முனைவர் ‘நயம்பு அறிவுடைநம்பி’யின் பன்முக ஆளுமை
முனைவர் நா. பிரபு
உதவிப் பேராசிரியர், முதுகலை (ம) தமிழாய்வுத்துறை,
சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை - 606 603
முன்னுரை
சமகாலத் தமிழ் அறிவுச்சமூகத்தில் எத்தனையோ தமிழறிஞர் பெருமக்கள் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்படாமல் விடப்படுகின்றனர். அத்தகைய அறிஞர் பெருமக்கள் தன்னலம் கருதாது தமிழுக்கு எண்ணற்றத் தொண்டாற்றிச் செல்கின்றனர். அத்தகு சான்றோர் பெருமக்களுள் ஒருவர்தான் நயம்பு அறிவுடைநம்பி என்றழைக்கப்படுகின்ற முனைவர் பு. அறிவுடைநம்பி அவர்கள். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ரெ.நயம்பாடி எனும் சிற்றூரில் 1943 ஆம் ஆண்டு ‘மே’த்திங்கள் 7 ஆம் நாள் புட்பநாதன் - துளசியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை நயம்பாடி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை ஆலம்பூண்டி கிராமத்திலும், பள்ளி இறுதி வகுப்பை செஞ்சியிலும் முடித்தவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்வான்’ பட்டம் பெற்றவர். இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ்ப் பட்டங்களை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வியியல் இளையர் (B.Ed.,) கல்வியியல் முதுவர் (M.Ed.,) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். இடைநிலை ஆசிரியர் (1963-1970), முதனிலைத் தமிழாசிரியர் (1971-1977), முதுகலைத் தமிழாசிரியர் (1978-1991), மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர் (1992-2001) என 38 ஆண்டுகள் அரசுப்பணி செய்து ஓய்வு பெற்றப் பின்னர், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தினைப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் வழி தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.
நயம்பு அறிவுடைநம்பியின் படைப்புக்கள்
முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் ‘சிலப்பதிகாரம் காட்டும் அரசியல்’ (2010) - காவ்யா பதிப்பகம், ‘சிலப்பதிகாரம் காட்டும் சமயநெறிகள்’ (2011) - மணிவாசகர் பதிப்பகம், ‘செகவீரபாண்டியனாரின் வாழ்வும் படைப்பும்’ (2012) - தமிழ்நிலையம், ‘சோழவந்தான் அரசஞ்சண்முகனார்’ (2014) - சாகித்திய அகாதெமி, ‘திருக்குறள் சிந்தனைத்துளிகள்’ (2014) - வனிதா பதிப்பகம், ‘திருக்குறள் சிந்தனை முத்துக்கள்’ (2014) - செம்மூதாய் பதிப்பகம், ‘ஒப்புமையில் வள்ளுவம்’ (2015) - மணிவாசகர் பதிப்பகம், ‘திருக்குறள் சிந்தனைக்களஞ்சியம்’ (2015) - மணிவாசகர் பதிப்பகம், ‘முப்பாலில் மூவிடப்பெயர்கள்’ (2016) - மணிவாசகர் பதிப்பகம், ‘திருக்குறளில் அடைமொழி’ (2016) - மணிவாசகர் பதிப்பகம், ‘தந்தை பெரியாரும் வான்புகழ் வள்ளுவமும்’ (2016) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ‘குமரகுருபரர்’ (2016) - அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு எனப் பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ள நிலையில் ‘ஐம்பெருங்காப்பியங்களில் மக்கள் வாழ்வியல்’ என்னும் பொருண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், ‘திருக்குறளும் தருமதீபிகையும் ஓர் ஒப்பாய்வு’ என்னும் பொருண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் நூல்கள் எழுதியுள்ளார். மேலும், ‘சிலப்பதிகாரச் சிந்தனைப் பரல்கள்’, ‘சங்க இலக்கியச் சிந்தனைகள்’, ‘இராஜா தேசிங்குக் கதைப்பாடல் - பன்முக ஆய்வு’ ஆகிய பொருண்மைகளிலும் நூல்கள் வெளிவர உள்ளன. இவை மட்டுமன்றி, பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரிகள் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 160 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளமையோடு தொடர்ந்து தம்மை ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார்.
பெற்ற விருதுகள்
முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் தமிழக நல்லாசிரியர் விருது (1999), தேசிய நல்லாசிரியர் விருது, ஓய்வுப்பெற்ற பின் (2002), Vidya Ratan Gold Medal Award on 30.09.2005 (National Economic for Helth and Education Growth - New Delhi), Gandhi Study Award on 16.02.2006 (Gandhi Study Center - Chennai, திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி (2010) உலகத் திருக்குறள் மையம், முப்பால் முனைவர், திருக்குறள் நெறி சீர் பரவுவார் (2015) தமிழக அரசு, தமிழ்நிதி (2015) கம்பன் கழகம் - சென்னை இவைத் தவிர மேலும் பல விருதுகளையும் பெற்றவர். அவர் எழுதிய ‘சிலப்பதிகாரம் காட்டும் அரசியல்’ என்னும் நூலின் வழி அவரது பன்முக ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கின்றது.
