தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குமுறை காலந்தோறும் அடித்தள மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. எல்லா மதங்களும் தம்மைப் பின்பற்றும் மக்களிடம் ஒடுக்கு முறையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கையாள்கின்றன. ‘எல்லோரும் சமம்’என்று இஸ்லாம் சமூகம் போதிக்கிறது. ஆனால், ஒடுக்குமுறையை தமது சொந்த மக்களின் பால் செயல்படுத்தி வருகிறது. எல்லாச் சமூகங்களும் தனக்கென ஓர் அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றன. ஆயினும், இவ்வாறான அங்கீகாரத்தை மேட்டிமை குழுக்கள் அடித்தள மக்களுக்கு அளிப்பதில்லை. ஆதிக்கச் சமூகம் தமக்குக் கீழ் அடுக்கில் வாழ்பவர்களைச் சாதியப்பாகுபாடு, பண்பாடு ஆகியவற்றின் மூலம் அதிகாரம் செய்ய முயல்கின்றன. இவ்வாறான ஒடுக்குமுறை தமிழ் பேசும் சாதிகளிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இவ்வொடுக்குமுறைக்கு எதிராக 16, 17 - ஆம் நூற்றாண்டுகளில் மதமாற்றம் தமிழகத்தில் நிகழ்ந்தது. இஸ்லாம் சமூகத்திலும், பிற சமூகங்களைப் போல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழ் பேசும் இஸ்லாம் சமயத்தவரிடையே குதிரை வளர்க்கும் ராவுத்தர்கள் மேலானவர்களாகவும் குரான் ஓதிப் பிழைக்கும் லெப்பைகள் கீழானவர்களாகவும் படிநிலைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உண்பவர்களை உயர்வு, தாழ்வு என்னும் அடிப்படைகளில் இஸ்லாம் சமூகம் பார்க்கிறது. இதுகுறித்து அம்பேத்கர் தமது எழுத்துக்களில் பேசியிருக்கிறார். பண்பாடு, பழக்க வழக்கம், கருத்து நிலை சார்ந்து அடித்தள மக்கள் தொடர்ச்சியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இச்சூழலில் பெண்கள் மிகுதியும் பாதிக்கப்படுகின்றனர். காலந்தோறும் மதம், அடிப்படைவாதத்தின் துணையுடன் பெண்களை ஒடுக்குகிறது. பெண் அடக்குமுறை, பாலியல் வன்முறை முதலியவை தமிழ் நிலப்பரப்பில் தொடர்ந்து நீடிக்கின்றன. உணவு, உடை, கல்வி ஆகியவற்றில் தன்னிறைவு செய்ய முடியாத சூழல் அடித்தள இஸ்லாமியர்களிடையே சமகாலத்திலும் எதார்த்தமாக நிலவுகிறது.
இவற்றை ஒரு சிலர் சுரண்டலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.மொழி சார்ந்த ஒடுக்குமுறை மத அடிப்படைவாதிகளால் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம் என்று மொழிகளுக்குள் பிரிவினைவாதம் தொழிற்படுவதைக் கீரனூர் ஜாகிர்ராஜா தனதுபடைப்புகளில் எடுத்துக் காட்டுகிறார். ஆதிக்கச் சமூகம் பாட்டாளி வர்க்கத்தினர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியமை அடித்தள மக்களை ஒடுக்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனை மையமாக வைத்து அடித்தட்டு மக்களைத் தமது அதிகாரத்திற்குள் ஆதிக்கச் சமூகம் கொண்டு வந்தது. பிறப்பு, இறப்புச் சடங்கு முறைகள், வழிபாடு, உணவு போன்ற பண்பாடு சார்ந்து ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுவதை எடுத்துரைப்பதாக அமைகிறது.
இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்தும் சாதியக் கூறுகளுக்குப் பலியாகாமல் தப்பியதில்லை. இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல. சமத்துவத்தை வலியுறுத்துவதில் இஸ்லாமும் பௌத்தமும் போல வேறு எந்த மதத்தையும் இணை கூற முடியாது. இவ்வாறான சமத்துவத்தைப் போதிக்கும் இஸ்லாம் சமயத்தில் உருது முஸ்லிம்களைக் காட்டிலும் ராவுத்தர், லெப்பை, மரைக்காயர், ஒசாக்கள் எனப் படிநிலையில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினராகக் காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் உருது முஸ்லிம்கள் தம்மைப் படிநிலையில் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். தென்னிந்திய இஸ்லாமியர்களைக் காட்டிலும் வடஇந்தியச் சூழலில் மிக மோசமான நிலையே உள்ளது. வடமாநிலங்களில் இஸ்லாமியர்களை மூன்றுவகைப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். இதனை,
“வடமாநிலங்களில் அஷ்ரப்கள் அரபுப் பூர்வீக அடையாளத்துடன் உயர்சாதி அந்தஸ்து பெறுகின்றனர். அஜ்லபுகள் எனப்படுவோர் இந்துக்களிலிருந்து மதம் மாறிய காரணத்தால் கீழ்நிலையினர் என்று ஒதுக்கப்படுகின்றனர். அர்சால்கள் இன்னும் பல படிநிலைக்குக் கீழேப் பரிதவிக்கின்றனர். காரணம் இவர்கள் தலித்துகளாயிருந்து இஸ்லாத்துக்கு மாறியவர்கள்”
(ஹெச்.ஜி.ரசூல்,தலித் முஸ்லிம்,2010, ப.3)
என்று ஹெச். ஜி. ரசூல்குறிப்பிடுகிறார். வடமாநிலச் சமூகத்தில் நிலவும் சாதியப்படி நிலைகளை விரிவுபடுத்தியுள்ளார். இந்த அஷ்ரப்கள் நபிமுகமது மகள் பாத்திமா வழிவந்தவர்களாகவும் அரபு பூர்வீகத்தோடு இருப்பவர்களாகவும்உள்ளனர். அஜ்லபுகள் இந்து இடைநிலை சாதியிலிருந்து மதம் மாறியவர்களாகவும் விவசாயக் குடிகளாகவும் இருப்பதால் அடுத்தப் படிநிலையை அடைகிறார்கள். இறுதியாக, அர்சால்கள் தலித்துகளாக இருந்து மதம் மாறியவர்கள். இவர்கள் மிகவும் பண்பாட்டுத் தளத்தில் அடிமட்ட வேலையைச் செய்பவர்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களுக்கென்று தனிக்குடியிருப்பு, தனிமையவாடி எனும் நிலைகளில் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் நாவிதர்கள், வண்ணார்கள், துப்புரவுத்தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் படிநிலைப்படுத்தப்பட்டு நாகரீகச் சமூகத்தில் (சிவில்) அணுகப்படுகின்றனர். தமிழகத்தைக் காட்டிலும் அடித்தள இஸ்லாமியர்கள் வடமாநிலங்களில் பொருளாதார அரசியல் பங்கேற்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவ்வாறான சாதியப் படிநிலையைக் கீரனூர் ஜாகிர் ராஜா,
