இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

‘சுந்தரேசனார் அன்னம் விடு தூது’ அமைப்பும் ஆய்வும்

முனைவர் த. காந்திமதி
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
காந்திகிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் - 624 302


முன்னுரை

‘தூதிற்பிரிவு’ என்று தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டப் பிரிவு வகையும் ‘காமமிக்க கழிபடர் கிளவி’ (நூற்பா 30) என்று இறையனார் களவியலுரை கூறும் துறையும் பிற்காலத்தில் தூது எனும் தனித்த இலக்கிய வகை தோன்றுவதற்குத் துணைநின்றன. பொதுவாகப் பண்புகளில் உயர்ந்த தலைவன் ஒருவனைத் தேர்ந்து கொண்டு, அவனைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து, அவன் மீது ஆற்றுப்படை, உலா, தூது போன்ற இலக்கிய வகையைப் பாடுதல் என்பது தமிழிலக்கிய மரபாகவுள்ளது. அந்த வகையில், தமிழ்ப் பண்ணாராய்ச்சிக்கெனத் தன் வாழ்நாளைக் கரைத்துக்கொண்ட இசைத்தமிழறிஞர் சுந்தரேசனார் மீது யாக்கப்பட்ட “அன்னம் விடு தூது” எனும் நூலின் அமைப்பு, பாடுபொருள் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நூலும் அமைப்பும்

“பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் சுந்தரேசனார் அன்னம் விடு தூது” என்பது நூலின் தலைப்பாகும். சுந்தரேசனார் மறைவதற்கு ஓராண்டு முன்னமேயே இந்நூல் யாக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் புலவர் மா.திருநாவுக்கரசு. 30.05.1982 இல் திருத்தவத்துறை (இலால்குடி) யைச் சார்ந்த ப. சு. நாடுகாண் குழுவினரால் (ஜனோபகார மின் அச்சகம், அரியலூர் - 621 704) இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. திருமுருகன்மீது யாக்கப்பட்ட வெண்பாவாலான காப்புச் செய்யுளும் கலிவெண்பாவால் யாக்கப்பட்ட 117 கண்ணிகளும் கொண்டு இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண், நூல் (1-13 கண்ணிகள்), பிறபொருள் தூதிற்சிறவா வென்றல் (14-17), அன்னத்தின் தகுதி (18-21), தலைவி மயல் கொள்ளல் (22-29) எனும் பகுதிகளும் தசாங்கங்கள் எனப்படும் மலை (30-32), ஆறு (33-38), நாடு (39-40), ஊர் (41-43), தார் (44-45), குதிரை (46-47), யானை (48-49), கொடி (50-51), முரசு (52), ஆணை (53-54) ஆகியனவும் தலைவர் சிறப்பு (55-77), தலைவர் திருத்தொண்டு (78-90), காணுமிடம் (91-105), தூது (106-117) ஆகிய பகுதிகளும் அமைந்துள்ளன.


குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வியல்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்க்கு நூற்றாண்டு (1914 - 2014) முடிவடைந்தது. இவர் கும்பகோணத்தில் 28.05.1914ஆம் ஆண்டு பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோர்க்குப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பிற்குமேல் இவரால் தம் படிப்பைத் தொடர முடியவில்லை. இளமையிலேயே இசை, நாடகம் ஆகியவற்றைக் கற்பதில் ஆர்வம் காட்டினார். கும்பகோணம் தேவாரப் பாடசாலையில் பிடில் கந்தசாமி அய்யரிடம் இசையும் தேவாரமும் கற்றார். கண்ணையரிடம் இசைப்பயிற்சி பெற்றார். தலைஞாயிறு சோமு பாகவதர் வழிவந்த திருமறைக்காட்டு (வேதாரணியம்) இராமசாமி அய்யரிடம் பதினேழாண்டுகள் குருகுலவாசத்தில் இசை பயின்றார். ஆர்மோனியம் இசைப்பதில் வல்லவரானார். தமிழ், தெலுங்கு, இந்தி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறன்பெற்றிருந்தார். யாழ்நூலாசிரியர் விபுலானந்த அடிகளிடம் இசைக்கணக்கியல், பாலைத்திரிபியல்புகளைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரியில் படித்தார். இவருடைய மனைவி சாரதாம்பாள் அம்மையார் திருவையாற்று அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. இத்துன்பத்திலிருந்து விடுபட திருமுறைப் பணியில் தம் வாழ்நாளெல்லாம் ஈடுபட்டார். திருவையாற்று அரசர் கல்லூரியிலும் (1949-1952), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் (1955 வரை) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிலப்பதிகார ஆய்வினைச் செய்யும் போதும் (1982-1983) ஆசிரியராகப் பணியாற்றினார். தம் பணியின் போது, இசை நுட்பங்களையும் சிலப்பதிகாரத்தின் இசைத்திறன்களையும் விளக்கினார். இசைப் பாடல்களை எப்படிப் பாடவேண்டும் என்பதைக் காரண, காரிய விளக்கத்துடன் கற்பித்தார். “முதல் ஐந்திசைப் பண்கள்” (1956), “இசைத்தமிழ்ப் பயிற்சி நூல்” (1971) ஆகிய நூல்களும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான தமிழ்ப் பொழிலில் 36 கட்டுரைகளும், பத்து ஒலி நாடாக்களும் பற்பல இசைச் சொற்பொழிவுகளும் இவர் இசைத் தமிழுக்கு வழங்கிய கொடைகளாகும். ‘நித்திலம் என்ற கலை இலக்கியம் சார்ந்த முத்தமிழ் மாதிகையை வெளியிட்டுள்ளார். வித்துவான் வே. ரா.தெய்வசிகாமணிக் கவுண்டருடன் இணைந்து ‘பஞ்சமரபு (முதல்பகுதி - 1973, இரண்டாம் பகுதி - 1975) எனும் பண்டைத்தமிழ் இசை நூல் வெளிவரத் துணைநின்றார். இசைத்தமிழ்ப் பயிற்சி நூலின் இரண்டாம் பகுதி வெளிவரவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். வந்ததா எனத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையைக் கல்லூரியில் பாடமாக வைக்க விரும்பினார் பேரறிஞர் அண்ணா. நடத்துவதற்கு ஆளில்லை என்பதும் அதை நடத்த வல்லவர் சுந்தரேசனார் மட்டுமே என்பதும் அறிந்து இவரை அழைத்துப் பாடம் கேட்டுள்ளார். இவர் பணத்தை விரும்பாதவர், எளிமைக்கு இலக்கணமானவர். பேருந்து இல்லா ஊர்களுக்கும் மிதிவண்டியில் சென்று இசை வளர்த்த பெருமகனார். இவர் மஞ்சள்காமாலை நோய்கண்டு 09.06.1983இல் இயற்கை அடைந்தார். இவர் விரும்பித் தங்கிய ஊரான திருத்தவத்துறையில் (இலால்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்), இவர் புகழைப் பரப்பும் வகையில் ‘ப. சு. நாடுகாண் குழு’என்பது சனவரி 1977 முதல் செயல்பட்டு வருகிறது. இதன்வழி, ஆண்டுதோறும் இசைத் தமிழ்த் தொண்டர்களுக்குப் ‘பெரும்பாண நம்பி / நங்கை’ எனும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவரைத் தமிழகம் மறவாதிருக்க, இவரையும் இவருடைய நூல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டியது தமிழர்தம் கடமையாகும். (1)


