ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்புக் கதைகளில் மனிதஉள அடையாளங்கள்
(ஹாருகி முரகாமி ஜப்பான் சிறுகதைகளை முன்வைத்து)
முனைவர் சு. தங்கமாரி
உதவிப்பேராசிரியர், முதுகலைத்தமிழ்,
வி. இ. நா. செ. நா. கல்லூரி (தன்னாட்சி), விருதுநகர்.
முன்னுரை
ஆறுமுகம் பிள்ளை என்று அழைக்கப்படும் ச.ஆறுமுகம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் தன்னுடைய தனியாத இலக்கியத் தாகத்தினையும் மொழிபெயர்ப்பு அனுபவத்தினையும் மிகச் செம்மையாகப் பதிவு செய்து வருபவர். இவரது மொழிபெயர்ப்புப் பணி ‘ஜப்பானிய தேவதைக் கதைகள்’ என்னும் புத்தகத்திலிருந்து தொடங்குகின்றது. பாபநாசப்பெருமாள் என்னும் புனைப்பெயரில் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார். ‘போஸ்ட்மார்டம்’, ‘நயினார் நோன்பு’ போன்ற சிறுகதைகள் வனம் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மேலும் இரண்டு கதைகள் காளான், நந்தவனம் இதழ்களில் வந்துள்ளன. கணையாழி உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும் கவிதைகள் பல வெளிவந்துள்ளன. இவ்வாறு அறியப்பட்ட இவ்வாளுமையின் மொழிபெயர்ப்புக் கதைகளில் ஹாருகி முரகாமியின் இரண்டு கதைகளை முன்வைத்து இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.
ஹாருகி முரகாமி
12-01-1949 இல் ஜப்பானில் பிறந்த ஹாருகி முரகாமி அங்குள்ள படைப்பாளர்களுள் மிக முக்கியமான ஆளுமையாளராக அறியப்படுபவர். ஏனெனில் மொழிபெயர்ப்புப் பணியிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அவரது புனைவுகள் மற்றும் புனைவுகளற்ற படைப்புகள் அனைத்தும் திறனாய்வாளர்களின் பாராட்டுதல்களையும் குறிப்பிடத்தக்க பரிசுகளான செக் நாட்டின் ப்ரான்ஸ் காப்*கா பரிசு மற்றும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் பரிசு ஆகியவற்றோடு மற்றும் பல விருதுகளையும் பெற்றுத்தந்தன. செப்தம்பர் 2007இல் லீக் பல்கலைக்கழகமும், சூன் 2008இல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகமும் அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இதுவரை இவரது 12 நாவல்களும், 50 கதைகள் அடங்கிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரை மற்றும் புனைவுகளற்ற படைப்புகளாக 6 நூல்களும் ஜப்பானிய மொழியில் வெளியாகி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது கதைகளில் ‘Hunting Knife’ என்ற கதையும், ‘Birthday Girl’ என்ற கதையும் ஜே ரூபின் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு New Yarker இதழில் வெளியாகியதைத் தமிழில் ச. ஆறுமுகம் ‘வேட்டைக்கத்தி’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு கதைகளிலும் வெளிப்படும் மனித உள அடையாளங்களை மொழிபெயர்ப்பாளர் வெளிப்படுத்தும் தன்மை சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில் தாய்மொழியில் எழுதும் படைப்பாளனுக்கும், பிறமொழி படைப்பினைத் தாய்மொழியில் பெயர்க்கும் படைப்பாளனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு சில பெயர்ப்புகளில் பெயர்ப்பு மொழியின் படைப்பாளன் நீக்கமற நிறைந்திருப்பான். ஆனால் மூலம் சிதைக்கப்பட்டிருக்கும். ஓரோர் வேளைகளில் மூலமே இல்லாதிருக்கும். ஓவியனாகத் தன்னை நினைத்துக் கொண்டு வரையத் தெரியாத ஒருவன் யானை வரைய முற்பட்டு அது எலியான கதையாகத் தான் முடிவு பெறும். அதேவேளை, யானையைப் பற்றியே அறிந்திருக்காத ஊரில் யானையைத் தத்துருவமாகக் கொண்டு வருகின்றேன் என்று வரைந்தால் காண்பவனுக்குப் புதிதாக வேண்டுமானால் தோன்றலாம், ஆனால் படைப்பின் உயிர்ப்பினை அவனால் உணரமுடியாது. இத்தன்மையிலிருந்து மாறுபட்டுக் கூரிய தூரிகையைக் கையில் கொண்ட தனித்துவப் படைப்பாளனாக ச. ஆறுமுகம் வெளிப்படுகின்றார்.