“சாதியம் இந்தியாவின் காற்றிலேயே உள்ளது. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு அவர்கள் மாறினாலும் அவர்களை சாதியம் விடுவதில்லை. இதனால் இந்தியாவில் இஸ்லாமியர்களும் சாதியத்தைக் கடைபிடிக்கவே செய்கின்றனர் என்று ஹட்டன் கூறியுள்ளார்”
(கீரனூர்ஜாகிர்ராஜா, சுயவிமர்சனம், 2014, ப.147)
என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், தமிழகத்தில் உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம் என்று மொழிவாயிலாகப் பிரிக்கப்படுகின்றனர். உருது பேசுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், தமிழ் பேசுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். உருது மொழியினர் அரபு பூர்வீகத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகவும் இந்தியாவை ஆண்ட மொகலாயர்களின் வழிவந்ததால் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழ் இஸ்லாமியர்களான ராவுத்தர்கள், லெப்பைகள், மரைக்காயர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகப் பார்க்கின்றனர்.
கடல் தொழில் செய்தவர்கள் மரைக்காயர்களாகவும் ராவுத்தர்கள் ஆட்சி செய்த இந்து மன்னர்களுக்குப் படைவீரர்களாகவும் விவசாயத்திலும் தோல் பதனிடுதலிலும் இருந்தனர். மதப்பணிச் செய்பவர்கள் லெப்பைகளாக இருப்பதால் இஸ்லாம் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் குறிப்பிடுகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டும் இஸ்லாமியர்கள் படிநிலைப் படுத்தப்படுகின்றனர். கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் இம்மாதிரியான அடித்தள இஸ்லாமியர்கள் உள்ளனர். மீன்காரத் தெரு தனிக் குடியிருப்புப் பகுதியாகவும், லெப்பைகள் தனியாகவும் ராவுத்தர்கள் தனியாகவும் இருக்கின்றனர். ஒசாக்கள் (நாவிதர்) மிக இழிந்த நிலையில் உள்ளனர். இச்சாதிகள் இந்து கடைநிலை மற்றும் தலித் வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள். இது மட்டுமல்லாமல் குடியிருக்கும் இடம் பேசும்மொழி வாயிலாக மேல், கீழ்படிநிலைகள் உருவாகியுள்ளன. இவர்கள் தர்கா கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் அடிப்படை இஸ்லாம் புறக்கணிக்கிறது. இதனை,
“தர்கா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அடித்தட்டு முஸ்லிம்களை இழிந்தவர்களாக, காபிர்களாக, பித்அத்துகளை மேற்கொள்பவர்களாகக் கருதுவது தௌகீது பிராமணியத்தைக் கட்டமைக்கும் வகாபிகளின் நவீன தீண்டாமைப் பார்வையாகவும் மாறியுள்ளது”
(ஹெச்.ஜி.ரசூல், தலித்முஸ்லிம், 2010, ப.10)
என்று ஹெச்.ஜி.ரசூல் பதிவு செய்கிறார். வகாபிகள் தர்கா கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களை ஒடுக்குகிறார்கள்.
கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் அடித்தளத்தில் இருக்கும் சாதியினர் ஒருவருக்கொருவர் தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இவரின் படைப்புகளில் ராவுத்தர்கள் , லெப்பைகளை அடிமைப்படுத்தவும், லெப்பைகள் மீன்காரர்களை அடிமைப்படுத்தவும், இம்மூவரும், நாவிதர்களை அடிமைப்படுத்தவும் என சங்கிலித் தொடர் போல ஒருவருக்கொருவர் அடிமை முறையை உருவாக்கிக் கொள்கின்றன. இராவுத்தர்களின் ஒடுக்குமுறை இவரின் படைப்புகளில் மிகுதியாக உள்ளது. சாதியப் பெயரால் விளித்தும் அடித்தள மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளை வைத்தும் அடிமைப்படுத்துவதை,
“ஊரில் சக்கிலியர்களைப் பறையர்களும்தான் தீட்டாகப் பார்க்கிறார்கள். கிழக்குப் பக்கம் ஒதுக்குப்புறமாய் அவர்கள் தெருவும், குடியிருப்பும், கண்ணன் டூரிங் அந்தப்பக்கம்தான் இருக்கிறது. படம் பார்க்கப் போகையில் அந்த ஜனங்களின் பிழைப்பைப் பார்க்க முடியும். எப்போதேனும் வகுப்புத்தோழன் சுந்தரனின் அம்மா வாங்சாமீ கஞ்சி குடிக்கலாம் என்பாள் எனக்குப் பாகுபாடெல்லாம் கிடையாது. எதார்த்தமாக உள்ளே போவேன். டேய் சக்கிலிச்சி வீட்டுக்குள்ள போறீயா பொறு ஒங்க அம்மாட்டச் சொல்றேன். கூடலிங்கமும் பாலனும் கையைப் பிடித்து இழுப்பார்கள். சக்கிலிச்சி என்கிற வார்த்தையை சுந்தரனின் அம்மா காதில் வாங்கிக் கொள்வாளோ என்று என் மனம் பதைக்கும்”
(கீரனூர்ஜாகிர்ராஜா, தேய்பிறைஇரவுகளின்கதைகள், 2011, பக்.132-133)
கீரனூர் ஜாகிர்ராஜா குறிப்பிடுகிறார். மேற்குத் தெருவில் வாழ்கின்ற லெவை மார்களையும் மீன்காரத் தெருவையும் ராவுத்தர்கள் புறக்கணிக்கின்றனர். மேல்த்தட்டு வர்க்கம் தங்களை உயர்ந்தவராகவும் லெவை மற்றும் மீன்காரர்களை கீழானவர்களாகவும் மையப்படுத்திக் கொண்டு அடிமைப்படுத்துகிறார்கள். இம்மக்கள் வாழ்கின்ற தெரு குண்டும் குழியுமாக அழுக்கு நிறைந்தப் பகுதியாகக் காணப்படுவதால் நாகரீகமற்ற இழிவானப்பகுதி என்று புறக்கணிக்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா பதிவுகளில் பங்களாத்தெரு, மீன்காரத்தெரு என இருவேறு எதிர்வு நிலங்களாகஉள்ளன.
