கண்ணகியின் ஆளுமைப் பண்புகள்
முனைவர் பா.பொன்னி
மனிதன் அவன் வாழக் கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் வினைக்குக் காரணமாக அமைவது அவனது ஆளுமைப் பண்பே ஆகும். தனிமனிதனின் நடத்தையையும் அனுபவத்தையும் பாதிக்கக் கூடிய அனைத்துக் கூறுகளையும் ஆளுமை பற்றிய ஆய்வுக்குள் அடக்கிவிட முடியும். ஒருவனது ஆளுமையை நிர்ணயிக்கும் காரணிகளுள் முதன்மையானவை உணர்வெழுச்சி, மனவெழுச்சி, ஊக்கிகள் போன்றவையாகும். இவற்றின் மூலமாக அவனது தனித்தன்மையை அறிந்து கொள்ள முடியும். சிலப்பதிகாரத் தலைவியான கண்ணகியின் ஆளுமைப்பண்புகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
ஆளுமை - சொற்பொருள்
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ஆளுமை என்பதற்கு “ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத்தொகுப்பு; Personality, individuality. முரட்டுத்தனமும் ஆளுமையின் வெளிப்பாடுதான்” (1) என்று விளக்கம் தருகிறது.
நர்மதாவின் தமிழ் அகராதி, ஆளுமை என்பதற்கு “உரிமை, அதிகாரம், ஒரு மனிதருடைய தனிப்பட்ட குணத்தொகுப்பு மேலோங்கி நிற்கும் நிலை right of the Possession, Ownership etc, Personality : dominance” (2) என்று விளக்கம் தருகிறது. இதன்வழி ஆளுமை என்பதனை ஒருவருடைய குணத்தொகுப்பு எனக் கருத முடிகிறது.
காரல் கசுதவ் யுங்
ஆளுமை பற்றிய விரிவான கருத்துக்களை எடுத்துரைத்தவர்களுள் முதன்மையானவர் காரல் கசுதவ் யுங்கு ஆவார். தனிமனிதனின் உள்ஊக்குத் திறன் (Pshychic Energy) சமூக அழுத்தங்களுக்கும் மரபுகளுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட உருவத்தைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் செய்து முடிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. உள்ஊக்குத் திறனின் இத்தகைய சமூகப்பங்கு நாளடைவில் ஓர் முகமூடியாக (Persona) அமைந்து விடுகிறது என்றும், சமூக ஏற்புக் கிடைக்காத விருப்பங்களும் உந்துகளும் ஒருங்குபட்டுத் தனி நனவிலியாக (Personal unconscious) அமைந்துள்ளன என்பது யுங் அவர்களின் கருத்தாகும்.
ஒருவன் தனித்தன்மை பெற்ற சிறந்த ஆளுமை உடையவனாகத் திகழ்வதற்குக் காரணம், அவனிடம் காணப்படக் கூடிய இயல்பூக்கங்களும், உள்ளக் கிளர்ச்சிகளுமே ஆகும். மேலும் மனிதர்களிடம் காணப்படக் கூடிய பாரம்பரிய இயல்புகளும் (Hereditary traits) அனுபவத்தால் ஈட்டிய இயல்புகளும் (Acquired traits) ஒருங்கே சேர்வதன் மூலமாகவும் ஆளுமை வலுப்பெறுகிறது. அதோடு மட்டுமல்லாது மனிதனது நனவிலி மனச் சக்தியும் (Unconcious Psyche Energy) சூழ்நிலைச் சக்தியும் (Environmental Force) ஒன்றோடொன்று மோதுவதினாலும் இழைவதினாலும் தனிமனிதன் ஆளுமை சிறப்பு பெற்று விளங்குகிறது என்று யுங் குறிப்பிடுகிறார்.
