பெண்ணிய நோக்கில் வாஸந்தியின் ‘வேலி’
முனைவர் வீ. மீனாட்சி
உதவிப்பேராசிரியர்,, தமிழாய்வுத்துறை,
பிசப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620017.
முன்னுரை
தமிழ் இலக்கியப் பரப்பு இன்று பரந்து விரிந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புனைகதைகள் மனித சமூகக் கட்டமைப்பினைப் பல்வேறு கோணங்களில் விரிவாக கூர்ந்த நோக்குடன் அணுகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. புனைகதைகள் என்பவை வெறும் பொழுதுபோக்குக்கானவை என்ற கருத்தாக்கத்தைத் தகர்த்து மனித சமூகக்கட்டமைப்பில் புனையப்பட்டுள்ள மேல், கீழ் எனும் நிலைக்கு எதிராக குரலை எழுப்பி விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் தங்களது உரிமைகளை, அடையாளங்களை முன்வைப்பதற்குக் களமாக விளங்குகின்றன. இதனடிப்படையில் அண்மைக்காலச் சூழல் சமூகத்திலும் தமிழிலக்கியத் தளத்திலும் ஆண் பெண் என்ற ஏற்ற தாழ்வு நிலையை மாற்றி சமத்துவச் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில் பெண்ணியம் குறித்தப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெண்ணியம் என்பது தனி ஒரு கோட்பாடாக வளர்ச்சி பெற்று வருகிறது. பெண்ணினத்தின் முன்னேற்றத்தையும் அவர்களின் மேம்பாடு குறித்தச் சிந்தனைகளையும் இக்கோட்பாடு முன்னிருத்துகிறது. மனித சமுதாயத்தில் ஆண், பெண் இருவரும் சரி நிகரானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இத்தகைய படைப்பு வெளியில் பெண்ணினம் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளையும் அவற்றைக் களைவதற்குப் பெண்கள் தங்களது தனிமனிதத் தகுதி நிலையினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தனது படைப்புகளைக் கள ஆய்வின் அடிப்படையில் தரும் வாஸந்தியின் ‘வேலி’ சிறுகதைத் தொகுப்பு உணர்த்தும் பெண்ணியச் சிந்தனை குறித்து ஆய்வதாகக் இக்கட்டுரை அமைகின்றது.
பெண்ணியம்-விளக்கம்
பெண்ணியம் என்பது பெண்களின் அடிமை வாழ்வை மாற்ற முற்படும் கோட்பாடாகும். இக்கோட்பாடானது ஆண்கள் எந்த அளவு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதோடு அதனடிப்படையில் நன்கு வரையறுக்கப்பட்ட சமூக அமைப்பை உருவாக்கித் தரவும் முயலுகிறது.
பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகவும். அதன் மூலம் உலக அளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் சார்லட் பன்ச். இதையே, பார்பரா ஸ்மித்தின் கூற்றில் சற்று விரிவாக காணமுடிகிறது. பெண்ணியம் என்பது எல்லா பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கையை உடையதாகவும். (முனைவர் இரா. பிரேமா, பெண்ணியம் ப:13) எனும் கூற்றுக்களின் வழி பெண்ணியக் கோட்பாட்டின் விளக்கத்தினை அறியலாம்.
