ஒழுக்கமே ஒளிவிளக்கு
க. கருப்பசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
இக்கால இலக்கியத்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21
முன்னுரை
“ஒளி” என்பதை இனம் காண்பதற்கு “இருள்” தேவைப்படுகிறது. இருளும் ஒளியும் ஒன்றிற்கொன்று முரணானவை. ஆயினும் ஓர் இடத்தில் ஒன்றிற்கொன்று உதவி செய்து தங்களை வெளிப்படுத்துகின்றன. இது வாழ்வியலுக்கும் பொருள் கற்பிக்கின்றது. ஒளியானது இறுமாப்பு அடைவதைத் தவிர்க்கவும், இருள் குறுகிப் போவதைத் தவிர்க்கவும், சமநிலையான ஓர் எதிர்பார்ப்பு இருப்பதுபோல், சமூக உயிர்களுக்கு நல்லனவும், தீயனவும் அறியப்படுவதற்கு மனிதர்களிடத்தில் ஒழுக்கம் இன்றியமையாத தேவையாகிறது. அந்த வகையில் வாழ்க்கைக்கு ஒளியாக விளங்கும் ஒழுக்கத்தின் வெளிச்சத்தை, மேன்மையை உலகிற்குப் பறை சாட்டும் விதமாக இக்கட்டுரை சுடர்விடுகிறது.
ஒழுக்கம்
‘ஒழுகு’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தலாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைப்பிடிப்பதாகும்.
ஒழுக்கம் என்பது ஒரு மரபு சார்ந்தது. ஒழுக்கம் என்பது நீதி, சமூகம், பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட சமுதாயம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு குணம். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிட அவரவர் தனது ஒழுக்கத்தின்பால் சிறந்தவராக இருத்தல் அவசியமானது.
ஒருவர் புதியதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் திறந்த மனதுடன் இருப்பாரேயானால் அதன் பெயர் தான் ஒழுக்கம். கற்றுக் கொள்வதன் அம்சமே ஒழுக்கம். நல்லொழுக்கம் என்பது நன்னெறி சார்ந்த சிறப்பு, குணவியல்பு பண்பு அல்லது எப்போதும் அதனுடைய நல்லதுவாகவே மற்றும் நல்லதுக்குள்ளேயே இருக்கக்கூடிய மதிப்பீட்டுக் குணம். ஒழுக்கமானது தன்னடக்கம், மதிநுட்பம், உளவலிமை, நீதி, நன்னெறி, அழகுணர்வுகள், கொள்கை சார்புடையவை, உள்ளார்ந்தது ஆகும். மனிதனின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் இரண்டு. ஒன்று ஒழுக்கம். மற்றொன்று உயிர். அதில் எந்த ஒன்றை இழந்தாலும் மீண்டும் பெற முடியாது.
ஒழுக்கத்திற்கு வித்து
வருங்கால தூண்களாக வரவேண்டியவர்கள் இன்றைய பிள்ளைகள். அவர்களை நன்னெறிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மட்டும், அரசாங்கம் மட்டும் உதவினால் போதாது. குழந்தைகளின் ஒழுக்கத்திற்கான முதல் இடம், அவர்களுடைய குடும்பங்கள் தான். குடும்பம் என்பது எல்லா உறவுகளும் சேர்ந்த ஒன்று. நல்லதோர் உலகத்தின் வித்து, நல்லமனம் என்பதால், உலகத்திற்கான வளர்ச்சி, ஒழுக்கம் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது. நல்ல ஒழுக்கம் என்பது முழு உலகிற்கும் பொதுவானது. உலகில் அமைதி உண்டாக வேண்டுமானால், நாட்டில் சீர்முறை நிலவ வேண்டும். வீட்டில் அமைதி நிலவ வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வாழ்க்கையில் நல்லொழுக்கம் உதிக்க வேண்டும்.
