இந்தியாவின் தலைச்சிறந்த விடுதலை எழுத்தாளர்களினுள்ளும், பகுத்தறிவாளர்களினுள்ளும் சிறநததொருவராக ஈ. வெ. இராமசாமி என்ற பெரியார் விளங்குகின்றார். சாதி வேற்றுமையை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளைக் களைவதற்காகவும், சமூகச் சீர்திருத்தத்திற்கும், பெண் விடுதலைக்காகவும் வெகுவாக உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார். மற்றைய சமூகச் சீர்திருத்தவாதிகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் பெரியார். வேறு எந்தச் சமூகவியல் சிந்தனையாளரும் வெளிப்படுத்தத் தயங்குகின்ற கருத்துக்களைத் துணிவுடன் பேசியவர் பெரியார். உளவியல் அடிப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெண்களுக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதோடு, ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை அவசியம் எனக் கூறுகின்றார். பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகைப்படும். அவை;
1. அடிப்படைத்தேவைகள்.
2. அகற்றப்படவேண்டியவை.
அடிப்படைத் தேவைகளாகப் பெண்களுக்கான கல்வி, பெண்உரிமை, சொத்துரிமை, அரசுப்பணி போன்றவற்றையும், அடிப்படைத் தேவைகளாகக் குழந்தைத் திருமணம், சீதனம் (மணக்கொடை), கணவனை இழந்த பெண்கள் தனித்து வாழ்தல் போன்றவற்றை அகற்றப்பட வேண்டிய விடயங்களாகப் பெரியார் முன் வைக்கின்றார்.
பெண்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதைக் கண்டித்துப் பெண் விடுதலை தொடர்பான பல சிந்தனைகளையும் எடுத்துக் கூறினார். இந்தியச் சமூகங்களைப் பொறுத்தவரையில் பெரியார் வாழ்ந்த காலப்பகுதியில் பெண்கள் மூன்றாம் பட்சமானவர்களாகவே ஆணாதிக்கச் சமூகத்தால் கணிக்கப்பட்டனர். வரையறைகளையும், விதிகளையும் வகுத்துக் கொண்டு பெண்கள் அதன்பாலே செயற்பட வேண்டும் என்ற சிந்தனைகளைத் தகர்த்தெறிந்து சாதனைகள் பல படைக்கப் புறப்பட வேண்டும் என்ற பிரயத்தனச் சிந்தனை கொண்ட விடுதலை எழுத்தாளராகப் பெரியார் விளங்குகின்றார்.
ஆணாதிக்கச் சமூகம் பெருங்கதையாடல்கள் அம்சத்தினுள் உள்ளடங்கும் கற்பு, காதல் என்ற எண்ணக் கருக்களினூடாகப் பெண்களை அடக்கி ஒடுக்குகின்றனர்.
இத்தகைய ஒடுக்குமுறைகள் வரலாற்றுக் காலங்களிலிருந்தே ஆரம்பித்து விட்டது என இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்களை விமர்சித்தார். இராமாயணத்திலே 'மறவினை கடந்து அறவினை ஓம்பி கற்பின் காவலாய் விளங்கினாள் சீதை' என வர்ணிக்கப்படுகின்றாள். கணவனுக்கு மட்டுமே பெண் சேவை செய்யப் பிறந்தவள் என்னும் இவ்வகையான சிந்தனைகளைத் தரும் இதிகாசங்களை முற்றாக விமர்சித்தார். கற்பு என்று இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற பகுத்தறிவான சிந்தனையை முன் வைத்தார்.
அத்தோடு பெரியார் 'உண்மையாகப் பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து இருபிறப்புக்கும் சமமான சுயேற்சைக் கற்புமுறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழியவேண்டும். கற்புக்காகக் கணவனின் மிருகச்செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கொடுமையாகத் தங்கள், சட்டங்கள் மறைய வேண்டும். கற்புக்காக மனதுள் தோன்றும் உண்மையன்பை, காதலை மறைத்துக் கொண்டு,காதலும் அன்புமில்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்' என்ற பெண் விடுதலைக்கேற்ற பிரச்சாரங்களைக் கூறினார்.
