திராவிடமொழி கோத்தர் இனமக்களின் மொழியும் நம்பிக்கையும்
மா. கணேசன்
மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும். கையசைவுகளாலும் முகக்குறிப்புகளாலும் தங்கள் எண்ணங்களை கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டமனித இனம் மொழியைக் கண்டுபிடித்துப் பேசுவதற்குமட்டும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியது. இன்றளவும் பேச்சுவழக்கு மொழியாகவே உள்ளமொழிகள் எண்ணிலடங்காதவை. அதில் கோத்தர் இன மக்களின் மொழிமற்றும் நம்பிக்கைகள் பற்றி ஒருசிலக் கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
உலகமொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.
இந்திய மொழிகளை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.
1. திராவிடமொழிக்குடும்பம்
2. ஆஸ்டிரிக் மொழிக்குடும்பம்
3. சீனோ-திபெத்தியமொழிக்குடும்பம்
4. இந்தோ-ஆரியமொழிக்குடும்பம்
‘கோவ் என்னும் கோத்தர் இனமலையானமக்கள் பேசும் மொழி’கோவ்’என்பதாகும்.இவர்கள் கோவ் மட்டுமின்றித் தமிழ்மொழிகன்னடமொழிஆகியமொழிகளையும் பேசுகின்றனர். கோவ் மக்கள் தமிழர்கன்னடியர்ஆகியோருடன் கலந்தநிலையில் வாழும் சூழலின் பாதிப்புஅவர்களதுபண்பாடுமொழிஆகியவற்றில் பிரதிபலிக்கின்றது’.
(பக்தவத்சலபாரதி, தமிழ்ப் பழங்குடிகள் 2013)
கோத்தர்
நீலகிரியில் 1200-லிருந்துவசித்துவரும் கோத்தர்கள் கொல்லிமலையிலிருந்துவந்தார்கள் என்பர். ஆனாலும் தொல்குடிப் பழங்குடிகளானஆரம்பகாலம் பற்றிச் சரியானகுறிப்புகள் எதுவும் இல்லை. கோஎன்றஅரசனால் இந்த ஊர் நிறுவப்பட்டதாகக் கூறுவர்.
நீலகிரிமாவட்டத்தில் கோத்தர்கள், தோடர்கள், காட்டுநாயக்கர்கள், குறும்பர்கள், பனியர்கள், இருளர்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் ஊட்டி கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அய்யனோர், அம்மனோரைக் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
கோவ் மக்கள் என்றழைக்கப்படும் கோத்தர்கள் நீலகிரிமலையில் உள்ள ஏழு இடங்களான கோத்தகிரி கீழ்க்கோத்தகிரி, கொல்லிமலை, திருச்சிக்கடி, குந்தாகோத்தகிரி, சோளுர், கோக்காள், கூடலூர் ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர். இவர்கள் சிவந்து காணப்படுகின்றனர். பெண்கள் நான்கு அடியும் ஆண்கள் ஐந்து அடியும் சராசரி உயரம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் வெண்ணிறத் துணியை இரட்டையாக மடித்து உடலைப் போர்த்திய நிலையில் உள்ளனர். கோவ் மக்கள் ஊருக்குக் கோக்கால் என்று அவர்தம் மொழியில் கூறுகின்றனர்.
கோத்தர்களின் மொழி
தமிழ் மொழி பேசுவோர் எண்ணிக்கையில் கூடியவர்களாக விளங்குவதோடு கலாச்சாரம் பண்பாடு எழுத்து மொழி ஆகிய நிலைகளிலும் உயர்ந்துள்ளனர். இக்காரணங்களால் கோத்தர்களது எழுத்துவடிவம் பெறாதகோவ் மொழியில் எழுத்துவடிவம் கொண்ட தமிழ்மொழியின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகின்றது.
கன்னடம் பேசும் பகுதியிலிருந்து நீலகிரிக்குக் குடிபெயர்ந்தவர்கள் எனதங்களைக் கூறிக்கொள்ளும் படுகர்கள் தங்களது படுகமொழியுடன் கன்னடமொழியையும் பேசுகின்றனர். கோத்தர்கள் கன்னட மொழியோடு படுகர் மொழியையும் தெரிந்து வைத்துள்ளனர்.