மீன்காரர்கள் வாழ்விடம் சார்ந்த பகுதி மட்டுமல்லாமல் உணவு சார்ந்த முறையிலும் அடிமைப்படுத்தப் படுகிறார்கள். மாட்டிறைச்சி உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், ஆட்டிறைச்சி உண்பவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். இவை இரண்டும் உண்ணாதவர்கள் தங்களைத் தெய்வீகத்தன்மை உடையவர்களாகவும் முன் வைக்கின்றனர். இவ்வாறு உணவு உண்ணும் பழக்க வழக்கங்களிலும் சாதிமுறையை வலுவாகக் கடைப்பிடிக்கிறார்கள். இதனை,
“மாட்டுக்கறி திங்கிற லெவைப்பயல்னு சாவடியில மானங்கெடப் பேசுறானுங்க. நாம நிண்டு நாயம் பேசுனா ஒடம்பு நாறு துண்டு நாலு எட்டுத் தள்ளி நிக்கிறானுங்க”
(கீரனூர்ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை,20113, ப.14)
என்று கீரனூர் ஜாகிர்ராஜா கருத்த லெப்பையில் பதிவு செய்கிறார். இவ்வாறு உணவு முறைகளில் சாதீயம் வேரூன்றி நிற்கிறது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி என்ற மேல், கீழ் மனோபாவம் ஏற்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் குதிரை வளர்க்கும் ராவுத்தர்கள் உயர்ந்தவர்களாகவும் குரான் ஓதிப் பிழைக்கும் லெப்பைகள் கீழானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். குதிரைஅரேபிய விலங்கு. மேலும் இது நபிகளோடுதொடர்புடையது. ஆகையால், குதிரை வளர்க்கும் ராவுத்தர்கள் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இந்த மேல், கீழ் முரண்கள் இந்து பிராமணர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. இதனை,
“இந்து சாதியமைப்பின் குணங்களான மேல் கீழ் படிநிலை, தீட்டு, அகமணமுறை, பாரம்பரியத் தொழில்முறை, இந்திய முஸ்லிம்களிடமும் வெளிப்பட்டுள்ளன”
(ஹெச்.ஜி.ரசூல், தலித் முஸ்லிம்,2010, ப.23)
இவ்வாறு ஹெச். ஜி. ரசூல் குறிப்பிடுகிறார். இந்த உயர்ந்த தாழ்ந்த மனோபாவம் பிராமணியச் சமூகத்திலிருந்து வெளிப்பட்டதாகும். பிராமணர்கள் தலித் பிரிவினரை ஒடுக்குவது போல, இஸ்லாமியர்கள் தமக்குள் ஒரு பிரிவாகிய தலித் இஸ்லாமியரை ஒடுக்குகின்றனர். பூணூல் அணிந்த பிராமணர்கள் பிறப்பு அடிப்படையில் இந்தியச் சமூகத்தில் முரணை நிலைப்படுத்தியது போல இஸ்லாமியர்களும் பிறப்பின் அடிப்படையில் அரபு தூய்மை வாதத்தின் பேரில் மக்களை அடக்குகின்றனர். இவ்வாறு பிறப்பு, தொழில், உணவு போன்ற முறைகளில் இஸ்லாம் விளிம்பு நிலையினரை ஒடுக்குவது கவனிக்கத்தக்கது.
