Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 8
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

அறநூல்களில் ஒழுக்கவியல்

முனைவர் ப. சு. மூவேந்தன்
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.


முன்னுரை

உலகமொழிகளில் தோன்றிய இலக்கியங்களில் மிகுதியான அளவில் அற இலக்கியங்களைப் பெற்ற மொழி தமிழ் ஒன்றே ஆகும். அந்த அளவுக்கு அறமுரைக்கும் சான்றோர்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர். அவர்கள் தத்தம் சமயவழி நின்றும், பொதுநிலையிலும் அறக்கருத்துக்களை எடுத்துரைத்து நல்லதோர் சமுதாயம் உருவாகத் துணை நின்றுள்ளனர். தமிழ் இலக்கியத்தின் வழி சமூக வாழ்வின் மேன்மைக்குத் தேவையான அறம் வலியுறுத்தப்பட்டது. காவியங்களுக்கு உரிய பாவிகமாக அறம் அமைந்தது. அற இலக்கியக் காலத்தில் மக்களிடையே நேரிடையாக அறம் எடுத்துரைக்கப்பட்டது. சான்றோர் ஒழுகிய ஒழுக்கத்தின் வழி நிற்றலே அறம் என வகுக்கப்பட்டது. இவ்வொழுக்கப் பண்புகள் கற்றறிந்த சான்றோர்கள், சமய அருளாளர்கள் போன்றோர் கூறியவாறு ஒழுகுதல் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழ்ச் சமூக மரபில் ஒழுக்கப் பண்புகள் இலக்கியத்தின்வழி பெருமளவில் பேசப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுவதால் நேரும் இழிவுகளும் காட்டப்பட்டுள்ளன. ஒழுக்கம் பொருள் விளக்கம், ஒழுக்கத்தின் தேவை, ஒழுக்கப் பண்புகள், ஒழுக்கவழி நேரும் சமூக உயர்வு ஆகியன அறநூல்களில் காட்டப்படும் திறம் குறித்து இக்கட்டுரையில் பேசப்படுகின்றது.

தமிழில் அறஇலக்கியப் பின்னணி

சங்கம் மருவிய காலத்தில் மெய்யியலின் பின்னணியில் தமிழகத்துக்கு வந்து பரவிய சமண, பௌத்தச் சமயக் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்பு நிலைகளிலும் இடம் பெறலாயின. சமயம், சமூகம், அரசியல், பண்பாட்டியல் என அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் தனது ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின. சமூக நிகழ்வுகளை உள்வாங்கும் இலக்கியங்கள் சமயம் சார்ந்த அறக்கருத்துக்களையும் எளிதாக உள்வாங்கின. தமிழ்ச் சமூகமும், இலக்கியங்களின் வாயிலாக அறக்கருத்துக்களையும் சிந்தனைகளையும் சமயத்தின் பின்னணியோடு ஏற்றுக் கொண்டன.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வரலாற்றியல் நோக்கில் ஆராயப்புகின் அது தமிழ்ச்சமூகத்தின் செல்நெறிகளை வரிசைப்படுத்திக் காட்டுவனவாக அமைந்துள்ளதனை அறியமுடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ச் சமூகம் பண்பட்டதாகவே இருந்துள்ளது. இவர்களின் பண்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் பின்பற்றி நடந்த ஒழுக்கநெறிகளே காரணமாக இருந்துள்ளது. ஆகவே, தமிழர்களிடத்தில் அறத்தோடு சேர்ந்த ஒழுக்கநெறிகள் பண்டைக் காலத்திலிருந்தே தொடர்ந்து இருந்து வந்துள்ளதனை அவதானிக்கலாம்.


ஒழுக்கம்-பொருள் விளக்கம்

அறம் என்னும் சொல் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டமைந்தது. அதேபோன்று ஒழுக்கம் என்பதும் பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல்லாக அமைந்துள்ளது. ஒழுக்கம் என்பதற்கு, சீலம், நன்னடத்தை, வழி செல்லுகை, உயர்ச்சி, தன்மை, முறை, மேன்மை, உலகம் ஓம்பிய நெறி, நீதிக்கடமைகளில் நின்றும் தவறாது நடத்தல், என (ப. 190) கௌரா தமிழகராதியும் (1), இதனோடு ’குலம்’ என்பதனையும் சேர்த்து தமிழ்-தமிழ் அகராதியும் (2) எடுத்துரைக்கின்றன.

