கற்பிக்கும் முறையில் இலக்கண நூல்கள் கூறும் கருத்துக்கள்
முனைவர் ச. சேவியர்
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மெட்டாலா, நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
கற்றது கையளவு கல்லாதது உலகளவு - என்கிறது தமிழ் இலக்கியம். கற்ற கல்வியே வாழ்க்கையின் நெடுந்தூரமாக துணைவந்து காப்பாற்றுகிறது. அத்தகைய அழியாச் செல்வமான கல்வி ஏழைக்கும் பணக்காரருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும்.
தமிழ் மொழி உயர்கல்வியின் (Higher Education) அனைத்துப் பிரிவிலும் ‘கற்பிக்கும்மொழி’ ஆகாததால் உயர்கல்வித் துறையில் தமிழ்மொழி சிறப்பிடம் பெறாமல் உள்ளது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொள்வதெனின் துறையறிவு சார்ந்த நூல்கள் தமிழில் இருந்த பொழுது கற்பிக்க முடிவதில்லை. அதே வேளையில், தமிழைக் கற்பிக்கும் மொழியாக்க வேண்டும் என்ற எண்ணம் பல்கலைக்கழகம் வரையிலுள்ள மொழியறிஞர்களிடம் மட்டுமன்றித் துறை அறிஞர்களிடமும், ஆசிரியரிடமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தமிழை எளிமையாகக் கற்பிக்க முடியும்.
இலக்கு +அணம் - இலக்கு என்பது குறிக்கோளைக் குறிக்கும். அணம் என்றால் உயர்ந்தது என்று பொருள். எனவே மொழியின் உயர்ந்த குறிக்கோளைக் கூறுவது இலக்கணம் ஆகும். தமிழ் கற்பிக்கும் முறையில், இலக்கணங்கள், நூல்கள் கூறும் கருத்துக்கள் என்னும் தலைப்பில் கல்வி பொருள் விளக்கம், கல்வி வரையறை கற்பித்தல் ஒரு விளக்கம், கற்பித்தல் குறிக்கோள்கள், ஆசிரியர் கற்பிக்கும் முறை, உள்ளத்தில் முறைப்படுத்தல், பருவமறிந்து பயிற்றல், எளிதில் விளங்க வைக்கும் முறை, முற்றும் உணர்ந்தவனாதல், பொருளுக்குப் பொருள் கூறலாகாது, பாடங்கேட்கும் முறை, பாடப் பொருளைப் பயிற்றும் முறை, தெளிவடைதல் ஆகியவை இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றன.
கல்வி - பொருள் விளக்கம்
வளர்ந்து வரும் சமுதாயத்தில் வளர்ச்சி அடையும் மனிதனையேக் கல்வி சார்ந்துள்ளது. கல்வி என்ற சொல் பரந்த நோக்கமுடையது. அது அறிவையும் அனுபவத்தையும் அளித்து, திறமைகளையும் வளர்த்து வாழ்வினை எதிர்நோக்கும் மனிதனாக மாற்றுகின்றது.
மனிதனின் உயர்வுக்கான பல காரணிகளில் கல்வியும் ஒன்று. கல்வி இல்லையென்றால் மனிதன் சமுதாய உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாது. ‘கல்வி’ எனும் சொல் அனைவரும் அறிந்த சொல்லாக இருந்த போதிலும் அதற்குரியப் பொருளை விளக்குவது நன்மை பயக்கும். கல்வி என்ற சொல் பெரும்பாலும் கற்றல் (learning) இணைந்தே பொருள் கொள்வதை அறிய முடிகிறது.
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான (Education)என்பதற்கு, “வளர்த்தல், வெளிக்கொணர்தல், உள்ளத்தைச் சிறக்கச் செய்தல், செயல்படாது அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துதல் என்பனவற்றை முக்கியப் பொருளாகக் கொள்ளலாம்” (1) என சந்தானம் குறிப்பிடுவார்.
