சிங்கப்பூர் சிறுகதைகளில் தொன்மப் பண்பாடு
ஞா. விஜயலட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
|
முனைவர் பா. தமிழரசி
ஆய்வு நெறியாளர் & உதவிப் பேராசிரியர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
|
முன்னுரை
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என வாழ்வில் மறுமலர்ச்சி தேடி இடம் விட்டு இடம் பெயர்வது மனித சமூகத்தின் இயல்புகளில் ஒன்று. கிராமத்திலிருந்து பெயர்ந்து நகரம் நோக்கி வேலைக்குச் செல்வது போன்றே, அயல்நாடுகளுக்கு பணி நிமித்தம் புலம் பெயர்வதும் தற்போது வழக்கமாகிவிட்டது. அண்மையக் காலங்களில் தமிழர்கள் அயல் நாடுகளில் குடி பெயர்தலும், புலம் பெயர்தலும் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்கூடு. அங்கேயே நிரந்தர வாசம் செய்யக்கூடிய சூழலில் அந்நாட்டுச் சூழலின் தனித்தன்மைகளைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாக கண்டறிய எத்தனிக்கின்றன. சிங்கப்பூரில் தமிழர் பண்பாடு மெருகேறிக் கொண்டே இருக்கும். காரணம், அங்கே பண்பாட்டு அதிர்ச்சி இல்லை. அவ்வாறான பண்பாட்டுக் கலவையான சூழலில் பிறக்கும் சிறுகதைகளில் தமிழரின் மரபைப் பறைசாற்றும் மரபும், தொன்மமும் ஊடாடுகிறது என்பதை அவர்களது வாழ்வியலில் பரிணமிக்கும் இச்சிறுகதைகளின் வழி ஆய்ந்து தொகுத்தளிக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
வெயிலின் கூட்டாளிகள்
ஆசிய நாட்டுச் சிறுகதைகளில் சிங்கப்பூர் புனைவிலக்கியப் பரப்பிற்குள் தொன்மங்களைத் தன் கதைக்குள் புகுத்தி எழுதுவதிலும், புதுப்புதுத் தடங்களை அமைத்துச் செல்வதிலும் திரு. கணேஷ் பாபு திறனுடையவராக இருக்கிறார். இவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்து, வாழ்வாதாரத்திற்காகச் சிங்கப்பூருக்கு 2008 ஆம் ஆண்டு குடிபெயர்ந்து சென்றார். தற்போது சிங்கப்பூரிலேயே வசித்து வருகிறார். இவரது கதைகளில், சிங்கப்பூரில் ஏதோ ஒரு மூலையில் நிகழும் கதைக்களமும், அவர்களது வாழ்வியலை ஆராய்கின்றது. பின்பு, அது மொழியின் வெளிச்சத்தால் கதைகளாகிறது. இவரது கதைகளில் வருணனை அழகும், சொற்செறிவும் மிகுந்து காணப்படுகிறது. இவரது சிறுகதைத் தொகுப்பில் காணலாகும் இரண்டு கதைகளும் தொன்மத்தின் ஊடே சிங்கப்பூர் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
தொன்மப் பண்பாடு
“தொன்மம்” எனப்படும் பழங்கதைகள் பற்றிய கலை இலக்கியத்திலும், வாய்மொழிக் கதைகளிலும் ஒரு பண்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இக்கால இலக்கியங்களில் தொன்மங்களைப் பயன்படுத்துவது, சமூகத்தில் திகழும் தற்கால நடப்பியல் முறைகளில் தொன்மங்களை உட்புகுத்தி, பகுத்தறிவு சமூகவியல் கண்ணோட்டத்தோடு திறனாய்வு செய்கிறது. இவை சமூகத் தேவைக்குத் தகுந்தவாறு இளகி வருகின்றவைகளாகவும், சக்தித் திரளாகவும் அமைந்து கிடக்கின்றன. “ஒரு புதிய படைப்பில் தொன்மக் கூறுகள் செம்மையாக அமைந்து விட்டால், அப்படைப்பானது, கலைத் தன்மையில் குறையுடையதாக விளங்கினாலும் கூட, அது வாசகர்களை எளிதாகக் கவர்ந்து இழுத்து விடுகிறது” (க. பஞ்சாங்கம் கட்டுரைகள்: 528) என்று விளக்குகிறார் கால்டுவெல்.
