சமரச சுத்த சன்மார்க்கம், சீக்கியம் - தோன்றிய காலச்சூழலும், சமூகநீதிக் கருத்துருவாக்கமும்
முனைவர் சி. ஸ்ரீராஜா
உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், இந்தியப் பண்பாட்டுத்துறை,
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி.
முன்னுரை
தமிழகத்தில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்கம், பஞ்சாப்பில் குருநானக் தோற்றுவித்த சீக்கியமதம் இவற்றை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரைஅமைகிறது. மேலும், இவை தோன்றிய காலச்சூழல், இவ்விருநெறிகளிலும் காணப்படும் இறைக்கருத்து, உடம்போம்பல், பசிப்பிணிநீக்குதல், வைதீக மரபுகளை எதிர்த்தல், எளியோர் மீதான தாக்குதலை எதிர்த்தல், சமத்துவ சமுதாயம் காண விழைதல் போன்ற சமூகநீதிக் கருத்துக்களில் உள்ள சீரிய ஒற்றுமைகளை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமரச சுத்த சன்மார்க்கம், சீக்கியம் இவைகளில் காலத்தால் முற்பட்டது சீக்கியமாகும். இச்சீக்கியமதம் 1469 ல் பஞ்சாப்பில் உள்ள தால்வண்டி என்ற கிராமத்தில் பிறந்த சீக்கிய முதல் குருவான குருநானக் காலம் தொடங்கி 17-ம் நூற்றாண்டு வரை 10 குருமார்களால் வளர்ச்சியடைந்து நிலை பெற்றது. இம்மதத்தின் புனித நூலாகத் திகழ்வது “குருகிரந்தம்”. இத்தொகுப்பு நூல் முதலில் “ஆதிகிரந்தம்”என சீக்கிய மதத்தின் ஐந்தாவது குருவான குருஅர்ஜீன் சிங் -ஆல் தொகுக்கப்பட்டது. பின்னர், பத்தாவது குருவான குருகோவிந்தர் காலத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டு “குருகிரந்தம்”எனப் பெயரிடப்பட்டது. இந்நூலே குருகோவிந்தருக்குப் பின் வழிகாட்டியாக “வாழும் குருவாக” சீக்கியமதத்திற்கு உள்ளது.
வாழையடிவாழை என வந்த திருக்கூட்ட மரபில் உதித்த வள்ளலார் தமிழ்நாட்டில், தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள மருதூரில் இராமையாபிள்ளை, சின்னம்மாள் தம்பதியருக்கு மகவாக 1823-ம் ஆண்டு அவதரித்தார். பிறவியிலேயே ஓதாது உணர்ந்த ஞானியாக விளங்கினார். இவரால் 1865-ஆம் ஆண்டு “சமரசசுத்த சன்மார்க்க சங்கம்”வடலூரைஅடுத்த கருங்குழியில் தோற்றுவிக்கப்பட்டது. இவர் தனது இறை அனுபவத்தையும் இரக்க சிந்தனையையும், ஆன்மநேயத்திற்கு எதிரான சமூகத் தடைகளையும், உள்ளம் உருகிப் பாடியுள்ளார். இப்பாடல்கள் அடங்கிய நூலே“திருவருட்பா”, இது ஆறு திருமுறைகளை உடையது. வள்ளலார் காலத்திற்குப் பின், சமரசசுத்த சன்மார்க்கத்தின் புனித நூலாகவும், வழிநடத்திச் செல்லும் குருவாகவும் திருவருட்பா உள்ளது.