“தமிழ்ச் சொல்லகராதி ‘கல்வி’ எனும் சொல்லுக்குக் கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சி நூல் எனப் பொருள் புலப்படுத்துகிறது” (2) என நா. கதிரைவேற்பிள்ளை விரித்துரைப்பர்.
கல்வி வரையறை
“மாணவனின் உடல், உள்ளம் இரண்டையும் தூய்மைப்படுத்தி அழகுற முழுமையாக்குவதே கல்வியின் நோக்கம்” என்று பிளேட்டோ கூறுவார். “ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான அறிவை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்” என்பர் அரிஸ்டாட்டில். “குழந்தையின் உள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்தலே கல்வி” என்று ப்ராபெல் கூறுவார்” (3)
கற்பித்தல் ஒரு விளக்கம்
கல்வியனுபவம் நிறைந்த ஆசிரியர்களின் துணையின்றி எவராலும் தமது திறன்கள், ஆற்றல் முதலியவற்றின் மூலம் முழுப்பயனையும் பெற முடியாது. முறையான கல்வி இல்லையெனில் சமூக முன்னேற்றம் தடைப்படும். முறையாகக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பவை பள்ளிகளாகும். பள்ளி ஆசிரியர்கள் சமுதாயத்தின் சிறப்புமிக்க உறுப்பினர்களாவர். இவர்களின் துணைக் கொண்டுதான் மாணவர்கள் உலகத்தோடு பொருந்திய கல்வியைப் பெறுகின்றனர். ஆசிரியர் மாணவர்களுக்குச் சூழ்நிலைக்குத் தரும் பயிற்சியே பயிற்றல் என்று கல்வித் துறை அறிஞர்கள் குறிப்பிடுவர்.
“மக்கள் தாங்கள் அறியாதனவற்றை அறிந்து கொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் தங்களது தவறான போக்குகளை மாற்றிச் செம்மையாக நடந்து கொள்ளுமாறு கற்பிப்பதே உண்மையான கற்பிக்கும் முறையாகும்” (4) என இரசுனின் புலப்படுத்துவார்.
“மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் பாடப் புத்தகங்களின் வழியாக கற்பித்தல், உரையாடிக் கற்பித்தல், விரிவுரையாற்றல், பன்முறைப் பயிற்சி செய்து காட்டல், சோதனை அல்லது செயல்காட்சி முறை, செயல் திட்ட முறை, நடித்தல் முறை, தன்னியக்க முறை ஆகிய வழிகளைக் கடைபிடிக்கலாம்” (5) என துரைக்கண்ணு புலப்படுத்துவார்.
கற்பித்தல் குறிக்கோள்கள்
எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு, நாம் அடைய வேண்டிய இடத்தைத் தீர்மானிக்க வேண்டும். கற்றல் செயல்பாட்டில் மாணவன் அடைய வேண்டிய நடத்தையை பெற வேண்டிய திறனை நோக்கம் குறிக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு பயணித்தால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும்.
ஆசிரியர் கற்பிக்கும் முறைகள்
ஆசிரியர் என்னும் சொல்லுக்குக் கற்பிப்பவர் எனப் பொருள் கொள்வது பொருந்தும். கற்பித்தல் வழியே மாணவர்கள் உலகினைப் புரிந்து கொள்ளும் அறிவு, திறன்கள் மனப்பான்மைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் புகட்டுகின்றனர்.
மாணாக்கரது தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும் தாமே சிந்தித்துச் செயலாற்றும் திறனையும், பிறருடன் கூடி ஒத்துழைக்க செயலாற்றும் திறனையும் வளர்க்கும் வகையிலும் கற்பித்தல் முறை அமைகின்றது. “கற்பித்தல் என்பது ஒரு பாடப் பொருளைப் பற்றி விளக்குவது மட்டுமன்று. கற்பித்தல் என்னும் செயல் மாணவர் கற்ற பிறகே முடிவடைகிறது” (6) என சர்ஜான் ஆடம்ஸ் புலப்படுத்துவார்.
