சாத்தூர் சேகரனின் புதிய கண்டுபிடிப்புகள்
முனைவர் நா. கவிதா
உதவிப்பேராசிரயர், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
முன்னுரை
ஊர் பெயர் ஆய்வு, மக்கள்பெயர்ஆய்வு மற்றும் களஆய்வுச் செய்திகளாலும், முறையான மொழி ஒப்பாய்வுகளாலும் எவரும் மறுக்க இயலாவண்ணம் “தமிழே உலகமொழிகளின் தாய்” என்ற மாபெரும் உண்மையினைத் தமது கண்டுபிடிப்புகளால் உறுதிப்படுத்தியவரே சாத்தூர்சேகரன் அவர்கள் ஆவார்.
மேலும், இந்திய மக்கள் அனைவரும் தமிழர், உலக மக்கள் யாவரும் தமிழர் என்பதுதான் நம்முடைய “குமரிக்கண்ட கோட்பாடு” என்பதைப் பல சான்றுகள் மூலம் நிரூபித்தவர் ஆவார். அவர் தம் மொழியியல் கண்டுபிடிப்புகளையும் தமிழர் இனம் பற்றிய வரலறாற்று உண்மைகளையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமசுகிருதம் ஒரு மொழி அல்ல
சமசுகிருதம் என்ற பெரும் பேயைக் கண்டு அத்தனை பேரும் அஞ்சி அலறி ஓடிக் கொண்டிருக்க சாத்தூர்சேகரன் ஒருவர் மட்டுமே, அது வெறும் மாயை என்று அஞ்சாது எதிர்த்து நின்றார். உண்மையில் பொய்மை என்ற காற்றடைத்த பொம்மை என்றறிந்து அதனை வீழ்த்தினார். இவ்வுண்மையைக் காணவேண்டி இந்தியாவைப் பலமுறை சுற்றி வந்து இந்திய மொழிகள் யாவற்றையும் கற்றறிந்து எல்லா மொழிகளுக்கும் சமசுகிருதம் அன்னியமாக உள்ளதை நிறுவினார். இந்தியாவிற்கு வெளியில் அண்டை அயல் நாடுகளில் பல களஆய்வுகள் செய்து சமசுகிருத மொழியின் தாக்கம் எம்மொழியிலும் இல்லை என்பதை உலகிற்கு உரைத்தார். மொழியியல் உலகில் கசக்கும் சில உண்மைகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார்.
கசக்கும் சில உண்மைகள்
* வேதமொழிக்கோ சமசுகிருத மொழிக்கோ இன்றளவும் எழுத்து கிடையாது.
* ச்ருதி என்றால் செவிமடுப்பது, ஸ்மிருதி என்றால் பேசுவது. எனவே, வேதத்திற்கும் சமசுகிருதத்திற்கும் எழுத்து கிடையாது என்பது உறுதியாகிறது.
* சமகிருத இலக்கியங்கள் உண்மையல்ல. தமிழ் இலக்கியங்களே, வடதமிழான பிராகிருத இலக்கியங்களே சாயனின் பித்தலாட்ட முயற்சியால் சமசுகிருதத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன.
* ஒரு இலக்கியம் கூட உண்மையான சமசுகிருத இலக்கியம் கிடையாது.
* இந்தியாவின் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் திரியாத மற்றும் திரிந்த தமிழே.
* இந்தியாவின் மக்கள் பெயர்கள் யாவும் திரியாத மற்றும் திரிந்த தமிழச்சொற்களாக உள்ளன.”(1)
மொழிஆராய்ச்சி இன்றும் வளராத குழந்தைப் பருவத்தில்தான் இருந்து வருகிறது. சிற்சில அறிஞர்கள் ஒரு சில கண்டுபிடிப்பு மூலம் அதனை வளர்த்திட முயன்றும், அது பல பொய்மைச்சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறது. அந்தப் பொய்மைகளை உடைக்காமல் மொழியியலுக்கு விடுதலை இல்லை, வளர்ச்சியும் இல்லை என்று மொழியியல் உலகில் எதற்கும் அஞ்சாமல் தனது கண்டுபிடிப்புகளைப் பல இடங்களில் இயம்பியுள்ளார்.
மொழிப் பொய்மைகள்
சமசுகிருதமே இந்திய மொழிகளின் தாய்?
