இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பிள்ளைச்சிறு விண்ணப்பத்தின் வழி வள்ளலார் உணர்த்தும் இறைநிலைக் கருத்துக்கள்

பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம்


முன்னுரை

வள்ளற் பெருமான் இறைவனிடம் வேண்டும் வரங்கள் விண்ணப்பங்கள் என்று அழைக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் அடிநாதமாக ஒலிப்பவை உயிர்களின் இடர்களைக் களைதலே. துன்பம், துயரம், அவலம், இளைப்பு, ஏக்கம், தவிப்பு, சோர்வு இவை நீங்க வள்ளலார் இறைவனிடம் வேண்டும் வரங்கள் பலபல. அவை எவ்வாறு இறைநிலை அடைய உதவுகின்றன என்பதையும், ஏன் நாம் இறைநிலையை அடைய வேண்டும் என்பதையும், எவ்வாறு இறைநிலையை அடையமுடியும் என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விண்ணப்பமும் அதன் வகைகளும்

முதல் திருமுறை - விண்ணப்பக்கலி வெண்பா

இரண்டாவது திருமுறை - திருமுல்லைவாயில் விண்ணப்பம் அபார விண்ணப்பம், திரு விண்ணப்பம், பிரசாத விண்ணப்பம், வழிமொழி விண்ணப்பம், சிறுமை விண்ணப்பம், ஆற்றா விண்ணப்பம், இரங்கல் விண்ணப்பம், காதல் விண்ணப்பம், பொருள் விண்ணப்பம், கொடி விண்ணப்பம், நாடக விண்ணப்பம், திருவண்ண விண்ணப்பம், மருட்கை விண்ணப்பம், கொடைமட விண்ணப்பம், சிறு விண்ணப்பம், பெரு விண்ணப்பம், அபராத விண்ணப்பம், கலி விண்ணப்பம், கருணை விண்ணப்பம்.

மூன்றாம் நான்காம் திருமுறைகளில் விண்ணப்பங்கள் காணப்படவில்லை.

ஐந்தாம் திருமுறை - இரந்த விண்ணப்பம், மருண்மாலை விண்ணப்பம், வேட்கை விண்ணப்பம்.

ஆறாம் திருமுறை - பிள்ளைச்சிறு விண்ணப்பம், பிள்ளைப்பெரு விண்ணப்பம், திருமுன் விண்ணப்பம்.

உரைநடை விண்ணப்பங்கள்

சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம், சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம். ஆகமொத்தம் பாடல்கள் வடிவில் இருபத்தேழும் (27-ம்) உரை நடை வடிவில் நான்கும் அமைத்துள்ளார். இவற்றில் ஆறாம் திருமுறையில் பத்தொன்பதாவது பதிகமாக அமைந்துள்ள விண்ணப்பமான பிள்ளைச்சிறு விண்ணப்பம் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்படுகிறது. வள்ளற் பெருமானின் உயிர்க்கருணைக்கு ஒரு எல்லையே இல்லை எனலாம். அதற்குச் சான்றாகப் பிள்ளைப் பெரு விண்ணப்பத்தில்,

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” (திருவருட்பா.3471)


வாடினேன், பதைத்தேன், துடித்தேன், இளைத்தேன் என்று அவர் பட்ட துயரத்தை உணர்த்துகிறார் நமக்கு. இவரைப் போன்றே புத்தர் பெருமானும் துடித்துத் தம் அரண்மனை வாழ்வைத் துறந்து இவற்றைப் போக்கத் தவமியற்றி உண்மையை காண்கிறார். ஆசையே மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் என்று ஆய்ந்து கூறினார் புத்தர் பெருமான். பிள்ளைச்சிறு விண்ணப்பக் கருத்துக்களுக்குப் பெருமை சேர்ப்பவர்களாகத் திருவள்ளுவர், புத்தர், ஏசுநாதர், முகமுது நபி, காந்தியண்ணல், ஆல்பர்ட் ஸ்வைட்சர், அன்னை தெரசா போன்றோர் விளங்கினர். அவர்கள் போற்றிய அன்பு நெறியே ஜீவகாருண்ய நெறி. சீவனெல்லாம் போற்ற வேண்டிய நெறி ஆகும். பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் முதல் பாடலில்,

“தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்” (திருவருட்பா பாடல்:3386)