அன்னத்தூது

பொதுவாகத் தமிழிலக்கியப் பரப்பில், அன்னம், காகம் (2), நாரை எனப் பல பறவையினங்கள் தூதாக அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு அன்னச்சேவலைத் தூதாக அனுப்பியதாகப் பாடிய புறநானூற்றுப்பாடல் (67), அன்னத்தைத் தூதாக விட்டதற்குப் பழமையான சான்றாக அமைகிறது. இதைப் போல வடமரபில், நளனிடத்தில் தமயந்தி அன்னத்தைத் தூதுவிட்டதையும் குறிப்பிடலாம். நாரையைத் தூதாக விட்டதற்குச் சத்திமுத்தப்புலவரின் “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனத் தொடங்கும் தனிப்பாடல் நற்சான்றாகும். இந்தப் புலமையிலக்கிய மரபில், சுந்தரேசனாரிடத்து, அன்னத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவித்து, ‘அவரிடமிருந்து மின்னும் வண்ண மணிமாலையை வாங்கிவா’ என்பதாக இந்நூல் பாடப்பட்டுள்ளது. நூலாசிரியர், தன்னை நாயகியாகக் கருதிக் கொண்டு இந்நூலை அகத்தூதாகப் பாடியுள்ளார். அன்னமானது, முன்பே நளனுக்குத் தூது சென்று உதவியதை நினைவு கூர்ந்த நூலாசிரியர், அதன் பண்பினை வியந்து போற்றுகிறார். அது பாலோடு நீரைப் பகுத்தறியும் திறமையை வியக்கிறார். “அன்னமே ஆருயிரே அன்பாலே காதலர்க்கு உன்னைப்போல் பாரில் உதவுதல்யார் - பொன்னேர் நளனக்குத் தூதுசென்று நன்மையே செய்தாய் உளம்வாக்குக் காயமெலாம் உண்மை - உளதாலிப் பாரினில் யார்தான்நின் பண்பறிந்து போற்றாதார் யாரிடத்து மில்லா அணிநடையாய் - தேரின்தீம் பாலோடு நீரைப் பகுத்தறியும் நுண்ணறிவை நூலோர் அறிவாரோ நூறுகோடி - நூலோடு கூடிப் பழகினும் கூட்டின் குணமுணரார் தேடித் தெளியார் தெளிவதனை - வாடிடுவார்” (2-6) எனவரும் ஐந்து கண்ணிகளின் வழி, அன்னத்தின் மீது நூலாசிரியர் வைத்துள்ள மதிப்பு நன்கு விளங்குகிறது. அன்னமே! உன்னைப் பற்றி நன்கு அறிந்தமையால்தான் அறிவுள்ள நான்முகன், காளை, பெருச்சாளி, கானமயில், மா கருடன் போன்றவற்றிலேதேனும் ஒன்றை வாகனமாகக் கொள்ளாமல் உன்னை வாகனாமாக ஏற்றான் (8-9) என்று பாராட்டுகிறார். நீ, நீர் நிலம் மட்டுமல்லாது நீலவானத்திலும் பயணம் செய்யும் வல்லமை பெற்றதனால் உன் பெருமையையும் சிறப்பையும் அறிந்து தூது விடுக்கிறேன் என்கிறார் (13). உன்னையன்றி முகிலைத் தூதுவிட்டால் கால்போன திசையில் அதுபோகுமேயொழிய நான் சொன்ன இடத்திற்குப் போகாது. கிள்ளையோ பச்சைப் பிள்ளையாம்; மயிலோ மழை வந்தால் நடுங்கும்; குயிலோ பாடுமே தவிர உரை செய்யாது; வாடைக் காற்று வந்தால் தென்றல் வராதுபோகும். ஆகவே, தென்றலையும் அனுப்ப முடியாது. வஞ்சியை (தோழி) அனுப்பலாமென்றால் ஓர் ஆணைக்கண்டு பேசக் கூசிடுவாள். வண்டோ பூவில் மதுவுண்டு மகிழ்வடைந்து போகாமலொழியும். நெஞ்சைத் தூதுவிடலாமென்றால் உள்ளொன்றுவைத்து உண்மையைப் பேசாது. ஆகவே, பால்போலும் வண்ணமுடைய என் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தே! பவணந்தி முனிகளால் நன்னூலில் சிறப்பித்துப் பாடப்பட்ட அன்னமே! (3) உன் பொன்னடியைப் பற்றினேன். திக்கற்ற எனக்கு நீயே தெய்வமாய் வந்தாய். என் துன்பத்தைக் கேட்டருள்வாய்! என் வருத்தமகல வழிசெய்வாய் என்று அன்னத்தினிடத்தில் புலவர் வேண்டுகொள் வைக்கிறார் (14-21). எந்தப் பொருளைத் தூது விடுக்கிறோமோ அதனைப் புகழ்ந்து பேசுவதும், பிற பொருட்களைத் தூதுவிட்டால் அவை அப்பணியைச் செவ்வனே செய்யா என்று குறைகூறிப் பேசுவதும் தூது நூல்களின் பொதுவியல்பு. அன்னத்தைத் தூதாக அனுப்பாத பிற தூது நூல்களில் அன்னத்தைக் குறை கூறியிருப்பர். சான்றாக, “அன்னந் தனைவிடுப்பேன் அந்நாமம் கேட்டவுடன் இன்னும் பசியாம் எனவெறுத்தேன் - மன்னெந்தாய்!” (19) என்றுவரும் ‘தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார் நன்னூல் விடு தூது (4) நூலின் கண்ணியைக் காட்டலாம். இதில், அன்னம் என்றவுடன் சோற்றின் நினைவு வந்துவிடுவதால் அதைத் தூதுவிடாது தவிர்த்தேன் என்று பாடப்பட்டுள்ளது.