நடைநலச் சிறப்பு
முனைவர் ‘நயம்பு அறிவுடைநம்பி’ அவர்களின் நடைநலம் எளிமை மிக்கது. ஆற்றொழுக்குப் போன்றது. ஆடம்பரம் இல்லாதது. இனிய மொழியில் எளிய சொற்களைக் கொண்டது. கற்போரை மகிழ்ச்சி செய்வது. சொல்ல வந்ததைத் தெளிவாக உரைப்பது. மயக்கமில்லா தெள்ளிய ஓடை நீர் போன்றது என்பதை “தமிழக அரசியலின் நாட்டுணர்வு மொழிவழிப் பிறந்தது. பண்பாட்டு வழி மலர்ந்தது. மரபுவழி நிலைத்து நிற்பது இதுவே தொல்காப்பியத்தின் அரசியல் கோட்பாடாகும்” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.110) என்னும் கருத்தின் வழி அறியமுடிகின்றது. இவ்வாறு எளிமையாகத் தொல்காப்பிய அரசியல் சிந்தனை பற்றி நூலினூடே கூறிச்செல்கிறார்.
சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கோவலன்-கண்ணகி, கவுந்தியடிகளிடம் தன் வருகையைக் குறிப்பிட்டுப் பாண்டிய நாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கிறான். இதனைச் “சொன்னவனோ குடகு நாட்டான், அவன் கண்டதோ பாண்டியநாட்டுச் சிறப்பு, கேட்டதோ சோழ நாட்டார், பாடியதோ சேரநாட்டு முனிவர்”(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.294) என்று இந்நூலாசிரியர் நாட்டிய நடையில் எழுதியிருப்பது கற்போர்க்குச் சுவையூட்டுகிறது.
பின் மூவரும் நடந்து கொற்றவை கோயிலில் இளைப்பாறினர். அப்போது தெய்வமேறிய சாலினி கண்ணகியைப் பாராட்டுகிறாள். வேடுவர்கள் இறுதியில் பாண்டியரை வாழ்த்துகின்றனர். மாங்காட்டு மறையோன் மற்றும் வேடுவர்கள் வாழ்த்தை “வேதியன் வாழ்த்தில் குளிர்ந்த கண்கள் வேட்டுவர் வாழ்த்தில் இதயமே குளிர்கிறது” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.294) என்று கூறிய ஆசிரியரின் நடைநலம் நோக்கத்தக்கது.
மேலும், “தீமைக்கும் தீமைக்கும் முரண் எனில் ஏதேனும் ஒரு தீமை வெல்லும்; நன்மைக்கும் தீமைக்கும் போரெனில் கண்டிப்பாக நன்மை வெல்லும்; நன்மைக்கும் நன்மைக்கும் முரண்பாடெனில் எது வெல்லும், அத்தனைக்கும் விளக்கமும், விடையும், தெளிவும், தீர்ப்பும் வழக்குரை காதையில் உள்ளது” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.363) என்று தம் நடையில் மதுரையில் நடக்கும் வழக்குரைக் காதையை விளக்கிச்செல்கிறார்.
இளங்கோவடிகள் தம் காப்பியத்தில் அரசர், வணிகர், அமைச்சர் என்னும் இவர்களுக்கு நிகராக, மேலாக ஐந்திணை மக்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இளங்கோவடிகளின் “நெஞ்சிற்கு, கண்களுக்கு அனைவரும் தமிழ் நாட்டவராகவும், தமிழராகவும், தமிழ்க் குடியினராகவும் தென்பட்டனர். பிறப்பாலும், இடத்தாலும், தொழிலாலும், காலத்தாலும் அவர்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்களைத் தமிழராகவே பார்த்தது இளங்கோவடிகளின் தமிழ் நெஞ்சம்” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.393) என அடிகளாரின் ஒருமைப்பாட்டுணர்வு நெஞ்சத்தைத் தம் இன்சொல் நடையில் இயம்பியுள்ளார்.
“மணிமேகலைத் துறவு வாயிலாகப் பரத்தையர் வாழ்விற்கு முடிவு கட்டப்பட்டது. கோவலனின் தவறான ஒழுக்கம் ‘போற்றா ஒழுக்கம்’ எனக் கண்ணகியால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆணின் அறவாழ்வு பெண்ணின் கற்பு வாழ்க்கைக்கு அடிப்படை என மாதவியால் வலியுறுத்தப்பட்டது. பரத்தையர் குலம் வேரோடும் மண்ணோடும் புதைக்கப்பட்டது. ஆணுக்குக் கற்பொழுக்கம் நிலைநாட்டப்பட்டது. இவை போன்ற சமுதாயச் சீர்திருத்தங்கள் இளங்கோவடிகளால் முன்நிறுத்தப்பட்டன” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.406 - 407) என்று சீர்பெற்ற சமுதாயத்தைச் சிலம்பு வாயிலாக ஆசிரியர் எழுதிய நடை சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டதொரு போர்க்குரல் நடையாகும்.
