இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

வையையின் மாண்பும் மாசு தவிர்ப்பும்

முனைவர் இரா. விஜயராணி
இணைப் பேராசிரியர், முதுகலை & தமிழாய்வுத் துறைத் தலைவர்,
பிசப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620017.


முகவுரை

‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு’ (பாரதியார், செந்தமிழ்நாடு; 3 ஆம் பத்தி)

எனப் பாரதியார் பாடிப் பாராட்டிய ‘தமிழ் கண்டதோர் வையை’ பாண்டிய நாட்டைச் செழிப்படையச் செய்து பெருமை சேர்த்தது. இதனைச் சிலப்பதிகாரம்,

'வருபுனல் வையை மருதோங்கு முன்துறை
விரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவாய் இயக்கிப்
பூம்புனை தழீஇப் புனல்ஆட்டு அமர்ந்து’ (சிலப்பதிகாரம்; ஊர்காண்காதை; அடி 72 - 75)

என்றும்,

‘ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடிஏத்தத்
தூவித் துறைபடியப் போயினள்…’ (சிலப்பதிகாரம்; துன்பமாலை; அடி 01 - 04)

என்றும் புகழ்ந்து பாராட்டியுள்ளது.

இத்தகு சிறப்பும் பெருமையும் பெற்ற வையை ஆற்றைப் பன்முக நோக்கில் பாராட்டிப் பாடிய பாடல்கள் பரிபாடலில் மிகுதியாக உள்ளன. கடைச் சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட இந்நூல் மிக விரிவாகவும், சிறப்பாகவும் வையை ஆற்றைப் பாடிப் புகழ்ந்து கூறியுள்ளது. இன்று கங்கை மா நதி மாசு படிந்து சுற்றுப்புறச்சூழல் மிக அதிகமாகப் பாதித்துள்ளதைக் கண்டு அதைத் தூய்மைப்படுத்த நடுவன்அரசு கோடான கோடி ரூபாயைச் செலவு செய்து நன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை மதுரையின் வையை ஆற்றிற்கும் ஏற்பட்டதெனப் பரிபாடல் கூறுகிறது.

இந்நூல்,

‘தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று வையை’

என்றும்,

‘பெயலான் பொலிந்து பெரும்புனல் பலநந்த
நலன்நந்த நாடுஅணி நந்த புலன்நந்த
வந்தன்று வையைப் புனல்’

என்றும் பாராட்டிக் கூறப்பட்டுள்ளது. புலவர்களின் பன்முக நோக்கும் படைப்பும் மிகமிகப் பரந்து விரிந்தது.


வைகையின் மாசும் மாற்றமும்

‘நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம். இயற்கைப் பின்னணி மனித வாழ்வின் உயிரோட்டமாகியது. எனவே, நிலத்துடன் இணைந்ததே மனிதனுடைய வாழ்வு. அதனைக் காலம் கட்டுப்படுத்துகின்றது. எனவே, வரலாற்றிற்குக் காலவரை முறையும், நில இயலும் இரு கண்களுக்கு ஒப்பானவை. இதனை ரிச்செர்டு ஹக்கிலியூட் என்ற நில ஆய்வாளர் இவை இரண்டும் சந்திரனையும், கதிரவனையும் போன்றவை என்றார். மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும் - வறட்சியும், வளர்ச்சியும் - தளர்ச்சியும், பீடும் - சிறுமையும், ஏற்றமும் வீழ்ச்சியும், நகைப்பும் - ஏக்கமும், ஒளியும் - இருளும் நில இயற்கூறுகளின் பின்னணியைப் பொறுத்திருக்கின்றன’ (1)

‘நிலம்’ என்பது இங்கே ஐம்பூதங்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. இதனை நமக்குத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவர். அவர், ‘நிலம் தீ, நீர் வளிவிசும் போடடைந்தும் கலந்த மயக்கம் உலகம் …’ (தொல்; பொரு; மரபியல் - 90) என்று கூறுவர்.

