இலங்கை பாடசாலை கல்வி முறைகளில் பரதக் கலை
மலர்விழி சிவஞானசோதிகுரு
முனைவர் பட்ட ஆய்வாளர், இசைத்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஆய்வுச் சுருக்கம்
இலங்கை பாடசாலையின் கல்வி முறைகளில் பரதக் கலையின் வளர்ச்சிப் போக்கினை பாடசாலையின் பாட விதானம், இணைப்பாட விதானம் என்பவற்றின் ஊடாக எவ்வாறு வளர்ச்சியடையச் செய்யலாம் என்பது தொடர்பான ஆய்வு.
திறவுச் சொல் :
பாடசாலை, பரதம், பாடம், ஆசிரியர்
அறிமுகம்
2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி பாவம், இராகம், தாளம் மூன்றும் இணைந்தது பரதக்கலை. மொழி தோன்றுவதற்கு முன்பே கை அசைவுகளையும், முக ஜாடைகளையும் பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை மனிதன் பூர்த்தி செய்தான். கலைக்கு மொழி அறியாதவனையும் மொழி அறிந்தவனோடு இணைக்கும் ஒரு பாலமாக பரதக் கலை இலங்குகிறது. பரதக் கலை பற்றி ஆராய்தலில் ஈழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவிய பரதக்கலையானது பாடசாலைகளையும் சென்றடைய வழியமைந்திருக்கின்றது. குறிப்பாக 1972 ஆம் ஆண்டு பாடசாலை கலைத்திட்டத்தில் ஒரு பாடமாக முதன் முதலில் இணைக்கப்பட்டு இன்று வரை பெருவரியான வளர்ச்சியினைப் பெற்று வந்திருப்பதனைக் கண்டுகொள்ள முடிகின்றது.
பரதநாட்டியம் கற்பிக்கப்படும் பாடசாலைகள்
இலங்கையில் 1972 ஆம் ஆண்டு இலங்கை பாடசாலைகளில் ஒரு பாடமாக கலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் அதன் சாத்தியத்தன்மைகள் இனங்காணப்பட்டு வெற்றிகள், புள்ளிவிபரங்கள் மூலம் அறியப்பட்டு ஏனைய பாடசாலைகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்டது. பாடசாலை வகை பின்வருமாறு:
மேற்படி பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் 6 முதல் 13 வரையான தரங்களைக் கொண்ட தமிழ் மொழி மூலம் பாடசாலைகளிலேயே பரத நாட்டியக் கலை பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, தரம் 6 முதல் 11 வரை விருப்புக் கூடிய பாடக் கூடையில் இருந்து மாணவர்கள் தெரிவு செய்யக் கூடியவாறு அழகியல் சார் தொகுதியான 2ம் தொகுதி பாடங்களுள் ஒன்றாக இணைத்துக் கொள்ளப்பட்டது. வாரம் ஒன்றில் 40 நிமிடங்கள் கொண்ட மூன்று பாட வேளைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதில் உடல் ரீதியான ஆடற் பயிற்சிகளும் மாணவர்கள் கற்பதற்கு ஏற்றவாறு பாடக்குறிப்பும் அதற்கான விளக்கங்களும் உரிய ஆசிரியர்களால் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தரம் 12 மற்றும் 13 கல்வி பயில்கின்ற உயர்தர மாணவர்களுக்காக வாரம் ஒன்றில் 40 நிமிடங்கள் கொண்ட 20 பாட வேளைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதிலும் பாடக்குறிப்பு பயிற்சி உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைப் பாடசாலைகளில் குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட மாகாணம், மாவட்டம், வலயம், கோட்டம் என பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடை பெறுகின்றன.