தன்னேரில்லாத் தலைவன்

தண்டியலங்காரம் கூறுவதைப் போலத் தன்னேரில்லாத் தலைவனை (5) - பாடாண்திணைப் பொருளில் பாடுவதற்குத் தகுதிபெற்ற தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவன்மீது தூது பாடுவர். அவ்வகையில், இசைப் புலமையும் கட்டுடலும் பொன்னிறமும் கைம்மாவினை (யானை - இவ்விடத்தில் களிறு எனப் பொருள்) ஒத்த பெருமித நடையும் காண்பாரை ஈர்க்கும் சுட்டுவிழிச் சுடரும், உற்றுழி உதவுதல், ஒட்டி உறவாடுதல், வாய்மையையும் மானத்தையும் போற்றும் உயர்ந்த குணங்களும் அணுகியவரைக் காக்கின்ற வீரமும் கருணைத் திருவுள்ளமும் பிறர்பால் காண்பனவல்ல என்று சுந்தரேசனார்க்கு ஒப்பான தலைவன் இல்லை என்பதாக நம் கண்முன் காட்சிப்படுத்துகிறார், நூலாசிரியர். மேலும், சான்றோர்களுடன் உடனுறையும் சான்றோனாக, இசையின் மன்னிய (அழிவில்லாத) காவலனாக, திருமுறையின் கொற்றவனாக, மாமன்னனாகச் சுந்தரேசனாரைப் புலவர் வியந்து பார்த்து உலகிற்கு அறிமுகம் செய்துவைக்கிறார் (25-29). மேலும், அவர் மீது புலவர் கொண்ட (காதலி) காதலைப் பின்வரும் கண்ணிகளின் வழி அறியலாம். “மாமாங்கம் ஒன்றிருக்கும் மாமன்னன் சுந்தரேசன் ஆமாம் அவன்பாட யான்கேட்டேன் - தேமாவாம் ஏழிசையான் பாட்டினிலே என்புருகி மெய்ம்மறந்து ஆழித் துரும்பானேன் அன்பாலே - வாழியென்றேன் அந்நாளில் என்றன் அகம்புகுந்தான் …….” (22-24) அதாவது, தேமாங்கனியின் சுவையைப் போன்ற சுந்தரேசனாரின் ஏழிசைப் பாட்டினைக் கேட்டுத், தன்னை மறந்து, எலும்பும் உருகி, மயங்கி, கடலிலேபட்ட சிறு துரும்பு போல் கலக்கமுற்று, அன்பு பெருகி, காதலில் கலந்துபோனேன் என்றும் ஆகையினாலே எனக்குதவுவாய் என்றும் காதலி அன்னத்திடம் உரைக்கின்றாள்.


பத்து உறுப்புகள் (தசாங்கம்)

