மலையாளி மக்களின் ஒப்பாரிப் பாடல்கள்
பா. பாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 636 007.
முன்னுரை
தொடக்கக் கால மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாடுதான் பாடல்களாக உருவெடுத்து மக்களிடையே வெளிப்படுகின்றன. மனிதர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு நிகழ்வைச் சந்திக்கின்றனர். அவற்றில் நல்ல நிகழ்வு நடந்தால் மகிழ்சியாகவும், தீய நிகழ்வு நடந்தால் துயரத்தையும் மக்கள் சந்திக்கின்றனர். அக்கால கட்டத்தில் வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டை மக்கள் பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அவ்வகையில் “மனிதனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்கள்தான்” மனிதன் பிறக்கும் பொழுது தாய் மற்றும் உறவினர்களின் மூலம் தாலட்டப்படுகிறார். இறக்கும் பொழுது துயரமடைகிறார்கள். அந்தத் துயரமிக்க உணர்ச்சி வெளிப்பாட்டை ஒப்பாரிப் பாடலாக மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இலக்கியங்களிலும் ஒப்பாரிப் பாடல்கள் காணப்படுகின்றன என்பதைக் குடவாயிற் கீர்த்தனாரின் கையறு நிலைப் பாடல்கள் மூலம் அறியலாம்.
“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்த்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (புறம் - 242)
கணவரை இழந்த மனைவி வைக்கும் ஒப்பாரிப் பாடல்
மகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிறைந்த இந்தத் தம்பதியரின் வாழ்க்கையில் காலன் குறுக்கிடுகிறான். கணவரையேத் தன் உயிராகக் கொண்டு வாழ்ந்த அவள் அவரை இழக்கின்றாள். ஆற்றொணாத் துயரம் அவளை அலைக்கழிக்கின்றது. “கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்” என்பார் இளங்கோ. அது போல், இவள் துயரத்தை ஆற்றுவிக்க வழியில்லை. அவள் தன் கணவர் இறந்ததை ஜோதிட வித்துவான் கூடக் கணித்துச் சொல்லவில்லையே என்பதை ஒப்பாரிப் பாடலாகக் கூறுகிறாள்.
“வயக்காட்டு மண்ணெடுத்து
வகை வகையாய் தாளி செய்து
நான் வயதிலேயே அறுப்பேனென்று
அந்த வள்ளுவனும் சொல்லலியே”
“கட்டு புத்தகமாம் கன்னியம்மா சாதகமாம்
காசிக்கு கொண்டு போயி கண்குளிர பார்த்திருந்தா
கன்னி இடியமாட்டேன் கனந்தமல்லி வாட மாட்டேன்
கன்னியம்மா சாதகத்த கண்குளிர பார்க்காம
கன்னியிடியாரய்யா கனந்த மல்லி வாடரய்யா
மடிப்பு புத்தகமாம் மங்கையம்மா சாதகமாம்
மங்கையம்மா சாதகத்த மனங்குளிற பாக்காம
நான் மங்கா இடியாரய்யா”
சிறு வயதிலேயே கணவன் இறந்துவிடுவான் என்பதை ஜோதிட வித்துவான் மற்றும் உறவினர்கள் சொல்லலையே என்று பாடும் ஒப்பாரிப் பாடல்
“சின்ன கிளுகிளுப்பை
