பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்:
மரபு போற்றலும் புதுமை படைத்தலும்
முனைவர் கு. சு. செந்தில்
உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி - (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை - 600061.
முன்னுரை
தமிழில் பிரபந்தம் என்னும் புதிய இலக்கிய வகை உருவாக்கத்திற்குத் தொல்காப்பியம் அடித்தளமிட்டிருக்கிறது. பிரபந்தம் என்னும் சொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருள். சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் இவ்விலக்கிய வகை மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணை புரிந்தன. பாட்டியல் நூல்கள் தமிழில் 96 வகை பிரபந்தங்கள் உள்ளதாகக் கூறுகின்றன. ஆனால் இவ்வெண்ணிக்கையைக் கடந்து பல இலக்கிய வகை உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பிரபந்தத்தை முதன்முதலில் தோற்றுவித்தவராகக் காரைக்கால் அம்மையாரைக் கூறுவர். இவர் புதுவகை பிரபந்தத்தைத் தோற்றுவித்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கினார். அதன் பின் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பிரபந்தம் புனையத் தொடங்கினர்.19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தனித்தமிழ் இயக்க வளர்ச்சியினால் பிரபந்தத்தைச் சிற்றிலக்கியம் எனக் கூறத்தொடங்கினர். இச்சொல் பொருளுடையதன்று என்று கூறுபவர்களும் உண்டு. பிற்காலத்தில் குமரகுருபரர், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றவர்கள் மிகுதியான பிரபந்தங்களை இயற்றினர். இவர்களில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தம் படைப்புகளில் மரபினைப் போற்றிப் பா புனைந்திருக்கிறார். அதே வேளையில் அட்டப்பிரபந்தத்தில் எவரும் கூறாத புதுமையான யாப்பு வடிவங்களையும் தொடையமைதிகளையும் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் இவர் அட்டப்பிரபந்தத்தில் செய்திருக்கிற யாப்புப் புதுமையினைக் கண்டு காட்டுவதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு அழகிய மணவாளதாசர், இரங்கநாத தாசர் எனும் சிறப்புப் பெயர்களும் உண்டு. சோழநாட்டில் உள்ள ‘திருமங்கை’ என்னும் ஊரில் பிறந்தவர். வெண்மணி என்னும் ஊரினர் என்றும் கூறுவர். பதுமநாப பட்டரின் மகனார்; மணவாள மாமுனிகளின் மாணவர்க்கு மாணவர் என்றும் கூறுவர். தொல்காப்பியம் முதலான பேரிலக்கணங்களையும் சங்கத்தமிழ் நூல்களையும் வைண சமய நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றவர். தமிழ், வடமொழி எனும் இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருமால் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் அவர் பாடிய எட்டு பிரபந்தங்களின் தொகுப்பிற்கு அட்டப்பிரபந்தம் என்பது பெயர். ‘அட்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ எனும் வழக்கு அதன் மேன்மையினை எடுத்துக்காட்டுகின்றது.
அட்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களையும் ஒருவரே பாடவில்லை; மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடிப் பின்னர் தொகுக்கப்பட்டு ஒருவர் மீது வழங்குகிறது என்று கலைக்களஞ்சியம் (தொ.7, ப. 372) கூறுகின்றது. ஆனால் வைணவ சமயத்தினர் இந்நூல் ஒருவராலேயே இயற்றப்பட்டது என்னும் கருத்தினராக இருக்கின்றனர். திருநறையூர் நம்பி மேகவிடுதூது, பரப்பிரம விவேகம், திருவரங்க யமகவந்தாதி, திருவேங்கடத் திரிபந்தாதி, திருவரங்கக் கோவை, எதிராசரந்தாதி முதலிய பிரபந்தங்களையும் இவர் எழுதியதாகக் கூறுவர்.