தேர்ந்த கதை சொல்லி
தேர்ந்த கதை சொல்லியாக இருப்பது மட்டுமல்லாது, தனித்துவமாகத் தனிமனித உள்ளங்களின் காயங்களையும் தழும்புகளையும் அடையாளப்படுத்துவதில் கைதேர்ந்த கலைஞனாகக் காட்சிப்படுவது இன்னும் சிறப்பு. அப்படியான கதைகளையேத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தருகின்றார். ‘வேட்டைக்கத்தி’ என்னும் சிறுகதையில் மாற்றுத் திறனாளி ஒருவனின் உளப்போராட்டத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மிக அழகாகப் பெயர்த்திருப்பதை அறியலாம். தனிமனித நடத்தைகளைத் தனித்து இருந்து பார்த்து அதனை அழகுற வெளிப்படுத்துவது சிறப்பு. படைப்பாளனே கதையின் பாத்திரமாகக் கதை நடுவே ஊடாடி பார்வையாளனாகப் பாத்திரங்களை விளக்கியும் அவர்களின் வலியினைப் படம்பிடித்துக் காட்டியும் செல்கின்ற ஹாருகி முரகாமியின் சாயலினை அப்படியே தமிழ் வாசகனை உணரச் செய்வதில் தேர்ந்த நுட்பமான கலை இக்கதையை வாசிக்கும் வாசகனுக்குக் கிடைப்பது உறுதி.
வேட்டைக்கத்தி
இவ்வுலகில் எல்லா வகையிலும் நிறைவு பெற்றவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. மனித மனம் ஏதோவொன்றின் வழி தன் குறையைத் தேடிக்கொண்டே இருக்கின்றது. நிறையைத் தேடுகின்ற மனம் என்பதை மிக எளிதாகத் தெய்வமனம் என்று சொல்லுகின்றோம். ஆனால் தெய்வமனத்துடன் தான் அனைவரும் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்கின்றோமே அன்றி, அதனைச் செயல்படுத்த அம்மனம் இடம் கொடுப்பதில்லை. ஹாருகி முரகாமி படைப்பிலும் மனித உள அடையாளங்கள் எதையோ தேடுவதாயும், அத்தேடலில் வேட்டைக்கத்தி செங்குத்தாகக் குத்தி வழிமறிக்கின்றது என்றும் ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்பின் வழி அறிய முடிகின்றது. இக்கதையில் ‘நான்’ என்று கதை ஓட்டம் முழுவதையும் நகர்த்திச் செல்கின்ற ஒரு பாத்திரம், கதையின் அத்தனை மூலங்களிலும் தன் பரப்புகளை விரித்துச் செல்கின்றதை அறிய முடிகின்றது. அந்த ‘நான்’ என்னும் படைப்பாளன் பிரதிபலிப்பு, தன்னையும் சேர்த்து நான்கு வகையான பாத்திரக் கூறுகளைப் படையலிடுகின்றது.
·
* நான் (படைப்பாளன்)
* மாற்றுத்திறனாளி
* மாற்றுத் திறனாளியின் தாய்
* உடல் பருமனுள்ள பெண்
இங்கு வேட்டைக் கத்தியினைக் கையில் வைத்திருப்பதான அந்த மாற்றுத்திறனாளி தன் சமூக, பொருளாதாரப் பின்புலத்தினை இச்சமூகத்தின் வேட்டைக் கூறுகளைக் கொண்டதாகச் சித்திரிப்பது. மாற்றுத்திறனாளி தாய் செயல்பாடுகள் இல்லாத எந்திரத் தன்மையிலான வாழ்வியல் கூறுகளைச் சித்திரிப்பது. இவ்வுலகில் எழுந்து நின்று வேட்டைக்குச் செல்ல முடியாத ஒரு மனிதனின் உச்ச எல்லை விருப்பமாக அந்த மாற்றுத்திறனாளி கையிலே பயனில்லாப் பொருளாக இருப்பதும் சமூகத்தில் பயனில்லா ஆசைகளைக் கொண்ட மனித உள அடையாளங்களின் வெளிப்பாடு என்பதை உற்றுணர முடியும்.
‘நான்’ என்ற பாத்திரத்தில் கிடைக்கப் பெற்ற அந்த வேட்டைக் கத்தியினைக் கொண்டு வெட்டுங்கள் என்று மாற்றுத்திறனாளி சொல்லிய பொழுது அவன் வெட்டிய பொருள்களை எல்லாம் பார்க்கும் பொழுது சமூகத்தின் தீமைகளை வெட்டி வீழ்த்த விரும்பி கடைசியில் ஏமாந்து செல்லும் எளிய மனித உள அடையாளங்கள் வெளிப்படும்.
