மகாகவி பாரதியின் இறைவழிபாடு
முனைவர் கு. சு. செந்தில்
உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி - (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை - 600061.
முன்னுரை
புரட்சிக்கவி, தேசியக்கவி, விடுதலைக்கவி என்றெல்லாம் போற்றப்படுபவர் மகாகவி பாரதியார். இவர் சிறந்த தெய்வ பக்தி உடையவராகவும் திகழ்ந்திருக்கிறார். தெய்வத்திடம் மனம் உருகி உருகித் தன்னலம், உலக நலம் எனும் இரண்டையும் வேண்டியிருக்கிறார். சுயமரியாதையோடு திகழ்ந்த பாரதி, பிறரிடம் கையேந்திப் பொருள் பெறுவதற்கு அஞ்சிய பாரதி, தெய்வத்திடம் தம் மனக்குறையை, துயரினை எடுத்துக்கூறித் தாம் வேண்டுவனவெல்லாம் கொடுத்தருள வேண்டும் எனப் பாடியிருக்கிறார். விநாயகர், முருகன், வள்ளி, சிவசக்தி, பராசக்தி, மகாசக்தி, பூலோக குமாரி, ஓம்சக்தி, முத்துமாரி, கண்ணன், கண்ணம்மா, திருமகள், கலைமகள் எனப் பல தெய்வங்களின் அருளையும்
வேண்டியிருக்கிறார். இவற்றோடு ஞாயிறு, திங்கள் எனும் இயற்கையையும் இயேசு, அல்லா என்னும் பிற சமயக் கடவுளரையும் பாடும் பண்பினராகவும் இருந்திருக்கிறார். யாது வேண்டினர்? எப்படி வேண்டினார், ஏன் வேண்டினார் என்பது குறித்து ஆராய்வதாக இந்தக் கட்டுரை அமைகிறது.
விநாயகர்
பாரதி, புதுவையில் உள்ள மணக்குளத்து விநாயகர் மீது நான்மணிமாலை ஒன்றைப் பாடியிருக்கிறார். அது, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்னும் நான்கு பா வடிவங்களால் அமைந்திருக்கிறது.
இது குறித்து ம. பொ. சிவஞானம்,
“கோடானு கோடி மக்கள் தங்கள் இதயங்களிலே வைத்துப் போற்றும் தேசியக் கவிஞரிடம் நான்மணிமாலை பெறப் புதுவை மணக்குள விநாயகர் என்ன தவம் செய்தாரோ! ஆம்; ஏழையர் தெய்வமாக இருப்பதால்தான் பாரதியார் பிற தெய்வங்களுக்குத் தராத பெருமையைப் பிள்ளையாருக்குத் தந்து அவர் மீது தனியாகப் பக்திப் பனுவல் படைத்தார் போலும்”
(ம.பொ.சிவஞானம், 1974: 81)
என்று கருத்துரை வழங்கியுள்ளார்.
மேலும், பாரதியார் ஓரிடத்தில் அமர்ந்து புறக்கண்களை மூடி அகக்கண் திறந்து விநாயகர் மீது பாடல்களைப் பாடிப் பின்னர் ஏட்டில் எழுதியதாகவும் பதிவிட்டிருக்கிறார்.
ஒருவர் தாம் செய்கின்ற செயலில் வெற்றி பெற வேண்டும் என விநாயகரை வழிபடுவது உண்டு. அதனை இன்றளவும் காண்கிறோம். பாரதியும் அவ்வாறு வழிபட்டிருக்கிறார். விநாயகரை வழிபட்டால் திசையெல்லாம் வென்று வெற்றிக்கொடி நாட்டலாம்; விடம், நோய், பகை ஆகியவற்றை ஒரு பொருட்டாகக் கருதாது வாழலாம் என்பது அவரது எண்ணமாகும். தன்னலக் கோரிக்கைகளாக நூல் பல இயற்ற வேண்டும்; தாம் செய்யும் செயல்களில் தவறு
ஏற்படாமல் காத்தல் வேண்டும்; மனதில் சலனம் இல்லாமலும் அறிவில் இருள் தோன்றாமலும் நூறு வயது வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பவற்றை முன்னிறுத்துகின்றார். இதனை வெறும் தன்னலக் கோரிக்கைகளாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலவில்லை. உலக நலம் விரும்பிய ஒரு கவிஞர் தாம் நலமுடன் இருந்தால்தான் தம் கவிதைகளின் வழியே உலக நலத்தைப் பேணமுடியும் என்பதை உணர்ந்து இவ்வாறு பாடியிருக்கின்றார். பொதுநலம்
என்று வருகின்ற பொழுது பிறர் துயர் தீர்க்க வேண்டும்; பிறர் நலம் பெறவேண்டும் என்பதை முன்னிறுத்துகின்றார். சாதாரண ஒரு கவிஞனாக இருந்திருந்தால், தாமும் தம் குடும்பமும் மகிழ்ந்திருக்க என்ன தேவையோ அதை மட்டுமே கேட்டிருப்பார். உலக நலன் பற்றிக் கவலை கொண்டிருக்க மாட்டார். இவர் உலகக் கவி அல்லவா! அதனால் தன்னலம், பொதுநலம் எனும் இரண்டையும் வேண்டியிருக்கிறார்.
