இயற்கை இயற்கையாக இருந்தால்தான் உலகம் உழலும். இதனை நன்கறிந்த நம் முன்னோர்கள் இயற்கையை உறவாகவே நினைத்து வாழ்ந்தனர். புன்னை மரத்தைத் தன்னுடைய தமக்கையாகக் கருதிய தலைவியைச் சங்க இலக்கியத்தில (நற்றிணையில்) பார்க்கலாம். பண்டைய தமிழிலக்கியங்கள் யாவற்றிலும், கருப்பொருட்களை முன்னிலைப்படுத்தியே காதல் முதலாகிய உரிப்பொருட்கள் பேசப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள ‘மரபியல்’ எனும் இயல், பண்டைத் தமிழர்களின் சூழலியல் அறிவை உலகிற்குக் காட்டும் கண்ணாடியாகும். ‘திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்’ (இளங்கோவடிகள்) என்று இயற்கையைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் நம்மவர்கள். அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்திற்காகவும் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகவும் வேந்தர்கள் என்று புகழப்படுவதற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அரசர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். வெற்றி பெற்ற பின் எதிரி நாட்டு ஊர்களையும் நீர்நிலைகளையும் கோட்டைக்கொத்தளங்களையும் அழித்தார்கள் என்பதைப் புறநானூறு நமக்குக் காட்டுகிறது. ஆயினும், பெரும்பகுதி இயற்கை இயற்கையாகவே இருந்தது.
நமக்குள்ளே புரையோடிப் போயிருந்த ஒற்றுமையின்மையால், மற்றவர்களுக்கு அடிமையாகிப் போனோம். பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று வந்தவன் போனவனெல்லாம் நம்மை ஆண்டார்கள். ‘ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் ஆக்கிரமித்தது காடுகளைத்தான். அவர்களின் ஆட்சியின் போது சாலைகளை அமைக்கவும், இரயில் பாதைகள் அமைக்கவும் வேளாண்மைக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. தேக்கு மரங்களுக்கு இராணுவத்தில் பயன்பாடு மிகுதி என்பதால், அவற்றையும் அவர்கள் அழித்தனர். 1807ஆம் ஆண்டு, சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட கேப்டன் வாட்சன் எனும் அதிகாரி தேக்கு மரங்களை ஆயிரக்கணக்கில் அழித்தான். அதன் பின்னர், அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் காடுகள் அழிக்கப்பட்ட பிறகுதான் 1865இல் இந்தியாவில் முதன்முதலில் வனச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தால், காடுகளின் ‘அறிவியல் அடிப்படையிலான நிர்வாகம்’ தொடங்கியது. அதாவது, மக்களின் உரிமையிழப்பும் காடுகளின் வீழ்ச்சியும் சட்டப்படி தொடங்கின’ (பேரா.க.பூரணச்சந்திரன், சிறகு.காம்.) இவையாவும் பாரதியார் பிறக்கு முன்பே நடந்து முடிந்து விட்டன.
இப்படிப்பட்ட முன்புலங்களை எல்லாம் அறிந்து கொண்டு, பாரதியும் அவரது சுற்றுச்சூழல் குறித்த புரிதல்களையும் அறியவேண்டும். குறிப்பாக, இயற்கையைக் குழந்தையைப் போல் வியந்து பாடுகின்ற வேத மரபினைத் தன் கொள்கையாகப் பின்பற்றியவர் பாரதியார். இப்போக்கை, அவருடைய வசனக் கவிதைகளிலும் கட்டுரைகள் கதைகள் ஆகியவற்றிலும் காணலாம்.
புதுச்சேரியிலே பாரதியார் வாழ்ந்த காலம், அவருடைய படைப்புகளின் பொற்காலம். அங்கே அரவிந்தர், குள்ளச்சாமியார் போன்றோருடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கமான உறவினால், அவர் மேலும் வேதாந்தத்தில் மூழ்கிப் போனார். பாரதியார் தன்னுடைய கதைகளில் (‘சும்மா’) , குள்ளச்சாமி கூறியனவாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
“நான் கிருத யுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரமபுருஷன். இதற்கு முன் ஆச்சாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று. ஆகையால், காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர். காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கைகூப்பி நமஸ்காரம் பண்ணு! பூச்சியைக் கும்பிடு! மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன். மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்றும் வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத்தவிர வேறு தெய்வமில்லை”
(ப.233).
