவித்திறமையை வெளிப்படுத்துவோர் சிலரே! அக்கவிவேந்தர்களில் ஒருவராகத் திகழ்நதவர்தான் 17 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுப்ரதீபக் கவிராயர் ஆவார்.
இவர் சிவகங்கைப் பாளையப் பகுதி (ஜமீன்), பழையனூரை அடுத்த கொழுனை என்னும் ஊரில் பொற்கொல்லர் மரபில் பிறந்தவர். கவிராயர் வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்ததன் காரணமாகக் கிறித்தவரானவர் என்ற கருத்து நிலவுகிறது. சிற்றிலக்கியம் படைத்தவர்களுள் சிறந்தவராக இவரும் கருத்தப்படுகிறார்.
கவிராயர் நிலக்கோட்டைக் கூளப்பநாயக்கர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடிய “கூளப்ப நாயக்கன் காதலும்”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூதும்” காமச்சுவை மிகுந்தனவாகும். இவை மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் சிலவும் இவர் இயற்றியுள்ளார். இவரின் பாடல்களில் கருத்துச் செறிவும், நடையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதிய பாங்கும், வர்ணனைகளும் அதிகம்.
விறலி என்பவள் தூது செல்லும் இளங்குமரி. அவளைத் தூதாக விடுப்பது விறலிவிடு தூதாகும். கவிராயர் கூளப்பநாயக்கன் மீது பாடிய விறலிவிடு தூதினைப் பின்பற்றியே சிவகாமி சேதுபதி என்பவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு “சதாவதானம்” என்ற நூலை “சரவண பெருமாட்கவிராயர்” என்பவரும் விறலிவிடு தூதை இயற்றினார்.
கூளப்ப நாயக்கன் காதல்
இந்நூல் கூளப்ப நாயக்கனின் நகர் சிறப்பு பற்றியும், அவர் வேட்டைக்குச் சென்றது பற்றியும், அங்கே சோலையில் “நவரத்தின மாலை”யைக் கண்டு அவள் அழகில் மயக்கம் கொண்டு காந்தர்வ மணம் புரிந்து இன்பம் துய்த்தது குறித்தும், இறுதியில் ஒன்று சேர்ந்து வாழ்வது குறித்தும் கூறப்பட்டுள்ளன. சொல் நயமும், சுவை நயமும் மிக்கன இவரின் வரிகள். கூளப்ப நாயக்கன் திருமலை நாயக்கரின் மைத்துனன் என்பதைக் கவிராயர்,
“சித்தசரா சேந்த்ரன் திருமலை கண்ட மன்னன் மைத்துனன் வேளாக வரும்பெரிய நாகேந்திரன்”
என்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன.
கூளப்ப நாயக்கன் வேட்டைக்குச் செல்கையில் வேட்டை நாய்களால் மான்கள் கவ்வப்பட்ட செய்தியை,
“ஒழுக்கமுள்ளவன் தாசியின் கைகளில் சிக்கியது போல மான்கள் நாய்களிடம் சிக்கின”
என்று கூறுவதில் உண்மை நயத்தினை அறிய முடிகிறது.
அத்தினி, சித்தினி, பத்தினி, சங்கினி என்ற நான்கு வகைப் பெண்களில் பத்தினிப் பெண்ணாக விளங்கக் கூடிய “நவரத்தினமாலை”யை வருணிக்கும் பொழுது, “சிற்பிகள் எவ்வளவோ முயன்றும் அவளைப் போன்றே ஒரு சிற்பத்தைச் செய்ய முடியவில்லை. அதனால் பிரம்மாவே அவளைப் பொற்பாவையாகச் செய்து அனுப்பினான்” என்கிறார்.
கூளப்ப நாயக்கனின் ஆட்சிமுறையைக் கூறும் போது மனுநீதி தவறாமல் ஆட்சி செய்கிறான் என்றும், அவன் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் அவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கக் கூடியவர்கள் என்பதும் அறியப்படுகின்றது. வேண்டுவோர்க்கு வாரி வழங்கும் தன்மையராம். கவிராயரின் இந்நூல் இவ்வாறு இருக்க, தனிப்பாடல்களோ மக்களுக்கு உகந்த கருத்துக்களை எடுத்தியம்புவனவாக உள்ளன.
தியாகராசப் பெருமான்
திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராசப் பெருமானைப் பற்றி வேடிக்கையாக ஒரு பாடல் பாடியுள்ளார். அதில்,
“ஒரு மாடும் இல்லாமல் மைத்துனர்
உலகம் எலாம் உழுதே உண்டார்
நரைமாடேலா ஒன்றிருக்க, உழுது உண்ண
மாட்டாமல் நஞ்சை உண்டீர்!”
“இருநாழி நெல் இருக்க, இரண்டு பிள்ளை
தான்இருக்க இரந்தே உண்டீர்!
திருநாளும் உண்டாச்சே, செங்மகலைப்
பதிவாழும் தியாகனாரே”
என்கிறார்.
இப்பாடலில் தியாராசப் பெருமாளே! உம் மைத்துனரான திருமால் ஒரு மாட்டின் உதவியும் இல்லாமல் பன்றி அவதாரமெடுத்து உலகமெல்லாம் உழுது உண்டார். உமக்கு வெள்ளை நிறத்தையுடைய மாடு ஒன்றிருக்கவும் உழுது உண்ணாமல் நஞ்சை உண்டீர் என்றும், உம் மனைவியான உமையம்மையிடம் இருநாழி நெல் விதைப்பதற்கு இருக்கவும், விநாயகன், முருகன் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கவும், உழுது பயிர் செய்து வாழாமல் பிச்சை எடுத்து உண்டீர். இத்தகைய உனக்குத் திருவிழாவும் நடக்கப் போகிறது என்றால் வேடிக்கையாக இருக்கிறது என்று நகையாடுகிறார்.