பாரதி, விநாயகரிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகளில் மிக முதன்மையானது தம்மைத் தாமே ஆளுகின்ற தன்மையாகும். ஒருவன் தம்மைத்தாமே ஆளுகின்ற முறைமையைக் கற்றுக் கொண்டால் இவ்வுலகில் அவன் பெறாத பேறுகள் எதுமில்லை என்பதை நன்கு உணர்ந்தே,
“கடமை யாவன தன்னைக் கட்டுதல்”
(பாரதியார் கவிதைகள், 2007: 102)
“தன்னை யாளும் சமர்த்தெனக் கருள்வாய்”
(பாரதியார் கவிதைகள், 2007: 102)
“தன்னைத்தான் ஆளும் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்”
(பாரதியார் கவிதைகள், 2007: 102)
என்று பாடியிருக்கின்றார்.
பாரதி, தம்மைத்தாமே ஆளுகின்ற தன்மை குறித்துத் தன்னுடைய கட்டுரை ஒன்றிலும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அது வருமாறு:
“தனது உள்ளத்தில் இன்னின்ன எண்ணங்களைத்தான் வளரவிடவேண்டும்; இன்னின்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்பது நிச்சயிக்கும் அதிகாரம் - திறமை - ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கிறது. இதை
அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்களுண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, ‘வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம்’ என்று
பிடிவாதம் செய்யும். அங்ஙனம் சிறுமைக்குரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப்படுத்துமானால், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத்தள்ள அது அங்கே தானிருக்கும். அதற்கு யுத்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானாகவே ஓடிப்போய்விடும்”
(சி. சுப்பிரமணிய பாரதி, 1943: 8-9)
என்று வழிமுறை கூறியிருக்கின்றார்.
இந்த வழிமுறை மிகச்சிறந்த ஒன்றாகும். எவர் ஒருவர். இந்த நெறிகளைப் பின்பற்றுகிறார்களோ அவர் வாழ்வில் வெற்றி பெற இயலும். உலகில் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்டவர்களே சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பது
வரலாறு.
வேலன்
மகாகவி பாரதியார் முருகன் பாட்டு, வேலன் பாட்டு, வள்ளி பாட்டு எனும் பொருண்மைகளில் பாடல்கள் பலவற்றை பாடியிருக்கின்றார். வேலன் வள்ளியைக் கைப்பிடித்த வரலாறு, அவுணரை அழித்த விதம் எனப் பலவற்றையும் பாடி முருகா! நீ வருகைதந்து எமக்கு நலமும் புகழும் இன்ன பிறவும் தர வேண்டும் எனப் பாடுகிறார். மேலும், முருகன் மீது கிளியைத் தூதனுப்பும் பாடலையும் பாடியிருக்கிறார்.
“வெள்ளலைக் கைகளைக் கொட்டி”
எனத் தொடங்கும் வேலன்பாட்டில்,
“கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு,
குலைத்தவன் - பானு, கோபன்
தலைபத்துக் கோடி துணுக்குறக், கோபித்தாய்” (பாரதியார் கவிதைகள், 2007: 114)
எனும் அடிகள் இடம் பெற்றுள்ளன.
