தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண் விடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், தற்கால மகளிர் கவிதைகளில் ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கத்தினைப் பாடுபொருளாகக் கட்டமைத்து பெண் விடுதலையை கட்டவிழ்க்கின்றனர். தந்தைவழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிழைந்துள்ளனர் இக்கவிஞர்கள். ‘பாலியப்பெண்ணியம’ என்னும் கொள்கையின் பாற்பட்டோர் பெண் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் வாகனமாகக் கவிதையை கவனமாகக் கையாண்டுள்ளனர் என்பதை நிறுவுவதாகவும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்ணுடல் நுகர்பொருளாதலை விமர்சிப்பது ஆகும். தீவிரப் பெண்ணியத்தின் உட்கூறுகளில் ஒன்று இத்திறனாய்வு முறையாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றும் பெண்ணியவாதிகள் பாலியப் பெண்ணியம் தொனிக்கும் இலக்கியத்தினைப் படைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். மரபு வழியாக ஆணுடலுக்கான பெண்ணுடல் இப்பெண்ணியவாதிகளால் எதிர் அரசியலுக்கு இட்டுச் செல்லப்பட்டு மாற்றுத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றது.
பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie Conbry)
எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (Dimple Godiwala)
இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)
தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலி கே.பாரடைஸ் (Emily K. Paradise)
ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதிமைத்ரி,லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய கவிதைகள் ஆகும்.
உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண்மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்குப் புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் இனங்காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு 'எக்ரிடியூர் பெமினைன்' (Ectriture Feminine) எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு 'உடலை எழுதுவது' என்பது பொருள். ஷொவால்டர் இதனை “மொழியிலும், நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்பது” என்று விளக்குவார். முன்னைய மரபுகள் பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.
ஒரு பெண்ணாய் இருப்பது
என்னுள் போதையூட்டிக் கொண்டேயிருக்கிறது
... ... ... ... ... ... ...
எத்தனை முறை புணர்ந்த உடலிது
எத்தனைமுறை ஈன்ற உடலிது
எத்தனை முறை எரிந்த உடலிது
( குட்டிரேவதி, உடலின் கதவுகள், பக்.54- 55 )
‘என்றாலும் ஒரு பெண்ணாய் இருந்து’ என்ற கவிதை உடலின் முழுமையான பாலியல் அனுபவத்தை அவ்வாறே வெளிப்படுத்துகின்றது.
... ... ... ... ... ... ...
ஒரு காமக் கிழத்தியைப் போல
ஆண்களை ருசிப்போம்
... ... ... ... ... ... ...
கடந்த வரலாற்றில் தொலைத்த உடலை
இன்றைய போரில் மீட்டெடுப்போம்
( குட்டிரேவதி, உடலின் கதவுகள், ப.17 )
கடந்த வரலாற்றில் தொலைத்த பெண்ணுடலை மீட்போம் என்று குட்டிரேவதி அறைக்கூவல் விடுத்துள்ளார். அக்கவிஞர் பாலியப் பெண்ணியக் கவிதைகள்தான் பெண்விடுதலையின் திறவுகோல் என்று கருத்தரங்கப் பொழிவில் சுட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு “இந்தியச் சமூக வெளியில் பெண்ணின் உடல் அனைத்து வகை ஒடுக்கு முறைகளும் அழுத்தும் ஒரு அரசியல், சமூகக் குறியீடு மேலைநாடுகளிலிருந்து கடன் வாங்கிய கோட்பாட்டுத் தத்துவங்களாலேயே இங்கு நிலவும் பெண் பிரச்சினைகளைச் சிக்கலெடுப்பது என்பது இதுவரை கைகூடவில்லை.இதுவரை தோன்றி வளர்ந்த அரசியல் இயக்கங்களும் கூடத் தமிழ் மரபு என்ற பெண் மீதான அடக்குமுறைக் கட்டுமானத்தையே மீண்டும் மீண்டும் நிறுவுகின்றன. சாதிமறுப்பு எழுச்சியும், இயக்கமும் பெண் உடல் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தும் சமூக நிறுவனங்களைக் குலைக்காமல் தீவிரப்படாது. இதற்கிடையில் செயல்படத்தொடங்கியது தமிழ் பெண்ணியக்கவிதை: உடல் அரசியலை, தன் உடல் மீதான சமூக அசைவியக்கத்தை வெளிப்படுத்தும் கவித்துவத்தைக் கண்டடைந்தது.” (1) இவ்வாறு கவிஞர் குட்டி ரேவதி உடல் அரசியல் போராட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
குட்டி ரேவதியின் ‘உடலின் கதவுகள்’ ‘முலைகள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், சுகிர்தாராணியின் ‘இரவு மிருகம்’ என்னும் கவிதைத் தொகுப்பும் இவ்வகைமையைச் சார்ந்ததாகும்.