ஆசிரியர் முறை
கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடங்களை விரும்பிக் கேட்கும் வகையில் நடத்த வேண்டும் என்பதை பவணந்தி முனிவர்;
“ஈதல் இயல்பே இயல்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வதை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமின் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப” (7)
என்ற நூற்பாவால் புலப்படுத்துகிறார்.
“ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குச் செல்லும் பொழுது அன்றன்றைக்குரிய பாடங்களை நன்றாகத் தயார் செய்து கொண்டு செல்வதும, காலம் தவறாமல் உரிய வகுப்புகளுக்குச் செல்வதும் இன்றியமையாததாகும். மாணவர் தம் நிலையறிந்து இன்முகத்துடன் பாடம் நடத்துதல். கடை மாணாக்கர்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மீண்டும் மீண்டும் எடுத்துவைக்கும் பண்பு, தவறு செய்யும் மாணவர்களை அச்சுறுத்தாமல் அன்புடன் கடிந்து திருத்தும் பக்குவம், வகுப்புக்கு வராமல் சுற்றித் திரியும் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று கலந்து பேசி அறிவுறுத்தி நல்வழிப்படுத்தும் நற்குணம், கட்டுரைப் பயிற்சி, மொழி பெயர்ப்பு பயிற்சி முதலியவற்றை வகுப்புகளிலேயே மாணவர்களை எழுதச் செய்து அவற்றைத் திருத்திக் கொடுக்கும் திறன் ஆசிரியர்க்குத் தேவை” (8) என அ. முத்துசாமி விளக்குவார்.
உள்ளத்தில் முறைப்படுத்தல்
ஆசிரியர்கள் கற்பிக்க முற்படும் போது, உரைக்கப்படும் பொருள்களை உள்ளத்தமைத்துச் சொல்ல வேண்டும் என்கின்றார் பவணந்தி முனிவர். கல்வி உளவியல் கருத்தைக் கணக்காகச் சொல்கின்றனர். எவற்றைக் கூறலாம், எவற்றை விட்டுவிடலாம் என்பதை முதற்கண் ஆசிரியர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தன்னை எண்ணாமல், மாணாக்கனையும் ஆசிரியர் எடை போடுதல் வேண்டும்.
“ஆசிரியர்களின் வயதும், அவரின் உள்ளத்து எண்ணங்களின் தொடர்புகளும், மாணாக்கர்களது நிலைக்கு முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்பெறும். அவ்வாறே மாணாக்கர்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்டும் காணப்பெறுவர். உலகத்திலுள்ள எந்த இரு நபர்களும் ஒருவரையொருவர் நன்முறையில் புரிந்துகொண்டு செயல்படுவர் என்பது முடியாதவொன்றாகும்” (9) என்பார் ஜாக்யூஸ் பார்சன். எனவே, ஆசிரியர் மாணாக்கர்களுக்கு ஒரு கருத்தினைச் சொல்ல முற்படும்போது, தன் மனநிலையில் தோன்றிய கருத்துக்களை மாணாக்கர்களின் மனநிலைகளையறிந்து அவற்றிற்கேற்ப, சொல்ல வேண்டிய செய்திகளைச் சேர்த்து, நீக்கியும் தன் எண்ணத் திரையில் நிழலாடவிட்டு அவற்றைத் தொகுத்து ஒரே நோக்குடன் கற்பித்தல் வேண்டும்.
பருவமறிந்து பயிற்றல்
குழந்தைகளின் வயது நிலைகளுக்கேற்றவாறு, அவர்களின் பட்டறிவுக்கெட்டிய, வாழ்க்கையோடு ஒட்டிய செய்திகளாகத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்க வேண்டுவது உளவியலறிந்த ஆசிரியர்களின் கடமையாகும். பருவமறிந்து பயிற்றல் வேண்டுமென்பதை,
“கொள்வோனு ணர்வகை அறிந்தவன் கொள்வாக்
கொடுத்தல் மரபு” (10)
என நச்சினார்க்கினியர் காட்டுவார்.
