கோத்தர் இனப்பழங்குடி மக்களின் சடங்கியல் மரபுகள்
முனைவர் த. ரெஜித்குமார்
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வேதாரண்யம்.
முன்னுரை
ஆரம்பகால மனிதன் நாடோடியாக அலைந்து திரிந்தான். தங்களுக்கென ஓர் இடத்தில் நிலையாக வாழ முற்பட்டபோது, இனக்குழு சமுதாயம் தோற்றம் பெற்றது. இனக்குழு மக்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளான பிறப்பு, இறப்பு, பூப்பு, திருமணம் தொடர்பாக சில செயல்களைக் காரணகாரியத்துடனோ அல்லது காரணகாரியமின்றியோ செய்தனர். இவ்வாறு அவர்கள் செய்த செயல்கள் வழிவழியாகப் பின்பற்றபட்டு, சடங்காக மாற்றம் பெற்றுள்ளது. தனிச்சாதி அல்லது குழுவில் வாழும் மக்களிடையே இச்சடங்குகளில் ஒற்றுமைக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இக்கட்டுரையானது கள ஆய்வின் போது சேகரித்த கோத்தர் இனப்பழங்குடி மக்களின் சடங்கியல் மரபுகளை முழுமையாக எடுத்துரைப்பதாக அமைகிறது.
கோத்தர்கள்
நீலகிரி மலைப்பகுதியில் சிறிய அளவில் வாழ்கின்ற பழங்குடி மக்கள் கோத்தர்கள் ஆவர். இவர்கள் தங்களை “கோ” என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் நீலகிரி மலைப் பகுதிகளில் ஏழு இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களின் குடியிருப்புகள் கோத்தகிரி, குன்னூர், உதகமண்டலம், கூடலூர் ஆகிய வட்டங்களில் அமைந்துள்ளன. கோத்தர் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. சில ஆய்வாளர்கள் மாடுகளைக் கொன்று தின்பவர்கள் என்று பொருள் கூறுகின்றனர். இப்பழங்குடி மக்கள் தங்களுக்குள் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கோத்தர் என்ற சொல் கௌட என்றத் திராவிடச் சொல்லான கொ (மலை எனப் பொருள்படும்) என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பது தெளிவு. கோத்தர்கள் காண்டியன் திராவிடப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்று எட்கர் தர்ஸ்டன் (1987.4:4) குறிப்பிடுகிறார்.
தொன்மக் கதைகள்
கோத்தர்களின் தோற்றம் குறித்த பல்வேறு தொன்மக்கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கோத்தர்களும், தோடர்களும், குறும்பர்களும் கம்பட்டராயன் என்னும் கடவுளின் வியர்வையிலிருந்து தோன்றினார்கள் என்று ஒரு தொன்மக்கதை கூறுகிறது. ஒரு நாள் கடவுள் இவர்களின் முன்பாகத் தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, ஒருவன் கலைத் திறமைகள் வேண்டும் என்றும், மற்றொருவன் எருமைகள் வேண்டும் என்றும், இன்னொருவன் எதிரிகளை அழிக்கும் திறமை வேண்டும் என்றும் கேட்டனர். இதில் கலைகளைப் பெற்றவன் கோத்தர் பழங்குடியாகவும், எருமைகளைப் பெற்றவன் தோடர் பழங்குடியாகவும், எதிரிகளை அழிக்கும் பில்லிசூனியம் முதலிய திறமைகளைப் பெற்றவன் குறும்பர் பழங்குடியினராகவும் மாறினர். கோத்தர்கள் இன்றும் இரும்புத் தொழில், மண்பாண்டத்தொழில் போன்ற கலைத்தொழில்களைச் செய்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
கோத்தர்களின் மற்றொரு தொன்மக்கதையின் படி, இறைவன் ஒரு ஆணையும், பெண்ணையும் தன்னுடைய வேர்வையிலிருந்து படைத்து அவர்களுக்கு ஒரு பசுமாட்டையும், பாதுகாப்பிற்கு வில் அம்பையும் கொடுத்தார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். இரு ஆண்களும் தவறுதலாக கடவுள் கொடுத்த பசுவைக் கொன்று விட்டனர். இதனால் கோபம் கொண்ட இறைவன் இளையவன் தலையினை மொட்டை அடித்தார். அவன் பின்னர் தோடர் பழங்குடியானான். மூத்தவன் கடவுளின் ஆணைப்படி தங்களுடைய கொலை குற்றத்தை நீக்கும் பிராயசித்தமாக இறந்த பசுவின் இரத்தத்தைக் குடித்து கடவுளின் மன்னிப்பைப் பெற்று கோத்தர் பழங்குடியானான்.
தொன்மக்கதைகள் அனைத்தும் கோத்தர், தோடர் பழங்குடிகளைச் சகோதரர்களாகவேப் பாவித்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால், இதனைத் தோடர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒவ்வொரு பழங்குடி மக்களும் தங்களை மேன்மைப்படுத்துவதற்காக எடுத்துரைக்கப்பட்ட கதைகளாக இவற்றைக் கொள்ளலாம்.
