இந்து மதமும் சூழலியல் போதனைகளும்
திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர், தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
ஆய்வு அறிமுகம்
இந்து மக்களின் நீண்டகால வரலாற்றை ஆய்வு செய்கையில் இந்துக்கள் இயற்கைக்கும், இயற்கை சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுரிமை வழங்கினர். இதனால் இயற்கையினைப் பாதுகாக்கும் நோக்கில் “இயற்கையை இறைவனுக்கு இணையானதாகக் கருதினர். “இயற்கையை அழிப்பது இறைவனை அழிப்பதற்கு ஒப்பானது” எனும் அடிப்படையில் இந்துமதம் சூழலியல் சார் போதனைகளை முன் வைத்தது. இந்துமதம் முன் வைத்துள்ள சூழலியல் போதனைகளைப் பின்வருமாறு கூறலாம்.
• இயற்கைப் பாதுகாப்பு
• வனப் பாதுகாப்பு
• விலங்கு பாதுகாப்பு
• நீர்வளப் பாதுகாப்பு
இயற்கைப் பாதுகாப்பு
இயற்கையோடு நல்லிணக்கமாக வாழ இந்து மதம் வழிகாட்டுகிறது. இந்துக்கள் தம்மைச் சுற்றியுள்ள நதிகள், நீர்நிலைகள், மரஞ்செடி கொடிகள், அனைத்திலும் தெய்வீக தன்மை உள்ளது என நம்பினர். இதனால் சூழலைப் பாதுகாத்தல், சூழலை விருத்தி செய்வல், சூழலை விருத்தி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை வலியுறுத்தி மக்களை வழிப்படுத்துகிறது. உதாரணம், உயிர்களை அழித்து, தோட்டங்கள், ஆறுகள், குளங்கள் போன்றவற்றை மாசுபடுத்துபவன் கொடிய நரகத்திற்கு செல்வான்”, அரச மரம், வேம்பு, மாதுளை, பூக்கும் தாவரம், கொடிகள், மா மரங்கள், தோடை மரங்கள் முதலியவற்றை வளர்த்து பராமரிப்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள், காட்டை அழிப்பது ஒரு மாநிலத்தை அழிப்பதற்குச் சமன், ஒரு சிறு காட்டை மீள் உருவாக்கம் செய்வது ஒரு மா நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்பானது.
இருக்கு வேதம், “இயற்கை அழகு கடவுளின் கலை அழகு” என்கிறது. அழகாக இருக்கும் அனைத்து இயற்கையிலும் கடவுளை உணரலாம். உதாரணம் சூரியனின் வெளிச்சத்தில் மலர்கள் மலர்தல், நட்சத்திரக் கூட்டங்கள், மின்னல், மழை பொழிதல் முதலியவற்றில் கடவுள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை அவதானிக்கையில் அக்கால மக்கள் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வின்றி தம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த வகையிலே இயற்கையைக் கண்டனர்.
அதர்வ வேதமானது “பூமி எனது தாய் நான் அவளது மகள், அவள் எனக்கு பரிசுகளாக மூலிகைகள், தாவரங்கள், ஜீவராசிகள், மரங்கள், நீர் முதலியவற்றை தருகிறாள், அவனை நான் பாதிக்காதவாறு பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் என்கிறது.
ஈஷா உபநிடதம் இயற்கை வனப்பாதுகாப்பு தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“Resources are given to mankind for their living. knowledge of using the resources as absolutely necessary”-அதாவது வளங்கள் மனித வாழ்க்கைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதற்கான அறிவு மிகவும் அவசியம். இதனால் எதிர்காலச் சந்ததியினரை கருத்தில் கொண்டு இயற்கையிலுள்ள மூல வளங்களை வீண்விரயம் செய்தல் கூடாது என்பது இதனூடாக வலியுறுத்தப்படுகிறது.
