ஊழும் உலகியல் நடைமுறைகளும்
முனைவர் செ. ரவிசங்கர்
முன்னுரை
மனித வாழ்க்கை பல்வேறான பழக்க வழக்கங்களில் கட்டுண்டு கிடக்கிறது. பெரும்பாலும் மனிதன் கடவுள் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளான். கடவுளை மையமாக வைத்துப் புனையப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் எழுதப்படாத சட்டமாக எல்லா மனிதர்களுக்கும் அமைந்துள்ளன. மனிதனின் செயல்கள் எல்லாம் முற்பிறவியின் பயனாக அமைவது என்கிற கருத்து அனைவரது மனதிலும் இடம் பெற்றுள்ளது. இது உலகத்து மக்கள் அனைவரையும் தன்வயப்படுத்தியுள்ளது. மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கின்ற மூடநம்பிக்கைகளை மையமாக வைத்து இக்கட்டுரை ‘ஊழும் உலகியல் நடைமுறைகளும்’ என்னும் பொருளில் ஆராயப்படுகிறது.
ஊழ்
‘ஊழ்’ என்பது பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அவரது குறளுக்கு உரை தந்த உரைகாரர்கள் பலரும் ஒருமித்த பொருளையே தருகின்றனர்.
மணக்குடவர் - முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை
பரிதி - ஊழாவது போன சென்மத்தின் வினைப்பயனைச் சொல்லியது
பரிமேல் - இருவினைப் பயன்
கவிராசர் - ஒருவன் முன்னே செய்த நல்வினை தீவினை இந்த ஜென்மத்தில் வந்தடைகிறது
பழைய - முன்செய்த நல்வினை, தீவினை அந்த நல்வினை தீவினை செய்தவனை இப்பிறப்பில் வந்தடைதல்.
என்று பல உரையாளர்கள் ஊழுக்கு உரை தந்துள்ளனர்.
தொகுத்துப் பார்த்தால் ஊழ் என்பது பழம்பிறப்பில் ஒருவன் செய்த செயல் அவனுக்கே மறுபிறவியில் வந்து சேரும் என்பதாகப் பொருள் கொள்ளலாம்.
வள்ளுவரின் ஊழ் பற்றிய சிந்தனை
வள்ளுவர், மற்கலி கோசர் போன்றவர்கள் ஊழ் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். வள்ளுவர் ஊழ் கருத்தில் சில இடங்களில் முரண்பட்டு கருத்துரைத்துள்ளார். வள்ளுவர் வினையை நம்புவதை விட முயற்சியை தமது குறளில் மிக ஆழமாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக ஊக்கமுடைமை அதிகாரங்களில் முயற்சியின் மூலம் அடைகின்ற வெற்றியை எடுத்துரைக்கிறார்.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை”
இக்குறளுக்கு பாவாணர் ‘ஊக்குமுள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க்கிட்டும் என்பது கருத்து’ என்று பொருள் தருகிறார். அது போலவே ஊழையும் ஒருவன் வென்று விட வாய்ப்புள்ளது என்கிற கருத்தில் வள்ளுவர் குறள்
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”
என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக வள்ளுவரைப் பொருத்த வரையில் முயற்சி உள்ளவர்கள் ‘ஊழ்’ என்று சொல்லபடுகின்ற மூட நம்பிக்கையை அகற்றி விடலாம் என்கிறார்.
சோம்பேறிகளின் கருத்துரைகள்
பொதுவாக ஊழ் பற்றிய கருத்து செயலில் தோல்வியுற்றவர்கள் கூறுகின்ற வார்த்தை, இன்னமும் தெளிவாக உரைக்க வேண்டுமெனில் சோம்பேறிகள் தாம் உழைப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.
‘ஒரு மடத்தில் மூன்று ஆண்டிகள் படுத்திருந்தனர் மூவரும் சோம்பர், ஒருவரை ஒருவர் விஞ்சிய சோம்பர், ஆண்டிகள் படுத்திருந்த மடத்தில் ஒரு பக்கத்தில் ஒரு நாள் தீப்பற்றிக் கொண்டது. ஆண்டிகளில் ஒருவன் தீப்பற்றி எரிவதைக் கண்டான். ஆனால் உடனே அவன் எழும்பவோ, பிறரை எழுப்பவோ சோம்பல் இடம் தரவில்லை ‘அம்பலம் வேகுது ஐயனே’ என்றான். அம்பலம் என்பது மடம். மடத்தில் தீப்பிடித்ததைக் கண்டு மடத்திலே படுத்திருப்பவன் இப்படிச் சொல்லிக் கிடப்பானா? ஆடு மாடு கூட அதிர்ச்சியடைந்து எழுந்து ஓடவா?