கோத்தர்களின் பூர்வீகம் குறித்தச் செய்திகள் அதிகமாகக் காண முடிவதில்லை. கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கயாத்துகளும், கட்டுக்காரர்களும் கோத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். நீலகிரி கோத்தப் பழங்குடியினரும் மேலே கூறப்பட்ட கர்நாடகப் பழங்குடியினரும் சைவ சமயத்தை சார்ந்தவர்கள் என பிருக்ஸ் கூறுகிறார். கோத்தர்கள் முதலில் மைசூரிலுள்ள கொல்லிமலையில் வந்து வாழ்ந்ததாக தர்ஸ்டன் (2003, vi :43) குறிப்பிடுகிறார். இவ்வாறு மானிடவியலார்களும், இனவரைவியலளார்களும் இவர்களைக் குறித்துப் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
குடியிருப்புகள்
கோத்தர்கள் குடியிருக்கும் ஊரினை கோக்கால் என்று கூறுகின்றனர். இவர்கள் ஏழு இடங்களில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். அவை கோத்தகிரி (போர்காட் கோக்கால்), கீழ் கோத்தகிரி (கிளார்ட் கோக்கால்), திருச்சிக்கடி (திச்காட் கோக்கால்) கொல்லிமலை (கொல்மேல் கோக்கால்), சேலூர் கோக்கால் (குர்கோஜ் கோக்கால்), குந்தா கோக்கால் (மேக்னாட் கோக்கால்), கூடலூர் கோக்கால் (கல்காச் கோக்கால்) என்பனவாகும்.
கோத்தர் பழங்குடிகளிடம் மற்ற பழங்குடி மக்களைப் போன்று உட்பிரிவுகள், இனப்பிரிவுகள் காண்பதற்கில்லை. இவர்கள் ஊரினை மூன்றாக பாகுபடுத்தியுள்ளனர். அவை மேகேர், நட்கேர், கீகேர் என்பனவாகும். கேர் என்பது தெருவினைக் குறிப்பிடுவதாகும். எனவே மேல் தெருவை மேகேர் என்றும், நடுத்தெருவை நட்கேர் என்றும், கீழ்த்தெருவை கீகேர் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் இப்பகுப்புமுறை காணப்படுகிறது. இவ்வாறு இவர்கள் தங்களுக்குள் பகுத்துள்ள கேரி அமைப்பின் அடிப்படையிலே சமூக அமைப்பு காணப்படுகிறது. ஏனெனில் ஒரே சேரியில் வாழ்கின்ற அனைவரும் சகோதரர்கள் ஆவார். இவர்கள் தங்களுக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
கோத்தர்கள் கைவினைக் கலைஞர்களாக விளங்குவதால், பல்வேறு விதமானத் தொழில்களைச் செய்கின்றனர். இவர்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். எனவே, ஆண்கள், பெண்கள் எல்லோரும் பயிர்த்தொழில் செய்கின்றனர். மேலும் கைவினைத் தொழில்களான மண்பாண்டம் செய்தல், கொல்லுத்தொழில், தச்சுத்தொழில், முதலிய கலைத்தொழில்களைச் செய்கின்றனர்.
சடங்கியல் மரபு
மனிதனானவன் ஒருமைப்பாடு, ஒழுங்கு, குறிக்கோள் ஆகியவற்றுடன் வாழத் தலைப்பட்ட போது ஏற்படுத்திக் கொண்ட சம்பிரதாயச் சாத்திரமே சடங்கு ஆகும். இதனைக் கம்பர் (கம்.பா.87), மறையவன் சடங்கு காட்ட என்று குறிப்பிடுகிறார். செந்தமிழ் அகராதி (1997:376) சடங்கு என்பதற்குக் கிரியை அல்லது மதத் தொடர்பான செய்கை என்றும் விளக்கம் அளிக்கின்றது. மனிதன் கருவுயிர்த்தல் முதல் இறப்பு வரை பல படிகளைக் கடக்கிறான். ஒவ்வொரு படியின் முக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பதற்காகவும், அதன் சிறப்பையும், பண்பையும், பலனையும் நினைவூட்டுவதற்காகவும் பல சிறப்புச் செயல்கள் செய்யுமாறு ஒவ்வொரு இனத்தாரும் சில விதிகளை உண்டாக்கி இருக்கிறார்கள். அச்சிறப்புச் செயல்களேச் சடங்குகள் எனப்படும்.
ஆரம்பத்தில் தேவதைகளும், இறந்த ஆவிகளும் மக்களுக்குக் கேடு செய்யக்கூடும் என்ற நம்பிக்கையில் சடங்குகள் நடத்தப்பட்டன என்று கலைக்களஞ்சியம் (1956. iv:392) குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால், அவை சடங்குகள் என்று பெயர் பெறுகின்றன என்று சக்திவேல் (1980:12) விளக்கம் தருகிறார். மனித வாழ்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை நடத்தப்படும் செயல்கள் அல்லது நிகழ்வுகளை வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்று கூறலாம்.
