தோல்வி தொடரும் நிலையல்ல!!
முகில் தினகரன்
வெற்றி என்பது ஒரு நிரூபணம்; படிப்பினை அல்ல. ஆனால், தோல்வி என்பது பல சமயங்களில் நமக்கு படிப்பினை. வெற்றி அடைவது... அதற்காக மகிழ்வது… கொண்டாடுவது பெரிதல்ல. தோல்வியின் போது நமது மனநிலை எப்படி...? என்பதுதான் மிக முக்கியம். தோல்வியை ஒரு சறுக்கலாக எண்ணாமல் ஒரு படிக்கட்டாக எண்ணும் போது வெற்றிக் கோபுரம் நமக்கு வெகு அருகில் அதுவாகவே வந்து விடும்.
விழாமலே ஓடும் குழந்தையை விட, விழுந்து விழுந்து அதே வேகத்தில் எழுந்து எழுந்து ஓடும் குழந்தைகள்தான் நம்மை மிகவும் கவரும். நடந்து முடிந்தவைகளை ஒரு சோதனை என்றோ… பயிற்சி என்றோ நினைத்துக் கொண்டு தொடர்ந்தோமானால் இனி நடக்க வேண்டியவற்றை அப்பயிற்சியின் அடிப்படையில் தெளிவாகத் திட்டமிட முடியும்.
முன்னேற்றம் அடைந்தவர்களிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான குணம் யாதெனில் தோல்வியை எளிதாக எதிர் கொள்வதுதான். வெறும் சுயபச்சாதாபமும் சுய ஆறுதலும் எந்தவிதத்திலும் உதவாதவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். “வெற்றியை ஏற்றுக் கொள்வது போல் தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்” என்பதே அவர்களது மேலான தத்துவமாக இருக்கும். சொல்லப் போனால் தோல்வியையும் பெரும் சோதனைகளையும் எதிர் கொண்டவன்தான் மிக அதிக கவனத்துடன் செயல்படுவான் முன்னேறுவான்.
நமது தோல்வியின் போது மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்லும் விமர்சனங்களையும், ஏளனங்களையும் ஏகடியங்களையும் அப்படியே நம்பி சோம்பி விடக்கூடாது. நமது பலமும் பலவீனமும் நமக்குத்தானே தெரியும். நமது பாணி ஜெயிக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து வெற்றியடைய வேண்டும் அல்லது வெற்றிக்கான பாணியை தோல்விகளின் அடிச்சுவட்டில் கண்டெடுத்து வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும்.
வெற்றி நிலைத்திருக்க…
மிக எளிமையான நிலையிலிருந்து சிரமம் பாராது உழைத்து முன்னேறியிருக்கும் ஒருவர், “ஒன்றுமே இல்லாதிருந்தேன்... ஏதோ இந்த நிலைக்கு வந்து விட்டேன்…போதும் இதற்கு மேல் ஆசைப்படக்கூடாது” என்று நினைப்பது தவறு. அது அவருடைய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது. கடும் உழைப்பும், ஓரளவிற்கான அதிர்ஷ்டமும்தான் அவருக்கு அந்த வெற்றியை அளித்திருக்கின்றது. அதை அவர் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அதிகம் உழைத்துத் தன் வெற்றியின் தரத்தை நிலை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் தொடர் வெற்றிகளை அவர் அனுபவிப்பது சாத்தியப்படும். “அதான் வெற்றி அடைந்து விட்டோமே... இனி என்ன வேண்டும்” எனச் சோம்பி உட்கார்ந்து விட்டால் ஆரம்பித்திலிருந்து அவரோடு போட்டி போட்டுத் தோற்றவர்கள், அவருக்குப் பின்னால் வந்து கொண்டேயிருப்பர். அவரது அயர்வுக்காகக் காத்திருந்து சமயம் பார்த்து அவரை முந்தி விடவும் செய்வர். அது மட்டுமல்ல புதிதாகப் போட்டிக்குள் நுழைந்து புத்துணர்ச்சியோடு செயல்படும் பலரும் அவரது அந்த ஓய்வு நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பின்னுக்கு மிகவும் எளிதாகத் தள்ளி விடுவர்.
பொதுவாகவே வெற்றியின் உச்சியில் இருப்பவர்கள் எவருக்கும் இளைப்பாறும் குணம் இருக்குமென்பது சாத்திமில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் “நான் என்றும் அசட்டையாகவே இருப்பதில்லை… ஏனென்றால் இதுவரையில் நான் தெரிந்து கொண்டவை... அவற்றின் மூலம் நான் செய்து முடித்துள்ளவை எல்லாமே மிக மிகக் குறைவானவையே… இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவை… அதன் மூலம் செய்து முடிக்க வேண்டியவை என ஏராளமாய் உள்ளன” என்கிற வகையிலேயேதான் இருக்கும்.
தோல்விதான் வெற்றி
உன் செயல்பாடுகளைச் சோதிக்கும் உரைகல்தான் தோல்வி
உன் வெற்றிகளைத் தடுத்து நிற்கும் தடைக்கல் அல்ல தோல்வி
உன் முயற்சிகளை முடுக்கிவிடும் முன்னுரைதான் தோல்வி
உன் முன்னேற்றங்களை முடக்கி வைக்கும் முடிவரையல்ல தோல்வி
உன் சோம்பல்களைச் செப்பனிடும் விடியல்தான் தோல்வி
உன் உயர்வுகளை வழிமறிக்கும் அஸ்தமனமல்ல தோல்வி
உன் நம்பிக்கைகளை நிமிர வைக்கும் நங்கூரம்தான் தோல்வி
உன் சுயவுறுதியைக் கலைத்து விடும் சூறாவளியல்ல தோல்வி
ஆம்;
தொடக்கம்தான் தோல்வி…! தொடர்ந்தால்தான் வெற்றி!!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.