தமிழர் இசையில் மாமன்னனாகிய சுந்தரேசனாருடன் தொடர்புடைய மலை, ஆறு, நாடு, ஊர், தார் (மாலை), குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்து உறுப்புகள் புகழ்ந்து பாடப்பட்டுள்ளன. இம்மரபு பொதுவாக நாடாளும் மன்னனைப் பாடும்போது பின்பற்றப்படுவது. இதனை, எளிய மக்களுள் ஒருவரான சுந்தரேசனாரைப் பாடிய போதும் பின்பற்றியிருக்கத் தேவையில்லை. ஏனெனில், சுந்தரேசரிடத்தில் குதிரை, யானை, கொடி, முரசு ஆகியன இல்லை. இவை மன்னர்க்குரியன. ஆயினும், பத்து உறுப்புகளைப் பாடுவதென்பது தூதிலக்கிய மரபு. அது கெடாமல் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. குணமென்னும் குன்றேறி நின்ற குணக்குன்றன் தமிழ்ச் சிலம்பன்; பொறையன்; மறைமலையடிகள் போற்றும் உறவுக்காரன் என்றெல்லாம் சுந்தரேசனார் போற்றப்படுகிறார். இங்கு, நிறைசார் வரையன் நிமலன் - உறையும் திருவெற்பைச் சார்வோன் திருவாளன் குன்ற, அருமை உரைத்தல் அருமை (30-32) என்று புலவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடத்தில், நிமலன் என்று சிவனையும் (தாயுமானவர்) அவனுறையும் திருச்சிராப்பள்ளிக் குன்றைத் ‘திருவெற்பு’ என்றும் குறிப்பிட்டுள்ளார். திருத்தவத்துறை என்னும் இலால்குடி திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தது. ஆகவே, சிவனுறையும் மலையைச் சுந்தரேசனார் மீதேற்றி அவர் உறைவதாகக்கொண்டு, ஆகுபெயராக இக்கண்ணிகள் பாடப்பட்டுள்ளன. ஆற்றைப் பாடியபோது காவிரியை மனத்தில் வைத்துப் பாடியதாக உணரமுடிகிறது (33-38). நாட்டைப் பாடும்போது காவிரிபாயும் சோழ மண்டலத்தை மனத்திற்கொண்டு பாடப்பட்டுள்ளது (39-40). ஊர் என்று சுந்தரேசனார் பிறந்த கும்பகோணம் கூறப்பட்டுள்ளது (41-43). தார் எனும்போது அவர் நால்வர் அருமாலையை (அருள்மாலை என்பதாகவும் பொருள்கொள்ளலாம்) மேல்சாத்தியிருப்பதாகப் பாடப்பட்டுள்ளது (44-45). உயர்திணையும் அஃறிணையும் தம்முடைய உள்ளொளியைக் காண்பதற்கு, நான்கு திசைகளிலும் உயர்தனிச் செவ்விசையாம் சூரியனைச் செப்பமுடன் செலுத்துகின்ற இன்ப வாசியான் (குதிரை) என்று சுந்தரேசனார் குறிப்பிடப்பட்டுள்ளார் (46-47). அதாவது, சுந்தரேசனாரே குதிரையாக உருவகிக்கப்பட்டுள்ளார். எவ்வாறெனின், சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிப்பதாகச் சொல்லப்படும் தொன்மத்துடன், இதனைப் பொருத்திப் பார்க்க வேண்டும். கைம்மாறு கருதாது, சைவ மதம் ஓங்கி வளர்க்கச் சலியாது பாடுபடும் பேரறிவாளர் பலர் உளர். இவர்கள் சைவத்தின்பாற் காழ்ப்புக் கொண்ட வீணர்களின் ஐயத்தை வேரற வீழ்த்தி இடித்துரைக்கும் பணியினை மேற்கொள்வர். இத்தன்மையுடைய பேரறிவாளர்கட்குக் கரிமா(யானை)வாய்த் திகழ்பவர் சுந்தரேசனார் என்று குறிக்கப்பட்டுள்ளார் (48-49). அருந்தொண்டே கொடியாக (50-51), இசையெனும் பாட்டே முரசாகக் (52) காட்டப்பட்டுள்ளன. கூடும் திருவடியார் கூட்டத்தில் கொள்கையைக் கூறி வழிநடத்துவதே திரு ஆணையாகக் கொண்டிலங்குபவர் (53-54) என்று பத்து உறுப்புகளும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.