பெண்ணின் சமூகத் தகுதி நிலை
பெண்ணின் சமுதாயத் தகுதி நிலை என்று நோக்கும் போது தாய்வழிச் சமூக அமைப்பில் பெண் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறாள் என்பதை வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன. காலப்போக்கில் நிகழ்ந்த சமூக மாற்றங்களால் தோன்றிய தனிச்சொத்துடைமைக் கருத்தாக்கத்தால் தந்தை வழிச் சமூகம் ஏற்பட்டது. அது தனது கருத்தாக்கத்தை நிலைநிறுத்த ஆண், பெண் குறித்த சில கட்டமைப்புகளை ஏற்படுத்தியது. அதனைக் காலந்தோறும் தக்க வைக்க சில கருத்துருவங்களைக் (Ideology) கைக்கொண்டுள்ளது. இக்கருத்துருவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணின் தனி மனித தகுதிநிலை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் பெண் என்பவள் தனித்துவமாக் கருதப்படாமல் ஆணைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். இதன் விளைவாக, இன்றும் பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு இன்னல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பெண்ணினம் எதிர்கொள்ளும் இன்னல்களை வாஸந்தி தனது சிறுகதைத்தொகுப்பில் எவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பதை பின்வரும் பகுதி எடுத்துரைக்கிறது.
”வேலி ”சிறுகதைத்தொகுப்பின் உள்ளடக்கம்
வாஸந்தியின் வேலி சிறுகதைத் தொகுப்பில் குரல், அவர் சொல்லாமல் போனது, இடைவெளி, ஈன்ற பொழுதினும், காதலின் சாதல், சீற்றம், ஞானஸ்தானம், வேலி, வரம்பு, கருவறையின் ஓலம், குற்றவாளி தனிவழி, தீர்ப்பு, வழித்துணை என பதினான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் பெண்களின் பிரச்சனைகள் குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஒரு சில கதைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வினையும் அளித்துள்ளன.
பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள்
ஆண் வல்லாண்மைச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட குடும்ப அமைப்பில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் குறிப்பாக வாஸந்தி தனது படைப்பில் இளம் வயது திருமணம், பெண் குழந்தை வெறுப்பு, ஆண் பெண்ணினை அடித்து துன்புறுத்துதல், ஏமாற்றுதல், பெண் வீட்டு வேலைக்கு உரியவளாதல், பெண்ணுக்கு என விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், பாலியல் வன்முறைகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
இளம் வயது திருமணம்
திருமணம் என்பது மட்டுமே பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற சமூக அமைப்பின் காரணத்தால் பெண் குழந்தைகளின் உடலும், உள்ளமும் தகுந்த வளர்ச்சியினை எட்டாத இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் நிலையினை வாஸந்தி ‘குரல்’ எனும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார். இக்கதையில் வள்ளி எனும் இளம் பெண் பதினைந்து வயதில் திருமண உறவில் தள்ளப்பட்டு குழந்தைப்பேறு கண்டு பின் கணவனால் ஏமாற்றப்படும் நிலையினை,
”அடப்பாவி இதுவே சின்னப் பொண்ணாட்டம் இருக்க?’ ஆமாம். பதினைஞ்சு வயசு. என்னவோ உலகம் கெட்டுக் கெடக்கு, ஒருத்தன் கையிலே ஒப்படைச்சா நல்லதுன்னு நினைச்சேன். ஏமாந்து போனேன்” (வேலி ப :19)