முண்டக உபநிடதம்: இயற்கையை இறைவனோடு ஒன்றிணைத்து நோக்குகிறது.
முழுப்பிரபஞ்சம் - இறைவனின் இதயம்
நெருப்பு - இறைவனின் தலை
பூமி - இறைவனின் அடிப்பாதம்
வானம் - இறைவனின் காதுகள்
சூரியன், சந்திரன் - இறைவனின் கண்கள்
காற்று- இறைவனது சுவாசம்
புராணங்கள் சூழல் மீதான விடயங்களில் அக்கறை செலுத்துகிறது.
காற்று - இறைவனது மூச்சு
மரங்கள் - இறைவனது தலை முடி
சமுத்திரங்கள் - இறைவனது இடுப்பு
மலைகளும் குன்றுகளும் - இறைவனது எலும்புகள்
ஆறுகள் - இறைவனது நரம்புகளுக்கு இணையானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இயற்கையை பாதிப்பது இறைவனைப் பாதிப்பதற்கு சமன் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்திச் சூழலியல் போதனைகளை வலியுறுத்துகிறது.
இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை “சூழலை மாற்ற முயற்சிக்காது மேம்படுத்த உதவி செய்தல் வேண்டும்”, சுற்றுச்சூழல் விரோதமாக தெரிந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பகவத்கீதையின் அத்தியாயங்களில் “நான் அனைத்து படைப்புகளின் இருதயத்திலும் ஆரம்பமும், முடிவுமாக அமர்ந்திருக்கின்றேன். இதனால் அனைத்து உயிரினங்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள். I am the self seated in the heart of all creatures. I am the beginning the middle and the very end of all beings. All beings have there fore to be treated a like என்பதனை வலியுறுத்துகிறது.
இந்துமதம் சூழல் சார்பில் சில முக்கிய பொருட்களைக் கருப்பொருள்களாகக் கொண்டு விளங்குகிறது.
1. பூமி - ஒரு பெண் தெய்வமாக சித்திரித்தலும், மரியாதை செய்தலும்.
2. ஐந்து கூறுகள் - ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களும் இடைத் தொடர்பிலான வாழ்க்கை வலைப்பின்னலின் அடித்தளங்கள்
3. தர்மம் - “தர்மம்” என்பது கடமை இதனடிப்படையில் பூமியினைப் பாதுகாத்துக் கொள்வது எமது கடமை
4. எளிமை - எளிமையான வாழ்க்கை, அளவான வளப்பகிர்வு நிலையான பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை
5. நடத்தை - இயற்கையுடன் தொடர்புடைய எமது நடவடிக்கைகள் எமது கர்மாவில் நேரடியான தாக்கத்தைச் செலுத்துகின்றன.
வனப் பாதுகாப்பு
இந்து மதத்தில் வனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வனங்களை இந்துக்கள் புனித இடங்களாக கருதினர். ஒருவன் தன் வாழ்க்கையில் இல்லறக் கடமையை நிறைவு செய்த பின் ஆன்மீகக் கடமையில் ஈடுபடும் இடமாகவும் கருதினர். இந்து மதத்தில் மூன்று வனம் முக்கியமானது. (ஸ்ரீவனம், தபோவனம், மகாவனம்)
உதாரணம் மகாவனம் - உயிரினங்கள் அனைத்தினதும் ஆபத்தில்லாத உறைவிடம். இவ்வனத்தை பாதுகாப்பதனுடாக விலங்குகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
வனத்தில் காணப்படும் சில அரிதான தாவரங்கள் கடவுளுக்குரிய தாவரமாக அல்லது பூசைக்குரிய தாவரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணம்: சந்தன மரம், கருங்காலி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகை மரங்கள் சமயத்தேவைகளுக்காக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல், இதனை அழிப்பவர்கள் கடவுளரின் சாபத்திற்கு உள்ளாவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது.