அந்தரத்தில் நிற்கும் வீடு
இக்கதையில் வேதாளம் விக்கிரமாதித்யன் தொன்மத்தை எடுத்து மீளுருவாக்கியுள்ளார். விக்ரமன், வேதாளம் எனும் இருவரும் தொன்மக் கதாபாத்திரங்கள். வாய்மொழிக் கதைகளில் உஜ்ஜயினி நகரம் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பலரால் வீரம் செறிந்த மாமன்னன் விக்ரமாதித்யன் என்று அறியப் பெறுகிறார். அமர் சித்திரக் கதை என்ற சிறுவர் புத்தகத்தில் விக்கிரமாதித்தியன் குறித்த பல கதைகள் இடம் பெற்றுள்ளன. தீவிரக் காளி பக்தரான விக்கிரமாதித்தியன் முருங்கை மரத்தில் தொங்கிய ஒரு வேதாளத்திடம் மாட்டிக் கொள்வதும். அது கேட்கும் கேள்விகளுக்கு விக்ரமன் பதில் சரியாக கூறாவிட்டால் தலையே வெடித்துச் சிதறிவிடும் என்ற பழங்கால தொன்ம நிகழ்வைக் கொண்டு கதை வடித்திருக்கிறார்.
ஏன்? இந்த வேதாளத்தை சுமந்தலைய வேண்டும் என்ற எண்ணம் விக்ரமனுக்கு ஏற்படுவதாகவும், அச்சமயத்தில் வேதாளமும் இதுவே இறுதிக்கேள்வி என்று கூறி ஒரு கதை சொல்வதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கதையே வேதாளம் கேட்கும் இறுதிக் கதையா? என்று கதை வாசிக்கும் வாசகரையும் கதைக்குள் பயணிக்க ஆர்வமூட்டுகிறார்.
ஓரிடத்தில் “எதற்காக இப்படி ஒரு வேதாளத்தை காலாகாலத்துக்கும் தோளில் சுமந்து கொண்டலைகிறோம்? இதனால் என்ன பயன் உண்டாகிவிடப் போகிறது? வேதாளத்தை அதன் போக்கில் விட்டு விட்டால்தான் என்ன? இந்த ஈனப் பிறவியை எங்காவது கடலில் கடாசிவிட்டு எல்லோரையும் போல ஏன் நானும் எனக்கென வீடு, வேலை, குடும்பம் என்று வாழக்கூடாது? இந்த ஜனநாயக உலகத்தில் நான் மட்டும் ஏன் மன்னன் என்ற மறைந்த பெருமையுடன் ஒரு வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு காலங்களைக் கடந்து சென்று கொண்டே இருக்கிறேன்?” (வெயிலின் கூட்டாளிகள், ப.எண்:35) என்ற வரியில் விக்ரமன் வேதாளத்தை காலம் காலமாகச் சுமந்து அலைவது தொடர்ந்து வருவதையும், தற்கால நடப்புநிலை வாழ்வியலுக்கு ஏற்ப விக்ரமனின் உரையாடலும், தொன்மக் கதாபாத்திரமான விக்ரமாதித்ய மன்னன் தற்போதுள்ள நடைமுறை வாழ்க்கைக்கு ஏங்குவது போலவும் உரையாடல் அமைந்துள்ளது.
இன்று நான் உனக்குச் சொல்லும் கதையே இறுதிக் கதை. கதை முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு விடையளித்தால் நான் உன்னிடம் இருந்து பிரிந்து, எனக்கான பேயுலகில் கலந்து மறைவேன். தவறான விடையளித்தால், வான் நட்சத்திரங்களுக்குப் போட்டியாய் உன் தலை சுக்கு நூறாய்ச் சிதறி நிலத்தில் விழும் என்ற நிபந்தனையுடன் கதை சொல்கிறது வேதாளம்.
சிங்கப்பூரில் சொந்த வீடு என்பது பலரது கனவு. அந்தக் கனவு பலருக்குக் கனவாகவே நீளும். கனவு நிஜமாகும் போது, ஒருவன் அடையும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை எனலாம். அப்படித்தான் வாசுவும், பானுவும் தங்கள் கனவு இல்லத்திற்கு வந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பையெல்லாம் சேகரிக்கும் குப்பை அறைக்கு மேலே வாசுவின் வீடு இருப்பதன் காரணத்தாலே அவன் வீடு முழுவதும் கரப்பான் பூச்சிகளின் வாழ்விடமாகிப் போயிற்று. கரப்பான் பூச்சிகளை அழிக்க அவர்கள் செய்த எதுவும் தற்காலிக பலனை மட்டுமேத் தந்தது. ஆனால், அது முடிவுரையை எட்டவில்லை. இந்த நிலையில், பானு கருவுற்றிருந்த நிலையில் தங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற பயத்துடன் நகரும் கதையை வேதாளம் சொல்லி முடித்தது.