கண்ணகியின் பண்பு நலன்கள்
மனிதனின் ஆளுமையை நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்று அவனது பண்பு நலன்கள் ஆகும். பண்பு என்ற சொல்லிற்கு “குணம், தகுதி, இயல்பு, முறை, மனத்தன்மை, செய்கை, அழகு, விதம் எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. நலன் என்ற சொல்லும் நலம் என்ற சொல்லும் ஒன்றேயாகும். இச்சொல்லிற்கு சுகவாழ்வு, இன்பம், அழகு, பயன், புகழ், உயர்வு , உதவி, கண்ணோட்டம்” (3) எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒருவரின் பண்புநலன்கள் அவன் வாழக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப நன்மை உடையதாகவோ, தீமை உடையதாகவோ மாறுபட்டுக் காணப்படுகின்றன.
கண்ணகியினை பிறருடைய இயல்பை அறிந்து நடக்கக் கூடிய தன்மை உடையவளாகவும் அனைவராலும் போற்றக் கூடிய சிறப்பு மிக்கவளாகவும் இளங்கோ அறிமுகம் செய்வதனை,
“அவளுந்தான்
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலார் பெயர் மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ” (மங்கல வாழ்த்துப் பாடல் . 25-29)
என்ற அடிகள் வழி அறியமுடிகிறது. இவ்வடிகள் வாயிலாக இளங்கோவடிகள் கண்ணகியின் புறத்தோற்றத்தை இலட்சுமியின் திருவுருவத்தை ஒத்த தன்மை உடையவளாகவும், அவளது கற்பு நெறியை அருந்ததியின் கற்பை ஒத்த திறமுடையவளாகவும் சிறப்பித்துள்ளமையை அறிய முடிகின்றது.
கண்ணகி உள்ள ஆளுமை மற்றும் உருவ ஆளுமை ஆகிய இரண்டிலும் சிறப்புமிக்கவளாகத் திகழ்கிறாள்.
”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே” (மனையறம் படுத்த காதை- 73-76)
என்ற கோவலனின் புகழுரைகள் மூலமாக கண்ணகியின் புறத்தோற்றத்தையும், அவளது சாயல், நடை, மொழி ஆகியவற்றையும் அறிய முடிகின்றது. கண்ணகி புறத்தோற்றத்தில் மட்டுமல்லாது அகஉணர்வுகளாலும் தனித்தன்மை வாய்ந்தவளாகத் திகழ்வதனை அறியமுடிகிறது.
கண்ணகி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற கோவலனின் தவறை மன்னிக்கும் மனப்பான்மை உடையவளாகவும், பெரியோர் சொற்களைக் கேட்டு நடக்கக் கூடிய இயல்புடையவளாகவும், வம்பப் பரத்தையின் நகை மொழி கேட்டு அச்சப்படக் கூடியவளாகவும் திகழ்கின்றாள். சாலினி என்ற பெண் தெய்வமேற்றுக் கண்ணகியைப் புகழும் போது நாணமடையக் கூடியவளாகவும் இருக்கின்றாள். இவ்வியல்புகள் கண்ணகியை அகமுகத் தன்மை உடையவளாக அடையாளப்படுத்துகின்றன. இருப்பினும் காப்பியப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் அவளை புறமுகத்தவளாக மாற்றம் அடையச் செய்கின்றன.
கண்ணகி கோவலன் இறந்த செய்தியை அறிந்த பின் கடுஞ்சினம் அடைபவளாகவும், மன்னனின் தவறான நீதியைக் கண்டு வெகுண்டு எழுந்து வஞ்சினம் உரைப்பவளாகவும் மாற்றம் அடைகிறாள். இப்பண்புநலன்கள் புற முகத்தவருக்கே உரியதாகும். இந்த இரு மனப்போக்கும் இணைந்த இருமை நோக்காளராக கண்ணகி பாத்திரம் மாற்றம் அடைகிறது.
கண்ணகியின் ஆளுமை காப்பியத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அமைவதற்குக் காரணம் அவளிடம் காணப்பட்ட மனவெழுச்சியே எனலாம்.