இதை விட மேலதிகமாக, பாடசாலை தவிர்ந்த மாலை நேரங்களிலும் சனி, ஞாயிறு போயா தினங்களிலும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு புறக்கிருத்திய செயற்பாடுகளினூடாக பாடசாலைகளில் பரதக் கலை வளர்த்துச் செல்லப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரசேதங்களில் பிரபல்யமாக விளங்கும் பெண்கள் பாடசாலைகளான மட்/வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையையும், யாழ்/இந்து மகளிர் கல்லூரியையும் எடுத்து நோக்கின்:
மட்/வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையும் பரதநாட்டியக் கலையும்
“மீன் பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் கண்ணே புகழ் பூத்த பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழும் மட்/வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையானது 1820 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது”.(1) இங்கு பரதக் கலை ஒரு பாடமாக்கப்பட்டதோடு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டதை “தேசிய பரீட்சையின் சித்தி வீதங்களின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம்”(2)
இதன்படி எதிர்காலத்திலும் மாணவர் தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பரதக்கலை பாடவிதானத்தை பொறுத்தவரை இப்பாடசாலையில் கிட்டிய ஐந்து வருடங்களில் பரதக்கலை பயிலும் மாணவர் தொகையில் இருந்தும், இப்பாடசாலையில் பரதக் கலையின் பெருவாரியான வளர்ச்சியையும், போக்கையும், அதன் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் அழகியல் சார் உணர்ச்சியினையும் அறியக்கூடியதாக உள்ளது.
பாடசாலைகளில் இணைப்பாட விதானத்தினூடாக பரதக் கலை
தமிழையும் கலையையும் வளர்க்கும் பொருட்டு சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை மையமாக வைத்து கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசியம் என்ற அடிப்படையில் தமிழ் மொழி தினமானது வெகு விமர்சையாக போட்டிகள், விழாக்கள் வைப்பதன் மூலம் அனுஸ்டிப்பது சிறப்பானதொரு விடயமாகும்.
“பாடசாலையில் இடம்பெறும் தமிழ் தினப் போட்டியில் மாணவர்கள் தனி நடனம், குழு நடனம், நாட்டிய நாடகம் ஆகியவற்றில் பங்கு பற்றி சிறப்பு தேர்ச்சி பெற்று பாடசாலை மூலமாக கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசியம் என்று வெற்றி வாகை சூடி வருவதும் குறிப்பிடத்தக்கது” (3)
“இதே போன்று அகில இலங்கை நடனப்போட்டி மூலம் (சமஸ்தலங்கா போட்டி) மாணவர்கள் கீழ்வரும் போட்டிகளில் பங்கு பற்றுவர்.
1. தனி நடனம் ஆண் சாஸ்திரியம்
2. தனி நடனம் ஆண் கிராமியம்
3. குழு நடனம் ஆண் சாஸ்திரியம்
4. குழு நடனம் ஆண் கிராமியம்
5. தனி நடனம் பெண் சாஸ்திரியம்
6. தனி நடனம் பெண் கிராமியம்
7. குழு நடனம் பெண் சாஸ்திரம்
8. குழு நடனம் பெண் கிராமியம்
9. கலப்பு நடனம் சாஸ்திரியம்
10. கலப்பு நடனம் கிராமியம்” (4)
“பாடசாலையில் இடம்பெறும் விழாக்கள் பரதக் கலையினை வளர்த்தெடுப்பதற்கு சிறந்த காரணிகளாக அமைந்திருக்கின்றன.
1. பாடசாலைத் தினம்
2. ஆசிரியர் தினம்
3. நாடக தினம்
4. நவராத்திரி விழா
முதலானவற்றைக் குறிப்பிடலாம்” (5)
இவற்றின் போது தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தனியாகவும், குழுவாகவும் நடனத்தில் ஈடுபடுவர். எடுத்துக்காட்டாக, தனி நடனம், வரவேற்பு நடனம், செம்பு நடனம், களி நடனம், கோல் நடனம் அனைத்து வகைக் கிராமிய நடனங்கள், புத்தாக்க நடனங்கள் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றுக்கு மேலாக, மாதம் ஒருமுறை மாணவரின் திறமைக்கு மகுடம் சூடும் நிகழ்வாக, பாடசாலையில் மாணவர் மன்றம் நடைபெறும். இதன் போது, மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி தம்மையும் தமது கலைசார் குறிப்பாக, பரதக் கலை சார் அழகியல் உணர்வினை வெளிப்படுத்தி, தம்மை அறிமுகப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இச்சந்தர்ப்பங்களில் பரதக் கலையை ஒரு பாடமாக பயிலாத மாணவர்களும் பரதநாட்டியக் கலை மீது கொண்டுள்ள பற்றினையும், ஈடுபாட்டினையும், விருப்பினையும் அறியக்கூடியதாக உள்ளது.