இந்தக் கதையில் கரப்பான பூச்சிகளால் ஒரு குடும்பம் சந்திக்கும் துன்பங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன. என்னுடைய வினா, கரப்பான் பூச்சிகள் இல்லாத வீட்டை வாசு தன்னுடைய குழந்தைகளுக்கு அளிக்க இயலுமா? சீக்கிரம் விடை சொல் என்று வேதாளம் கேள்வி கேட்கிறது.
கேள்வியின் சிக்கலை உணர்ந்த விக்ரமாதித்யன் “இந்த உலகில் மனதர்கள் எப்படி பலவிதமான ஜீவராசிகளோடு தாங்களும் இணக்கமாக வாழ்கிறார்களோ, அதுபோல வாசுவின் வீட்டிலும் அவர்கள் இந்த பூச்சிகளோடு இணக்கமாக வாழத்தான் வேண்டும். வாசு செய்ய வேண்டியதெல்லாம் கரப்பான் பூச்சிகளோடு எப்படி இணக்கமாக இருக்க வேண்டும் என்று தன் குழந்தைகளுக்கு கற்பிப்பதுதான். அவ்வகையில் அவன் எடுத்த முடிவு சரியானது தான்” (வெயிலின் கூட்டாளிகள், ப.எண்:48) என்று சொல்லி விட்டு விக்ரமாதித்யன் வேதாளத்தைப் பார்க்க, வேதாளம் அதுவரை தான் சந்திக்காத இக்கட்டில் இருந்தது. உன்னுடையப் பதிலில் எனக்குத் தெளிவு பிறக்கவில்லை எனினும், அதனுள் உண்மை ஒரு துளி இருக்கத்தான் செய்கிறது. நீ செல்லலாம் என்று கூறி விக்ரமாதித்யனுக்கு விடுதலை அளிக்கிறது வேதாளம்.
இக்கதையில் சிங்கப்பூர் போன்ற பெருநகரத்தில் வேலையும், சொந்த வீடும் கிடைத்த போதும் கரப்பான் பூச்சிகளின் துன்பத்தால் வீட்டை விற்க நினைக்கும் மனப்போக்கானது, அவரவர் பார்க்கும் பார்வையில் உள்ளது. கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகை எப்படி உருவாக்க முடியாதோ அது போல அவைகள் இல்லாத வீட்டையும் உருவாக்க முடியாது என்பதே முடிவான உண்மை.
சமூகத்திலும், வீட்டிலும், வெளியிலும் பல ஜீவராசிகளோடும், பலதரப்பட்ட மக்களோடும் இணைந்து வாழப் பழக்கப்படுதலே சமூக நடைமுறை என்ற ஆழ்ந்தக் கருத்தைப் பதிவு செய்யும் விதமாக விக்ரமாதித்யன் வேதாளம் தொன்மக் கதையை இச்சிறுகதைக்குள் புகுத்தி உரையாடல் வழியாக, சமூக நிலைச் சிக்கலை எளிமையாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை நமக்கும் சமூகத்திற்கும் தருகிறார்.
பிடி கடுகு
மரணம் நிகழா வீட்டிலிருந்து ஒரு ‘பிடி கடுகு’ பெற்று வந்தால் குழந்தையைப் பிழைக்கச் செய்யலாம் என்று புத்தர் கோதமியிடம் கூறியதாக சொல்லப்படும் புத்தஜாதகத் தொன்மத்தை அபாரமான முறையில் ‘பிடி கடுகு’ என்ற கதையில் மீள்புனைவு செய்திருக்கின்றார். கோதமிக்கு தன் குழந்தை மேல் அளவு கடந்த அன்பு உண்டு. வளர்பிறை போல வளர்ந்த குழந்தைக்கு ஒரு நாள் நோய் உண்டானது. நோய் அதிகரிப்பால் குழந்தை ஒரு நாள் இறந்துவிட்டது. அதனால் பெருந்துயரம் அடைந்த கோதமி தன் குழந்தையைப் உயிர்ப்பிக்க விரும்பினாள்.
இறந்த குழந்தையைத் தோளில் கிடத்திக் கொண்டு, போவோர் வருவோரிடம் இறந்த குழந்தையைப் உயிர்ப்பிக்க மருந்து வேண்டுகிறாள். அறிஞர் ஒருவர் அவளது துயரைத் துடைக்க எண்ணிப் புத்தரிடம் சென்று விடை காணுமாறு கூற, அவளும் கௌதம புத்தர் எழுந்தருளியிருக்கும் குடிலுக்குள் சென்று, அவர் காலடியில் குழந்தையைக் கிடத்தி குழந்தைக்கு உயிர் தருமாறு கதறினாள். புத்தர் ஒரு பிடி கடுகு மட்டும் வேண்டும் என்றும், நீ கடுகு பெற்று வரும் வீட்டில் யாரும் இறந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுப்புகிறார். குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு வீடு வீடாக நகரெங்கும் அலைந்து திரிகிறாள். வேண்டிய கடுகு கிடைத்தது. ஆனால் இறக்காதவர் வீடுதான் கிடைக்கவில்லை.