“என் கைகளில் அகப்பட்டவற்றை, தரையில் உதிர்ந்து கிடந்த தேங்காய்கள், குரும்பைகள், வெப்பமண்டலத் தாவரம் ஒன்றின் அடர்ந்து தழைத்திருந்த இலைகள், மதுக்கூட வாயிலில் வைத்திருந்த பட்டியல் பலகை என எல்லாவற்றையும் வெட்டிச் சீவினேன். கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த மரத்துண்டுகளையுங்கூட அரிந்து தள்ளினேன். வெட்டுவதற்கு எதுவும் கிடைக்காத போது மெதுவான அசைவில் தொடங்கி, பின்னர் வெளிப்படிஅயாகவே டாய்ச்சீ செய்வதைப் போல இரவுக் காற்றினூடே அமைதியாக வெட்டினேன். என் வழியின் குறுக்கே எதுவும் இல்லை. இரவு ஆழ்ந்த அமைதியில் கிடந்தது. காலம் இணக்கமாக, இசைவாக இருந்தது. முழுநிலவின் தண்ணொளி வேறு, அந்த அமைதியோடும் இசைவோடும் இணைந்து கொண்டது.
அப்படியாக நான் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்த போது, யுனைடெட் ஏர்லைன்ஸின் முன்னாள் பெண் பணியாளரான அந்தத் தடிமனான பெண்ணைத் திடீரென நினைத்தேன். அவரது வெளிறிய, உப்பிய தசை, உருவமற்று, மூடிபனியைப் போல என்னைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதை என்னால் காண முடிந்தது. அந்த மூடுபனிக்குள் தெப்பங்கள், கடல், வானம், ஹெலிகாப்டர்கள், விமானிகள் என எல்லாமே இருந்தன. நான் அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டித் தள்ள முயன்றேன். ஆனால், உருக்காட்சிக்கு அகன்று எல்லாமே என் கத்திமுனைக்கு எட்டாத தொலைவில் தள்ளி நின்றன. இது ஒரு பொய்த் தோற்றமா? அல்லது நான் தான் பொய்த் தோற்றமா? அது ஒரு விஷயமாக இல்லாமலிருக்கலாம் தான். வருகின்ற அடுத்த நாளில் நான் இங்கே இருக்கப் போவதில்லை”
இங்கு சமூகச் செயல்பாட்டில் ஏதிலியாக இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு மீஇருண்மையாளனின் கோபம் அதைச் செயல்படுத்த முயல்வதும், அது தமக்குத் தேவையற்றது என்றும் தனக்குள் போராடும் ஒரு உள அடையாளம் வெளிப்படுகின்றது.
அதேவேளையில், “சக்கர நாற்காலி இளைஞன், “சில நேரங்களில் இப்படி ஒரு கனவைக் காண்கின்றேன்” என்றான். ஏதோ, மலைக் குகைத் துளையிலிருந்து எழுவதைப் போல, அவன் குரலில் வழக்கமற்ற ஒரு எதிரொலி கேட்டது.” என்பதன் வாயிலாக மாற்றுத்திறனாளியின் மனப் போராட்டமும் இங்கே பதிவு செய்யப்படுவதைக் காண முடிகின்றது. இங்கே செயல்படாத பாத்திரமாகவும் மனப் போராட்டங்களில் தோற்றோடிய கையறு பாத்திரமாகவும் மாற்றுத்திறனாளியின் தாய் பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இருபதாவது பிறந்தநாளில் அவள்
சப்பான் தேசத்தில் மிக முக்கியமான பிறந்த நாளாகக் கருதப்படுகின்ற இருபதாவது பிறந்த நாளில் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகின்ற உள மாறுதல்களை மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்துவது இக்கதை ஆகும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளும் ஏதோ ஒரு நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருக்கப்படுமாயின் அது அவனது வாழ்நாள் பொன் எழுத்துகளில் பதிக்கப்படக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் ஏதாவது ஒரு நிகழ்வு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த நிகழும் நிகழ்வு பிறந்த நாளாய் மாறிவிடுவதாலேயே அவனது மனம் அதைனைப் பெரிதுபடுத்துகின்றது.