என்று வள்ளியின் அம்மா தன்னிடம் உரையாடும் பெண்ணிற்குப் பதில் அளிப்பதன் மூலம் அறிய இயலுகிறது. மேலும் இக்கதையில் இளம் வயது திருமணத்தால் வள்ளி என்ற கதைமாந்தர் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைவதைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய பதிவு
“நான் இங்குள்ள தாய்மார்களுக்காகவேச் சொல்லுகிறேன் உங்கள் பெண்களை நன்றாய்ப படிக்க வையுங்கள். தொழில் சொல்லிக்க கொடுங்கள். இருபது வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள். அப்பொழுதுதான் பெண்களுக்கும் சுதந்திர உணர்ச்சி உண்டாகும்”(வெ. ஆனைமுத்து (ப.ஆ) ஈ.வெ.ரா.பெரியார் சிந்தனைகள் தொகுதி I ப.250)
எனும் பெண் விடுதலைக்கு வித்திட்ட தந்தை பெரியாரின் சிந்தனைகளை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
பெண் குழந்தை வெறுப்பு
சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பெண்குழந்தையின் பிறப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். அவர்கள் பெண் குழந்தைகளை வெறுப்பதற்குக் காரணங்கள் பல உள்ளன. இவற்றுள் முக்கியமானவையாக பொருளாதாரச்சுமை, பொருளாதாரப் பங்கேற்பின்மை, பாதுகாப்பின்மை போன்றவை அமைகின்றன. இவ்வாறு பெண்குழந்தை பிறப்பு வெறுக்கப்படுவதை ’குரல்’ கதையில் வரும் வள்ளியின் கணவன்,
“பொட்டப் புள்ளையப் பெத்திருக்கியே எப்படி பாத்துக்கறதுன்னு நினைச்சே. தமிழ்நாட்டில கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலே வெச்சிருக்கிற தொட்டில்லே போடப்போறேன்” (வாஸந்தி வேலி ப.22)
என்று கூறுவதன் வழி இனம் காட்டியுள்ளார். இது போன்ற நிலைப்பாட்டிற்குக் காரணம் இங்கு ஆண் வரவு; பெண் செலவு என்ற கருத்து நிலைபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை அடித்துத் துன்புறுத்துதல்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாவது மனைவி என்ற பங்கு நிலையில் கணவனால் அடித்து துன்புறுத்துவதாகும். மனைவிக்கு கணவன் இழைக்கும் இது போன்ற வன்முறைகள் சமூகத்தில் எழுதப்படாத சட்டங்களாக இருக்கின்றன. குடும்பம் என்ற அமைப்பு மனித இனம் நாகரிகம் வளர்ச்சி பெற்றதன் விளைவு என்று வரலாறு சொல்கிறது. ஆனால், ஆதி சமூகத்தில் நிலவிய ஆண் பெண் சமத்துவம் இன்றைய உயர்ந்தபட்ச நாகரீக நிலையில் இல்லை, பெண் என்பவள் ஆணின் உடைமைப் பொருளாகவே பார்க்கப்படுகிறாள் என்பதை
“இந்த ஊரில் மற்ற ஆண்களைப் போல் கட்டினவளைக் காலால் மிதிக்கும் ஆள் இல்லை இவன்” (வாஸந்தி வேலி ப: 115)
என்று ’வேலி’ சிறுகதையிலும்
“மல்லிகாவின் புருஷன் சரியான குடிகாரன் அவளை அடிச்சு உதைக்காத நாள் இல்லை” (வாஸந்தி வேலி ப: 202)
என்று ‘தனிவழி’ எனும் சிறுகதையிலும் வாஸந்தி பதிவு செய்திருப்பது மெய்ப்பிக்கிறது. இதன் வழி ஆண் உயர்வு நிலைப்பாடு (Male Chauvinism) கருத்தாக்கத்திற்குப் பழக்கப்பட்ட ஆண், பெண்ணை சக உயரியாகக் கருதாமல் தன்னைவிடத் தாழ்வாகக் கருதுகிறான். இதனால் பெண் உடலின் மீது தனது அதிகாரத்தைச் செலுத்துகிறான். இந்நிலைப்பாட்டால் பெண் அதிக துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறாள் என்பதை அறிய இயலுகிறது.
பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுதல்
குடும்பம் என்ற அமைப்பில் ஆண் பெண் பங்கு நிலைகளில் பெண் என்பவள், ஆணால் ஏமாற்றப்படும் சூழ்நிலைகளை வாஸந்தியின் பெரும்பாலான கதைகள் சுட்டுகின்றன. ‘குரல்’ எனும் கதையில் அஞ்சலை எனும் கதைமாந்தர் கணவனால் ஏமாற்றப்படுவதை,
“அஞ்சலை அழுவதுபோல் இருந்தது, என் வீட்டுக்காரரு இன்னொரு பொம்பிள்ளையோடு போயிட்டாரு”
(வாஸந்தி வேலி ப: 23)
என்றும், ‘ஞானஸ்நானம்” என்ற கதையில் கணவனால் கைவிடப்பட்ட மேரி
”ஒரு நாளைக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறான், எவளோ ஒருத்தியோட படுத்திருக்கான். அடச்சீ நீ ஒரு நாய் ஜென்மம்னு கட்டின சீலையோட கிளம்பிட்டேன்”என்று கூறுவதாக காட்சிப்படுத்தியிருப்பதும்,
’தனி வழி’ என்ற கதையில் திருமணம் ஆன சீனி என்ற கதைமாந்தர் கங்கா என்பவளை ஏமாற்றும் சூழலில்,
“அவளுக்குத் தாங்கவில்லை. எதிர்பாராமல் யாரோ மரண அடி கொடுத்த மாதிரி இருந்தது. லோப்பர். இத்தனை மோசமாவா என்னை ஏமாத்தினே? அடிவயிற்றில் கனல் பற்றிற்று”
என்று குறிப்பிடுவதன் வழியும் உணரமுடிகிறது. மேலும் குடும்ப அமைப்பில் பெண் என்பவள் ஆண் வகுத்த கட்டுப்பாட்டுக்குள் தள்ளப்படுகிறாள் என்பதை, வரம்பு என்ற கதையில்,
“திருமணம் என்பது இத்தனைக் கட்டுப்பாடுகள் நிறைதாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை தனியாக வெளியில் வாசலில் செல்ல முடியாது. புர்க்கா அணியாமல் வாசல் தாண்ட முடியாது. தோழிகளுடன் உறவு நின்றது… சமையல் வேலைக்காகவே திருமணம் நடந்தது போல இருந்தது”
என்று சீமா என்ற இஸ்லாமியப் பெண்ணின் மனஓட்டத்தில் வாயிலாக வாஸந்தி இனம் காட்டியுள்ளார்.
பெண் என்பவள் ஆணின் பார்வையில் போகப் பொருளாகக் கருதப்படும் நிலையில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும், பொருளாதார நிலையில் மேம்பாடு உடைய ஆண் இது போன்ற செயலில் ஈடுபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும் அவன் தப்பித்து சமூகத்தில் நடமாடும் போக்கினை வாஸந்தி ’தீர்ப்பு’ எனும் கதையில் வெளிப்படுத்தியுள்ளார். இக்கதையில் பார்வதி என்ற சிறுமி, ராமோஜி என்பவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இறப்பதையும், ராமோஜி நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது,
“விட்டுட்டாங்க! போதுமான சாட்சி இல்லையாம். நிறைய வருஷம் ஆயிடுச்சாம்! ”
என்று பார்வதியின் தந்தை திம்மப்பா கூறுவதாகக் காட்சிப்படுத்திருப்பது ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணைச் சக உயிர் உள்ள இனம் என்று கருதாமல் அவளைச் சதைப்பிண்டமாகக் கருதி அவள் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ளும் கொடுமை நிலையினை எடுத்துரைக்கிறது. இவ்வாறு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்தியுள்ள இச்சிறுகதைத் தொகுப்பில் அவர்கள் மீட்சி பெற மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் ஆசிரியர் இனம் காட்டியுள்ளார்.