தோன்றிய காலச்சூழல்
சமரசசுத்த சன்மார்க்கமும், சீக்கியமும் தோன்றிய காலமும், இடமும் வேறுபட்ட போதிலும் அவைகளின் சிந்தனைகளும்,தோன்றிய காலச்சூழலும், ஒரேமாதிரியாகவே இருந்தன. சீக்கியம் தோன்றி வளர்ந்த காலமாகிய கி.பி. 15-ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை இந்தியதேசம் மொகலாயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஔரங்கசீப் தவிர பிற மொகலாய மன்னர்களின் சுகபோக வாழ்வுக்கும், தாஜ்மகால் மற்றும் இன்றளவும் கம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் மொகலாயஅரண்மனைகளுக்கும், கோட்டைகளுக்கும் ஏழை விவசாயிகளின் வரிப்பணமே அஸ்திவாரம். இந்நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்களோ சமூகத்தில் நிலவிய வர்ணாசிரமக் கொள்கைகளில் தலையிடவே இல்லை. மாறாக அதன் கொடுமையை மையமாகக் கொண்டு தங்கள் மதத்தைத் தழைக்கச் செய்தனர். இக்காலங்களில் மக்கள் சமத்துவமறியாமல், மூட நம்பிக்கைகளை வழிகாட்டியாகக் கொண்டு ஒளி சிறிதும் இல்லாத இருண்ட சமூகத்தில் வாழ்ந்தனர்.
சன்மார்க்க நெறி வளர்த்த வள்ளலார் காலமாகிய 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாஆங்கிலேயர் வசம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்நாட்டு மக்கள், பண்பாடு, கலாச்சாரம், மொழி, இன வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும், ஆங்கிலேயரின் அடிமை என்ற ஓர் இனமாக ஓர் ஆட்சிக் குடையின் கீழ் இருந்தனர். இந்த ஆட்சி ரீதியான ஒற்றுமை சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிக் கிடந்த வரணாசிரம தர்ம முறைகளையோ, மூடப் பழக்க வழக்கங்களையோ, சிறிதும் மாற்றவும் இல்லை, பாதிக்கவும் இல்லை. ஆட்சியாளர்களாக அமர்ந்த வணிகர்களோ (ஆங்கிலேயர்கள்) தாங்கள் வந்த நோக்கமாகிய லாபம் ஈட்டுவதிலேயேக் கவனத்துடன் செயல்பட்டனர். சமூகத்தில் இருந்த பிரிவினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் சீர்படுத்தாது தங்கள் மதம் வேரூன்ற உரமாகப் பயன்படுத்தினர். 19-ம் நூற்றாண்டு பஞ்ச நூற்றாண்டாக அடுத்தடுத்து வந்த பல பஞ்சாங்களால், எளியோரைப் பட்டினியால் மடிய வைத்தது. இக்காலத்தில் மக்கள் சீக்கியம் தோன்றிய காலத்தில் இருந்த அதே மாதிரியான இருள் படிந்த சமூகத்திலேயே வாழ்ந்தனர். இதனைத் திரு. வி. க., “இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று, அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்கசுவாமிகள்” (1) என்று உரைக்கின்றார்.
இறைக்கருத்து
வள்ளலாரும், சீக்கியத்தைத் தோற்றுவித்த குருநானக்கும் இறைவனை ஒளி வடிவினனாக கண்டனர். இவர்கள் இருவருமே உருவ வழிபாட்டை எதிர்த்தனர். வள்ளலார், “கலை யுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் உலாம் மண் மூடி போக” (2) எனக் கூறுவதிலிருந்து, கலையின் கற்பனை வடிவாய் உள்ள சிலைகளையும், உருவங்களையும் வழிபடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறியலாம். குருகிரந்தத்தில்,
“பூப்பறிக்கும் பொண்ணே!
ஒவ்வொரு பூவிதழிலும்
வாழ்க்கை விளங்குவதை நீ அறிவாயா?
எந்த கற்சிலைகளுக்காக நீ பூவிதழ்களை பறித்தாயோ
அதற்கு உயிரில்லை” (3)
என்கின்றது.
உருவமும், அருவமும் அற்ற இறைவனைப் பிறப்பற்றவனாக, காலங்கடந்தவனாக, சோதி வடிவாகப் போற்றுகின்றார்.
இதனை வள்ளலார்,
“ஒன்று மலார் இரண்டு மலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும் அலார் அருவும் அலார் அருஉருவும் ஆனார்
அன்றுமுளார், இன்றுமுளார் என்றுமுளார் தம்கோர்
ஆதி அந்த மிலார் அருட் பெருஞ்சோதியினார்” (4)
என்கிறார்.
