ஒப்பீட்டு நோக்கில் தமிழ் - மலையாள மொழிகளில் ஏவல் வினைகள்
முனைவர். விஜயராஜேஸ்வரி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்,
காரியவட்டம், திருவனந்தபுரம், கேரளா.
தமிழ் மொழியின் சொற்களை இலக்கணவியலாளர்கள் பலவகைகளாகப் பிரிப்பர். அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியர் இதனை,
”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங்காலை காலமொடு தோன்றும்” (தொல்.சொல். 683)
என்பார்.
தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்றுவரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து.
கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் என்று கொள்ளப்படும் என்பார் பேரா. பொன். கோதண்டராமன். ( இக்காலத் தமிழ் இலக்கணம், 2002, பக்-44)
வினைச்சொல் வகைப்பாடுகள்
தமிழ் வினைச்சொற்களைப் பல்வேறு அடிப்படைகளில் பலவகைப்பாடுகளுக்கு இலக்கணவியலார்கள் உட்படுத்தி உள்ளனர். இதன் பயனாகப் பல்வேறுபட்ட வினை வகைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மெல்வினை, வல்வினை என்பது ஒரு வகை.
வினைச்சொற்கள் ஏற்கும் காலம் காட்டும் உருபுகளை அடிப்படையாக வைத்துக் கிரால் என்பவர் பன்னிரண்டு வகைகளாகப் பிரிப்பார்.
ஆர்டன் என்பவர் ஏழு வகைகளாகப் பிரிப்பார்.
பேரா. பொன் கோதண்டராமன் அவர்கள் வினைச்சொற்கள் ஏற்கும் காலங்காட்டும் உருபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆறுவகைகளாகவும்; ஒழுங்கில்லா வினைகளையும் சேர்த்து மொத்தம் ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளார்.
வினையடிகளை அடிப்படையாக வைத்துத் தனிவினை, கூட்டுவினை எனப் பிரிப்பர். வினைச்சொற்களின் பொருட்பண்புகளை அடிப்படையாக வைத்து; செயல்வினை, நிலைவினை, இயங்குவினை என்றும் பிரிப்பர்.
தன்வினை பிறவினை என்பது மற்றுமொரு வகைப்பாடு. தெரிநிலை வினை குறிப்பு வினை என்பது மரபிலக்கணங்கள் கூறும் வகைப்பாட்டு முறை. செய்வினை, செயப்பாட்டுவினை என்பதொரு முறை. முற்று, எச்சம் என்பது மற்றுமொரு வகை. வினைச்சொல்லுடன் பிற வினைகள் இணைவதனை வைத்து முதல்வினை, துணைவினை என்ற பகுப்பையும் காணலாம். இவ்வாறு தமிழ் வினைச்சொற்கள் பல வகைகளான பகுப்புகளைக் கொண்டுள்ளன.
மலையாளத்தில் வினைச்சொற்களின் பாகுபாடு
கேரள பாணினியம் என்ற மலையாள இலக்கண நூலின் ஆசிரியரான ஏ. ஆர். இராஜஇராஜவர்மா அவர்கள் மலையாள மொழியின் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.
தற்கால மலையாள மொழிக்கு இலக்கணம் வகுத்த ஆர். இ. ஆசர் அவர்கள் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பிரிவுகளாகவேப் பிரித்துள்ளார்.
தற்கால மலையாள வினைச்சொற்களைக் குறித்து ஆய்ந்த ஏலியாஸ் என்பவர் வினைகளை வினைமுற்று, வினையெச்சம் என்றே பிரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மலையாள மொழியின் வினைச்சொற்களை பேரா. சூரநாடுகுஞ்ஞன் பிள்ளை அவர்கள் பதினாறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இறந்தகால இடைநிலைகளின் அடிப்படையில் இந்த வினைப்பகுப்பு அமைந்துள்ளது. மலையாளப் பேரகராதியிலும் இராமசரிதம், கன்னச இராமாயணம், இராம கதாப்பாட்டு, பாரதமாலை போன்ற மலையாள நூல்களின் விளக்கவியல் இலக்கணங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுள்ளது.
திராவிட மொழிகளைக் குறித்து ஆராய்ந்த பேரா. ஜான்சாமுவேல் அவர்கள் அவற்றின் வகைப்பாடுகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குவார்.