கோத்தர்கள் குடிகொண்டுள்ள பகுதிகளைச் சுற்றிப் படுகர்கள் வாழ்கின்றனர். வாழ்க்கைத் தரம் கூடியவர்களாகவும் எண்ணிக்கையில் கூடியவர்களாகவும் படுகர்கள் விளங்குகின்றனர். படுகர்கள் கொண்டாடும் விழாக்களுக்குக் கோத்தர்கள் இசைக் கருவி வாசிப்பவர்களாகவும் உள்ளனர். கோத்தர்களின் விழாக்களுக்குப் படுகர்கள் மேள தாளங்களுடன் மரியாதையுடன் அழைக்கப்படுகின்றனர். தமிழ்மொழிக்கு அடுத்தநிலையில் கோத்தர்கள் படுகமொழியைக் கொண்டுள்ளனர். மாநில எல்லையோரங்களில் வாழும் மக்கள் தம் சொந்தமொழியோடு அண்டை மாநில மொழியையும் அறிந்து வைத்திருப்பது இயல்பு.
சேலமரம்

நீலகிரியைச் சுற்றியுள்ள இந்த மலைவாசிகள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கைவிடவில்லை. பிறப்பாக இருந்தாலும் இறப்பாக இருந்தாலும் தன்தாய் மரமான “சேல” மரத்தினை வணங்கிவிட்டு பின்புதான் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்தத் தாய்மரத்தின் வேர்களை அண்டிக் கிடக்கும் இந்தகோத்தர் இனத்தின் கடவுள் அங்கு வளர்ந்திருக்கும் ஆதிகாலத்துச் சேலமரம் தான். கோத்தர்களின் மகிழ்ச்சியும் சடங்குகளும் இந்தமரத்திற்குத் தெரியாது நடப்பதில்லை. கிட்டத்தட்ட 1000வருடங்கள் பழைமைவாய்ந்ததாகக் கருதப்படும் சேலமரம்தான் கோத்தர்களின் சாமி.
கோத்தகிரி, கீழ்க்கோத்தகிரி, கொல்லிமலை, திருச்சிக்கடி, குந்தாகோத்தகிரி, சோளுர், கோக்காள், கூடலூர் ஆகிய ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த கடவுள் இந்தமரம்தான். தோடர்களுக்குத் தாரநாடு மந்துகோவில் எவ்வளவு முக்கியமோ, குறும்பர்களுக்கு பனிசோலை முக்கியமானது. அதே போல் கோத்தர்களும் இந்தமரத்தையே தான் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
இந்த மரத்தின் இலைகள் காய்கள் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிவராத்திரி அன்று இந்தமரத்தின் அடியில் ஆடிக் களிக்கின்றனர். தங்களுக்குரிய முதல் கடவுளாகச் சிவனையும் பார்வதியையும் வணங்கி வருகின்றனர். இந்தமரத்தின் அடியில் மண்பாண்டம் செய்யும் தொழிலையும் நடத்தி வருகின்றனர்.
சிலப்பதிகாரத்தில் கோத்தர்கள்
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் பலதொல்குடிகளைப் பற்றி அறிய முடிகின்றது. சிலப்பதிகாரத்தில் நீலகிரியில் வாழும் கைவினைத் தொழில்கள் செய்யும் கோத்தர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்; எனும் கருத்தை மிகநுட்பமாகப் பிலிப்கே.மல்லி (2011:23-4) ஆராய்ந்திருக்கிறார்.
கோத்தர் (மழவாயச) என்னும் சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கில் வந்ததாகும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர்ப்படுகர்கள் இவர்களைக் கோவ என்றே அழைத்துள்ளனர். இதன்பொருள் குயவன் என்பதாகும். இதற்கான பொருளை விளக்க இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்றுகளாக உள்ளன.
கோத்தர்கள் தங்களைக் ‘கோவ்’என்றே குறிப்பிடுவார்கள். தோதவா இவர்களைக் ‘கூவ்’என்று அழைப்பார்கள். இவர்கள் மண் வினைஞர்களாக உலோக வினைஞர்களாக இசைக் கலைஞர்களாக மரவேலைசெய்யும் ஆசாரிகளாக உள்ளார்கள். இதனால் படுகர்கள் இவர்களைப் பேச்சு வழக்கில் கோவ என்பதற்கு ஓவ என்றும் அழைத்து வந்தார்கள்.