பிறப்புச் சடங்கு
பிறப்புச் சடங்குகள் இனத்திற்கு இனம், சமயத்திற்குச் சமயம் மாறுபட்டவைகளாகவே இருக்கின்றன. இச்சடங்கு பெண் கருவுற்றது முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டப்படும் வரை நடைபெறுகின்றது. மனித வாழ்க்கையின் தொடக்க நிகழ்ச்சியாக அமைவது பிறப்பு ஆகும். தமிழ் இலக்கியங்கள் குழந்தைப்பேற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. குறிப்பாகத் தலைவி சூலுறும் பக்குவ காலத்தில் தலைவன் அவளைப் பிரிந்திருக்கக் கூடாது என்ற கருத்தினைத் தொல்காப்பியர் (தொல்.1132) குறிப்பிடுகிறார்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு” (திரு.60)
என்று திருவள்ளுவரும், குழந்தைப் பேற்றிற்கு அக்கால சமுதாயம் தந்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
மானுட சமுதாயத்தில் குழந்தைப்பேறு உடையவர்களே பேறு பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். ‘குழந்தையைப் பெற்றவர்களே இவ்வுலகில் புகழோடு வாழ்ந்து மறுமை அடைவர்’ என்ற கருத்தினை அகநானூறும் வலியுறுத்துகின்றது. ‘பிள்ளை பெறாதவர்களுக்குப் போரிலிருந்து உயிர்ப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது’ என்று புறநானூறு சான்றளிக்கிறது. பெண்ணின் தலையாயக் கடமை குழந்தை பெற்றுத் தருவதே என்பதை, “ஈன்று புறந்தருதல் எந்தலை கடனே” என்று புறநானூறு (புறம்: 312) கூறுகிறது. ஒவ்வொரு இனக்குழு மக்களும் குழந்தை பிறந்தால் சில சடங்குகளைச் செய்கின்றதைக் காணமுடிகிறது.
கோத்தர் பழங்குடியினர், குழந்தை பிறந்தால் அதனை மிகவும் எளிய முறையில் கொண்டாடுகின்றதைக் காணமுடிகிறது. பெண்கள் பேறு காலத்தில் ஊருக்கு வெளியே தனியாக அமைக்கப்பட்டுள்ள பொது வீட்டில் அமர்த்துகின்ற வழக்கம் உள்ளது. இவ்வீட்டினை ‘தேல்பய்’ என்று கூறுவர். பேறுகாலத்தில் பெண்ணுக்கு உதவியாக வயதானப் பெண்கள் அல்லது தோழிகள் அவ்வீட்டில் தங்கி இருப்பார்கள். முன்பு பெண்களின் பேறுகாலம் அவ்வீட்டில் வைத்தே நடைபெற்றது. பேறுகாலத்தை கோத்தரின் வயதானப் பெண்கள் பார்த்ததாகக் கூறுகின்றனர். தற்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு மருத்துவமனையில் பேறு நடைபெற்றாலும் குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள் வரை பொது வீட்டில் தான் குழந்தையும் தாயும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். பதினைந்தாம் நாளன்று தாயும் குழந்தையும் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு தங்கள் வீட்டிற்குத் திரும்பி வருவார்கள். அந்த நாளை மிகவும் எளிமையாக ஊராரை அழைத்து விருந்து வைக்கின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த பெண்கள் வீட்டிற்கு விலக்காகும் காலங்களில் குழந்தையினைத் தொடக்கூடாது. எனவே, அவர்கள் பொதுவீட்டிற்குச் சென்று விடுவர். அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களும் குழந்தையைக் கணவன் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. பொது வீட்டில் இருக்கும் நாட்களில் குழந்தைக்குத் தாய் பால் ஊட்ட முடியாத அவல நிலை பெண்களுக்கு உள்ளது. எனவே, வயதான பெண்கள் பால் கட்டியாகி விடும் என்பதால் மார்பைக் கசக்கிப் பாலினை வெளியேற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
பூப்புச் சடங்கு
மனிதர்களிடையே இன்று வருங்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியாகக் காணப்படுகிறது. எனவேதான் சாதகம் எழுதப்படுகிறது. பெண்களுக்குப் பிறப்புச் சாதகத்தை விடவும், பூப்புச் சாதகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே பூப்படைந்த நாள், நேரம், நட்சத்திரம் முதலியவற்றைக் குறித்து வைக்கின்ற மரபு நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. இந்தப் பூப்பு சாதகப்படியே திருமண வாழ்வு அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
பெண் பூப்படைதல் என்பது முற்காலத்தில் எல்லா இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்குரிய சடங்காகவே இருந்துள்ளது. ஆனால் கால மாற்றத்தால், ஆணாதிக்க சமூகத்தினால் பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தகாதது என்று கூறி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கத்தினாலும் வைதீக ஆண் சமுதாயம் பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்திலும்தான் பூப்பு என்ற செயல் தீட்டாக மாறியுள்ளது.
