தமிழ் இலக்கிய விமர்சனத்தில் இலக்கிய அரசியல்
முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்
முதுநிலை முனைவர் பட்ட ஆய்வாளர்,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
முன்னுரை
'தமிழ் இலக்கிய விமர்சனத்தில் இலக்கிய அரசியல்' என்பது இக்கட்டுரையின் தலைப்பாக அமைகிறது. தமிழில் இலக்கியச் சிற்றிதழ்களில் இலக்கியம் தொடர்பான விவாதங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளன. இந்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கிய அரசியலாக வடிவெடுத்துள்ளன. இலக்கியச் சிற்றிதழ்கள் மற்றும் இலக்கிய நூல்களில் இடம் பெற்ற இலக்கிய அரசியல் தொடர்பான கட்டுரைகளை இனங்கண்டு அவற்றைத் தொகுத்து, தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வளர்ச்சிக்கு அவை எந்த அளவிற்குப் பங்களித்துள்ளன என்பதை மதிப்பிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இலக்கியச் சிற்றிதழ்களில் வெளிவந்த இலக்கிய அரசியலாக இனங்காணத்தக்க கட்டுரைகள், இலக்கிய அரசியலாக இனங்காணத்தக்க நூல்கள் ஆகியன இக்கட்டுரையின் முதன்மைத் துணைமை ஆதரங்களாக அமைகின்றன.
கருதுகோள்கள்
* ஒருமித்தக் கருத்தை எட்ட இயலாத இலக்கிய விவாதமே இலக்கிய அரசியலாகிறது.
* இலக்கிய ஆளுமையின் வெளிப்பாடாகவே அந்த ஆளுமை முன்வைக்கும் கருத்து அமைகிறது.
* கருத்து, ஒரு மேதமையின் வெளிப்பாடாக ஏற்பினைப் பெறும் போது, மேதமையைத் தகர்ப்பது தவிர்க்க இயலாததாகிறது.
* பெரும்பாலும் பகுப்பாய்வு முறையே இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழில் இலக்கிய அரசியல்
இலக்கிய அரசியல், இலக்கிய விமர்சனம் சார்ந்த கலைச் சொல்லாக அமைகிறது. ‘Literary Polemics’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகராக ' இலக்கிய அரசியல்' என்னும் தமிழ்ச்சொல் விளங்குகிறது. ஒத்தக் கருத்தினை எட்டவியலாத இலக்கிய விவாதங்களை இச்சொல் குறிக்கிறது. இலக்கிய விமர்சனத்தில் தவிர்க்க இயலாத பகுதியாக அமையும் இலக்கிய அரசியல், இலக்கிய மரபின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகிறது எனச் சுட்டப்படுகிறது. தமிழ் இலக்கிய விமர்சனத்திலும் இலக்கிய அரசியல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இதன் தாக்கம் இன்னமும் மதிப்பீட்டிற்கு உள்ளாகவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இம்மதிப்பிடலுக்கு அடிப்படையாக இலக்கிய அரசியல் தொடர்பான ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட வேண்டும். இதற்காக முயற்சிகள் இதுவரை நிகழ்ந்திராததையும் குறிப்பிட வேண்டும்.
இலக்கிய விமர்சனம் ஒரு விவாதத்திற்குரிய அடிப்படைப் பண்புகளைத் தன்னுள் இயல்பாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விமர்சகனும் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறான். அவ்விவாதத்தில் தன்னுடையதான நிலைப்பாட்டினைப் பிறர் ஏற்கும்படி தூண்டுகிறான். அந்நிலைப்பாட்டினை ஏற்க மறுக்கும் மற்றொரு விமர்சகனோடு விவாதம் செய்ய முற்படும் போது இலக்கிய அரசியல் தவிர்க்க இயலாததாகிறது. விவாதத்தின் முடிவில் ஒத்த முடிவினை அடையாமல் போகலாம். ஆனால் இலக்கிய அடிப்படைகள் குறித்ததானத் தெளிவுகள் இதன் காரணமாக பிறக்கின்றன. இத்தெளிவுகளே பிற்காலத்தில் விமர்சகர்களின் பார்வையை வளப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, 'இலக்கிய விமர்சனமும் தத்துவமும்' என்னும் லூவிஸின் ஆங்கிலக் கட்டுரையைக் குறிப்பிட வேண்டும். லூவிஸ் இலக்கிய மரபின் குறிப்பிடத்தகுந்த விமர்சகர். மற்றொரு விமர்சகரான ''வெல்லக்' குடன் அவர் நிகழ்த்திய விவாதமே இக்கட்டுரை.