அடுத்ததாக,
கனவால் உண்டான துன்பத்தை உரைப்பதாக சிவபெருமானைப் பற்றிக் கூறும்போது உயரத்தில் நிகரில்லாத கயிலாய மலையை உடைய சிவபெருமான் ஏழு ஆறுகளுள் ஒன்றான கங்கையைச் சடையில் கொண்டவன். அவன் “ஏழு நாட்களுள் ஒன்றான செவ்வாயைத் (சிவந்த இதழை) தா” எனக் கேட்டான். நான் “ஏழு நாட்களுள் ஒன்றான வியாழனைத் (பொன்னைத்) தருவாயாக” என்றேன். என்னிடம் “பொன்” இல்லை என்பது போல் நான் உணவை உண்பது “ஓட்டில்” என்றான். எல்லாக் காலத்திலும் புலவர்களுக்குக் கிடைக்கப் பெறுவது ஓடுதான் என்பதாக,
“ஏழில் ஒருகிரியான் ஏழிலே ஒன்று அணிவான்
ஏழிலே ஒன்று ஈ எனக் கேட்டான் ஏழிலே
ஒன்று ஈ என்றேன்
உண்பது ஓடு என்றான்”
என்று பாடினார்.
இல்லறத்தில் எழில் நலம்
இளமையும் எழிலும் இருக்கும்போது ஏறெடுத்துப் பார்க்கும் ஆடவர்கள் எழில் நலம் குறைந்த பிறகு அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை என்பதை,
“கச்சிருக்கும் போது கரும்பானேன்
கைக்குழந்தை
வச்சிருக்கும்போது மருந்தானேன்
நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார் காணவும்
நான் வேம்பானேன்”
என்ற பாடலில் திருமணமான புதிதில் ஒரு இளைஞன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, கோயிலுக்குச் செல்கிறான். செல்லுகின்ற வழியிலே அவளுக்கு முள் குத்திவிட்டது. அவள் ‘ஆ’ என்று அலறியதும், இவன் ஓடோடிச்சென்று அவளது காலைப் பிடித்து மெதுவாக அந்த முள்ளை நீக்குகிறான். அடடா! சனியன் பிடித்த முள் குத்திவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.
வரலாறு மீண்டும் திரும்புகிறது. அதே இளைஞன், அதே மனைவியுடன் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர் மகனையும், மகளையும் சேர்த்து அழைத்துக் கொண்டு, அதே போலக் கோயிலுக்குச் செல்கிறார்கள். இப்பொழுதும் அவளுக்கு முள் குத்திவிடுகிறது. அவளது அலறும் சத்தம் கேட்டதும், சனியனே! பார்த்து வரக்கூடாதா? முள்ளைக் குத்திக்கொண்டு தொல்லைப் படுத்துகிறாயே! என்று கடுகடுக்கிறான். எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?
இதைத்தான் நற்றிணையில் ஒரு பாடல், இளமையிருந்தாலும், முதுமையானாலும் இல்லறத்தில் வாழ்பவர்கள் ஒரே நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அதைப் போன்றே பெண் ஒருத்தியின் பேரழகையும் வியந்து பாராட்டுகிறார் கவிராயர். அதனை,
“ஏர் பெரிய
துன்னுவிழி நால் மூன்று! தூயதனம்
நாலிரண்டு
பன்னிரண்டு சிற்றிடையாம் பார்”
என்று பாடியுள்ளார்.
பாடலுக்கு இரங்குதல்
குன்னரங்க மன்னன் இறந்தபோது பாடிய பாடல் ஒன்றில்,
“தென்னரங்கன் அரங்கன் என்பார்
வாய்திறவான்
கண்விழியான், திரும்பிப் பாரான்
என் அரங்கன்? தூங்கு அரங்கன்
ஏழையர்பால்
கருணையுடன் இரங்கா ரங்கன்
மழவரங்கன்
அருளித்தரும் மைந்தனான
குன்னரங்கா
எனக்கு இரங்காய், கொண்டு
வந்த
தமிழுக்கு இரங்கிக் குழைந்து எழாயே”
என்று திருவரங்கத்தில் உள்ள திருமாலைச் சபையின் தலைவன் என்பர். அவன் வாய்திறக்க மாட்டான். அவன் கண்ணைத் திறந்து பார்க்க மாட்டான். திரும்பிப் பார்க்க மாட்டான். அவன் எத்தகைய அரங்கன் என்றால், தூங்குகின்ற அரங்கன். ஏழையரிடம் அருள் காட்டி இரங்காத அரங்கன். இப்படி இருக்கும் போது மன்னரைத் தனக்கு உறுப்பாகக் கொண்ட தமிழுக்குத் தலைவனான மழவரங்கன் என்பவனின் மகனான “குன்னரங்கன்” என்னும் பெயரை உடையவனே நீ எனக்கு இரங்க மாட்டாய் என்றாலும் நான் பாடிய பாடலுக்கு இரங்கி உயிர் பெற்று எழுவாயாக என்று பாடித் தமிழின் உயர்வைக் காட்டுகிறார்.
முடிவுரை
இப்படியாக சொல் நயமும், சுவை நயமும் மட்டுமல்லாமல் கவிராயரின் பாடல்களில் கருத்துச் செறிவும் மிகுந்துள்ளமை புலப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.