சமூகத்தின் தேவையை ஒட்டி, இயல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகளே சங்க காலத்தில் வழக்கில் இருந்தன. அதனால் ‘ஒழுக்கம்’ என்பது சங்க காலத்தில் ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்னும் பொருள் தருவதாக இருந்துள்ளது. சமயநெறிகள் வளர்ச்சிப் பெற்ற பின்னர் ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையைக் களப்பிரர் காலம் உருவாக்கியது.

பண்டைச் சமூகத்தில் பொதுவுடைமைச் சிந்தனை ஓங்கி இருந்தது. அதில் ஒழுக்கம் பேணப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட தனியுடைமை வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் ஒழுக்க நெறிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது உலகம் யாவும் நிலவிய போக்காக விளங்கியுள்ளது. இத்தகு நிலையிலேயே ஒழுக்கப் பண்புகளை வளர்த்தெடுக்கும் பணியை இலக்கியங்கள் மேற்கொண்டன. இதற்குச் சமயக் கோட்பாடுகள் துணைநின்றன.

இதனை, “சங்க காலத்தில் பெருவழக்காக இருந்த சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் போன்றன எல்லா நாட்டு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இவை தனியுடைமை பெருகிய அறநெறிக்காலத்தில் அதிகமாகக் கண்டிக்கப்படுவதைக் காண்கிறோம்” (3) என்னும் ஜான்சாமுவேல் கருத்தினின்றும் உணரலாம்.

சங்க காலத்தில் பெருவழக்காகச் சிற்றின்ப நுகர்ச்சி, புலால் உண்ணல், கள்ளுண்ணுதல், பரத்தையர் ஒழுக்கம் முதலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றைச் சங்க காலம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தது சிந்திக்கத்தக்கதாகும்.

ஒழுக்கமும் நடத்தையும்

ஒழுக்க விதிகள் மக்களை நன்னெறிக்கண் வழிநடத்திச் செல்கின்றன. அறியாமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு கைவிளக்காக அறிவினைப் புகட்டுகின்றன. நன்னடத்தை இல்லாமல் தவிப்பவர்களுக்கு அறிவுரைகளைப் புகட்டும் ஊன்றுகோலாக அமைகின்றன. இதன்பொருட்டே ஒழுக்கம் என்பதற்கு நடத்தை என்ற பொருளும் காட்டப்படுகின்றது.

இதனை, “ஒழுகு என்னும் அடிச்சொல்லிற்கு ‘நட’ என்னும் பொருளும் உண்டு. இதனால் ஒழுக்கம் என்பது நடத்தை எனவும் பொருள்படும். நமது மொழி மரபுப்படி நடத்தை என்பது நன்னடத்தையைக் குறிக்கும். நன்னடத்தையாகிய ஒழுக்கம் என்ற பொருளை நீதி என்னும் சொல் உணர்த்தும்” (4) என்னும் க. த. திருநாவுக்கரசு கூற்றினின்றும் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் இதனை, “நீதிநெறி என்பது ஒழுக்க நெறி; ஒழுக்க நெறி என்பது பண்புள்ள வாழ்க்கை” (5) என்னும் தெளிவுறுத்துவதனைக் காணலாம்.


ஒழுக்கத்தின் பயன்

மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் எல்லா நிலைகளிலும் துணைநிற்பது அவன் பின்பற்றி நடக்கும் ஒழுக்கமே. ஒழுக்கத்தின்படி நிற்பவனால் உலகம் தூய்மை அடைகின்றது. சமநிலை எய்துகின்றது. அது மனிதனை மனிதனாக்குவதற்குத் துணைசெய்கின்றது. ஒழுக்கத்தினால் வரும் பயன்பாட்டினைச் சமய அடிப்படையில், “உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் நீதிநெறிகளைப் பின்பற்றி நடத்தல்வேண்டும். அப்போதுதான் சமூகவாழ்வு நிலைபெறும். நீதி நெறிகளும் ஒழுக்க நெறிகளும் வாழ்க்கையின் அடித்தளமாகும். நீதி இல்லாத தத்துவம் பயனற்றுப்போகும். நன்னெறியைப் பின்பற்றி நடக்காத வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாக அமையும். நீதிநெறியின்படி வாழாதவன் பிணத்துக்குச் சமமானவனாவான்” (6) என்று விளக்குகின்றார் சுவாமி சிவானந்தா.