பாரதியின் இந்தக் கவிதை மேலோட்டமாக அமையவில்லை. இதனுள் உட்பொருள் ஒன்றும் உள்ளதாகச் சக்திதாஸன் சுப்பிரமணியன் கூறுகின்றார். அது வருமாறு:
“அமராவதி என்பது தேவருலகம். தேவருலகின் வாழ்வு குலைத்தவன் பானுகோபன். தேவருலகு முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்டது. இந்தியாவும் முப்பத்து முக்கோடி மக்களைக் கொண்டது; அமராவதி போல் பொன்கொழித்த பூமி. அப்பூமியைச் சுரண்டியவர்கள் பத்து கோடி மக்களான பிரிட்டிஷ்காரர்கள். வேண்டுமானால் தாதாபாய் நவுரோஜியின் “Poverty and un British rule in India” என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அந்த “பத்துக் கோடி பேரைக் கோபித்தாய்” இதுதான் அவ்வரிகளுக்குப் பாரதி கூறும் உள்பொருள்” (சக்திதாஸன் சுப்பிரமணியன், 1938: 59-60)
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதியின் பக்திப் பாடல்கள் வெறுமனே தெய்வத்தின் தன்மையைப் பாடுவதோ அல்லது தமக்கு அது வேண்டும் இது வேண்டும் என முறையிடுவதோ மட்டுமல்ல; அதனுள் உலக நலம் விரும்பிய உட்பொருளும் பொதிந்திருக்கிறது என்பதை இக்கருத்துரை காட்டுகின்றது.
சக்தி
பாரதி, சக்தியைத் தம் முதன்மைத் தெய்வமாகக் கருதியிருக்கிறார். அதனால் அத்தெய்வத்தை மிகுதியாகப் பாடியிருக்கிறார். பராசக்தி, சிவசக்தி, ஓம்சக்தி, மகாசக்தி, காளி எனும் பல்வேறு வடிவங்களில் சக்தியைக் கண்டு மனமுருகியிருக்கிறார். அவர் அவ்வாறு பாடுவதற்கான காரணம் குறித்துச் சுத்தானந்த பாரதியார்,
“ஐயர், காளி பூஜை செய்தார். அதில் பாரதியாரும் கலந்து கொண்டார். மகாகாளி சக்தியால் வீறுபெற்றுத் தேசசேவை செய்ய இருவரும் கருதினர். பாரதியாரின் சக்திப் பாடல்கள் பெரும்பாலும் அந்த உபாசனைக்காகவே பாடப்பெற்றன” (சுத்தானந்த பாரதியார், 1964: 43)
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதி, சக்தியைப் பாடுவதற்கு வ.வே.சு ஐயரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பது இதன்வழிப் புலனாகிறது. சி. கனகசபாபதி,
“பாரதி சக்தியைப் பாடியது ஏன்” என்னும் தம் கட்டுரையில், பாரதி தம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்பொருண்மையிலான பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது குறித்துப் பதிவு செய்திருக்கிறார். அதில், சக்திப்பாடல்கள் 1906ஆம் ஆண்டில் அவரால் பாடப்பட்டன என்கிறார். சக்தியை அவர் ஏன் பாடினார் என்பதற்கு ஆய்வாளர்கள் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டிய பின்னர் தம் கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
“வட இந்தியாவில் இருந்த நாட்களில் பாரதி இராமகிருஷ்ணரைப் பற்றி (1902)இல் அறிந்ததும், நிவேதிதா தேவியை (1905)இல் நேரில் தரிசித்த போதும் அரவிந்தருடன் (1908)இல் பழகத் தொடங்கியதும், பாரதியைச் சக்தி வழிபாடு பற்றிக்கொள்ள வைத்திருக்க வேண்டும் என்று காண்பதே பொருந்தக் கூடியதாக இருக்கிறது. புதுச்சேரியில் ‘சக்திதாசன்’ என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டதும் இதை மெய்ப்பிக்கிறது” (தொகுப்பு, மீரா, 2006: 29)
என்கிறார்.
மேலும், பாரதியின் சக்தி குறியீடு ஆற்றல், வேகம், சமுதாய மாற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரதி, சக்தியாகிய அன்னையிடம்,
“எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்” (பாரதியார் கவிதைகள், 2007: 124)
என்னும் பாடலில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.
இன்றளவும் பலரும் தொடர்ந்து பாடுகிற பாடல்களில் இதுவும் ஒன்றாகும். சக்தியின் இயல்புகள், தம்மை வழிபடும் அடியவர்க்கு அவள் வழங்கக்கூடியவை என அனைத்தையும் பாடியிருக்கின்றார். சக்தியை வழிபட்டால் துன்பமில்லாத நிலை உருவாகும்; சோம்பல் அழியும்; துணிவு வரும்; பசிப்பிணிகள் இல்லாத நிலை உருவாகும் என்பது பாரதியின் எண்ணமாகும். மேலும், பாரதி, சக்தியிடம் செல்வத்தினையும் தெளிந்த அறிவினையும் கொடு என்று கேட்டிருக்கிறார்.