அடங்காத மகனைத் தந்தை அடித்தால் பாசத்தின் ஊற்றாம் தாய் ஓடோடி வந்து அணைப்பது இயல்பு. எப்போதுமே மகனின் லீலைகளைப் பொறுத்துக் கொள்ளுபவளாகிய தாய்க்கே சில நேரங்களில் கோபம் வந்தால் அடித்து விடுவாள். அப்போது தந்தை ஓடி வந்து அனைத்து ஆறுதல் தருவார். இந்நிகழ்வுகள் எங்கும் காணக் கூடியதே. தந்தை வேறு தாய் வேறு என்றிருந்தால் பரவாயில்லை இறைவா நீர்தானே எனக்குத் தாயும் தந்தையும் நீயே அடித்தால் நான் எங்கு செல்வேனப்பா? யாரென்னை அரவணைத்துக் காப்பார்கள்? ஆதலால் அடித்தது போதுமப்பா என்னை இனி அணைத்தும் காப்பாயாக, என்னால் இனி பொறுக்க முடியாதப்பா பொறுக்கவே முடியாது! என்று கதறுகிறார் நம் பெருமான். காரணம் உடல் வலியா? அல்ல இவரின் கோரிக்கைகளை இறைவன் விரைவில் ஏற்காததால் ஏற்பட்ட மனவேதனையேக் காரணமாகும்.


எண் குணங்கள்

தன்வயம், தூயமேனி, இயற்கை உணர்வு, இயல்பாகவே பாசங்கள் இன்மை, முற்றும் உணர்தல், பேரருள், வரம்பிலா இன்பம், முடிவிலா ஆற்றல் முதலியவை இறைமைக்கே உரியக் குணங்களாகும்.

“கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” (குறள்.9)

என்று திருக்குறளும் இறைவனின் குணங்களைப் பற்றிக் கூறுவதைக் காணலாம்.

“நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”(திருவாசகம்.376)

எண்குணத்தான் என்பதற்குப் பல பொருள் கொள்ளலாம். ‘எட்டு குணங்களைக் கொண்டவன்’ எண்ணத்தகுந்த குணங்களைக் கொண்டவன், எளிமை ஆகிய குணம் வாய்ந்தவன் எனலாம். சைவ சமயம் நிலம், நீர், தீ, வளி, விசும்பு, ஞாயிறு, திங்கள், உயிர் என்னும் எட்டுப் பொருள்களின் வடிவமாகவும் இறைவன் விளங்குகிறான் என்னும் கொள்கையுடையது. இதனை, ‘அஷ்ட மூர்த்தம்’ என்று சைவ நூல்கள் கூறும்.

“வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்” (திருவருட்பா.3388)

ஒரு மகன் தீய குணங்களைக் கொண்டவன். பிறருக்குத் துன்பம் தருவதையே குறியாகக் கொண்டவன். அப்படிப்பட்டவனாக இருந்தாலும் பெற்றோர் அவனை வெறுப்பதில்லை. மேலும் அவனின்பால் அன்பையே பொழிவர். தவறு என்று கண்டித்தால் மகன் மனம் புண்படுமே என்று எண்ணி அவனின் கொடுஞ்செயல்களை ஆதரிப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் நான் அப்படிப்பட்டவனா? நான் எதையாவது விரும்பினால் அது என் சொந்த விருப்பமில்லை, உங்களின் விருப்பம் தானே. அப்படி நான் விரும்பியவை சிறந்த அறிவும் நன்னெறியும் தான் இதைத் தாங்களே அறிவீர்கள் தாயே. முதலில் அம்மையப்பா! அரசே! என்றவர் இப்பாடலில் தாயே! என்று அன்போடு அழைக்கும் போதே அவரின் கருணை மனம் நமக்கு நன்றாகப் புரிகிறது. இறைவனுக்குப் புரியாதா என்ன?