காலம்
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையேக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. “1123இல் தோன்றிய பட்டருடைய மாணவராக விளங்கியமையால் இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு” (தொ.1, ப. 887) என்று வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகின்றது. ஆனால் கலைக்களஞ்சியம் 13ஆம் நூற்றாண்டு (தொ.7, ப. 372) என்று வரையறை செய்கின்றது. நா. இராமானுசம், சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணைக் கலம்பகமும், அய்யங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகமும் ஒரே காலத்தில் பாடப்பெற்றவை என்னும் காரணத்தைக் கூறி 16ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் வாழ்ந்திருக்கிறார் (நா. இராமானுசம், 1980, ப.104) எனக் குறிப்பிட்டுள்ளார். “ஐயங்கார் 16ஆம் நூற்றாண்டில் தமிழ்நூல் செய்திருக்கிறார்” (மு. அருணாசலம் 2005, 274) என்று மு. அருணாசலம் சுட்டுகின்றார். ந.சி. கந்தையா பிள்ளை, பாலூர் கண்ணப்ப முதலியார், கா. சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் இவர் 17ஆம் நூற்றாண்டினர் எனக் கருத்துரைத்துள்ளனர். அட்டப்பிரபந்தத்திற்கு உரையெழுதிய மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, இவர் “பட்டர் என்பவரிடம் அருங்கலை பயின்றவர், கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அவையில் பணிபுரிந்தார்” (ப. 5) என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குறித்த ஆய்வாளர்களில் பலரும் அவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்வதால் அக்கருத்து இங்கு வலுப்பெறுகிறது. திருமலை நாயக்கரின் அரசவையில் அரசியல் பணியில் இவர் ஈடுபட்டிருந்தாலும் இவருடைய மனம் எப்பொழுதும் இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தது என்றும், இவரின் இறையாற்றலை உணர்ந்த அரசன், இறைப்பணியாற்ற அப்பணியிலிருந்து விடுவித்தார் என்றும் கூறுவர்.
திருவரங்கக் கோயிலில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் வீற்றிருக்கும் பொழுது அரங்கத்தானைப் புகழ்ந்து திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல் திருநாமம் முதலிய பிரபந்தங்களைப் பாடினார். இவர் திருவரங்கத்தானைத் தவிர வேறு தலத்துப் பெருமாளைப் பாடாத இயல்பினர். ஆதலால் வேங்கடத்தான் இவரால் பாடப்பெற வேண்டுமென எண்ணி இவர் கனவில் தோன்றி, “வேங்கடத்தான் மீது சில நூல்கள் பாடுவாயாக!’ எனக் கூற, வேங்கடமலையில் குரங்குகள் அதிகமாக இருப்பதால் ‘அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்’ என இகழ்ந்துரைத்தார். பிறகு வேங்கடத்தான் அய்யங்காருக்கு கண்டமாலை என்னும் நோயை உண்டாக்க, அது வேங்கடத்தான் உண்டாக்கியது என்பதை உணர்ந்த பின்னர் அத்தெய்வத்தின்மீது திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூல்களைப் பாடியதாகத் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (ப.36) கூறுகின்றது.
திருவரங்கத்தில் இருந்த இவரிடம் திருவானைக்காவில் வசித்த சைவர்கள்வருகை தந்து சிவன் மீது சில பாடல்களைப் பாடவேண்டியதாகவும், அதற்கு இவர் மறுத்ததாகவும் அதனால் அவர்கள் பெருமாள் கோயில் பசுவைக் கட்டி வைத்துக்கொண்டு இவரைப் பாடச் சொன்னதாகவும் “மங்கை பாகன் எனத்தொடங்கி அங்ஙண் ஞாலம் உண்டபோது வெள்ளி வெற்பகன்ற, ஆதலால் அரங்கனன்றி வேறு தெய்வம் இல்லையே’ எனச் சிவனைக் குறைகூறுவதாகப் பாடி முடித்தாகவும், இதனால் சைவர்களுக்கும் இவருக்கும் சொற்போர் மூண்டதாகவும் கூறுவர். குமரகுருபரருக்கும் இவருக்கும் சமயப்போர் நிகழ்ந்தது என்றும் கூறுவர். ஆனால் மு. அருணாசலம் இது பொய்க்கதை என்று கூறி மறுத்திருக்கிறார்.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் கருத்துகளைத் தம் பிரபந்தங்களில் இவர் பயன்படுத்தியுள்ளார். திருவரங்கக் கோயில் முன்பு தியானத்தில் இருக்கும் பொழுது கோயிலுக்குரிய முடப்பசு காலிடறி இவர்மீது விழுந்ததாகவும் அதன் விளைவாகத் தம் 70ஆம் அகவையில் இறுதி எய்தினார் என்றும் வாழ்வியல் களஞ்சியம் கூறுகின்றது.