பெண் குழந்தைகள் குறிப்பிட்ட பருவத்தை அடையும் போது, உடலியல் கழிவாக மாதவிடாய் ஏற்படுகின்றது. முதல் மாதவிடாய்தான் பெண் பருவமடைந்ததன் அறிகுறி. இந்த மாதவிடாய் நம்முடைய உடலில் இயல்பாக வெளியேறுகின்ற மலம், சிறுநீர் போன்று குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்றப்படக் கூடிய ஒன்றாகும். ஆனால் மாதவிடாயினை மட்டும் தீட்டு என்று கூறி இழிவுபடுத்தியுள்ளனர். முற்காலத்தில் பூப்படைந்தால் மகிழ்சியாகத் திருவிழா போன்று கொண்டாடினர். தற்போது தீட்டு என்ற கட்டமைப்பின் காரணமாக பூப்புச் சடங்கினை மிக விமரிசையாகக் கொண்டாடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கோத்தர் பழங்குடியினர் பெண் குழந்தைகள் பூப்படைந்தால் அச்சடங்கினை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது இல்லை. மாறாக, மாமியார் தலைகட்டும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறுகிறது. பூப்படைந்த பெண்ணின் உடல் வளர்ச்சிக்கு ஒவ்வொரு இனமக்களும் பல்வேறு உணவுகளைக் கொடுக்கின்றனர். இவர்கள் பூப்படைந்த பெண்ணிற்கு முட்டை, நல்லெண்ணெய், அல்வா, பேரீச்சம்பழம், பச்சரிசிமாவு, சோளம், பனைவெல்லம் இவைகளை ஒன்றாக கலந்து உருண்டையாக உருட்டிக் கொடுக்கின்றனர்.
பெண் பூப்படைந்த உடனே பொதுவீட்டிற்கு அழைத்து சென்று விடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். பின் ஐந்தாவது நாள் மாமியார் கொண்டைக் கட்டும் சடங்கு நடைபெறுகிறது. இதில் மாமியார் பெண்ணின் தலைமுடியினைச் சுருட்டி அதனுள் ‘மண்டுவ்’ என்னும் L வடிவத்தில் மூலிகைகளால் செய்த பூவைத்தலையில் வைத்துக் கட்டிவிடுகின்றார். பின் தினமும் அப்பூ பெண்ணின் தலையில் இருக்கவேண்டும் என்பது நியதி இது பெண் பருவமடைந்து உள்ளதை அடையாளப்படுத்தும் குறியீடாக உள்ளது. இவ்மண்டுவ்வை பெண்கள் தீட்டு ஏற்படும் வீட்டிற்கோ அல்லது சாவுக்குச் செல்லும்போதோச் சூடிக்கொண்டு செல்லக்கூடாது. இதனை அணிந்திருந்தால் தீய சக்திகள் பெண்களை நெருங்காது என்று நம்புகின்றனர்.
திருமணச் சடங்கு
திருமணம் என்பது ஒர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காகச் சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை ஆகும். திருமணம் என்பது ஒரு கன்னிப் பெண்ணின் கழுத்தில் மாலை சூட்டி அவளை ஊரும் உறவும் அறிந்து கொள்ளும் விதமாகத் தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக் கொள்ளுகின்ற சடங்கியல் நிகழ்வாக சமூகத்தில் உள்ளது. இத்தகைய ஆண் பெண் உறவானது மனித சமூகத்தின் வாழ்வியலுக்கு வழிகாட்டியாக உள்ளது.
திருமணம் என்பது இரண்டு தனிப்பட்டவர்களிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று, இரண்டு குழுக்களின் இணைப்பை, நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவு என்று நடராஜன் (1969:296) குறிப்பிடுகிறார். திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒருவகை வழக்கு ஆகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவுநிலையைக் குறிக்கிறது. அத்தோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு என்று சலீம் (1979:42) குறிப்பிடுகிறார்.
கோத்தரின பழங்குடி மக்களின் திருமண முறையானது மிகவும் எளிமையானதாகக் காணப்படுகிறது. இவர்கள் திருமணத்தை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது இல்லை. இவர்கள், தாங்கள் இருக்கிற கேரியை விட்டு மற்ற இருகேரிகளிலும் மண உறவு கொள்கின்றனர். ஒரே ஊரில் மட்டும் இன்றி பிற ஊர்களிலும் மணஉறவு கொள்கின்றனர். இவர்கள் பொதுவாக மாமன் மகளை அல்லது அத்தை மகளை மணம் செய்து கொள்கின்ற வழக்கம் உள்ளது.
ஒரு ஆணுக்கு பெண்ணைப் பிடித்து இருந்தால், தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துச் சென்று, பெண்ணின் தந்தையிடம் பெண் கேட்கின்றனர். பெண்ணின் தந்தை மகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் அவளின் விருப்பத்தைக் கேட்டறிந்து கொள்வார். அவள் ஒப்புகொண்டால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிப்பார். சம்மதம் தெரிவித்த உடனே மணமகன், பெண்ணின் தந்தையிடம் நான்கு வெள்ளி பணம் (தற்போது கையில் இருக்கும் பணம்) கொடுத்து அவருடைய காலில் விழுந்து வணங்குவான். அவ்வாறு வணங்கிவிட்டால், அப்பெண் அந்த நொடி முதல் அவன் மனைவியாகி விடுகிறார். இத்துடன் திருமணம் நிறைவு பெறுகிறது.