பிறர்க்குத் தீங்கு நினையாமை

“பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே.
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.!”(திருவருட்பா.3389)

பொய் கூறியுள்ளேன். ஆனால் அதனால் மற்றவர்க்கு எந்தக் கேடும் வராது. புல் நுனி அளவுகூட மற்றவர்க்கு தீங்கு வராது. ஏனெனில் மற்றவர் மேல் நான் கொண்ட அன்பே காரணம். மற்றவர்களிடமிருந்து நான் ஏதாவது விரும்பிக் கேட்டிருந்தால், அது கிடைக்காத வேளையில் கோபம் வரும், பொய் சொல்ல நேரிடும். பழி வாங்கும் உணர்வு ஏற்படும். ஆனால் நான் உங்கள் கழற்பதத்தை மட்டுமேயல்லவா விரும்பிக் கேட்கிறேன். இது பிழையல்லவே! என் மனம் என்னவென்று நீரே அறிவீர் தாயே! அருள் புரிவாயாக என்று வேண்டுகிறார்.


ஆசையற்ற அருளாளர்

“கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும்
கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன்
இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும்
தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான்
இயம்பல்என் நீஅறிந் ததுவே.”(திருவருட்பா.3397)

இவ்வுடலின் மேல் எனக்கு எள்ளளவும் ஆவல் தோன்றவில்லை. பசி நீங்குவதற்கு ஆவல் தோன்றவில்லை. பசி நீங்குவதற்கு உணவை வெறுப்பாகவே உண்டேன். தோல், நரம்பு, எலும்பு ஆகியவற்றைப் பெற்று நாற்றமுடையதாக இருக்கும் இவ்வுடம்பைப் பேண வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சிறிதும் இல்லை. இறைவா இப்பொழுது இருக்கும் மெலிந்த உடலும் மேலும், மெலிவதையே விரும்புகின்றேன். இதை அடியேன் சொல்ல வேண்டியதில்லை. நீரே அறிவீர் என்கிறார். அதே போன்று,

“பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே” (நாலாயிரதிவ்ய பிரபந்தம், தொண்டரடிப்பொடியாழ்வார், பா.873)

என்ற பாடலில் திருமாலைக் கண்களால் காணும் பேறு ஒன்றே போதும் என்ற ஆழ்வாரின் விருப்பமும் இங்கு நினைவு கூறத்தக்கது.

இறைவனை அடைய உதவும் சாதனங்கள்

சரியை, கிரியை, ஞானம், யோகம் இவை இறைவனை அடைய மேற்கொள்ளப்படும் சாதனங்களாகும். மனிதன் இறைவனைத் தொழுவதற்கு முக்கிய காரணமே முக்தி பெறத்தான் என்பர். ஆனால் தனக்கு முக்தி பெறவும் விருப்பமில்லை என்கிறார் பெருமான். தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு இந்நான்கால் அடையப் பெறும் பயன்கள், சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகும்.

“சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும்
சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது
புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்
உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.!” (திருவருட்பா.3399)

இவற்றை அட்டவணைப்படுத்தினால்,

சரியை - தாச மார்க்கம் - சாலோகம்

கிரியை - சற்புத்திர மார்க்கம் - சாமீபம்

யோகம் - சக மார்க்கம் - சாரூபம்

ஞானம் - சன்மார்க்கம் - சாயுச்சியம்


இவை ஒவ்வொன்றிலும் நான்கு பிரிவுண்டு. அவை,

சரியை - சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையிற் யோகம், சரியையிற் ஞானம்

கிரியை - கிரியையில் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையிற் யோகம், கிரியையிற் ஞானம்

யோகம் - யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம்

ஞானம் - ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம்

தாசமார்க்கம் - சரியை - சாலோகம்

“தாத மார்க்கம் சாற்றில் சங்கரன் தன் கோயில்
தலம் அலகு இட்டு இலகு திரு மெழுக்கும் சாத்திப்
போதுகளும் கொய்து பூந் தார் மாலை கண்ணி
புனிதற்குப் பல சமைத்துப் புகழ்ந்து பாடி
தீது இல் திரு விளக்கு இட்டு திரு நந்தவனமும்
செய்து திரு வேடங் கண்டால் அடியேன் செய்வது
யாது பணியீர் என்று பணிந்து அவர்தம் பணியும்
இயற்றுவது இச் சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்” (சிவஞானசித்தியார், பா.270.)

“எளியனெல் தீபமிடல் மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்பஞ் சனமாதீ
தனிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே” (திருமந்திரம், தாசமார்க்கம், பா.1)

* தாசமார்க்கம் - நான்கு மார்க்கங்களில் முதல் மார்க்கம். இது முதற்படி. தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள்.

* சரியை - தேகத்தைச் சிவார்ப்பணித்தல். இறைவனுடைய உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு.