அவளுக்கு அப்போது தான் உண்மை புலப்பட்டது. பிறப்பு போல மரணமும் ஒரு நிகழ்வு. இறந்தவர் மறுபடியும் பிழைப்பது இல்லை என்கிற உண்மையை உணர்ந்த அவள் தன் குழந்தையை நல்லடக்கம் செய்து விட்டு நிலையாமையை உணர்ந்து பௌத்த மதத் துறவியாக ஆனாள்.
இவ்வாறு ஒரு புத்த மதத் தொன்மக் கதையை மீள்புனைவு செய்ய இப்படியும் சிந்திக்கலாம் என்ற தொனியல் அமைந்த இக்கதையில் கோதமி சிங்கப்பூரின் நகர் வீதியெங்கும் பல காலமாக பல நூற்றாண்டுகளாக தன் இறந்த குழந்தையை பிழைபிக்க மரணமற்ற வீட்டிலிருந்து பிடி கடுகு பெற்று வரமுடியாது மாயச் சூதாட்டப் பலகையில் கட்டுண்டிருந்த நிலையை வருணிக்கிறார். மேலும் ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய வைராக்கியத்தையும் ஒரு பெண்ணிற்கு இருக்கும் உறுதியை. “ஒரு பெண்ணான கோதமி தோல்வியை ஒப்புக் கொள்ளக் கூடியவள்தான். ஆனால், ஒரு தாயான கோதமி ஒருபோதும் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளப் போவதில்லை” (வெயிலின் கூட்டாளிகள், ப.எண்:106) கணவன் இறந்தும் தன் பிள்ளையை வளர்க்கப் போராடும் பெண்கள் பலரும் நம் சமூகத்தில் அத்தனை உறுதியோடு வாழும் வல்லமை பெற்றவர்கள்தாம்.
அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஆண்கள் இல்லாது, தனித்து நின்று சாதித்துக் காட்டும் பெண்கள் பலருண்டு. அவ்வாறு தன் உறுதியில் இருந்து மாறாது ஆசையின் வசியக்காரங்களுக்குத் தாழிட்டுக் கொண்ட ஒருவரால் மட்டுமேத் தன் குழந்தையை உயிர்ப்பிக்க முடியும் என்றெண்ணி, “மரணமற்ற வீடும் ஆசையற்ற மனமும் ஒன்று தான்” (வெயிலின் கூட்டாளிகள், ப.எண்:110) என்று கூறி ஆசையைத் துறந்த புத்தர் சிலையின் முன்னால் குழந்தையைக் கிடத்தி பிடிகடுகை அவர் கைகளில் ஒற்றி எடுத்துக் குழந்தையின் மேல் தூவுகிறாள். குழந்தை பிழைத்ததா? ஆசையை அகற்றிய புத்தரின் கைகளால் வீசப்பட்ட ‘பிடி கடுகு’ கோதமியின் மீளாத் துயரைத் துடைத்ததா? என்ற கேள்விக்கு உண்டான விடையை கேள்வியாகவே முடித்திருக்கிறார்.
மரணத்தின் பரு வடிவம் ஆசை. ஆசையெனும் நச்சின் ஒரு தளி யாவர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆசையில்லா மனிதரைக் காண்பதரிது என்ற பெருமூச்சுடன் கதையை நிறைவாக்கியிருக்கிறார்.
முடிவுரை
இவ்விரு சிறுகதையிலும் தொன்ம நிகழ்வைக் கொண்டு புலம் பெயர் சமூகத்தில் உண்டாகும் வாழ்வியல் நிலைகளான சமூக இணக்கம், ஆசை, சிற்றினங்கள் மீதான மனிதரின் புரிந்துணர்வு, பெண்ணின் வைராக்கியம் முதலான சமூகவியல் நடத்தைக் கூறுகள் தொன்மப் பண்பாட்டுக் கண்ணோட்டத்தோடு சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டு தெளிவுபட எடுத்தாளப்பட்டுள்ளது.
துணை நின்றவை
1. நவீன இலக்கிய கோட்பாடுகள் - க.பஞ்சாங்கம், கட்டுரைகள், பேராசிரியர் பஞ்சாங்கம் க., காவ்யா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு 2008.
2. வெயிலின் கூட்டாளிகள் (ம) பிற கதைகள், கணேஷ் பாபு, யாவரும் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2021.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.