தலைவரின் சிறப்பும் தொண்டும்

முற்கூட்டியே சொல்லியதைப்போல ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகச் சுந்தரேசனார் இப்பகுதியில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளார். அவருடைய பேரைச் சொன்னாலே, வாய்மணக்கும்; வந்தவினை போகும்; வருவினையின் பந்தமறும்; நல்வழியில் ஆற்றுப்படுத்திச் சிவலோகம் காட்டும் சிவலோகச் செல்வன்; அன்புமிகக் கொண்டவர்; இன்புற்று வாழும் இயல்பினர் என்றெல்லாம் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அதாவது, எடுத்துரைப்பியல் (Narratology) கோட்பாட்டின்படி, நேரடிப் பண்பு விளக்கமாகக் கதைத் தலைவனின் பண்பு நலன்களை நூலாசிரியர் விளக்கிச் செல்கிறார். மேலும், “கேடொழுக்கம் கீழ்மேல்சீர் காணாது யாரிடத்தும் நாடும் நயத்தக்க நாகரிகன் - பாடுபட்டுத் தேடும் பொருளைத் திருவாளன் அன்பர்க்குக் கூடும் வகையறிந்து கூட்டுவிக்கும் - நாடுபுகழ் தேவாரத் தென்றல் சிவனாடும் செவ்விசையான் ” (59-61) எனவரும் கண்ணிகளில், பாகுபாடு காட்டாத பண்பாளன், நயத்தக்க பண்புடையவன், தேவாரப் பண்ணிசைக்கும் தென்றல் போல்வான், செவ்விசையான், திருத்தொண்டன் என்று புலவர் புகழ்மாலை சூட்டுகிறார். தொடர்ந்து, தீந்தமிழின் இன்பப் பெருக்கெல்லாம் எத்திசையும் ஊட்டிவரும் குன்றக்குடியாரின் கொள்கையைப் பின்பற்றுபவர்; நன்றிமிகு பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சொல்லாட்சியைப் போற்றும் சுந்தரன்; ஆடுதுறை வைத்தியலிங்கத்தின் (6) அன்பிற்குரியவர்; பூவாளூரைச் (7) சார்ந்த நற்றொண்டர் சுப்பிரமணியஞ் செட்டியாருக்கும் (8) திருத்தவத்துறையைச் சார்ந்த கனகசபை (9) ஆகியோர்க்கும் தூய அன்பர்; நல்ல திருத்தொண்டர் சிவா (10) அவர்களின் வீட்டில் அமுதருந்துவார்; அணுக்கத் தொண்டர் நம்மாழ்வாரின் (11) நட்பிற்குரியர்; சைவமதப் பணியாளர் சோமசுந்தரனார், இளங்கோவனார் (12), வெள்ளனூர் (13) முத்தமிழ்ச்செல்வன் (14) போன்றோரின் அன்பினை ஏற்றுக்கொள்பவர். இப்படிப் பலகோடி உற்றார்கள் அவர்க்குளர். என் சிற்றறிவிற்கு எட்டியவரை சொன்னேன். அவர்களுள் சிலரைத் தேர்ந்துறைவார். கண்டு தெளிந்து களிகொள்வாய் (62-77) என்று அன்னத்திடம் புலவர் உரைக்கிறார். அவருடைய திருத்தொண்டினைப் பின்வருமாறு கூறுகிறார். “செந்தமிழ்ச் செவ்விசையைச் செம்மையுறப் பாடியவர் எந்தப் பகைவரினும் ஏற்புடைய - சொந்த கருத்தைச் சொலவஞ்சார் கண்ணுர் அருமைத் திருத்தொண்டர் மாக்கதையைத் தீம்பால் - அருந்துதல்போல் கேட்பார் மனங்குளிரக் கேட்க உரைசெய்வார் நாட்டில் திருக்கோயில் நண்ணுவார் - ஏட்டில் அறியாத செய்தியை ஆய்ந்தறிந்து கூட்டி நெறியாகத் தந்திடுவார் நித்தம் - குறிப்பிட்ட காலத்தே சென்று கலந்து நிகழ்ச்சியைக் கோலமாய் ஆற்றுகின்ற கொள்கையார் - ஞாலத்தில் காசாசை அற்றுசெய் காரியத்தில் கண்ணாகும் பேராசை கொண்ட பிழைப்புடையார் - யாரார்க்கும் தம்மால் இயன்ற தருமத்தைச் செய்வதிலே அம்மா இவர்போல யானறியேன்! - பெம்மான்” (79-85) எனவரூஉம் கண்ணிகளில், பகைவரும் மனங்கொளத்தக்க வகையில் தமிழிசையை ஆய்ந்து அதன் நுணுக்கங்களை வெளிப்படுத்த வல்லவர்; காலந்தவறாதவர்; காசாசையற்றவர்; தம்மாலியன்ற தருமத்தை எல்லார்க்கும் செய்பவர் என்று சுந்தரேசனாரின் உயர்குணங்களை அன்னத்திடம் பட்டியலிட்டாற் போல் புலவர் குறிப்பிடுகிறார். மேலுமவர், தாம் விரும்பும் திருப்பாடல்களைக் கல்வெட்டாக வெட்டச் செய்துள்ளார். பஞ்சமரபு நூலை ஆய்ந்துள்ளார். சிலப்பதிகார நெறிமுறைகளைப் பண்ணோடு பொருத்திக் காட்டும் பாவாணர். எண்ணிலடங்காத அறச்செயலை நடத்துபவர். உடம்பொடு உயிர் ஒன்றியதைப்போல உழைப்புடன் ஒன்றிடுவார் (86-90) என்றெல்லாம் அன்னாரின் புகழை அன்னத்திற்கு அறிவித்தலைப்போல அகிலத்தார்க்கு அறிவிக்கின்றார்.