“நானே பஞ்சபூதம்! அஹம் ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால், கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும் வேறெந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதாரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருதயுகம் - அதை நான் செய்வேன்”
(ப.234).
இவ்வாறு, எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும். உயிருள்ளனவும் அல்லனவுமாகிய எல்லாமும் கடவுளின் வடிவங்கள். இந்தக் கலியுகத்தை மாற்றிக் கிருதயுகத்தைப் படைக்க வேண்டும் என்பன யாவற்றையும் வேதம் பாரதிக்குக் கற்றுத் தந்தது. அதனால்தான், “காக்கை குருவி யெங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாரதியால் பாடமுடிந்தது.
குழந்தைப் பருவத்திலேயே ‘உயிர்நேயத்தை ஊட்டவேண்டும். அப்போதுதான் இயற்கை இயற்கையாக இருக்குமென்பது பாரதியின் உள்ளக்கிடக்கை.
“கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்
கிரக்கப் படவேணும் பாப்பா”
“வண்டி யிழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா”
(பக்.240,241)
என்று ‘பாப்பாப் பாட்டில்’ அதனை வெளிப்படுத்துகின்றார்.
மேலும் ‘புதிய ஆத்திசூடி’யில், “ஞாயிறு போற்று” (38), “ஞிமிறென இன்புறு” (39), “தெய்வம் நீ யென்றுணர்” (48) என்றெல்லாம் சொல்லி இளைய தலைமுறையினரை வழி நடத்துகின்றார். குறிப்பாகப் “பூமி இழந்திடேல்” (70) எனும் தொடர் பன்முகத்தன்மை கொண்டதாக அமைகின்றது.
மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களைக் காட்டிலும் விலங்குகள் மேன்மையானவை என்ற கருத்து, பாரதியாருக்கு மிக அழுத்தமாகப் பதிந்திருந்தது. இதனைச் ‘சந்திரத்தீவு’ எனும் கட்டுரையில், காசி இராசாவின் மந்திரி சுதாமனின் கூற்றில் வெளியிடுகின்றார்.
“பிற உயிர்களை அடிமைப்படுத்தும் வழக்கம் மிருகங்களுக்கில்லை. சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. ஒரு நாய், ஒரு கழுதை, ஒரு நரி, ஒரு பன்றிகூடச் சிங்கத்தின் கீழே அடிமையில்லை. முயல் கூடக் கிடையாது. மிருகங்களும் பட்சிகளும் பிற ஜாதி மிருகப் பட்சிகளை அடிமைப்படுத்துவதில்லை, ஸ்வஜாதிகளையும் அடிமையாக்குவதில்லை, மனிதரோ, ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகை, யானை முதலிய அன்னிய ஜாதி ஜந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மட்டுமேயல்லாது, பிற மனிதர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப் போல் பாவம் வேறேதேனுமுண்டோ?”
(பாரதியார் கட்டுரைகள், பக்.162-163)
“மனித ஜாதியில் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருப்பது போல், இதர ஜந்துக்களுக்குள்ளே கிடையாது. மனிதரிலே கொடுமை அதிகம்”
(ப.164) என்று பேசுவதினூடே விலங்குகளை அடிமைப்படுத்தி வைத்திருப்பது பாவம் என்பதை வெளியிடுகின்றார். அஃறிணை உயிர்கள் பலவும் மற்றோர் உயிரைக் கொன்று தின்று வாழ்கின்றன. “ஆனால், மனிதனைத் திருத்தினால் பிறகு காக்கை, குருவி முதலிய அநேக ஜந்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாம்ஸம் தின்னாதபடி திருத்திவிடுதல் ஸாத்தியமென்று தோன்றுகிறது. போதுமான தானியங்களும் பழங்களும் கிடைத்தால் காக்கை, குருவி, கிளி - இவை பூச்சி, புழுக்களைத் தின்னாதபடி பயிற்சி செய்விக்கலாம்”
(முன்னது, பக்.162) என்கிறார். இங்கு, வள்ளுவரின், ‘தன் ஊன் பெருக்கற்குப் பிறிதூன் உண்ணற்க!’ என்ற குரல் பாரதியிடம் வெளிப்படுகின்றது.
