Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ் இசைக் கருவியும் தற்கால நிலையும்

ச. யோகேஸ்வரி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை - 32.


முன்னுரை

“ஒலியல் வார் மயிர் உளரினள்
கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது நிலையினும்
பெயராது,
படாஅப் பைங்கண் பாடுபெற்று,
ஒய்வென
மறம்புகல் மழகளிறு உறங்கும்” (அகநானூறு - 102)

ஓரறிவுடைய மரம் முதலாக ஆறறிவுடைய மனிதன் மட்டுமல்லாது நம்மையெல்லாம் ஆளும் இறைவனையும் தன் வசப்படுத்தும் திறன் இசைக்கு மட்டுமே உண்டு. “கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே தமிழ்க்குடியோடு சேர்ந்து பரிணாம வளர்ச்சியை அடைந்தது இசையும், இசைக்கருவிகளும் என்றால் மறுப்பாரில்லை. இயற்கைசார் வாழ்வியலை உடைய நம் முன்னோர்கள் மூங்கிலின் வண்டு துளையில் உட்புகுந்த காற்று ஓசையோடு வந்ததனில் துளைக்கருவியினையும், இறந்து பலநாள் கழிந்த விலங்குகளின் தோலில் மற்றொரு பொருள் உராய்தலினால் எழும்பிய ஒலியினைக் கொண்டு தோற்கருவியினையும் உருவாக்கினார்கள். இவ்வகையான இசைக்கருவிகள் பல நூறாகப் பெருகி நம் பண்பாட்டினைப் பறை சாற்றியது.” ஆனால் தற்காலத்தில் மேலைநாட்டு வாத்தியங்களின் மோகத்தினாலும், பண்பாடு மாற்றத்தினாலும் பல இசைக்கருவிகளும், அதனை வாசித்த இசைக்கலைஞர்களும், உருவாக்கிய தொழிற்கலைஞர்களும் அருகி வரும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு விளிம்பு நிலையில் இருக்கும் பஞ்சமுகவாத்தியத்தினை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற பொருண்மையில் இக்கட்டுரையானது அமைகின்றது.

தமிழ் இசைக்கருவிகள்

பண்ணோடும், தாளத்தோடும் தொடர்புடையத் தமிழ் இசைக்கருவிகளை அதன் அமைப்பு அடிப்படையில் தோல் கருவிகள், காற்றுக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என நான்கு வகைகளாகப் பகுக்கின்றன. சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்த இசைக்கருவிகள் என மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில்

“விண் அதிர் இமிழ் இசை கடுப்ப,
பண் அமைத்து
திண்வார் விசித்த முழவொடு
ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளக்கு
அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக்
கோட்டொடு,
கண்இடை விடுத்த களிற்று
உயிர்த்தும்பின்,
இளிப்பயிர் இமிரும் குறும்பரம்
தும்பொடு,
விளிப்பது கவரும் தீம்குழல்
துதைஇ,
நடுவுநின்று இசைக்கும் அரிக்
குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய்
எல்லரி,
நொடிதரு பாணிய பதலையும்,
பிறவும்” (மலைபடுகடாம் : 2-11)


மேற்கண்டபாடல் இடம்பெற்றுள்ளது. இதில் “திண்வார் விசித்த முழவொடு…” என்ற வரியில் இடம்பெற்றுள்ளது. முழவு என்ற தோற்கருவியானது காலப்போக்கில் பல பரிமாணங்களுக்கு உட்பட்டு

“பேரிகை படகம் இடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவில் தடாரி
யந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க வுபாங்கி துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே”

என முப்பது வகையான தோற்கருவிகளாக வளர்ச்சி அடைந்தன. அவற்றுள் ஓரு கருவியான குடமுழா எனப்படும் பஞ்சமுக வாத்தியமானது 12 ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