சிக்கெடுக்கும் கண்ணாடி - நான்
சிறுசிலே அறுப்பேனென்று
சேனை சனம் சொல்லலையே
வன்ன கிளுகிளுப்பை
வாக்கெடுக்கும் கண்ணாடி - நான்
வயசிலே அறுப்பேனென்று
வள்ளுவனும் சொல்லலியே
பத்து பைசா வாங்கி
பதக்கம் வச்சி தாளி செய்து
பத்து நாள் வாழ்வுக்கு - நான்
பந்தடியே சுத்தி வந்தேன்
அஞ்சி பவுனு வாங்கி
அரக்கு வச்சி தாளி செய்து
அஞ்சு நாள் வாழ்வுக்கு - நான்
அரண்மனையே சுத்தி வந்தேன்”
கணவன் இறந்துவிட்டால் மனைவி தன்னுடைய சகோதரனின் வீட்டிற்கு அடைக்கலம் போகையில் தன் அன்னிமார் செய்யும் கொடுமையை ஒப்பாரியாகப் பாடுதல்
“ஆத்துக்கு அந்தாண்ட ஒரு ஆரஞ்சு பழுத்திருக்கும்
அன்ன மடிகோலி நான் ஆரஞ்சு பார்க்கையிலே
அண்ணனுக்கு வந்தவ ஆரஞ்சு கொட்டென்பா
அன்ன மடியவுத்து ஆரஞ்சு கொட்டிவிட்டேன்
அந்த ஆத்தவிட்டு தாண்டிவிட்டேன்
அஞ்சாத என்பொறப்பே ஆனையை ரெண்டு தாரேன்
எனக்கு ஆனையும் ரெண்டு வேனா
எனக்கு அஞ்சி லட்சம் சீரும் வேனாம்
உன் அன்புள்ள வாய்திறந்து
அனுப்பிவிடு என் தேசம்
கொளத்துக்கு அந்தாண்ட கொய்யா பழுத்திருக்கும்
கொஞ்சி மடிகோலி கொய்யா பறிக்கயிலே
இந்த கோட்டைக்கு வந்தவ
கொய்யாவ கொட்டென்பா
கொழத்தவிட்டு தாண்டென்பா
கொஞ்சாத என் பொறப்பே
நான் குதிரையை ரெண்டு தாரேன்
குதிரையே ரெண்டு வேனா
கோடி பணமும் வேனா
குணமுள்ள வாய் திறந்து
கூப்பிட்டு விடு உன் தேசம்”
பிள்ளைகளை அன்பாக வளர்த்த தாய் இறந்து விட்டால், பிள்ளைகள் பாடும் ஒப்பாரிப் பாடல்
“இங்கு படிக்கு படி பூ பறிச்சி
பச்சைக் கிளியாய் நான் வளர்ந்தேன்
பால் கொடுத்த தாயார
பாதியிலே நான் மறந்தேன்”
“செடிக்குச் செடி பூ பறிச்சி
செல்லக் கிளியாய் நான் வளர்ந்தேன்
சீர் கொடுக்கும் தாயார
சிறுசிலே நான் மறந்தேன்”
தாத்தாவை இழந்த பேரப் பிள்ளைகள் பாடும் ஒப்பாரிப் பாடல்
“வடக்கத்து காரு வரும் தாத்தா உனக்கு
வாழ மரம் ஏற்றி வரும்
வளஞ்சி எடுத்த மால தாத்தா உனக்கு
வயதான மால இல்ல”
“தெக்கத்து காரு வரும் தாத்தா உனக்கு
தென்ன மரம் ஏற்றி வரும்
தேடி எடுத்த மால தாத்தா உனக்கு
தெடமான மால இல்ல”
“உளுத்தம் பருப்பு இருக்க தாத்தா
உள்ளூரு பேத்தி இருக்க - நான்
ஓடி வந்து மாரடிக்க
ஒரு மணி நேரம் செல்லும்
பாசி பயிறு இருக்க தாத்தா
பாப்பாத்தி நான் இருக்க
பறந்து வந்து மாரடிக்க
பத்து மணி நேரம் செல்லும்”
தன்னுடைய சகோதரியின் பிள்ளைகளை எண்ணித் தங்கை பாடும் ஒப்பாரிப் பாடல்
“மச்சி படியரிசி மருக்காம நெல்லரிசி - அக்கா
நீ மரிக்கி வடிச்சியிருந்தால்
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
நீ மாலையிட்டு பார்த்திருப்ப
குத்துப் படியரிசி குவிக்காத நெல்லரிசி - அக்கா
நீ குவிச்சி வடிச்சிருந்தா
