இளையராஜாவின் ‘வெண்பா நன்மாலை’
முனைவர் ம. தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்,
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.
முன்னுரை
இசைஞானி இளையராஜா ‘வெண்பா நன்மாலை’ என்ற பெயரில் சிவனின் பெருமையை வெண்பாவில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். “2000 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘வெண்பா’ எழுதிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது, தொடங்கினேன். சிந்தனையை எழுதி விட்டுப் படித்துப் பார்த்தால் தளை தட்டியது. தலையில் ஒரு குட்டு. தளையைச் சரி செய்தால் அமைகின்ற சொற்றொடர் எனக்குப் பிடிக்கவில்லை. இப்படியே சிந்தனைக்கும், தளைக்கும் மாறிமாறி நின்று, சலித்துப்போய்த் தூக்கிப் போட்டு விட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று இந்த வெண்பா என்றால் என்னவென்று பார்த்தே ஆக வேண்டுமென்று திட்டவட்டமாக முடிவெடுத்து அதே வெண்பாவைச் சரி செய்தேன். தளையும், சிந்தனையும் சண்டை சச்சரவெல்லாம் சமரசமாகி விட்டன” (1) என்கிறார் இளையராஜா. இளையராஜா எழுதியுள்ள இந்நூலில் 122 வெண்பாக்கள் இருக்கின்றன.
வெண்பா நன்மாலை - வெண்பாவிற்குரிய சீர்
‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் பாடலில் இயற்சீர் மட்டும் அமைந்துள்ளது.
“பிழைக்கப் பிழைக்க உயிர்க்கும் பிறப்பே
பிழைப்பார் பிழைப்பு பிழையின் பிழைப்பே
பிழைக்கா திருத்தல் பிறப்பை யறுத்தல்
பிழையா பெறுவாய் பிறந்து?” (2)
மேற்கூறிய பா தவிர ஏனைய பாக்களில் வெண்பாவிற்கு உரிய இயற்சீரும், வெண்சீரும் விரவியுள்ளன.
“யார்க்கு விதித்தானோ காண்பார் அவர்மட்டும்
யார்க்குத் திறப்பானோ சேர்வார் அவர்மட்டும்
பார்க்கும் இடமெல்லாம் பரந்த பொருளறிதல்
யார்க்கும் எளிதோ இயம்பு” (3)
ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிடல்
‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் அடிகளில் உள்ள ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிட்டால் மட்டுமே வெண்பாவிற்கு உரிய சீராக்க இயலும்.
“வேண்டியது தந்தேன்; விருப்பமே இல் லையெ னில்” (4)
- நேர் நிரை நேர் கூவிளங்காய்
“ஒன்றுமிலா மா யையெ னில் ஒன்றவைத்தல் நன்றாமோ?” (5)
- நேர் நிரை நேர் கூவிளங்காய்
“நம்நெஞ்சுக் கொன்றுமற்றால் நன்றாமோ? நன் மைவ ர” (6)
- நேர் நிரை நேர் கூவிளங்காய்
இவை மட்டுமின்றி மேலும் நான்கு அடிகளில் உள்ள ஐகாரத்தைக் குறுக்கமாக்கினால் மட்டுமே வெண்பாவிற்கு உரிய சீர்களாக மாற்ற இயலும்.
ஈற்றடியின் இறுதிச்சீர்
‘வெண்பா நன்மாலை’யின் 122 பாக்களுள் 48 பாக்கள் நேரசையிலும், எட்டுப் பாக்கள் நிரையசையிலும், 41 பாக்கள் நேர்பு அசையிலும், 23 பாக்கள் நிரைபு அசையிலும் முடிவடைகின்றன. நேர்பு, நிரைபு அசையில் முடியும் பாக்களில் பின்வரும் பாக்கள் முற்றியலுகர ஈற்றினைக் கொண்டுள்ளன:
“அறிந்தோர் தொடர்தல் அறிவு” (7)
“அறிவை இழத்தல் அறிவு” (8)
“நன்றோது நாறாது நாவு!” (9)
பேச்சுவழக்குப் போல நாட்டுப்புறப் பாடல் வடிவில் அமைந்துள்ள பாவின் இறுதிச்சீர் ஒலித்துணை உகரம் போல முற்றியலுகர ஈற்றினைக் கொண்டு முடிவடைந்துள்ளது.
“பாக்கப் படிக்கிறதப் பாரு” (10)
“கல்லல்லே நம்மனசு காணு” (11)
இதில் பார், காண் என்றாலும் இச்சொல்லின் பொருள் வேறுபடாது.
ஈற்றடியின் இறுதிச்சீர்ப் பிறழ்ச்சி
‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் அடி மட்டும் வெண்பாவிற்குரிய இறுதிச் சீராக அமையவில்லை:
“சாராம்சம் ஒண்ணுதான் சாமி” (12)
‘வெண்பா நன்மாலை’- வெண்பாவின் தளையும், ஓசையும்
‘வெண்பா நன்மாலை’யில் 118 ஆம் பாடலில் இயற்சீர் மட்டும் உள்ளதால் இயற்சீர் வெண்டளை பயின்று வருகிறது. ஆகவே தூங்கிசைச் செப்பலோசை பயின்று வருகின்றது. மேற்கூறிய பா தவிர ஏனைய பாக்களில் வெண்பாவிற்கு உரிய இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவியுள்ளன. ஆகவே ஒழுகிசைச் செப்பலோசை பயின்று வருகின்றது.