விலங்குப் பாதுகாப்பு
வேதகால மக்களால் விலங்குகள் தெய்வீகத் தன்மையுடையதாகவும், சிறந்த செல்வமாகவும் போற்றி வழிபடப்பட்டது. “இறைவா எங்களது இருகால், நான்கு கால் பிராணிகளை எல்லாம் காப்பாயாக”, “பசுக்களுக்கும் புரவிகளுக்கும் சுகமளி” என்று வேதக்காலத்தில் மக்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டனர். இதிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை மக்கள் இறைவனிடம் வழங்கி இருந்தனர். மேலும் “இந்திரனே மீண்டும் பசுக்களை எங்களிடத்தே அளிப்பாயாக என்றும், அவை உயிருடன் இருக்கின்றன என நீ கூறினால் நாங்கள் இன்புறுவோம்” என்றும் வேதகாலத்தில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வேதகாலத்தில் விலங்குகள் இறைவனிடம் இருந்து பெறும் வரமாக இருந்தன.
விலங்குகளைப் பராமரித்தலை வேதங்கள் எடுத்துக் கூறுகின்றது. “நண்பர்களே பசுவைப் பண்ணோடு அணுகுங்கள், துன்புறுத்தாமல் அவைகளைப் பந்தத்திலிருந்து அவிழ்த்து விடுங்கள்’, ‘காலையிலும், மாலையிலும் உன்னை ஏந்தி வரும் குதிரைகளை அவிழ்த்து விடவும்” என்றும் கூறுகிறது. இதிலிருந்து விலங்குகளைத் துன்புறுத்தாது, கொல்லாது, பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
பசுவைப் புனிதமானதாக இந்து மதம் நோக்குகிறது. இதனால் பசு வதையினை வன்மையாகக் கண்டிக்கிறது. “பசுவை வீணாகக் கொல்பவன் அப்பசுவுக்கு எத்தனை உரோமங்கள் இருக்கின்றதோ அத்தனை ஜென்மம் பசுவாகப் பிறந்து பலரால் கொல்லப்படுவான்” என்றும் மேலும் பசுவைப் போற்றிப் பேணுவதால் கிடைக்கும் புண்ணியத்தின் அளவு பற்றியும் கூறுகிறது.
இயற்கையை மட்டுமன்றி உயிரினங்களையும் இறைவனுடன் தொடர்புப்படுத்தி இந்து மதம் நோக்குகிறது. இந்து மதம் கூறும் அவதாரங்களில் விஷ்ணுவின் தசாவதாரத்தில் திருமால் பல விலங்குகளுடனும், இராமாயணத்தில் இராமன் - குரங்குடனும் (அனுமான்), மகாபாரதத்தில் கண்ணன் பசுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தமையைக் கூறலாம். மேலும் விலங்குகளுக்குக் கௌரவத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்து மதத்தில் தெய்வங்களின் வாகனமாக விலங்குகளும், பறவைகளும் விளங்குகிறது. உதாரணம் காளி - சிங்கம், பிள்ளையார் - யானை, சிவன் - காளை, முருகன் - மயில்
திருமூலர் மிருகங்களை பாதுகாப்பதற்கான வழியை கூறுகின்றார்.
உதாரணம்:
“யாவர்க்குமாம் இறைவார்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைபிடி”
இந்து சமயத்தின் பாரிய குறைபாடாக இருப்பது மிருகங்களைப் பலியிடுவதாகும். பாதையில் ஊர்ந்து செல்லும் சிற்றெறும்பு கூடக் காலடியில் சிக்கித் தன் சாவைத் தவிர்ப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்கின்றது. இதே போல் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ் நாட்களை நீடிக்கப் போராடுகின்றன. ஆனால் மனித இனத்தின் ஒரு சில சக்திகள் தங்களின் சுயநலத்திற்காகவும், பேராசையை அடைவதற்காகவும், மிருகப்பலிகளை ஆலயத்தில் நடத்தித் தங்களது நேர்த்திக் கடன்களைத் தீர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். அத்தகைய மூடநம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் மூலம் அது தடை செய்யப்படல் வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது.