சர் ஜான் ஜோன்சும், மக்சுமுல்லரும் போதிய தரவுகளைத் தேடாமல் பிராமண பண்டிதர் கூற்றையே உண்மை எனக் கருதிப் பல பொய்ச் செய்திகளை உண்மை என்று பரப்பினா். இதனால் உலக மொழியியல் யாவும் அறியாமையுள் இருநூறு ஆண்டுகளாகக் கிடக்கிறது. இதனை ஆழமாகச் சிந்திப்பவரும் இல்லை, ஆழமாக ஆராய்பவரும் இல்லை. பலரும் நுனிப்புல் மேய்பவராகவேச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்று பல காலமாகப் பேராளியாகப் போராடி மடிந்தவா் சாத்தூர்சேகரன் அவர்கள் ஆவர்.
ஆரிய மொழியின் தாய் எது?
கடந்த 300 ஆண்டுகளாக அறிவியல் சான்ற ஐரோப்பிய அறிஞர்கள் முட்டி மோதி ஆராய்ந்திடினும் இன்னும் தமது மொழிகளின் தாயைக் காணமுடியவில்லை. காரணம்? தமிழ்தான் ஐரோப்பிய மொழிகளின் (உலக மொழிகளுக்கும்தான்) தாய் என்ற உண்மையைப் பலரும் உணராதிருக்கின்றனர். உணர்ந்த ஒரு சிலரும் அதனை ஓங்கி உரைத்திடத் தயங்குகின்றனர்.
தமிழ்ச்சொற்கள் பலவற்றைத் தனது என்று கூறிக் கொண்டிருக்கும் சமசுகிருதம் ஆரிய மொழிகளின் தாய் என்று இன்றும் சிலர் மூடத்தனமாகச் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பிய முக்கிய மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன், இரஷ்யன் ஆகிய மொழிகள் எதுவும் சமசுகிருதத்துடன் வெறும் 250 சொற்களுடன் கூட ஒற்றுமையாய் இல்லை. ஆனால், தமிழுடன் எல்லா மொழிகளும் ஆயிரம் சொற்களுக்கு மேல் உறவுள்ளன. மேலும் இலக்கணத்துடனும் ஒன்றுபடுகின்றன என்பதற்குச் சான்றாகப் பின்வரும் அட்டவணையைக் குறிப்பிடலாம்.
மொழியியல் அறிஞர்களின் பொய்மை வாதங்களின் முன்னிலையில் தமிழின் தனித்துவத்தை சாத்தூர் சேகரன் எங்ஙனம் எடுத்துரைத்துள்ளார்? என்பவனற்றையே மேற்கூறிய சான்றுகள் புலப்படுத்துகின்றன.
சமசுகிருதம் ஒரு மொழியல்ல
உலகில் ஒரு நாள் ஒரு பொழுது கூடப் பேசப்படாத மொழி சமசுகிருதமே என்று சாத்தூர் சேகரன் பல சான்றுகள் மூலமாகத் தனது கருத்துக்களுக்கு வலு சேர்த்துள்ளார்.
உலகில் பிறமொழிகள் பேசப்பட்டு, கடின இலக்கணத்தாலும், கடின உச்சரிப்புகளாலும், பேசப்படாத மொழிகளாக மாறியுள்ளன. இலத்தீனே இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும் . ஆனால், சமசுகிருதம் அவ்வாறான மொழியல்ல என்பதைப் பல சான்றுகளால் சாத்தூர் சேகரன் மெய்ப்பித்துள்ளார். சமசுகிருத மொழி எனறுமேப் பேசப்படவில்லை. யாராலும் மொழியப்படாத மொழி என்பதால் சமசுகிருதத்தை ஒரு மொழியல்ல என்ற கருத்தினை ஆசிரியர் முன் வைக்கிறார்.
தத்துவச் சொற்களில்இருந்து... சமசுகிருதம்
தமிழில் உள்ள பல சமய மற்றும் தத்துவச் சொற்களைச் சமசுகிருதம் திரித்துத் தனது சொல்லை உண்டாக்கிய உண்மைகளை சாத்தூர் சேகரன் பின்வரும் சான்றுகள் மூலமாக இயம்புகிறார்.
* “ஆதன் – மனிதன். மிகவும் தொன்மையான தமிழ்ச்சொல் அத்தன சிதைந்தே ஆதன் ஆயிற்று.
* இந்தி உருது போன்ற மொழிகளில் ஆதன், ஆத்மி என்றாகிறது.