பெண்ணினத்தின் மீட்சி
பெண் தான் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து மீட்சி பெறவும், சமுதாயத்தில் தனக்கான அடையாளத்தை முன்நிறுத்தவும் அவள் கல்வி பெறுவதும், கல்வியறிவு பெற்ற பெண்கள் கல்வியறிவு இல்லாத பெண்கள் என இருதரப்பினரும் பொருளாதாரச சுயசார்பு உடையவர்களாக விளங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை ‘வேலி’ எனும் கதையில் இடம்பெறும் சுஷ்மா எனும் கதைமாந்தர் வழி வாஸந்தி வலுவாக எடுத்துரைத்துள்ளார். இக்கதையில் கட்டப்பஞ்சாயத்து முறையில் மக்களை அடிமைப்படுத்திருக்கும் ஊரில் சுஷ்மா அரசாங்க முறையில் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவள் அவ்வூரை மேம்பாடு அடையச் செய்வதோடு அங்குள்ள பெண்களை விழிப்புணர்வு அடையச் செய்கிறாள். பெண்களுக்கு எதிராக காப் பஞ்சாயத்தின் சட்ட திட்டங்கள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த,
“நம்மைன்னா இந்த வழக்கம் கட்டிப் போடுது? அடிமைபோல எதுக்காக…”
(வாஸந்தி வேலி ப:123)
“பயப்படாதீங்க யாரும் கேள்வியே கேக்காம இருந்து வழக்கமா போச்சு… ”
(ப:124)
“பெண்களைக் காவு வாங்கறது இந்த மண்ணுக்கும் புதுசில்லே….”
(ப :124)
“இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க நமக்குன்று அடையாளமே இருக்காது”
(ப:126)
“பெண்கள் பள்ளிக்கூடம் ஒண்ணு கட்டணும்”
(ப:127)
என்று சுஷ்மா என்ற கதைமாந்தர் கூற்றின் வழி ஆசிரியர் பெண்கல்வி அவனின் சுயத்தை மீட்டெடுக்கும் என்பதை வலியுறுத்துகிறார்.
“ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை ஆண்மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள்”
(க.பஞ்சாங்கம் (தொ.ஆ) மகாகவி பாரதியாரின் பெண்ணயக்கட்டுரைகள் ப.71)
எனும் பாரதியின் கூற்று வாஸந்தியின் படைப்பிற்கு வலுசேர்ப்பதற்காக அமைகின்றது.
பொருளாதார சுயசார்பு நிலையில் பெண்கள் மனதளவில் உறுதி பெறுகிறார்கள். இதனை ’வேலி’ கதையில் சுஷ்மா தன் கணவனிடம்
“பெண்கள் தையல் தைக்கிறாங்க …கையில் காசு கிடைச்சதும் அவங்க முகத்தை நீ பார்க்கணும். விளக்குக்கு ஸ்விட்சு போட்ட மாதிரி ஆயிரும்” என்று உரைப்பதும்,
‘குரல்’ கதையில் அஞ்சலை, “என் கையில் காசு இருந்தா எனக்கு பலம் இருக்கிற மாதிரி” என்பதும்,
தனி வழி கதையில் கங்கா, “ஒவ்வொரு காசுக்கும் புருஷனை இல்ல கேட்க வேண்டியிருக்கும்? அது மகாக் கேவலமாகத் தோன்றிற்று” என எண்ணுவதுமாக வாஸந்தி தான் படைத்தப் பெண் கதை மாந்தர்களின் வழி உணர்த்துகிறார்.