நீர்ப் பாதுகாப்பு
நீர்வளப் பாவனையானது அருகிவரும் இயற்கை வளமாக இருப்பதால் அதனை மனித சமூகம் எந்தளவு தூரம் எதிர்காலச் சந்ததியினருக்கு சேமித்துக் கொடுத்தல் வேண்டும் என்பது தொடர்பில் இந்து மதம் போதனைகளை முன்வைத்துள்ளது.
“கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்
ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே“
எனும் அப்பர் சுவாமிகளின் தேவாரப்பாடல் நீரின் புனிதத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதனால் நீர் புனிதமானது, அதனை அசுத்தம் செய்வது பாவமானது, தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் அகலும் என இந்து மதம் பல போதனைகளை முன் வைக்கின்றது.
நீர் வளத்திற்கு உரித்தான கடவுளர்களை இந்து மதம் அடையாளப்படுத்தியுள்ளது. உதாரணம் கங்கா தேவி, வருணபகவான் இதிலிருந்து நீர் வளத்தின் மீது மனிதன் திட்டமிட்ட மாசடைவுகளை ஏற்படுத்துவது அதற்குப் பொறுப்பான கடவுளர்களை அவமதிப்பதாகவே கொள்ளப்படும் என்று அச்ச உணர்வை ஏற்படுத்திச் சமூகத்திற்கு நீர்வளபாதுகாப்பு, முதலியன போதனைகளை இந்து மதம் வழங்கியுள்ளது.
இந்து சமயம் சூழலியல் போதனைகள் தொடர்பாக 10 விடயங்களை கூறுகிறது.
1. பஞ்ச பூதங்கள் - மனித உடலிற்கும், பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கூறுகிறது.
உதாரணம்: பூமி - மூக்கு, நீர் - நாக்கு, நெருப்பு - கண், காற்று - தோல், வெளி - காது என மனித உடலையும், இயற்கையையும் தொடர்புபடுத்துவதன் மூலம் இயற்கை மனிதனோடு இரண்டறக் கலந்துள்ளது என்பதனை வலியுறுத்துகிறது. அதாவது சுற்றுச்சூழல் வேறு, மனிதன் வேறு அல்ல. “சூழல் மனித வாழ்வின் பெறுமதியான அங்கம்” என இந்து மதம் குறிப்பிடுகின்றது.
2. தெய்வீகத் தன்மை - எங்கும் நிறைந்த தெய்வீக ஆற்றல், மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள், நுண்ணுயிர்கள் அனைத்திலும் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு பகவத்கீதை, பாகவத புராணம் முதலிய நூல்கள் இயற்கையுடனான தெய்வீகத்தன்மைக்குச் சான்று பகர்கின்றன.
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு - தர்மத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்து சமயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துகிறது. கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இந்த சமூகத்தினர் வாழ்க்கையோடு சேர்த்து சூழலையும் இரண்டறக் கலந்த நிலையில் நோக்கினார்கள், இயற்கையினைத் தம்மை அறியாமலேயே பாதுகாத்தனர்.
4. கர்மா - சூழல் மீதான எமது நடவடிக்கைகள் அனைத்தும் கர்மாவில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு நடத்தையிலும் காணப்படும் செயற்பாடுகளே மறுபிறப்பைத் தீர்மானிக்கிறது. நல்ல ஒழுக்க நடத்தைகள், நல்ல கர்மாவையும், தீய நடத்தைகள் தீய கர்மாவையும் தருகின்றன. இதிலிருந்து சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நல்ல கர்மாவை அடைந்து நற்பிறப்பை மறுபிறவியில் பெறலாம் என்பதனை இந்து மதம் கூறுகிறது.