கோத்தர் சமூகத்தில் பெண் தனக்குப் பிடித்தமான ஆணுடன் சென்று வாழ்க்கை நடத்தலாம். பின்னர் பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றுகூடி அவர்களின் வழக்கப்படி திருமணம் செய்து வைக்கின்ற மரபும் உள்ளது. ஒரு ஆண் தான் மணந்து கொண்ட மனைவியிடம் கருத்து வேறுபாடு அல்லது விருப்பமின்மை ஏற்பட்டால் ஊர் பஞ்சாயத்தில் கூறி மணமுறிவு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் பெண் அவனுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாகக் கூறினால், ஆண் அவருடன் தான் வாழவேண்டும் என்பது நியதி. இருவரும் மனம் ஒத்து மணமுறிவு கேட்டால் மட்டுமே மணமுறிவு வழங்கப்படுகிறது. அவ்வாறு மணமுறிவு பெற்றுக் கொண்டால் குழந்தைகள் இருந்தாலும், இல்லாவிடினும் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவன் இறந்தால் ஒரு வருடத்திற்கு பின்னர் மனைவி மறுமணம் செய்து கொள்ளலாம். இதேபோன்று பெண்ணுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை எனில் அவள் விருப்பத்துடன் தன் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற வழக்கமும் காணப்படுகிறது.
கோத்தர் சமூகத்தில் ஒருவருக்கு ஆண்குழந்தை இல்லை எனில், தன் மகளின் கணவனையும், மகளையும் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். அவர் தன் மனைவி வீட்டிலேயேக் குடும்பம் நடத்தலாம். இவ்வாறு திருமண முறையானது எளிமையாக நடைபெறுகிறது. இதில் ஆணுக்கும், பெண்ணிற்கும் இவர்கள் அளித்துள்ள சுதந்திரம் மூலம் பெண்விடுதலை வெளிப்படுகிறது.
இறப்புச் சடங்கு
கோத்தர்கள் இரண்டு விதமான இறப்புச் சடங்கினைச் செய்கின்றனர். ஒன்று இறந்தவுடன் செய்கின்ற சடங்கு இதனை ‘பச்தாவ்’ என்று கூறுகின்றனர். மற்றொன்று ஒரு வருடத்தில் செய்யும் சடங்கு இதனை ‘வர்ல்தாவ்’ என்று கூறுகின்றனர்.
ஒரு ஊரில் இறப்பு நிகழ்ந்து விட்டால், இறப்பைத் தெரிவிக்கும் பொருட்டு முதலில் இசைக்கருவிகள் முழங்கப்படுகிறது. பின்னர் ஏழு ஊர்களுக்கும் இறப்புச் செய்தியைத் தெரிவிக்க ஆட்களை அனுப்புவார்கள். இறந்தது பெண்ணாக இருந்தால், பெண்ணின் நெருங்கிய சொந்தக்காரர்கள் முற்காலத்தில் இறப்புப் பணமும், பசுவும், எருமையும் கொண்டு வருவர். தற்போது இறப்புப் பணம் மட்டுமே கொண்டு வருகின்றனர். முற்காலத்தில் படுகர்களும் கோத்தர்களின் இறப்புக்கு எருமைகளையும், இறப்புப் பணத்தையும் கொண்டு வருவார்கள் என்று அகத்தியலிங்கம் (1977: 20) குறிப்பிடுகிறார்.
இறப்பு, வீட்டில் நடைபெற்றால் இறந்தவரது உடலை வீட்டின் நடுவில் படுக்க வைக்கின்றனர். வெளியே அல்லது மருத்துவமனையில் இறப்பு நடைபெற்றால் வெளித்திண்ணையில் படுக்க வைக்கின்ற மரபு காணப்படுகிறது. இறப்பு நிகழ்ந்தவுடன் இறந்தவரின் வாயில் சாமை அரிசியும், காசும் இட்டு வெள்ளைத்துணியினால் நாடியினை தலையோடு சேர்த்துக் கட்டிவிடுவர். இறப்பு பெரும்பாலும் ஒருநாள் இரவு வைத்து மறுநாள் எடுக்கின்ற வழக்கம் காணப்படுகிறது. சில நேரங்களில் இறந்த அன்றே எடுத்து விடுவதும் உண்டு.
ஏழு ஊரினைச் சேர்ந்த உறவினர்கள் வந்ததும் இறந்தவரது உடலை எடுக்கின்றனர். ஒவ்வொரு ஊராரும் வந்து இறந்தவரின் பிள்ளைகளிடம் மொய்யாகப் பணம் கொடுக்கின்றனர். இறந்தவரை எடுத்துச் செல்வதற்கு புதுக்கட்டிலைப் பயன்படுத்துகின்றனர். இதனை குட்ய்கட் என்று கூறுகின்றனர். வீட்டின் முன்பகுதியில் நான்கு தூண்களை நாட்டி அதன்மீது கம்புகளை வைத்து துணிகளின் மூலம் மூன்றடுக்கு பந்தல் அமைக்கின்றனர். அதன் மேல் பகுதியில் குடை மற்றும் பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கின்றனர்.