வழிகாட்டலும் காணுமிடமும்

தானே தலைவனென்றும் தன்னறிவே பெரிதென்றும் வினைக்கெல்லாம் நாயகன் நானே, உலகத்தார்க்கு நானே அச்சாணி என்றும் தருக்கித் திரிவார் பலர். அத்தகையோரிடத்தை விட்டு நீங்கிடுக. பேச்சு, செயல், மனம், உடல் என எல்லாவற்றிலும் தீமையையே செய்கின்ற மக்களின் வீட்டுவழியிற் செல்லாதே. ஊக்கமின்றி உண்மையறிவின்றிக் காசு, பணத்தால் விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர்களிருப்பர். அவர்களிடம் பேசாதே. செந்தமிழால் வாழ்வைப் பெற்றுப் பின்னந்தச் செந்தமிழையே குறைகூறும் சிறுமதியோரிடத்தில் உறவை அறு. மண்விட்டு விண் சென்று தலைவர் வாழுமூரை நெஞ்சில் நிறுத்து. அவரிருக்குமிடமே பேரின்பம் யாவர்க்கும் கிட்டும். ஆங்கே திங்கள் முகப் பெண்டிர் தீம்தீமென நடமிட்டுச் செங்கமல வாயால் செந்தமிழில் இசைபாடுவர். பூசுரர் வாழ்த்த இறைப்பணியை மேற்கொள்வர். சிவனார் எண்ணியதை முடிக்க அருள் வழங்குவார். அவ்விடத்தில், எம் தலைவன் சுந்தரேசனார் பாவாணர்கள் குழுமியிருக்கும் சபையை ஆய்ந்து சென்றிடுவாய். அப்போது சங்கத்தமிழாயும் சான்றோர்கள் உடனிருந்தால் அமைதி காப்பாய். அவர்கள் தமிழ்ப் பண்ணில் சங்கத்தொகை நூல்களில் மந்திரங்களில் தமிழிலக்கணத்தில் ஐயம் தெளிவறவாய்ந்து சென்றபின், இருக்கும் நிலையறிந்து, அவரை வாழ்த்தி, அவரிடம் செல்வாயாக (91-105) என்று புலவர் அன்னத்திற்கு வழிகாட்டுதலைச் செய்கிறார்.

தூதும் பயனும்

பொன்மனத்து அன்னமே! பொற்புறவே அவர் பொன்னடியைப் போற்றிசெய். என்னவென்று அவர் கேட்டால் நின் வரவைச் சொல்லிடு. தொல்காப்பியச் செல்வர் கு. சுந்தரமூர்த்தியார் அவர்பால் கொண்ட பேரன்பால் சொல்லிய பணிகளைப் பண்போடு அவரிடத்து உரை. கோவில்கள்தோறும் சேக்கிழார், வாக்கீசராகிய திருநாவுக்கரசர், நக்கீரனார் ஆகியோரால் புகழப்பட்ட தமிழின் புகழ் கூறிப் பரப்புரை செய்யும் அவருடைய அடிச்சுவட்டிலே நானும் செயல்படுகிறேன் என்பதை அவரிடத்துக் கூறு. அவருள்ளம் மகிழ வாயாரப்போற்று. மனதாரப் பணிந்தெழு. இந்தத் தையலின் மனத்துயரத்தை அவரிடம் சொல்வாய். தையலின் துன்பத்தைப் போக்குவதன்றி, இவ்வுலகத்தில் இன்பம் தரும் பொருளொன்றில்லை என்பதை அவரிடத்துச் சொல்லி, எந்நோய் தீரக்கும் மணிமாலையை அவரிடமிருந்து வாங்கிவந்து என்னிடம் தருவாய் (106-117) என்று அன்னத்திடம் வேண்டுகொள் விடுக்கிறார் புலவர். “பொன்னேரும் தண்மார்பன் பூந்தாரில் - மின்னும்பொன் வண்ண மணிமாலை வாங்கி உடன்வந்து கண்ணே தருவாய் கனிந்து” (116-117). இங்கு மாலை வாங்கிவந்து கொடுத்துவிட்டால் தலைவியின் துயர் நீங்கும். இது தலைவிக்குக் கிடைத்த பயன். அன்னத்திற்குப் பயன் யாதெனின், சுந்தரேசனாரின் சிறப்புகளையெல்லாம் ஊன்றிக் கேட்டால், அதற்குப் புண்ணியம் உண்டாகுமென்று புலவர் அதனிடத்தில் முன்னமேயே (கண்ணி 29) குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அன்னத்துடன் சேர்ந்து அனைவருமே பயன்பெற்றவர்களாவோம்.