ஆனால் பவணந்தி முனிவர் அதனைச் சிறிது மாற்றம் செய்துள்ளார்.
“கொள்வோன் கொள்வகைய றிந்தவ னுளங்கொளக்
கோட்டமிடல் மனத்தினூல் கொடுத்தல் என்ப” (11)
என்கிறார்.
இங்கே உணர்வகை என்பதைக் கொள்வகை எனவும், கொள்வர் என்பதை உளங்கொள எனவும் சிறுமாற்றம் செய்துள்ளார்.
எளிதில் விளங்க வைக்கும் முறை
மாணாக்கர்களுக்குத் தெரியாத புரியாத விளங்காத எளிதில் உணர்ந்து கொள்ளவியலாத அவர்களிடத்துப் பயின்று வழங்காத சொற்கள் வருமிடத்து அவற்றை எவ்வாறு விளக்கிடல் வேண்டும் என்பதை,
“பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி
னெச் சொல்லாயினும் பொருள்வேறு கிளத்தல்” (12)
என்பார் தொல்காப்பியர்.
ஒரு சொல்லிற்குப் பல பொருள்களைக் கூறுகின்ற பொழுது, மாணாக்கர்களுக்குக் குழப்பம் ஏற்படுவது இயல்பே, அதனைத் தவிர்க்க அச்சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும் சொற்களைக் கொண்டு இடத்திற்கேற்ப பொருள் கூறப் பழக்குவதல் வேண்டுமென்பதனை,
“மெய் பெறக் கிளந்த வுரிச்சொல் லெல்லா
முன்னும் பின்னும் ளருபவை நாடி
யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த
றத்த மரபிற் றோன்றுமன் பொருளே” (13)
எனத் தொல்காப்பியர் கூறுவதன் வழி அறியலாம்.
முன்னும் பின்னும் வருபவவை நாடியவழி கூறப்பட்ட பொருளேயன்றிப் பிற பொருள்கள் தோன்றுமாயினும் கூறப் பெற்றவைகளோடு சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றார். அதனை,
“கூறிய கிளவிப் பொருணிலை யல்ல
வேறுபிற தோன்றி மவற் றொடுங் கொளலே” (14)
என்பதன் வழி எடுத்துக்கூறுவார்.
பொருளுக்குப் பொருள் கூறலாகாது
பயின்று வராத சொற்களைப் பயின்று வரும் சொற்களைக் கொண்டு விளக்கினால் மாணாக்கர்களுக்கு நன்கு புரியும். பயின்ற சொல் என எண்ணி ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது அச்சொல்லை மாணாக்கர்கள் உணராத நிலையில் அவர்களுக்குத் தெரிந்த ஒரு சொல் கொண்டு விளக்க வேண்டும். விளக்கிய பின்பும் பொருள் கூற வேண்டியதில்லை. அங்ஙனம் ஆசிரியர் கூற ஆரம்பித்தால் வம்பு செய்யும் மாணாக்கர்கள் ஒவ்வொரு சொல்லிற்கும் வேண்டுமென்றே பொருள் கேட்டுக்கொண்டே இருப்பர். அதனால் வகுப்பில் ஒழுங்கின்றி அமைதிக்கு இடையூறு ஏற்படும். இத்தகைய நிலையில் பொருளுக்குப் பொருள் கூறுவதைத் தவிர்த்தல் நன்று. அதனையே தொல்காப்பியர்,
“பொருட்குப் பொருடெரியினது வரம்பின்றே” (15)
என்கிறார்.