நிலத்திற்கு அழகும், செழிப்பும் நீர்நிலைகளால் வந்து சேர்கின்றன. நீர்நிலைகளுக்கு மழைதான் நீரைத் தருகின்றன. மழையால் உருவாவதுதான் ஆறு. அத்தகு ஆறுகள் தமிழகத்தில் பற்பல. அவை சிற்றாறு, பேராறு என இரு வகைப்படும். காவிரி, வையை, தாமிரவருணி, தென்பெண்ணை, பாலாறு, செய்யாறு முதலியவை பேராறுகள் ஆகும். மதுரையை வையை வளப்படுத்துகிறது. தஞ்சையைக் காவிரி வளப்படுத்துகிறது. தென்பாண்டி நாட்டைத் தாமிரவருணி வளப்படுத்துகிறது. வையைக் கரையில் அமைந்த மதுரையும், காவிரி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்த காவிரிப்பூம்பட்டினமும் வரலாற்றுச் சிறப்புடையவை.(2)

மதுரையில் வாழும் அந்தணர்கள் நீராட வந்து வைகையைப் பார்த்த பொழுது மாசுபடிந்து கிடப்பதைக் கண்டு மனக்கலக்கம் கொண்டனர். வைகையில் வந்த புது வெள்ளம் மணப்பொருள்கள் கலந்த சாறும் குங்குமமும், சந்தனமும் வேறுபல மணப்பொருட்கள் சேறாகியும் நெய்யோடு மலர்கள் இணைந்து ஆறு மணம் வீசியது. இவ்வாறு ஓடிவரும் கலங்கிய வையை நீரைக்கண்டு அந்தணர்கள் மனம் மருண்டு கலங்கினரெனப் புலவர் பாடுவர்.

‘சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து
வேறுபடு புனல்என விரைமண்ணுக் கலிழை
புலம்புரி அந்தணர் கலங்கினர்…’ (பரிபாடல்; பாடம் 6; வையை; அடி 41 - 45)

எனச் சுட்டிக்காட்டுவர்.


மேலும், பலர் வந்து நீராடிச் செல்வதால் கலங்கிச் சேறாகி விட்டதெனவும் கூறுவர். ஆடவர், மகளிர் அணிந்த தார், கோதை, மலர், வேர், தூர், காய், கிழங்கு பலரும் குடித்த கள்ளின் எச்சங்கள் கலந்து வையை நீர் கலங்கிச் சேறு போல் வந்தது’ என்பர். இதனை,

‘மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நாரரி நறவம் உகுப்ப நலனழிந்து
வேறாகின்று இவ்விரி புனல் வரவென
சேறாடு புனலது செலவு’ (பரிபாடல்; பாடல்; 6 வையை; அடி 46 - 51)

எனப் பாடுவர்.

மற்றொரு பாடலில் வைகை ஆறு மாசுண்டு மாறுபட்டு கிடப்பதற்கு வேறுசில காரணங்களைக் கூறி விளக்குவர். நீண்ட நெடிய வைகை ஆற்றின் கரையின் மற்றொரு பகுதியில் ‘பெண்டிர் தம் கணவருடன் ஊடிப் பின்கூடி மகிழ்ந்து நீராடுவர். மணமலர்களைச் சூடிப் புதுப்புனலை வாழ்த்திக் கைக்கூப்பித் தொழுவர். பல பெண்களும், ஆண்களும் தொடர்ந்து புனலாடியதால் சேறாகிய வையை நீர் முழுவதும் உண்டு உமிழ்ந்த எச்சில் போன்று தூய்மை இழந்து தோன்றியது’ என்று கூறுவர். இதனைப் புலவர்,

‘ஊடி ஊடி உணர்த்தப் புகன்று,
கூடிக்கூடி, மகிழ்வு மகிழ்வு,
தேடித்தேடி, சிதைபு சிதைபு,
சூடிச்சூடி, தொழுது தொழுது,
மழுபொடு நின்ற மலிபுனல் வையை,
விழுதகை நல்லாரும் மைந்தரும் ஆடி,
இமிழ்வது போன்றது இந்நீர் குணக்குச் சான்றீர்!
முழுவதும் மிச்சிலா உண்டு’ (பரிபாடல் பாடல் எண் I; திரட்டு; அடி; 76-83)

என்று பாடுவர்.

மற்றோரிடத்தில், ‘நீராடுவோரின் சந்தனக் குழம்பும், ஆடவர் அணிந்த மாலையும், பெண்டிர் அணிந்த கோதையும், நீரில் கலக்கும் மலர்களின் நிறமாகவே வையை ஆறு தோன்றிற்று’ என க்கூறுவர் இதனை,

‘சாந்தும் கமழ்தாரும் கோதையும் சுண்ணமும்
கூந்தலும் பித்தையும் சேர்ந்தன
பூவினும் அல்லால் சிறிதானம் நீர்நிறம்
தான் தோன்றாது இவ்வையை ஆறு’ (பரிபாடல் பாடல்; எண் I; திரட்டு; அடி 84 - 87)
எனப் பாடுவர்.