யாழ்/இந்து மகளிர் கல்லூரியும் பரதநாட்டியக் கலையும்
“கற்பகத் தருவின் வாசம் வீசும் மண்ணாம் யாழ் நகரின் கண்ணே பேசப்படும் பாடசாலைகளில் ஒன்றாக ஜொலிக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரியானது, 1943 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி யாழ் இந்துக் கல்லூரி அதிகார சபை அதன் கீழான முதலாவது பெண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை உருவாக்கியது” (6) இப்பாடசாலையில் பரதக்கலை பாடவிதான கலைத்திட்டத்தில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டு பெரு வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. இன்றையக் காலகட்டத்தில் இப்பாடசாலையின் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் படி இதனை அறியக் கூடியதாக உள்ளது.
மேற்படி புள்ளி விபரங்கள் மாணவர்கள் தேசியப் பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்றிருப்பதனைச் சுட்டிக்காட்டுகின்றன” (7). இங்கு காணப்படுகின்ற வளர்ச்சி எதிர்காலத்திலும் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரதக் கலையானது பாட விதானத்தை பொருத்தவரை இப்பாடசாலையில் கிட்டிய 5 வருடங்களில் பரதநாட்டிய கலைப் பயிலும் மாணவர் தொகையில் இருந்தும், இப்பாடசாலையில் இக்கலையின் போக்கிலும் வளர்ச்சியிலும் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமாகி இடம் இருப்பதனை கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
பரதநாட்டிய பாடவிதானத்தின் அடிப்படை பொதுத்தேர்ச்சிகள்
அடிப்படைப் பொதுத்தேர்ச்சிகள்
“கல்வியினூடாக விருத்தி செய்யப்படும் பின்வரும் அடிப்படை தேர்ச்சிகள் மேற்குறித்த தேசிய இலக்குகளை அடைவதற்கு வழிவகுக்கும்.
1. தொடர்பாடல் தேர்ச்சிகள்
* எழுத்தறிவு
* எண்ணறிவு
* சித்திர அறிவு
* தகவல் தொழில்நுட்பத் தகைமை
2. ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்
3. சூழல் தொடர்பான தேர்ச்சிகள்
* சமூகச் சூழல்
* உயிரியல் சூழல்
* பௌதீகச் சூழல்
4. வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள்
5. சமயமும் ஒழுகலாறும் தொடஎபான தேர்ச்சிகள்
6. ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், விளையாட்டு பற்றிய தேர்ச்சிகள்
7. கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்” (8)
பாடத் தேர்ச்சிகள்
“* பரதநாட்டியத்துடன் தொடர்பான இணைப்பாட விதானம் செயற்பாடுகளினூடாக அறிவு, திறன், மனப்பாங்கை வளர்த்துக் கொள்வார்.
* சிறந்த நடனக் கலைஞராக மிளிர்வதற்கான ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வார்.
* படைப்பாக்கத் திறனை விருத்தி செய்வார்.
* தேசியப் பண்பாட்டுக் கலைகளை அறிந்து மதிப்பளிப்பார்.
* அழகியல் நயப்புடையவராவார்.
* கலைச்சொற்களை மதிக்கும் உளப்பாங்கை வளர்ப்பார்.
* பண்பாட்டின் பால் பற்றுறுதியையும் மரபை கையேற்கும் மனப்பாங்கையும் விருத்தி செய்வார்.
* தன்னாற்றலை இனம் கண்டு கலை நிகழ்வுகளை ஆற்றுகைப்படுத்தும் திறனை விருத்தி செய்வார்.
* சிறந்த தொடர்பாடல் திறனை விருத்தி செய்வார்.
* தாமாக முன்வந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் திறனைப் பெறுவார்.
* இயற்கையை நயந்து வெளிப்படுத்தும் ஆற்றலை பெற்றுக் கொள்வார்.
* நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களைக் கையாளும் ஆற்றலைப் பெற்றுக் கொள்வார்.
* வாழ்வாதாரத் தொழிலுக்கான அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வார்.
* நுட்பங்களைக் கையாள்வதற்கு கைவினை கலைகளை ஆக்குவார்.
* குழுவாக இயங்கும் பண்பை விருத்தி செய்வார்.
* பன்மை கலாசார சமூகத்துடன் சிறந்த ஆளிடை தொடர்புகளை பேணுவார்.