இறந்தவரின் பக்கத்தில் சிறிது மாட்டுச்சாணம் எடுத்து உருட்டி அதில் அருகம்புல்லை நட்டு வைக்கின்றனர். இறந்தவர் உடலின் மீது அவர்களின் பாரம்பரிய ஆடையான வெள்ளைநிற ஆடையினை மூடியிருப்பர். வீட்டினுள் இருந்து அல்லது திண்ணையில் இருந்து இறந்தவர் உடலைத் தூக்கி புதுக்கட்டிலின் மீது படுக்க வைக்கின்றனர். அவ்வாறு தூக்கும் போது சாணியையும் சேர்த்து தூக்கி வருவர். பின்னர் கட்டிலைத் தூக்கி வீட்டின் முன் கட்டப்பட்டிருக்கும் பந்தலினுள் உள் வைக்கின்றனர். சாணிப் பிள்ளையாரைக் கட்டிலின் கால் பகுதியில் வைக்கின்றனர். பின்னர் பாரம்பரிய இசைக்கருவிகள் பந்தலை மூன்று முறை சுற்றி இசைக்க, சிலர் அதன் பின்னால் நடனம் ஆடுகின்றனர்.
அதன்பிறகு விக் செடியின் (நுரை வரும் செடி) நாரினைக் கொண்டு இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுகின்றனர். பெண்கள் இறந்திருந்தால் பெண்களும், ஆண்கள் இறந்திருந்தால் ஆண்களும் குளிப்பாட்டுகின்ற மரபு உள்ளது. குளிப்பாட்டியதும் மீண்டும் இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன. துணிப்பையில் அரிசி போட்டு, அதனைத் தோளில் சுமந்தவாறு இறந்தவரின் உடலை மூன்று முறை சுற்றி வந்து காலைத்தொட்டு வணங்குவர். இவ்வாறு ஏழு ஊரில் இருந்து வந்தவர்களும் தொட்டு வணங்கி மரியாதை செலுத்துவர். அப்போது ஆண்களும் பெண்களும் நடனமாடுவர்.
மனைவி இறந்தால் கணவன் தான் அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகளைக் கழற்றி புது ஆடையினை அணிவர். கணவன் இறந்தால் மனைவி ஆடையினைக் களைந்து நகைகளையும் கழற்றிவிடுவது வழக்கம். தலைப்பின்னலையும் கலைத்துவிடுவர். பெண்கள் இறந்தவருக்குப் பிடித்தமானப் பொருட்களைச் செய்து சிறிய கூடையில் கொண்டு வந்து கட்டிலின் கீழ் வைக்கின்றனர். பெண்கள் இறந்தவரின் உடலைச் சுற்றி அழுதபடியே இருப்பர். இறந்தவரின் வீட்டிலிருந்து துணியில் சிறிது நெருப்பினை எடுத்து வந்து மண்சட்டியில் வைப்பர். மண்சட்டியினை தூக்கிச்செல்ல வசதியாக Y வடிவ கவுள் கம்பினை வைத்துக்கட்டிக் கொள்கின்றனர். பெரும்பாலும் மாலை நான்கு மணியளவில் இறந்தவர் உடலினை எடுக்கின்ற வழக்கம் உள்ளது.
முதலில் பந்தலைப் பிடுங்கி எடுத்துச் செல்வர். அதன் பின்னர் கட்டிலோடு உடலையும் எடுத்துச் செல்கின்றனர். சுடுகாட்டிற்கு செல்லுவதற்கு முன், அதன் முன்வாயில் பகுதியில் இறந்தவர் உடலை இறக்கி வைக்கின்றனர். அப்போது பெண்கள் கட்டிலைச் சுற்றி அழுது கொண்டிருக்க, இசைக்கருவிகள் இசைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். கொள்ளி வைப்பதற்கு இறந்தவரின் உறவினரை அனுமதிப்பது இல்லை. மாறாக ஒவ்வொரு கேரிக்கும் கொள்ளிவைப்பதற்கு ஒரு குழந்தையினைத் தேர்வு செய்து வைத்திருப்பர். ஆண் இறந்தால் தேர்வு செய்யப்பட்ட ஆண் குழந்தையைக் கொள்ளி வைக்குமாறு செய்கின்றனர். பெண் இறந்தால் தேர்வு செய்யப்பட்ட பெண் குழந்தையைக் கொள்ளி வைக்குமாறு செய்கின்றனர். கொள்ளி வைக்க உரிமையுள்ள அக்குழந்தையினை அழைத்து இறந்தவரது உடலின் கை, கால் விரல்களில் தண்ணீர் நனைத்துப் பின் சிறிய கத்தியினால் தடவிச் சுத்தம் செய்யும் சடங்கு செய்கின்றனர். அது முடிந்த பின்னர் இறந்தவர் உடலை மூடிய துணியிலிருந்து சிறிது நூல் எடுத்து அதனை இறந்தவரின் கால் பெருவிரல்களைச் சேர்த்துக் கட்டுமாறு குழந்தையிடம் கூறி அதனை செய்விக்கின்றனர். அச்சடங்கு முடிந்த பின் மீண்டும் கட்டிலைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்கு செல்கின்றனர். அதன் பின்னர் பெண்கள் சுடுகாட்டிற்குச் செல்ல அனுமதி இல்லை. இச்சடங்கினைச் செய்யும்போது அக்குழந்தை அவர்களின் பாரம்பரிய வெள்ளை நிற ஆடை அணிந்து தலையை மூடியிருக்கும்.