இதேக் கருத்தைக் குருகிரந்தம்,
“அவனே உண்மை ஒளி
பிறப்பற்றவன் இறப்பற்றவன்
புனிதத் தன்மைகளை உள்ளடக்கியவன்
முக்காலமும் அவனே உண்மை” (5)
என்கின்றது.
இறைவன் அனைத்து உயிர்களிலும் ஒளி வடிவாய் எல்லா உயிர் மற்றும் பொருட்களின் உள்ளும் புறமும் வியாபித்து உள்ளான் என்பதை வள்ளலார்,
“எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன்” (6)
என்கிறார்.
குருகிரந்தம்,
“ஒரே இறைவன் தான் எல்லா உயிர்களையும் படைத்தளித்தான்.
எல்லா உயிர்களும் உயர்ந்தவை, ஏதும் தாழ்ந்தது இல்லை
ஒரே இறைவன் தான் எல்லா உயிர்களையும் வடிவமைத்தான்.
எல்லா உயிர்களிலும், உலகங்களிலும் வெளிப்படுவது ஒரே ஒளி” (7)
என்கின்றது.
இறைவன் கருணையே வடிவானவன் என்றும், அக்கருணையைப் பண்பாகக் கொண்ட மானிடர் செயல்கள் யாவும் இறைச்செயலே என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.
“எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கி உப
சரிக்கின்றவர் யாவர் அந்த செவ்வியர் தம்
செயலனைத்தும் திருவருளின்
செயல் என தெரிந்தேன் இங்கே” (8)
என்று கூறுகின்றார்.
இதேக் கருத்தைக் குருகிரந்தம்,
“இறைவன் இரக்கக் குணமுடையவனாகவும்
கருணை மிகுந்தவனாகவும் இருந்து
இவ்வுலகிற்கு உதவுகிறான், அதனால் தான்
அதுவே ஞானிகளின் இயல்பாக உள்ளது” (9)
என்கின்றது.
மேற்கூறியவைகளிலிருந்து இறை கருத்தில் இவ்விரு சமயங்களின் சிந்தனைகளும் ஒன்றாக இருப்பது தெளிவு.
உடலைப் பேணுதல்
இந்திய வைதீக மரபுகளின் கருத்துப்படி ஆன்மா, உடல் இவ்விரண்டில் ஆன்மா அழியாதது, உடல் அழிவது. மேலும் உடலைத் தவிர்த்தே ஆன்மா மோட்சம் அடைய முடிவும். உடலோடு மோட்சம் அடைவது அரிதே. வைதீக சமயக் கருத்துப்படி இவ்வுடலோடு ஏற்படும் தொடர்பால் ஆன்மா குறைவுடைய அறிவையே பெறுகிறது. இவ்வாறான இருமையியல் கொள்கையில் உடல் புனிதமற்ற அசுத்தமான, அசித்தாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வள்ளலார், இவ்வுடலைப் பேணவேண்டும் எனவும், முக்தி நல்கவல்லது எனவும், உடலோடு முக்தி சாத்தியம் எனவும் கூறியதோடு மட்டுமல்லாது நிரூபித்துள்ளார் வள்ளலார். இந்த உடம்பை அலட்சியம் பண்ணாமல் பொன்னைப் போல் பாதுகாக்க வேண்டும், முக்தி அடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அடைவது அரிதாயும் இருப்பதால், எவ்விதத்திலாயிலும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்” (10) என்கிறார்.
குருகிரந்தமும் இவ்வுடலின் அற்புதத்தை பின்வருமாறு சுட்டுகிறது.
“உடம்பில் கடவுள் இருக்கிறார், உடம்பு கடவுளின் கோயில்
உடம்பில் புனித யாத்திரிகர்ளும் பயணிகளும் உள்ளனர்.
