நன்னூலில் தேர்வியல் குறிப்புகள்
முனைவர் ப. கொழந்தசாமி
பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி.
முன்னுரை
கல்வியியல் சிந்தனைகள் காலந்தோறும் வளர்ந்து வருகின்றன. இன்று பல துறைகளின் கூட்டு முயற்சியால் புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. இருந்தாலும் நமது பழைய கருத்தாக்கங்கள் இன்றும் பொருத்தமுடையனவாக அமைந்துள்ளன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனைவரால் இயற்றப்பட்ட நன்னூல் என்னும் இலக்கண நூலில் தேர்வியல் சிந்தனைகள் தென்படுகின்றன. இவை, கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் உதவி, மானுட மேன்மைக்கு வழிவகுக்கின்றன. அவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பாயிரத்தில் தேர்வியல்
நன்னூலின் பாயிரம், நூல் மற்றும் ஆசிரியரது இலக்கணம், மாணவர் இலக்கணம், கற்பித்தல் முறைகள், கற்றல் முறைகள் ஆகியவற்றை வகுத்துரைத்துள்ளது. அவற்றில் தேர்வியல் கருத்துக்களும் காணப்படுகின்றன. தேர்வு என்பதை ‘ கற்ற செய்திகளை, கேட்கப்பட்ட வினாவிற்கு ஏற்ப விடை எழுதும் பணி ‘ என்று வரையறுக்கலாம். எனவே தேர்வு முன் செயல்பாடுகள், தயாரிப்பு ஆகியன குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. தேர்வுத் தயாரிப்பிற்கு ஆசிரியர், பாடம், மாணவர் என்னும் மூன்று கூறுகள் இன்றியமையாதவை. இவற்றை வலியுறுத்தும் பவணந்தியார் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் விளங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
நல்லாசிரியர்
நிலம், மலை, தராசு, மலர் ஆகியவற்றை நல்லாசிரியருக்குச் சான்றுகளாகக் காட்டியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் கேட்டல், பேசல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித்திறன் மிக்கவர்கள்ளகவும் நற்பண்புகளின் உறைவிடமாகவும் திகழ வேண்டியதை வலியுறுத்தியுள்ளார். இத்தகையச் சிறப்புகளைக் கொண்ட ஆசிரியர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள் தேர்வை ஆக்கப்பூர்வமாக அணுகுவர் என்பது உறுதி. ஆசிரியர் கூறும் அறிவுரைகளையும் பாடங்களையும் கவனமாகக் கேட்டுப் புரிந்து கொண்டு பலமுறை படித்து, உடன்பயிலும் மாணவர்களுடன் விவாதித்துத் தெளிவுபெற்றுத் தேர்வை உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.
நன்மாணாக்கர் இவ்வகையில், கவனமாகப் பாடம் கேட்டல், கலந்துரையாடல் ஆகியன தேர்வுத் தயாரிப்புக்கு மாணவர்களுக்கு உறுதுணையாவன. ஆசிரியர் வகுப்பில் கூறும் செய்திகளைக் கவனமாகக் கூர்ந்து நோக்கி உணர்வதுடன், பல முறை பயின்றும், கூர்நன்மதியுடைய வகுப்புத் தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டும். தேர்வுகள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் அமையாமல் அறிவை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படிக்க வேண்டியது அவர்களது கடைமையாகும்.
தேர்வியல் நுட்பங்கள்
படிப்பிக்கும் போதும் தேர்வு எழுதும் போதும் சிலவற்றை மட்டும் எழுதுதல், தேவையற்றவற்றைக் கூறல், கூறியதைத் திரும்பத் திரும்பக் கூறல், முரண்பாடாகக் கூறல், பிழையாக எழுதி மயங்க வைத்தல், தேவையில்லாமல் விரித்தல், சிறப்பாகத் தொடங்கிவிட்டு நிறைவாக முடிக்காமை, படிப்போர் விரும்பாத / ஏற்காதவற்றை எழுதுதல் என்னும் குற்றங்களும் அமையாமல், மாறாக இவற்றுக்கு மாறான அழகுகள் அமையுமாறு செயலாற்ற வேண்டும். அவ்வாறே தெளிவான முன்னுரை, சொற்பொருள் விளக்கம், தொடர்புடைய கருத்துகளை முன்பின் இயைத்துக் காட்டல், எடுத்துக்காட்டுத் தருதல், தன் கருத்துரைத்தல் போன்ற உத்திகளைப் பயன்படுத்தித் தேர்வினை எழுதினால், இவ்வாறு எதிர்கொள்ள மாணாக்கர்களைத் தயார்படுத்தினால் கல்விச் செயல்பாடுகள் சிறப்படையும்.
இத்தகைய சிந்தனைகளைக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் ஏற்படுத்திக் கொண்டு அக்கறையுடன் உழைத்தால் உலக அளவில் போட்டியிடும் வாய்ப்பை மாணாக்கர் பெறலாம்; பாரதத் திருநாடு மனிதவள மேம்பாட்டில் சிறப்பான இடத்தைப் பெறும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.