நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
முன்னோக்கி நட!!
நடந்து கொண்டே இரு!!
அதாவது…
வாழ்ந்து கொண்டே வளரு!!
வளர்ந்து கொண்டே வாழு!!
வளர்ச்சி என்பது இங்கு வெறும் உடல் முதிர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல. வாழ்வில் எழுச்சி பெறுதல், முன்னேற்றமான நிலையை எட்டிப் பிடித்தல், சாமான்யனாய் இருந்து சாதனையாளனாக மாறுதல், போன்ற வளர்ச்சிகளைக் குறிப்பதாகும்.
“வந்தான்… வாழ்ந்தான்… மடிந்தான்” என்கிற சாதாரண, சராசரி வாழ்க்கை அறிவடையோர்க்கு அழகல்ல. இயற்கையாகவே நமக்குள் பல அரிய சக்திகள் புதைந்து கிடக்கின்றன. ஆற்றல்கள்… அறிவப்பூர்வமான சிந்தனைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து… “முயற்சித்துப் பார்ப்போமே” என்று முனைபவர்களே மனிதர்கள். “நம்மால் அன்றி யாரால் முடியும்?” என்று நம்பிக்கையுடன் இறங்குபவர்களே ஆண்மையாளர்கள்… ஆற்றல் நிறைந்தவர்கள். “வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும்... செயலில் ஈடுபட்டோம்... கடமையை நிறைவேற்றி விட்டோம்” என்கிற எண்ணத்தில் மகிழ்ச்சி காண்பவர்களே உண்மையான இலட்சியவாதிகள்.
எந்தச் செயலையும் சிந்திக்கும் போதே “இது நம்மால் முடியுமா? ம்ஹூம்…நிச்சயம் முடியாது” என்று பின்னோக்கி நடப்பது மனிதருக்கு அழகல்ல… பலமுமல்ல.
சிறந்த நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரமே அச்சமின்றி சிந்திக்க முடியம்... சிந்தித்ததைச் செயல்படுத்த முடியும்… செயல்பாட்டை வெற்றியாக்க முடியும்… வெற்றியை நிலைப்படுத்த முடியும்... நிலைப்பாட்டினை நீட்டிக்க முடியும்; நம்பிக்கை என்பதே இல்லாதவர்கள்… நம்பிக்கையைத் தொலைத்தவர்கள்... பலவீனர்கள். அவர்களால் ஆசைப் படத்தான் முடியுமே தவிர ஆசையை அரங்கேற்றிக் கொள்ள முடியாது... வெற்றியைத் தொடக்கூட முடியாது... சாதனையைச் சந்திக்கக் கூட இயலாது.
அடுத்து “பலம்”
“பலம்” என்றால் என்?
வெறும் உடல் பலம் மட்டும் பலமா?…இல்லை!!
அதனுள்ளே உள்ள “மன பலம” தான் உண்மையான பலம். மன பலம் உள்ளவர்களிடம் அச்சமில்லாத… தெளிவான சிந்தனை இருக்கும்… திட்டமிட்ட செயல்பாடு இருக்கும்… சலிப்படையாத விடாமுயற்சி இருக்கும். இவர்கள் இந்த உலகத்தை தமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டு எண்ணியதை முடிக்கும் திண்ணியராக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.
ஆகவே நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த நோக்கத்தை நோக்கியே தினமும் நமது முழு பலத்தையும்… முழு மனத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் இலட்சியத்திற்காக முயன்று தோற்றாலும் பரவாயில்லை. ஒரு செயலில் ஈடுபடாது இருப்பதைக் காட்டிலும் ஈடுபட்டுத் தோற்றுப் போவது கூட வீரம்தான்.
நம்மில் பலர் தங்கள் திறமையைத் தாங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு ஒரு சூன்ய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குறுகிய வட்டத்திற்குள் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு கிடப்பதுதான் இம்மனிதர்களின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போய் விடுகின்றனர்.
உயர்ந்த சாதனையாளர்கள் எல்லோரும் தற்காலிகமாக ஏற்படும் தடைகளையெல்லாம் தயங்காமல்… தடுமாறாமல்… தாண்டி வந்தவர்கள்தாம். எப்படி அவர்கள் மட்டும் தம் திறமைகளை சாமார்த்தியமாக கணக்கிடுகின்றனர்?…அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கின்றனர்?… செயல்பாட்டின் போதும்கூட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர்?… என்பதை தீர்க்கமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் தம் இலட்சியத்தின் மீது கொண்டுவிட்ட தீவிர பற்றுதான காரணம் என்பது புலப்படும். ஆம்! இலட்சியம்தான் ஒருவரைச் சாதாரணமாயிருந்தாலும்… பெரும் வலிமையுள்ளவராய் மாற்றிவிடும்.
அடுத்து ஒரு மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஒருவனது பார்வையில் அவனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதுதான் முதல் படி.
அந்தப் பார்வை வழியே எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புவது இரண்டாம் படி.
அந்த எதிர்கால வெற்றி தான் அமைக்கும் திட்டத்தில்தான் உள்ளது என்று முனைவது மூன்றாம் படி.
தன்னால் தனது திட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது நான்காம் படி.
ஆக, இப்படியாக… படிப்படியாய் பணியில் நாம் இணைவோமானால் வெற்றியும்... இன்பமும் நம் பக்கமே!
“இது சாத்தியமா?” என எண்ணுபவர்களும் உண்டு. எல்லா மனிதர்களும் வலிமையில் குறைந்தவர்களல்லர்; சுய நம்பிக்கையில்தான் குறைந்தவர்களாய் உள்ளனர்.
நம்மை நாமே உணர்ந்து கொண்டு நமக்கு நாமே உதவிக் கொண்டு நம்மால் முடியும் காரியங்களை நம்பிக்கையோடு தொடர்ந்தால்… நமக்குத்தான் வெற்றி.
நம்மால் அன்றி யாரால் முடியம்?
நம்பிக்கை கொள்… எதுவும் முடியும்... எளிதில் முடியும்.
இளைஞனே!
உன் முயற்சிக் கோடாரி
முனை மழுங்கினால்…
தயக்கக் கிருமியுனைத்
தாக்கி விடும்
தயக்கக் கிருமியுனைத்
தாக்கி விட்டால்…
சோம்பல் நோயினைப்
பீடித்து விடும்
சோம்பல் நோயுனைப்
பீடித்து விட்டால்…
வெற்றிக் கிரீடம்
விலகிப் போய் விடும்
வெற்றிக் கிரீடம்
விலகிப் போன பின்
வெற்று வாழ்க்கையில்
அர்த்தமில்லையப்பா!!