உடம்பின் உள்ளே நறுமணம், விளக்குகள் உள்ளன
நான் பல பகுதிகளில் தேடியும் உடம்பினுள் மட்டுமே
ஒன்பது புதையல்கள் இருப்பதைக் கண்டேன்” (11)
மேலும், “இறைவனின் இல்லம், கோயில், தங்குமிடம் மனித உடலே எல்லையற்ற ஒளியை இறைவன் உடலில் குடியிருக்கச் செய்துள்ளார்” (12)
என்று கூறுகின்றது.
எனவே, உடலைப் போற்றி மேன்மை கூறி, அதை பேணவும், திருவருட்பாவும், குருகிரந்தமும் வலியுறுத்துகின்றன.
பசிப்பிணி நீக்குதல்
பஞ்ச நூற்றாண்டான 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலாரைப் பசிப்பிணி நீக்கிய மருத்துவர் எனக் கூறல் மிகையாகாது. இவர் பசியினால் வாடி, அத்துன்பம் தாளாமல் துடித்த மக்களைக் கண்டு நெஞ்சம் துடிதுடித்தார். அவர் பசியினைப் போக்க வேண்டிய அவசியத்தினை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். அவரேப் பசியையும் போக்கினார். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என அவர் பாடியிருப்பதை மேலோட்டமாகப் பார்த்தால் தாவரங்கள் வாடுவதைக் கண்டு கூட நெஞ்சம் வாடினார் என்றே புரியும். ஆனால் இக்கருத்தை சற்றே வேறு கோணத்தில் அணுகினால் அவர் ஏன் வாடிய பயிரைக் கண்டு வாடினார் என்பது புலப்படும். அதாவது, இவ்விடத்தில் வள்ளலார் “பயிர்” என்ற சொல்லாடலைக் கையாண்டு இருப்பதன் மூலம் இதன் உட்பொருள் யாதெனில், பயிர் வாடினால் அதன் விளைவாய் ஏற்படும் பஞ்சத்தினால் வெற்றவர்களாய் இருக்கும் ஏழைகளின் வயிறு வாடும். பஞ்சத்தின் கொடுமையையும், சீற்றத்தையும் எத்தகையது என்பதை அனுபவரீதியாகக் கண்டவர் அவர்.
கி.பி. 1851 முதல் 1875 வரை இந்தியாவில் ஆறு பஞ்சங்கள் நிலவின. 1860-ல் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் 5 லட்சம் மக்கள் பசியினால் மடிந்துள்ளனர். அதற்குப் பின்னர் ஏற்பட்ட 1866-67 பஞ்சத்தில் பட்டினியால் 13 லட்சம் மக்கள் தங்கள் உயிரை விட்டு இருக்கின்றனர் (13).
இப்பஞ்சத்திற்கு கல்கத்தாவில் இருந்து சென்னை வரை உள்ள கிழக்குக் கடற்கரையே இலக்காகி உள்ளது. (14) இப்பஞ்சக் காலங்களில் கூட இந்தியாவிலிருந்து தானியங்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வதை ஆங்கில அரசு நிறுத்தவில்லை, மேலும் வியாபாரத்தில் மட்டுமல்லாது போர்ச் செலவுகளையும், உள்நாட்டு நிர்வாகச் செலவுகளையும் காரணம் காட்டி நிலவரி விதித்து ஆதாயம் ஈட்டினர். விளைச்சலில் பாதியை வரியாய் இழந்த விவசாயிகள் கடனில் மூழ்கினர். இத்தகையப் பஞ்சங்களைக் கண்ட வள்ளலார் வெற்றர்களாய் இருந்த வறியவர்களின் பசிப்பிணி போக்கும் அறத்தை கைக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பசிதவிர்த்தலைச் செயல்படுத்த 1867-ல் வடலூரில் சத்திய தரும சாலையை நிறுவினார்.