முதலாண்டி கூறியதைக் கேட்ட இரண்டாம் ஆண்டியாவது துடித்தெழுந்தானா? அடித்து விழுந்து ஓடினானா? அவன் ‘அதையும் தான் சொல்வானேன்? வாயும் தான் நோவானேன், என்று மறுபுறம் புரண்டு படுத்துக் கொண்டான். மூன்றாமவன் என் தூக்கத்துக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? என்று சினந்து கொண்டு தூங்கினான். மடம் தீப்பற்றி எரிந்தது. ஆண்டிகள் மூவரும் தீயிலே வெந்து சாம்பலாயினர்.
இக்கதையில் வரும் நிகழ்வினை ஊழினால் ஏற்பட்டது என்று கூறலாமா? முடியாது காரணம் இது ஆண்டிகளின் சோம்பேறித்தனத்தால் ஏற்பட்ட அழிவு இதனை யோசிக்காதவர்கள் விதியின் வழி ஏற்பட்டது என்பார்கள் அது மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் ஊழ் என்பது சோம்பேறிகள் உருவாக்கி வைத்துள்ள வார்த்தை, பகுத்தறிவாளர்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஊழா?முயற்சியா?
வாழ்வில் பலர் சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர், இவர்களை ஊழ் தான் உருவாக்கியதா? முயற்சி உருவாக்கியதா எனில் முயற்சி என்று துணிந்து கூறலாம்.
“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என விரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி”
என்று முயற்சியையும் அதற்குத் துணையாகிய ஆன்ற அறிவையும் எடுத்துக் காட்டுவார் வள்ளவர். “வள்ளுவரின் கருத்தில் முயற்சியின் இடத்தைக் காணும் போது பொருட்பால் முழுமையுமே மனித முயற்சியின் அடித்தளத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இவ்வாறு பொருட்பால் முழுமையிலும் முயற்சியின் ஆற்றலை அது நல்கும் பயனை விளக்குவதால், ஊழின் ஆற்றலை கோசலரைப் போல வள்ளுவர் பெரிதாகக் கருதவில்லை என்பது தெளிவு” என்று நெடுஞ்செழியின் கூறுகிறார்.
(தமிழ் இலக்கியத்தில் உலகாயுதம்.ப.277)
திருவள்ளுவரின் கருத்தினை நடப்பியல் நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் முயற்சியின் முக்கியத்துவம் தெளிவாகும்.
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன், குருடு, செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
என்கிறார் ஒளவையார்.
மனிதன் ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு வகையில் குறையுள்ளவனாகத்தான் இருக்கிறான். அதனைச் சரி செய்து கொள்ளத் தெரிந்தவன் தனது முயற்சியினால் விதியாகிய ஊழை வென்று விடுகிறான். முயற்சி செய்யாதவன் ‘விதி’ என்று ஊழைத் தொடர்ந்து, இவ்வுலகத்தில் வாழ வைக்கிறான்.
‘டஸ்கம்பியா என்ற அமெரிக்க நகரத்தில் பிறந்த ஒரு சிறுமிக்கு பிறந்த 19 வது மாதத்திலேயே கண்பார்வை போய்விட்டது. வாய் பேச முடியாமல் ஆகிவிட்டது. செவிட்டு ஊமையாக மாறிவிட்ட அந்தச் சிறுமி அப்படியே ஒடிந்து போய்விடவில்லை. முயன்று படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தோடு பிரெஞ்சு, கிரேக்கம், லத்தின், ஜெர்மனிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். மிகச்சிறந்த புத்தகங்களை எழுதி வெளியிட்டு ஊனத்தை வென்று ஞானத்தால் ஞாலத்தில் பெரும்புகழ் ஈட்டினாள், அந்தப் பெண் தான் ஹெலன் கெல்லர்.
இப்பெண் ஊழை வென்றாள், உலகியலைக் கடைப்பிடித்தாள், முயற்சியால் வெற்றி பெற்றாள். மனிதன் ஊழ் என்று வாழ்க்கையை வீணடித்து விடக் கூடாது. உடலில் ஏற்படும் ஊனம், வாழ்வில் ஏற்படும் வறுமை இவையெல்லாம் ஊழால் வருவதில்லை மாறாக முயலாமையால் வருவதாகும்.
என்.எஸ் கிருஷ்ணன் ஒருமுறை பள்ளிச் சிறுவர்களுக்குக் கதை சொல்லியுள்ளார். அப்போது முயல், ஆமை இரண்டும் ஓடியது என்றவுடன் மாணவர்கள் அந்தக் கதை தெரியும், அது முயலாமைக் கதை என்றார்கள்.