கோவ-ஓவ எனும் எதிரொலிச் சொற்கள் படுகர்மொழியில் இடம்பெறுவது சாதாரணமானதாகும். இத்தகைய சொற்களின் பொருண்மை நீட்சிகளை மொழியியல் அறிஞர் எமனோவ்(1967) மிகவிரிவாக ஆராய்ந்துள்ளார். கோவ-ஓவ ஆகிய சொற்களின் பன்மைத் தொடர்களான கோவர் ஓவர் ஆகியவை பழந்தமிழ் நிகண்டுகளில் காணப்படுகின்றன. கன்னடத்தில் ஓஜ (சிலபடுகர் ஓஜி எனவும் சொல்லுவார்கள்.) எனும் சொல்லுக்கு ஆசாரி என்பதுபொருள். ஆக ஓவ என்பதற்குத்திரிபுச் சொல்லாக இது வழங்குகிறது என்பது தெளிவாகிறது.
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் கால்கோட்காதையில்
‘உலகமன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவிஅணிந்தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு’
(வரிகள்85124)
என்ற வரிகள்
(புலியூர்க்கேசிகன், சிலப்பதிகாரம்2009) சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் எடுக்கச் சென்றபோது நீலகிரியின் நெடும்புறத் தேகடந்து சென்றான் என்ற மரபானபழங்கதை இன்றும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு குறிப்பிடப்படும் ஓவர் என்போர் கோத்தர்களாகவே இருத்தல் வேண்டும் என்று கருதுகிறார் பி. கே.மல்லி(2011). அவர்கள் கடந்து சென்றபோது’ ஊழிவாழி’ என்ற ஓவர் தோன்றிப்புகழ்ந்ததாகக் காண்கிறோம்.
சிலப்பதிகார உரைகளில் ஓவரை ஏத்தாளர் என்னும் சொல்லுக்கும் படகமொழியில் வழங்கும் ஆத்திக்குது அல்லது வாழ்த்துதல் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு கவனத்திற்குரியது என்கிறார். கோத்தர்களின் முன்னோடிகளாக ஓவர் இருந்துள்ளனர். இவர்கள் சேரன் செங்குட்டுவனுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். ‘ஓவ’ என்பதன் திரிபாக விளங்கும் ‘ஓஜ’ எனும் மலையாள வழக்கு பறையறைவோன் எனும் பொருளை உணர்த்துகிறது.
கோத்தர்கள் ஹறெகோல் (பறைஊதுகோல்) இல்லாமல் படகர் தொதுவர் சடங்குகளில் இசைஊழியம் செய்வதில்லை. இதன்மூலம் ஆதி இசைவாணராகியஓவரிள் தொடர்ச்சியாகவே ஓவ எனும் கோத்தர் இன்றும் காணப்படுகின்றனர் என்கிறார்
(பிலிப்கே. மல்லி(2011) தென்மொழி, நவம்பர் இதழ்.பக்.23-24.)
நீலகிரிமலையில் தோடர் இருளர் பணியர் முள்ளுக்குறும்பர் கோத்தர் எனப் பலவகை மலையின மக்கள் வாழ்கின்றனர். நாட்டுப்புறச் சமவெளிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து மலையினமக்கள் வாழ்க்கைபெரிதும் வேறுபட்டுள்ளது.
மொழியின் அடையாளம் அற்றுப் போதல்
இந்தியாவில் நாடுகள் உருவாவதற்கு முன்பு எண்ணற்ற பழங்குடிகள் தத்தம் மலைகாட்டுப் பகுதிகளைத் தம் வாழ்வுக்குரியதாகக் கொண்டிருந்தனர். முன்னோர்கள் காலத்திலுங்கூட பெரும் இழப்பு ஏற்பட்டதில்லை. ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் பழங்குடிகள் சிந்திக்கத் தொடங்கிய நிலம் காடு தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருக்க இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பழங்குடிகளின் அடையாளமும் ஒருங்கிணைப்பும் பண்பாடும் சிதையத்தொடங்கின.
பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வளராத நிலையில் உள்ள கோத்தர் மொழிக்கு எழுத்து மொழியான தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்துகடன் வாங்கப்பட்டுள்ளது.
கோவ்மொழியில் தமிழ் முதல் நிலையிலும், கன்னடம் இரண்டாம் நிலையிலும் உயிர்ப்பெற்றுள்ளன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பழங்குடிகளின் மொழிகளோ பண்பாடோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஒரேபழங்குடி இரண்டு அல்லது மூன்று நான்கு மாநிலங்களில் வாழ்வோராகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஆட்சியமைப்பின் கீழ் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.