“ஓர் அரசியல் கோட்பாடு தோன்றுவதும், வளர்வதும், நிலைநிற்பதும் அந்தந்த மண்ணையும், மக்களின் எண்ணத்தையும் பொறுத்தது. அவை இடம்தோறும், காலம்தோறும் மாறுவன” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.436) என்னும் நடையானது ஆற்றொழுக்கானது. இங்ஙனம் இவரது நடைநலம் இனிய, எளிய நடை கொண்டது. இது இவரின் தனித்த நடைநலமாகும்.
கருத்துகளின் நுட்பப் புலமை
பாண்டியன் தன் அரசியின் சிலம்பில் முத்துக்களைப் பதிப்பித்தான். “முத்தைவிடப் பவழமும், மாணிக்கம் முதலியவை உயர்ந்தவை, விலை மிக்கவை. தன்னாட்டுப் பொருளை மதிப்பவன் எனவேதான் கண்ணகியிடம் ‘எம்முடைச் சிலம்பு முத்துடை அரியே’ எனப் பதிலளித்தான். சுதேசிப் பொருள்களை ஆதரிக்க வேண்டுமென்ற அண்ணல் காந்தியடிகள் முதலியோர்க்கு முதன்முதலில் வழிகாட்டியவன் பாண்டியனே”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.302) என்ற ஆசிரியரின் கருத்து நுட்பமானது. இந்நுட்பச் செய்தியைப் பின்னாளில் காந்தியடிகள் மேற்கொண்டு பலருக்கு வழி காட்டினார்.
மேலும் இவர்கூறும், “அரசியல் நூல்களோ, வரலாற்று நூல்களோ அல்லது பிற துறை நூல்களோ நாட்டுப்பற்றைத் தோற்றுவிப்பதில்லை. தோற்றுவிக்க இயலாத நாட்டுப்பற்றைத் தோற்றுவித்து வளர்ப்பன இலக்கியங்களே”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.305) என்னும் கருத்து நாளும் எண்ணிப் பார்க்க வேண்டிய நுட்பமாகும். எனவே மாணவரும், மக்களும் தாய்பற்றுடன் விளங்க தத்தம் தாய்மொழி இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்பது குறிப்பு நுட்பம். இதனால் இலக்கியங்களின் நுட்ப ஆற்றல் எடுத்துக் காட்டப்பட்டது.
“உழவு தொழிலே வரைவு வாணிகம்
வித்தை சிற்பம் என்று இத்திறத்து அறுதொழில்
கற்கும் நடையது கருமபூமி ”
(திவாகரநிகண்டு)
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’
(பாரதியார்)
“உலகிலுள்ள தொழில்களுள் உழவுத் தொழிலும் ஒன்று. அப்படியிருக்கையில் திவாகரர், பாரதியார் முதலியோர் உழவு எனத் தனித்தும் பிரித்தும், மற்றைத் தொழில்களைத் தொழில் என்றும் கூறிய நுட்பம் யாது. ‘மக்களின் உயிரைக் காப்பதால் உயர் தொழிலாகவும், உயர்ந்த தொழிலாகவும் போற்றப்பட்ட பிற தொழில்களிலிருந்து பிரித்துத் தனித்தும் பாடப்படுகிறது.
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.306) என்பதில் உழவின் மேன்மையை உணர்த்திய நுட்பம் புலப்படுகிறது.
“அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத்து உயிராணி கொபத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்ட”
(22 : 3 - 5)
என்பதிலுள்ள உயிராணி பற்றி ஆசிரியர் விளக்கம் அதிலே வருகின்றது. “ஓர் இரும்பை வளைப்பது சுலபம் மீண்டும் நேராக நிமிர்த்துவது கடினம். வளைந்த ஒன்றை, அதைவிட மிக மிக உறுதியான ஒன்றைக் கொண்டுதான் நிமிர்த்த முடியும். வளைகோல் கொடுங்கோலாகும். விதியால் ஆராயமையால் பாண்டியர் செங்கோல் வளைந்து விட்டது. வளைந்த் கோலைக் கைகளாலோ, கால்களாலோ நிமிர்த்த முடியாது. உயிராகிய ஆணி கொண்டுதான் நிமிர்த்த முடியும். அதாவது உயிரைத் துறந்து நிமிர்த்தினான் என்பது கருத்து”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் ப.333-334) என்று முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் பாண்டியரின் செங்கோல் மாட்சி நுட்பத்தை அருமையாக விளக்கியுள்ளார்.