மனவெழுச்சி
உணர்ச்சி என்பது உயிரினத்தில் காணப்படும் தூண்டப்பட்ட அல்லது கிளர்ச்சி வசப்பட்ட நிலையினைக் குறிக்கிறது. வாழ்க்கையில் மக்கள் பல்வகை உணர்ச்சிகளைப் பெறுகிறார்கள். மக்களின் அனைத்து செயல்களுக்கும் முக்கிய காரணமாக அமைவது உணர்ச்சியே ஆகும். உணர்ச்சியைப் (Feeling) போலவே மனவெழுச்சியும் (Emotion) கிளர்ச்சியடைந்த உயிரினத்தில் காணப்படும் நிலை எனலாம். இன்பதுன்பங்களை மக்கள் உடலெங்கும் உணருவதைப் போலவே பயம், கோபம், குதூகலம் (Amusement) போன்ற மனவெழுச்சிகளையும் உடலெங்கும் உணருகின்றனர். மனவெழுச்சி அறிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அறிவு மூளைக்குச் சொந்தமானது. ஆனால் மனவெழுச்சியோ இருதயத்துக்குச் சொந்தமானதாகும். அன்றாட வாழ்க்கையில் அறிவுக்கும் மனவெழுச்சிக்கும் போராட்டம் வரும் போது, பெரும்பாலும் மனவெழுச்சியே அதிக வலுவைப் பெற்று ஒருவருடைய செயலைத் திசை திருப்பிவிடுகிறது. ஆகவே மனிதனை மனவெழுச்சிக்கு அடிமையானவன் எனக் கூறலாம். கண்ணகியின் ஆளுமைப் பண்புகளில் அதிக அளவில் மனவெழுச்சி தொடர்பான பண்புகளைக் காணமுடிகின்றது.
மனவெழுச்சியின் வகைகள்
மனவெழுச்சிகள் மூளையின் மத்தியில் உள்ள இணைக்கும் வளையத் (Lymphatic System) திலிருந்து வருவதாக உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனவெழுச்சிகளை இரண்டு வகைகளாகப் பிரிப்பர். “பாசம், சினம், மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், கருணை, கூச்சம் ஆகியவை அடிப்படையான மனவெழுச்சிகள். பொறாமை, போற்றுதல், சாதித்தல் ஆகியவை கற்றுக் கொண்டவை” (4)
அடிப்படை மனவெழுச்சிகள்
குழந்தைப்பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும்.மனவெழுச்சிகளைப் பற்றிய பல சோதனைகளை நடத்திய வாட்சன் ( Watson ) என்பார் சினம் அச்சம் அன்பு என்று மூன்று மெய்ப்பாடுகளை அடிப்படை மனவெழுச்சிகள் என்று குறிப்பிடுகிறார்.
பிரிட்ச்சு (Bridges) என்னும் உளவியல் அறிஞர் “இளங்குழவியின் மனவெழுச்சி பண்படாத அடிப்படைக் கிளர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறார்.குழந்தை வளர வளர இக்கிளர்ச்சி மகிழ்ச்சி, துயரம் என்னும் இரு பிரிவுகளாக இருக்கும் என்று கருதுகிறார்.துயரமானது பின்னர் அச்சம், சினம் என்னும் இரு பெருங்கிளையாகப் பிரிகிறது. இந்த மனவெழுச்சிகளே ஒன்றுடன் ஒன்று பலவாறாக இணைந்து பொறாமை போன்ற மனவெழுச்சிகளின் ஆதாரமாக அமைகின்றது” (5) என்பார். இவ்வடிப்படை மனவெழுச்சிகளை அடிப்படைச் செயல்பாடுகள் எனவும் குறிப்பிடுவர். “உளவியலார் பொதுவாக ஒருவனிடம் பிறப்பால் அமையும் மெய்ப்பாடுகள் அச்சம் சினம் மகிழ்ச்சி எனக் கருதுகிறார்கள்” (6)
இந்த அடிப்படை மனவெழுச்சிகள் கண்ணகியின் ஆளுமைப் பண்பில் இன்றியமையாத இடம் வகிப்பதனை அறியமுடிகிறது.
