அரசு உயர் பதவியை விட்டதால் வந்த விளைவு!
உ. தாமரைச்செல்வி

தங்கள் மகனுக்கு எதில் ஆர்வமிருக்கிறது என்பதை அறிந்து, அவர்கள் விருப்பப்படி செயல்படும் தந்தைகளை விட, தங்கள் விருப்பப்படியே மகன் செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தில், அவர்களை வழி நடத்தும் தந்தைகளே இன்றும் அதிகமாக இருக்கின்றனர். சர். சி. வி. இராமனின் தந்தையும் இப்படித்தான் போலிருக்கிறது. தனது மகனுக்கு அறிவியலில் ஆய்வில் இருந்த ஆர்வத்தைப் புறக்கணித்து, மகனை அரசாங்க அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்கிற தனது ஆசையைத் தன் மகனிடம் திணித்தார்.
1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல் எனுமிடத்தில் பிறந்த சர். சி. வி. இராமன், தனது பள்ளிப் படிப்புகளுக்குப் பின்பு, 1904 ஆம் ஆண்டில் சென்னை, பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் சிறப்புப் பாடத்துடன் இளநிலைப் பட்டப்படிப்பில் (B.A.) முதல் வகுப்பில் தேர்ச்சியும், தங்கப் பதக்கமும் பெற்றார். அதைத் தொடர்ந்து, இயற்பியல் பாடத்திலான முதுநிலைப் பட்டப்படிப்பில் (M.A.) சேர்ந்தார். 1907 ஆம் ஆண்டில் அப்படிப்பிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், அவர் இங்கிலாந்து சென்று மேல்படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால், அவரது தந்தை, அப்போதைய ஆங்கிலேய அரசுப் பணிகளில் உயர் அதிகாரிப் பணிகளுக்கான எப்.சி.எஸ் (F.C.S) எனும் போட்டித் தேர்வினை எழுதி அரசு அதிகாரியாகும்படி வற்புறுத்தினார். அவரும் தந்தையின் விருப்பத்திற்காக அந்தத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாகவும் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து, கல்கத்தாவில் உதவிக் கணக்காய்வுத் தலைவராக (Assistant Accountant General) அரசின் உயர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
அறிவியல் ஆர்வம்
இராமன், உதவிக் கணக்காய்வுத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அவருக்கு அந்தப் பணியை விட, அறிவியலில் ஆய்வு செய்து, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன்னுடைய அறிவியல் ஆர்வத்தைச் செயல்படுத்த, அவர் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு நாள், கல்கத்தாவில் அவரது அலுவலகமிருந்த டல்கௌசி சதுக்கத்திலிருந்து டிராம் வண்டியின் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, “இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்” (Indian Association for the Cultivation of Science) எனும் பெயர்ப்பலகை அவரது கண்ணில் பட்டது. அன்று, அங்கு அறிவியல் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், அறிவியல் ஆய்வாளர் சர் ஆசுதோஷ் முகர்ஜி உட்பட சில ஆய்வாளர்கள் கூடியிருந்தனர். அந்தக் கழகத்தை நிறுவியிருந்த மகேந்திரலால் சர்க்கார், அமிர்தலால் சர்க்கார் ஆகியோரிடம் அந்த அறிவியல் கழகத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன்னையும் அந்தக் கழகத்தில் ஒருவராக இணைத்துக் கொண்டார்.
அதன் பின்பு, தனது அலுவலகப் பணியை முடித்து வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில், இரவு நேரத்தில் அந்த அறிவியல் கழகத்துக்கு வந்து சில மணி நேரங்கள் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அவரது இரவு நேர ஆய்வுப் பணிகளுக்கு அறிவியல் கழகமும் ஒத்துழைப்பு அளித்தது. இதனால், அவர் பல நாட்கள் இரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்லாமல், தன்னுடைய ஆய்வுப் பணிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.
இடமாற்றம்
இந்நிலையில் அவருடைய அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கு இடையூறாக அவரது பணியிட மாற்றம் வந்து சேர்ந்தது. அவர் கல்கத்தாவிலிருந்து ரங்கூனுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ரங்கூன் சென்ற அவருக்கு அறிவியல் ஆய்வில் இருந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை. கல்கத்தாவில் அவர் செய்து வந்த ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்ய விரும்பினார். அதற்காக, அவருடைய அலுவலகத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்கூடமாக மாற்றினார். அங்கு, இரவு நேரத்தில் தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அடுத்தும் அவருக்குப் பணியிட மாற்றம் வந்தது. அவர் ரங்கூனிலிருந்து நாகபுரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், 1911 ஆம் ஆண்டில் நாகபுரியிலிருந்து கல்கத்தாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். கல்கத்தா வந்த அவர் மீண்டும் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் தனது இரவு நேர ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.
இயற்பியல் பேராசிரியர்
கல்கத்தாவிலிருந்த பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியை நிறுவனமாக மாற்ற அறிவியல் ஆய்வாளர் சர் ஆசுதோஷ் முகர்ஜி செய்த விடாமுயற்சியும், சர் தாரக்நாத் பாலித் மற்றும் டாக்டர் ராஷ் பிகாரி கோஷ் ஆகியோர் அளித்த நிதியுதவியும் ஒன்றிணைய அந்த அறிவியல் கல்லூரி பாலித் பீடம் எனும் நிறுவனமாக உயர்வடைந்தது. இராமனுக்கு இயற்பியல் துறையின் மேலிருந்த ஆர்வத்தையும், அறிவியல் ஆய்வில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய சர் ஆசுதோஷ் முகர்ஜி, அந்நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்ற வரும்படி இராமனுக்கு அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பினை ஏற்ற இராமன், 1917 ஆம் ஆண்டில், அதிகச் சம்பளம் கிடைத்த அரசு அதிகாரிப் பணியிலிருந்து விலகி, குறைவான சம்பளம் கொண்ட இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்து கொண்டார்.