பாண்டியன் உயிர் துறந்து கீழே விழுந்தான். இதனை இளங்கோவடிகள், ஒரு மடந்தைக்குச் (கண்ணகிக்கு) செய்த தீமையை உயிர்துறந்து தீர்த்தனன், மற்றொரு மங்கையான நிலமடந்தைக்குக் காட்டியதை ‘இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்ட’
(22:5) என்றார். இந்த நுட்பத்தை ஆசிரியர் மனதில் பதியுமாறு பதிவு செய்துள்ளார்.
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் ப.333)
“ஒருவனோடு வாழ்ந்து, ஒருவனுக்காக உயிர்விட்டப் பத்தினிப் பெண்டிர் பலருள் கண்ணகி உயர்ந்தோரால் போற்றப்பட்டமைக்குக் காரணம் அநீதியை எதிர்த்து அரசியல் அறத்தை நிலைநாட்டியதேயாகும். மதுரைக்காண்ட வழக்குரை காதையே சிலப்பதிகாரத்தின் உயிரோட்டமாகும்”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.356) என்பது அரசியல் அறத்தின் நுட்பக் கருத்தாகும்.
சட்டத்திற்கும் அறத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை, “மனிதனின் செயலைத் திருத்துவது சட்டம். தவறு வாராமல் காப்பது அறம். சட்டம் காலத்திற்கேற்ப மாறும்; அறம் மாறாதது. சட்டம் தவறு செய்யாதவரையும் கூட தண்டித்துவிடும். அறமானது தவறு செய்தவனையேத் தண்டிக்கும். சட்டம் தோற்கும் இடமுண்டு. ஆனால், அறமே எப்போதும் வெல்லும். உடலைப் போன்றது சட்டம். உயிரைப் போன்றது அறம். சட்டம் புறத்தைத் தூய்மையாக்கும் அறம் அகத்தைத் தூய்மையாக்கும்”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.360) இங்ஙனம் விளக்கிச் செல்கிறார். இவ்வாறு சட்டத்திற்கும், அறத்திற்கும் புதிய வரையறைத் தந்து அதன் வேறுபாட்டை நுட்பமாக விளக்கியுள்ளார்.
மேலும், ஆராயாது தவறிழைத்த பாண்டியன் உயிர் துறந்தான். “கோவலன் கொலையுண்ணவும், பாண்டியன் உயிர் துறக்கவும் காரணமானது பொற்கொல்லனின் களவு. அக்களவு செய்த பொற்கொல்லனுக்கு என்ன தண்டனை என்பதற்குச் சிலம்பிலே விடையுமில்லை, விளக்கமும் இல்லை”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.403) என்று நுட்பமாகக் கூறிவிட்டு அந்நுட்பத்திற்கு நம்மையே விடைதேடச் சொல்லியுள்ளார்.
வஞ்சிக் காண்டத்தில் பரத்தையர் பற்றிய செய்திகளை அடிகள் தவிர்த்துள்ளார். இதனை, “புகாரில், மதுரையில் பரத்தையர், பரத்தையர் தெரு, அவர் செயல்பாடுகள் பற்றி கைவலிக்க, மனம் வலிக்கப் பாடினார். ஒழுக்கம் குன்றிய புகார் வெள்ளத்தாலும், மதுரைத் தீயாலும் அழிந்தொழிந்ததை எச்சரிக்கை செய்கிறார்”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.444) என்ற ஒழுக்கம் பற்றிய நுட்பத்தை ஆசிரியர் அருமையாக விளக்கியுள்ளார்.
இவ்வாறு ‘சிலப்பதிகாரம் காட்டும் அரசியல்’ என்ற நூலில் கண்ணில் படும் எல்லாப் நுட்பமானக் கருத்துகளையும் ஆசிரியர் வெளிப்படையாகவும், புதைபொருளாகவும் எழுதிச் சென்றுள்ளார். இதனால் இவர் சிலம்பை நுனிப்புல் மேயாமல் சிலம்பில் ஆழங்கால் பட்ட நுட்பப்புலமை இனிதே விளங்குகிறது.
பழந்தமிழர் அரசியல் நுலறிவு
பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அரசியல் செய்திகளைத் தேடித் தொகுத்துள்ளார். தொல்காப்பியத்தில் அரசன் முடி புனைதல், அவனின் கடமைகள், அவனுக்குரிய சின்னங்கள், சிற்றரசர்களுக்கான சின்னங்கள், போர் முறைகள், அரசு துறத்தல் முதலியவற்றைத் தொகுத்து வகுத்து எடுத்துக் காட்டியுள்ளார். பாயிரம், எச்சவியல் 2,4,396, அகத்திணையியல் 5 என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள் தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடுவன எனக் கூறியுள்ளார்.