”திராவிட மொழிகளின் வினைச்சொற்களில் தன்வினை, பிறவினை, இயக்குவினை என்ற மூவகையான வினைவகைகளையும், ஏவல் வினை, நிபந்தனை வினை, வியங்கோள் வினை என்னும் பல்வேறு வினைப்பொருள்களையும் (Moods) காணலாம். வினைச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்க ஐரோப்பிய மொழிகளில் முன்னொட்டுக்கள் (Prepositions) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், திராவிடமொழிகளில் துணைவினைகளும் எச்சமாக அடுக்கும் வினைகளும் (Particles and Infinitives) பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் வினைச்சொற்களைக் காலங்காட்டும் முறை, வினையின் தன்மை, பால் காட்டும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபடுத்தலாம்” (பேரா. ஜான்சாமுவேல், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர்அறிமுகம், 2008, பக், 176)
எனவே தமிழிலும் மலையாளத்திலும் பல அடிப்படையிலான வினைச்சொற்களின் வகைப்பாடுகள் காணப்படினும், இவற்றுள் எந்த அடிப்படையிலான பகுப்பு தமிழ் மலையாள வினைச்சொற்களைத் தெளிவாக விளக்கப் பயன்படுமோ அப்பகுப்பே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தமிழ் - மலையாள கணினி வழி மொழிபெயர்ப்பிற்கு வினைச்சொற்கள் குறித்த தெளிவினை அளிக்க இப்பகுப்பு முறைகள் இன்றியமையாததாகும். இங்ஙனம் அமைந்துள்ள பல பகுப்பு முறைகளில் வினைமுற்று, வினையெச்சம் என்ற பகுப்பு முறை தமிழ் - மலையாள மொழிகளில் நவீன இலக்கண ஆசிரியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மலையாள இலக்கணங்களில் முற்றும் எச்சமும்
தமிழில் முற்றுவினை எச்சவினை என்பதைக் குறித்து பேரா. இரா. சீனிவாசன் அவர்கள் குறிப்பிடுவதாவது,
”தமிழ்வினைகள் முற்று, எச்சம் என இருவகைப்படும். முற்று வினை வாக்கியத்தில் பயனிலையில் முடியும். எச்சவினைகள் பெயரையோ, வினையையோ எஞ்சி நிற்கும். சொல்நிலையில் முற்று வினைகள் பால் ஈறுகள்பெற்றோ, பெறாமலோ வரும். எச்ச வினைகள் பால் ஈறுகள் பெறுவதேஇல்லை” (இரா. சீனிவாசன், மொழியியல், 2009, பக்- 146)
மலையாள மொழியின் இலக்கண நூலான கேரள பாணினியம், அம்மொழியின் வினைச் சொற்களை,
1) முற்றுவினா (வினைமுற்று)
2) பற்றுவினா (வினையெச்சம்)
என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. (கேரளபாணினியம், அறிமுகம்)
முற்று வினா முடிவுற்ற பொருளைக் கொண்டும், ஒரு தொடரின் இறுதியிலும் அமையும். பற்று வினா பொருள் முடிவுறாமலும் முற்று வினையின் முன்பாகவும் அமையும். எனவே தமிழ் மற்றும் மலையாள வினைச்சொற்கள் வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன; இவ்விரு வினைகளின் பண்புகளும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டுஅமைகின்றன.
தமிழில் வினைமுற்று
தமிழ் மொழியில் பொருள் நிறைவுற்று / முற்றுப் பெற்று வரும் வினைகள் வினைமுற்று என்ற வகையில் அடங்கும். இவ்வினைகள் வினையடி, கால இடைநிலை, பால், இட விகுதி என்ற அமைப்பில் அமையும்.
மலையாள மொழியில் வினைமுற்று, பிற திராவிட மொழிகளிலிருந்தும் வேறுபட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வினைமுற்றுக்களில் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் எவ்வித இயைபும் கிடையாது. அதாவது பால், எண், இட விகுதிகள் மலையாள வினைமுற்றுக்களில் காணப்படுவது இல்லை.
