தமிழ் - மலையாளத்தில் முக்காலங்கள் ஓர் ஆய்வு
முனைவர் நா. இளையராஜா
தமிழ்த்துறை,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் 695 581.
முன்னுரை
தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன.இவை மூல திராவிட மொழியிலிருந்து உருவானது என்றும் தமிழிலிருந்து பிரிந்த மலையாளம் வடமொழித் தாக்கத்தால் தனிமொழியாக உருப்பெற்றது என்ற இருவேறு கருத்துக்கள் ஆய்வுலகில் நிலவுகின்றன. இக்கட்டுரை நன்னூல் வியாகரணமித்ரம் கூறும் காலத்தை ஆராய்வதாக அமைகின்றது.
காலம்
"காலந்தாமேமூன்றெனமொழிப"
(தொல்.சொல்.199)
"இறப்பின்நிகழ்வின்எதிர்வின்என்றா
அம்முக்காலமும்குறிப்பொடுங்கொள்ளும் "
(தொல்.சொல்.200)
எனத் தொல்காப்பியம் காலம் மூன்றென்கிறது.
தொல்காப்பியர் காலத்தை மூன்றாகக் கூறியதைப் பின்பற்றிப் பிற்காலத்தில் தோன்றிய இலக்கண ஆசிரியர்களும் மூவகைக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.
செயலில் வரும் காலங்காட்டும் வினைவடிவம் காலம் என்கிறது வியாகரணமித்ரம்.
இந்நூல் காலத்திற்கான வரையறைகளையும் மூன்று காலத்தையும் காலம் காட்டும் விகுதிகளையும் கூறுகிறது.
நன்னூல் காலத்திற்கு வரையறைக் கூறாமல் மூன்று காலத்தையும் கால இடைநிலைகளையும் காலங்காட்டும் விகுதிகளையும் பகுதிகளையும் விளக்கிச் செல்கிறது.
நன்னூல் இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் எனk காலம் மூன்றென்கிறது.
நிகழ்காலச் சொல் மற்றைய காலங்களுக்கும் உரியதாகும் தன்மையைக் கருதி அதனை இறுதியில் வைத்தனர் என்கின்றனர் உரையாசிரியர்கள்.
இவ்வாறு வியாகரணமித்ரம் காலங்களின் வரிசை அமைப்பு முறையைக் கூறவில்லையாயினும் நன்னூலைப் போன்று பூதகாலம் (இறப்பு), பாவிகாலம் (எதிர்), வர்த்தமானகாலம் (நிகழ்) என வரிசை அமைப்பு முறையைப் பின்பற்றுகிறது.
வியாகரணமித்ரம் கால இடைநிலைகளைக் குறிப்பிடவில்லை. நன்னூல் இறந்தகால இடைநிலைகளாக த், ட், ற், இன் ஆகியன நான்கும், நிகழ்கால இடைநிலைகளாக ஆநின்று, கின்று, கிறு ஆகியன மூன்றும், எதிர்கால இடைநிலைகளாக ப், வ் ஆகியன இரண்டும் வரும் என்கிறது.
(எ.டு)
இறந்தகால இடைநிலைகள்
நடந்தான் - த்
உண்டான் - ட்
சென்றான் - ற்
உறங்கினான் - இன்
நிகழ்கால இடைநிலைகள்
நடவாநின்றான் - ஆநின்று
நடக்கின்றான் - கின்று
நடக்கிறான் - கிறு
எதிர்காலஇடைநிலைகள்
நடப்பான் - ப்
வருவான் - வ்
நன்னூல் கூறும் காலம் காட்டும் விகுதிகள்
இறப்பு |
எதிர்வு |
நிகழ்வு |
று - சென்று (சென்றேன்)
றும் - சென்றும் (சென்றோம்)
து - வந்து (வந்தேன்)
தும் - வந்தும் (வந்தோம்)
டு - உண்டு (உண்டேன்)
டும் - உண்டும் (உண்டோம்)
ப - உண்ப (உண்டார்) |
று - சேறு (செல்வேன்)
றும் - சேறும் (செல்வோம்)
து - வருது (வருவேன்)
தும் - வருதும்(வருவோம்)
கு- உண்கு (உண்பேன்)
கும் - உண்கும் (உண்போம்)
மின் - உண்மின்
ஏவல் - உண்ணீர்
வியங்கோள் - வாழ்க
இகரம்- சேறி (செல்வாய்)
மார்- உண்மார் (உண்பார்)
ப- உண்ப (உண்பார்) |
|
எதிர்மறை ஆகார விகுதி மூன்று காலங்களையும் ஏற்றுவரும்.