* சாலோகம் - சாலோகம் என்பது இறைவனுலக்கதில் உறையும் பேறு. இது பதமுத்தியே ஒழிய முடிவான பரமுத்தி அல்ல.

சற்புத்திர மார்க்கம் - கிரியை - சாமீபம்

“புத்திரமார்க்கம் புகலில் புதிய விரைப் போது
புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு ஐந்து
சுத்தி செய்து ஆசனமூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்து ஆவாகிச் சுத்த
பத்தியினால் அருச்சித்து, பரவிப் போற்றி
பரிவினொடும் எரியில் வரு காரியமும் பண்ணல்
நித்தலும் இக்கிரியையினை இயற்றுவோர்கள்
நின்மலன்தன் அருகு இருப்பர் நிலையும்காலே” (மெய்கண்ட சாத்திரம் பா.272)

“பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்தல்
ஆசற்ற நற்றவர்வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்ததன் மற்
றாசற்ற சற்புத் திர மார்க்க மாகுமே” (திருமந்திரம், சற்புத்திர மார்க்கம், பா.2)

* சற்புத்திர மார்க்கம் - இறைவனைத் தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவித்தலே சற்புத்திர மார்க்கமாகும்.

* கிரியை - அதாவது புறத்தொழில் அகத்தொழில் மாத்திரையான இறைவனுடைய அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும்.

* சாமீபம் - இறைவன் சன்னிதியில் சமீபமாக இருந்து தொண்டு செய்யும் பேறாகும். இதுவும் பதமுத்தியே பரமுத்தியல்ல.

சகமார்க்கம் - யோகம் - சாரூபம்

“சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்” (சிவஞானபோதம்.பா.21)

“ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி
போத லயத்துப் புலன்கார ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே” (திருமந்திரம். பா.5)

சகமார்க்கம் - இதில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள சம்பந்தமாகும். தோழமை நெறியாகும்.

* யோகம் - காரணங்களைச் சிவார்ப்பிதஞ் செய்தல் யோகத்தில் ஞானம். சமாதி நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் சேர்ந்ததே அட்டாங்க யோகமாகும்.

* சாரூபம் - சாரூபம் என்பது இறைவனது உருவத்தைப் பெறுதலாகும். இதுபதமுத்தியே பரமமுக்தியல்ல.

சன்மார்க்கம்

“சன்மார்க்கம் சகலகலை புராண வேதம்
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரிந்துப் பரசிவனைப் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமை யுடையோர் சிவனைப் பெறுவர்காணே” (சிவஞானசித்தியார், பா.274)

“சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானாவ னாகுஞ்சன் மார்க்கமே” (திருமந்திரம், சன்மார்க்கம், பா.6)

சன்மார்க்கம் என்ற சொல்லை சத் + மார்க்கம் என்று பிரித்தல் வேண்டும். சன்மார்க்கம் என்பது நல்வழி - நல்லவாறு எனப் பொருள்படும். இச்சன்மார்க்கமே ஞானம் எனப்படும்.

சாயுச்சியம்

இறைவனோடு இரண்டற கலத்தலாகும். இது ஒன்றே பரமுத்தியாகும்.

“விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே” (தாயுமானவர், பராபரக்கண்ணி, பா.157)

“சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண்டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால் நின்றோங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கிறவாமை உற்றேன் காண் தோழி”(திருவருட்பா, அனுபவமாலை, பா.93)

மார்க்கங்கள் நான்கையும் தனித்தனியே கண்டறிந்தவர்நம்பெருமான். அதன் பயனாக உண்மை நிலையைப் பெற்றதாயும் சித்தாந்தம் வேதாந்தம் முதலிய ஆனந்த நிலைகளையும் அறிந்து அவ்வாறந்திற்கும் அப்பால் நின்றோங்கும் பெரிய சிவானுபவத்தால் சமரச சன்மார்க்கத்தைப் பெற்று இறவாமையுற்றதாகவும் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கூறியுள்ளார். அனைத்தையும் கண்டறிந்த பெருமானின் உள்ளம் எதிலுமே பற்றற்று கிடக்கிறதாம்.

“இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே” (திருவருட்பா, பிள்ளைச்சிறு விண்ணப்பம், பா.15)


முக்தி பெறவே விரும்பாதவர்க்கு இறந்து போகவும் ஆவல் இல்லை. இவ்வாறே உயிரோடு இருக்கவும் ஆவல் இல்லை. உலகத்தோர் பெரியவர் பெரியவர் என சிறப்பித்துப் பேசுமாறு விளங்கவும் ஆவல் இல்லை. அற்புதங்கள் செய்யவும் விருப்பமில்லை. எல்லாவற்றையும் துறந்து விடவும் ஆசை இல்லை. அதற்காகத் துன்பத்தில் சோர்ந்து விடவும் ஆசை இல்லை. என்று மிகுந்த மன வேதனையோடு கூறுகிறார். மேற்கண்ட 15 பாடலிலும் தமக்கு எதிலுமே விருப்பமில்லை என்று கூறிவிட்டார் நம்பெருமான்.

“சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே” (திருவாசகம், சிவபுராணம், பா.3)

என்று மாணிக்கவாசகரும் எதிலுமே பற்றற்று இருப்பதைக் காணலாம்.

உயிர்களிடத்து அன்பு காட்டுதல்

“கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த
கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்
தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்” (திருவருட்பா. 3407)

அருளையே வடிவமாகக் கொள்ள வேண்டும். பிறருக்கு உண்டாகும் கடுமையான துயரம், அச்சம் இவற்றை உன்னுடைய திருவருளால் நீக்க வேண்டும். மிகக் கொடுமையான ஊறுண்ணல், கொலை புரிதல் இவை நீங்கிய அருள் நெறியில் உலகம் நடத்தல் வேண்டும். இவ்வருள் நெறியில் இவர்களுக்குச் சேவை செய்து கொண்டு உன் புகழை வாழ்த்தவும் வணங்கவுமே எனக்கு மிக ஆவல் தந்தையே! என்று வேண்டுகிறார். உலகில் சுயநலமாக வேண்டுவோர் மலிந்துள்ளனர். ஆனால் தனக்கு முத்தியும் தேவையில்லை வேறு எந்த நலனும் தேவையில்லை மேற்கண்ட சக்தியை மட்டும் கொடு என்று வேண்டுகிறார். எந்த உயிரும் துன்பப்பட்டு துடிப்பதை அடிகளால் பார்த்திருக்க முடியாதாகையால் தன் உள்ளத்தை நமக்குக் காட்டுகிறார்.

“கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே” (பராபரக்கண்ணி, பா.192)

“அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்வதும் பராபரமே”(பராபரக்கண்ணி, பா.155)

உள்ளம் புகுந்தான் ஒளியா இருந்தான் அன்பர்கட்கு உய்யும் நெறியை உணர்த்திய படியே இருக்கின்றான். உணர்வார் உள்ளம் எப்போதும் உருகும் கண்ணீர் வெள்ளமாய் சதா ஆழ்ந்த படியே இருக்கும்.

உள்ளம் உருகிப் பாட இறையருள் வாய்க்கும்

“மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்
இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்
நல்குதல் எனக்கிச்சை எந்தாய்”(திருவருட்பா, பா.3408)

இவ்வுலகத்தில் உயிர்கள் படும் துயரை ஒரு சிறிதும் நான் காணப் பொறுக்க மாட்டேன். அவை வருந்தி எழுப்பும் ஒலியை அபயக்குரலை ஒருசிறிதும் நான் கேட்கப் பொறுக்க மாட்டேன். நொடிதோறும் அவைகளை எண்ணி வருந்தும் எனக்கு தங்கள் திருவருளால் அவ்வருத்தத்தை நீக்கும் வலிமையை அருள்புரிய வேண்டும் தாயே!

கொல்லாமை

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள். 259)

“துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுளம் அறியும்!” (திருவருட்பா, பா.3473)

உயிர்க்கொலை புரியும் மாந்தர்களின் கொடுஞ்செயலைக் கண்டு அவரது துடிப்பை இப்பாடல்களால் உணர முடிகிறது. இரக்கமே தன்னுயிராக வாழ்ந்த அருளாளர் நம் பெருமானாவார்,

“கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க-தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து” (திருவருட்பா, சன்மார்க்க நிலை, பா.5)

என்ற பாடலால் நாட்டில் அரசியல் பற்றியும் அறிந்தவராக விளங்குகிறார். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது பழமொழி. ஒரு நாட்டில் மன்னன் கருணை நிறைந்த ஆட்சி புரிந்தால் மக்களும் அவ்வாரே நல்லவர்களாக வாழ்வர். அப்படிப்பட்ட ஒரு அரசையே பெருமானும் விரும்புகிறார். யார் ஆண்டால் நமக்கென்ன என்ற பொறுப்பற்ற குணமின்றி பொறுப்புடைய பெருந் தலைவராகவும் பெருமான் விளங்குவதைக் காணமுடிகிறது.