வடமாநிலங்களில் அஷ்ரப் எனும் உயர் வர்க்கத்திற்கு அஜ்லபுகள் என்ற கீழ்நிலைப் பிரிவினர் பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அஜ்லபுகள் பணிவிடை செய்யாவிட்டால் இறைவனுக்குக் கீழ்படியாதவர்களாம். கீழ்நிலையினர்க்கு அரசுப்பணி கிடையாது. அரசுப்பணியைக் கொடுத்துவிட்டால் மறுமைநாளில் அல்லாவுக்குப் பதில் கூற வேண்டும். இறைவன் பிறப்பைப் பார்ப்பதில்லை. இறைஅச்சத்தைப் பார்ப்பாராம் என்று இஸ்லாத்திற்குள் வைதீகக் கருத்து நிலையைஉருவாக்குகின்றனர். இதன்வழி அடிப்படைவாதிகள் விளிம்பு நிலையினர்க்குக் கல்வியறிவு கொடுக்கவில்லை. இழிந்த நிலையில் பிறந்தவர்களுக்கு எனக் கருதப்பட்டவர்களுக்குக் கல்வி கற்றுத் தரக்கூடாது. இதை மீறிக் கற்றுக் கொடுத்தால் தண்டிக்கப்படுவர் என அச்சுறுத்தல் செய்தது. சமூகத்தில் கீழ்நிலையினர்க்குக் கல்வி இல்லை. மேல்த்தட்டு வர்க்கத்தினர்க்குத் தொண்டுகள் மட்டுமே செய்ய வேண்டும். விளிம்பு நிலையினரின் பிறப்பு அருவருப்பானது. கடவுளுக்கு ஏற்புடையவர்கள் அல்ல. இவர்கள்அழுக்கானவர்கள், தாழ்வுணர்வு உடையவர்கள், கடவுளுக்கு விரும்பாத வேலைகளைச் செய்பவர்கள் என்று பல்வேறு முரண்களை அடித்தள இஸ்லாம் சார்ந்து கட்டமைக்கின்றனர். இத்தகு முரண்பாட்டைக் கீரனூர் ஜாகிர்ராஜா தமது எழுத்துக்களில் அடித்தள இஸ்லாமியர்களின் அடக்குமுறையைக் காட்டியுள்ளார். இவற்றில்,
“சலீமுக்கு பதிலா ஒரு பங்களாத் தெருக்காரன் சிராஜ்தீன் மாநெறந்தே, சலீம் மாதிரி அத்தினி அழகில்ல. எப்பவும் பொம்பள மாதிரி லொடலொடன்னுபேசுனான். நாங்க தந்த எலந்தப்பழம், நெல்லிக்கா, நாவப் பழத்த வாங்கிக் கடிச்சான். ஆனா வார்த்தைக்கு வார்த்த என்னிய மீங்காரி மீங்காரின்டு மானத்த வாங்குனான். மருதமுத்து ஐயா அதக் கேட்டுட்டு ஒரு நா வெள்ளிப்பிரம்பெடுத்து வெளையாண்டுட்டாரு”
(கீரனூர்ஜாகிர்ராஜா, மீன்காரத்தெரு, 2013, ப.45)
இவ்வாறு பள்ளியிலேயே சிராஜ்தீன், ஆமினாவை ‘மீங்காரி மீங்காரி’ என்று சாதிப் பெயரை அழைத்து இழிவு படுத்தினான். இச்சூழல் இன்றைய நிலையிலும் நீங்கிய பாடில்லை. ஒதுக்குப்புறத்தில் வாழக் கூடியவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று சமூக அடுக்கில் வரிசைப்படுத்துகின்றனர். மேல்த்தட்டு வர்க்கத்திடம் பொதுநலப் பண்பை சாதி கொன்று விட்டது. ஒழுக்கத்திலும் அறநெறியிலும் சாதியின் தாக்கம் புகுந்து விட்டது. இவ்வாறு சாதியைக் கூறி மேல்த்தளத்தினர் மீன்காரர்களை ஒடுக்குகின்றனர். தொழில் மற்றும் வணிகத்தில் மேம்பாடு அடைந்த ராவுத்தர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை அடிமையாகப் பார்க்கின்றனர். இவ்வாறு பிறப்பு, தொழில் பரம்பரைச்சொத்து ஆகியவற்றில் உயர்ந்தவர்களே மேட்டுக்குடிகளாகக் கருதப்படுகின்றனர்.
இறையடியார்கள் அடக்கமான தர்கா கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் காபிர்கள் என்றழைக்கப்பட்டனர். ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் இவர்களை இஸ்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மேல்த்தட்டு வர்க்கம் அடித்தள மக்களின் பண்பாட்டு வேர்களை அழிக்கத் தொடர்ந்து முனைகிறது. இவர்களின் கலாச்சார வாழ்வியல் முறைகளை இழிவுபடுத்துகிறது. இறைவனுக்கு இணை வைப்பவர்கள் என்று கூறி அடிமைப்படுத்துகிறது. மேல்த்தட்டு வர்க்கம் தர்காப் பண்பாட்டை அழிக்க வாகாபியவாதிகளுக்குத் துணை நிற்கிறது. இதனை,
“நைனா, நைனா என்று அலறிக் கொண்டே ஓடி வந்து நின்ற மோதி நூர்தீன் இரண்டல்லது மூன்று விநாடிகள் கழித்துச் சொன்னான். நைனாப்பா! கெவுர்மெண்ட் ஆடரோட வந்து ஈருசுருக்காரி தர்காவ இடிக்கிறாங்க உறைந்த கறுத்த முகங்களுடன் நைனாவும் சண்முகமும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தனர்”
(கீரனூர் ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள், 2013, ப.194)
இவ்வாறு கீரனூர் ஜாகிர்ராஜா சுட்டிக் காட்டுகிறார்.
விளிம்புநிலை மக்களின் கலாச்சார அழிவின் பின்னணியில் அரசதிகாரமும் துணை நிற்கிறது. விளிம்பு நிலையினரின் பண்பாட்டு விழுமியங்களை அடிப்படைவாதிகளால் கீழ்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இஸ்லாமியர்களின் மார்க்கக் கொள்கை இறைவனை வணங்குவது. ஆனால், இவர்கள் வேறுபட்ட புதியதோர் முறைமையைப் பின்பற்றிச் செயல்பட்டனர். இவ்வாறான நாட்டார் வழிபாட்டை மார்க்கவாதிகள் விரும்பவில்லை. இறைவன் மறுமை நாளில் கேள்வி கேட்பான்(கியாமத்) என்று கூறி அடித்தள மக்களை மிகுந்த அச்சுறுத்தலிலே வைத்திருந்தது. இறை வழிபாட்டுக் கொள்கையை மதிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. மார்க்கவாதிகள் இதனை மறுத்து அடித்தள மக்களை இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ள உடன்படவில்லை.