நானிலங்களையும், அவற்றின் தெய்வங்களையும், பாலை நிலத்தையும், அதன் தெய்வமான கொற்றவையையும் பற்றி, தொல்காப்பிய அகத்திணையியல் 5, புறத்திணையியல் 4 என்னும் நூற்பாக்கள் சுட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழுக்குச் சேர, சோழ, பாண்டியர் ஆட்சி புரிந்ததை ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்”(செய:75) எனக் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தரின் அடையாளப் பூக்களை புறத்திணையியல் 5 இல் கூறப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
“படையும் கொடியும் குடையும் முரசும்
… … … … … … … … … …
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய” (தொல்: மரபு.72)
பழமையான ஆரியம், எபிரேய இனங்களும், அரசுகளும் மரபைவிட்டு விலகியதால் அழிந்தன, ஆகவேதான் தொல்காப்பியர், “மரபு நிலை திரியா மாட்சிய ஆகி” (மரபு:95) என்றார். தொல்காப்பியம் அரசியல் செய்திகளாக மூன்றை மட்டும் வலியுறுத்தியுள்ளது. ஒரு நாடு மொழி வழி அமைய வேண்டும். அம்மொழி உணர்த்தும் மரபுகளைப் பின்பற்ற வேண்டும். அம்மொழிப் பண்பாட்டு மரபுகளையும் பின்பற்றி நடக்க வேண்டும். இவை மூன்றும் தாம் தொல்காப்பியத்தின் அரசியல் கோட்பாடாகும். தமிழரின் அரசியல் மொழிவழிப் பிறந்தது, பண்பாட்டு வழி மலர்ந்தது, மரபு வழி நிலைத்து நிற்பது. இவையே தொல்காப்பிய வாயிலாக உணர்த்தப்பட்ட அரசியல் சிந்தனைகளாகும்.
தொல்காப்பிய இலக்கணங்களை ஆராய்ந்தோர் பலர். தொல்காப்பிய அரசியல் சிந்தனைகளை முன்வைத்தவருள் இந்நூலாசிரியரும் ஒருவர். இலக்கண நூலின் வாயிலாகப் பண்டைய அரசியல் பற்றிய இவரின் நூலறிவுத்திறம் போற்றத்தக்கது.
சங்க நூல்களுள் தமிழரின் அரசியல் சிந்தனைகளை அறியவும், உணரவும் புறநானூறு ஒப்பற்ற நூலாகும்.
அரசின் இறைமைக் கோட்பாட்டைப் புறம் 57 ஆம் பாடல் வாயிலாகவும், ஆட்சியாளர் கடமையைப் புறம் 35, 72 ஆம் பாடல் வாயிலாகவும், ஆட்சி செய்யும் முறைமையைப் புறம் 425 ஆம் பாடல் வாயிலாகவும், வரி வசூலிக்கும் முறையைப் புறம் 184 ஆம் பாடல் வாயிலாகவும், பழந்தமிழரின் ஆட்சிமாட்சியைப் புறம் 20, 70, 109 ஆம் பாடல் வாயிலாகவும், செங்கோல் அறத்தினைப் புறம் 10, 55, 38, 186, 312 ஆம் பாடல் வாயிலாகவும் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் எடுத்து விளக்கியுள்ளார். புறநானூற்றில் அரசியல் சிந்தனைகளைத் தொகுத்து, பகுத்து, வகுத்துக் கூறிய திறம் பாராட்டத்தக்கது. இதனால் நூலாசிரியரின் புறநானூற்று அரசியல் சிந்தனைகளை நன்கு ஊன்றி, ஆழமாகக் கற்றுணர்ந்தவர் என்பது விளங்கும்.
திருக்குறளில் அரசியல் என்ற இயலில் காணப்படும் அரிய அரசியல் கருத்துகளைச் சுருங்கச் சொல்லி விளக்கியுள்ளார். படைகுடி என்பதின் வாயிலாக அரசின் உறுப்புகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் உயிராக விளங்கும் அரசனின் இன்றியமையாமையை
“ஆங்குஅமைவு எழுதியக் கண்ணும் பயம்இன்றெ
வேந்துஅமைவு இல்லாத நாடு” (குறள்.740)
என்ற குறள்வழி விளக்கப்பட்டுள்ளது. மேலும், பத்து அதிகாரங்களில் கூறப்பட்ட அமைச்சு பற்றிய கருத்துகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. நாட்டின் இயல்பு, அரணின் தேவை, படைமாட்சி, பொருள் செயல் வகை, நாட்டின் அவசியம், குடிமக்கள் இவையெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளின் அரசியல் செய்திகளை 381, 740, 547, 758, 763, 770, 983, 996, 1023 என்னும் குறட்பாக்களை மையமாக வைத்து விளக்கப்பட்டுள்ளது.
பழங்காலத் தமிழக அரசியலைத் தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் இவற்றின் வாயிலாக விளக்கியிருப்பதால் இம்மூன்று நூல்களின் அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்கிய இவரின் சிந்தனைத்திறம் எண்ணி வியக்கத்தக்கது.