அதற்கு கிருஷ்ணன் அது முயல், ஆமை கதை மட்டுமல்ல ‘முயலாமை’ கதையும் கூட என்றாறாம். முயற்சி செய்யவில்லை என்றால் வாழ்வில் எதுவும் கிடைக்காது, அப்போது இந்த மனம் அதனை ஊழ் என்று தைரியப்படுத்திக் கொள்கிறது.
ஊழை வென்றவர்கள்
திருவள்ளுவர் காலத்திலேயே ஊழை வென்றவர்கள் இருந்திருக்க வேண்டும். அதாவது அறிவையும் உழைப்பையும் பின்பற்றியவர்கள் இருந்திருக்க வேண்டும் எனவே தான் உழைப்பால் பெற்ற செல்வம் கூட ஊழின் வழி வந்தது என்று கதை கூறியுள்ளனர். பொதுவாகவே இந்தியச் சமூகம் பல்வேறான கட்டுக்கதைகளை கட்டமைத்துள்ளது. அவற்றில் ஊழும் ஒன்று. எனவே தான் வள்ளுவர்
“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”
என்கிறார்.
ஒருவனுக்கு ஆக்கம் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும், அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடி தோன்றும் என்று கருத்துரைத்துள்ளனர். அதனை உரையாசிரியர்கள் முழுவதுமாக மனிதனை ஊழ் ஆட்கொண்டுள்ளது என்பதாக உரையை எழுதியுள்ளனர். எனவே தான் ‘கவிராசர்’ தமது உரையில்
“ஒருவனுக்கு கைப்பொருள் வந்து கூடுவதற்குக்
காரணம் முன்செய்த புண்ணியத்தினாலே
முயற்சியுண்டாம் கைப்பொருள் போகிறதற்குக்
காரணம் முன்செய்த வினையாலே கைப்பொருள்”
போகிறதற்கு மடிவரும் என்கின்றார்.
இக்கூற்று முயற்சியாளரையும் வழிப்பட்டவர்கள் என்கின்றனர். இது ஒரு வகையில் மாயக் கொள்கைக்குள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதாகும். அந்த வகையில் இல்லாமல் முயற்சியாளர்கள் ஊழை வென்றவர்களாக நாம் கருத வேண்டும்.
ஆப்பிரிக்க நாட்டில் வசிக்கும் ‘டியாபாக்க’ என்ற மனிதரின் இரண்டு கால்களும் கோழியின் கால்களைப் போல இருக்கின்றன. இருந்தாலென்ன... மனம் தளராமல் இந்த மனிதர் கால்களை வைத்துக் கொண்டே சைக்கிள்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
அத்துடன் காலில் ஊனம் என்ற கவலையே இல்லாமல் இரு விரல்களையே பயன்படுத்தி இடிக்கி போல் தரையில் உள்ள பொருள்களை எடுப்பது, சோடா பாட்டில்களைத் திறப்பது போன்ற வேலைகளைச் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
(க.இராமச்சந்திரன் எழுந்திரு இளைஞனே அழைக்கிறது வெற்றி ப.37)
இந்நிகழ்ச்சியில் இவர் வாழ்க்கையில் ஊழை வென்றவர் எனக் கொள்ளலாம். இதே போல ‘டெமாஸ்தனிஸ்’ என்ற இளைஞன் திக்கித் திக்கிப் பேசும் திறம் பெற்றவன், அவனைப் பார்த்து ஊர்மக்கள் எள்ளி நகையாடினர். டெமாஸ்தனிஸ் திக்குவாய் பிடியினின்று மீள வேண்டும், தீரமிக்க பேச்சாளராக மாற வேண்டும் என நினைத்தார்.
தனிமையில் பேசிப் பார்த்தான்; தனக்குத் தானே பேசிப் பார்த்தான்; மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் நின்று அலைகளைப் பார்த்துக் கொண்டே ஆவேசமாகப் பேசித் தீர்த்தான், வாயில் கூழாங்கற்களை வைத்துக் கொண்டு, நாக்கை சுழற்றிக் கொண்டு பேசினான். அலைகளின் ஆர்ப்பாட்டத்தை மீறி அவனது பேச்சு ஆவேசமாக எதிரொலித்தது. இதன் விளைவு இறுதியில் அவன் வலிமை மிக்க பேச்சாளனாக வடிவெடுத்தான்.