“உங்கள் இருபதாவது வயது பூர்த்தியான நாளில் (அல்லது இருபத்தொன்று, பல நாடுகளிலும் மிக முக்கியமான பிறந்தநாளாயிற்றே) நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்களென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய இருபதாவது பிறந்த நாளை நான் நன்கு ஞாபகம் வைத்திருக்கின்றேன். ஜனவரி, 12, 1969 டோக்கியோவில் (இப்போது அதை நம்ப முடியாவிட்டாலும்) இலேசான மேகமூட்டத்தோடு கூடிய பசுமையான ஒரு நாள். கல்லூரி விரிவுரைகள் கேட்டு முடித்தபின், உணவு விடுதியின் பரிமாறும் பணியாளனாக மேஜைகளின் முன்பு காத்து நின்றேன். நான் அன்று விடுமுறையை விரும்பினேன். ஆனால் என் பணியைச் செய்யப் பதிலிநபர் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த நாளில் கைகூடும் மகிழ்ச்சி, வரப்போகின்ற ஆண்டுகளுக்கு நல்ல சகுனமாகக் (அந்தக் காலத்தில்) கருதப்பட்ட போதிலும், அந்த நாள் முடிகிறவரையிலும் கூட எனக்கு மகிழ்ச்சியாக எதுவுமே நடக்கவில்லை. என்னைப் போலவே இந்தக் கதையின் பிறந்தநாள் மங்கையும், இருபதாவது பிறந்த நாளைப் போலன்றித் தனிமையாக விடப்படுவது போலத் தோன்றுகிறாள். கதிரவன் சாய்கின்றான்; மழை வேறு, பெய்யத் தொடங்கிவிட்டது. கிடேஸ் பாலீ சொல்வதைப் போல் “கடைசி நிமிடப் பெரும் மாற்றம்” ஏதேனும் அவளுக்காகக் காத்திருக்கிறதா?”
இப்படிக் கதையைத் தொடங்கும் முரகாமியின் தொடக்கப் பீடிகையே கதை முடிவினைச் சொல்லிவிடினும் கதை நகர்வு மனித உள அடையாளங்களின் அச்சாகச் செயல்படுவதை உணரலாம். இக்கதையில் ஏதும் இல்லாத பெண்ணிற்கும், அனைத்தும் இருந்தும் இல்லாத உணர்ச்சி உடைய வயோதிகருக்குமான மனப் போராட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பிறந்த நாளில் உண்டான நிகழ்வும், அவளது தேவையும், தேவைக்கான புரிதலைக் கொண்ட வயோதிகரின் இயலாமையும் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், அவ்வயதுடையோரின் ஏக்கம் ஆகியவைகள் இரு பெண்ணின் உரையாடல் வழி வெளிப்படுத்தப்படுகின்றன.
“அவள் காகிதத் தட்டைக் கீழே வைத்துவிட்டு, தூரத்தில் தெரியும் எதையோ கூர்ந்து நோக்குவது போல் கண்களைச் சுருக்கினாள். ‘என்ன வேண்டிக் கொண்டோம் என்பதை யாரிடமும் சொல்லக் கூடாதென்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இல்லையா?”
“நான் ஒன்றும் கிண்டிக் கிளறி அதை வெளியே இழுத்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அது உண்மையில் நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அவ்வளவுதான். அதுமட்டுமல்ல, உங்கள் வேண்டுதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படி ஒரு வேண்டுதலைச் செய்து கொண்டதற்காக பின்னால் எப்போதாவது வருத்தம் கொண்டீர்களா, இல்லையா? வேறு எதையாவது வேண்டிக் கொண்டிருக்கலாமே என்று எப்போதாவது வருத்தப்பட்டீர்களா?” என்றேன் நான்” இறுதியில் ஊகித்துச் சொல்லும் மனம் இதனை ஏற்புடையதாக வாசகனைக் கொண்டு செல்வதும் கவனத்திற்குரியது.
முடிவுரை
மேற்கண்ட இரண்டு குறும் புதினங்களின் மொழிபெயர்ப்பினைக் கவனித்தவேளையில் சில முடிபுகள் கிடைக்கப்பெறும்.
* பெயர்ப்பில் தம்முடைய முழு ஆளுமையை ச. ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளதை அறியலாம்.
* மூல படைப்பாளன் வெளிப்படுத்தும் மனித உளப் பதிவுகளைச் சாரம் மாறாமல் வெளிப்படுத்துவதையும் உணரலாம்.
* இப்படைப்புகளின் வாயிலாகப் பொருளாதார ஏற்றம் இருக்கின்ற மனிதர்களின் வெளிதெரியாத நிகழ்வுகள் ‘வேட்டைக்கத்தி’ புதினத்தில் ஊடாடுவதை அறிய முடிகின்றது.
* ஏக்கம் மட்டுமே இடைநிலையாக உள்ள பிறந்தநாளைக் கொண்டாட துடிக்கும் மனநிலைகளை ‘இருபதாவது பிறந்தநாளில் அவள்’ கதை வழியாக அறியலாம்.
துணை நூல்
1. வேட்டைக்கத்தி, ச. ஆறுமுகம்(தமிழில்), ஆதி பதிப்பகம்,15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை-606806
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.