இதற்குத் தமக்கிருந்த வறுமையும் அதனால் எழுந்த மனச்சோர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
பராசக்தி
பாரதி, பராசக்தியைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அதில் தம் துயரினையெல்லாம் சொல்லி முறையிட்டிருக்கிறார். சுத்தானந்த பாரதியார் தம் நூலில் அவர் பராசக்தியைக் கடிந்துகொண்டிருப்பது குறித்து,
“பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? முதலாவது என்மீது வெற்றிதர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்துவிட்டது; நின் திருவருளால் குணமாய்விட்டது; இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக, நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பதுபோலத் துடித்தோம்; ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம்; பயம்,பயம், பயம்! சக்தி, உன்னை நம்பித்தானிருக்கிறோம். கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்; எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள்! பராசக்தி, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை, ஆயிரம் விதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன்! தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” (சுத்தானந்த பாரதியார், 1964: 43)
என்று பதிவிட்டிருக்கிறார்.
பாரதி தம் ‘சித்தக்கடல்’ என்னும் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டில்
கடைக்கண் வைத்தாள்! அங்கே
ஆகா! என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” (பாரதியார் கவிதைகள், 2007: 95)
என்றும் பாடியிருக்கின்றார்.
பராசக்தி தம் வறுமையை நீக்கவில்லையென்றாலும் ரஷ்ய நாட்டின் மீது கடைக்கண் பார்வையைச் செலுத்தி அங்கு யுகப்புரட்சி ஏற்படுத்தியதாகக் கருதியிருக்கின்றார். நாட்டுமக்கள் நோயும் வறுமையும் நீங்கி மகிழ்ந்து வாழ வேண்டும்; மானிட சாதி ஒன்று என இவ்வுலகம் முழங்கச் செய்யவேண்டும்; வேதங்கள் கூறியபடி மனிதர்கள் மேன்மையுற வேண்டும்; உயிரைக் காக்கும் மழையைப்போல எங்களைக் காக்க வேண்டும்; இவ்வுலகில் உள்ள இன்பமெல்லாம் எமக்குக் கொடுத்திட வேண்டும்; நூறு வயதுவரை புகழுடன் வாழ்ந்து உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும் எனவும் பாரதி பராசக்தியிடம் கேட்டிருக்கின்றார்.
பராசக்தி மீது பாரதி பாடிய பாடல்களில், “காணி நிலம் வேண்டும்” என்பதும் ஒன்றாகும். தமக்குக் காணி நிலம் வேண்டும்; அங்கு அழகான மாடங்களைக் கொண்ட ஓர் மாளிகையும் பக்கத்தில் கிணறும் அதைச் சுற்றிப் பத்து, பன்னிரண்டு தென்னை மரங்களும் முத்துச்சுடர் போன்ற நிலவொளியும் கத்தும் குயிலோசையும் அறிவு மயங்கும்படித் தென்றல் காற்றும் வேண்டும். அச்சூழலில் தோன்றும் என் கவிதையால் இவ்வுலகைக் காத்திட வேண்டும் என்று பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் இன்றளவும் பலரால் பாடப்படுகிற ஒன்றாக அமைந்திருக்கிறது.
சென்னையிலுள்ள மத்திய தொழிலாளர் சங்கத்திற்குப் பாரதி ஒருமுறை வந்திருக்கிறார். அங்குத் திரு.வி.கவும் இவருக்கு முன்பே வந்து அமர்ந்திருக்கிறார். சங்கத்தில் அன்னிபெசண்ட் அம்மையார் படம் மாட்டப்பட்டிருக்கிறது. அதனைக் கண்ட திரு.வி.க அப்படத்தைப் பாரதியிடம் சுட்டிக்காட்டி இவரை எல்லோரும் திட்டுகிறார்களே என்று கூற, “அவளையா! திட்டுகிறார்கள்! அவள் பராசக்தியன்றோ?” என்று சொன்னார் பாரதியார். சொல்லிவிட்டுப் பத்து நிமிஷம் அந்தப் படத்தையே உற்றுக் கவனித்தார். கவனித்துவிட்டு,
“நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்”
என்ற பாட்டினைப் பாடினார். அரசியல் கொள்கையிலே மாறுபட்டிருந்த போதிலும் பெண்ணைத் தெய்வமாகப் பாவித்திருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு” (சக்திதாஸன் சுப்பிரமணியன், 1938: 10)
என்று சக்திதாஸன் சுப்பிரமணியன் பதிவிட்டிருக்கிறார்.