* சமூக அங்கீகாரம் புகழ் என்பவற்றைப் பெற்றுக் கொள்வார்.
* கலை நுணுக்கங்களை அறிந்து அதனை விபரிக்கும், விமர்சிக்கும் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்வார்.
* கலைத் தேடலின் ஊடாக புதிய முன் வைப்புகளுக்கு முயற்சிப்பார்”(9).
பாடசாலையில் பரதநாட்டிய பாடத்தெரிவின் மூலம் மாணவர் பெறும் நன்மைகளாவன:
* மாணவர்கள் தங்களது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வித்தாக பரதநாட்டிய பாடத்தெரிவு திகழ்கின்றது.
* சிறுவயதிலிருந்தே மாணவர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த ஆற்றலின் விருத்தி.
* பாடத்தின் மேல் கொண்ட விருப்பினால் பல்வகைப்பட்ட அவைக்காற்றுகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ளல்.
* எதிர்காலத்தில் சமூகத்தில் நற்பிரஜைகள் உருவாகுவதற்கான ஒரு வழிகோல்
* பல்தரப்பட்டவர்களோடு பழகுவதனால் சமூகமயமாக்கப்படல்.
* பரதக் கலையை கற்பதன் மூலம் சமய, சமூகக் கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணுதல்.
* வருமானம் ஈட்டிக் கொள்வதற்கான ஒரு வழியாகவும், பாடசாலையில் மாணவர்களிடையே பரதக் கலை பாடத்தெரிவு இடம் பெறுகிறது.
* வெளிச் சமூகத்தோடு இயைந்து வாழ்வதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாக இப்பாடத் தெரிவு இடம் பெறுகின்றது.
* சமூகத்தில் ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்கு ஒரு அத்திவாரமாக பரதக் கலைத் தெரிவு இடம் பெறுகின்றது.
* சிறந்த ஆளுமையுள்ள ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கு இக் கலை உதவுகின்றது.
தொகுப்புரை
மேற்கூறப்பட்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் போது, சிறந்த ஆளுமையுள்ள, சமூகமயமாக்கப்பட்ட மன அழுத்தம் அற்ற, சமூகத்திற்கு தேவையான, எதிர்காலத்தில் நற்பிரஜையாக வாழ்வதற்கான, ஒரு வாழ்வியலை பாடசாலைக் கல்வியினூடாக, பரத நாட்டியத்தை, ஒரு பாடமாக தெரிவு செய்வோர் பெற்றுக் கொள்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அடிக்குறிப்பு
1. பாடசாலை சஞ்சிகை பேழை, 2021
2. பாடசாலையின் அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமாருடனான நேர்காணல் 01.10.2022
3. தமிழ் மொழித்தினம் தொடர்பான சுற்றுநிருபம் 2005.
4. அகில இலங்கை பரதநாட்டிய போட்டி மற்றும் கதக் நடனப் போட்டி: 2022 “ கல்வி அமைச்சு” சுற்றுநிருபம்
5. மட்/வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமாருடனான நேர்காணல் 01.10.2022
6. யாழ் வலய ஆசிரியை ஆலொசகருடனான நேர்காணல் (திருமதி. எஸ். அகலிகா)
7. ஆசிரியை ஆலோசகர் யாழ் கல்வி வலயம் திருமதி. எஸ். அகலிகா உடனான நேர்காணல்
8. தரம் : 10 ஆசிரிய வழியுரைப்பு வழிகாட்டி NIE வெளியீடு
9. தரம் : 11 ஆசிரிய வழியுரைப்பு வழிகாட்டி NIE வெளியீடு
துணை நூற் பட்டியல்
1. மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை சஞ்சிகை பேழை
2. கல்வி அமைச்சு வெளியீடு - தமிழ் மொழித் தின சுற்று நிருபம் 2005
3. அகில இலங்கை பரதநாட்டியப் போட்டி மற்றும் கதக் நடனப் போட்டி: 2022 “ கல்வி அமைச்சு” சுற்றுநிருபம்
4. தரம் : 10 ஆசிரிய வழியுரைப்பு வழிகாட்டி NIE வெளியீடு.
5. தரம் : 11 ஆசிரிய வழியுரைப்பு வழிகாட்டி NIE வெளியீடு.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.