வினைமுற்று வகைகள்
வினைப் பொருண்மையின்அடிப்படையில்மூன்றுவகையானவினைமுற்றுவகைகள்தமிழிலும்மலையாளத்திலும்அமைந்துள்ளன. அவையாவன,
1) ஏவல் வினைமுற்று (Imperative Mood)
2) கூற்று அல்லது செயல் வினைமுற்று (Indicative Mood)
3) வியங்கோள் வினைமுற்று (Optative Mood)
ஏவல் வினைமுற்று( Imperative Mood)
தமிழில் பெரும்பாலான வினைகளும் ஒருமை ஏவலாகச் செயலாற்றும். (இசுராயேல், வினைச்சொற்களின்இலக்கணம்)
ஏவல் வினை முன்னிலையில் உள்ளவருக்கு இடும் வேண்டுகோளாகவோ, கட்டளையாகவோஅமையும். (பேரா. இரா.சீனிவாசன்)
தமிழ் ஏவல் வினைச்சொற்களில் ஒருமையும் பன்மையும் உண்டு. இவ்விரு வகையிலும் உடன்பாடும், எதிர்மறையும் உண்டு.
ஏவல் வினை அமைப்பு
தமிழில் ஏவல் வினை அமைப்பு
[வினையடி + (பன்மைவிகுதி)]
எ.கா:
வா (நீவா) - ஒருமை
வாருங்கள் (நீங்கள் வாருங்கள்) - பன்மை
மலையாளத்தில் ஏவல் வினைமுற்று முன்னிலையிடத்தில் வழங்கி, ஒருமையும் பன்மையும் கொண்டு அமைந்துள்ளது.
மலையாளத்தில் ஏவல் வினை அமைப்பு
[வினையடி + (பன்மைவிகுதி)]
எ.கா:
வா (நீ வா) - ஒருமை
வரூ ( நிங்ஙள் வரூ) - பன்மை
உடன்பாட்டு ஏவல் வினை முற்று
தமிழில் உடன்பாட்டு ஏவல் வினைமுற்று வினையடியை ஒத்தது. இதற்கு உருபு எதுவும் கிடையாது. அதாவது,
ஏவல் காட்டவும் முன்னிலை குறிக்கவும் தனி உருபன் எதுவும் கிடையாது. ”வெற்றுருபன்” (Zero Morpheme) மூலம் இவ்வுருபன்கள் குறிக்கப்படுகின்றன.
எ.கா:
(நீ) வா = வா
(நீ) சொல் = சொல்
மலையாளத்திலும் உடன்பாட்டு ஏவல் வினைமுற்று; வினையடியை மட்டுமே எடுத்து வரும். ஏவலையும் முன்னிலையையும் சுட்ட தனி உருபன் எதுவும் கிடையாது. அவை தமிழைப் போலவே வெற்றுருபன் மூலம் குறிக்கப்படுகின்றன.
எ.கா:
(நீ) வா = வா
(நீ) பரா = பரா
தமிழிலும் மலையாளத்திலும் ஏவல் ஒருமை அமைவதில் வேறுபாடு எதுவும் அமைவதில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.
எதிர்மறை ஏவல் வினைமுற்று
தமிழில் எதிர்மறை சுட்டும் ஏவல் ஒருமை வினைமுற்று, வினையடியுடன், எதிர்மறை காட்டும் உருபான “-ஆத்” தையும் ஒலி இசைவு ஒட்டான “-ஏ” வையும் எடுத்து வரும்.
இதன் அமைப்பு,
[வினையடி + “-ஆத்” + “-ஏ”]
எ.கா:
வராதே
போகாதே
தமிழில் வினையடியுடன் ”கூடாது” என்ற சொல் இணைந்தும் எதிர்மறை ஏவல் உருவாக்கப்படுகின்றது.
[வினையடி + கூடாது]
எ.கா:
வரக்கூடாது, செய்யக்கூடாது.
மலையாளத்தில் எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று பல வகையான எதிர்மறை சுட்டும் சொற்களின் மூலம் குறிக்கப்படுகின்றது. இச்சொற்கள் வினையடியுடன் இணைந்து எதிர்மறை ஏவல் வினைமுற்றை அமைக்கும். இந்த எதிர்மறை சுட்டும் சொற்கள் ஆவன,
1) அருது
2) அண்டா
3) பாடில்லா
4) கூடா
5) என்னில்லா(ஆசர், மலையாளம், பக் - 308)
என்பன.