பாரதியின் சக்தி பற்றிய ஒவ்வொரு பாடல்களும் ஒரு காரணத்தை முன்னிட்டுதான் பாடப்பட்டிருக்கின்றன என்பதை இதன்வழி அறியமுடிகிறது.
சிவசக்தி
பாரதி, சிவசக்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றார். “நல்லதோர் வீணை” எனும் கவிதையில் தன்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இவ்வறிவினைக் கொண்டு இம்மாநிலம் பயனுறச் செய்வதற்கு வேண்டிய வல்லமை தாராமல் சுமையாக வாழ்ந்திடுமாறு செய்துவிடுவாயோ’ என்று மனம் வருந்திக் கேட்டிருக்கிறார். மேலும், விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியவாறு செயல்படும் உடலையும் எதிலும் பற்று இல்லாத மனத்தினையும் நித்தம் சுடர்தரும் உயிரினையும் தெளிந்த அறிவினையும் கொடுக்குமாறும் வேண்டியிருக்கிறார்.
ஓம்சக்தி, மகாசக்தி, முத்துமாரி
பாரதி, ஓம்சக்தியிடம் என் நாவில் தங்கி வெள்ளமெனப் பொழியவேண்டும் என விண்ணப்பம் செய்திருக்கிறார்.
மகாசக்தியை,
“நெஞ்சில் கவலை நிதமும் பயிராகி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை - தஞ்சமென்றே
மையமெல்லாங் காக்கும் மகாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு” (பாரதியார் கவிதைகள், 2007: 125)
என்று பாடியுள்ளார்.
மேலும், மோகத்தைக் கொன்றுவிடு; பந்தத்தை நீக்கிவிடு என் சிந்தனையைத் தெளிவாக்கு என்றும் விண்ணப்பிக்கின்றார்.
முத்துமாரியிடம் எனக்கு வரும் கேட்டினை நீக்கவேண்டும்; கேட்ட வரத்தினை நல்க வேண்டும்; குறைகளை நீக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார். பக்தன் ஒருவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க பாரதியால் இப்பாடல் பாடப்பட்டதாகக் கூறுவர்.
காளி
எங்கும் நிறைந்திருக்கின்ற காளியைப் பாரதி வழிபடுகிறார். குன்றத்தினை ஒத்திருக்கின்ற தோளும் மேருமலையை ஒத்த வடிவமும் நல்லதை மட்டுமே நாடுகின்ற மனமும் எனக்குக் கொடுக்க வேண்டும். துயரத்தில் தவிக்கின்ற நெஞ்சம் எமக்கு வேண்டாம் எனப் பாடுகிறார்.
“தேடிச் சோறுநிதந் தின்று – பல, சின்னஞ் சிறுகதைகள் பேசி” (பாரதியார் கவிதைகள், 2007: 143)
எனும் இப்பாடல் இளைஞர் முதல் பெரியோர் வரை பலருக்கும் எழுச்சியைத் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
கண்ணன்
பாரதி, கண்ணனைத் தம் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், சேவகனாகவும், அரசனாகவும், சீடனாகவும், குருவாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும் கண்டு வணங்கியுள்ளார். கண்ணன் மீதுள்ள பற்றினால் அவன் மீது தனித்த கவிதைகள் பாடியதோடு, “கண்ணன் பாட்டு” எனும் நூல் ஒன்றையும் படைத்திருக்கின்றார்.