சட்ட நூலறிவுத் திறன்
பொதுவாக இலக்கிய நூலாசிரியர்கள், கவிஞர்கள், புலவர்கள் இக்காலச் சட்ட நூல்களையோ, வரலாறுகளையோ விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் இவர் தாம் இளமையில் படிக்கும் காலத்திலிருந்து பாடநூல் வரலாற்றையும், பிற வரலாற்று நூல்களையும் விரும்பிப் படிப்பார். திருக்குறளில் உள்ள செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை நன்கு விளங்கிக்கொள்ள தற்காலச் சட்ட நூல்களையும், நீதிமன்ற நடவடிக்களையும் கற்றும் அறிந்தும் வைத்திருந்தார். மேலும் சிலப்பதிகார வழக்குரைகாதையை நன்கறியவும், அதன் சிறப்பை உணர்த்தவும், தற்காலச் சட்ட நூல்கள் பல பயின்றார். வழக்கறிஞர் பலரிடம் கேட்டும் சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டார். இவற்றின் வாயிலாக வழக்குரைகாதையின் சட்ட நுணுக்கங்கள், அக்காதையின் பான்மை, மேன்மைகளை வெளிப்படுத்த முடிந்துள்ளது.
உரிமை வழக்கு, குற்ற வழக்கு என்னும் இருவகை வழக்குகள். தண்டனைத் தீர்ப்பு, விடுதலைத் தீர்ப்பு என்ற இருவகை தீர்ப்புகள். உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் என்ற இருவகைச் சட்டங்கள். உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என்ற இருவகை நீதிமன்றங்கள் இவையெல்லாம் சட்டநூலில் காணப்படும் செய்திகளாகும். முனைவர் நயம்பு அறிவுடைநம்பி அவர்கள் சட்டங்களையும், அவை வழக்குரை காதையில் இடம்பெற்ற நுட்பத்தையும் பொருத்து விளக்கியிருப்பது இவரின் சட்ட நூலறிவுத் திறனை வெளிப்படுத்துகிறது.
வழக்கு
ஒருவர் தம் உரிமைக்கோ, பிறர் தமக்கிழைத்த குற்றத்திற்கோ வழக்கு மன்றத்தில் முறையிடுவது வழக்கு எனப்படும்.
உரிமை வழக்கு
ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வது வாழ்வுரிமையாகும். கோவலன் கொலையால் கண்ணகியின் வாழ்வுரிமை பறிபோகிறது. மேலும், ஒருவரின் நடத்தைக்கும் செயலுக்கும் துன்பம் விளைவிப்பது அவமானமாகும். ஒருவரை இழிவுபடுத்த மற்றவர்க்கு உரிமையில்லை. கோவலன் அரசியின் சிலம்பைத் திருடவில்லை. ஆனால், கள்வன் எனப் பழி சுமத்தப்படுகிறான். கணவனை இழந்ததால் பறிபோன வாழ்வுரிமைக்கும், கள்வன் என அவமானப்படுத்திய மானநட்ட உரிமைக்கும் கண்ணகி பாண்டியன் மீது தொடுத்தது உரிமையியல் வழக்காகும்.
குற்றவியல் வழக்கு
ஒருவரின் உடைமையைக் கவர்வது குற்றமாகும். ஒருவரின் உடலுக்கோ, உயிருக்கோ தீங்கிழைப்பது குற்றம். பாண்டிய அரசு கோவலனைக் கொன்றது குற்றம். கண்ணகியின் சிலம்பைப் பாண்டியன் கவர்ந்து கொண்டது குற்றம். தம் உடைமையான சிலம்பைப் பாண்டியன் கவர்ந்து கொண்ட குற்றத்திற்காகவும், கோவலனைக் கொன்ற குற்றத்திற்காகவும் கண்ணகி பாண்டியன் மீது தொடுத்தது குற்றவியல் வழக்காகும்.
“பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப”
(19:45)
“மன்பதைப் பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப”
(19:49)
என்று கண்ணகி குற்றம் சுமத்தினாள். இங்ஙனம் வழக்குரைகாதையில் இருவகை வழக்குகளையும் ஆசிரியர் எடுத்துக்காட்டித் தம் சட்ட நூலறிவுத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
“வளையாத செங்கோல் வளைந்து இதுரவன்கொல்”
(19:17)
“தென்னவன் கொற்றம் சிதைந்து இதுவென்கொல்”
(19:20)
“தண்குடை வெம்மை விளைவித்தது இதுவென்கொல்”
(19:22)
என்று மக்கள் நடந்தது புரியாமலும், வியப்பாலும், தவிப்பாலும் புலம்புகின்றனர். இவ்வாறு மக்களின் புலம்பல்கள் மூலம் மன்னன் குற்றமிழைத்துள்ளான் என்பதை நூலாசிரியர் சான்று காட்டியுள்ளார்.