தெரிந்ததைக் கொண்டு விளக்குதல்
கேட்போனின் மனநிலைக்கேற்பவும், அறிவினை ஏற்றுக் கொள்ளும் அறிவு நிலைக்கேற்பவும் பிறவும் உணர்ந்து உரைப்பவன் செய்திகளைக் கொடுத்தல் வேண்டும். அதனை,
“உணர்ச்சி வாயினுணர்வோர் வலித்தே” (16)
என்பதன் வழி தொல்காப்பியர் காட்டுவார்.
பாடங்கேட்கும் முறை
மாணாக்கர்கள் ஆசிரியனிடத்து அமர்ந்து எவ்வாறு பாடங்கேட்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளனர். உரிய நேரத்தில் பள்ளி சென்று ஆசான் உரைப்பதைக் கேட்க வேண்டும். ஆசானிடத்து விருப்புடன் சென்று வணங்குதல் வேண்டும். ஆசிரியனுக்கு முன்னாலும் ஆசிரியன் சென்றதன் பின்னாலும் செல்லுதல் வேண்டும். இரவு, பகல், எந்த நேரத்திலும் ஆசானை விட்டகலாமல் அன்புடன் நடந்து அவனின் குணவியல்புகளுக்கேற்றவாறு பக்குவமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஆசிரியர் குறிப்புணர்ந்து அணுக வேண்டும். அமர்க எனச் சொல்கின்ற வரையில் நின்று ஆசான் வருக எனச் சொன்னவுடன் வந்து, உரைத்ததும் அமர்தல் வேண்டும். ஏட்டுச் சுவடியை எடு எனச் சொன்னதும் அவிழ்த்துப் பாடத்தைப்படி எனச் சொல்லிய பின்னரேப் படிக்க வேண்டும்.
“ஆசிரியர் போவெனச் சொல்லிய பின்னரே வகுப்பறையை விட்டு வெளிச் செல்லுதல் வேண்டும். பசித்துண்பவனுக்கு உணவிடத்துள்ள ஆசை போல கற்க வேண்டுமென்னும் பெரு விழைவுடன் கற்க வேண்டும். ஓவியப்பாவை போல் அடக்கத்தோடு அமைதியாய் இருந்து செவியே வாயாக, நெஞ்சே கொள்ளிடமாகக் கொண்டு ஆசிரியர் பலகாலும் கூறியவற்றை மறந்துவிடாமல் உள்ளத்தின் கண் நிறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்” (17) இவற்றை கற்கும் முறைகளாக நச்சினார்க்கினியர் காட்டுவார்.
“கோடன் மரபே கூறுங்காலம்
பொழுதோடு சென்று வழிபடன் முனிவன்
குணத்தோடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்த
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்ன வார்வத் தனாகிச்
சித்திரப் பாவையி னத்தக வங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்தும்
போவெனப் போத லென்மார் புலவர” (18)
என்று நன்னூலார் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.
பாடப் பொருளைப் பயிற்றும் முறை
“நூல்களைக் கற்கும் மாணாக்கர்கள் என்னென்ன முறைகளைப் பின்பற்றிக் கற்க வேண்டுமென்பதையும் நச்சினார்க்கினியரும், நன்னூலாரும் எடுத்துக் கூறியுள்ளார்கள். முதற்கண் உலக வழக்கு, செய்யுள் வழக்கு எனும் இரு வகை நடைகளையும் ஆராய்ந்தறிதல் வேண்டும். பாடநூல் கருத்துக்களை நெஞ்சிடை மறவாது வைத்துப் போற்றுதல் வேண்டும். ஆசானிடம் கேட்டப் பொருள்களைப் பலகாலும் சிந்திக்க வேண்டும். நடத்திய பாடத்தில் ஐயங்கள் ஏற்படுமாயின் ஆசானிடத்துத் தயங்காது சென்று குறை நீங்குமாறு கற்றுணர வேண்டும். அங்ஙனம் கற்கும் மாணாக்கர்களுடனேயே பழகுதல் வேண்டும். ஐயம் ஏற்படுமாயின் மாணாக்கர்களிடமே வினவுதல் வேண்டும். அவர்கள் வினவுகின்ற வினாக்களுக்கும் விடையிறுக்க வேண்டும். இத்தகு செயல்களை முறையாக மாணாக்கர்கள் கொண்டிருந்தால் அறியாமை எனும் இருள் மிகுதியும் நீங்கும் எனக் கூறியுள்ளனர்” (19)
இங்கும் பவணந்தி முனிவர்,
“நூல் பயிலியல்பே நுவவின் வழக்கறிதல்” (20)
என முதல் அடியை மட்டுமே மாற்றியுள்ளார்.