வையையால் செழித்த வயலும் பிறவும்

பரிபாடல் திரட்டில் உள்ள ஒரு பாடலின் குறிப்பிட்ட பகுதி வயலின் செழிப்பை நன்கு விளக்குகிறது.

‘ஒருசார் அணிமலர் வேங்கை மராஅமகிழும்
பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர்பு ஓங்கி
மணிநிறம் கொண்ட மலை.
ஒருசார் தண்நறுந் தாமரைப் பூவினிடையிடை
வண்ண வரிஇதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப
விண்வீற் றிருக்கும் கயமீன் விரிதகையின்
கண்வீற் றிருக்கும் கயம்.
ஒருசார் சாறுகொள் ஓதத்திசை யொடுமாறுற்று
உழவின் ஓதை பயின்று அறிவிழந்து
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி
திருநயத் தக்க வயல்’ (பரிபாடல் திரட்டு; பாடல் I; அடி 7 - 17)

என்று பாடப் பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட மாற்றங்களும், சிறப்புகளும் தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மக்கள் பத்தியோடும், மகிழ்ச்சியோடும், செல்வச் செழிப்போடும் வாழ்ந்தவர் வையை ஆறுதான் காரணம் என்பர்.

‘ஒருசார் அறத்தொடு வேதம்புணர் தவம்முற்றி
விறல்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்
திறந்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி,
அறத்தின் திரியா பதி.
ஆங்கொருசார் உண்ணுவ பூசுவபூண்ப உடுப்பவை
மண்ணுவ மணிபொன் மலைய கடல
பண்ணியம் மாசறு பயம்தரு காருகப்
புண்ணிய வணிகர் புனைமறுகு ஒருசார்.
விளைவதை வினைஎவன் மென்புலல வன்புலக்
களமர் உழவர் கடிமறுகு பிறசார்;
ஆங்க அனையவை நல்லநனி கூடுமின்பம்
இயல்கொள நண்ணி யவை’ (பரிபாடல்திரட்டு; பாடல் I; அடி 18 - 29)

எனப் பாடியுள்ளார் புலவர்.

இதில், ‘ஒரு பக்கத்தில் அறநெறியில் நின்று வேதங்களைப் பயின்று தவநெறியில் முதிர்ந்து வெற்றிப்புகழ் எங்கும் நிற்க வாழ்வில் பிறழ்தல் இல்லாத அந்தணர் வாழும் ஊர் உள்ளது.

மற்றொரு பக்கத்தில் உண்பதற்குரிய பொருள்களும், பூசுவதற்குரிய பொருள்களும், உடுத்தற்குரிய பொருள்களும், நீராடுவதற்குரிய பொருள்களும், மணி, பொன் முதலிய மலையிலிருந்து கிடைக்கும் பொருள்களும் விற்கப்பெறும் கடைத்தெருக்கள் உள்ளன. மற்றொரு பக்கத்தில் ஆடைகளை நெய்து விற்கும் துணி வாணிகர் வாழும் தெருக்கள் உள்ளன. இவற்றை விற்பவர் அறநெறி தவறாது புண்ணிய வழியில் நடந்தனர். மற்றொரு பக்கத்தில் நன்செய், புன்செய் நிலங்களில் உழுதுவாழும் உழவர் தெருக்கள் இருந்தன. எல்லாத் தெருக்களிலும் மக்கள் இன்பத்தோடு மகிழ்ந்து வாழும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.