பெண்கள் விடுதலையடைவதற்குக் கல்வி மிக முக்கியமானதாகும் என வலியுறுத்தும் பெரியார் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமத்துவமான கல்வி அளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்றார். கல்வியே பெண்களிடம் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவதோடு மூட நம்பிக்கைகளையும் அழிக்க வல்லது எனவும் வாதிட்டார். நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ள குடும்பத்தில் முதலில் அந்தப்பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றால்தான் ஆண்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள் எனவும் விழப்புணர்வூட்டினார். பெரியார் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக் கல்வி பயில வேண்டும் என்று கூறுவதுடன், ஆண், பெண் இருவரும் ஒரே கல்விக்கூடங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். கூட்டுக்கல்வி முறையால் பெண்களின் அடிமை நிலை விரைவில் மாறும் என்கின்றார். பெண்ளுக்கு மதக்கல்வி தேவையில்லை. விரதம், சடங்குகள், கொண்டாங்கள் போன்றவைகள் பெண்களை அடிமைப்படுத்தும் மதக்காரணிகள் என்கிறார். பெண்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்குக் கீழாக இருக்கக்கூடாது என்று கூறுகின்றார்.
பெண்களின்முன்னேற்றத்திற்கு எக்காரணிகள் தடையாக உள்ளனவோ அத்தனைக் காரணிகளையும் பெண்களே தகர்த்தெறிய முன்வர வேண்டும் என்பது பெரியாரின் உறுதிமொழி. விதவை மறுமணத்தை எப்போதும் பெரியார் ஆதரித்தார். பல மேடைகளில் கணவனை இழந்த பல பெண்களுக்கு மறுமணமும் செய்து வைத்துள்ளார். 'இவள் புடவை உடை, பொட்டு, வளையல் போன்ற மங்கலச் சின்னங்கள், கொண்ட கணவரைத் தவிர வேறு எந்த ஆடவரையும் நிமிர்ந்து பார்க்காத அடங்கிய பண்பு, இரைந்து பேசாத மென்மை, விருந்தினர்களுக்கு எந்த நிலையிலும் இல்லை என்று முகங்கோணாமல் வரவேற்று உபசரிக்கும் பாங்கு, தனக்காக எதையும் விரும்பாமல், தன் கணவர், கணவரைச் சார்ந்தோர், மக்கள் என்று பேணிப் பாதுகாத்துத் தன்னைத்தானே ஒடுக்கும் பெண்களே ஆணாதிக்க சமூகத்தால் விரும்பப்படுகின்றது. இத்தகைய சார்பெண்ணக் கருத்துக்களைப் பெண்கள் பின்பற்றாது தங்கள் சுயமரியாதை, சுயஉரிமை, சமத்துவம் போன்றவற்றுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விடுதலைக் கருத்துடையவராக பெரியார் காணப்பட்டார்.
பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் புகழ்பெறச் செய்வதற்கும் ஏற்றவாறு வளர்க்க வேண்டும். அத்தோடு பெண்களுக்கு வேண்டியது புத்தகப்படிப்பு மட்டுமல்ல. உலக அறிவும் தான் எனப் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். பெண்களை உயர்த்துவதற்கும், சுயமரியாதையை பெறச் செய்வதற்கும், எவ்விடயங்களையும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் பார்ப்பதற்கும் இக்கல்வியே உறுதுணையாக இருக்கும் என நம்பினார். ஆண்களால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதை விமர்சன சிந்தனைகளின்பால் நின்று நோக்கினார்.
'நீண்டகூந்தலும், தாலியும்' பெண் அடிமைச் சின்னங்கள் என விமர்சிக்கும் பெரியார் கூந்தலும், தாலியும் இல்லாவிடில் பெண்களுக்குப் பாதியளவு வேலை குறைந்துவிடும் என்று கூறினார். 'அடிமைத்தனத்தின் அறிகுறியே தாலிதான்' என்று கூறியதோடு பெண்களின் உரிமைகளும், சுதந்திரங்களும் அவ்வடையாளப் பொருளான தாலியினுள்ளேயே அடக்கி விடப்பட்டு விடுகின்றன என்று கருதினார். இதனால் திருமணத்தின் பின் 'கணவன் மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள். கூட்டாளிகளாகவே இருத்தல் சிறப்பாகும்' என்று விளக்கினார். இதன் மூலம் கணவன்மாரால் பெண்களுக்குத் திருமணத்தின் பின் சரிக்குச் சமனான அந்தஸ்து கிடைக்கக்கூடும் என வலியுறுத்தினார்.