மாணாக்கன் முற்றும் உணரும் நிலை
மேற்குறித்த நிலைக்கு மாறாக மாணாக்கன் திகழ்ந்தால், கல்வி கற்றவனாகக் கருதப் பெற மாட்டான் ஆசிரியர் கூறும் செய்திகளைச் செவி கேட்கின்றதே ஒழிய நெஞ்சத்தில் ஏற்றிக்கொள்ள மாட்டான். அதனை,
“அனையன் அல்லோன் கேட்குவனாயின்
வினையின் உழப்போடு பயின்ற லைப்படாஅன்
அனையன் அல்லோன் அம்மரபில்லோன்
கேட்குவனாயிற் கொள்வோ னல்லன்” (21)
எனக் குறிப்பிடுவார்.
முற்றும் உணர்ந்தவனாதல்
ஒரு முறை ஒரு நூலைப் பாடங் கேட்டவன் மறுமுறையும் கேட்பின் அந்நூலிலே பிழைபட மாட்டான். மூன்று முறைகள் கேட்பின் ஆசிரியர் கற்பித்த முறையை உணர்ந்து, தானும் பிறருக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெறுவான். ஆசிரியன் கற்பித்த பொருளைப் பலகாலும் நிறையக் கற்றானாயினும் ஆசிரியனது புலமையில் காற்பங்கல்லது பெற முடியாதென்றும் உடன் பயிலும் மாணாக்கர்களோடு பழகும் வகையாற் கால் பங்கு அறிவு வளருமென்றும், தன் மாணாக்கர்களுக்கும் அவையிலுள்ளோருக்கும் கற்றதை விரித்துரைக்கின்ற பொழுது அரைப் பங்கு நிரம்புமென்றும் கூறி பின்னரே குற்றமற்ற முழுப் புலமை எய்த முடியும் என்பதை நச்சினார்க்கினியரும, பவணந்தி முனிவரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் காலத்திருந்தது போல் ஒரே நூலைப் பல முறைகள் சொல்லும் பழக்கம் தற்காலத்தில் இல்லை. அது தேவையுமில்லை.
தெளிவடைதல்
கற்றதைப் பிறருக்கு எடுத்துரைக்கின்ற பொழுதுதான் உணர்ந்ததன் தெளிவு கிட்டும். அதனை,
“பிறர்க் குரையிடத்தே நூற்கலப் பாகுந்
திறப்பட உணருந் தெளிவினோர்க்கே” (22)
என நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவதன் வழி அறியலாம்.
முடிவுரை
ஒரு நாட்டின் சமுதாயம், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக கல்வி விளங்குகின்றது. கல்வியினால் உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வினைப் பெற முடிகிறது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் திருமறை பொருளை ஓதும் புனிதராக விளங்குகிறார். மேலும் கல்வி உளவியல் கற்றவரே, சிறந்த ஆசிரியராக திகழ்ந்து, கற்பித்த தொழிலில் சிறக்க முடியும். பயிற்று மொழியும், முறையும் திறனாய்வின் நுணுக்கங்களையும் அனைத்தையும் இலக்கணத்தில் ஆராய்ந்தாலும் இன்றைய தலைமுறைக்கு எற்ற தொழில் நுட்பத்துடன் கொண்டு சென்றால் உயர் கல்வி முறைக்கு வித்ததாக அமையும்.