அச்சம்
அச்சம் என்பது ஓர் எதிர்மறை மனவெழுச்சியாகும். விலங்கினங்களிலும் இது காணப்படுகிறது. “தனி மனிதன் தன்னால் வெற்றி கொள்ள முடியாத ஆபத்தான ஒரு நிலை ஏற்படும் போது, அவனுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலை உண்மையிலேயே அச்சத்தை உண்டாக்குவதாக இல்லாவிட்டாலும் கூட அது ஆபத்தானது என்று தனி மனிதன் எண்ணினாலும் அவனிடம் அச்சம் தோன்றும்.தீவிரமான அச்சம் ஏற்படின் அது திகில் கவலை இனம் புரியாத பதட்டம் போன்ற பல்வேறு மெய்ப்பாடுகளாக வெளியிடப்படுகிறது” (7) என்று அச்சம் குறித்து விளக்கமளிப்பர்.
கோவலன் கொலையுண்ட செய்தியை ஆய்மகள் கூறவந்த நிலையில் கண்ணகி ஏதோ நிகழ்ந்துள்ளது என்று எண்ணி அச்சம் கொள்கிறாள். அப்பெண்ணிடம் அச்சத்தோடு அவள் வினவுவதனை
எல்லா ! ஓ!
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்குமென் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்குமென் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ தோழீ !
நன்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவுமென் நெஞ்சன்றே ( துன்பமாலை 11-17 )
என்ற அடிகள் கண்ணகியின் அச்சவுணா்வை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
சினம்
சினம் என்ற மனவெழுச்சியானது மனதில் எழுந்து மெய்ப்பாடாக வெளியே தோன்றுகிறது. க்ரியாவின் தற்கால அகராதி சினம் என்பதற்கு “கோபம், அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவனுடைய முகத்திலோ செயலிலோ வெளிப்படும் மெய்ப்பாடு”8 என விளக்கம் தருகிறது.
“ஒருவன் தவறு செய்யும் போது கண்டிப்பது சாதாரண மன உணர்வு.ஆனால் அதுவே தீவிரமடைந்து கோபம் சினம் என்ற உணா்வுகளாக உச்ச கட்டத்தை அடைந்து மனவெழுச்சியாக மாறுகிறது” (9) என்பர்.
ஒருவனுடைய செயல்கள் தடுக்கப்பட்டால் அவன் சினம் கொள்வது இயற்கை.சமூகத் தொடா்பினால் ஏற்படும் தடங்கல்கள் குறுக்கீடுகள் இவைகளால் மனிதன் சினம் அடைகின்றான்.சினம் கொள்வது புறக்காரணிகளை ( External factors ) மட்டுமின்றித் தனி மனிதனின் மனப்பாங்கினையும்( Temperament ) பொறுத்தது.ஒருவனைச் சினம் கொள்ளச் செய்யும் தூண்டல் மற்றொருவனைச் சிறிதும் பாதிப்பதில்லை.
தனக்கு எதிராகவோ அல்லது தான் விரும்பாத செயல் ஏதேனும் ஏற்படும் போது உண்டாகக் கூடிய மனவெழுச்சியானது சினமாக வெளிப்படுகின்றது. கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொலைசெய்யப் பட்டதை அறிந்த கண்ணகி கோபம் கொள்கிறாள். அரண்மனைக்குச் சென்று தன் கணவன் குற்றம் அற்றவன் என்பதனை உறுதிப்படுத்துகிறாள். தான் தவறு செய்ததை அறிந்த மன்னன் தன் உயிர் துறக்கின்றான். ஆயினும், சினம் அடங்காமல் கண்ணகி மதுரையை அழிக்க எண்ணுகிறாள்.
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ (வஞ்சின மாலை 36-38 )
என்ற அடிகள் கண்ணகியின் சினத்தினை வெளிக்காட்டுகின்றன.
அன்பு
அச்சம், சினம் ஆகிய மனவெழுச்சிகளைப் போலன்றி அன்பு என்னும் மனவெழுச்சி ஆக்கம் தருகின்ற மனவெழுச்சியாகும். தன் மனம் விரும்பிய செயல் நிகழ்வதால் உண்டாகும் மனவெழுச்சியே மகிழ்ச்சி ஆகும். “மனவெழுச்சி காரணிகளுள் மகிழ்ச்சி என்பது காமம், அன்பு, ஆசை இவைகளின் அடிப்படையிலான மெய்ப்பாடு ஆகும்” (10) என்று வாட்சன் என்னும் உளவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார். கோவலனைப் பிரிந்து துன்புற்ற நிலை மாறி, மாதரியின் இல்லத்தில் கோவலன், கண்ணகி அடைக்கலமாகத் தங்கும் சூழ்நிலையில் கண்ணகி மகிழ்ச்சி உடையவளாகத் திகழ்கின்றாள்.