(எ.டு) உண்ணா
உண்டேன்’ என்பது இன்றைய மலையாள மொழியில் ‘உண்டு’ என வழங்கி வருகிறது. நன்னூலார் காலத்திலேயே ‘உண்டு’ என்பது தமிழில் வழங்கி வருவதால் மலையாளம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது என எண்ணத் தோன்றுகிறது.
இடைநிலைகள், விகுதிகள்அல்லாமல் பகுதிகளும் காலம் காட்டும் என்று கூறும் ஆசிரியர் அதற்கான விளக்கம் தரவில்லை. உரையாசிரியரே விளக்கிச் செல்கிறார். கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்யீற்றுச் சில பகுதிகள் தம் ஒற்று இரட்டி இறந்த காலம் காட்டும்.
(எ.டு) புகு- புக்கான்
போடு - போட்டான்
உறு- உற்றான்
வியாகரணமித்ரம் கூறும் காலம் காட்டும் விகுதிகள்
இறப்பு |
எதிர்வு |
நிகழ்வு |
இ - போயி
து- செய்து |
உம் - போகும் 1ம் எதிர்
ஊ- போகூ 2ம் எதிர் |
உந்நு - போகுந்நு |
இறந்த காலத்தைக் குறிப்பிடும் ‘து’ விகுதி மலையாள மொழியில் இன்று பல மாற்றங்களைப் பெற்றுள்ளது.
(எ.டு) அறியித்து (இராம. ச) - அறியிச்சு
அறிந்து (இராம. ச) - அறிஞ்ஞு
வீழ்ந்து - வீணு
வே+ந்து = வெந்து,
நோ+ந்து=நொந்து.
‘ந்து’ விகுதியை இறுதியாகக் கொண்ட இந்த இரண்டு சொற்கள் மட்டுமே மலையாள மொழிப் பயன்பாட்டில் உள்ளன என்று வியாகரணமித்ரத்தார் கூறுகிறார்.
ஒற்றுமை
1. காலம் மூன்றென நன்னூலும் வியாகரணமித்ரமும் கூறுகின்றன. அவை;
இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்பவைகளாகும்.
2. காலங்களின் வரிசை அமைப்பு (இறப்பு, எதிர்வு, நிகழ்வு) நன்னூலிலும் வியாகரணமித்ரத்திலும் ஒன்றுபோல் அமைந்து வருகின்றன.
3. இரண்டும் காலங்காட்டும் விகுதிகளைக் கூறுகின்றன.
4. கு, டு, று என்னும் குற்றியலுகரங்கள் வினையடிச் சொற்களின் ஈற்றில் வந்தால் இரட்டித்த நிலையில் அமைந்து காலத்தைக் காட்டுவதாக நன்னூலும் வியாகரணமித்ரமும் கூறுகின்றன.
(எ.டு) புகு - புக்கான் (நன்)
புகு - புக்கு (வியா.மி)
வேற்றுமை
1. நன்னூல் காலம் மூன்றெனவும் அவை இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனச் சொல்லதிகாரத்திலும் காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், பகுதிகள் என எழுத்ததிகாரத்திலும் கூறுகின்றது. வியாகரணமித்ரம் காலத்தைக் குறித்தச் செய்தியினைச் சொல்லதிகாரத்தில் மட்டுமே கூறிச் செல்வதாக அமைந்துள்ளது.