லெப்பைகள், பக்கீர்கள் போன்ற சமூகங்கள் இறைநேசர்களின் அடக்கத்தலத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இங்கு காணிக்கை நேர்தல், தலைமுடி எடுத்தல், நேர்ச்சை செய்து கொள்ளுதல் என பலவகை வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இத்தகு தர்கா பண்பாட்டை ஆதிக்க சக்திகள் அவமதிக்கின்றன. மீன் குகைவாசிகள் நாவலில் இடம் பெறும் ஈருசுருக்காரி தர்காவை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இடிக்கப்படுகிறது. நேரடியாக அடித்தள மக்களை ஒன்றும் செய்ய முடியாமல் அரசியல் சக்தியுடன் இணைந்து மேட்டிமைப்பண்பு கொண்ட இஸ்லாம் அடக்குகிறது. இந்நிலையை,
“அரசியல் செருக்குடன் கூடிய உரத்த குரல்களின் மத்தியில் இத்தகைய நலிந்த சிறிய குரல்கள் அமிழ்ந்து மறைந்தன”
(ஆ. மார்க்ஸ், பொ.வேல்சாமி, விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும், 2010. ப.40)
என்று ஆ. மார்க்ஸ், பொ.வேல்சாமி குறிப்பிடுகின்றனர். அதிகாரத்திற்கு முன்பு நைனாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. மேலாதிக்கத்தைச் சார்ந்த ராவுத்தர்கள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி விளிம்பு நிலையினரை அடக்குமுறை செய்கிறது. அவர்களின் கலாச்சாரத்தை நம்பிக்கையைத் தகர்த்தது. பார்பணியம் தலித் மக்களை தொல்காப்பிய காலத்திலிருந்து ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தனர். கல்வி முதற்கொண்டு அனைத்து உயர்த்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பிராமணர்களுக்கு உரியது என்று கூறுகிறது. இதனை,
“அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”
(ச. வே.சுப்பிரமணியன்,தொல்காப்பியம் தெளிவுரை, 1998, ப.40)
என்று ச. வே. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
கல்வி, கேள்வி அனைத்தும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களான பிராமணர்களுக்கு மட்டும் என்று கருதுகிறது. தொல்காப்பியக் காலத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமும் தமிழ் பேசும் அடிநிலை மீனவர்களை ஒடுக்கி வருகிறது. கல்வி, பொருளாதாரத்தில் மேல்த்தட்டு வர்க்கம் சிறந்து விளங்குகிறது. எவ்வித உழைப்பும் இல்லாமல் மேலாதிக்கமாகச் செயல்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாதியப் பெயரால் மீன்காரர்கள் ஒடுக்கப்படுகின்றனர். சாதியின் பெயரால் தங்களுக்கு விதித்த வேலைகளைச் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உழல்கின்றனர். இந்நிலையை,
“சாதியின் அடிப்படையில் தங்களுக்கென்று விதிக்கப்பட்ட தொழிலை இவ்வூழியக்காரர்கள் மறுக்காது செய்ய வேண்டும். ’ஊரில் விடும் பறைக்துடைவை உணவுரிமையாகக் கொண்டு சார்பில் வருந்தொழில் செய்வார்’ என்று திருநாளைப் போவார் புராணத்தில் சேக்கிழார் கூறுவது இதனைத்தான்”
(ஆ.சிவசுப்பிரமணியன், தமிழகத்தில் அடிமை முறை, 2005, ப.89)
என்று ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
சாதியின் அடிப்படையில் ஒருவன் எந்த வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கிறானோ அந்த வேலைகளை மட்டும் செய்ய வேண்டும். மீறினால் அவன் சாதி நீக்கம் செய்யப்படுவான். இது இந்திய தர்மமாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி கிடையாது. அரசுப்பணியில் இடம் கிடையாது. கீழ்மட்ட வேலைகளான செருப்புத் தைத்தல், முடிதிருத்துதல், சிறு வியாபாரம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகில் மீன்காரப் பெண்கள் ராவுத்தர் வீடுகளில் வேலைக்காரிகளாக இருத்தல் வேண்டும். இவ்வேலைக்காரப் பெண்களை ராவுத்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மீன்காரப் பெண்கள் சமையல் செய்தல், தண்ணீர் ஊற்றுதல், கடைக்குச் செல்லுதல் போன்ற அடிமட்ட வேலைகளைச் செய்தனர். ராவுத்தர்கள் மீன்காரப் பெண்களைத் தமது பாலியல் இன்பத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வார்களேத் தவிர திருமண உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அடித்தள சமூகத்தை ஆதிக்க சக்தியான ராவுத்தர்கள் தமக்கு சாதகமாக தமது சொந்த நலன்களுக்காக அல்லாவின் பெயரால் ஏமாற்றினர்.