ஒழுக்கத்தின் உயர்வு

சமூகம் மேம்பாடு அடையத்தக்க பண்புகளில் ஒழுக்கமே தலையாயதாகத் திகழ்கின்றது. அது தனிமனிதனுக்கும், சமூகத் தலைமையேற்று நடத்தும் நாடாளும் தலைவனுக்கும், இல்லறத்தின்கண் இனிதிருந்து வாழ்வானுக்கும், துறவறம் மேற்கொள்ளும் துறவியர்க்கும் மிகமிக முதன்மையான பண்பாக அமைந்திருக்கின்றது. இதன் சிறப்பினைக் கருதியே சங்கச்சான்றோர்கள் ஒழுக்கத்திற்கு உயரிய இடத்தைத் தந்தனர்.

ஒழுக்கம் என்பது, “வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஓர் ஒழுங்கமைவினை ஆளும் பண்பாகும். அது நன்மை யாவர்க்கும் தரத்தக்கதாக அமையுமாயின் அது நல்லொழுக்கம் என்று சிறப்பிக்கப் பெறும். அன்றாட வாழ்வில் தம் கடமைகளை முறையாகச் செய்தலும் ஓர் ஒழுக்கப் பண்பாகும். சாலை விதிகளை மதித்து நடத்தல் கூட ஒழுக்க நெறியின் ஒரு கூறாக நிற்றலை அறியலாம்” (7) என ஒழுக்கம் என்பதற்கு நல்லதோர் எளிமையான விளக்கம் தருகின்றார் தமிழண்ணல்.

இசையின் ஒழுங்கு கேட்பவர் மனங்களைப் பிணைக்கும் தன்மையதாய் அமைகின்றது. நிறங்களின் ஒழுங்கு இனிய ஓவியங்களாக அமைந்து, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. பாடலின் ஒழுங்கு கேட்பவர் நெஞ்சங்களைப் பிணிக்கிறது. அதுபோல அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றி நடக்கும் ஒழுங்கு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றது.


சான்றோர் வழி நிற்றல் ஒழுக்கம்

சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு நெறிகாட்டியவர்களே அக்காலத்தில் சான்றோர் எனப்பட்டனர். அவர்களது வாழ்க்கை ஏனையோர்க்கு ஒரு பாடமாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு பொறிவாயில் ஐந்தவித்த சான்றோர்களின் வாழ்வியற் சொற்கேட்டு நடத்தலையே ஒழுக்கப் பண்பு என வள்ளுவர் கூறுவதைக் காணலாம். திருவள்ளுவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் நிலையான கருத்தினைக் கொண்டிருந்தார். ஆதலால், மனிதர்கள் பின்பற்றி நடத்தும் நன்னடத்தைகள் நல்லொழுக்கமாகவும், அவர்களைப் பெரியவர்களாகவும் காட்டுகிறது என்று அறிவுறுத்தினார்.

“வீரத்தாலும், குணத்தாலும், ஒழுக்கத்தாலும் மேம்பட்டோர் சான்றோர் எனப்பட்டனர். சங்க காலத்தில் வீரத்தால் நிறைவு பெற்றவனைக் குறித்த இச்சொல், பிற்காலத்தில் குணத்தால் நிறைவு பெற்றவனைக் குறிக்கலாயிற்று” (8) என்பார் க. காந்தி. இத்தகைய சான்றோர்வழி நின்று நடத்தலே ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் ஆகும். சங்கச் சான்றோர் பழியொடு வரும் இன்பத்தை அறவே வெறுத்து ஒதுக்கினர் என்பதனை அகநானூறு,

“……..சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” (அகநா. 112:11-12)

என்று எடுத்துரைக்கக் காணலாம். சான்றோர் எனப்படுவோர் சமூகத்தில் அன்பு, அருள், கருணை ஆகியவற்றை மக்களிடையே தழைக்கச் செய்வோராக விளங்கி நிற்பர். அது அவர்தம் கடமையாக நிலைபெற்றிருக்கும் என்பதனை,

“பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” (கலி. 139:1-3)