பா வடிவங்கள்: மரபும் புதுமையும்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதிய பிரபந்தங்களில் முதலாவதாக அமைவது திருவரங்கக் கலம்பகம் ஆகும். இதில் நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, மயங்கிசை கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலித்தாழிசை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, தரவுகொச்சகக் கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வியனிலை மருட்பா, வேற்றொலி வெண்டுறை, அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய சந்த விருத்தம், அறுசீர், எழுசீர், எண்சீர், பன்னிருசீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தம், எண்சீர், நாற்பத்தெண்சீர் ஆசிரிய வண்ண விருத்தம் என்னும் பா, பாவின வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இவரது ஏனையப் பிரபந்தங்களை விட இக்கலம்பகம் பொருளமைதியிலும் யாப்பு முறையிலும் சிறப்பு நிலையில் அமைந்து கற்போருக்கு உவகையைத் தருகின்றது. பல்வேறு பா, பாவின வடிவங்களில் திறம்பட கவிதை புனைகிற ஆற்றல் இவருக்கு இருந்ததை இக்கலம்பகம் உணர்த்துகின்றது.
திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி ஆகியவற்றில் முறையே 112, 107, 103, 103 எனும் எண்ணிக்கையிலான கட்டளைக்கலித்துறைச் செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. சீரங்கநாயகர் ஊசல் திருநாமத்தில் 35 எண்சீர் ஆசிரிய விருத்தச் செய்யுளும் திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகியவற்றில் முறையே 104, 117 நேரிசை வெண்பாக்களும் அமைந்துள்ளன. இதன் வழியாக ஆசிரியர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்குக் கட்டளைக்கலித்துறைச் செய்யுளில் மிகுதியாக ஈடுபாடு இருந்ததையும் அதன் வழியாகத் திருமாலின் அருளிச்செயல்களைச் சிறந்த முறையில் பாடியுள்ளதையும் அறியமுடிகிறது. இதற்கு அடுத்த நிலையில் நேரிசை வெண்பாவில் மிகுதியான பாடல்களைப் பாடியிருப்பதை அறிய முடிகிறது.
அட்டப்பிரபந்தத்தில் இடம்பெறும் நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, வியனிலை மருட்பா ஆகியன மரபான யாப்பமைதியிலேயே அமைந்துள்ளன. இவற்றில் புதுமை எதுவும் காணப்பெறவில்லை. ஆனால் பாவினத்தில், குறிப்பாக, ஆசிரிய விருத்தத்தில் விருத்தப்பாவியல் எனும் நூல் கூறாத புதிய வாய்ப்பாட்டு அமைப்பில் பல பாடல்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தத்தில் இவரால் பல புதுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதல் அடி என்ன வாய்ப்பாட்டு அமைப்பில் அமைகிறதோ ஏனைய அடிகளும் அதே வாய்ப்பாட்டு அமைப்பில் அமைவதே விருத்தம் என்பர். சில இடங்களில் விளச்சீர் வரவேண்டிய இடத்தில் காய்ச்சீர் வரலாம்; அவ்வாறு வருவது குறையில்லை.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்கு விருத்தப்பாவியல் ஏழு வகையான வாய்ப்பாட்டு அமைப்பைக் கூறுகின்றது. திருவரங்கக் கலம்பகத்தில் அமைந்துள்ள இவ்வகையிலான 12 பாடல்களில் இரு பாடல்கள் விருத்தப்பாவியல் கூறாத “விளம், விளம், விளம், விளம், விளம், விளம்” என்னும் புதிய அமைப்பு முறையில் அமைந்து காட்சி தருகின்றன.