அடித்தள மக்கள் பரம்பரைத் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனரே ஒழிய வேறு எந்த உயர்தொழிலும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நாவிதன் நாவிதனாக இருக்கவேண்டும். குரான் ஓதிப் பிழைப்பவர்கள் குரான் மட்டுமே ஓத வேண்டும். மீன்பிடிப்பவர்கள் மீன்பிடிப்பவர்களாக, சலவை செய்பவர்கள் சலவை செய்பவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான கட்டுப்பாடுகள் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மேல்த்தட்டு வர்க்கம் சாதிய வழமைகளைக் கட்டமைத்துள்ளது. அடித்தள மக்கள் ஆதிக்கவாதிகளின் வீட்டு மையத்திற்குச் செல்லக்கூடாது. சென்றால் தீட்டு என்பதன் வழி தொட்டால் தீட்டு என்ற வைதீக முறையைச் சார்ந்தவர்களுக்கு நுழைய அனுமதி கிடையாது. கிணற்றில் தண்ணீர் எடுத்தல் அடித்தட்டு இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகும். இச்சூழலை,
“நல்ல தண்ணிக்கு கொளத்துப் பள்ளிக்கூடந்தான்ல போகுணும். இங்கிட்டு பூசணிக்காலெவ கெணத்துலயோ தொண்டுவா கெணத்துலயோ நம்மள தண்ணி எடுக்க விட மாட்டீங்கறாளுங்க. ஏல நம்ம தொட்டா தீட்டாயிருமா”
(கீரனூர் ஜாகிர்ராஜா, 2013, மீன்காரத்தெரு,ப.110)
என்று ஜக்கரியாவும், கருப்பியும் பேசுவதை கீரனூர் ஜாகிர்ராஜா பதிவு செய்கிறார். குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்கு அடித்தள மக்களை அனுமதிப்பதில்லை. மீன்காரர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டன. தங்களின் வறுமையைப் போக்க எத்தொழிலையும் செய்ய வேண்டியுள்ளது. தொழில், சாதியப் பிரிவினைகள் மீன்காரர்களை ஒடுக்குவதற்கு முக்கியக் காரணியாக உள்ளது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை அனைத்துச் சமூகங்களிலும் தொடர்ந்து நடக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் சாதியப் படிநிலை இறுக்கமாக உள்ளது. இஸ்லாம் சமூகமும் தொழில் மற்றும் சாதிய அடிப்படையில் பிளவுபட்டுக் காணப்படுகின்றனர். இதனை,
“மனிதக் கழிவுகளோடு தொடர்புடைய தொழில்களைச் செய்வோர்அடிநிலைப் பிரிவாகவேக் கருதப்படுகின்றனர். அடிநிலை சாதி முஸ்லிம்கள் உயர்சாதியினரால் உரிமைகள் மறுக்கப்படுபவர்களாகவும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்”
(ஹெச்.ஜி.ரசூல், தலித் முஸ்லிம், 2010 பக்.26,27)
என்று ஹெச். ஜி. ரசூல் குறிப்பிடுகிறார்.
இஸ்லாம் சமூகத்தினர் சாதியப் படிநிலையை மீண்டும் பழமைவாதத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அதிகாரம் முழுமையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள மேல்த்தட்டு வர்க்கம் முனைப்புடன் செயல்படுகிறது. இஸ்லாம் அல்லாத பிற அடித்தள மக்களையும் அடிமைப்படுத்த ராவுத்தர் சமூகம் முயற்சி செய்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் இவ்வாறான பதிவுகளும் காணப்படுகின்றன. இஸ்லாம் பிற அடித்தளச் சமூகங்களை அடிமையாக அணுகும் முறை காணப்படுகிறது. கீரனூர் ஜாகிர்ராஜா பதிவில் நாவிதப் பெண்கள் அழகற்றவர்களாக இருக்கிறார்கள் எனும் சாதிய இழிவு கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தில் இவ்வாறான ஒடுக்குதல்கள் அடித்தள மக்கள் மீது நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு மேல்தட்டு வர்க்கத்தால் உறிஞ்சப்படுகிறது. கல்வியறிவு இல்லாதக் காரணத்தால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை. இந்நிலையை,
“இந்திய சாதிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்ட விதமும், உபரி உறிஞசப்பட்ட விதமும் சுரண்டப்படும் உழைக்கும் பிரிவினர் பிளவுபடுத்தப்படுவதையும், சமனற்ற அளவில் சுரண்டப்படுவதையும், நீடித்து நிலவச் செய்கிறது”
(கெய்ல்ஓம்லெட், வர்க்கம் - சாதி - நிலம், ப.76)
என்று கெய்ல்ஓம்லெட் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பு தொடர்ந்து சுரண்டப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்நிலை மன்னராட்சிக் காலங்களிலிருந்து தொடர்கிறது. நிலப்பிரபுத்துவவாதிகள் உழைப்பைப் பெற்றுக்கொண்டு இருவேளை உணவை மட்டும் கொடுத்து சமநிலைப்படுத்த முயற்சி செய்கின்றனர்.
கீரனூர் ஜாகிர்ராஜா காட்டும் லெப்பை சமூகத்திலும் இம்மாதிரியான சுரண்டல் நிகழ்கிறது. ராவுத்தர்கள் லெப்பை, மீன்காரர்கள், நாவிதர்கள், கபுறுகுழி வெட்டுபவர்கள் என பலஅடித்தட்டுச் சமூகங்களிடமிருந்து உழைப்பைப் பெறுகிறது. இதனை,
“பழங்குகை ஒன்றின் வாய் போலத் திறந்திருந்த அண்டாவை வெறுப்புடன் பார்த்த இவன் குவிந்திருந்த முறுக்குகளில் கை வைத்து ஒண்ணு, ரெண்டு, மூணு, என்று எண்ணி வைக்கத் தொடங்கினான். அண்டா நிறைந்த போது ஆயிரத்து எழுபது எண்ணியிருந்தான். ஒவ்வொரு அண்டாவுக்கும் எழுபது முறுக்குகள் அதிகம் போகின்றன, என்று இவன் லாப நஷ்டக் கணக்கு சொன்ன போது பாத்துமா பயந்து விட்டாள்”
(கீரனூர்ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை,2013, ப.15)
என்று கீரனூர் ஜாகிர்ராஜா கருத்த லெப்பையின் மூலம் வெளிப்படுத்துகிறார். பெண்கள் வீட்டிலிருந்தபடி முறுக்குப் புழிந்து இராவுத்தர்களுக்கு அனுப்புகின்றனர். கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தமது உழைப்பை அதிகம் கொடுக்கின்றனர். கெய்ல்ஓம்லெட் கூறுவது போல உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை கருத்த லெப்பை நாவலில் வரும் ராவுத்தர் சமூகத்தால் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு லெப்பை சமூகத்தின் வாழ்வியலைக் கீரனூர் ஜாகிர்ராஜா சித்தரித்துள்ளார். லெப்பை, மீன்காரச் சமூகத்திடம் ராவுத்தர்கள் தமது அதிகாரத்தைச் செலுத்துகின்றனர். அவர்களை அதிகாரத்திற்கு உட்படுத்துவதைக் கீரனூர் ஜாகிர்ராஜா,
“சாவக்கோழி ரெண்டு வேணும். தெருவுல பார்த்து புடிச்சு வீட்டுக்கு கொண்டு போ என்றார் மோதினாரைப் பார்த்து அஹமது கனி எஜமானின் வார்த்தைக்குக் கட்டுக்கட்டவரைப் போல தன் தலையை ஆட்டிக்கொண்டு ஓரடி நகர்ந்த மோதினார் மைதீன் பிறகு உச்சியைப் பார்த்து. “அஸருக்கு பாங்கு சொல்லனும்”என்றார். அஹமதுகனி ராவுத்தரின் கண்கள் மேலும் சிவப்பதற்கு முன் மோதினாரைக் கிளப்பிவிட வேண்டுமெனக் கண்ணாலும் கையாலும் அப்துல்காதர் ஜாடை காட்டியது பார்வைக் குறைபாடுள்ள மைதீன் மோதினாருக்குத் தெரியாமல் போனது”
(கீரனூர்ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை, 2013, ப.21)
என்று கருத்த லெப்பையில் எடுத்துரைக்கிறார். அடித்தளத்தினர் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவர்களின் குடும்பச் சூழலின் பொருட்டு கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்தனர். ராவுத்தர்கள் கடைநிலைப் பணியாளர்களைத் தமக்கு அடிமையாக இருக்க வேண்டும் என சட்டதிட்டங்களை உருவாக்கினர்.