பெண்கள் எதிலும் சலிப்படைந்தவர்கள் அல்ல. அதனால் ஆணைப் போலவே பெண்களுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். பெண்களுக்குக் குத்துச்சண்டை முதல் கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும். இதனால் பெண்கள் தங்களைத் தாங்களேப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்களாகப் பரிணமிப்பர் என்பது பெரியாரின் பார்வையாக அமைந்தது. ஆணைத் தொழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால் பெண்ணைத் தொழ வேண்டும் என்று ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் சமஉரிமை எனக் கூறினார்.
பெண்ணடிமை என்பது மனித சமூகத்தின் அழிவு என்பதை நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டு போகின்றது. ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறக்கூடிய ஒரு தொழிலைக் கற்றிருக்க வேண்டும். திருமணத்தின் பின்னர் 'இவள் இன்னாருடைய மனைவி' என்று அழைக்கப்படாமல் 'இவர் இன்னாருடைய கணவன்' என்று அழைக்கப்பட வேண்டும் என்பதையே பெரியார் விரும்பினார். பெண்கள் மதிப்பற்றுப் போவதற்குக் காரணம் அவர்கள் தங்களை ஆபாசமாகச் சித்திரித்துக் கொள்வதாலேயே ஆகும். ஆகவே சமூகத்தில் பெண்களைப் பற்றிய சார்பெண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் பெண்களே பெண்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றார். ஏனெனில் பெண்விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கின்றார்கள் எனச் சுட்டிக் காட்டினார்.
பெரியார் ஒவ்வொரு பெண்ணும் தான் சந்தோசமாய் வாழத் தகுந்த ஒரு தொழில் அல்லது மார்க்கத்திற்குத் தயார் செய்யப்பட வேண்டும். பாலியத் திருமணத்திற்குட்பட்ட சிறுமி வயது வந்த பிற்பாடு தன் கணவனைத் தானே புரிந்துகொள்ள முற்பட வேண்டும். இவற்றைச் செய்துவிட்டால் எந்தப் பெண்ணையும் தேடிப்போய்ச் சுதந்திரம் கொடுக்க யாரும் அலையத் தேவையில்லை. பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாமா வேண்டாமா என்று கூட்டம் போட்டு வாக்குவாதமும் செய்யத் தேவையில்லை. அவர்களாகவே தமக்குத் தேவையான சுதந்திரத்தைப் பெற்று விடுவார்கள் என்றார். அடிமைத்தனத்திலிருந்து பெண்களை விடுதலை அடைய வைக்க எண்ணிய பெரியார், வீட்டு வேலைகளைச் செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடித்தல், கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யக்கூடாது என்றும், பெண்கள் விடுதலையடையவும், தனியுரிமை பெறவும் கர்ப்பத்தடை அவசியமாகும் என்றும் கூறினார். இதனால் மதவாதிகள், பெண்ணியவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்.
பெண்ணியம் என்பது பெண்களின் முன்னேற்றத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்த ஏற்படுத்தப்பட்ட கருத்துருவாக்கமாகும். பெரியார் எப்போதும் பெண்களின் விடுதலை, சுயமரியாதை, சமத்துவம் போன்றவற்றையே அதிகம் வலிறுயுத்துகின்றார். பெண்களுக்கான சுயமரியாதையும், சமஉரிமையும் மற்றவர்கள் கூறுவதால் வந்துவிடாது. பெண்கள் உணர்ந்து போராட வேண்டும் என்பதே பெரியாரின் தீவிர சிந்தனை. பல பெண்கள் உயர் பதவிகள் பல வகிக்கின்ற போதிலும் குடும்பம், சமூகம் போன்றவற்றுக்கு அடிமையாகவே உள்ளனர். பட்டங்கள், உயர்படிப்புக்கள் போன்றவற்றை மேற்கொண்டாலும் உணர்நிலையும், பேதமையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பேதமை நிலையிலேயே காணப்படுகின்றது.
பெரியார் காந்தியின் கொள்கைகளிலிருந்து மாறுபாடு கொண்ட சிந்தனை கொண்டவராகக் காணப்படுகின்றார். காந்தியும், பெரியாரும் குடும்பம், சமூகம், பண்பாடு, மதம், அரசியல், சமயம் ஆகிய தளங்களில் பெண்ணின் விடுதலை குறித்துப் பேசியுள்ளனர். அதற்காகவே பாடுபட்டுள்ளனர். குடும்பத் தளத்தில் ஆண், பெண் சமத்துவம் வேண்டும் என்று கூறும் காந்தியடிகள் ஆண்களுக்குச் சட்டப்பூர்வமாக உள்ள வசதிகள் யாவும் பெண்களுக்கு இருத்தல் வேண்டும். வேற்றுமை காட்டுதல் கூடாது, பெண்களையும், பிள்ளைகளையும் ஒரே முறையில் சமமாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். பெண்களிடம் ஆணுக்குச் சமமான நம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும் என்றும் எடுத்துரைக்கின்றார்.