எ.கா:
தமிழ்:
வராதே சொல்லாதே
மலையாளம்:
வரருது பரயருது
வரண்டா பரயண்டா
வரான் பாடில்லா பரயான் பாடில்லா
வண்ணு கூடா பரஞ்ஞு கூடா
இங்கு தமிழில் எதிர்மறை ஒட்டான “-ஆதே” வருமிடத்தில் ”அருது” எனும் முழுச்சொல் இடம் பெற்று, எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.
இயலாமைப் பொருளுணர்த்தும் கூடாது என்னும் சொல் விலக்குப் பொருளில் வருவது போன்றே அரிது என்னும் பொருளிலும் வரும்.
சான்றாக,
காண்பதற்கு அரிது, செய்வதற்கு அரிது என்பதில் வரும் சொல் ”அருது” எனத் திரிந்து மலையாளத்தில் வழங்குவதாக தேவநேயப்பாவாணர் குறிப்பிடுவார்.
மழயத்து போகருதே, வெயிலத்து நடக்கருதே என்பவை மழையிற் போகாதே, வெயிலில் நடவாதே என்று பொருள் தரும் என்றும், இவை சேரநாட்டு / மலைநாட்டு வழக்கம் என்றும் இவர் குறிப்பிடுவார். (மொழி வரலாறு , தேவநேயப்பாவாணார் பக்.50)
தற்கால மலையாளத்தில் “அல்லே” எனும் சொல்லும் வினையடியுடன் எதிர்மறை சுட்டப் பயன்படுகிறது.
எ.கா:
பர - அல்லே - பரயல்லே
செய- அல்லே- செய்யல்லே
ஏவற் பன்மை (Plural Imperatives )
தமிழிலும் மலையாளத்திலும் ஏவற் பன்மை உண்டு. ஏவற் பன்மையில் உடன்பாடும் எதிர்மறையும் உண்டு. இரு மொழிகளிலும் இவ்விடத்தில் முன்னிலைப் பன்மை காட்டும் உருபன் வெற்றுருபன் ஆகும்.
உடன்பாட்டு ஏவற்பன்மை
தமிழில் இதன் அமைப்பு
[வினையடி + உங்கள்]
என அமையும். இங்கு பன்மை ஒட்டு “உங்கள்” (- யுங்கள்) என்பதாகும். இது மரியாதை ஒருமைக்கும் உரிய விகுதியாக உள்ளது. எனவே இந்த ஏவற் பன்மை அமைப்பு ஒருமையில் ஒருவரை மரியாதை கருதி அழைப்பதற்கும், பன்மையைக் குறிப்பதற்கும் என இரு வகைகளில் பயன்படுகிறது.
எ.கா:
சொல் - லுங்கள் ( சொல் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு.
அமர் - ருங்கள் ( அமர் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு
கேளு - ளுங்கள் ( கேள் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு
மலையாளத்தில் ஏவற் பன்மை; வினையடியையும் “-ஊ” என்னும் ஏவற் பன்மை உருபையும் எடுத்து வரும். இந்த “-ஊ”என்னும் உருபு ஏவற் பன்மையையும் மரியாதை ஒருமையையும் சுட்ட உதவும்.
மலையாளத்தில் இதன் அமைப்பு
[வினையடி + ஊ]
எ. கா:
( நிங்ஙள்) வரூ - ஏவற் பன்மை
(நிங்ஙள்) வரூ - மரியாதை ஒருமை
இங்கே உடன்பாட்டு ஏவற் பன்மைஅமைவதில்; அமைப்பு அடிப்படையில்; இரு மொழிகளும் வேறுபடுதல் காணப்படுகிறது.
[ உங்கள் = ஊ ]
எதிர்மறை ஏவற் பன்மை
தமிழில் எதிர்மறை ஏவற் பன்மை அமைப்பு எதிர்மறை ஒட்டு “-ஆத்” தையும், முன்னிலை காட்டும் உருபு “-ஈர்கள்” ஐயும் கொண்டு அமைகின்றது. முன்னிலைப் பன்மைக்கும், மரியாதை ஒருமைக்கும் இதே உருபே பயன்படுகின்றது.