பள்ளிவாசல்களில் முத்தவல்லிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தொழுகையை முன்னின்று நடத்தும் ஆலிம்களும் செல்வாக்குள்ளவர்களாக மதிக்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்குக் கீழ் இருக்கும் மோதினார்கள் வறுமையும் அடிமைத்தனமும் நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் மோதினார்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கற்றனர். இது பள்ளிவாசல்களில் இன்றளவும் தொடர்கிறது. தமது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மார்க்கக் கல்வி போதுமானது என்று உணர்கின்றனர். ஆனால் ராவுத்தர்கள் ஆங்கிலக் கல்வியும் கற்று ஓரளவு உலக அறிவும் பெற்றனர். மோதினார்கள் உலகியல் கல்வியைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் ராவுத்தர்கள் கவனமாக இருந்தனர்.
ராவுத்தர் சமூகம் மட்டுமல்ல பிற சமூக மக்களும் அருந்ததியர்களை இழிவாகப் பார்க்கின்றனர். தேனீர்க்கடையில் நுழைய அவர்களை அனுமதிப்பதில்லை. நாவிதன் முடிவெட்ட மறுக்கிறான். ராவுத்தர் வீடுகளில் வாசலோடு நிற்க வைக்கின்றனர். இம்மாதிரியான தீண்டாமைக் கொடுமைகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்றன. இதனைக் கீரனூர் ஜாகிர்ராஜா,
“டீக்கடையில போயி நிண்டு ஒரு டீ குடிக்க வக்க இல்லீங் மொதலாளி. நாய விடக் கேவலமாப் பாக்குறானுங்க அதும் இந்த கொலாம் மொதலாளி இருக்காங்காங்களே சுடு தண்ணியத் தூக்கி ஊத்திவிட்டுவார்ங்க. சண்மொகம் முடிவெட்ட முடியாது வெளியில போடாங்கறார்ங் டவுனுப்பக்கம்லா இப்படி இல்லங்களாங் அங்குட்டு எல்லாம் ஒண்ணுதானாங் நம்மூரு ஆக மோசமுங்”
(கீரனூர் ஜாகிர்ராஜா, செம்பருத்தி பூத்த வீடு,2013, ப.88)
என்று சாதியத் தீண்டாமையை ‘எடுப்பு’ எனும் சிறுகதையில் வரும் சுடலையின் வழி எடுத்துக் காட்டுகிறார். மீன் குகைவாசிகள் நாவலில் வரும் நைனா மீன்காரச் சமூகத்தைச் சார்ந்தவன். கீரனூரில் வாழும் மீன்காரச் சமூகமும் ராவுத்தர்களால் ஒடுக்கப்பட்ட சமூகமாகும். புறந்தள்ளப்பட்ட இனத்தைச் சார்ந்த நைனா பிற அடித்தள மக்களை இழிவாகப் பார்க்கும் மனநிலையைக் கொண்டுள்ளான். இது தீண்டாமைக்குள் தீண்டாமை. இந்நிலையை,
“ராவுத்தர், லெப்பை முஸ்லிம்களால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மீன்காரத் தெருவின் கதாபாத்திரங்களின் முக்கியக் குறியீடான நைனா, தான் சாராத பிற ஒடுக்கப்பட்ட நாசுவர், பறையர், சக்கிலியர், குறவர் சமுதாயங்களை இழிவானதாகப் பார்க்கும் அணுகுமுறையும் பாலியல் அதிகாரச் செயல்பாட்டிற்கு இப்பெண்களைப் பயன்படுத்தும் முறையும் இக்ததைப் பிரதிகளின் இரண்டாம் நிலை அர்த்த உருவாக்கத்தில் சிக்கல் நிறைந்ததாக வெளிப்பட்டுள்ளன”
(ஹெச். ஜி. ரசூல், கெண்டை மீன் குஞ்சும் குர்ஆன் தேவதையும், 2009, ப.53)
என்று ஹெச். ஜி. ரசூல் நைனாவின் மனநிலையை எடுத்ததுரைக்கிறார். மீன்காரச் சமூகம் உட்பட அனைத்துச் சமூகங்களும் தலித் சமுகத்தை இழிவாகப் பார்க்கின்றன.