அந்நூல் குறித்து அ. திருமலை முத்துசுவாமி,
“பாரதியார் இயற்றிய கண்ணன்பாட்டு, கடமை உணர்வை ஊட்டி, உரிமை உணர்வைக் கொடுக்கும் உண்மைத் தத்துவக் கவிதையாகும். சுருங்கக்கூறின் சிற்றுயிர் பேருயிர் தன்னோடு கலக்கும் தனிநிலைச் சிறப்பை சித்தரிக்கும் பேரின்பப்
பாட்டாகும்” (அ. திருமலை முத்துசுவாமி, 1960: 10)
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதி, கண்ணனிடம் தம்மனதில் எண்ணிரண்டு கோடி கவலைகள் எழுவதாகவும் அதனை எந்தநாள் போக்கிடுவாய் என்றும் கேட்கிறார். கண்ணன் பிறப்பு, அவனது செயல்பாடு, குழலோசை ஆகியன குறித்தும் கண்ணம்மாவின் எழில்,
அவள் மீது தாம் கொண்டிருக்கின்ற காதல் ஆகியன குறித்தும் விரிவாகப் பாடியிருக்கின்றார்.
திருமகள்
திருமகளைத் துதித்தும் பாரதி கவிதைகளைப் பாடியுள்ளார். ஆடுகளும் மாடுகளும் குதிரைகளும் வீடுகளும் நிலமும் மிகுதியான செல்வங்களும் எமக்குத் தந்தருள வேண்டும். இந்த வறுமை போதும்; மனம் வேதனையுறுகின்றது; துன்பம் பொறுக்க இயலவில்லை என்று முறையிட்டிருக்கின்றார். இந்த உலகத்தில் வறுமையில் உள்ளோர் அனுபவிக்கும் துன்பங்களையும் திருமகளிடம் பாரதி முறையிட்டிருக்கிறார். தாம் வறுமைக்காலத்தில் சந்தித்த அவமரியாதையும் தீயவரின் நட்பும் தாம் செய்கின்ற முயற்சியெல்லாம் கெட்டு அதனால் ஏற்படுகின்ற மனச்சோர்வும் ஆகிய கொடிய நோய்களெல்லாம் வீழ்ச்சியுற வேண்டும். திருமகளே அதற்கு நின் அருள்வேண்டும் எனப் பாரதி பாடியிருக்கின்றார்.
திருமகள் எங்கு வீற்றிருக்கிறாள், அவளது செயல்பாடு யாது என்பது குறித்தும் மிக விரிவாக அவர் பேசியிருக்கின்றார். கலைமகள் கல்விக்கு அதிபதியாகிய கலைமகள்மீதும் பாரதி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். கலைமகளிடம் தம் நாவிலிருந்து நடனம் புரிய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். வீதிகள் தோறும் ஓரிரு பள்ளிகள் வேண்டும். கல்வி இல்லாத ஊரினைத் தீக்கு இரையாக்க வேண்டும் என முழங்கியிருக்கிறார். இனிய சுவையுடைய கனிகளைத் தரும் சோலைகள், அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல், கோவில்கள் பத்தாயிரம் கட்டுதல், தான தர்மங்கள் செய்தல் இத்தன்மைய செயல்கள் யாவும் செய்வதைவிட ஓர் ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடி புண்ணியத்தைக் கொடுக்கும் என்பது பாரதியின் கருத்தாக இருந்திருக்கிறது.
ஞாயிறு, திங்கள்
பாரதி, விநாயகர் உள்ளிட்ட மேற்கூறிய தெய்வங்களைப் பாடியது மட்டுமின்றி ஒளியினைத் தரக்கூடியதும் உலக உயிர்களை வாழ்விக்கக் கூடியதுமான ஞாயிறு, திங்கள் எனும் இயற்கையையும் தெய்வமாக எண்ணிப் பாடல் புனைந்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து, அல்லா
தம் சமயக் கடவுள் மட்டுமின்றிப் பிறசமயக் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவையும், அல்லாவையும் பாரதி பாடியிருக்கிறார். நம் அகந்தையை நாம் அழித்துவிட்டால் இயேசு நம் உள்ளத்தில் குடிபுகுந்து நம்மைத் தினந்தினம் காத்தருள்வார் என்பது பாரதியின் எண்ணமாகும்.
பாரதி, கடையத்திற்கு அருகிலுள்ள பொட்டல்புதூரில் இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை குறித்துச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார். அதில், “அல்லா! அல்லா! அல்லா!” எனத் தொடங்கும் பாடலைப் பாடிப் பின்னர் உரை நிகழ்த்தியதாக ம.ப. பெரியசாமித்தூரன், ரகுநாதன் போன்றோர் குறிப்பிடுகின்றனர். அல்லாவை வணங்குபவர் கல்லாதவராக இருந்தாலும் உண்மை சொல்லாத, பொல்லாதவராக இருந்தாலும் தவம் செய்யாத, நல்லவர்கள் உரைத்த நீதியின்வழிச் செல்லாதவராக இருந்தாலும் அவர்களுக்குத் தோன்றும் பயத்தை அவர் அழிப்பார் எனப் பாடுகின்றார்.