இக்கட்டுரையில் கோட்பாடு சார்ந்த விமர்சனப் பார்வையை வலியுறுத்திய வெல்லக் பார்வையுடன் லூவிஸ் முரண்படுகிறார். விமர்சகன் ஒரு நல்ல வாசகனாக மட்டுமே இயங்கவியலும் என்னும் தன் பார்வையை வலியுறுத்துகின்றார். விமர்சனத்தின் அடிப்படைகள் குறித்த புதிய தெளிவுகள் இவ்விவாதத்தில் பிறந்துள்ளன. ஆங்கில விமர்சனத்தின் வளர்ச்சியில் இக்கட்டுரை முக்கியப் பங்கினை வகிப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இலக்கிய விவாதம் புகழ்பெற்ற இரு ஆளுமைக்கிடையில் நிகழும் போது ஆளுமை மோதல் தவிர்க்க இயலாததாகிறது. ஆளுமை மோதல் ஆளுமைக் கொலைக்கு நேராக இட்டுச் செல்லுகிறது. விவாதத்திற்குள்ளான கருத்தினை, பலவீனங்களை சுட்டுவதோடு அக்கருத்தை வலியுறுத்தி விவாதிப்பவரின் தனிப்பட்ட பலவீனங்களும் சுட்டப்படக்கூடும். கூடவே அவதூறான மொழியைப் பயன்படுத்தும் போது, இலக்கிய அரசியல் மரபின் வளர்ச்சிக்கும் எதிரிடையானதாகிறது. தமிழில் இலக்கிய அரசியலின் முதல்பதிவை 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளலாருக்கும், ஆறுமுகநாவலருக்கும் இடையே நிகழ்ந்த அருட்பா மருட்பா விவாதத்தில் இனங்காண முடிகிறது. பலரும் இவ்விவாதத்தில் அணி சேர்ந்தனர். ஆளுமை மோதலாக வடிவெடுத்த இவ்விவாதம் நீதிமன்ற வாசலையும் சென்றடைந்தது. அவதூறான மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. இது விவாதத்தின் அடிப்படைக் காரணத்தை மழுங்கடித்தது. புதிய தெளிவுகளுக்குப் பதில் தனிமனிதர்களின் பலவீனங்களே மொழியில் பதிவுபெற்றது.
20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இலக்கிய விமர்சினம் தமிழில் முறையான வளர்ச்சியைப் பெறத் தொடங்கியது. வளர்ச்சியின் ஒரு பகுதியாக இலக்கிய அரசியலும் அவ்வப்போது தோற்றங்கொண்டுள்ளது. இந்திய அரசியலில் விடுதலைப் போர் வேகம் பெற்றது. சென்ற நூற்றாண்டின் முப்பத்துக்களில் இலக்கிய எழுச்சி இதன் உடன் நிகழ்வாக அமைந்தது. உரைநடை இலக்கியங்கள் கவனிப்பைப் பெற்றன. தமிழின் இரண்டாவது மறுமலர்ச்சியாக இது மதிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய உரைநடை இலக்கியங்கள் தமிழாக்கம் பெற்றன. தழுவலாகவும் மொழி பெயர்ப்பாகவும் நிகழ்ந்தன. இதேக் காலகட்டத்தில் தமிழில் இலக்கிய விமர்சனமும் எழுச்சி பெற்றது. தழுவல், மொழிபெயர்ப்பு இவற்றுள் ஏற்றத்தக்கது எது என்ற விவாதம் நிகழ்ந்தது. அக்காலகட்டத்தில் தலைச்சிறந்த படைப்பாளிகளாகத் திகழ்ந்த கு. ப. ராஜகோபாலனுக்கும் புதுமைப்பித்தனுக்குமிடையில் இது குறித்து விவாதம் எழுந்தது. சிட்டி. பி.எ.ஸ். ராமையா, க. நா. சுப்பிரமணியன் போன்ற சமகால விமர்சகர்களும் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். பிறமொழிப் படைப்புகளைத் தழுவலாகவோ, மொழிபெயர்ப்பாகவோத் தமிழ்ப்படுத்த இயலும். இவ்விரண்டும் அடிப்டையானச் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. மொழிபெயர்ப்பில் மூலமொழி படைப்பாளியின் ஆளுமையுடன் தழுவலை நிகழ்த்தும் படைப்பாளியின் ஆளுமையும் இணைந்து தமிழில் வெளிப்படுகிறது. வால்டர் ஸ்காட் நாவல்கள் பல தமிழில் தழுவலாகவே வெளிவந்தன. மூலமொழி படைப்பாளியின் பெயர் மறைக்கப்படும் போது, தழுவல் தழுவலை நிகழ்த்திய படைப்பாளியின் சொந்தப் படைப்பாகக் காட்சிதரவும் கூடும். ஆனால், தழுவலில் தமிழ்ச்சூழலுக்கேற்றதான மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதால் மொழிபெயர்ப்பினை விட, இது எளிதாக வாசக ஏற்பினைப் பெறக்கூடும். இவ்விரண்டில் இலக்கிய வளர்ச்சிக்கு எது உகந்தது என்ற கேள்வியே விவாதத்தின் அடிப்படையாக அமைந்தது. கு. ப. ராஜகோபாலன், சிட்டி போன்ற விமர்சகர்கள் தழுவலை நியாயப்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மற்றொரு விமர்சகரான புதுமைப்பித்தனோ மூலமொழி படைப்பாளியின் ஆளுமை மாறுதல்களுக்கு உள்ளாகாமல் தமிழில் வரவேண்டும் என்றார். தழுவல் இலக்கியத் திருட்டிற்கு வழிநடத்தும் என எச்சரிக்கை செய்தார். விவாதம் ஒத்த கருத்தினைச் சென்றடையவில்லை. ஆனால், இவ்விவாதத்தில் தழுவல் குறித்தப் புதிய தெளிவுகள் தமிழை வந்தடைந்தன. எதிர்காலத்தில் மொழிப்பெயர்ப்பே ஏற்பினைப் பெற்ற வடிவமாக அமைந்தது.