பஞ்சமுகவாத்தியம் (அ) குடமுழா

பஞ்சமுக வாத்தியம் (அல்லது) குடமுழா வினை சிவபெருமான் சந்நிதியில் நந்தீசர் வாசிக்கிறார் என்பது சைவமரபு. ஐம்பொன்னால் வடிவமைக்கப்படுவது குடமுழவம் ஆகும். பெரிய உலோகக் குடத்தின் உச்சிப்பகுதியில் முத்திரைகள் சில பதிக்கப்பட்டு வைத்தாற் போன்ற தோற்றம் கொண்டதாகும். பறை போன்ற அமைப்புடைய ஒரு பெரியமுகம் நடுவிலும் அதனைச் சுற்றி நான்கு முகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒலி வேறுபாடுகளை உருவாக்க ஏதுவாக இவை ஒன்றுக்கொன்று அளவு வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். குடமுழவத்திற்கு மான் தோலே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த இசைக்கருவி அளவில் பெரியதாக இருப்பதால் நான்குபேர் சேர்ந்தாலும் தூக்க இயலாது அதனால் நான்கு சக்கர வண்டியில் வைத்து தள்ளி வருகின்றனர்.

பஞ்சமுக வாத்தியத்தின் ஐந்து முகங்களும் சிவபெருமானின் பஞ்சமுகங்களாக கருதப்படுகின்றன. நடுவில் ஈசானமும், வடக்கில் வாமதேவமும், கிழக்கில் தத்புருஷமும், தெற்கில் அகோரமும், மேற்கில் ஸத்யோஜாதமுமே இவ்வைந்து முகங்களாகும். வாசிப்பவர் நிற்குமிடம் வடக்காகவும், இடது கைப்புறம் கிழக்காகவும், பின்புறம் தெற்காகவும் வலதுகைப்புறம் மேற்காகவும் கொள்ளப்படும்.

குடமுழாவினை இசைக்கலைஞர்கள் யார் வேண்டுமானாலும் இசைக்கலாம் என்ற மரபு கிடையாது. முட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இசைக்க வேண்டும். இவர்கள் பாரசைவம் மரபினைச் சார்ந்தவர்கள் ஆகும்.


வாசிக்கும் முறை

குடமுழா இசைக்கருவியின் வாசிப்பு முறையினை

“தடாவுடல் உம்பர்த் தலைபெறு முழவம்
நான்குகந் தட்டி நடுமுகம் உரப்ப…”

எனக் கல்லாடம் நூல் விவரிக்கின்றது. மேலும் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய குடமுழா (பஞ்சமுக வாத்தியம்) என்ற நூலில்

திருவாரூரில் சோடச உபசார பூஜையின் போது ஐந்து முகங்களில் இருந்து எழுப்பும் தாளச் சொற்கள்என்ற நடையில் வாசிக்கப்பட்டதாகவும்,

“விபூதி சாத்தும் போதும், சோடச உபசாரங்களான கண்ணாடி, கொடை, சாமரம், திருவாலவட்டம் போன்ற நான்கின் போது மட்டும் தனித்தனியான தாள பேதங்களுடன் பஞ்சமுக வாத்தியத்தை ஒலிக்கச் செய்வார். “த, தீம், தொம், நம்” என்ற சொற்கட்டோடு தியாகர் முன்பு குடமுழவம் ஒலிப்பது “எல்லாம் தாங்கள் தான்” என்று அந்த ஈசனை நோக்கி குறிப்பிடும் தாளச் சொல்லாகக் குறிப்பிடுகின்றனர்” என்றும் குடமுழாவின் வாசிப்பு முறையினைப் பதிவு செய்துள்ளார். மேலும் “ஐந்து முகங்களிலிருந்தும் மொத்தத்தில் முப்பத்தைந்து தாளங்கள் பிறக்கின்றன. சான்றாக, சத்யா சோத முகமானது நாகபந்தணம், பவணம், ஏகம், ஏகசரம், திவிசரம், சஞ்சாரம், விசேபம் எனப்படும் ஏழு தாளங்களின் சொற்கட்டுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம். டநகி நரி நநகி; நந கிட கிட கிடதரி; கிட கிட கிடததொ; கிடத்தா கிடத்தா; நத்த நத்த; நகிரதிகட கிரத கிட; தோங் கி தோங்” என்று குடமுழாவினை ஐந்து விதமாகவும் ஏழு விதமாகவும் இசைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறாக பஞ்சமுக வாத்தியமானது இசைக்கப்படுகின்றது.