“காலமு ணர்ந்தகு றத்திநான்
கருதினை ஒன்றது சொல்லுவேன்” (அட். பா. 75)
எனும் இப்பாடலின் ஏனைய அடிகளும் 54ஆவது பாடலும் மேற்கூறிய வாய்ப்பாட்டு அமைப்பிலேயேத் திகழ்கின்றன. இதில் அனைத்துச் சீர்களும் விளச்சீராக அமைந்து கற்போருக்கு இன்பத்தைத் தருகின்றன.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
திருவரங்கக் கலம்பகத்தில் 42, 73, 103 என்னும் பாடல்கள் எழுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் விருத்தப்பாவியல் கூறுகின்ற “விளம் மா விளம் மா விளம் விளம் மா” என்னும் வாய்ப்பாட்டு முறையிலேயே அமைந்திருக்கின்றன. இதில் புதுமை ஏதும் இடம்பெறவில்லை.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
விருத்தப்பாவியல் எண்சீர் ஆசிரிய விருத்தத்திற்கு மூன்று வகையான வாய்ப்பாட்டு அமைப்புகளை மட்டுமே இலக்கணமாகக் கூறுகின்றது. திருவரங்கக் கலம்பகத்தில் இவ்வகையில்17 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஆறு வாய்ப்பாட்டு அமைப்புகளை இவர் புதியதாகப் படைத்திருக்கின்றார்.
“கற்றார் எனினும் பதினால் உலகும்
கண்டார் எனினும் தண்டா மிகுபற்(று)” (அட். பா. 11)
என்னும் பாடல் “மா மா மா மா மா மா மா மா” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பு முறையில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஏனைய அடிகளும் 52ஆவது பாடலும் இவ்வாய்ப்பாட்டு அமைப்பிலேயேத் திகழ்கின்றன. இவ்விரு பாடல்களின் அனைத்துச் சீர்களும் மாச்சீராக அமைந்து கற்போருக்கு உவகையைத் தருகின்றன.
“உண்டுமிழ் வாசமுடன் தண்டலை மாருதம்வந்
துலவிய சாளரமும் குலவிய வாள்நிலவும்” (அட். பா. 90)
இப்பாடல் “விளம் காய் விளம் காய் விளம் காய் விளம் காய்” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பில் அமைந்துள்ளது. இதன் ஏனைய அடிகளும், 16 ஆவது பாடலும் இவ்வமைப்பு முறையில் அமைந்து காட்சி தருகின்றன.
“மருவு தந்தையும் குருவும் எந்தையும்
மருள்கெ டுப்பதும் அருள்கொ டுப்பதும்” (அட். பா. 20)
எனத் தொடங்கும் பாடல், “மா விளம் மா விளம் மா விளம் மா விளம்” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பில் உள்ளது. 69ஆவது பாடலும் இம்முறையிலேயே அமைந்துள்ளது.
“உருமாறிப் பலபிறப்பும் பிறந்துஞ் செத்தும்
ஊசலா டுவதடியேன் ஒழியும் வண்ணம்” (அட்.பா. 64)
இது“காய் காய் மா தேமா காய் காய் மா தேமா” என்னும் வாய்ப்பாட்டினதாகும். திருவரங்கக் கலம்பகத்தில் உள்ள 21, 94, 99 என்னும் பாடல்களும் இவ்வமைப்பில் அமைந்துள்ளன.
“இருளினும் வெளியினும் மருளினும் தெருளினும்
இன்பமே அடையினும் துன்பமே மிடையினும்” (அட். பா.34)
இப்பாடல் “விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம்” என்னும் வாய்ப்பாட்டு முறையில் அமைந்துள்ளது. திருவரங்கக் கலம்பகத்தின் 56, 83ஆவது பாடல்களும் இம்முறையினதாகும்.
“குருகுறங்கு கானலே! கருநிறங்கொள் பானலே!
கொடியிருண்ட ஞாழலே! நெடியகண்டல் நீழலே!” (அட். பா.37)
என்னும் இப்பாடல் “காய் விளம் காய் விளம் காய் விளம் காய் விளம்” என்னும் அமைப்பு முறையில் உள்ளது. மேற்காட்டிய அனைத்து வாய்ப்பாட்டு அமைப்புகளும் இவ்வாசிரியரால் புதுமையாகப் படைக்கப்பட்டனவாகும்.