வையை ஆற்றால் எழுச்சியுற்ற சமூகம்

‘மனித நடத்தைகள் பலவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் குழு சார்ந்த நிகழ்வுகள், பருப்பொருட் படைப்புகள், கருத்துருவங்கள் ஏனையப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் நாம் உற்று நோக்கிப் புரிந்து கொள்ளத்தக்க ஒழுங்கமைப்புகளாக இலக்கிய மானிடவியல் அணுகுகிறது. அவ்வகையில் சமயச் சிந்தனைகள், சடங்குகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், உறவு அமைப்புகள், அறநெறி சார்ந்த செயல்பாடுகள் போன்றவையும் அரசியல் மற்றும் மக்கள் தங்களுக்கிடையே படைத்து வழங்கும் வழக்காற்று வடிவங்கள், வெகு மக்கள் நம்பிக்கைகள், விளையாட்டுகள், கலைவடிவங்கள் போன்றவையும் இலக்கிய மானிடவியல் அக்கறை செலுத்தும் பொருட்பரப்பிற்குள் அடங்குவன்’(3) எனக் கூறும் திறனாய்வாளர் கருத்துக்களை உறுதிப்படுத்துவது போல பரிபாடலின் பாடல்கள் படைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

மேகம் கடல்நீரைப் பருகிப் பரந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்தது மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மலைஅழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்த நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச்சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்து பாடிய பாக்கள் போல பொய்க்காது தொழில் வளம் பெருக வையையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களுக்கும் பரவி விரைந்து ஓடியது’ எனப் பாடியுள்ளார் புலவர்.

‘நிறைகடல் முகந்துஉராய், நிறைந்துநீர் துளும்பும்தம்
பொழைதவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்,
நிலம்மறை வதுபோல் மலிர்புனல் தலைத்தலைஇ,
மலைய இனம்கலங்க மலைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை,
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவின் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்’ (பரிபாடல்; பாடல் எண். 06; அடி 1 - 10)

எனப் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.

மற்றொரு பாடலில் மார்கழி மாதம் பெண்டிர் நோன்பு நோற்று தைநீராடிய முறைமையை நயம்பட எடுத்துரைக்கிறார். அதில், ‘முழங்கும் மேகங்களையுடைய கார்காலம் நீங்கக் குளிரால் நடுங்கும் பனிக்காலம் வந்தது. கதிரவன் கடுமையாகக் காயாததால் குளிர்ந்த பின் மழையுடையதுமான மார்கழி மாதத்தில் களங்கத்தோடு வளரும் முழுமதியின் திருவாதிரை நாளில் விரிந்த நூல்களைக் கற்று அந்தணர் விழாத் தொடங்கப் பார்ப்பனர் பூசைப் பொருட்களைப் பொற்கலத்தில் ஏந்த வளையல் அணிந்த கன்னிப் பெண்கள் வெயில் கொடுமையால் இவ்வுலகம் துன்புறாது, மழையால் குளிர்வதாக என வாழ்த்தித் தைந்நீராடினர்’ எனக் கூறுவர்.

‘கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறுகாயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப
வெம்பாதாக வியல்நிலை வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்த்தொடிக் கன்னியர்’ (பரிபாடல்; எண்.11; அடி 74 - 81)

என்று பாடியுள்ளார் புலவர்.

இறுதியில்,

‘இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்
நன்பலல நன்பல நன்பல வையை!
நின்புகழ் கொள்ளாது இம்மலர்தலை உலகே’ (பரிபாடல்; எண்.12; அடி 101 - 102)

என்று பாடி மகிழ்ந்து ஆற்றைப் போற்றி வணங்கினர்.


‘இசை வல்லுநர் யாழ் நரம்புகளில் பாலைப்பண் ஏழையும் எழுப்பினர். அப்பாடல்களுடன் மிடற்றுப் பாடல்களும் இயைந்து ஒத்திசைத்தன. குழல்இசை அளவாக ஒலித்தது முழவு ஒலிமிகுதியாக ஒலித்தது. அரசனால் தலைக்கோல் பெற்ற மகளிரும், பாணரும் ஆடத் தொடங்கினர். அங்கு எழுந்த ஒலிகளோடு வையைப்புனல் ஒலியும் சேர்ந்தது. இரண்டு ஒலிகளும் இடியுடன் கூடிய மேகத்தின் முழக்கத்தை ஒத்தது. இத்தகைய ஓசைகள் நிறைந்த திருமருதம் முன் துறையில் மக்கள் புனலாடி மகிழ்ந்தனர். மாலைகளை நீரில் இட்டு வழிபட்டனர். கண்டார்க்கு அச்சம் தரும் வையையே! உன்னிடத்தில் நீராடி நீங்காத பயனை இன்று பெற்றது போல நாங்கள் என்றும் எய்தும் பயனைப் பெறுவதற்கு அருள்புரிவாயாக! என்று மதுரை மாநகரத்தார் சமூகம் வணங்கி நீராடி வழிபட்டு நல்வாழ்வு பெற்றனர் எனக் கூறுவர்.