நல்லொழுக்கம் ஒவ்வொருவரிடமும் எப்படி உதிக்கும். இதை மூவரால் மட்டுமே முடியும். அவர்கள் மாதா, பிதா, குரு. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தான் ஒழுக்கத்தை கற்பிப்பதில் முதன்மையானவர். பள்ளிகளில் ஒழுக்கத்தை உருவாக்குவதில் ஆசிரியர் முக்கிய இடம் பெறுகிறார். தான் ஒரு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். மாணவர்களின் மத்தியில் ஆசிரியர்களின் நடவடிக்கை, செயல்பாடுகள் அனைத்தும் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். அறிவுசார், உளம் சார், உடல்சார் செயல்பாடுகள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம் மேம்பட உதவ வேண்டும். பள்ளிகளில் ஒழுக்கத்தை மாணவர்கள் கற்றுக் கொள்வதால், குடும்பம் மற்றும் சமுதாயத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் போற்றும் வகையில் மேம்படும்.
ஒழுக்கத்தின் பயன்
ஒழுக்கத்தின் அங்கமாக அன்பு, அருள், இரக்கம், கருணை, பண்பு, பாசம், பொறை, தியாகம், தொண்டு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர். ஒழுக்கமானது சிந்தனையில் உயர்வைக் கொடுக்கும், உறவை வளர்க்கும், அன்பைப் பெருக்கும், அமைதியைக் கொடுக்கும். ஒழுக்கம் நம்மை சாதனை புரியத் தூண்டும், மனப்பான்மையை வளர்க்கும். தங்களை உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் சொல்லானது விலை மதிப்புள்ளதாக கருதப்படும். நல்ல நிலையான புகழை நிலை நாட்டும். எல்லோருக்கும் முன் உதாரணமாக உங்களது ஒழுக்கம் திகழும். உங்களை மாற்றும் மனம் தெளிவாக இருக்கும். துணிவுடன் எதையும் செய்ய முடியும். வாழ்க்கை கடினமாக இருந்தாலும் நம்மிடம் நிம்மதியான மனநிறைவும், அமைதியும் நிலையாக நிலைத்திருக்கும். ஒழுக்கம் என்பது அகப்பொருள். ஒழுக்கத்தை உணவு, உடை, உறைவிடத்திற்கும் மேலாக வைத்து போற்றிப் பேணிக் காக்க வேண்டும்.
ஒழுகுதல் என்பது ஒழுக்கம் என்று பாராட்டப்படுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று தீர்மானிக்கப்படும். ஒருவர் தனக்கும் தன்னைச் சுற்றி வாழும் மற்றவர்களுக்கும் தீமைகள் வராமல் வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும். இப்பிறப்பு மிகப்பெரிய சிறப்பான ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். அதுபோல ஒழுக்கமும் இதற்கு நிகரான ஒன்று. ஒருமுறை ஒழுக்கம் தவறினால் நாம் பிறந்த பிறப்பிற்கு பயன் எதுவுமில்லை. இந்தப் பிறப்பை ஒழுக்கமான முறையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயனை அடைய வேண்டும்.
ஒழுக்க நிலையில் தற்சார்பான ஒழுக்கம் முதன்மையானது, அதாவது ஒரு மனிதன் தன்னைத்தான் கொண்டு வாழ்தால். தன்னுடைய ஐம்புலன்களையும் மனதில் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாதவித நோய், தீமை, துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் ஒழுக்கமில்லாத இழிவுத் தன்மையே. ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் என்றும் நலமுடன், வெற்றிகளுடன், பலருக்குப் பயன்படும்படி வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் நிறைந்திருக்கும். வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கத்தாலேயே எழுதப்படுகிறது.
ஒழுக்கத்தோடு வாழும் மனிதர்களே உலகில் வாழும், உண்மையான தெய்வங்கள். ஒழுக்கம் மிக்கோரை பணிந்து வணங்குவதில் தவறில்லை. ஒழுக்கத்திற்கு உயிரை விடுபவர்கள் சான்றோர் பெருமக்கள். ஒழுக்க சீலர்களை உலகம் போற்றி மகிழும். ஒழுக்கமே உயிரின் அமுதம்.
