தள்ளிப் போடும் மனப்பான்மை தேவைதானா?
முகில் தினகரன்

“நண்பரே! நேற்று உங்களிடம் ஒரு அவசர வேலையைச் சொல்லியிருக்கேனே… முடித்து விட்டீர்களா?
“அதுக்கென்னங்க இப்ப அவசரம்? ஆகட்டுங்க. அப்புறம் மெதுவாப் பார்க்கலாம்” என்றார் சர்வ சாதாரணமாக.
அந்த நண்பருக்கு இளமையிலிருந்தே அந்தக் குணம் உண்டு. எந்தவொரு அவசரமான, தள்ளிப் போட முடியாத காரியத்தைச் சொன்னாலும், பின்னால் பார்த்துக் கொண்டால் போகிறது. இப்போதைக்கு தள்ளிப் போடுவோமே! என்று சொல்லும் மனோபாவம்.
இத்தகைய தள்ளிப் போடும் மனப்பான்மை இன்று பெரும்பான்மையானவர்களிடம் மண்டிக் கிடக்கும் உடன் பிறந்த நோய் என்றே கூறலாம். இத்தகைய நோயை நாம் வளரவிடாமல் அது தோன்றியதற்கான காரணத்தையும், அதற்கு அடிப்படை என்னவென்பதையும் தீர ஆராய வேண்டும்.
எதையும் காலம் தாழ்த்தாமல் அன்றே செய்து முடிப்பவர்கள்தான் செயல் வீரர்கள். இன்று வேண்டாம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுபவர்கள் நாளைய வாதிகள். இவர்களெல்லாம் நாளை நாளை என்று கூறிக் கொண்டேயிருப்பார்கள் தவிர, எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க மாட்டார்கள். இதுவே, பலருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகியிருக்கின்றது.
ஒரு விதையை உடனே ஊன்றி நீர் விட்டால்தானே அது வளர்ந்து பலன் தரும். நாளை, நாளை என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் அந்த விதை மக்கியல்லவா போய்விடும். அன்றே பாடங்களைப் படித்து விட்டால் தேர்வைப் பற்றி என்றும் அஞ்ச வேண்டியதில்லையல்லவா?
தள்ளிப் போடும் மனப்பான்மைக்கான காரணங்கள்
நமது குழந்தைப் பருவத்தில் நாம் பெற்ற பழக்க வழக்கங்கள். அனுபவங்கள் ஆகியவைகள்தான் நமது பிற்கால வாழ்வில் நம்மை ஆட்சி செய்கின்றன. அத்தகைய பழக்கங்களை நாம் மாற்றுவதற்கு பின்னாளில் மிகவும் தொல்லைப்படுகிறோம். சிலர், நாம் ஒரு காரியத்தைச் செய்தால்தானே நம்மைக் குறை சொல்லி நகைக்கிறார்கள், எந்தக் காரியத்தையுமே செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் தப்பித்துக் கொள்ளலாமே! என்கிற அச்ச உணர்வினால் காரியங்களைத் தள்ளிப் போடுகின்றனர்.
மேலும், சிலரோ சோம்பலின் காரணமாக காரியங்களை ஒத்தி வைத்து, பிறகு அல்லல்பட்டு அவதிப்படுகின்றனர்.
நமது உள்மனம் சில வேளைகளில் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. தள்ளிப்போடும் மனப்பான்மையும் இதன் விளைவே. இளமையில் சில காரணங்களால் நம் மனதினுள் புகுந்து விட்ட சில பழக்க வழக்கங்கள் நம்மையறியாது நம்முடன் இருப்பது தான் காரணம்.
அடுத்து, செய்யும் பணியில் ஊக்கமில்லாமையும் தள்ளிப்போடும் குணத்திற்கு ஒரு காரணமாகும். தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடத்தில்தான் செல்வம் தானாக வழி கேட்டு வந்தடையும். அதுபோல், தாமதமில்லாமல் உடனடியாகச் செய்கின்ற காரயங்கள்தான் முழுவீச்சுடன் வெற்றியை அடைந்து வளர்ச்சியின் உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
தள்ளிப் போடும் மனப்பான்மையைப் போக்குவது எப்படி?
எதையும் புரிந்து கொள்ளும் தன்மையே இதற்கு அடிப்படை மருந்தாகும். நாம் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதுவரையில் செய்வதற்கான காரணம் நாம் என்றும், அதனால் நடக்காத ஒன்றுக்கு காரணம் நாமல்லர் என்றும் துணிய வேண்டும். இதன் மூலம் பழைய உள் எண்ணம் நம்மை ஆட்கொள்வதினின்றும் விடுபடலாம்.
நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றும், எதைத் தவிர்க்க வேண்டுமென்றும் நாம் ஒரு முறை உணர்ந்து கொள்வோமானால் பல வழிகளில் தள்ளி வைக்கும் மனப்பான்மையைக் கிள்ளி எறிந்திடலாம்.
எதை எதைச் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதைத் திட்டவட்டமாக் குறித்துக் கொள்ள வேண்டும். அதன்படி அதன்படி நடக்கத் தவறக் கூடாது. நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நேரமில்லை என்பதெல்லாம் வெறும் சமாதானம்தானே? இதைவிட சாதாரண விஷயங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குகிறோமே! உண்மையில் இதில் நமக்கு அக்கறையில்லையா? என நமக்கு நாமே கேட்கும் போது நமது உள்மனம் இதற்கு சரியானதொரு பதிலும் சொல்லும்.
இத்தனை நாளுக்குள் இதை முடித்தே தீருவேன் என்ற சபத மேற்கொண்டு அதை உள்மனதிடம் அடிக்கடி சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போது நாம் அதிலிருந்து பின் வாங்குவது நமக்கே இயலாதொன்றாகி விடுகிறது.
எனவே, நாளை பார்க்கலாம் என்பதற்குப் பதில் இன்றே முடிக்கலாம் என்ற வார்த்தைகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு பணிகளைத் துவக்குவோம். “அய்யோ இந்தப் பயணம் பெரிய பயணமாயிற்றே?” என்ற ஆயாசத்தை தூக்கி எறிந்து விட்டு முன்னோக்கி அடிவைப்போம். அதற்கு மேல் பயணம் தாமாகவே ஆரம்பமாகித், தாமாகவேத் தொடர்ந்து, தாமாகவே, வெற்றி இலக்கை எட்டிவிடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.