என்று கலித்தொகை எடுத்துரைக்கக் காணலாம். இச்சான்றோர்கள் எனப்படுவோர் யாவரிடத்தும் அன்பு பாராட்டும் பண்பும், பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் இயல்பும், யாவர்க்கும் ஒத்த தன்மையராய் நன்மை பயப்பவர்களாக நிற்றலும், கருணை மிக்கவர்களாகவும், உண்மையைப் போற்றி நடப்பவர்களாகவும் இருப்பர் என்பதனை,

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றி தூண்” (குறள். 983)

என்று குறித்தார். மனிதனை மேம்பாடு அடையச் செய்யும் கூறுகளான சான்றாண்மை, அன்புடைமை, நடுவுநிலைமை, பொய்யாமை, இன்னாசெய்யாமை போன்றவற்றைக் கைவிடாது நிற்போமாயின் இன்றைய சமூகம் வளர்ச்சி காணும்.


ஒழுக்கத்தைப் பின்பற்றி நடத்தல்

ஒழுக்கத்தைப் பின்பற்றி நடத்தல் என்பது எல்லோர்க்கும் எளிதான செயலன்று என்பதனை உணர்ந்தே தமிழ்ப்புலவர்கள், ஒழுக்கத்தின்வழி நேரக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுத் தந்துள்ளனர். அதற்கு மனம், மெய், மொழிவழிச் செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

மனிதன் ஐம்புலன்களுக்குக் கட்டுப்பட்டவன். இவை ஐந்தும் அவனை எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தி வைப்பதில்லை. இவற்றை அடக்கியாளுதலும் அவ்வளவு எளிதன்று, இதன் சிறப்பினைக் கருதியே ஒழுக்கப் பண்புகள் வளர்ப்பதற்கான நன்னெறிகளை அறஇலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன.

உலகில் வாழும் மக்கள் பெறத்தக்க எல்லாப் பண்புகளில் உயர்வான ஒழுக்கமுடைமையே என்பதனை முதுமொழிக் காஞ்சி,

“ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” (முதுமொழி, 1-1)

என்று எடுத்துரைக்கின்றது. கல்வி கேள்விகளில் சிறந்து வாழ்வதைவிட ஒருவன் ஒழுக்கமுடையனாய் விளங்குவதே சமூகத்திற்குப் பயன்தரத்தக்கதாக அமையும் என்பதனை நடைமுறை வாழ்வோடு பொருந்தவருமாறு காட்டுகின்றது இப்பாடல் கருத்து.

மனிதனை நற்பண்புள்ள மனிதாக மாற்றுவது அவன் கைக்கொண்டு நடக்கும் ஒழுக்கமே. இன்றைய காலகட்டத்தில் கற்றறிந்தவர்களிடம் ஒழுக்கக் கேடுகள் நிறைந்திருத்தலைக் காணலாம். அவ்வாறு ஒழுக்கப் பண்பு இல்லாது நடப்பவன் விலங்கிற்கும் கீழானவாகவே கருதப்படுவான் என்பதனைத் திருவள்ளுவர்,

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனைய யவர்” (குறள். 410)

என்றும்,

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ற்றிவிலா தார்” (குறள். 140)

என்றும் கூறுவதனைக் காணலாம். மனத்தில் மாசு நிறைந்து கிடக்கும் நிலையில் செய்யும் செயலும், சொல்லும் சொல்லும், உரைக்கும் உரையும் மனித வாழ்க்கைக்கு எவ்வித்திலும் பயன்தராது. அவை அறத்தின்பாற்பட்டவையாகா. மனத்தில் படிந்துள்ள மாசினைக் களைவதற்கு அறத்தைப் பின்பற்ற வேண்டும். அவ்வகையில் மனிதனது ஒழுக்கப் பண்புகளைக் கெடுப்பன பொறாமை, அவா, வெகுளி, இன்னாச்சொல் போல்வனவாகும். இவற்றைப் புறந்தள்ளி வாழும் போதுதான் ஒழுக்கத்தைப் பின்பற்றி நடத்தல் இயலும். இதனை,

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா தியன்றது அறம்” (குறள். 35)

எனக் குறித்தார் திருவள்ளுவர்.