வாழ்க்கைக்கு ஒழுக்கம் குறித்த கருத்துக்கள்
நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல் ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தைத் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர். ஒழுக்கம் பற்றி வள்ளுவர்,
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”
(குறள்-137)
என்கிறார். இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றார். கல்வி கற்கும் மாணவச் செல்வங்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியைப் பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தைக் காலம் தோறும் தவறாது பேணிக் காத்து ஒழுக வேண்டும்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
(குறள்-131)
ஒழுக்கதைப் பேணிக்காப்பதில் வல்லவர்களாகத் தமிழ் மக்கள் திகழ்ந்தனர். அதனால் தான் ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்பட்டது. இதனையே வள்ளுவர் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்று கூறுகிறார். இவ்வொழுக்கம் தொல்காப்பியர் காலத்திலும் இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”
(களவு-1038: 1-2)
அறம், பொருள், இன்பம் என்பது ஒழுக்கநூல் பாகுபாடுகளாகும். அறத்தினால் பொருள் ஈட்டி, அப்பொருளால் இன்பத்தை அடைதல் என்பதாகும். தொல்காப்பியத்தில் கூறப்படும் அறஒழுக்கத்தால் தமிழர் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. திணைகளைக் கொண்டு தமிழர் வாழ்வு நெறிப்படுத்தப்பட்டது. திணை-ஒழுக்கம் அகத்திணை, புறத்திணை என்று பிரித்து நெறியோடு வாழ வழிவகுக்கிறது.
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம்”
(அகத்-960: 1-2)
என்று அகத்திணையின் ஒழுக்கங்களைக் கூறி ஒழுக்கத்தினை நிலைநாட்டியுள்ளனர் தமிழர்கள்.
ஆரம்ப காலக்கட்டத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரிடும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கம் என்பதை,
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்”
(குறள்-415)
என்ற குறள் மூலம் அறிய முடிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் நமக்குச் சரியான தீர்க்கமான வழியை அறம் சார்ந்து வழிநடத்திச் செல்வது நீதி நூல்கள் மட்டுமே. நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் எண்ணற்றவை. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், பழமொழி ஆகிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளைப் பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது.
பாடங்களில் படிக்கும் நீதிக் கருத்துக்களை படித்ததோடு மட்டுமல்லாது, ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்தவிதப் பேதங்களும் இல்லாமல் அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்ற வழி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர்,
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
(குறள்-391)
என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். ஒழுக்கக் கேட்டை விட இழிவானது ஒன்றில்லை. உயிரினும் மேலான ஒழுக்கத்தை விட உயர்வானது வேறெதுவுமில்லை என்பதை,
“இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை: இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு”
(பழமொழி-16, 3-4)
என்னும் பாடல் ஒழுக்கத்தை விட மேலானது எதுவுமில்லை என்று பறை சாட்டுகிறது.
முடிவுரை
குடும்பம் தழைக்க, நாடு செழிக்க, நல்ல ஒழுக்கமான கருத்தை விதைக்க வேண்டும். ஒழுக்கமற்ற களைகளைப் பிடுங்கி எறிய வேண்டும். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி நடைபோட வேண்டும். உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாதை தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை. உண்மையான ஒழுக்கம் என்பது நாம் செய்யும் செயல் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை மட்டுமே.
இன்றையக் காலகட்டத்தில் கல்விக்கோ, பணத்திற்கோ நம் சமூகம் தரும் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட ஒழுக்கத்திற்குத் தருவதில்லை என்பது கசப்பான உண்மை. பலர் ஒழுக்கம் என்றால் ஏதோ சுதந்திரக் குறைவு, மகிழ்ச்சியற்ற அல்லது புழுங்கி வாழும் வாழ்வு என்று அஞ்சுகின்றனர். ஆனால் ஒழுக்கமில்லாத கல்வியும், பணமும் இன்று எப்படியெல்லாம் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில், இதை நாம் படிப்பதும், பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு வலியுறுத்துவதும் மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வரும். ஒழுக்கமும், கல்வியும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்!
துணைநின்ற நூல்கள்
1. இரா. நெடுஞ்செழியன், திருக்குறள் நாவலர் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18, முதற்பதிப்பு - 1991, பக் - 72.
2. மேலது, பக் - 70.
3. தமிழண்ணல், தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி தெரு, மதுரை - 1, முதற் பதிப்பு - ஏப்ரல் -2008, பக் - 338.
4. மேலது, பக் - 295.
5. இரா.நெடுஞ்செழியன், திருக்குறள் நாவலர் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18, முதற்பதிப்பு - 1991, பக் - 199.
6. மேலது, பக் - 189.
7. ஞா. மாணிக்கவாசகன், பழமொழி நானூறு மூலமும் - தெளிவுரையும், பதிப்பகம், 18, 171 பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை, 600 001, முதல் பதிப்பு - டிசம்பர் 2001, பக் - 25.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.