இந்த உலகையும் உலகத்திலுள்ள ஒவ்வொன்றையும் பாரதி கொண்டாடுகின்றார். இவ்வுலகத்திலுள்ள இனிமைகளைப் பின்காணுமாறு பட்டியலிடுகின்றார்.
“இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
யுடைத்து ஃ காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று. திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடு இனிது. ஃ ஆறுகள் இனியன.
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன. பறவைகள் ஃ இனிய.
ஊர்வனவும் நல்லன. ஃ விலங்குகளெல்லாம் இனியவை.
நீர்வாழ்வனவும் நல்லன.”
(வசன கவிதை, ப.423)
இப்படி, மண்ணிலுள்ள எல்லாவற்றையம் இனிமையுடையன எனக்கூறும் பாரதியார், இவ்வுலகத்திற்குத் தான் உணவாக வேண்டுமென்கிறார்.
“தெய்வங்களே! ஃ எம்மை உண்பீர், எனக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்!”
(மேலது, ப.425)
என்கிறார். உலகத்தை உண்பீர் என்றது, அதைப் பேய்த்தனமாக அழித்து, மலைகளைத் தகர்த்து ஏற்றுமதி செய்து உண்ணச் சொல்லவில்லை. புலன்களால் உண்டு, அந்த உலகத்துக்கே உணவாகி அதனுடன் கலந்துபோய்விடு என்கிறார்.
சூழலியல் மண்டலத்தையேத் தெய்வங்களாகவும் அமுதங்களாகவும் கண்டவர் பாரதி. இந்த அமுதங்களையும் தெய்வங்களையும் அனைத்துப் புலன்களாலும் அள்ளிப்பருகி, உயிரின் தாகம் தணிகிறார், தணிக்கிறார்.
“காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான், ஃ ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம்
தெய்வங்கள் ஃ உலோகங்கள், மரங்கள், செடிகள்,
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர் - இவை அமுதங்கள்”
(முன்னது, ப.424)
இங்கே, சூழலியலைப் பேணுகின்ற காடு முதலாக நீந்துவன ஈறாக உள்ளனவற்றை அமுதங்களாகவும் தெய்வங்களாகவும் காண்கிறார். மேலும், இந்த உலகத்தை, புவியை ஒரு பஞ்சுத் தலையணையாகக் கருதுகிறார். அதைப் புதுப்பிக்க வேண்டும். அழியாதபடி காக்க வேண்டும் என்கிறார்.
“என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை
அழிவெய்தாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால், அந்த
வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும்.
அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை, பழைய
தலையணை - அதிலுள்ள பஞ்சையெடுத்துப் புதிய
மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று
வெளியே எறி. அந்த வடிவம் அழிந்துவிட்டது.
வடிவத்தைக் காத்தால்
சக்தியைக் காக்கலாம்.
(முன்னது, ப.437)
இந்த உலகத்தைப் புதுப்பிக்கலாமே தவிர, அழிக்கக்கூடாது. எப்படிப் புதுப்பிக்கலாம் என ஆய்ந்து நீர்வளத்தைப் பரவலாக்கச் செய்யலாம் என்று குறிப்பிடுகின்றார்.
“வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளிற் பயிர் செய்குவோம்”
(பாரததேசம், ப.128)
என்கிறார். வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் என்றெல்லாம் சொல்லுபவர், ‘நல்ல காடு வளர்ப்போம்’
(முன்னது, ப.129) என்றும் கூறுகின்றார். ஆறுகளை ஒன்றிணைப்பதிலும் காடுகளை வளர்த்து மேம்படுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். அப்போதுதான் இயற்கை இயற்கையாயிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
காற்றுதான் இந்த உலக உயிர்களை வாழவைக்கும் உயிர்ச்சக்தி. ஆகையினால், அதை மாசுபடுத்தக்கூடாது. அது மாசுபட்டால் உயிர்கள் அழியும். அது வரும் வழியில் தூய்மைக்கேடுகளை அகற்றவேண்டும் என்கிறார். இங்கு, பாரதியாரின் சூழலியல் அறிவு மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
காற்றே யுகமுடிவு செய்கின்றான்.
காற்றே காக்கின்றான். / அவன் நம்மைக் காத்திடுக
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யட்சம் ப்ரஹ்மாஸி”
(வசனகவிதை, காற்று,ப.443)
“காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது, நாற்றம்
இருக்கலாகாது, அழுகின பண்டங்கள் போடலாகாது
புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும்
கூடாது. ஃ காற்று வருகின்றான்.
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர்
தெளித்து வைத்திடுவோம். ஃ அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும்
பொருள்களைக் கொளுத்தி வைப்போம்.
அவன் நல்ல மருந்தாக வருக.
அவன் நமக்கு உயிராகி வருக.”
(முன்னது,446 ரூ பாரதியார் கதைகள், பக்.235-237)
மாசு அடைந்த இவ்வுலகில், காற்றும் கரி அமிலங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இனிவரும் காலத்தில், ஒவ்வொரு மனிதனும் நுகர்வதற்காகக் காற்றை (உயிர்வளி) விலைகொடுத்து வாங்க நேரிடலாம். அதற்குள் நாம் விழிப்படைவோமாக!. காற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்ற கருத்தை வசன கவிதையிலும் கதையிலும் குறிப்பிட்டுள்ளதால், இக்கருத்தில் அவர் கொண்டிருந்த அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது.
பறவையினங்கள்மீது பாரதியாருக்குக் கொள்ளை விருப்பம். குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார். “மனிதவுருவம் நீங்கிக் குயிலுருவம் வாராதோ?” (குயில்பாட்டு: கற்பனையும் கதையும்) என்று ஏங்கி, சிட்டுக்குருவியைப் போல உடலும் இன்பமும் வேண்டும் என்கிறார்.
“சிறிய தானியம் போன்ற மூக்கு/ சின்னக் கண்கள்/ சின்னத் தலை/
வெள்ளைக் கழுத்து/ அழகிய மங்கல் - வெண்மை நிறமுடைய
பட்டுப் போர்த்த வயிறு/ கருமையும் வெண்மையும் கலந்த
சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு/ சிறிய
தோகை, துளித் துளிக் கால்கள்”
(பாரதியார் கட்டுரைகள், ப.158)
என்றும், “குருவிக்குப் பேசத் தெரியும் / பொய்செல்லத் தெரியாது” என்றும் வியக்கின்றார் பாரதியார்.
“இந்தக்குருவி என்ன சொல்லுகிறது? - “விடு” “விடு” “விடு” என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக்கொடுப்பது போலிருக்கிறது”
(முன்னது, ப.159) என்கிறார். இதை உணர்ந்து, ‘விட்டு விடுதலையாகிப் பறப்பாய், ஒரு சிட்டுக்குருவி போலே’ என்று கவிதை வடிக்கிறார்.
‘மனிதன் விலங்குகளை அடிமையாக வைத்திருத்தல் கூடாது. பாவங்கள் அனைத்திலும் கொடியது, அவற்றைக் கொன்று தின்பது. விலங்குகள் சர்க்கஸ் கம்பெனியில் பழக்கப்பட்டு வரும் மாதிரியைப் பார்த்தால் அவற்றின் உதவியைக் கொண்டு நாம் எத்தனையோ புதிய புதிய வழிகளில் காரிய ஸாதனை செய்துகொள்ள வழிகள் கண்டுபிடிக்கலாம் என்பது விளங்குகிறது. உண்மையாக அவற்றை நாகரிகப்படுத்தி அவற்றால் வாழ்வைப் பலதுறைகளிலும் அதிகப் பயன்படச்செய்ய விரும்புவீர்களேயானால், அதற்கு ஓர் மார்க்கம்தான் இருக்கிறது. அதாவது அன்பு’ என்று ‘மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி’
(பக்.306-308) எனும் கட்டுரையில் எழுதியுள்ளார்.