இதன் அமைப்பு,
[வினையடி + “-ஆத் ” + “ -ஈர்கள் ” ]
எ.கா:
சொல் -ஆத் - ஈர்கள் = சொல்லாதீர்கள்
கேள் - ஆத் - ஈர்கள் = கேளாதீர்கள்
மலையாளத்தில் எதிர்மறை காட்டும் அருது, அண்டா, பாடில்லா, கூடா, அல்லே, என்னில்லா எனும் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்மறை ஏவற் பன்மை பெறப்படுகிறது. தமிழில் பன்மை காட்ட “ஈர்கள்” என்னும் ஒட்டு இருப்பது போல் இங்கே தனியுருபு எதுவும் இல்லை. ஏவல் எதிர்மறை ஒருமை சுட்டும் சொற்களே ஏவல் எதிர்மறைப் பன்மை காட்டவும் பயன்படுகின்றன. இது தமிழ் - மலையாள மொழிகளில் இடையே நிலவும் ஒரு முக்கிய வேறுபாடு ஆகும்.
இதன்அமைப்பு,
[(நிங்ஙள்) வினையடி + “-அருது”… ]
எ.கா:
(நிங்ஙள்) பரயருது
(நிங்ஙள்) பரயண்டா
(நிங்ஙள்) பரயான் பாடில்லா
(நிங்ஙள்) பரஞ்ஞு கூடா
இவை தவிர “அல்லே” என்னும் சொல்லும் ஏவல் எதிர்மறை ஒருமையில் போலவே பன்மைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எ.கா:
(நிங்ஙள்) பரயல்லே
(நிங்ஙள்) கேள்க்கல்லே
ஆனால் மரியாதை ஒருமைக்கு தமிழில் இவ்விடம் ”சொல்லாதீர்கள்” (பரயருது) பயன்படுத்தப்படுவது போல் இங்கே பயன்படுத்த இயலாது. தமிழில் மரியாதையை வெளிப்படுத்தும் பன்மைக்கான உருபு வினையடியுடன் சேர்ந்து வருகின்றது. இதற்குப் பதிலாக; மலையாளத்தில்; மரியாதைஏவலில்; முன்னிலைப் பதிலிடு பெயரான “நிங்ஙள்” அல்லது ”தாங்கள்” சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அமைப்பு,
[நிங்ஙள் / தாங்கள் + வினையடி + “-அருது”….. ]
எ.கா:
நிங்ஙள் / தாங்கள் பரயருது
நிங்ஙள் / தாங்கள் கேள்க்கண்டா
நிங்ஙள் / தாங்கள் செய்யான் பாடில்லா
நிங்ஙள் / தாங்கள் பரஞ்ஞு கூடா
நிங்ஙள் / தாங்கள் கேள்க்கல்லே
என அமைகின்றன.
மலையாளத்தில் இம்மாதிரியாக முன்னிலையிடத்தில் இருப்பவரைப் பதிலிடு பெயரால் சுட்டுவதற்குப் பதில் அவரை மரியாதையுடன் அழைத்தே பெரும்பாலும் மரியாதை ஏவல் வெளிப்படுத்தப்படுகின்றது.
எ.கா:
சார், தாங்கள் பரயருது
சார், தாங்கள் கேள்க்கருது
தமிழ்: சொல்லாதீர்கள்
மலையாளம் : சார்பரயருது /சார்தாங்கள்பரயருது
[முன்னிலை மரியாதை அமைப்பு = முன்னிலைப் பதிலிடு பெயர் + வினையடி + எதிர்மறை காட்டும் சொல்]
இங்குள்ள மற்றுமொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு, தமிழில் எதிர்மறை ஏவலொருமைக்கும் எதிர்மறை ஏவற் பன்மைக்கும் வெவ்வேறு உருபுகள் அமைய, மலையாளத்தில் ஒரு சொல்லே இவ்விரு செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எ.கா:
தமிழ் : (நீ) வராதே
மலையாளம் : (நீ) வரருது, (நீங்கள்) வராதீர்கள், (நிங்ஙள்) வரருது
விருப்பேவல் (Optional Imperative)
தற்காலத்தில் வழங்கும் தமிழில் ஏவலொருமை அல்லது ஏவற் பன்மையோடு ”ஏன்” என்னும் உருபு சேர்வதனால் விருப்பேவல் தோன்றுகிறது.
விருப்பேவல் என்பது ஏவப்படுகின்றவன் விரும்பினால் அந்த ஏவலைச் செய்யலாம் என்பதாகும். ( கு.பரமசிவம், 230 )
இவ்வகை விருப்பேவலில் ஒருமையும் பன்மையும் மரியாதை ஒருமையும் உண்டு. மலையாளத்திலும் இவ்வகையான விருப்பேவல் அமைந்து காணப்படுகிறது.