* ஆதனுக்குள் இருப்பது உள்மனம் என்ற ஆத்துமா அல்லது ஆன்மா ஆகும்”
சமசுகிருதம் ஆத்துமாவை ஆத்மா என்று சிதைத்துத் தன் சொல் என்கிற முறைமை வெட்ட வெளிச்சமாகிறது. உலகில் ஒரு சொல்லைக் கூடப் படைக்காத மொழி சமசுகிருதமே. தமிழ்ச் சொற்களைப் பல வகையில் திரித்து, தனது சொல் என்று கூறும் வழக்கம் உள்ளது சமசுகிருதம். இவ்வுண்மைகள் தெற்றெனத் தெரிந்தும் ஏன் உண்மை ஆய்வாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்றனர்? பொய்மைக்கு எதிராகப் போர் தொடுத்திருக்க வேண்டாமா? என்று தனது ஆதங்க உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
வரலாற்று உலகில் புதிய கண்டுபிடிப்புகள்
தவறு மேலும் தவறை வளர்க்கும் என்பர். மொழியியலில் சர் ஜான் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர் போன்றோரும் வட இந்தியப் பண்டிதர்களும் சமஸ்கிருதத்திற்கு சிங்காதனமளித்தது யாவருக்கும் தெரிந்த கதையே, திராவிட மொழியான தமிழை ஒதுக்கி வைத்ததும் தெரிந்த அறிந்த கதையே. இதனால் இவர்களில் அடியொற்றி கலாச்சார வரலாறுகளை எழுதியோரும் உண்மையைப் பிறழ எழுதினர். எனவே, வரலாறு தலைகீழாகப் போயிற்று என்ற ஆதங்க உணர்வுகளைச் சாத்தூர் சேகரன் பல நூல்களில் பதிவு செய்துள்ளார்.
* “இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்த அகவழ்வாய்வுச் செய்திகளும் இன்றைய இந்தியாவில் 50000-25000 B.C. க்குப்பிற்பட்டதாகவே உள்ளன. ஆக, நிலைத்த குடியேற்றங்கள் ஏற்படவில்லை என்பது தெளிவு. இதன் காரணகாரியமாக குமரிக் கண்டத் தமிழரே இக்காலக் கட்டங்களில் இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம்.
* “ஆப்பிரிக்காவில் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மாந்தர் இருந்தார்“ என்ற மூன்று இடங்களுக்கு சாத்தூர் சேகரன் நேரில் சென்று ஆய்வு நோக்கில் பார்வையிட்டு, அங்கு அத்தகைய வாய்ப்பு இல்லை எனற தன் முடிவினை வரலாற்று உலகில் பதிவு செய்தார்.
* குமரிக்கண்ட மக்கள் பேசி வந்த “தொன்மைத் தமிழே” உலக முழுவதிலும் பரவியது. அக்காலத்தில் எழுத்துக்கள் கிடையாது. எனவே, இலக்கண முறைகள் தெளிவான முறையில் ஏற்படவில்லை. தொன்மைத் தமிழ் மிக எளிதில் திரிந்தது. உலகில் உள்ள நாட்டிற்கேற்ப, இடத்திற்கேற்ப திரிபுகள் கூடுதலாகவோ சற்று குறைவாகவோ இருந்தமையும் தெளிவு”.(3)
லெமூரியாவிற்குப் பின் குமரிக் கண்டத்திலிருந்து சிந்திச் சிதறிய தமிழ்ச் சமுதாயம், கடற்கோளாலும் கற்பனைக்கும் எட்டாத இயற்கை உற்பாதங்களாலும், உலகெங்கும் பரவிய உண்மை பலருக்கும் அறிந்த செய்தியாக இருந்தாலும் அதை பார் அறிந்த செய்தியாக மாற்றியதில் சாத்தூர் சேகரன் பங்களிப்பு அளவிடற்கரியது.
தொல்காப்பியமே தொன்மையான நூல்
ஒன்றுக்கும் உதவாத இருக்கு நூலை அமெரிக்காவில் உள்ள சில பிராமணர், ஐ. நா சபையில் பணியாற்றும் சில பிராமணர்ஆகிய இரு குழுக்களும் சதி செய்து, இருக்கு நூலை உலகின் முதல் நூலாக அறிவிக்கச் செய்தனர். யுனஸ்கோவும் ஆராயாமல் இந்த அறிவிப்பைச் செய்தது. உலகில் உள்ள பல மொழியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வகையில் பல ஆராய்ச்சிக் கருத்துக்களை எடுத்துரைத்த தொல்காப்பியமே தொன்மையான நூல் என்ற அனைவரும் அறிந்த உண்மையை அஞ்சாது உலகிற்கு எடுத்தோம்பியவர் சாத்தூர் சேகரன் ஆவா்.