“உலகத்தை என்மனம் ஒப்பவில்லை பாழும்
உலகென்னை ஒப்பவில்லை ஓர்வாய் - உலகுடையாய்
ஒப்பா இருபொருளை ஒன்றிணைத்தாய் இஃதினைநீ
எப்படித்தான் ஒப்புவையோ செப்பு!” (13)
வெண்பா அடி
‘வெண்பா நன்மாலை’யில் அனைத்துப் பாக்களிலும் வெண்பாவிற்குஉரிய அளவடியும், சிந்தடியும் அமைந்துள்ளன.
“அடியவர் உள்ளத் தவதரிக்கும் உன்னை
அடியார் பிறவாதான் என்பர் - அடியவர்
உள்ளத்தே நீபிறக்க உள்ளம் இறக்குமெனில்
உள்ளத் துறைதலென்கொல் லோ?” (14)
வெண்பா வகை
‘வெண்பா நன்மாலை’யில் நேரிசை மற்றும் இன்னிசை வெண்பாக்கள் அமைந்துள்ளன.
நேரிசை வெண்பா
1. வெண்பா நன்மாலையில் 6 பாக்கள் ஒரு விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன. 23 பாக்கள் இரு விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன. பின்வரும் பா மட்டும் பல விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளது.
“புகழ்தொழுது போகின்ற செல்வம் தொழுது
வகையின்றி வாழ்நாள் தொழுது - இகமேல்
உனைத்தொழநீ தந்த ஒருபிறப்பு வீணே
தனைத்தொழுது தான்கிடப்ப தா?” (15)
இன்னிசை வெண்பா
வெண்பா நன்மாலையில் 77 பாக்கள் ஒரு விகற்ப இன்னிசை வெண்பா வடிவிலும் 11 பாக்கள் இரு விகற்ப இன்னிசை வெண்பாவடிவிலும் நான்கு பாக்கள் பல விகற்ப இன்னிசை வெண்பா வடிவிலும் அமைந்துள்ளன.
“தொடங்குமிடம் நீயென்று தொன்னூல் உரைக்கும்
அடங்குமிடம் அன்பர் மனமென் றுரைப்பர்!
இடங்காலம் சொல்கடந்து நிற்கும் பொருளோ
அடங்கும் அடங்கா மனத்து?” (16)
வெண்பா நன்மாலையில் 11 பாக்கள் இரு விகற்ப இன்னிசை வெண்பாவடிவிலும் நான்கு பாக்கள் பல விகற்ப இன்னிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன.
அடிக்குறிப்புகள்
1. இளையராஜா, வெண்பா நன்மாலை முன்னுரை.
2. இளையராஜா, வெண்பா நன்மாலை-99, ப.118.
3. மேலது-21, ப.27.
4. மேலது-48, ப.35.
5. மேலது-57, ப.71.
6. மேலது-83, ப.71.
7. மேலது-20, ப.26.
8. மேலது-22, ப.29.
9. மேலது-119, ப.142.
10. மேலது-116, ப.139.
11. மேலது-118, ப.141.
12. மேலது-113, ப.135.
13. மேலது-67, ப.81.
14. மேலது-89, ப.10.
15. மேலது-15, ப.20.
16. மேலது-95, ப.114.
வெண்பா நண்மாலை - வெண்பாச்சீர்
ஐகாரக்குறுக்கம் - (57-1), (83-3), (86-3), (108-3).
வெண்பா நண்மாலை-ஈற்றடியின்இறுதிச்சீர்
நேரசை - 2, 3, 5, 8, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 23, 24, 28, 37, 39, 40, 43, 44, 46, 52, 53, 55, 56, 57, 60, 61, 62, 63,65, 71, 73, 74, 79, 80, 81, 84, 87, 88, 89, 92, 96, 97, 102, 114, 115, 121.
நிரையசை - 6, 19, 33, 51, 64, 66, 72, 93.
நேர்பு அசை - 1, 9, 16, 25, 29, 30, 31, 32, 38, 41, 45, 47, 49, 50, 54, 58, 59, 67, 68, 69, 70, 75, 76, 77, 78, 83, 85, 86, 94, 98, 101,104, 105,107, 108, 109, 111, 112, 116, 118, 119.
நிரைபு அசை - 4, 7, 20, 21, 22, 26, 27, 34, 35, 36, 42, 48, 82, 90, 91, 95, 99,100,103,106,110,117,120.
வெண்பா நண்மாலை - வெண்பா வகை - நேரிசை வெண்பா
ஒரு விகற்பம் - 4,18, 63, 68, 87, 114.
இரு விகற்பம் - 12, 13, 17, 24, 25, 31, 33, 35, 36, 38, 39, 43, 52, 59, 65, 66, 67, 77, 84, 92, 103, 106, 115.
வெண்பா நண்மாலை - வெண்பா வகை - இன்னிசை வெண்பா
ஒரு விகற்பம் - 1, 2, 3, 5, 6, 8, 9, 10, 11, 14, 16, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29, 30, 37, 40, 41, 42, 45, 46, 7, 48, 49, 50, 51, 53, 54, 55, 56, 57, 60, 61, 62, 64, 69, 70, 71, 72, 73, 74, 75, 78, 79, 80, 81, 82, 83, 85, 86, 88, 89, 90, 91, 93, 95, 97, 98, 99, 101, 104, 105, 107, 108, 112, 116, 117, 118, 119, 120, 121.
இரு விகற்பம் - 7, 32, 34, 58, 76, 96, 100, 102, 109, 111,113.
பல விகற்பம் - 44, 94,100,122.
துணைநூற் பட்டியல்
1. இளையராஜா, வெண்பா நன்மாலை, அரும்பு பதிப்பகம், 49, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 (2011)
2. குழந்தை, யாப்பதிகாரம், சாரதா பதிப்பகம், பு-4, சாந்தி அடுக்ககம், 2/3 ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.