அறியலாகும் கருத்துக்கள்

‘வைகையாறு பழநி மலையில் தோன்றுகின்றது; அது மதுரை மாநகருக்குச் சீரையும், சிறப்பையும் வழங்குகின்றது; மதுரையைக் கடந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்துச் சென்று வங்கக்கடலோடு கலக்கின்றது. இவ்வாற்றிலும் ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடுவதில்லை. மேற்கு மலைத்தொடரில் பொழியும் மழைநீரை அணைகள் கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். வைகையாறும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் புகழையும் பாராட்டையும் பெற்றுள்ளது.(4)

பொதுவாக நம் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிற ஆறுகள் ஏதேனும் ஒரு சில காரணத்தால் மாசு படியத்தான் செய்யும். ஆனால், பழங்காலத்தில் ஆற்றில் மாசு படிதலுக்குக் கீழ்க்கண்ட காரணங்கள் கூறப்படுகின்றன. அவை:

1. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் புனித ஸ்தலத்திற்கு மிகுதியாகச் சென்று நீராடுவதால் மாசு படியும்.

2. பக்தர்கள் நம் நாட்டின் ஆறுகளைத் தாயாகவும், தேவியாகவும், தெய்வமாகவும் கருதுவதால், ஆற்றங்கரையில் நீராடிவிட்டு முறையாகப் பூசை செய்து வணங்குவர். அப்பொழுது பணிவுடன் மலர் முதலான பூசைப் பொருட்களை ஆற்றில் சமர்ப்பித்து வணங்குவர். அதனால் ஆறுகள் மாசுபடியும்.

3. ஆற்றங்கரையில் அமரர்களான மூத்தோர்களை நினைவிற் கொண்டு வணங்கி அருள்பெறப் புரோகிதர்களை வைத்துச் சமயச் சடங்கு செய்வர். சடங்கில் பயன்படுத்திய பூசைப் பொருட்களைப் பணிவுடன் ஆற்றில் சமர்ப்பிப்பதாலும் ஆறு மாசுபடிவது இயல்பாகும்.

4. பக்தர்கள் நீராடும்பொழுது ஆடைகளைத் துவைத்து அழுக்கைப் போக்க முயற்சிப்பதாலும் மாசு படியும்.

5. அறியாமலையால் செய்யும் மாசு மழை பெய்வதாலும், ஆற்றுநீர் அனைத்தையும் தன்னுடன் இழுத்துச் செல்வதாலும் மாசு விரைவில் நீங்கி விடும்.

6. தூய பக்தியாலும், சமூகக் கட்டுப்பாட்டாலும், சட்டத்தை மதித்து வாழ்ந்ததாலும், மக்கள்தொகைக் குறைவதாலும் படிந்த மாசுகள் விரைவில் நீங்க இயற்கையும், சமூகமும் ஒத்துழைத்தாலும் படிவது நிங்கி விடுமாறு உருவாகும் நல்ல வழிகள் மிகுதியாக இருந்தன.

பழங்காலத்தில் ஆறுகள் மாசுபடியும் விதத்தில் சில பரிபாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனைக் கற்பார் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் ஏற்புடையது. தக்கவை எனக்கூறி அமைதி பெற வழி வகுக்கும். ஆனால், இன்றைய சமூகமும், அதன் சூழலும் தலைக்கீழாகவும், எதிர்மறையாகவும் மாறி விட்டதால் இன்று நாட்டிலுள்ள எல்லா ஆறுகளும் அதிகம் மாசு படிந்து சமூகச் சீர்கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாவரும் அறிவர், ஒப்புக்கொளுவர்.

1. மக்கள் தொகை அதிக வளர்ச்சி பெற்றதாலும், உலகமயமாக்கலின்படி தொழில் வளர்ச்சிகள் மிகுதியாக உருவாகி வருவதாலும் ஆறுகள் எளிதில் மாசுபடிய நிறைய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டுச் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டதைத் தெளிவாகக் காண முடிகிறது.

2. நாகரீக, நகர வசதி நிறைந்த வாழ்வு சமூக மக்களுக்கு கிடைத்து விட்டதால், அதற்கேற்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது கழிவுப்பொருள்கள் மிகுதியாகி ஆறுகள் மாசு படிய வழி வகுத்துவிட்டன.