ஒழுக்கமே உயர்வு தரும்

மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருவனுக்கு நன்மை பயப்பதாய் அமைவது அவன் பின்பற்றி நடக்கும் ஒழுக்கமே. ஒழுக்கத்தினின்று தவறுபவன் மானத்தை விட்டவனாகின்றான். தன் குடிக்குத் தானே இழிவைத் தேடிக் கொள்பவன் ஆகிறான். ஒழுக்கம் தவறிய செயல்கள் அவனுக்கு ஆக்கத்தைத் தருவதனைப் போல இருந்தாலும், அது அவனுக்குக் கேட்டினைத் தருவதாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி.

“ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்” (குறள். 138)

ஒழுக்கத்தின் வழியே ஒருவர்க்குச் சிறப்பினைத் தரும். அது உயிரை விடப் பெறற்கரிய அரும்பொருளாகக் கொள்ளப்படும். எல்லா உயிர்க்கும் விழுப்பம் தருவது ஒழுக்கமே என்பதால் அது உயிரினும் ஓம்பப்படும் என்கிறார். கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் நூல்களைக் கற்றலைக் காட்டிலும் அவர் பின்பற்றி நடக்கும் ஒழுக்கமே சிறந்து விளங்கும் தன்மையது என்பதனை இக்குறள் விளக்கி நிற்கக் காணலாம்.

உயர்குடிப் பிறப்பு என்பது ஒழுக்கம் உடைமையே. ஒழுக்கத்திலிருந்து விலகித் தாழ்ந்துவிடும் நிலை இழிபிறப்பு என்றே கொள்ளத் தகும். அதாவது. ஒழுக்கம் உடையவன் யாராயினும் அவனை உயர்குடிப் பிறப்பினன் என்றே கொள்ளலாம். ஒழுக்கம் இல்லாதவன் யாராயினும் அவனை இழிந்த பிறப்பினன் என்றே கொள்ளலாம். ஒருவனுக்கு இயல்பாக அமையும் குடிப்பிறப்பை விட அவன் காத்து வளர்க்க வேண்டிய ஒழுக்கம் அவனுக்கு இன்றியமையாதது ஆகும். ஒழுக்கமே சமூக அமைப்பை நிலைத்து நிற்கச் செய்கிறது. மதிப்பையும் நம்பிக்கையையும் வழங்குகின்றது.

“வாழ்க்கை முறையின் அடிப்படை ஒழுக்கமே ஆகும். ஒவ்வொரு துறைக்கும் உரிய ஒழுங்கு முறைகள் உண்டு. அந்த ஒழுங்கு முறையை உணர்ந்து நடக்கையில் ஒழுக்கம் என்னும் கோட்பாடு பிறக்கிறது” (9) என்கிறார் பேரா. பொற்கோ.

ஒழுக்கத்தால் மேன்மை அடையலாம். ஒழுக்கம் குன்றினால் அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படும். தம் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையவராய் விளங்குதல் ஒழுக்கமுடைமை ஆகும்.

ஒழுக்கமே மனிதனை விலங்கினின்றும் பிரித்துணர்த்துகிறது. எனவே. ஒழுக்கம் இல்லாதவன் விலங்காகி விடுகின்றான். ஒழுக்கமே மனிதன் மேற்கொள்ள வேண்டிய அறத்திற்கு விதையாக அமைகிறது என்பதனை.

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” (குறள். 138)

என்னும் குறள்வழி எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர்.

ஒருவன் இடைவிடாது நல்லொழுக்கத்தில் நின்றொழுகி, மன, மொழி, மெய்களால் தீய எண்ணங்கள் அணுகாதபடி காத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே தனிமனிதன் பெறத்தக்க பண்புகளில் சிறந்ததாகும் என்பதனைத் திருவள்ளுவர்,

“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழக்கியும் வாயால் சொலல்” (குறள். 139)

என்று குறிப்பிடுகின்றார். மனத்தூய்மை நற்செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது. ஆதலின் தனிமனிதன் தான் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களில் முதலில் சிந்தனைத் தூய்மை பெறல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது.


ஒழுக்கப் பண்புகள்

மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். இல்லறத்தில், நட்பில், பேச்சில், சிந்தனையில் என யாவற்றிலும் ஒழுக்கம் நிலைபெற வேண்டும் என்பதே அறநூலோரின் கருத்தாக அமைந்துள்ளது.