ஒரு குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்துவிட்டால், ஊர்மக்கள் அனைவரும் அரிசி, பருப்பு, விறகு முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். இறந்தவர் உடலினை எரிக்கின்ற வழக்கம் காணப்படுகிறது. எனவே எரிப்பதற்குத் தேவையான விறகினை வீட்டிற்கு ஒரு கட்டு என்ற முறையில் வழங்குகின்றனர். சுடுகாட்டினுள் செல்லும்போது, காலில் காலணிகள் அணிவதில்லை. கேரியில் உள்ள ஆண், பெண் அனைவரும் கருமாதி செய்யும் வரை மேலாடை அணிவதில்லை. இதனைச் சடங்காக பின்பற்றுகின்ற மரபு காணப்படுகிறது.
சுடுகாட்டில் கட்டிலை இறக்கி வைத்துவிட்டு, கொண்டு வந்த பந்தலையும் பிரித்து விடுவர். இவர்களின் சுடுகாடு பள்ளமான இடத்தில் சுற்றிலும் கருங்கல்லால் அடுக்கப்பட்டிருக்கும். அதன் ஒரு பகுதியில் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நெருப்பினை வைத்துத் தீ மூட்டுகின்றனர். மேடைபோன்று விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். அதன்மீது கட்டிலோடு பிணத்தை தூக்கி வைப்பர். அப்போது மூன்றுமுறை கட்டிலை உயர்த்தியும், தாழ்த்தியும் செய்த பின்னர் வைக்கின்றனர். பின்னர் விறகுக் கட்டுக்களை இறந்தவரின் உடல் வெளியே தெரியாதவாறு உயர்த்தி அடுக்குகின்றனர்.
அதன்பிறகு கொள்ளி வைக்கும் சிறுவன் / சிறுமியை அழைத்து நான்கு கொள்ளிக் குச்சிகளைக் கொடுத்து நான்கு பக்கமும் பின்மாறி நின்று அடிவிறகில் குத்துமாறு செய்வர். அவ்வாறு குத்தியவுடன் அக்குழந்தையினை அழைத்துச் சென்று விடுவர். எரியூட்டப்பட்ட தீயினை எடுத்து விறகின் பலப்பகுதிகளிலும் போட்டு நெருப்பூட்டுகின்றனர். நெருப்பு நன்கு எரிந்தவுடன் ஊருக்குள் வருகின்றனர். ஊருக்குள் வருவதற்கு முன்பு கை, கால், முகம் இவைகளை நீர்நிலைகளில் சென்று கழுவிவிட்டு செல்கின்ற வழக்கம் காணப்படுகிறது. அன்றிரவு இறந்தவரின் வீட்டிற்கு எல்லோரும் சென்று உறவினர்களுடன் சேர்ந்து இறப்பை மறப்பதற்காகப் பாட்டும் கதையும் கூறி அவ்வீட்டிலே இரவைக் கழிப்பார்கள்.
கோத்தர்கள் இறந்தவரின் உடல் எடுத்த மறுநாள் கருமாதிச் சடங்கு செய்கின்றனர். கருமாதிச் சடங்கு செய்வதற்கு கேரிக்கு ஒருவர் வீதம் மூன்று பேர் செல்கின்றனர். சுடுகாட்டில் சென்று எரியூட்டும் இடத்திலிருந்து கை, கால், தலை எலும்புகளையும், சாம்பலையும் எடுத்து கொண்டு ஆற்றிற்குச் செல்வர். ஆற்றில் எலும்புகளை வைத்து, தேங்காய், பழம், முதலியவற்றோடு சூடம் ஆராதனையும் செய்வார்கள். பின் எலும்பினைக் கழுவி எடுப்பர். தேங்காய், பழம் இவற்றை ஆற்றில் விட்டுவிட்டு எலும்புகளை நான்கு இலையினை வரிசையாக அடுக்கி, அதன் மீது வைத்துக் காட்டுச்கொடியினால் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டும் போது இறந்தவரின் பெயர் பொறிக்கப்பட்ட தகட்டையும் சேர்த்துக் கட்டுகின்றனர். இது அஸ்தியினை அடையாளம் காண்பதற்காகச் செய்யப்படுகிறது. அதனைச் சுடுகாட்டிற்குக் கொண்டு வந்து அஸ்தியினைப் பாதுகாப்பதற்கு துளையினை அறை வடிவத்தில் செய்துள்ளனர். அதனுள் அஸ்தியினைப் பாதுகாப்பாக வைக்கின்றனர். பின்னர் பிணத்தை எரியூட்டிய இடத்தில் உள்ள சாம்பலை நீர்விட்டு கழுவிசுத்தம் செய்துவிட்டு வருகின்றனர்.
வீட்டிற்கு வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு வருவர். அன்று ஊர்ப்பொதுவில் சமையல் செய்து முதலில் கொள்ளி வைத்த சிறுவன்/ சிறுமிக்கு உணவு வழங்கப்படுகிறது. பின் அஸ்தி எடுப்பதற்குச் சென்ற மூன்று பேருக்கும், அதன் பின்னர் ஊராருக்கும் உணவு வழங்குகின்ற மரபு காணப்படுகிறது. அஸ்தி எடுக்கச் சென்றவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது நெய்யினை உடல் மற்றும் முகத்தில் தடவுகின்ற வழக்கம் உள்ளது. ஏனெனில் நெய் தீட்டினைப் போக்கும் தன்மையுடையது என்று கோத்தர்கள் நம்புகின்றனர். அன்று மாலை இறந்தவரின் வீட்டிலுள்ளவர்கள் சுடுகாட்டிற்குச் சென்று சில சாத்திரங்களை செய்வதாக கூறுகின்றனர். மூன்றாம் நாள் இறப்புத் தீட்டைக் கழிக்கின்றனர். வீட்டினைச் சுத்தம் செய்து குளித்து நெய் தடவி தீட்டை நீக்குகின்றனர்.