பெரியார் காந்தியிலிருந்து மாறுபட்டு பெண்ணை இல்லறத்திற்குரியவளாகக் கற்பிப்பதே தவறு என்று எடுத்துரைக்கின்றார். பெண் வீட்டைக் குடும்பத்தைக் காப்பவள், பேணுபவள் என்றும் 'பேண்' என்னும் வினைச்சொல்லே 'பெண்' என்னும் பெயர்ச் சொல்லாயிற்று என்று கூறுகின்றார். பெண்ணை இல்லறத்திற்குரியவளாகப் பார்க்கும் நிலை மாறி சுதந்திரமாக வளர்ப்பதோடு ஆணுக்கு எந்தவிதத்திலும் தாழ்ந்தவளில்லை என்று உணரும்படி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். கற்பு என்னும் பதத்தினூடாவேப் பெண்கள் காலகாலமாக அடிமையாக இருந்து வந்துள்ளனர். உண்மையில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரிய கருத்தாக்கமா?அல்லது பெண்களை அடிமையாக்கத் தந்தையாதிக்கச் சமூகத்தால் தோற்றுவிக்கப்பட்ட மாயையா என்ற கேள்வி எழுகின்றது. ஆண்களுக்குக் கற்பு என்பது தேலையில்லை எனில் ஏன் அதனைப் பெண்களுக்கு மட்டும் பொருத்திப் பார்க்க வேண்டும். அதனைப் பெண்களும் பின்பற்றத் தேவையில்லை என்று பகிரங்கமாகப் பெரியார் மறுக்கின்றார்.
நாகரிகம், தொழில்நுட்பயுகம் என்று கூறும் காலங்களில் கூடப் பெண்ணடிமைத்தனம் என்பது காணப்படுகின்றது. ஏனெனில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்ட வண்ணமேக் காணப்படுகின்றனர். வேலை, கூலி, சம்பளம், தீர்மானம் எடுத்தல் போன்ற விடயங்களில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரியார் பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தாங்களாகவே முன்வர வேண்டும் என்று கூறுகின்றார். எனினும் இன்று கூடப் பாராளுமன்றங்களிலோ ஏனைய அரசியல் சார் அம்சங்களிலோக் குறைவாகவேக் காணப்படுகின்றது. இது உண்மையில் சிந்தனைக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே பெரியார் பெண்கள் விடுதலையைப் பற்றிய சிந்தனையோட்டங்களை இந்தியச் சமூகங்களை மையமாகக் கொண்டு கூறினாலும் இன்றும் உலகநாட்டுச் சமூகங்களில் ஏதோ ஒரு விதத்தில் பெண்கள் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எனினும் இத்தகைய நிலைகளிலிருந்து நீங்கிப் பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும் மற்றும் புதுயுகம் படைக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாக அமைந்தது. இதனாலேயே பல விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். எவ்வாறிருப்பினும் பெண்ணியவாதிகளால் இன்றும் பெண் விடுதலை தொடர்பாகப் போற்றப்படுபவர்களுள் பெரியாருக்குச் சிறந்ததொரு இடம் உண்டென்பது தீட்சணிய நோக்காகும்.
உசாத்துணை நூல்கள்
1. கோவிந்தன், த, 1998, தந்தை பெரியார் கலைக்களஞ்சியம் - 01, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
2. கோவிந்தன், த, 1998, தந்தைபெரியார்கலைக்களஞ்சியம் - 02, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
3. கணேசலிங்கன், செ, 2001, நவீனத்துவமும், தமிழகமும், குமரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4. பிரேமா, ஆர், 2001, பெண் - மாபிலும், இலக்கியத்திலும், தமிழப் புத்தகாலயம், சென்னை.
5. பிரேமா, ஆர், 2000, பெண்ணியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
6. ராஜம்கிருஷ்ணன், 2000, பெண்விடுதலை, தாகம், சென்னை.