3. எப்படிப்பட்ட மாசுபடிந்த பொருட்களும், கழிவுப்பொருட்களும் ஆற்றில் கலந்துவிட்டால் தூயதாகிவிடும் என்ற தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவாலாக பரவி விட்டதால், நீர்நிலைகள் மிக விரைவில் மாசுபடிந்து நோய்கள் பரவ வழிவகுத்தன.

4. சமூகக் கட்டுக்கோப்பு சீரழிந்து விட்டதாலும், விதிகளையும், சட்டத்திட்டங்களையும் புறக்கணிக்கத் துணிந்தாலும், சுயநலம் மிகுந்தோங்கிவிட்டதாலும் ஆறுகளும், நீர்நிலைகளும் மாசுபடிவதைப் பற்றி எவரும் கவலைப்பட முன்வரவில்லை.

5. மாசுக் கட்டுப்பாட்டிற்காகவும், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் நடுவண் அரசும், மாநில அரசும் மேற்கொள்ளும் பணிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கப் பெறாமையும் காரணமாகக் கருத இடமேற்படுகிறது.

6. பிரதமரின் தூய்மை இயக்கம்கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிதந்ததாகக் கருத முடியவில்லை.

7. அனைத்திற்கும் மக்களிடம் உள்ள சுயநலப் போர்க்கே காரணமாகி விட்டதெனத் துணிந்து கூறவே இடமேற்படுகிறது. எனவேதான் பாரதிதாசனும்,

‘தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும்; பயனற்ற சிறிய வீணன்!’ (5)

என்று கூறி வேதனைப்பட்டு பாடிச் சென்றுள்ளார். இதற்குரிய தீர்வையும் கவிஞரே கூறியுள்ளார். அவர்,

‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ‘ஒன்றே’! என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ! இன்பம்! ஆங்கே,
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே!’(6)

என்று பாடியுள்ளதையும் காண முடிகிறது. இத்தகு பொதுநலம் சமூகத்தில் வளர வளர நீர்நிலை மாசுகள் மட்டுமன்று, பிற எல்லா மாசுகளும் அகன்று தூய சமூகமும் நல்ல சூழலும் வளரத் தொடங்கிவிடும் எனக் கூறலாம்.


தூங்கா மாநகர் எனப்படும் மதுரை மாநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கோவில்களின் திருவிழாக்களில் மக்கள் மிகுதியாகப் பங்கேற்று மகிழ்ந்து கொண்டாடி வருவதாலுங்கூட நீர்நிலைகள் மாசுபடிவதைக் காண முடிகிறது. தமிழக அரசம், மாநகராட்சியும் அதிகமாக அக்கறைக் கொண்டு மேற்கொள்ளும் தூய்மையாக்கும் பணிகளும், பிரதமரின் தூய்மைப்பணி இயக்கமும் நல்ல பலனைத் தருவதால், ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது எனலாம். இருப்பினும் மீண்டும் மீண்டும் மாசு படிவதும், அகற்ற முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வரத்தான் செய்கிறது.

புண்ணிய நதி எனக் கூறப்பட்டு வரும் கங்கைநதி அதிகம் மாசு படிந்துவிட்டதைக் கணக்கிற்கொண்டு நடுவண் அரசு இதற்கெனத் தனித்திட்டம் தீட்டி, ‘தூய்மை கங்கை’ எனப் பாராட்டுபெறும் விதத்தில் வெளிநாட்டார் உதவியோடு கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியில் அதிகம் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளனர். அதுபோலவே மாசுபடியும் தமிழக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த விளம்பரங்கள், விளிப்புறு பேரணிகள், மாரத்தான் ஓட்டம், சமூக ஆர்வலர்கள் மூலம் பிரச்சாரம், துறை சார்ந்த தூய்மைப்பணி, திருக்கோயில்களின் நீர்நிலைகளை மாசுபடிதலிருந்து பாதுகாத்தல் எனப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வைகை மாசுபடாதிருக்க அரசு பலத் திட்டங்களைத் தீட்டி, மேற்கொள்ளும் பணிகளில் பொதுமக்களும், பக்தர்களும் அதிக அளவில் பங்கேற்று தொண்டு செய்ய முற்பட வேண்டும். வருமுன் காப்பது நல்லதென எண்ணி ஆற்றங்கரைகளில் கழிவுப் பொருட்கள் சேரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் தூய்மை செய்யவரும் பணியாளர்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும். அரசு மேற்கொள்ளும் எல்லாத் தூய்மைப் பணிகளிலும் பங்குபெற்று ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது வைகையைத் தூய்மையாக வைத்திருக்க வழிவகுக்கும்.