முடிவுகளாக,

இந்த நூல், தூது நூல் இலக்கணத்திலிருந்து சிறிதும் வழாதுநின்று, கலிவெண்பா யாப்பினால் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்களை ஆய்வதற்கென்றே தம் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பண்பாளர் பண்ணாய்வான் சுந்தரேசனாரின் பன்முகங்களை யாவருமறிந்து கொள்ளத் துணைநிற்கிறது. இவருடைய ஆக்கங்களைத் தேடிப் பயனடைய வேண்டியது மக்கள் தம் கடமை. இவரின் அருமையையும் பெருமையையும் மேதினியில் துலங்கச் செய்யவேண்டியது அரசின் கடமை. கருநாடக இசையைத் தலைமேல் கொள்ளும் ஊடகங்கள் இவர் போல்வாரின் செயல்களை உலகிற்கறிவித்துத் தமிழிசையைப் போற்ற வேண்டும். இஃது ஊடகங்களின் கடமை. அவரவர்தம் கடமைகளை முறைப்பட ஆற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்ப்போமாக. வாழ்க சுந்தரேசனாரின் புகழ்! வளர்க தமிழிசை!!.

சான்றெண் குறிப்புகள்

1. இ. அங்கயற்கண்ணி - தமிழிசையியல் வளர்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பங்கு - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 2006 மற்றும் முனைவர் சண்முக. செல்வகணபதி, பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் - பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் பணிமன்ற (திருத்தவத்துறை) வெளியீடு, 2010 2. சென்னை மாநில முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியார் அவர்களிடத்து ‘வெண்கோழியுய்த்த காக்கை விடு தூது’ - பாந்தளூர் வெண்கோழியார் (க. வெள்ளைவாரணன்) - மு.ப. 1939 3. “அன்னம் ஆவே மண்ணொடு கிளியே” எனவரும் நன்னூல் பொதுப்பாயிரம், நூற்பா எண் 38 4. “தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் நன்னூல் விடு தூது” - .அரங்க. சுப்பையா - மு.ப. 1973 5. தண்டியலங்காரம் மூலமும் உரையும் - அ. குமாரசுவாமிப்புலவர் - இ.ப. 1926, நூற்பா எண் 8. 6. கோடிலிங்கம், வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் இசைத்துறையில் பிற்காலத்தில் புகழ்பெற்றனர். இவ்விருவரும் சுந்தரேசனார் பிறந்த கும்பகோணத்துப் பேட்டை நாணயக்காரத் தெருவைச் சார்ந்தவர்கள். அவருடைய மாணவர்களாவர். 7. இது திருச்சிராப்பள்ளி - அரியலூர் நெடுஞ்சாலையில் உள்ளதோர் ஊர். பூவாளூர்ப் புராணம் என்றொரு நூல் இவ்வூரைக் குறித்துப் பாடப்பட்டுள்ளது. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தலை மாணாக்கரும் உ. வே. சாமிநாதையரின் ஆசிரியராக இருந்து கும்பகோணம் கல்லூரியில் அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தவருமான மகாவித்துவான் சி. தியாகராச செட்டியாரும் திராவிடக் கட்சியைச் சார்ந்த பூவாளூர்ப் பொன்னம்பலனாரும் இவ்வூரினர். இவ்வூர் இலால்குடியிலிருந்து சில அயிரமாத்திரி (கிலோமீட்டர்) தொலைவில் முதன்மைச் சாலையிலேயே உள்ளது. 8. இவர் நாடுகாண் குழுவின் முதல் தலைவராவார். 9. இவர் திருத்தவத்துறையில் இயங்கிய அறநெறிக் கழகத்தின் தலைவர். 10. திருத்தவத்துறையைச் சேர்ந்தவர். நாடுகாண் குழுவின் பொருளாளராகவிருந்து பணிபல ஆற்றியவர். தமது கடைசிக் காலத்தில் சுந்தரேசனார்க்கு வெண்கலச்சிலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். பணி நிறைவுறாமலே 2012இல் இயற்கையடைந்தார். ப.சண்முக வேலாயுதம் என்பவர் பசு நா.கா.குழுவின் தலைவராவார். 11. இவர் வைணவச் சிந்தாந்தம் அமைப்பில் தொண்டராயிருந்தார். சுந்தரேசனார்க்கு அணுக்கத் தொண்டராக இருந்து பணியாற்றினார். 12. சோமசுந்தரனார் இவரின் நண்பர். இளங்கோவனார் திரைப்படத் தயாரிப்பாளர். 13. வெள்ளனூர் திருச்சிராப்பள்ளி - அரியலூர் நெடுஞ்சாலையில் புள்ளம்பாடிக்கு முன்னர் உள்ளதோர் ஊர். 14. இவர் இலால்குடி சட்ட மன்றத்தின் உறுப்பினராய் இருந்தவர்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p143.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License