விலங்குகளைச் சீர்திருத்த வேண்டும். ‘அவற்றினுக்குப் பள்ளிக்கூடம் போட்டு நல்லவழி காண்பித்துச் சீர்திருத்துதல் மிகவும் அவசியம்’ (‘மிருகங்களைச் சீர்திருத்துதல்’ எனும் கட்டுரை, ப.309) என்கிறார். விலங்குகளையும் பறவைகளையும் கொன்று உண்ணுவது மிகப்பெரும் தவறு என்பதைப் பலவிடங்களில் வலியுறுத்தியுள்ளார். இதற்காக,
“கொல்லா விரதம் குவலய மெல்லாமோங்கி
எல்லார்க்கும் சொல்வதென் இச்சை பராபரமே”
என்று கூறிய, தாயுமானவரின் பாடலடிகளை மேற்கோள் காட்டுகிறார்
(கட்டுரை: மிருகங்களும் பட்சிகளும், ப.310).
‘நெட்டை மரங்களென நின்றார்கள்’ என்று பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்டினாலும்கூட, பாரதியாருக்கு மரங்களின்மீது பெரிய ஈர்ப்பு உண்டு. “பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” என்று பாடி, மரங்களிலும்கூட இறைவனைக் கண்டிருக்கிறார். பெ.தூரன் அவர்கள் தொகுத்த ‘பாரதி தமிழ்’ என்ற நூலில், ‘வேப்பமரம்’ என்றொரு கதை பாரதியார் எழுதியதாக உள்ளது. அதில், 16 அகவையுடைய ஆணும், 12 அகவையுடைய பெண்ணும் (தாமிரபரணி ஆறு) ஆற்றில் இரவு நேரத்தில் விளையாடுகின்றனர். பகலானதும் தாமிரபரணியாகிய அப்பெண் மறைந்து விடுகின்றாள். ஆடிய களைப்பில் வேப்பமரத்தடியில் அகத்தியர் படுத்துறங்குகின்றார். அவரைக் கொத்துவதற்குப் பாம்பொன்று வருகின்றது. அவரை எழுப்பிக் காப்பாற்ற வேப்பமரம் முயற்சிசெய்கின்றது. இலைகளை அவர்மீது தூவுகின்றது. பயனில்லை. பாம்பு அவரை இருமுறை கொத்தியது. மூன்றாம் முறை கொத்த முயன்றபோது, அதை எடுத்துக் கழுத்தில் போட்டுக்கொள்கின்றார் அவர். அவரிடம் பேசமுடியவில்லையே என வேப்பமரம் வருந்துகின்றது. மரம் அவர்கள் விளையாடியதைக்கண்டு மனம் மகிழ்ந்ததையும் பாம்பு தீண்டவரும்பொழுது எழுப்ப நினைத்து இலைகளைத் தூவியதையும் துடித்ததையும் உணர்ந்து, முனிவர் அதனிடம் பேசுகின்றார். மரத்திற்கு மனிதப்பிறவி வருகின்றது. இந்தக் குணத்திற்காக முனிவர் அதற்கு, ‘ரிஷிபோதம்’ வழங்குகின்றார். இவ்வரத்தால், “சகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாகிவிடும். எல்லா ஜந்துக்களிடத்தும் ஸமமான பார்வையும் ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்தும் தன்னைக் காண்பதாகிய தேவ திருஷ்டி உண்டாகும். இதன் காரணமாக ஜீவன்முக்தி பெறுவாய்” என்று அவர் மரத்திற்கு வரமளிக்கின்றார். இதை மரம் பாரதியாரிடம் சொல்ல, பாரதியார் அம்மரத்தை விழுந்து வணங்குகின்றார். அது, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்கவே, ‘உனக்கு அகத்தியர் எப்படி குருவோ, அதுபோல் நீ எனக்குக் குரு. ஜீவன் முக்தி பதம் தா’ என்று வேண்ட மரம் தந்தது. இக்கதை நிகழ்வுகள் பாரதியார் வேப்ப மரத்தடியில் படுத்துறங்கியபோது, கனவில் நடந்தனவாகக் கூறியுள்ளார்
(பாரதியின் வேப்பமரம், சந்திரா கிருட்டிணன் (க.ஆ.)). ஆகவே, கனவு என்ற உத்தியில் பாரதியார் வேற்றுலகிற்குச் செல்வதாகவும், ஆங்குப் பல அனுபவங்களைப் பெறுவதாகவும் பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்.