பேச்சுரிமை
குடியரசில் மக்கள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தக் குற்றம் சாட்டும் வாய்ப்புரிமை இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். மதுரை தெருக்களிலும், பாண்டியன் அவையிலும் இவ்வுரிமை வாய்ப்பு கண்ணகிக்கு இருந்தது.
“அறிவு அறைபோகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோலே!”
(20: 25-26)
“தேரா மன்னா செப்புவது உடையேன்”
(20: 50) என்றும்
“நற்றிறம் படரா கொற்கை வேந்தே!”
(20: 66)
என்றும் ஏளனம் செய்தாள். பாண்டிய நாட்டிலே பேச்சுரிமை போற்றப்பட்டமைக்கு ஆசிரியர் காட்டிய சான்றுகள் ஏற்கத்தக்கவை. குடியரசு நாட்டில் இன்று ஆள்வோரை மக்கள் பேசமுடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும். இங்ஙனம் இன்று பேசினால் பேசுவோர் காணாமல் போவர்.
வழக்கினை ஆராயும் முறைமை
வழக்கினை ஆராயும் முறைக்கு ஆசிரியர் கீழ்க்கண்ட குறளைக் காட்டியுள்ளார்.
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”
(குறள். 541)
முதலில் வழக்கில் கூறப்பட்ட உரிமையை, குற்றத்தை ஆராய வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர் என்பது கூடாது என்பது இரண்டாவதாகும். மூன்றாவது நடுவுநிலைமையுடன் துலாக்கோல் போல் குற்றமா, இல்லையா என ஆராய வேண்டும். நான்காவது குற்றமெனில் குற்றத்திற்கேற்ப உரிய தண்டனை வழங்க வேண்டும். இதுவே வழக்கினை ஆராய்ந்து வழங்கும் முறையாகும், இதுவே செங்கோல் முறைமை எனப்படும்.
விடுதலை தீர்ப்பு
தீர்ப்பு இருவகைப்படும். அவை விடுதலை தீர்ப்பு, தண்டனை தீர்ப்பு எனப்படும். கண்ணகி சிலம்பை உடைத்த போது மாணிக்கப்பரல் வெளிப்பட்டது. இதனால் அரசியின் சிலம்பைக் கோவலன் திருடவில்லை என்பது தெளிவாகிறது. கோவலன் கள்வன் அல்லன் என்பது விளங்குகிறது. கண்ணகி சிலம்பைப் பொற்கொல்லன் வாயிலாகக் கவர்ந்து கொண்டதால் பாண்டியனே கள்வனாகிறான். கோவலன் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான். இதனை,
‘யானோ அரசன் யானே கள்வன்’
(20:75) என்ற பாண்டியன் கூற்றால் விளங்குகிறது. இது பாண்டியன் வழங்கிய முதல்தீர்ப்பு, கோவலன் கள்வன் அல்லன் என்பதால் இது விடுதலைத் தீர்ப்பாகும்.
தண்டனைத் தீர்ப்பு
பாண்டியன் கூற்றால் பாண்டியனே கள்வன் என்பதும், கோவலனைக் கொன்ற கொலைக் குற்றமும் பாண்டியன் மீது சுமத்தப்படுகின்றன.
“மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
(20: 76-77)
என்பது இரண்டாவது தீர்ப்பு. இது தண்டனைத் தீர்ப்பாகும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது உறுதியானது.
கண்ணகிக்கு வாய்த்த பேச்சுரிமை மறுக்கப்பட்டிருந்தால் கோவலன் கள்வன் என்பதும், கண்ணகிக்கு அளிக்கப்பட்ட பேச்சுரிமையால் உண்மை வெளிப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது. “பொற்கொல்லன் வழக்கு கொண்டு வந்த இடம் அந்தப்புரத்து வழி. ஆதாரம் இல்லாத வழக்கு. ஆராய்ச்சி இல்லாத தீர்ப்பு. இவையெல்லாம் சட்டத்திற்கும், நீதி முறைமைக்கும் புறம்பானவை”
(சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.367) என விளக்கியிருப்பது அவரது சட்ட நுணுக்கப்புலமைத் திறனை வெளிப்படுத்துகிறது.
வழக்கில் சாட்சி, ஆவணம் ஆகியன சான்று காட்ட வேண்டும். கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காட்டினாள். எனவே தீர்ப்பிற்கு அது உறுதுணையானது.
தண்டனை
ஆசிரியர், பெற்றோர் ஆகியோர் பிள்ளைகளுக்கு அளிப்பது தண்டனை எனப்படும். நீதி மன்றம் வழங்கும் தண்டனை தீர்ப்புத் தண்டனை எனப்படும். இவற்றை முறையே Punishment என்றும் Sentence என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். இக்காலத்தில் நீதிமன்றம் என்பதை அக்கால ‘அறம்கூறும் அவை’ எனப்பட்டது.