இவ்வாறு உலகின் முதல் நூல் இருக்கு நூல் அல்ல, தொல்காப்பியமே என்று ஆயிரம் ஓங்கி உரைத்தவர். பொய்மைகள் வீழவேண்டும், உண்மைகள் ஓங்க வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு உள்ளவராகக் காட்சி அளிப்பவரே சாத்தூர் சேகரன் ஆவார்.
தமிழும்ஆங்கிலமும்
ஆங்கில மொழியின் தோற்ற நிலையினைப் பற்றி சாத்தூர் சேகரன் பின்வரும் வண்ணம் சிறப்பாக நவில்கின்றார். 5000 ஆண்டுகள் வரையில் உலகில் இருந்து வந்த ஒரே மொழி தொன்மைத் தமிழ். பின்னர் சித்திர வடிவ நிலையில் சீன மொழி பிறந்தது. அதன் பின் எகிப்தின் பழையமொழி. கி.மு.1000ஐ ஒட்டித் திரிந்த தமிழ் பேசி வந்த பினிசியர் மேற்காசியாவிலும் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளிலும் குடியேறினர். இத்தகைய வரலாற்றுக்குப் பின்னரேப் பழைய ஹிப்ரு, பழைய கிரேக்கம், இலத்தீன் உருவாயின. இவற்றில், ஆங்கில மொழி பழைய ஆங்கிலம், நடு ஆங்கிலம், தற்கால ஆங்கிலம் என்ற மூன்று தனித்தனி மொழிகள் போன்று காணப்படுகின்றன. கி.பி.1000 வரை பழைய ஆங்கிலம் ஒரு சிறு மொழியாகப் பல பேச்சு வழக்குடன் இருந்தது. கி.பி.1400க்குப் பின் தற்கால ஆங்கிலம் உருப்பெற்ற போது அது எளிமையின் சின்னமாக மாறியது. துணிந்து பல கடினமான கூறுகளைக் கைவிட்டுவிட்டது. பிறமொழிச் சொற்களையும் அள்ளி எடுத்துக் கொண்டது. எனவே, ஆங்கிலம் ஒரு மாபெரும் வணிக மொழியாக வளர்ந்தது. இதற்கு ஓரிரு சான்றுகளை இங்கு முன் வைக்கலாம்.

இவ்வாறாக தமிழின் கிளை மொழியே ஆங்கிலம் என்பதை உறுதி செய்யும் வகையில் சாத்தூர் சேகரன் தேவநேயப்பாவாணர் அவர் தம் கருத்துக்களை முன் வைத்துப் பல சான்றுகளைத் தன்னுடைய “தமிழும் ஆங்கிலமும்“ என்ற நூலில் இயம்பியுள்ளார்.
சாத்தூர் சேகரனின் மொழியியல் உலகில் கண்டுபிடிப்புகள்
சாத்தூர் சேகரனின் மொழியியல் விதிகள் எண்ணிக்கையால் 15 தான் ஆகும். இவற்றில் சில நமது இலக்கண முறைமைகளில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணக்காரர்கள் உண்டு. ஆனால், அவர்களால் அவர்களது மொழிக்கு மட்டுமே இலக்கணம் படைக்க முடிகிறது. அவ்வகையில் உலக மொழிகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக விதி படைத்தவர் மொழியியல் உலகில் எவருமே இல்லை. உலகிலேயே அதிக மொழிகளை சாத்தூர் சேகரன் அறிந்திருந்த காரணத்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை எடுத்துக்காட்டாகக் கையாளுகின்ற திறமையாலும் முதன்முறையாக உலக மொழிகளுக்கு எல்லாம் மொழியியல் விதிகளைப் படைத்துள்ளார். ஆசிரியரது ‘Sathur Sekaran’s Rules’ என்ற நூல் நான்கு பதிப்புகளைக் கண்டமை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்தகைய விதிகளில் ஒரு சிலவற்றை மட்டும் பின்வரும் அட்டவணை மூலமாகச் சான்றுகளுடன் காணலாம்.
இவ்வாறு ஒவ்வொரு மொழியும் தமிழுடன் உறவு கொண்டிருந்த போதிலும் ஒரு சில வகைகளில் தனித்துவம் பெற விழைகின்றது. தமிழ் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள மொழியையும் மூன்று திங்களுள் கற்றுவிட முடியும் என்பதற்கு நல்லதொரு சான்றாக விளங்கியவா் சாத்தூா் சேகரன்ஆவார்.