சீக்கிய மதத்தில் குருநானக் காலத்திலிருந்தே “லங்கா;” எனப்படும் உலக உயிர்களின் பசி போக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஒவ்வொரு குருத்துவாரவிலும் (சீக்கியக் கோயில்கள்) உள்ளது. இங்கு அனைவருக்கும் மத, இன, பேதமின்றி இன்றளவும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இன்றளவும் அமிர்தசரசில் உள்ள குருத்துவார லங்கர் ஆசியாவின் மிகப்பெரிய சமயற் கூடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
மேலும் சத்திய தரும சாலையும், லங்கரும் இன்றளவும், பசிப்பிணி போக்குவதோடு மட்டுமின்றி, இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கருத்தையும் வலியுறுத்தி, சாதி, மத, பேதமின்றி அனைவரும் ஓர் இடத்தில் அமர்ந்து உணவு அருந்துதல் என்ற நற்செயலைச் செய்து வருகின்றன.
எளியோர் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தல்
ஏழை எளியோரை அவர்களைக் காட்டிலும் வலியோர் சுரண்டி, அதன் மூலம் மிடுக்காய் பவனி வருதலைக் கண்டு வள்ளலார் மிகவும் துன்பப்பட்டுள்ளார். இதனைத் திருவருட்பாவில்,
“எளியாரை வலியார் அடித்தபோது ஐய்யோ!
என் மனம் கலங்கிய கலக்கம்,
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன்” (15)
என்று தங்களை விட எளியோர் மீது வலியோர் தாக்குவதைக் கண்டு உருகிப் பாடியுள்ளார்.
இதே போன்று குருநானக்
“அப்பாவி ஆட்டுக் கூட்டத்திற்குள் கோரத்துடன்
ஒரு புலி பாயும் போது இறைவா!
உன்னையே நான் கேள்வி கேட்பேன்” (16)
என்று எளியோரை, வலியோரிடமிருந்து பாதுகாக்க இறைவனிடம் கோருகின்றார்.
வைதீக மரபுகளை எதிர்த்தல்
இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வர்ணாசிரம தர்மம் எனப்படும் சாதீயப் பிரிவினைகளை வள்ளலாரும், சீக்கிய குருமார்களும் முற்றிலும் புறக்கணித்துள்ளனர். இறைவன் அனைவருக்கும் முக்தி நல்க கூடியவன். ஒருவனுடைய பிறப்பால் அவனுக்கு முக்தி கிடைப்பதையோ! மற்றொருவனுக்கு அது இல்லாமல் போவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சாதி, சமய பேதங்கள் பொய்யென கூறியுள்ளார் வள்ளலார்.
“சாதியும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதியே” (17)
என்கிறார்.
குருநானக்,
“சாதியும் மாயை, புகழும் மாயை, எல்லோரையும் காப்பவன் ஒருவனே” (18)
என்கிறார்.
மேலும், இத்தகைய பிரிவினைகளை வலியுறுத்தும் வேதம், ஆகமங்கள், புராணங்கள் யாவும் பொய்யெனவும் அவைகளை மிகக்கடுமையாகச் சாடுகின்றனர்.
வள்ளலார்,
“வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் சூதாகச்
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை
என்னபயனோ இவை” (19)
எனச் சாதீயப் பிரிவினை கூறும் சாத்திரங்கள் அனைத்தும் வீண்வாதம் என்கிறார். மேலும்;
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ
விழித்துப் பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே” (20)
“சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த
சாத்திரக்குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன் றெனவே
ஆதியில் என் உள்ளத்திருந்தே அறிவித்தபடியே
அன்பால் இன்றுண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்” (21)
எனச் சாதிய வழிமுறைக்கு அடிகோலும் அனைத்து வைதீக மரபு நூல்களையும் சாடுகிறார்.
குருகிரந்தம்,
“உயர்ந்தோர், தாழ்ந்தோர், சாதிகள், வருணங்கள் இவை குறித்த புராணங்கள் வேதங்களால் தாம் உற்பத்தி செய்யப்பட்டன, இந்த மாயைகள் மனிதர்களில் ஏற்படுத்தப்பட்டன” (22)
என்றும்,
“ஏ, பண்டிதா!
பிராமணர்கள் எப்படிப் படைக்கப்பட்டார்கள்?