ஒரு காலத்தில் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியவர்கள் எழுந்து ஓடி வந்தார்கள். கூட்டங் கூட்டமாகக் கூடி நின்றார்கள், சிரித்துப் பேசியவர்கள் சிலை போல ஆடாது, அசையாது அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம். ஊனத்தை வென்ற டெமாஸ்தனிஸ் உலக மக்களின் இதயங்களில் உறங்காமல் ஓயாமல் ஒலிக்கத் தொடங்கி விட்டான்.
(பிரதாப் சிகரம் தொடுவோம்)
இந்நிகழ்வுகள் எல்லாம் வள்ளுவரின் குறளுக்குப் பொருந்துவதாக அமைந்துள்ளன. இது வள்ளுவரின்
‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’
என்னும் குறளுக்கு சரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வ ஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும் என்னும் பாவாணர் உரையும் மேலே கூறிய நிகழும் ஒத்துப் போகின்றன.
ஊழ் கட்டுக்கதை
ஊழ் என்பது மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுக்கதை. பெரும்பாலும் ஆன்மீகம் சார்ந்தவர்கள் இதனைப் பெரிய விஷயமாகக் கருதுகின்றனர். இறைவனோடு சேர்த்து இதற்குப் பொருள் தருகின்றனர். இதனைப் பற்றி
‘ஊழ் என்பதும் தெய்வ ஏற்பாடு என்பதுவும் ஒன்றேயாதலின் மாந்தன் முன்பு தவறு செய்து, பின்பு திருத்திக் கொள்வது போல். இயற்கையான முற்றறிவுள்ள இறைவனுஞ் செய்யானென்றும், அவன் அங்ஙனம் செய்ததாகக் கூறுவதெல்லாம் மாந்தன் கட்டுக்கதையும் தற்குறிப்பேற்றமும் யென்றும் அறிந்து கொள்ளலாம் என்பர் பாவாணர்.
இது போன்ற கருத்துக்கள் இருப்பினும் சைவ சித்தாந்தம்; போன்ற நூல்கள் ‘உடம்பின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘முற்பிறவியில் புரிந்த வினைகளுக்கேற்ப உயிர்களுக்கு இறைவனே தனு (உடம்பு), கரணம் (அகக்கருவிகளும் புறக்கருவிகளும்), புவனம் (வினைகளைத் துய்ப்பதற்கு வாய்ப்பான உலகம்), போகம் (உயிர்த்துடிப்பு) ஆகியவற்றை வழங்கி அருளுகின்றனர் என்கிறது. எனவே உடம்பு என்பது உயிர்கள் புரிந்த வினைகளுக்கு ஏற்ப வந்தது என்பதாகக் கருத்துரைக்கிறார் வைத்தியலிங்கம் (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி 2 ப.110)
இது போல பல கதைகள் பண்டைய காலம் தொட்டு வழங்கி வருகின்றன. அதனடிப்படையில் கருத்துக்களும் பல அறிஞர்களால் கூறப்பட்டு வருகின்றன. நெடுஞ்செழியன் தனது நூலில் ‘அப்பைய தேவ’ காட்டுகின்ற மேற்கோளைப் பயன்படுத்தியுள்ளார். அது ஊழின் கதையை மிகத் தெளிவாக மூடநம்பிக்கை என்பதைக் காட்டுகிறது. அக்கருத்து
‘உலகப் பொருள்கள் அனைத்தும் அவ்வவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப ஊழினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு பொருளின் நிலைபேறு, தோற்றம், வாழும் கால எல்லை ஆகிய அனைத்தையும் உறுதி செய்வது அதற்குரிய ஊழே!
ஊழின் வலிமை அப்படி இருக்கும்; போது அதனை யாரால் தடுத்து நிறுத்திவிட முடியும்’ என்றுள்ளது. இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து உலகில் வந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என ஏதோ ஒரு காலத்தில் மனிதன் அறநெறி தவறியுள்ளான். அதனைச் சரி செய்வதற்காக இது போன்ற கட்டுக்கதைகள் உருவாகியுள்ளன.
முடிவாக
ஊழ் என்பது ஆன்மீகவாதிகளால் கட்டமைக்கப்பட்டது. பழங்காலத்தில் மக்களை தன்வயப்படுத்துவதற்காக மதங்கள் செய்த வேலை. ஆனால் இன்று விஞ்ஞான உலகில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அறிவியலின் துணையோடு பல்வேறு சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறான். இப்போது ஊழ் என்று பேசிக் கொண்டிருப்பது மூடத்தனத்தை உருவாக்கும். ஊழை விடுத்து அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்துவது சாலச் சிறந்தது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.