அதன் பிறகு, அவரது இயற்பியல் தொடர்பான ஆய்வுப் பணிகள் அதிகமானது. உலகின் புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகிக் கொண்டிருந்தன. அவரது ஆய்வுக் கட்டுரைகளைப் படித்த, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் அவருடைய ஆய்வுகளைப் பாராட்டத் தொடங்கினர். உலகப் புகழ் பெற்ற ஆய்வாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்ட இலண்டன் மாநகரிலிருந்த ராயல் சொசைட்டி எனும் அமைப்பு 1924 ஆம் ஆண்டில் அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது.
இராமன், 1926 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) எனும் அறிவியல் இதழைத் தொடங்கி, அதன் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். இந்த இதழில், 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று ஒரு புதிய கதிர் இயக்கம் (A New Radiation) எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கண்டுபிடிப்புகளைக் கட்டுரையாக்கித் தன்னுடன் சேர்ந்து செயல்பட்ட கே. எஸ். கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து வெளியிட்டார்.
இராமன் விளைவு
புதிய கதிர் இயக்கம் எனும் தலைப்பிலான இந்த ஆய்வுக் கட்டுரையில், ஒளி புகும் ஊடகம் ஒன்றின் வழியாகச் செல்லும் ஒளி சிதறடிக்கப்பட்டு அதன் அலை நீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இவ்வாறு சிதறும் ஒளி
1. படுகதிருக்குச் சமமான அலை நீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி
2. முதன்மை வரியை விட அதிக அலை நீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்
3. முதன்மை வரியை விட குறைவான அலை நீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்
எனும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது என்று இராமன் தான் ஆய்வில் கண்டறிந்திருந்த தனது அரிய கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டிருந்தார். இராமன் கண்டறிந்து சொன்ன இந்த ஒளிச்சிதறல், பின்னர், அவரது பெயராலேயே இராமன் சிதறல் (Raman Scattering) அல்லது இராமன் விளைவு (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.
இராமன் கண்டறிந்த இராமன் விளைவு இயற்பியலை விட வேதியியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு இராமன் விளைவு முதன்மையானதாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவங்கள் மட்டுமின்றி, வளிம, திடப் பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச் செல்லப் பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணுதல், வண்ணப்பூச்சுகள் இருகும் போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதைக் கண்டறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல் என்று இதன் பயன்பாடுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கின்றன. இதுபோல், சுமார் 10 வினாடிகளே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளைப் பதிவு செய்வதில் ஒளி வேதியியலாளர்கள் மற்றும் ஒளி உயிரியலாளர்களுக்கு இராமன் நிறமாலைத் தொழில் நுட்பங்கள் பெரிதும் உதவி வருகின்றன.
நோபல் பரிசு
இராமன் விளைவு கண்டுபிடிப்புக்குப் பின்பு, 1929 ஆம் ஆண்டில் அவருக்கு பிரிட்டிஷ் அரசு நைட் ஹீட் எனும் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசி இவருக்கு சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, 1930 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட இராமன், “இந்த விருதை இந்தியச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இதன் பிறகு, 1933 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் தான் பணியாற்றி வந்த பேராசிரியர் பணியை விட்டு விலகிப் பெங்களூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இங்கு 15 ஆண்டுகள் பணீயாற்றி ஓய்வு பெற்ற சர். சி. வி. இராமன், 1948 ஆம் ஆண்டில் தனது பெயரிலேயே “இராமன் ஆய்வுக் கழகம்” (Raman Research Institute) ஒன்றை நிறுவித் தனது கடைசிக் காலம் வரை, பல அறிவியல் ஆய்வுப் பணிகளைச் செய்து வந்தார். 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு, அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கிச் சிறப்பித்தது. 1957 ஆம் ஆண்டில் “அகில உலக லெனின் பரிசு” வழங்கப்பட்டது. இவை தவிர, பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் அவருக்குப் பல பரிசுகளையும், பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
மறைவு
தந்தையின் விருப்பத்திற்காக, அரசு உயர் அதிகாரியாகப் பணியாற்றினாலும், தந்தையின் மறைவுக்குப் பிறகு, தான் ஆர்வம் கொண்ட துறைக்கு மாற்றம் கண்டு, அத்துறையில் உலகின் உயரிய விருதான நோபல் பரிசைப் பெற்று, தன்னை உலகப் புகழ் பெற்றவர்களுள் ஒருவராக உயர்த்திக் கொண்ட சர். சி. வி. இராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தனது 82 ஆம் வயதில் பெங்களூரில் காலமானார். இந்திய அரசு சர். சி. வி. இராமனின் நினைவைப் போற்றும் வகையில், இராமன் விளைவைக் கண்டறிந்த பிப்ரவரி 28 ஆம் நாளைத் “தேசிய அறிவியல் நாள்” என்று அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு கொண்டாடி வருகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.