சீரங்கநாயகர் ஊசல் திருநாமத்தில் 35 எண்சீர் ஆசிரிய விருத்தப்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் “காய் காய் மா தேமா காய் காய் மா தேமா” எனும் ஒற்றை வாய்ப்பாட்டு முறையிலேயே அமைந்துள்ளன. விளச்சீர் வரவேண்டிய இடத்துக் காய்ச்சீரும் காய்ச்சீர் வரவேண்டிய இடத்து விளச்சீரும் சில பாடல்களில் இடம் பெற்றுள்ளனவே தவிர, இப்பாடல்களில் புதுமை ஏதும் அவரால் நிகழ்த்தப்பெறவில்லை.
பன்னிரு சீர் ஆசிரிய விருத்தம்
திருவரங்கக் கலம்பகத்தில் 38, 39, 55, 78 ஆகிய பாடல்கள் பன்னிருசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் விருத்தப்பாவியல் கூறுகின்ற “மா மா காய் மா மா காய் மா மா காய் மா மா காய்” எனும் வாய்ப்பாட்டு அமைப்பிலேயே காட்சி தருகின்றன.இவ்வமைப்பு முறையில் அவர் ஏதும் புதுமை நிகழ்த்தவில்லை.
பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்
பதினான்கு சீர் ஆசிரிய விருத்தத்திற்கு விருத்தப்பாவியல் தனியே இலக்கணம் வகுக்கவில்லை. அதன் உரையில் எண்சீர் விருத்த அமைப்புகள் இரட்டித்துப் பதினான்கு சீராக வரும் எனக் கூறப்பட்டுள்ளது. திருவரங்கக் கலம்பகத்தில் 7 பாடல்கள் பதினான்குசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன. அதில் 5 பாடல்கள் இரண்டு புதிய அமைப்பு முறைகளில் காட்சி தருகின்றன.
“மானை எய்தவர் இன்னம் என்மட
மானை எய்திலர் நேமியால்
மாலை தந்தவர் பைந்து ழாய்மது
மாலை தந்திலர் இந்திரன்” (அட். பா. 33)
என்னும் இப்பாடலடி “மா விளம் மா விளம் மா விளம் விளம் மா விளம் மாவிளம் மா விளம் விளம்” என்னும் அமைப்பு முறையில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஏனைய அடிகளும் 71ஆவது பாடலும் இவ்வகையினதாகும்.
“வாடி ஓட வனசம் அன்ன
இருகண் வெள்ளம் அருவிபோல்
மருவி யோட மதனன் வாளி
யுருவி யோட வாடைபூ” (அட். பா. 45)
இப்பாடலடி “மா மா மா மா மா மா விளம் மா மா மா மா மா மா விளம்” என்னும் அமைப்பு முறையில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஏனைய அடிகளும் 59, 87 ஆகிய பாடல்களும் இவ்வமைப்பு முறையிலேயே அமைந்துள்ளன.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருமால் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் மட்டும் பா புனையவில்லை. தமிழ் யாப்பு மீதும் அவருக்கு மிகுந்த பற்று இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. திருவரங்கக் கலம்பகத்தில் அமைந்துள்ள ஆசிரிய விருத்தப்பாக்களில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்கு சீர்களில் அமைந்துள்ள பாக்களில், இவர் மிகுதியாகப் புதுமை படைத்திருக்கிறார் என்பதை இவ்வாய்வின் வழி அறியமுடிகிறது.
தொடையமைதி: மரபும் புதுமையும்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் மரபிலக்கணங்கள் கூறுகின்ற தொடை வகைகளைப் பின்பற்றி அட்டப்பிரபந்தத்தில் உள்ள பிரபந்தங்களை இயற்றியுள்ளார். நூலின் முதலாவதாக அமைந்த திருவரங்கக் கலம்பகத்தில் புதுமையான பலவகை தொடையமைதிகளைப் படைத்துள்ளார்.