இயற்கையிடம் ஈடுபாடு காட்டாதவர்களெல்லாம், தங்களைக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பாரதிக்கு விருப்பமில்லை. ‘பிரகிருதியின் அழகைக்கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்தத் துரதிருஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்கள் எல்லோரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்’
(மேற்கோள்: பாரதியும் கீட்சும், ப.27) என்று வருத்தமடைகிறார்.
“இயற்கையை உண்ணும் கீட்சின் புலனுகர்வுத் தன்மையைப் பாரதியின் ‘ஞானரதம்’ படைப்பிலும் காணலாம். கந்தருவலோகத்தில் பயணம்செய்யும் பாரதி, அவன் சிநேகிதி பர்வதகுமாரியுடன் சூரியனின் கிரணங்களைக் காலை உணவாக உண்டு பசியாறுவதாகப் பாரதி எழுதுகிறான். ‘குயில்பாட்டு’ காலை வணக்கமும், ‘பாஞ்சாலி சபத’ மாலை வருணனையும் ‘காட்சிகள்’ கவிதைகளும் அழகை ஆராதித்து ஆனந்தம் அடைந்த கீட்சின் தன்னுணர்ச்சிக் கவிதைகளை நினைவூட்டுகின்றன
(முன்னது,ப.28)
என்று கவிஞர் பாலா, பாரதியின் இயற்கையின்மீதான காதலை மதிப்பிட்டுள்ளார்.
உயிர்நேயத்தை மிக உயர்த்திப் பிடித்துள்ள பாரதியாரே, இன்னொருபக்கம் உயிர்கள் கொல்லப்படுவதையும் காட்டை அழிப்பதையும் எதிர்ப்பின்றிப் பதிவும் செய்துள்ளார். “பாம்பை யடிக்கும் படையே சக்தி”
(‘சக்தி’,ப.81) என்று கவிதையிலும், ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின் மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோணத்துள்ள நத்தத்து வேடர்களும் வந்து பறவைசுட வாய்த்த பெருஞ்சோலை’ (கற்பனையும் கதையும்) என்று குயில்பாட்டிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கானை யழித்து மனை கட்டுவீர்” (‘சொல்’,வேதாந்தப் பாடல்கள், ப.109) என்ற தொடரில் காட்டை அழித்து வீடு கட்டுங்கள் என்கிறார்.
இக்கட்டுரையின்படி, பாரதியார் பிறக்கும் முன்னரே, தமிழகக் காடுகளின் ஒருபகுதி ஆங்கிலேயர்களாலும் மற்றவர்களாலும் அழிக்கப்பட்டுவிட்டது. பாரதியாருடைய காலத்தில் பறவைகளை வேட்டையாடுதலும் காடுகளை அழித்தலும் இயல்பானதாகவே பார்க்கப்பட்டன. அதனாலேயே பறவையை வேட்டையாடுதலையும் பாம்பை அடித்தலையும் காட்டையழித்து வீடு கட்டுதலையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளார். இந்தச் சூழலில், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் இயற்கை நேயச்சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டும் வேதாந்த மரபினை வெளியிடும் வகையிலும் தம் படைப்புகளில் இயற்கையைப் போற்றினார். இந்தக் கலியுகத்தை மாற்றிக் கிருதயுகத்தை உருவாக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு வலுவாக இருந்தது. இயற்கையைத் தெய்வமாகப் பார்க்கும் வேதாந்தக் கருத்தாக்கம் இவருக்கு மிகுதியாக இருந்தாலும், இதற்கு மாற்றாக, அதை உறவாகக் கருதும் பண்டைத் தமிழர்களின் சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டுள்ளார்.