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் வர்ல்தாவ் சடங்கு செய்யப்படுகிறது. அதாவது ஆண்டுவிழா எடுப்பதாகும். அன்று ஒரு வருடத்தில் இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரேநாள் சடங்கு செய்யப்படுகிறது. அன்று இறந்தவரின் எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பல இறப்புக் கட்டில்கள் செய்வார்கள். இறந்தவர்கள் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தினார்களோ அவைகளைச் சிறுசிறு கூடைகளில் இட்டு இறப்புக் கட்டிலை அலங்கரிப்பர். அன்று மாலை எல்லாக் கட்டிலையும் வர்ல்தாவ் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்வர். அவ்விடத்தை தாவ்னாட் என்று கூறுவர். அங்கு இறப்பு சடங்கு செய்தது போன்று சடங்குகளைச் செய்வர். மறைத்து வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் எலும்புகளை (அஸ்தி) எடுத்து வந்து ஒவ்வொரு கட்டிலிலும் வைத்து அழுவார்கள். பின்னர் கட்டிலோடு எடுத்துச் சென்று விறகுகளை அடுக்கி எரித்துவிடுகின்றனர். பின்னர் உணவு தயார் செய்து அனைவருக்கும் கொடுப்பர். அன்றிரவு இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு பேர் வீதம் சடங்கு செய்த இடத்தில் உறங்கிவிட்டு, மறுநாள் காலையில் ஊருக்குள் வருவார்கள். இவ்வாறு வர்ல்தாவ் சடங்கு செய்தால் தான் இறந்தவர்களின் ஆவி வானுலகம் செல்லும் என்று கோத்தர்கள் நம்புகின்றனர்.
இச்சடங்கு செய்தபிறகுதான் பெண்ணோ, ஆணோ மறுமணம் செய்துகொள்ள முடியும் என்பது கோத்தரின மக்களின் எழுதப்படாத சட்டமாகும். பூசாரியின் வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால், பூசாரி இறப்பில் கலந்து கொள்ளமாட்டார். பூசாரியின் மனைவி இறந்து விட்டால் பூசாரி கோவில் காரியங்களைச் செய்யக்கூடாது. அவர் அன்றிலிருந்து பூசாரியாக இருக்க மாட்டார். வேறு ஒருவர் பூசாரியாக நியமனம் செய்து கொள்கின்ற மரபு உள்ளது.
முடிவுரை
கோத்தர் பழங்குடி மக்களின் சடங்கியல் மரபுகள் அனைத்தும் மற்ற பழங்குடி மக்களின் சடங்கு முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதைக் காணமுடிகிறது. பல நிகழ்வுகள் நம்பிக்கையின் அடிப்படையில் செயலாக்கம் பெற்றுள்ளதையும் காணமுடிகிறது. இறந்தவர்களுக்குக் கொள்ளி வைக்கும் உரிமை உறவினருக்கு மறுக்கப்பட்டுள்ளது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது. எல்லா ஊரிலும் பெண்கள் தீட்டுக் காலத்தில் தனியாகத் தங்குவதற்கான பொதுவீடு, கேரியின் தூய்மை கெட்டுவிடாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் அவர்கள் தங்கள் கேரிக்குள் காலணிகள் அணிவதில்லை. காலணிகளை கையில் எடுத்து செல்கின்ற மரபு காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பயன்பட்ட நூல்கள்
1. அகத்தியலிங்கம், ச. (பதி.), தமிழகப் பழங்குடி மக்கள், மொழியியல் துறை, ஆராய்ச்சி மாணவர் வெளியீடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1972.
2. அவினாசிலிங்கம், தி.கா., கலைக்களஞ்சியம், தொகுதி 1-4, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1954.
3. இலாசரஸ், ஜி.பி., செந்தமிழ் அகராதி, உலக இலக்கிய கழகம், சென்னை, 1997.
4. இளம்பூரணர்., தொல்காப்பியம் பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை, 1967.
5. எட்கர் தர்ஸ்டன்., தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தமிழாக்கம், க. ரத்னம், தொகுதி 4,6, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986.
6. சக்திவேல், சு., தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்வும் வரலாறும், மாணிக்கவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1980.
7. சிதம்பரனார், சாமி., எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், அறிவுப் பதிப்பகம், சென்னை. 2009.
8. நடராசன், தி. நாட்டுப்புற சிறுவர் பாடல்கள், சரவணா புக்ஸ், சென்னை, 1969.
9. Jakka Parthasarathy, The Kota of Nilagiris, Department of Adi Drividars Tribal Welfare, Governmeant of Tamil Nadu, M. Palada, Udhagamandlam - 4
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.