“கடிமல ரங்கையிற் காதலனடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பினள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க அடிகள் ! ஈங்கு” (கொலைகளக் காதை 38-43)
இவ்வடிகளின் வாயிலாகக் கண்ணகி கோவலனுக்கு விருப்பத்தோடும், மகிழ்ச்சியாகவும் உணவு சமைத்துப் பரிமாறியமையை அறிய முடிகிறது.
இவ்வடிப்படை மனவுணர்ச்சிகளின் கட்டுமானத்தில் அகமுகத்தவர்க்கென்று இருக்கக் கூடிய இரக்கம் கூச்சம் பொறுமை ஏக்கம் ஆகியவற்றையும் கண்ணகியிடத்துக் காணமுடிகிறது.
இரக்கம்
இரக்கம் என்பது பிறரது நிலையைக் கண்டு மனதில் ஏற்படக் கூடிய ஒரு உணர்ச்சி மாற்றம் ஆகும். கண்ணகி ஆளுமைப் பண்பில் பிறரது நலனில் அக்கறை கொண்டவளாகத் திகழ்கிறாள்.வம்பப் பரத்தையர் தம்மை எள்ளி நகையாடக் கூடிய நிலையில், கவுந்தி வழங்கிய சாபத்தை நீங்கும் பொருட்டு கண்ணகி அவர்கள் மீது இரக்கம் கொண்டமையை,
”குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென்றறியல் வேண்டும்
செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்தீக் காலம் உரையீ ரோவென” (நாடுகாண் காதை 235-240)
என்ற அடிகள் விளக்குகின்றன. பிறருக்கு எந்தவித இடையூறு ஏற்படக் கூடாது என்ற இரக்க குணம் பெற்றவளாகக் கண்ணகி திகழ்ந்ததை இதன்வழி அறிய முடிகின்றது.
கூச்சம்
அகமுகத்தன்மை உடையவர்கள் பெரும்பாலும் கூச்ச சுபாவம் உடையவராகத் திகழ்வார்கள் என்பது யுங் அவர்களின் கருத்து. கண்ணகி மனையறம்படுத்தகாதையில் கோவலன் பல புகழ்மொழிகளைக் கூறியபோது நாணம் அடைகிறாள். மேலும் சாலினி என்ற பெண் தெய்வமேறப் பெற்று கண்ணகியின் பண்புநலன்களைப் பலவாறு பாராட்டுகின்றாள்.
“இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற்றுரைப்பப்” (வேட்டுவ வரி 47-50)
எனப் புகழ்ந்து கூறுகிறாள். இதனைக் கேட்ட கண்ணகி நாணுகிறாள். நாணம் என்பததனை பெண்களுக்கு உரிய இயல்பாக தொல்காப்பியர் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
”அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”
இந்நூற்பா வழி தலைவியின் இலக்கணத்தை அறிய முடிகின்றது. கண்ணகி இயல்பாகவே நாணமுடையவள். மேலும் சாலினி கூறிய புகழ்மொழியினைக் கேட்டு மேலும் நாணமடைகிறாள் என்பதை,
“பேதுறவு மொழிந்தனள் மூதுறவு ஆட்டி என்று
அரும் பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப” (வேட்டுவ வரி 51-53)
என்ற அடிகளால் அறியமுடிகிறது. கண்ணகி தன் மனதில் தோன்றிய நாணத்தின் காரணமாகவே அவ்வாறு குறிப்பிட்டமையை அறியலாகின்றது.
அனிமஸ்
அனிமஸ் என்பது பெண்ணின் நனவிலியில் மறைத்து உறையும் ஆணின் குணங்கள் ஆகும். பெண்ணின் நனவிலியில் மறைத்திருக்கும் ஆண்தன்மை சமுதாயப் பண்பாட்டுக் கட்டுப்பாடுகளால் மேலும் அமுக்கப்படும் போது, சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவளது பெண்மைப் பண்புகள் மட்டும் ஆக்க நிலையுறுத்தம் (Conditioning) பெறுகின்றன.