வியப்பு
கண்ணகி என்னும் வாதி வழக்குரைஞராக இருப்பதும், பிரதிவாதியாகிய பாண்டியன் நீதிபதியாக இருப்பதும் வியப்பாகும். அக்காலத்தில் ஒருவர் தமக்காக தாமே வாதிடலாம் என்றிருப்பது போற்றத்தக்கதாகும். காலதாமதமாகத் தீர்ப்பைத் தள்ளிவைக்காமல் உடனே தீர்ப்பு வழங்கியது வியப்பளிக்கிறது. “பாண்டியனை எவரும் கொல்லவில்லை, அவனது மனசாட்சி அறமாக வந்து கொன்றது. தன்னெஞ்சறிவது பொய்யற்க என்கிறது வள்ளுவம். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தீர்ப்பு குற்றவாளியானார். தமக்குத் தாமே தண்டனை அளித்துக்கொண்டு உயிர் துறந்தார். பாண்டியன் தீர்ப்பில் நீதிமுறையின் நேர்மையும், பண்பும், பயனும் உலகறியச் செய்துள்ளது. இன்று குடியரசு நாட்டில் இத்தகையன நிகழுமா? என எண்ணிப் பார்க்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தடை விதிக்கிறது. தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி இன்று உயிர்விடுவாரா? பாண்டியனைப்போல, சோழனைப்போல நீதியுடன் அரசாட்சிபுரியும் தமிழகத் தலைமையில் ஒருவராவது உண்டா” (சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், ப.369) என வினவுகிறார்.
இங்ஙனம் நூலாசிரியர் வழக்கு, தீர்ப்பு என்னும் இக்காலச் சட்ட நுணுக்கங்களைச் சிலப்பதிகார வழக்குரை காதையில் இணைத்துப் பொருத்தி விளக்கியதிறம் போற்றத்தக்கது. இவரின் சட்ட நூலறிவுத் திறன் குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிவீசுகிறது.
நூலாசிரியரின் பன்னாட்டு அரசியல் நூற்புலமை
இந்நூலாசிரியர் இதிகாசங்கள், சங்க இலக்கியம், புராணங்கள், காப்பியங்கள் முதலிய நூல்களை நன்கு வாசித்துள்ளார். மேலும், அரசியல், சட்டம், வரலாறு, புவியியல் முதலிய நூல்களையும் விரும்பிக் கற்றுள்ளார். கற்கும் நிலையில் ஆர்வம் உடைய இவர் மேனாட்டு அறிஞர்களின் பல்வகை மொழிபெயர்ப்பு நூல்களையும் தேடிப் படித்துள்ளார். சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் என்னும் இந்நூல் வாயிலாக இவரின் பன்நூல் புலமையாற்றல் விளங்குவதைக் காணலாம்.
சாக்ரடீஸ், சிந்தனையாளர் அரிஸ்டாட்டில், ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், லெனினின் அரசு, ஏங்கெல்சின் குடும்பம் தனிச்சொத்து, அரசு, பிளேட்டோவின் குடியரசு முதலிய மேனாட்டு அரசியல் நூல்களின் மொழிபெயர்ப்பை ஊன்றிப் படித்துள்ளார். மேலும் சமூக இயலின் அடிப்படைக் கோட்பாடுகள், அரசியலுக்கு ஓர் அறிமுகம், மேற்கத்திய அரசியல் சிந்தனை, மேனாட்டு அரசியல் கோட்பாடுகள், அரசியல் அறிவு முதலிய மேனாட்டு அரசியல் நூல்களை மிக ஆழமாகக் கற்றுள்ளார்.
பழங்கால இந்திய அரசியல் நூல்களான சாணக்கியரின் அர்த்த சாத்திரம், வீடுமரின் சாந்தி பருவம், பாரதத்தில் வரும் விதுரநீதி, சுக்கிர நீதி, மனுநீதி, புராதன இந்தியாவில் அரசியல், பண்டைக்கால இந்தியா என்னும் நூல்களை விரும்பிப் படித்துள்ளார்.
கிரேக்க அரசியல், உரோம அரசியல், இந்திய அரசியல் பற்றிய ஏராளமான அரசியல் தொடர்பான நூல்களை நூலகங்களை நாடிச்சென்று, நூல்களைத் தேடித்தேடி வாசித்துள்ளார். இங்ஙனம் அரசியல் பற்றிய பன்நூல்களை வாசித்தமையால்தான் இவரால் சிலப்பதிகார அரசியலின் பான்மை மேன்மைகளை விளக்க முடிந்தது. மட்டுமன்றி, அவரின் பன்முக ஆளுமையையும் வெளிப்படுத்த முடிந்தது என்பதையும் இதன்வழி அறியமுடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.