உனது சாதி உயர்வைப் பேசி வாழ்வை விரயமாக்காதே
நீ பிராமணன் எனில் நீ பிராமணத் தாய்க்கு பிறந்தவன்
நீ ஏன் வேறு வழியாகப் பிறக்கவில்லை?
நீ எப்படிப் பிராமணன் ஆவாய்?
நான் எப்படிச் சூத்திரன் ஆவேன்?
எனது உடலில் ரத்தமும்
உனது உடலில் பாலுமா?” (23)
என்று வினவி சாதீய வழிமுறைக்கு ஆதரவான நூல்களையும் பண்டிதர்களையும் கடுமையாக சீக்கிய மதம் சாடுகின்றது.
பொருளாதார அடிப்படையில் சமத்துவம்
அன்றும், இன்றும் சமூகத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நிகழ்வதற்குக் காரணமாக அளவுக்கதிகமான பணத்தாசையால் பொருளை ஈட்டிப் பிறருக்கு உதவாமல் தானும் அனுபவிக்காமல் வாழும் கஞ்சர்களையும் கருமிகளையும் வள்ளலார்,
“வட்டிமேல் வட்டி கொள மார்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டியை தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே” (24)
என்கிறார்.
குருகிரந்தம்,
“பணப் பேய்கள் இறைவனின் இனிமையை உணரமுடியாது. ஏனெனில், அவர்களிடம் “நான்” என்ற அகந்தை குடி கொண்டுள்ளது, அவர்கள் நடந்து சென்றால் முட்கள் குத்தும் பெரும் வேதனையடைவர் - அதனால் இறுதியில் பாவங்களைச் சுமப்பர், ஆதரவின்றி இறப்பர்” (25)
என்று கருமிகளையும், கஞ்சர்களையும் சாடுகின்றது.
ஆண், பெண் சமத்துவம்
ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாட்டை வள்ளலாரும் சீக்கியமும் ஏற்கவில்லை.
இதனை வள்ளலார்,
“பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும்
ஆண்ணுற வகுத்த அருட் பெருஞ்சோதி” (26)
என்கிறார்.
அதாவது பெண்ணில் ஆண்தன்மைகளும், ஆணில் பெண்தன்மைகளும் கலந்தே உள்ளன. இத்தன்மைகளைக் கொண்டு பேதம் காணுதல் கூடாது என்கிறார்.
குருகிரந்தம்,
“ஒரு பெண்ணில் மனிதன் கருவாகத் தோன்றுகிறான்
பெண்ணிலிருந்தே அவன் பிறக்கிறான்
ஒரு பெண்ணுடன் அவன் வாழ்வு நிச்சயமாக்கபட்டு அவளை
மணக்கிறான் ... ... ... ... ...
அவளை ஏன் இழிந்தவள் என்கிறாய்
... ... ... ... ... பெண்ணின்று எவருக்கும் வாழ்வில்லை” (27)
என்று கூறுகின்றது.
வள்ளலார் ஆண் பெண் இருபாலரும் சன்மார்க்க பொதுவடைந்து நலம் பெற வேண்டும் என்று கூறுகிறார்.
சமரச சுத்த சன்மார்க்க சங்கமும், சீக்கியம் கண்ட சமத்துவ சமுதாயமும்
ஆன்மீக ஒளியும், மனித நேயமும் கொண்ட சமத்துவ சமுதாயத்தை வள்ளலாரும், சீக்கிய குருமார்களும் முறையே சமரச சுத்த சன்மார்க்கத்திலும், சீக்கிய மதத்திலும் உருவாக்கினர்.
வள்ளலார் இதனை;
“சாதியும், மதமும், சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்” (28)
“மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணா சிரமமெனு மயக்கமும் சாய்ந்தது” (29)
“இச் சாதி சமய சங்கற் பங்களெல்லாந் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்க பொது வடைதல் வேண்டும்” (30)
என சமரச சுத்த சன்மார்க்கத்தில் சாதி, சமய, வேறுபாடுகள் இல்லை என்கிறார்.