எழுபதுகளில் தமிழ் இலக்கிய மரபு தேக்கமடைந்ததாக உணரப்பட்டது. இலக்கிய வளர்ச்சி படைப்புச்சூழலைச் சார்ந்து அமைகிறது என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. பொழுதுபோக்கு எழுத்துக்கள் இலக்கியப் படைப்பு என்ற ஏற்பினைத் தமிழ்க்கல்வி வட்டத்தில் தவறுதலாகப் பெற்றது. விருதுகளையும் அவை பெற்றன. இலக்கியச் சிற்றிதழ்கள் இச்சூழல் குறித்த ஆர்வத்தைப் பதிவு செய்தன. இலக்கிய சிற்றிதழ்களில் இலக்கிய வளர்ச்சியில் சூழலில் பங்கு குறித்து வெங்கட்சாமிநாதன், தருமுசிவராம் என்னும் இரு இளம் விமர்சகர்களுக்கிடையே விவாதம் நிகழ்ந்தது. இலக்கிய வளர்ச்சியில் சூழல் முக்கியப்பங்கினை வகிப்பதாக வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டார். தமிழ் இலக்கிய மரபின் தேக்க நிலைக்குச் சூழலின் மந்த நிலையே காரணம் என வாதித்தார். பிற கலைவடிவங்களைப் புறக்கணித்துவிட்டு இலக்கியத்தில் மட்டும் எழுச்சியைத் தோற்றுவிக்க இயலாது எனக் குறிப்பிட்டார். தருமுசிவராம் எச்சூழலிலும் இலக்கியப் படைப்பாளி தோன்றக்கூடும். பலவீனமான படைப்புச்சூழலையே இதற்குக் காரணமாக மதிப்பிட்டார். சூழலில் மாறுதல் நிகழ்ந்ததால் இலக்கியத்தில் மட்டுமல்ல கலையின் எல்லா வடிவங்களிலும் அதை உணரமுடியும் என வாதித்தார். இதற்கு மாறாக, தருமுசிவராம் இலக்கியத்தின் வறட்சியைப் பிறகலைத்துறைகளின் வறட்சியோடு ஒப்பிடுதல் கூடாது என வாதித்தார். இவ்விவாதம் ஆளுமை மோதலாக உருமாறி ஆளுமைக் கொலை வரை வளர்ந்தது. அவர் மரபின் தேக்க நிலைக்குக் காரணம் கலைஞன் தோன்றாததுதான் என்றார். மேதை எச்சூழலிலும் தன் படைப்பு வல்லமையை எழுத்தில் வெளிப்படுத்தக்கூடும் என வலியுறுத்தினார். பாரதியை முன்நிறுத்தி விவாதத்தை நிகழ்த்தினார். பாரதி என்னும் மேதை தோன்ற சூழல் எவ்வகையிலும் காரணமாக அமையவில்லை. வெங்கட் சாமிநாதன் கருத்திற்கு எதிர் நிலைப்பாட்டினை தருமுசிவராம் மேற்கொண்டார். தனிமனித பலவீனங்கள் மிகைப்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில் இலக்கியச் சிற்றிதழ்கள் நசிவடைய இவ்விரு விமர்சகர்களுக்கிடையிலான மோதல் காரணமாக அமைந்தது.
யாத்ரா, கொல்லிப்பாவை, லயம் எனப் பல இதழ்களில் இவ்விவாதம் தொடர்ந்து, இறுதியில் சாதீய மோதலாக வடிவெடுத்தது. இலக்கியச் சிற்றிதழ்கள் மீதான வாசகர்களின் நம்பிக்கை இதனால் சிதறும்படியானது. பிற்காலத்தில் சிற்றிதழ்களுக்குப் பதிலாகத் தோன்றிய நடுநிலை இதழ்கள் இலக்கிய விவாதங்களை அறவே புறக்கணித்தன.
முடிவுரை
இலக்கிய அரசியல் விமர்சனத்தின் வளர்ச்சிக்கும், நசிவிற்கும் காரணமாக அமைகிறது. தமிழில் வெளிவந்த இலக்கிய அரசியல் தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து ஆராய்வதன் மூலம் விமர்சன வளர்ச்சியில் இலக்கிய அரசியலின் பங்களிப்பினை மதிப்பிட முடியும்.
துணைநூல்கள்
1. சுப்ரமணியன் க. நா. இலக்கிய அரசியல், கசடதபற, சென்னை. 1972.
2. விஜயபாஸ்கரன் வ. (தொ.ஆ), சரஸ்வதி களஞ்சியம், கலைஞன் பதிப்பகம், சென்னை. 2001.
3. வேதசகாயகுமார். எம், தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம், 2013
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.