நட்பில் ஒழுக்கம் பேணுதல், மனைவியைக் காத்து நிற்றல், பண்பில்லாத சொற்களைப் பேசாதிருத்தலும் ஒழுக்கத்தின் பாற்படும் என்பதனை,

“நண்புஇல்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும்-பண்பில்
இழக்குஆய சொல்லாடு வானும்இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடி யாதார்” (திரிகடுகம், பா. 57)

என்று திரிகடுகம் குறிப்பிடுகின்றது. ஒருவர் பிறர் செய்த பிழைகளையும், தீமைகளையும் பொறுத்துக் கொள்ளுதலும் ஒழுக்கத்தின் பாற்படும். பிறர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அதனை உடனே மறந்து விடுவதும், செய்வதறியாது பிழை செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்வதும் தனிமனிதன் செய்யத்தக்க பண்புகளாக அமைந்துள்ளன. இதனைச் சிறுபஞ்சமூலம்.

“பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை
இழைத்ததீங் கெண்ணியிருத்தல்; பிழைத்த
பகைகெட வாழ்வதும் பலபொருளால் பல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று” (சிறுபஞ்சமூலம், பா. 14)

என்று எடுத்துரைக்கின்றது.

ஒழுக்கமும் மனித வாழ்க்கையும்

திருவள்ளுவர் ஒழுக்கத்தையே அறமாகக் கொள்கிறார். அறத்தின் வித்தாக அமைவது ஒழுக்கமே ஆகும்.

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்” (குறள். 132)

ஒழுக்கம் குன்றினால் பிறப்பின் உயர்வு அழிந்து போகும். அவரவர் பிறப்புக்கு உரிய தொழிலைச் செய்யாதொழியினும் மீண்டும் அத்தொழிலை வேண்டும் போது செய்து கொள்ளலாம். ஆனால். ஒழுக்கம் குன்றிப் போனால் மீண்டும் அதைப் பெறமுடியாமல் போய்விடும். ஆகவே, தத்தம் பிறப்புக்குரிய தொழிலைவிடச் சமுதாயத்தில் ஒழுக்கமே இன்றியமையாதது என்பது பெறப்படும். குலத்தொழிலைவிடச் சமுதாயத்தில் பொது ஒழுக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தினை,

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (குறள். 134)

என்னும் குறள்வழி விளக்குகின்றார். எந்தக் குலத்தவராயினும் அவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பாராயின் அவரது குடிப்பெருமை குன்றும் என்பது அறியத்தக்க செய்தியாகும். தான் எந்தவொரு உயிரையும் கொல்லுதல் கூடாது; பிறர் கொல்லுவதையும் விரும்புதல் கூடாது. பொய் சொல்லுதல் கூடாது. பிறர் பொருளைக் கவர நினைத்தல் கூடாது. சிற்றினம் சேருதல் கூடாது. பிறர் பேசும் மறைபொருளைக் கேட்டதனைத் தவிர்த்தல் வேண்டும். தீச்சொல் சொல்லாது இருத்தல் வேண்டும். இந்த நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்பவனே ஒழுக்கத்தில் சிறந்தவனாவான் என்பதனை ஏலாதி,

“கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்பொருள்மேற்
செல்லான் சிறியாரினஞ் சேரான்-சொல்லும்
மறையிற் செவியிலன் தீச்சொற்கள் மூங்கை
இறையிற் பெரியாற்கு இறை” (ஏலாதி, பா. 20)

என்று எடுத்துரைக்கின்றது.


ஒழுக்கப் பண்பு மனிதர்களிடையே வளர்ப்பதற்காகவே நாட்டில் சமயங்கள் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு சமயமும் மக்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கும் போக்கினையே வலியுறுத்துகின்றன. சமயங்கள் எடுத்துரைத்த ஒழுக்கப் பண்பின் மேன்மையை மறந்துவிட்டபடியால் இன்றைக்கு சமயவாதங்கள், மனித அழிவுக்கு வித்திட்டு வருகின்றன. இதற்குக் காரணம் சமயப் பின்பற்றுதலில் ஒழுக்கத்தைக் கைக்கொள்ளாமையே ஆகும். மக்கள் எச்சமய நெறியைப் பின்பற்றி நடந்தாலும், மனிதவளத்தை மேம்படுத்தும் பண்பாட்டு ஒழுக்கங்களை எந்நிலையிலும் கைவிடலாகாது என்பதனை அறிவுறுத்துவதற்கே தமிழ் அறஇலக்கியங்கள் தோற்றம் பெற்றன என்பது தெளிவு.