5. பூமி - பூமியை எமது தாயாக மூதாதையர் வணங்கினர். பூமியில் இருந்து நாம் நல்ல பலா பலன்களைப் பெறுகிறோம். ஆகையால் அதனைப் பாதுகாப்பதும், அதற்கு நன்றி செலுத்தும் வகையிலும் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். உதாரணமாக, இந்துக்களின் கோலம் போடுதலின் நோக்கம் பூமித்தாய்க்கு நன்றி செலுத்துவதாகும்.
6. தந்திரயோக மரபுகள் - இயற்கையோடும், தெய்வீகத்தோடும், ஒன்றிணைந்து வாழ்வதற்கு தந்திரயோக மரபுகள் துணை புரிகிறது. தற்போதுள்ள சூழல் மீதான சுரண்டல் நிலையிலிருந்து விடுபட இவற்றை மீண்டும் இளைய சந்ததியினருக்கு கற்றுக் கொடுப்பது அவசியம்.
7. மறுபிறவி- எல்லா உயிர்களுக்கும் இடையிலான தொடர்பு மறுபிறவி நம்பிக்கையோடு தொடர்புபடுகிறது. உதாரணம் மாணிக்க வாசகரது“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி கல்லாய் மனிதராய்... என்ற திருவாசகத்தில் இதனைத் தெளிவாகக் காணலாம். இதிலிருந்து நாம் மறுபிறவியை கருத்திற் கொண்டு அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
8. அஹிம்சை - இது உலகிலேயே மிகப் பெரிய தர்மம் இது ஒருவனது கர்மா மீது செல்வாக்கு செலுத்துகிறது. உயிர்க் கொலை, வன்முறைகள் செய்யாதிருத்தல் முதலியன மோட்சத்தை அடையத் தடையாக உள்ளது. நல்ல கர்மாவைப் பெறுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுதலை இது வலியுறுத்துகிறது.
9. சந்நியாசம் - இந்து மதம் சந்நியாசத்தை விடுதலைக்கான பாதையாக நோக்குகிறது. எளிமை, உணவுக் கட்டுப்பாடு, உயிர்களைக் கொல்லாமை போன்றவற்றை இம்மதம் போதிக்கிறது. அனைத்திற்கும் வாழ்வியல் உரிமை உள்ளது. ஆதலால் அதனைத் தடுத்தல் கூடாது
10. காந்தியின் வாழ்வு - “சூழலியலுக்கான முன்னோடி” என இவரைக் குறிப்பிடலாம். பழங்களும், மூலிகைகளும் தான் இவரது உணவு, அமைதியான வாழ்க்கை, எளிமை, என்பன இவரது பண்பான வாழ்வின் அம்சங்கள் ஆகும். இவர் சூழலையும் விலங்குகளையும், அனைத்து ஜீவராசிகளையும் ஆழமாக நேசித்தார். இவரது வாழ்க்கை முறையினையும், பண்பான விடயங்களையும் தற்போதுள்ள இயற்கைச் சூழல் பாதுகாப்பாளர்களுக்கு கட்டாயம் கற்றுக் கொடுத்தல் அவசியம்.
இணையத்தள தேடல்
1. https://www.huffingtonpost.com/pankaj-jain-phd/10-hindu-environmental-te_b_846245.html
2. http://schoolsofenvironmental.blogspot.com/>br>
3. http://www.interfaithsustain.com/hindu-faith-statement-on-the-environment/
4. http://www.studymode.com/essays/Hinduism-Ecology-Critique-Of-Ecological-44786407.html
5. http://web-app.usc.edu/soc/syllabus/20131/35255.pdf
6. https://groups.google.com/forum/#!msg/IndiaNewsWindow/d_0DhShePkw/GkDdWOVaYZ4J
7. http://fore.yale.edu/religion/hinduism/
8. https://www.abebooks.com/Ecology-Religion-Ecological-Concepts-Hinduism-Buddhism/209702279/bd
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.