2. வியாகரணமித்ரம் எதிர்காலத்தைக் கூறுகையில் ஒன்றாம் எதிர்காலம் இரண்டாம் எதிர்காலம் என்கிறது. நன்னூல் எதிர்காலம் இரண்டு எனக் கூறாமல் மொத்தத்தில் எதிர்காலம் எனக் கூறிச் செல்கிறது.
3. வியாகரணமித்ரம் காலம் காட்டும் விகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறது. நன்னூல் காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், பகுதிகள் எனக் கூறுகின்றது. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் வினையீற்றில் காணப்படும் பால் விகுதியினாலாகும்.
4. வியாகரணமித்ரம் காலம் காட்டும் விகுதிகளைக் கூறுவதல்லாமல் விகுதிகளில் ஏற்படும் மாற்றத்தினையும் விளக்கிச் செல்கிறது. நன்னூல் காலம் காட்டும் விகுதிகளை மட்டும் விளக்கிச் செல்கிறது.
முடிவுரை
கேரளப் பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா காலத்தைக் குறித்துக் கூறுகையில் காலம் காட்டும் பிரத்யங்கள் என விளக்குகிறார். அதனை (பிரத்யங்கள்) தமிழில் மொழிபெயர்ப்பு செய்த முனைவர். இளையபெருமாள் அவர்களும், முனைவர் கி. நாச்சிமுத்து அவர்களும் விகுதிகள் என்கிறார்கள். நன்னூலார் இறந்த காலத்தின் விகுதிகளாக உ, உம் ஆகிய இரண்டையும் கூறுகிறார்.
(எ.டு) வந்து, வந்தும். இதன்பொருளாக முறையே வந்தேன், வந்தோம் என்கிறார். எனவே நன்னூலார் கூறும் கருத்தின் அடிப்படையிலேயே இவ்வாய்வில் வியாகரணமித்ரம் கூறும் பிரத்யம் என்பதற்கு இணையாக விகுதிகள் என மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நன்னூலார் குறிப்பிடும் சில சொற்கள் இன்று நடைமுறையில் இல்லை. எடுத்துக்காட்டாக, உண்ணீர், உண்மின் போன்றவைகள். தமிழில் வினையீற்றில் பால் கூறப்படுகிறது. மலையாளத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.
இவ்வேறுபாட்டின் காரணமாகவே காலத்தை விளக்கும் போது நன்னூலிலும் வியாகரணமித்ரத்திலும் மாற்றம் தோன்றுகிறது என எண்ணத் தோன்றுகிறது.
செய்யுள்களிள் காலம் காட்டும் இடைநிலைகள் வருவதாகக் கேரளப்பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக செய்து + ஏன் = செய்தேன். ஞான் செய்து என இடவிகுதியைப் பின்னரேச் சேர்த்திருக்க வேண்டும். மலையாளத்தில் இடவிகுதிகள் உரைநடையில் இன்றும் வழக்கில் இல்லை.
சேஷகிரி பிரபு கால விகுதிகளைக் கூறும் பொழுது விகுதி அடையும் மாற்றத்தினையும் கூறுகிறார்.
சான்றாக, ந்து - ஞ்ஞு (வளைந்து-வளஞ்ஞு).
தமிழ் மலையாள வேறுபாடுகளைக் குறித்துக் கேரளப் பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா கூறுவது போன்று ‘ஐகாரம்’ அகரமாகத் திரிதல் கூறப்படுகிறது.
இது தமிழிலிருந்து மலையாளம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிவுறுத்துகிறது.
வியாகரணமித்ரம் காலத்தைக் குறித்து விளக்கும் போது பழைய வடிவம் மாற்றம் பெற்ற நிலையைக் கூறுகின்றது.
இப்பழைய வடிவம் தமிழ் வடிவமாக இருப்பதால் மலையாளம் தமிழிலிருந்து பிரிந்தது என எண்ணத் தோன்றுகிறது.
சேஷகிரிபிரபு இத்தலைப்பின் கீழ் புணர்ச்சி இலக்கணத்தையும் கையாண்டுள்ளார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.