உ. வே. சா பழமையான தமிழ் இலக்கிய இலக்கணங்களைச் சுவடிகளாகத் தேடித் தொகுத்து அவற்றை ஆராய்ந்து, செம்மையாக்கம் கண்டறிந்து, பதிப்புகளாக வெளியிட்ட பெருமைக்கு உரியவர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதன் சுருக்கமாக உ.வே.சா எனும் பெயர் அமைகிறது. தமிழத்தாத்தா என்றழைக்கப்படும் இவர் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19 ஆம் நாள் பிறந்தார். தமிழில் என்றும் நிலைத்திருக்கும் நூல்களைத் தமிழ் உலகிற்கு அளித்த இவர், 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாளில் புகழ் உடலை அடைகிறார். இவரின் மறைவிற்கு வருந்திய தமிழ் நெஞ்சங்கள் தங்களது துயரங்களைக் கடிதங்களின் வழியாக வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான கடிதங்களுள், தேனி மாவட்டம், பெரியகுளம் இளைஞர் சங்கத்தார் (Young Mens’ Association, Periakulam) என்ற அமைப்பு, 01-05-1942 அன்று இரங்கல் கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தை உ.வே.சாமிநாதையர் மகன் திரு. கலியாணசுந்தரம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் அதன் தீர்மானம் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் எழுத்தமைப்பில் க்கு, த்து என்பதன் கூட்டெழுத்து முறையும் றோம் என்பதற்கான பழமையான எழுத்து முறையும் காணப்படுகிறது. இது 1942 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளுள், பழமையான தமிழ்க் கூட்டெழுத்து வரிவடிவங்கள் தொடர்ந்துள்ளன என்பதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வாறான கடிதங்களைத் தொகுத்து, தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியுள்ள, தமிழ் இணையக் கல்விக் கழகம் - தமிழ் மின் நூலகத்தின் தமிழ்ப் பணி என்றும் தமிழைக் காத்து நிற்கும் பணியாக உள்ளது.
இரங்கல் கடிதம்
அன்புமிக்க ஐயா,
சித்திராபானு வருடம் சித்திரைத் திங்கள் பதினேழாம் நாளன்று தங்கள் பிதா மகாமகோபாத்யாய தாக்ஷிணத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் பூத உடலை நீத்துப் புகழுடலை அடைந்தார் எனக் கேள்வியுற்று நாங்கள் யாவரும் வருந்துகின்றோம். அதன்பொருட்டு மேற்படி சபையின் சார்பாக 1.5.42ல் ஓர் அனுதாபக் கூட்டம் இவ்வூர் ப்ரம்மஞான மந்திரத்தில் (Theosophical prodge) கூட்டப்பட்டது. அங்கு அச்சமயம் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் எங்கள் வருத்தத்தை தங்களுக்கு தெறிவிக்கிறோம்.
Resolution
தமிழ்மொழி அன்றும் இன்றும் என்றும் வாழ்ந்திருப்பதற்கு காரணமாய் விளங்கிய திருவாளர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் பூதவுடலை நீத்துப் புகழுடலை அடைந்தார் என்ற இச்செய்தி கேட்டு இச்சங்கத்தாராகிய நாங்கள் பெரிதும் வருந்துகின்றோம். எல்லாம் இறைவன் செயல். அப்பெரியாரின் ஆத்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல ஈசனை இறைஞ்சுகின்றோம்.
இங்ஙனம்
இளைஞர் சங்கத்தார்
(அனுப்புநர் முகவரி)
T.N.Krishnamoorthy
Chairman
Young Mens’ Association
Periakulam.
(பெறுநர் முகவரி)
S.Kalyana Sundaram …
S/o. Late Dr.U.V.Swaminatha iyer …
Thirukkalikkundram…
திருக்கழுக்குன்றம்.
இக்கடிதம் தமிழ் அன்பர்கள் உ.வே.சாமிநாதையர் அவர்களின் மீதும் அவரது தமிழ்த் தொண்டின் மீதும் கொண்டிருந்த மதிப்பிற்கான சான்றாக அமைகின்றது. எழுத்துகள் ஒரு சமுதாயத்தின் ஆவணமாக அமைகின்றன. இவ்வாறான கடித ஆவணங்கள், மக்களின் உணர்வுகளையும் அக்காலத்தையப் பண்பாட்டையும் மொழிநடையையும் அறிந்து கொள்ள துணை செய்கின்றன. மேலும், பெரியகுளம் இளைஞர் சங்கத்தின் ஏற்றமிகு செயல்பாடுகளை அறிவதுடன், 01.05.1942 இல் இச்சங்கத்தின் தலைவராக T.N.Krishnamoorthy என்பவர் இருந்தார் என்பதும் அறிந்து கொள்ள முடிகிறது.