குருகிரந்தம்,
“ஒவ்வொரு உயிரும் இறை வெளிச்சத்தின் இருப்பிடம் யாரிடமும் உனது சாதி என்ன என்று கேட்பதை நிறுத்து
இன்றிலிருந்து சாதிகள் இல்லை” (31)
என்று சீக்கிய மதத்தில் சாதியப் பிரிவினைகளுக்கு இடம் இல்லை என்பதையும், இறைவன் அனைவரிடமும் வியாபித்துள்ளான் என்பதைக் கூறுகின்றது.
முடிவுரை
இக்கட்டுரையில் இதுவரை கூறியவாறு வள்ளலாரும், சீக்கியக் குருமார்களும், சாதி, மத, இன இன்னும் எத்தனையோ பேதங்களையும் கடந்து ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்கமும், சீக்கியமும், மனித குல மேம்பாட்டுக்கும் மனித நேயத்திற்கும், சமத்துவ சமுதாயத்திற்கும் வித்தாய் விதைக்கப்பட்டுள்ளது. இவ்விரு மார்க்கங்களிலும் காணப்படும் சிந்தனைகள் சமூகநீதிக் கருத்துக்கள் யாவும், இன்றைய சமூகத்திற்கு மிகுந்த தேவையே. இக்கருத்துக்கள் யாவும் சீக்கியருக்கும், சமரச சுத்த சன்மார்க்கிகளுக்கும் மட்டும் போதிக்கப் பட்டதல்ல, நாம் அனைவருக்கும் போதிக்கப்பட்டதே.
“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உல கியல் நடத்தல் வேண்டும்” (32)
எனக் கூறிய வள்ளலார் வாக்குப்படி சமத்துவ சமுதாயம் காண்போம்.
அடிக்குறிப்புகள்
1. திரு. வி. கல்யாண சுந்தரம்,“இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்”முன்னுரை பக்.III.
2. திருவருட்பா - 3768.
3. குருகிரந்தம் - 662
4. திருவருட்பா - 3282
5. குருகிரந்தம் - ஜபுஜி.
6. திருவருட்பா - 5803
7. குருகிரந்தம் - 62
8. திருவருட்பா - 5296
9. குருகிரந்தம் - 1017
10. உபதேசப் பகுதி - பாலகிருஷ்ண பிள்ளை, பதிப்பு பக்.17 மற்றும் 113.
11. குருகிரந்தம் - 514
12. மேற்கூறியது - 1256
13. Vidyadhar Mahajan, India Since- 1526 Page - 603
14. ஆர். சி. மஜிம்தார், எச்.சி. ராய் சௌத்ரி, கே. தத்தா, இந்தியாவின் சிறப்பு வரலாறு, பக் -375.
15. பிள்ளை பெருவிண்ணப்பம் - 50
16. குருகிரந்தம் - 274.
17. திருவருட்பா - 4075
18. குருகிரந்தம் - 53
19. திருவருட்பா - 5516
20. மேற்கூறியது - 4174
21. மேற்கூறியது - 5805
22. குருகிரந்தம் - 1188
23. மேற்கூறியது - 53
24. திருவருட்பா - 5561
25. குருகிரந்தம் கீர்த்தன ஸொகில்லா
26. திருவருட்பா - வடலூரார் வாய்மொழியில் மேற்கோளிட்டபடி
27. குருகிரந்தம் - 73
28. திருவருட்பா - 4075
29. திருவருட்பா - 4503
30. திருவருட்பா - 4086
31. குருகிரந்தம் - 349
32. திருவருட்பா - 5561
துணைநூற்பட்டியல்
1. திருவருட்பா - ஊரன் அடிகள் பதிப்பு.
2. சாமி சிதம்பரம் - வடலூரார் வாய்மொழி
3. திரு. வி. கல்யாணசுந்தரம் - இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
4. க. வெள்ளை வாரணனார் - திருவருட்பா சிந்தனை.
5. பேராசிரியர், மா. ப. குருசாமி - வள்ளலார் ஓர் அறிமுகம்
6. குருகிரந்தம் தமிழில் மொழிப் பெயர்ப்பு - டாக்டர். ந. முத்துமோகன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.