சான்றெண் விளக்கம்
1. எஸ். சந்தானம், கல்வி உளவியல், ப. 01
2. நா. கதிரைவேற்பிள்ளை, மொழி அகாராதி, ப. 403
3. வி. பாஸ்கரன், கலைத்திட்ட வளர்ச்சி,ப.30
4. சு. கோவிந்தன், கல்விச்செல்வம் ப. 52
5. பு. துரைக்கண்ணு முதலியார், கல்விக்கலை, ப. 249
6. எஸ். சந்தானம், கல்விக் கோட்பாடுகளும் தத்துவங்களும், ப. 325
7. நன்னூல், நூற்பா, - 36,
8. அ.முத்துசாமி,(க.ஆ)வாழ்வில் வெற்றிகண்ட பேராசிரியர் இளவரசியம், பேராசிரியர் இளவரசு மணிவிழா. மலர் பக் - 58 - 59
9. JacqutsBarzun, Teacher in America Page No. 31
10. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை, சிறப்பு பாயிரம், ப. 3
11. நன்னூல், நூற்பா, - 36
12. தொல்காப்பியம், சொல்லாதிகாரம், சேனாவரையர் உரை நூற்பா, 297, 6-8
13. மேலது, நூற்பா, 389
14. மேலது, நூற்பா, 390
15. மேலது, நூற்பா, 391
16. மேலது, நூற்பா, 393
17. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் நச்சினாhகினியர் உரை சிறப்பு பாயிரம் ப. 5
11. நன்னூல், நூற்பா, - 40
19 . தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்கினியர் உரை, சிறப்பு பாயிரம் ப. 5
20. நன்னூல், நூற்பா, - 41
21. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் நச்சினார்னியர் உரை, சிறப்பு பாயிரம் ப. 5
22. மேலது, நூற்பா, 389
பார்வை நூல்கள்
1. ஆறுமுக நாவலர், (பதிப்பாசிரியர்), நன்னூல் காண்டிகையுரை, 21ம் பதிப்பு, வித்திய நுபாலன் அச்சகம், சென்னை, 1955.
2. கோவிந்தன் சு., கல்விச்செல்வம், திருப்பூர் அச்சகம், சென்னை, முதல் பதிப்பு, 1976.
3. சந்தானம் எஸ்., கல்வி உளவியல், செந்தமிழ் அச்சகம், சென்னை, முதற் பதிப்பு, 1964.
4. சந்தானம். எஸ்., கல்வி கோட்பாடுகளும் தத்துவங்களும், சாந்தா பப்ளிஸ் - சென்னை, முதற்பதிப்பு. 1993
5. சுப்புரெட்டியார் ந., தமிழ்ப் பயிற்று முறை, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், சிதம்பரம் திருந்தியப் பதிப்பு- 2, 2000
6. துரைக்கண்ணு முதலியார், கல்விக் கலை, அமுதா நிலையம், சென்னை, முதற்பதிப்பு. 1993
7. தொல்காப்பியர், தொல்காப்பிம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர்உரை, மூன்றாம் பதிப்பு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.1955
8. தொல்காப்பியர், தொல்காப்பியம் சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, 2ம் பதிப்பு, வித்திய நூபாலன், சென்னை. 1955.
9. முத்துசாமி அ., இளவரசியம், பேராசிரியர் இளவரசு மணிவிழா மலர், பொன்னி அச்சகம், சென்னை, முதற்பதிப்பு. 2003
அகராதி நூல்
1. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகாராதி, ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், புதுடில்லி ஆறாம் பதிப்பு,1981
ஆங்கில நூல்
1. JacqutsBarzuz, Teacler bz Amerbca, Fbtheenth Editioz, little Browz andcomzPany Bostoz, 1975 page No. 31
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.