உயிர்களிடத்திலே அன்பு காட்டவேண்டுமென்பதைக் குழந்தைகளிடம் பதிவு செய்துவிடுவது மிக நல்லதுயெனக் கருதிப் பாப்பாப் பாட்டிலும் ‘பூமியை இழந்திடாதே’ என்று புதிய ஆத்திசூடியிலும் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளிடத்திலே அடிமைப்படுத்தும் வழக்கமில்லையாதலால் அவை உயர்ந்த குணமுடையன என்கிறார். மனிதர்கள் விலங்குகளைக் கொன்றுண்டு உயிர் வளர்ப்பது பெரும்பாவம் என்பதும் மனிதர்களைப் புலால் உண்ணாது செய்துவிட்டால் விலங்குகளையும் அவ்வாறே செய்துவிட முடியுமென்றும் கூறுகிறார். இந்தச் சூழலியல் மண்டலத்தையே தெய்வங்களாகவும் அமுதங்களாகவும் காண்கிறார். மனிதர்களே அந்தத் தெய்வங்களையுண்டு, அவற்றினுக்கே உணவாகி, இந்த உலகத்திற்கும் உணவாவீர் என்று அன்புக் கட்டளையிடுகிறார். தான் இயற்கையாகி அதனுடனேயே கலந்துபோதலை விரும்பியுள்ளார்.
பஞ்சுத் தலையணையைப் போன்ற இவ்வுலகத்தை அழிவெய்தாதபடி காத்தல் வேண்டுமென மனிதர்களிடத்திலே கேட்டுக்கொள்கிறார். சூழலியலைப் பேணுவதில் காட்டின் பங்களிப்புப் பெரிதென்பதால் ‘நல்ல காடு வளர்ப்போம்’ என்று அறிவுறுத்துகிறார். காற்றை மாசடையச் செய்துவிட்டால் அது யுகமுடிவிற்கு வழிகோலும். ஆகவே, காற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்ற கருத்தை வசன கவிதையிலும் கதையிலுமாக இரண்டிடங்களில் வலியுறுத்தியுள்ளார். குயிலாக மாறிடமாட்டேனா என்று ஏங்குகிறார். சிட்டுக்குருவியின் மொழியிலே ‘விட்டு விடுதலையாகு’ என்று கடவுள் தனக்குக் கற்பிப்பதாகக் கருதுகிறார். விலங்குகளை நாகரிகப்படுத்தி, அவற்றினுக்குப் பள்ளிக்கூடம் அமைத்து அவற்றினைச் சீர்திருத்த வேண்டுமென்கிறார். வேப்பமரத்தைத் தன் குருவாக ஏற்கிறார். அதனிடத்தில் ‘சீவன்முக்தி பதம்’ வேண்டுகிறார்.
இயற்கையிடம் ஈடுபாடு காட்டாதவர்கள் கவிஞர் என்று சொல்லிக்கொள்வது தவறு என்கிறார். மொத்தத்தில் பாரதியாரின் மதம் இயற்கைமதம். அதைச் சேதப்படுத்துவதிலும் அதிலிருந்து விலகிப் போவதிலும் அவருக்கு உடன்பாடில்லை. இத்தகைய செய்திகள் பாரதியாரின் சூழலியல் சிந்தனைகளாக இக்கட்டுரையின்வழியாகப் பெறப்பட்டன.
ஆகவே, நம் மூதாதையர் வழியிலும் பாரதியின் நெறியிலும் நின்று காட்டையும் கானுயிர்களையும் மண்ணையும் மலையையும் கயவர்களின் கையிலிருந்து காப்பாற்றி எதிர்காலத்தினருக்குக் கையளிப்போம்.