பஞ்சமுகவாத்தியம் உள்ள இடங்கள்

செய்வன யாவற்றையும் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய சோழர்கள் காலத்தில் அளவில் பெரியதும் அதிக எடையுடன் கூடிய முப்பதுக்கும் மேற்பட்ட பஞ்சமுக வாத்தியங்கள் கோயில்களில் இருந்துள்ளதாக எழிலவன் அவர்கள் தமிழகத்தின் மரபுக் கலைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பஞ்சமுக வாத்தியம் பற்றிய முழு குறிப்பும் இடம் பெற்றுள்ள குடமுழா நூலில் இரண்டு இடங்களில் உள்ள பஞ்சமுக வாத்தியம் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. நான் ஆற்றிய களப்பணியின் மூலமும் சிலக் கட்டுரைகளின் வாயிலாகவும் மொத்தம் 5 இடங்களில் பஞ்சமுக வாத்தியங்கள் உள்ளதனைக் கண்டுபிடித்துள்ளேன். அதனைப் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களோடு பின்வரும் செய்திகளில் காணலாம்.

திருவாரூர் தியாகராஜர் ஆலயம்

“பிறக்க முக்தி திருவாரூர்” என்று புகழப்படும் திருவாரூரில் வீற்றிருக்கும் 87 ஆவது சிவத்தலம் தியாகராஜர் கோயில் ஆகும். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களுள் பூமிக்கு உரித்தான தலம் இதுவே ஆகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பினைக் கொண்டுள்ளது என்பதனோடு பஞ்சமுக வாத்தியம் இன்றளவும் இக்கோயிலில் மட்டுமே வாசிக்கப்படுகிறது என்பதும் மிகச் சிறப்பானதாகும். 1914 ஆம் ஆண்டு பிறந்த பாரசைவர் சங்கரமூர்த்தி முட்டுக்காரர் பஞ்சமுகவாத்தியத்தினை வாசித்ததாக குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்கு முன்னதாக சங்கரமூர்த்தி முட்டுக்காரரின் தந்தையான தம்பியப்ப முட்டுக்காரரும், தாத்தா சங்கரமூர்த்தி முட்டுக்காரரும் வாசித்துள்ளனர். இப்பொழுது இவர்களின் வழியில் வந்த 'சுமதி' என்ற பெண் பஞ்சமுக வாத்தியத்தினை வாசித்து வருகின்றார். தன் பரம்பரையின் வாசிப்பு முறையினை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் இக்கலை அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தினமும் வாசித்து வருகின்றார். இது மிகவும் பாராட்டப்படக்கூடிய செயல் ஆகும்.


திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் ஆலயம்

பிறவி நோய்க்கு மருந்தாக இருக்கக் கூடியவரும், அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் வழிபடக்கூடியதுமான இக்கோயிலில் திருவாரூர் கோயிலில் இருப்பதைப் போன்றே பழமையான பஞ்சமுகவாத்தியம் உள்ளது. ஆனால் திருவாரூரில் வசிப்பதைப் போன்று இங்கு தினமும் வாசிக்கும் வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் சித்திரைமாதம் நிகழும் வசந்தநாள் உற்சவ காலத்திலும், பிறவிமருந்தீசராம் சோமாஸ்கந்தர் வசந்த மண்டபம் எழுந்தருளும் போதும் மட்டுமே இவ்வாத்தியம் வாசிக்கப்படுகின்றது. இப்பஞ்சமுக வாத்தியத்தினை 'சீகாருடையார் மல்லாண்டான் சோழகோனார்' என்பவர் தானமாக வழங்கிய செய்தி அந்த இசைக்கருவியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது டெல்லியில் நடைபெற்ற பண்பாட்டு விழாவில் இந்தக் குடமுழவம் இசைத்துக்காட்டப்பட்ட பெருமை உடையது. இன்றைக்கும் இவ்விரண்டு விழாவிலும் இக்கருவியானது வாசிக்கப்படுவது நமக்கு பெருமையளிக்கக் கூடிய செயலாகும்.