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
நீ கூரையிட்டு பார்த்திருப்ப
நீ குவிச்சி வடிக்காம
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
கூர பட்டு பார்க்கலியே”
தன் தாயை இழந்த மகள் தன்னுடைய மாற்றாந்தாயின் கொடுமையைப் பாடும் ஒப்பாரிப் பாடல்
“வடக்கத்து வெங்காயம்
வடநாட்டு பாப்பாத்தி
வருசம் ஒருநாலு
வக தப்பி போனாலாம்
வாசலுக்கு வந்தவ
வாச இடியுதென்பா
வட புறமா சாயுதென்பா
பெத்த தாயா இருந்திருந்தா
வாச இடிஞ்சா என்ன
வட புறமா சாஞ்சா என்ன
நான் வளர்த்த மகள் வந்தாள் போதுமென்பாள்
தெக்கத்து வெங்காயம்
தென்மதுரை பாப்பாத்தி
தேசம் ஒருநாளு
தெசதப்பி வந்தாளாம்
தின்ன இடியுதென்பா
தென்புறமா சாயுதென்பா
பெத்த தாயா இருந்திருந்தா
தின்ன இடிஞ்சா என்ன
தென் புறமா சாஞ்சா என்ன
செல்வி வந்தாள் போதுமென்பாள்”
மாற்றாந்தாயின் கொடுமையைத் தாங்காமல் விசமருந்தியவர் பாடும் ஒப்பாரிப் பாடல்
“குங்கும ஒடுவந்தள
கொடுமைக்கு நானும் தின்னேன்
கூட்டம் போட்டு அழாதிங்க
கோர்ட்டுக்கு தெரிஞ்சதனா
கொடும வந்து சேர்ந்துவிடும்
சந்தன ஒடுவந்தள
சளிப்புக்கு நானும் தின்னேன்
சர்க்காருக்கு தெரிஞ்சதனா
சண்ட வந்து சேர்ந்துவிடும்”
முடிவுரை
நாட்டுப்புறப் பாடல்களில், ஒப்பாரிப் பாடல் கிராம மக்களிடையேப் பரவி பெரும் பங்காற்றுகின்றன. இருப்பினும் தற்பொழுது சேலம் மாவட்ட மூத்த தலைமுறையினர்களிடம் மட்டுமே ஒப்பாரிப் பாடல் குறைந்த அளவில் காணப்படுகிறது. இளைய தலைமுறையினர்களிடம் ஒப்பாரி பாடுவதில் நாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஒப்பாரிப் பாடல்கள் சேலம் மாவட்ட மலையாளி மக்களின் பண்பாட்டையும் கலச்சாரத்தையும் பறைசாற்றுகின்றன. ஒப்பாரிப் பாடல்களை மென்மேலும் வளர்க்க வேண்டுமெனில், முதலில் நாட்டுப்புறக் கலைஞர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு அரசும், மக்களும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும். மேலும், இளைய தலைமுறையினரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக நூல்களிலும், பாடநூல்களிலும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம்பெறுதல் வேண்டும்.
(குறிப்பு: இத்தகவல் சேலம் மாவட்ட மலையாளி மக்களிடம் மட்டுமே சேகரிக்கப்பட்டது)
கள ஆய்வு மூலம் விவரங்களை வழங்கியவர்கள்
1. நா. பொன்னுசாமி (வயது 58), தவளப்பட்டி.
2. பொ. கமலம் (வயது 53), தவளப்பட்டி.
3. நா. காசி (வயது 50), தவளப்பட்டி.
4. இரா. பாக்கியம் (வயது 48), காந்திபுரம், கூலமேடு.
5. சு. வசந்தா (எ) பாப்பா (வயது 50), தவளப்பட்டி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.