சாத்தூர் சேகரனின் நூல்கள் கூறும் முதன்மைக் கருத்துக்கள்
தமிழின் ஆதிக்கம் இல்லாத மொழிகள் உலகத்தில் எதுவும் இல்லை. இவை தமிழல்ல அவை தமிழல்ல என்று ஒரு மொழி கூட ஒழுங்காகக் கல்லாமல் பிதற்றித் திரிவோருக்கு மொழியியல் விதிகள் ஒரு எதிர்தரப்பு வக்கீலாக மாறிவிட்டது. தமிழ்ச்சொல்தான் இது என்று அடித்துக் கூற ஆணித்தரமாகக் கூறிடத் துணிவு இல்லாதோருக்கு இப்போது வெற்றிமுகம்தான். இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே வெற்றிமுகம்தான்.
தமிழ்மொழி உலக மொழிகளில் ஊடும் பாவுமாக இருப்பதை இன்று எளிதில் உணர முடிகிறது. தமிழின் சிறப்புக்களையும் தமிழர்களின் சிறப்புக்களையும் இவ்வுலகிற்கு எடுத்தரைப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு செயலாற்றியவர் சாத்தூர் சேகரன்ஆவார். அவர் தம் நூல்கள் நவிலும் முதன்மையான கருத்துக்களை மட்டும் பின்வரும் பகுதியில் காணலாம்.
* சமசுகிருதத்திற்கு இன்றளவும் சொந்த எழுத்து கிடையாது.
* வடஇந்தியாவில் தமிழரின் மற்றொரு வகை எழுத்தான நகரி எழுத்தை (நகர்ப்புற தமிழ் வணிகர் எழுத்து) சமசுகிருதப் பண்டிதர் பயன்படுத்தத் தொடங்கினர்.
* சொந்த எழுத்தே இல்லாத சமசுகிருத மொழிக்கு இலக்கண நூல்களே இல்லை.
* பாணினி தன் நூலில் சமசுகிருதம் என்ற சொல்லை எங்குமேப் பயன்படுத்தவில்லை.
* பாணினி தன் இலக்கண நூலை “பாஷா” என்ற நூலுக்காக எழுதினேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
* பாணினி கையாளும் பல நூறு சொற்கள் சமசுகிருதத்தில் இல்லை. மாறாக, திரிந்த கிரேக்க மொழிச் சொற்களாகவும் திரிக்கப்பட்ட தமிழ்ச் சொற்களாகவுமே அச்சொற்கள்உள்ளன. பிற்கால உரையாசிரியர்களாலும் அவை சமசுகிருதச் சொற்கள் என்று நிரூபிக்க முடியவில்லை.
* ஆரியர்கள் ஒரு நாடோடிகள் என்ற பேருண்மை உலகம் அறிந்ததே. Rolling Stone gather no mass - என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப - உருண்டோடும் கல் பெரியதாவதில்லை, மாறாக சிறுத்துக் கொண்டே போகும். நாடோடிகள் (Nomads) உலகில் ஒரு நாகரிகத்தை நிறுவியதாக சரித்திரமே இல்லை. உலகில் ஒரு எடுத்துக்காட்டு கூடக் கிடையாது. ஆனால், ஆரியர் மட்டும் எப்படி நாகரிகமாய் வாழ்ந்திருக்க முடியும்? கட்டுக்கதைகள் புனைவதில் ஆரியருக்கு நிகர் யாருமே இல்லை. அத்தனை புழுகுகள், கூற்றுகள் - அத்தனையும் பொய் மூட்டைகள்.
* சாயனர் காலத்தில் பல்லாயிரம் நூல்கள் சமசுகிருதமாக்கப்பட்டு மூலத்தமிழ் அல்லது பிராகிருத நூல்கள் அழிக்கப்பட்டன.
* கடல் தாண்டக்கூடாது என்பது ஆரியருக்கு அவர்கள் நூல்கள் கூறிய கட்டளை. கடலைத் தாண்டும் வாய்ப்பு ஆரியனுக்கு வந்ததே இல்லை. கடல்தாண்டி வாணிகம் செய்யும் தமிழர்களே வானியலை உருவாக்கினர். தமிழ் வாணிகர்க்கே இது பயன்பட்டது. எல்லாக் கலைகளுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் தமிழில் வரையறை நூல்கள் இல்லை. எழுதி வைத்தால் மாறிவரும் சூழல்களுக்கு அவை ஒத்து வராமல் போகும். எனவேதான், தமிழ் முன்னோர்கள் எதனையும் எழுதி வைக்காமல், மரபாக மரபு சார்ந்த கருத்தாக வைத்திருந்தனர்.