அனிமஸ் குணங்கள்
உயிரிகளிடம் காணப்படும் இருபாலினத் தன்மைக்கு (Androgyny) யுங்கு பின்வரும் விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். ஆண்களிடம் அமைந்துள்ள பெண்மைப் பண்புகளை யுங்கு அனிமா (Anima) என்றும் பெண்களிடம் அமைந்துள்ள ஆண்மைப் பண்புகளை அனிமஸ் (Animus) என்றும் குறிப்பிட்டார்.
“பெண்ணில் மறைந்திருக்கும் ஆண்மைக் குணங்கள் பெண்மையின் குணங்களாகச் சமன் செய்து, அவளது தன்முனைப்புடன் ஒருங்கிணைவு பெற்று இயல்பு நிலையில் வெளிப்படும் போது சுதந்திரமான சிந்தனை உடைய தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக மாறுகிறாள். சிக்கல்களுக்குத் தானே தீர்வு காண்பவளாகவும், சிக்கலைக் கண்டு மனம் குலைந்து விடாமல் உளச்சமநிலையுடன் சிக்கலை அணுகுபவளாகவும் மாறுகிறாள். இலக்கு நோக்கிய நடத்தை உடையவளாக, வாழ்க்கையின் குறிக்கோளை உணர்ந்தவளாக உளஉறுதியுடன் குறிக்கோளை அடைய முயற்சிப்பவளாகவும் இருப்பாள்” (11) இவை யாவும் பெண்களிடம் காணப்படக்கூடிய ஆண்தன்மைக்குரிய பண்புகளாகும்.
கண்ணகி காப்பியத் தொடக்கத்தில் பெண்மைத் தன்மை மிகுதியும் உடையவளாகக் காணப்படுகிறாள். ஆயினும் கணவனுக்கு ஏற்பட்ட அவப்பெயரினை நீக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டினை அவள் மேற்கொள்ளும் போது அவளது அனிமஸ் குணம் வெளிப்படுவதனைக் காணமுடிகிறது. நாடுகாண்காதையில்
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூதூர் யாது?
என்று ஏதுமறியாது வினாத் தொடுத்த கண்ணகி பாண்டிய மன்னின் அரசவை சென்று மன்னனோடு வாதாடுவது அவளது அனிமஸ் குணத்தின் வெளிப்பாடே எனலாம்.
”தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநாநடுங்க” (வழக்கு.கா.50-56)
என்ற அடிகள் மூலமாக மன்னனையே ஆராய்ந்து பார்க்கும் திறன் அற்றவனாகக் குறிப்பிடும் மனோதிட்பத்தைக் காணமுடிகிறது.
கண்ணகி அடிப்படைமனவெழுச்சிகளின் மிகுதியில் இரக்கம், பொறுமை ஆகிய பண்பு நலன்கள் கொண்டவளாக அமைகின்றாள். இருப்பினும், அவளது நனவிலி மனதில் இருந்த அனிமஸ் பண்புகளும் தேவையான நேரத்தில் வெளிப்படுவதனைக் காணமுடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.ப.121
2. நர்மதாவின் தமிழ் அகராதி.ப.86
3. வர்த்தமானன் தமிழ் அகராதி ப.696.
4. முனைவர்.பெ.வெங்கட்டம்மாள்,பொது உளவியல், ப.129
5. வாழ்வியற் களஞ்சியம்.தொகுதி 2.ப-2
6. கழக வெளியீடு உளநலவியல் ப-26
7. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி 5.ப-404
8. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ப.516
9. இரா.ப.சக்தி சங்க அகஇலக்கிய மாந்தா்களின் உளவியல் ப.49
10. தா.ஏ.சண்முகம், உளவியல் 2ம் பாகம் ப.88.
11. இரா.காஞ்சனா.ஆளுமை வளர்ச்சியும் ஆளுமைக் கோட்பாடுகளும்- ப.49.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.