முடிவுரை

ஒரு மனிதன் பெறத்தக்க பண்புகள் யாவற்றிலும் ஒழுக்கமே உயர்ந்தது. அது எல்லாக் காலத்திற்கும் ஏற்கத்தக்க வாழ்வியல் அறமாகும். உற்றுநோக்கின் சமூக வளர்ச்சிகள் யாவும் ஒழுக்கத்தால் பெறத்தக்கனவே. நல்லதோர் குடும்பம், நல்லதோர் சமுதாயம், நல்லதோர் அரசு ஆகியன அமைவதற்கு ஒவ்வொருவரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் என்பதே அறநூல்கள் வலியுறுத்தும் ஒழுக்கவியல் பண்புகளாகும். திருவள்ளுவர் ஒழுக்கத்திற்கே முதன்மையிடம் தந்துள்ளார்.

மனிதவாழ்வில் ஒழுக்கமே உயர்வானதாகும். அதிலும் தனிமனித மேம்பாட்டுக்கு ஒழுக்கமே முதன்மையானதாக அமைகின்றது. அது எங்கே, எப்படி ஒழுகவேண்டும் என்பதைப் பற்றிய உணர்வினைப் பெற்றிருத்தல் ஆகும். மனித வாழ்வில் பெறத்தக்க பண்புகளில் ஒழுக்கமே சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. அத்தகு சிறப்புமிக்க ஒழுக்கத்தைப் பற்றி ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் உயர்வாகப் பேசுகின்றார் திருவள்ளுவர். ஒழுக்கம் உடைமை பற்றித் திருவள்ளுவர் ஒருவனுக்குக் கூறும் அறிவுரை, “பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்” என்பதாகும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதே அறநூல்களின் கருத்தாக அமைந்துள்ளது. அது தனி மனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பெருந்துணை புரிவதால், தனி மனிதன் தனது செயல்கள் யாவற்றிலும் ஒழுக்கத்தை மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

ஒழுக்கப் பண்பு இன்றைய காலகட்டத்தில் அருகி வருகின்றது. ஒழுக்கத்தைப் பற்றிய கல்வியும், சிந்தனையும், எல்லா நிலைகளிலும் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அறத்தெளிவும் கைக்கொள்ளும் போது நமது சமூகம் மேம்பாடு அடையும் என்பது திண்ணம். அதற்குத் தமிழ் இலக்கியங்களின் ஒழுக்கப் பண்புகளை அனைவரும் அறிந்து பின்றப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அவா.

சான்றெண் விளக்கம்

1. கௌரா தமிழகராதி, ப. 190

2. தமிழ் தமிழ் அகராதி, வர்த்தமான்ன் பதிப்பகம், ப. 140

3. ஜான் சாமுவேல், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், ப. 39

4. க. த. திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம், ப. 24

5. மேலது, ப. 24

6. ஸ்ரீசுவாமி சிவானந்தா, ஒழுக்கநெறிக் கல்வி, ப. 222

7. தமிழண்ணல், திருக்குறள் நுண்பொருளுரை, ப. 76

8. க. காந்தி, தமிழர் எண்ணங்கள், ப. 134

9. பொற்கோ, திருக்குறள் உரைவிளக்கம், தொகுதி-1, ப. 134

துணைநின்ற நூல்கள்

1. க. காந்தி, தமிழர் எண்ணங்கள், வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை, 1990

2. காமாட்சி சீனிவாசன், குறள் கூறும் சமுதாயம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1975

3. கௌரா தமிழகராதி, சாந்தா பதிப்பகம், சென்னை, 2010

4. ச.வே. சுப்பிரமணியன், (ப.ஆ.) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், மணிவாசகர் நூலகம், சென்னை.

5. தமிழண்ணல், (உ.ஆ.), திருக்குறள் நுண்பொருளுரை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2000.

6. தமிழ்-தமிழ் அகராதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2007

7. பொற்கோ, (உ.ஆ.) திருக்குறள் உரைவிளக்கம், பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2004

8. மு.வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாரி நிலையம், சென்னை. 1971

9. ஜி. ஜான் சாமுவேல், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், ஆசியவியல் ஆய்வு நிறுவனம், சென்னை, 1987

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p130.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License