பரிபாடலில் வையை மாண்பு பற்றியும், மாசுபற்றியும் மழைநீரால் தூய்மை அடையும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முயலும். நாம் நீர் எல்லா இடங்களிலும் தேங்கி நின்று ஓட்டத்திற்குத் தடை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆற்றில் நீர் வேகமாக ஓடிச் செல்ல வழிவகுத்தால் கழிவுகளை அடித்துச்சென்று கடலில் சேர்த்துவிடும். அதனாலும், தூய்மையை உருவாக்க வழி ஏற்படும்.

மதச் சடங்குகளாலும், மக்களது அலட்சியத்தாலும் ஏற்படும் ஆற்றங்கரை மாசுகளை முறையாக அகற்ற ஏற்பாடு செய்ய அரசு செய்யும் எல்லாப் பணிகளுக்கும் பக்தர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு நல்கினால் ஒழிய இது சாத்தியமாகாது. கங்கைபோல், காவிரிபோல் புனிதமாகக் கருதப்படும் வையை ஆறு தூய்மை பெற்று சிறக்க மதுரை மாநகர மக்கள் மனம் வைத்தாலொழிய இது சாத்தியமாகாது. இன்று தூய்மையோடு விளங்கும் வையை மேலும் தூய்மை பெற, மாசுபடிவதிலிருந்து பாதுகாக்க நாமே சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

முடிவுரை

பரிபாடலில் இடம் பெற்றவையைப் பற்றிய ஒன்பது பாடல்களையும் கற்பார், அது எல்லாச் சிறப்புகளையும் பெற்று பாண்டிய நாடு இன்றும் செழிப்படைய பாய்ந்தோடி வளம் சேர்ப்பதைக் காண முடிகிறது. மக்கள் பெருக்கம், சமூக மாற்றம், மாந்தர் தம் கவனக்குறை முதலானவற்றால் மாசுபடிய நேரிட்டாலும் அது தற்காலிகமே. மக்கள் இயக்கம் மனம் வைத்து முயன்றால் எளிதில் வெற்றி பெற்று விடலாம். இதனைக் கடந்தகால நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன. பிற தமிழக ஆறுகளைக் காட்டிலும் வையை மாறுபடுவது அளவால் குறைவேயாம் அதுவும் காலப்போக்கில் எளிதாக விலகிச் சென்றுவிடும் என நம்பலாம். நீர்நிலைகளைத் தாயாகவும், தெய்மாகவும் கருதும் நம் மக்கள் எப்பொழுதும் வையை தூய்மையுடையதாக இருக்கவே விரும்புகின்றனர். அதற்கேற்ப மக்கள் பணிகளும் பேரியக்கமாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, வையை ஆற்றை நாம் எப்பொழுதும் புனித நதியாகக் கருதி வழிபடுவதற்கேற்ப, அதன் தூய்மையிலும் கவனம் செலுத்துவோம் என உறுதிமொழி எடுப்போம்; முன்மொழிந்து வழி மொழிவோம். இதுவே நமது கடமையாகும்.

சான்றாதாரங்கள்

1. செல்வம் வே. தி. தமிழக வரலாறும், பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை (2003 நான்காம் பதிப்பு, ப-33)

2. டா. ஆ. இராமகிருட்டினன், தமிழக வரலாறும், தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை (2010 ஒன்பதாவது பதிப்பு, ப - 20)

3. முனைவர் தனச்செயன். ஆ, தமிழில் இலக்கிய மானிடவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (2014 முதற்பதிப்பு, பக். 15-16)

4. கே. கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் - மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (2004 மறபதிப்பு, ப - 17)

5. பாரதிதாசன் கவிதைகள், அபிராமி பதிப்பகம், சென்னை, (மறுபதிப்பு, புதிய உலகம், ப - 97, முதல் நான்கு அரை அடிகள்)

6. மேற்படி நூல், புதிய உலகம், ப - 97, இரண்டாம் பத்தி, கடைசி நான்கு அரை அடிகள்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p158.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License