மோனை
அடிதோறும் முதலெழுத்து ஒத்து வருவது அடி மோனையாகும். தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் முதலான மரபிலக்கண நூல்கள் மோனைக்கு இலக்கணம் வகுத்துள்ளன. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தம் பிரபந்தத்தில் ஒன்று, ஐந்தாம் சீரில் அமையும் மத்திம மோனையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வகை மோனை கட்டளைக்கலித்துறைப் பாக்களில் இடம்பெறுவன. இதற்கு அடுத்த நிலையில் நேரிசை வெண்பாவில் பொழிப்பு மோனையை மிகுதியாகக் கையாண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தலையாகு மோனை, அதம மோனை, உத்தம மோனை ஆகியனவற்றுக்கு இடம் தந்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை எதுகை என்பர். மோனையைப் போல எதுகையையும் இலக்கண ஆசிரியர்கள் பல வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதில் தலையாகு எதுகை என்பதும் ஒன்று. சீர் முழுதும் ஒன்றி வருவதை இவ்வகை எதுகையாகக் கூறுவர். திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய பிரபந்தங்களில் தலையாகெதுகை சிறந்த நிலையில் அமைந்து காட்சி தருகின்றன. இதற்கு அடுத்த நிலையில், இரண்டடி எதுகை பாடல்களில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டடி ஓர் எதுகையாகவும் அடுத்த இரண்டடியும் மற்றொரு எதுகையாகவும் அமைவது இவ்வகையாகும். திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய மூன்றிலும் இவ்வகை எதுகை சிறப்பு நிலையில் இடம்பெற்றுள்ளன.
அடியெதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, மேற்கதுவாய் எதுகை, கடையிணை எதுகை, பின் எதுகை, இடைபுணர் எதுகை ஆகியன அருகிய நிலையிலேயே இடம்பெற்றுள்ளன. ஆகவே பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தலையாகெதுகை, இரண்டடி எதுகை என்னும் இரு அமைப்பு முறைகளுக்கு முதன்மை கொடுத்திருக்கிறார் என்பதை இவ்வாய்வின்வழி அறியமுடிகிறது.
கழிநெடிலடிகளில் புதுமை
ஐந்து சீர்களுக்கு மேற்பட்ட சீர்களையுடைய அடியைக் கழிநெடிலடி எனக் கூறுவர். திருவரங்கக்கலம்பகத்தில் 61ஆவது பாடல் அறுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளது. இப்பாடலில் எதுகை சிறப்பு நிலையில் அமைந்து காட்சியளிக்கிறது.
“இரும்புவனம் விரும்புவனம் அணியரங்கர்
பணியரங்கர் இயம நண்ப!” (அட். பா. 61)
இப்பாடலின் முதல் இருசீர் ஓரெதுகை பெற்றும் அடுத்த இருசீர் வேறொரு எதுகை பெற்றும் வந்திருப்பதைக் காணலாம்.
திருவரங்கக் கலம்பகத்தில் 42, 73 ஆகிய பாடல்கள் எழுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன.
“இரவியை இரவில் மதியினை மதியுள்
இறையினை இறையும்எண் ணரிய” (அட். பா.73)
இப்பாடலின் முதல் இருசீரும் ஓர் எதுகை பெற்றும், அடுத்த இருசீரும் வேறோர் எதுகை பெற்றும் அதற்கடுத்த இருசீரும் மற்றுமோர் எதுகை பெற்றும் அமைந்திருக்கிறது. இத்தகைய அமைப்பு முறையில் இப்பாடலின் ஏனைய மூன்று அடிகளும் அமைந்து கற்போர் மனதில் நிலைத்திருக்கிறது.
திருவரங்கக் கலம்பகத்தில் எண்சீர் ஆசிரிய விருத்தமாக அமைந்த 16, 20, 34, 37, 89 ஆகிய பாடல்களில் எதுகை சிறப்பு நிலையில் அமைந்து காட்சிதருகின்றன.
“அரவில் நடித்தாலும் உரவில் ஒடித்தாலும்
அடவி கடந்தானும் புடவி இடந்தானும்” (அட். பா.16)
என்னும் பாடலில் ஒன்று, மூன்றாம் சீர் ஓர் எதுகையாகவும் இரண்டு, நான்காம் சீர் மற்றொரு எதுகையாகவும் ஐந்து, ஏழாம் சீர் வேறோர் எதுகையாகவும் ஆறு, எட்டாம் சீர் பிறிதொரு எதுகையாகவும் அமைந்திருக்கின்றன. இப்பாடலின் ஏனைய அடிகளும்மேற்சுட்டிய எண்ணிக்கையில் அமைந்துள்ள பாடல்களும் இவ்வமைப்பு முறையிலேயே அமைந்து காட்சியளிக்கின்றன.