“பாரதி தெய்வ நம்பிக்கை கொண்டவன்தான். ஆனால், தெய்வ நம்பிக்கை ஒன்றே விமோசன மார்க்கம் என்று கருதியவன் அல்ல; தெய்வத்தின் பேரால், இன்றைய சாதியக் கொடுமைகளையும், வருணாசிரம தருமங்களையும் நிலைநிறுத்த எண்ணிய கொடும்பாவி அல்ல. பரலோக சாம்ராஜ்யத்தில்தான் மக்களுக்கு விடுதலையும் சாயுஜ்யமும் கிட்டும் என்று கூறிய ஏமாற்றுக்காரன் அல்ல; உலகத்தையோ உலகத்துப் பொருள்களையோ, உலக மக்களையோ மாயை என்று கருதிய சமூகத் துரோகியுமல்ல” (ரகுநாதன், 1990: 233)
என்று பாரதியின் தெய்வீக நம்பிக்கை குறித்து ரகுநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாரதியை முழுமையாக உணர்ந்து வழங்கப்பட்ட கருத்துரையாக இது அமைந்திருக்கிறது.
தொகுப்பாக...
பாரதி, தெய்வத்திடம் நல்லறிவு, பொருள், நீண்ட ஆயுள் என்பனவற்றை கொடு என முறையிட்டிருக்கின்றார். இவர் இவ்வாறான தன்னலக் கோரிக்கைகளை மட்டுமல்ல; பொதுநலக் கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார். பராசக்தி உள்ளிட்ட தெய்வங்களைப் பாடுவதற்கு அவரது நண்பர்களும் அவர்தம் வாழ்வில் ஏற்பட்ட வறுமையும் சொல்ல முடியாத துயரமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அவருடைய பக்தி பாடல்கள் வெறுமனே தெய்வத்திடம் முறையிடுவது மட்டுமல்ல; அதனுள் தம்மைத்தாமே ஆளுவதற்கு வழிமுறை கூறியிருக்கின்றார். பெண்ணைத் தெய்வமாகக் கண்டிருக்கிறார். நாட்டின் விடுதலைக்காக மறைமுகமாகக் குரல் கொடுத்திருக்கிறார். மக்களை எழுச்சி கொள்ளச் செய்திருக்கிறார்.
கல்வியின் அவசியத்தையும் அதன் இன்றியமையாமையும் பேசி ஏழைகளுக்கு கல்வி கொடுக்கவேண்டும் என முறையிட்டிருக்கின்றார். பிறசமய ஒற்றுமைப்பாட்டை நிலைநாட்ட முயன்றிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.
துணைநின்ற நூல்கள்
1. சக்திதாஸன் சுப்பிரமணியன், பாரதி லீலை, சாது அச்சுக்கூடம், சென்னை, முதற்பதிப்பு: 1938.
2. சிவஞானம். ம.பொ., பாரதியாரின் பாதையிலே, பூங்கொடி பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு: 1974.
3. சுத்தானந்த பாரதியார். யோகி ஸ்ரீ., கவிக்குயில் பாரதியார் (வரலாறும் வாக்கமுதமும்) அன்பு நிலையம், திருச்சி, முதற்பதிப்பு: 1946.
4. சுப்பிரமணிய பாரதி. சி., பாரதி நூல்கள் (கட்டுரைகள்) பாரத பிரசுராலயம், சென்னை, மூன்றாவது பதிப்பு: 1943.
5. திருமலை முத்துசுவாமி. அ., மறுமலர்ச்சி கவிஞர்கள், சாந்தி நூலகம், சென்னை, முதற்பதிப்பு: 1960.
6. பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, ஏழாம் பதிப்பு: 2007.
7. பெரியசாமித்தூரன்.ம.ப., பாரதியும் கடவுளும், வானதி பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு: 1981.
8. மீரா., பாரதியம் (கட்டுரைகள் - கவிதைகள்), அகரம் வெளியீடு, தஞ்சாவூர், முதற்பதிப்பு: 2006.
9. ரகுநாதன், பாரதி சில பார்வைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு: 1990.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.