எகா:
தமிழ்:
வாயேன் - ஒருமை.
வாருங்களேன் - பன்மை.
வாருங்களேன் - ம. ஒரு.
மலையாளம்:
வராமோ / வருமோ - ஒருமை.
வராமோ/ வருமோ - பன்மை.
(தாங்கள்) வராமோ மரி. ஒருமை
தமிழில் விருப்பேவலைத் தெரிவிக்க “ஏன்” என்னும் உருபு சேர்க்கப்படுகிறது. மலையாளத்தில் ”ஆமோ” அல்லது ”ஓ” எனும் ஒட்டு சேர்க்கப்படுகிறது. விருப்பேவலில் தமிழுக்கும் மலையாளத்திற்கும் இடையே அமையும் வேறுபாடாக இது அமைகின்றது.
[ஏன் = ஓ]
மேலும் தமிழில் ஏவலொருமைக்கும் மரியதை ஒருமைக்கும் ஒருவித அமைப்பும், பன்மைக்கு மற்றுமொரு அமைப்பு என, இருவேறு அமைப்புகள் உள்ளன. ஆனால் மலையாளத்தில் ஒருமைக்கும் பன்மைக்கும் ஒன்று போல் அமைப்பே உள்ளதை அறிய முடிகின்றது.
தமிழ்:
வாயேன் - ஒருமை.
வாருங்களேன் - பன்மை.
மலையாளம்:
வராமோ/ வருமோ - ஒருமை.
வராமோ/ வருமோ - பன்மை.
உறவுமுறைப் பெயர்கள்
தற்காலத் தமிழில் சில ஏவல் வினைகள் உறவுமுறைப் பெயர்களையும் ஒட்டுக்களாக இணைத்து வருகின்றன.
அப்போது முன்னிலை இடத்தில் தன்னை விட வயதில் இளையவராக இருந்தால் ஏவல் வினையுடன் டா, டீ பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்திலும் இதே முறை வழக்கில் உள்ளது.
எ.கா
தமிழ்:
வா - டா - முன்.ஒரு.
வா - டீ - முன்.ஒரு.
மலையாளம்:
வா-டா - முன்.ஒரு.
வா-டீ - முன்.ஒரு.
மலையாளத்தில் உறவுமுறை விருப்பேவல்களில் இரு பாலுக்கும் பொதுவாக அமையும் ஒட்டு உள்ளது.
எ.கா
மலையாளம்:
வாடே - முன்.ஒரு.
தற்காலத்தில் வழங்கும் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் அமைப்பு அடிப்படையில், அதன் இலக்கண அமைப்பில் நுணுக்கமாக வேறுபடுகின்றன. தமிழ்மொழி மலையாளமாகத் திரிந்தமைக்கான காராணங்கள் இவ்வாறு அறிவதன் மூலம் புலப்படும். தமிழுக்கும் மலையாளத்திற்குமான வேறுபாடுகளை இங்ஙனம் அனைத்து இலக்கண அமைப்பிலும் அறிவது தமிழ் - மலையாள கணினி வழி மொழி பெயர்ப்பு அமைப்பிற்கும், தமிழ், மலையாள மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொள்பவர்களுக்கும் மிகவும் பயன்பாடுடையதாக அமையும்.
துணை நூற்பட்டியல்
1. Thomas Lehmann. - A Grammar of Modern Tamil
2. R. E. Asher - Malayalam
3. Ravishankar . S. Nair - A Grammar of Malayalam
4. ஏ. ஆர். இராஜ இராஜ வர்மா - கேரள பாணிணியம்
5. K. N. Ezhuthaccan - Grammatical Theories in Malayalam
6. தேவநேயப்பாவாணர் - மொழி மரபு
7. பரமசிவம். கு - இக்காலத்தமிழ் மரபு
8. அகத்தியலிங்கம். ச - தமிழ் மொழி அமைப்பியல்
9. பேரா. ஜான்சாமுவேல் -திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர்அறிமுகம்.
10. கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
11. நன்றி: பேரா. நடுவட்டம் கோபாலகிருட்டினன் - திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.
12. நன்றி: பேரா. இரவிசங்கர் எஸ்.நாயர் - மொழியியல் துறை, காசர்கோடு மத்தியப்பல்கலைக்கழகம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.