ஏழை மக்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.

“இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்” (திருவருட்பா, பிள்ளைச்சிறு விண்ணப்பம், பா.98)

அடியேன் மேலே வேண்டிக் கொண்டது அல்லாமல் வேறு எவற்றிலும் எனக்கு விருப்பமில்லை. நான் நற்றவம் புரியாதவனே எனினும் என் விருப்பப்படி தருதலே வேண்டும். இவை எக்குற்றமும் இல்லா நல்விருப்பங்கள் என்று நீ அறிவிக்க நான் அறிந்தேன் ஆதலால் அருள் புரியுமாறு வேண்டுகிறேன். அருள் புரிதல் உன் கடமையல்லவா தாயே அருள் புரிவீராக என்று வேண்டுதலை நிறைவு செய்கிறார்.

முடிவுரை

வள்ளலார் தான் பெற விரும்பும் வரங்களை விண்ணப்பங்கள் என்கிறார். அவ்வாறான விண்ணப்பங்கள் பல வகைப்படுகின்றன. அவை எவ்வாறு விண்ணப்பிக்கப் பட்டது ஏன் விண்ணப்பிக்கப் பட்டது அதன் வகைகள் யாவை என்பதைக் குறித்தும், உரைநடை விண்ணப்பங்களில் வள்ளலார் எவற்றையெல்லாம் வேண்டினார் என்பதைக் குறித்தும், எண் குணங்கள் என்பவை யாவை? அதனால், மனிதன் தன் குணநிலைகளை எவ்வாறு உணர்ந்து கொள்ளலாம் என்பதைக் குறித்தும், இறைவனை அடைவதற்கான வழிகளாக நமக்கு மார்க்கங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவை, தாசமார்க்கம் - சரியை - சாலோகம், சற்புத்திர மார்க்கம் - கிரியை - சாமீபம், சகமார்க்கம் - யோகம் - சாரூபம், சகமார்க்கம், சன்மார்க்கம், சாயுச்சியம் என்பனவாகும், மேலும், நாம் இறைவனை அடையச் சாதாரணமாக நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை பண்புகளாக, பிறர்க்குத் தீங்கு நினையாமை, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், உள்ளம் உருகிப் பாட இறையருள் வாய்க்கும், கொல்லாமை, ஏழை மக்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும் என்பனவற்றையும், என்றும் ஆசையற்ற அருளாளராய் திகழ்ந்த வள்ளலார் எடுத்துரைத்துச் சென்றுள்ளார். அவர்வழியே நாமும் பின்பற்றி இறைநிலை அடைவோமாக.

துணைநின்ற நூல்கள்

1. சிவஞானம். வீ., திருநாவுக்கரசர் தேவாரம், விஜயா பதிப்பகம், கோவை. 2015.

2. இராமசுப்பிரமணியம். வ.த., மாணிக்கவாசகர்- திருவாசகம், திருமகள் நிலையம், சென்னை, 2006.

3. சொக்கலிங்கம். சு.ந., தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2009.

4. இருசுப்பிள்ளை, இராம., திருவருட்பா, விஜயா பதிப்பகம், கோவை, 2011.

5. அடியன் மணிவாசகன், திருமந்திரம், சாராதா பதிப்பகம், சென்னை, 2004.

6. திரு.வி.க., பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை, பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை, 2010.

7. பத்மதேவன், சித்தர் பாடல்கள், கற்பகம் புத்தகாலயம், சென்னை, 2008.

8. கோவேந்தன். த., சித்தர் பாடல்கள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2011.

9. நாராயணவேலுப்பிள்ளை, நாலாயிர திவ்ய பிரபந்தம், முல்லை நிலையம், சென்னை, 2008.

10. சுப்பிரமணியன். ச.வே., பன்னிரு திருமுறைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2012.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p212.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License