பெண்கள் கல்வி பெறுவதாலும், வேலைக்குச் சென்று பொருளாதார சுய சார்பு பெறுவதாலும் மட்டும் மீட்சி நிலையை எட்டி விட முடியாது. மனித சமூகம் என்பது ஆண் பெண் இரு இனங்களின் கூட்டுத்தொகுதி. ஆகவே, பெண்ணினத்தின் மீட்சிக்கு ஆண் இனத்தின் பங்களிப்பும் தேவை என்பது வாஸந்தி ‘அவர் சொல்லாமல் போனது’ எனும் கதையில் வரும் ரோகிணி எனும் சமூக சேவகியின் கணவன் சுந்தர், ‘வேலி’ கதையில் இடம் பெறும் சுஷ்மாவின் கணவர் கிருஷ்ணதாஸ், ‘வரம்பு’ கதையில் சீமாவின் சுயத்தை அவளுக்கு உணர வைக்கும் பெயர் சூட்டப்படாத ஆண் கதை மாந்தர் என பெண்கள் உயர்வுக்கு துணை நிற்கும் கதை மாந்தர்கள் வழி தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இச்சிறுகதைத் தொகுப்பின் வழி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வினையும் வெளிப்படுத்தியுள்ள வாஸந்தி வரம்பு என்ற கதையில் சீமா,
“குடும்பக் கோர்ட்டிலிருந்து திரும்பி வரும்போது அவளுக்குத் தன் சுயத்தை மீட்டுவிட்டதுபோல் இருந்தது”என்பதும்,
‘ஞானஸ்நானம் கதையில் வள்ளி, “நா கல்யாணமே செய்துக்கப் போறதில்லக்கா” என மேரியிடம் உரைப்பதும், ஆண் ஒதுக்கப்பட்ட வேண்டியவன் என்ற கருத்தாக்கம் கொண்ட தீவிரவாதப் பெண்ணியக் கோட்பாட்டைக் காட்டுகிறது. அதே சமயம், வேலி கதையில் சுஷ்மா கதைமாந்தர் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே தன் சுயத்தை அடையாளப்படுத்த முயல்வதாகக் கதையினை அமைத்திருப்பது சமதர்மப் பெண்ணியக் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய முரணான நிலைப்பாடனாது,
“மேலைநாட்டுப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தின் அடிப்படையை உருவாக்கும் கோட்பாட்டாளர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் இனம் காணப்படுகின்றனர். இந்தியப் பெண்ணியவாதிகளோ பெண்களுக்குச் சமூகத்தில் ஓர் இடம் பெற்றுத் தரப் பாடுபடும் சீர்திருத்தவாதிகளாகவும் (Reformers) அவர்களை மரபுத் தளையிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் (Social Revolutionists) காட்சியளிக்கின்றனர்”
(கி.இராசா. இந்தியப் பெண்ணியம் ., ப.3)
என்ற திறனாய்வாளர்கள் குறிப்பிடுவதற்க ஏற்ற வகையில் படைப்பாளர் வாஸந்தியினை சமூக மறுமலர்ச்சியாளராக இனம் காட்டுகிறது.
இவ்வாறு ஆண் வல்லாண்மைச் சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்ட பெண் குறித்தக் கருத்தாக்கங்கள் இன்றும் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலை மாற பெண் கல்வியறிவு பெற்று பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலைக்கு உயர்ந்தாலும் தன் சுயத்தை மீட்டு எடுப்பதன் மூலம் தான் தன் மீது திணிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை மாற்ற முடியும் என்பதையும் இத்தகைய மாற்றத்திற்கு பெண்ணினம் மட்டும் போராடினால் முழுமையான வெற்றி காணமுடியாது. பெண்களோடு ஆண்களும் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டால் மட்டுமே பெண்ணினத்தின் மீட்சி முழுமை காணமுடியும் என்பதை ‘வேலி’ சிறுகதைத் தொகுப்பின் வழி வாஸந்தி உணர்த்துவது இவ்வாய்வு கட்டுரை வழி தெளிவாகிறது.
துணை நூற்பட்டியல்
1. வேலி - வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், சென்னை-17. (முதற்பதிப்பு செப்டம்பர்’ 2015)
2. பெண்ணியம் - முனைவர் இரா. பிரேமா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-17. (மூன்றாம் பதிப்பு, ஜுலை’ 2005)
3. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - வே. ஆனைமுத்து(ப.ஆ), பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை, கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை (முதற்பதிப்பு. 15.12.2009)
4.மகாகவி பாரதியாரின் பெண்ணியக்கட்டுரைகள் - க. பஞ்சாங்கம், பாரதி அன்பர்கள், புதுச்சேரி (முதற்பதிப்பு மே’ 2000)
5. இந்தியப் பெண்ணியம் - கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி-21. (முதற்பதிப்பு ஆக. 2004)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.