தியாகராஜ சுவாமிகள் நினைவு இல்லம்

இசை வளர்த்த மும்மூர்த்திகளுள் ஒருவர் தியாகராஜ சுவாமிகள் ஆவார். இவர் 1767 ஆம் ஆண்டு திருவாரூரில் ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராகப் பிறந்தார். சில காலங்களுக்குப் பிறகு தஞ்சாவூரில் உள்ள திருவையாற்றிற்குக் குடிப்பெயர்ந்தார். வெங்கடராமையரிடம் இசையினைக் கற்றுத் தேர்ந்தார். தனது தாய்மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கியதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப்புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறைந்த சீடர்கள் சேர்ந்தனர். 1847 ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். இவரின் இறப்பிற்குப் பிறகு திருவாரூரில் அவர் பிறந்த இல்லத்தினை அரசு அருங்காட்சியமாக மாற்றியுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான இசைக்கருவிகள் பல காட்சியமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றாக பஞ்சமுகவாத்தியம் இடம்பெற்றுள்ளது. இசைக்கும் கருவியாக அல்லாமல் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.


சென்னை அருங்காட்சியகம்

1851ஆம் ஆண்டு சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைக்கப்பட்டது அரசு அருங்காட்சியகம் ஆகும். இதில் ஆறு கட்டிடங்களும் அவற்றுள் 46 காட்சிக்கூடங்களும் அமைந்துள்ளன. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழமையான இசைக்கருவிகளும் பல பாதுகாக்கப்பட்டு வரும் சென்னை அருங்காட்சியகத்தில் ஒரு பஞ்சமுக வாத்தியம் உள்ளது. இங்கே இருக்கும் பஞ்சமுக வாத்தியம் தான் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23 முதல் 27 வரை நடைப்பெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சார்பில் நடத்தப்பட்ட இசைக்கருவி கண்காட்சியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது ஆகும்.


தொல் இசைக் களஞ்சியம்

1943 ஆம் ஆண்டு செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர். கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல பிரபலங்களின் ஆதரவுடன் தமிழ் இசையை வளர்க்கும் நோக்கத்துடன் தமிழ்இசைச்சங்கம் ஒன்று ராஜா அண்ணாமலை மன்றத்தின் இரண்டாவது மாடியில் துவங்கப்பட்டது. இதில் 80க்கும் மேலான பழமையான இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக பஞ்சமுக வாத்தியம் இடம்பெற்றுள்ளது. பிற பஞ்சமுக வாத்தியத்தை விட வண்ணங்களுடன் பூவேலைப்பாடுகளும் செய்யப்பட்டு மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றன.


நீண்ட நெடுங்கால பண்பாட்டினையும் நாகரீகத்தினையும் உடையது நம்முடைய தமிழர் இனம். நம்முடைய இசைக்கருவிகளை அடிப்படையாக வைத்து தான் பிறநாட்டாரின் பல இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்குச் சான்றாக பஞ்சமுக வாத்தியத்தையே கூறலாம். இந்த இசைக்கருவியை அடிப்படையாகக் கொண்டு தான் மேல்நாட்டு இசைக்கருவியான டிரம்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. காலங்காலமாக காக்கப்பட்டு வந்த பல இசைக்கருவிகள் தற்காலத்தில் வாசிப்புக் குறைந்தும், சில இசைக்கருவிகள் காட்சிப் பொருளாக மட்டுமே காணப்படுகின்றது. இது மிகவும் வருந்தத்தக்க நிலையே. இனி வரும் காலங்களில் இவைப்போன்ற இசைக் கருவிகளை யாராலும் உருவாக்கக் கூட முடியாது. எனவே எஞ்சி நிற்கும் தம்முடைய அடையாளங்களையாவது அழிய விடாமல் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p208.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License