* இப்படிப்பட்ட மரபு சார்பு கருத்துகளைப் பின் நாளில் ஆரியப் பண்டிதர்கள் தம் அறியாமை நீக்க வேண்டி நூலாக எழுதி வைத்தனர். அப்படிப்பட்டவர்களில் ஆரியப்பட்டர் ஒருவர். தமிழரின் வானசாத்திரக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு தான் கண்டுபிடித்ததாகக் கூறினார். இதனையே, பிராமணப் பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டு இந்திய வானியலுக்கு அவரையே முதலும் மூலமுமாக ஆக்கினர்.
* இந்தியா முழுவதும் 80000 கல்வெட்டுகளுக்கு மேலிருக்க தமிழகத்தில் மட்டுமே 6000 கல்வெட்டுகள்உள்ளன. சமசுகிருதத்திற்கோ சில நூறு மட்டுமே உள்ளன. அவை யாவுமே பிற்காலக் கல்வெட்டுகளே.
மேற்கூறும் கருத்துக்களை, சாத்தூா் சேகன் இயற்றிய நூல்களில் நம்மால் முழுமையாகக் காண இயலுகின்றது. இலக்கணத் துறையில் வல்லவராயும், வேர்ச்சொல் ஆய்வில் முன்னணியிலும், ஒப்பாய்வுத்துறையில் நிகரற்றவராயும் திகழக்கூடியவரே சாத்தூர் சேகரன் ஆவார். தமிழ் மொழி, உலக மொழிகள் யாவற்றிலும்உள்ளதா? என்ற ஆச்சரியமான நமது வினாவிற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் கூறும் திறம்படைத்தவர். மேலும் தமிழின் சரியான பரிணாமத்தை உலகிற்கு எடுத்துரைத்த மாபெரும் மொழியியலாளரே சாத்தூா் சேகரன் எனில் அது மிகையில்லை.
குறிப்புகள்
1. சமசுகிருதம் ஒரு மொழி அல்ல, சாத்தூா் சேகரன், பவானி பைன் ஆா்ட்ஸ், முதல் பதிப்பு மே 2010. ப.எண்-104
2. மேலது, ப.எண்-106
3. தமிழும் ஆங்கிலமும், சாத்தூா் சேகரன், பன்னாட்டு மொழி மையம் (பதிப்பகம்), சென்னை-600001, மூன்றாம் பதிப்பு 2010. ப.எண்-136
4. சமசுகிருதம் ஒரு மொழி அல்ல, சாத்தூா் சேகரன், பவானி பைன் ஆா்ட்ஸ், முதல் பதிப்பு மே 2010. ப.எண்-184
துணைநின்றவை
1. வடமொழிவரலாறு, மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணா் (http://www.tamilvu.org)
2. தமிழ் வரலாறு, மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணா் (http://www.tamilvu.org)
3. சமசுகிருதம் ஒரு மொழி அல்ல, சாத்தூா் சேகரன், பவானி பைன் ஆா்ட்ஸ், முதல் பதிப்பு மே 2010.
4. இடைக்காலத்தமிழ், சாத்தூா்சேகரன், பன்னாட்டு மொழி மையம் (பதிப்பகம்), சென்னை -,600001, நான்காம் பதிப்பு 2010.
5. தமிழும் ஆங்கிலமும், சாத்தூா் சேகரன், பன்னாட்டு மொழி மையம் (பதிப்பகம்), சென்னை-600001, மூன்றாம் பதிப்பு 2010.
6. தமிழின் ஊடும் பாவும், சாத்தூா் சேகரன், பன்னாட்டு மொழி மையம் (பதிப்பகம்), சென்னை-600001, முதல்பதிப்பு 1998.
7. குமரிக்கண்டம் உண்மையே, சாத்தூா்சேகரன் - பன்னாட்டு மொழி மையம் (பதிப்பகம்), சென்னை-600001, ஜூன் 2010.
8. இருக்கு நூல் முதல் நூலுமல்ல மூல நூலுமல்ல, சாத்தூா் சேகரன், முத்தமிழ்ப்பதிப்பகம், சென்னை—600 099,முதல்பதிப்பு-2012.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.