ஒன்றுக்கொன்று முரண்படுகிற முரண்தொடை பற்றிய பாடல்களையும், இயைபுத்தொடை பற்றிய பாடல்களையும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடியுள்ளார். அட்டப்பிரபந்தத்தில் திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் அந்தாதித் தொடை அமைப்பிலேயே அமைந்துள்ளன. இதன்வழியாக அந்தாதித் தொடை அமைய பாடல்கள் பாடுவதில் இவர் வல்லவராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதையும் அத்தொடையமைதிக்குத் தம் நூல்களில் முதன்மை கொடுத்திருக்கிறார் என்பதையும் அறியமுடிகிறது.
தொகுப்புரை
அட்டப்பிரபந்தம் ஒருவரால் இயற்றப்படவில்லை; மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டது என்னும் கருத்து நிலவுகிறது. இதற்கு வலுவான சான்றாதாரம் இல்லை என்றாலும் அக்கருத்தை முழுக்கப் புறந்தள்ளிவிடவும் இயலவில்லை. ஏனெனில் அவர் எழுதிய அட்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம் மொழிநடையாலும் யாப்பமைதியாலும் பெரிதும் வேறுபட்ட ஒன்றாகத் திகழ்கிறது. இக்கலம்பகத்தில் அவர் மரபைப் போற்றிப் பா புனைகின்ற அதேவேளையில் புதுமைகள் பலவற்றை படைத்திருப்பதையும் அறியமுடிகிறது.
விருத்தப்பாவியல் எனும் நூல் பிற்காலத்ததாக இருந்தாலும், அது தமிழில் உள்ள விருத்த அமைப்பு முறைகளைக் கண்டுகாட்டுவதாகவும் அதன் இலக்கணத்தை முறைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அந்நூல் கூறாத பல அமைப்பு முறைகளில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தப்பாக்களில் மிகுதியான புதுமைகளை ஆசிரியர்படைத்திருக்கிறார். அவர் கட்டளைக் கலித்துறையில் மிகுதியான செய்யுட்களை இயற்றியிருந்தாலும் விருத்தப்பாவில் அளவிலா ஈடுபாடு உடையவராகத் திகழ்ந்திருக்கிறார். ஐந்து சீர்களுக்கு மேற்பட்ட கழிநெடிலடிகளில் குறிப்பாக ஆசிரிய விருத்தத்தில் மோனை, எதுகை ஆகியன சிறந்த முறையில், மனங்கொள்ளத்தக்க வகையில் அமைந்து காட்சிதருகின்றன. இது கற்போருக்கு உவகையைத் தருவதாகவும் தமிழ் யாப்பின்மீது அவருக்கிருந்த பற்றை வெளிக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
துணைநூற்பட்டியல்
1. அகத்தியலிங்கம். ச., ஞானமூர்த்தி. த. ஏ, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, 12ஆவது கருத்தரங்க ஆய்வுக்கோவை, தொகுதி - 1, அண்ணாமலை நகர்: 1980.
2. அருணாசலம். மு., தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, தி. பார்க்கர், சென்னை, திருத்தப்பட்ட பதிப்பு: 2005.
3. பழனியப்பன். வெ., பழனி. உ., தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி. 3, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1989.
4. தாமோதரம்பிள்ளை. சி.வை., கட்டளைக் கலித்துறை, ஆய்வும் பதிப்பும் மணிகண்டன். ய, சென்னை, முதற்பதிப்பு: 2005.
5. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்., அட்டப்பிரபந்தம், வேணுகோபாலப்பிள்ளை (ப.ஆ), ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை: 1955.
6. பாலுசாமி. நா., வாழ்வியல் களஞ்சியம், தொகுதி. 1, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு: 1986.
7. வீரபத்திர முதலியார். தி., விருத்தப்பாவியல், தணிகாசல முதலியார். ஈ.என், கழகம், முதற்பதிப்பு: 1984.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.