மேலும் ராவுத்தர்கள் தமது வீட்டில் அருந்ததியர்கள் வெளிவேலைகளைச் செய்ய மட்டுமேஅனுமதித்தனர். அருந்ததியர்கள் அனைத்து இடங்களிலும் அவமதிக்கப்படுகிறார்கள். இதற்கு சாதி, பொருளாதாரம் காரணமாக உள்ளன. இவர்கள் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுக் காணப்படுகிறார்கள். ஆண்டை, அடிமைமுறை தமிழ்ச் சூழலில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையை,
“இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையிலான பிளவு தீண்டத்தகாதவர்களுக்கு அரசியல் அழிவைத் தருவதாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவு எசமான் அடிமை உறவாகவே இருந்து வருகிறது. இவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைச் சமூக வளர்ச்சியின் போக்கில் அகற்றக்காலம். காலமாக முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன”
(அண்ணல் அம்பேத்கர், தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?, 2012, பக்.20-21)
என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
விடுதலை என்பது தலித் சமூகத்தினருக்குக் கிடைக்காத ஒன்றாகக் கருதப்படுகிறது. மேம்பட்ட சமூகத்திற்கும் அடித்தளத்தினருக்கும் இடையிலான பிளவு ஆழமானதாக உள்ளது. தீண்டத்தகாதவர்கள் என்றுகோயிலுக்குள் அனுமதிக்காமை, உணவகங்களில் அனுமதிக்காமை போன்ற தடைகளை விதித்துள்ளனர். கல்விக்கான இடஒதுக்கீடும் தராமல்இருந்தனர். இவ்வாறு தலித் சமூகத்தினரை ராவுத்தர்கள் உட்பட மற்ற சமூகத்தினரும் இழிவாகப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
அதிகார மையம் அரசுருவாக்கத்திலிருந்து தலித் சமூகத்தினரைத் தீண்டத்தகாதவர்களாக அடையாளப்படுத்தியது. இஸ்லாம் சட்ட நூல்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றன. ஆனால் உயர்சாதி இஸ்லாமியர்கள் தமக்குக் கீழ் உள்ள லெப்பை, மீன்காரச் சமூகங்களை அந்நூல்கள் குறிப்பிடும் சட்டத்திற்கு உட்படாதவர்கள் என ஒருக் கருத்தியலைக் கட்டமைத்தனர். மேலும் இஸ்லாம் அடிப்படைவாதிகள் புனிதம், இறையாண்மை போன்ற பழங்கதைகளைப் பேசி அடித்தள இஸ்லாமியர்களை அச்சுறுத்தினர். அச்சுறுத்தல் செய்வதோடு பேசும் மொழியிலும் அடித்தள இஸ்லாமியர்களின் அடையாளங்களை நிராகரிக்கின்றனர். மீன்காரர்கள் பேசுவது நாகரீகமற்ற மொழி என்று ராவுத்தர்கள் கருதினர். ஆக இஸ்லாம் சட்ட நூல்கள் மேட்டிமையோருக்கானதாக ஆக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல் சாதியப் பெயரையும் செய்யும் தொழிலையும் குறித்து பிளவை உண்டாக்கின. மனிதனின் வாழ்வியல் தேவையைப் பொருளாதாரம் தீர்மானிக்கிறது. பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களான ராவுத்தர்கள் மீன்காரர், லெப்பை, நாவிதர் போன்ற நலிவடைந்த அடித்தளச் சமூகங்களை ஒடுக்குகின்றன. தமிழ்ச் சூழலில் சாதியம் வேரூன்றியுள்ளது. இதன் தாக்கத்தால் இஸ்லாமும் சாதியத்திற்குப் பலியாகிப் போனது. இஸ்லாத்தில் உருது முஸ்லிம்களுக்குக் கீழ் ராவுத்தர், லெப்பை, மீன்காரர், ஒசாக்கள் என படிநிலைகளுக்குள் அடங்கிய மேற்கண்ட சாதிகள் தொழில் அடிப்படையில் இழிவாகக் கருதப்படுகின்றனர். மறுபுறம் வைதீக சாதி அமைப்பு முறையை இஸ்லாம் எனும் போர்வையில் புதுப்பிப்பதாகவும் உள்ளது. ஆக, சாதிகளுக்கு மதங்கள் எப்போதும் தடையாக இருப்பதில்லை.
1. அம்பேத்கர் தமிழில்: வெ. கோவிந்தசாமி, தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை, முதற்பதிப்பு - 2012
2. ஆ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும், புலம் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு - 2010
3. ஆ.சிவசுப்பிரமணியன், தமிழகத்தில் அடிமை முறை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதற்பதிப்பு - 2005
4. கீரனூர்ஜாகிர்ராஜா, மீன்காரத்தெரு, எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, இரண்டாம்பதிப்பு-2013
5. கீரனூர்ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள்,எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, இரண்டாம்பதிப்பு-2013
6. கீரனூர்ஜாகிர்ராஜா, செம்பருத்திபூத்தவீடு, எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, முதல்பதிப்பு-2006.
7. கீரனூர்ஜாகிர்ராஜா, தேய்பிறைஇரவுகளின்கதைகள்,பாரதிபுத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு - 2011
8. கீரனூர்ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை, எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, இரண்டாம்பதிப்பு-2013
9. கீரனூர்ஜாகிர்ராஜா, சுயவிமர்சனம், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, முதல்பதிப்பு - 2014
10. கெய்ல்ஓம்லெட், வர்க்கம் - சாதி - நிலம், அலைகள் வெளியீட்டகம், சென்னை, முதற்பதிப்பு - 1995
11. ச.வே.சுப்பிரமணியன்,தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 1998
12. ரசூல். ஹெச்.ஜி, கெண்டைமீன் குஞ்சும் குர்ஆன் தேவதையும், ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை, முதற்பதிப்பு - 2009
13. ரசூல். ஹெச்.ஜி, தலித் முஸ்லிம், பாரதிபுத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு - 2010