கிழிந்த தேகத்தை
நேர்படுத்திக் கொண்டு நிமிர்கிறேன்
... ... ... ... ... ... ...
உயிர் மண் உதிர உதிர
வெடித்த பிளவுகளில் கசியும்
எச்சிலும் காமநீரும்
உடலாறு முழுக்கப் பரவப் பாயும்
முடிவின் பிந்தைய கணத்தில்
இரத்தம் தோய்ந்த ஆடையைத்
துவைத்துப் போடுகிறேன்
பிரபஞ்சமெங்கும் கலவி வாசனை
(சுகிர்தாராணி. இரவுமிருகம், ப.30)
சுகிர்தாராணியின் ‘கலவிவாசனை’ கவிதை உலகத்தின் இயக்கமே கலவியால் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ‘கலவி’ என்ற குறியீடு புலப்படுத்துவது உயிர்களின் தோற்றுவாய்க்குப் பெண்ஆதாரம்,பெண் முதன்மை ஆகியன. இவ்வாறு மகளிர் கவிஞர்கள்; பாலுறவு குறித்து வெளிப்படையாக எழுதுவது ‘உடலை மீட்கும் போராட்ட உத்தியாக’ கருதலாம்.
உனது தாகத்துக்கு
குவளையில் தளும்பும்
உதிரம்
... ... ... ... ... ... ...
உன் முன்னால் கிடத்தப்படுகிறது
மலர்ந்த முகத்துடன்
எவ்விதச் சங்கடமுமின்றி செரிக்கிறாய்
காலம் காலமாக
உடல் குதறி உயிர்க்கும்
நாகரீகம்
எல்லாம் யோசிக்கும் வேளையில்
கொள்வதும் உண்பதுமாக முடிகிறது
உன்னைவிடவா நான் ருசி
(மாலதிமைத்ரி, சங்கராபரணி, ப. 52)
மாலதிமைத்ரியின் ‘நரமாமிசர்’ கவிதை பெண்ணுடல் ஆணுக்கு காலங்காலமாக இரையாக்கப்படுதலைச் சித்தரித்துள்ளது.
லீனா மணிமேகலை எழுதிய ‘பரத்தையருள் ராணி’ என்னும் கவிதைத் தொகுப்பில் உடல் அந்தரங்கத்தைப் போராட்ட முறையாக்கியுள்ளார்.
“ நான் லீனா
இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
... ... ... ... ... ... ...
வாழ்கிறேன்
என் வேலை
இரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
... ... ... ... ... ... ...
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக்கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லோரும் ஒருவரே
... ... ... ... ... ... ...
ஏதொன்றையும் முகர்ந்து பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்”
(பரத்தையருள் ராணி,ப.44)
லீனா மணிமேகலை ஆண் × பெண் என்ற தந்தை வழி இணை முரணை பெண் × ஆண் என்று தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டுள்ளார். “புதிய பெண்மொழி தான், ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அமுக்கி வைப்பதற்கும் மௌனத்தில் உறைய வைப்பதற்கும் தந்திரமாகப் பயன்படுத்திய தந்தை வழி இணைமுரண் திட்டத்தை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விடப் போகிறது” (2) என்ற கூற்று பாலியப் பெண்ணியவாதிகளால் சரிவரப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘என் உதிர வீச்சமடிக்கும்’ என்ற லீனாவின் கவிதை வரியானது, புறக்கணிக்கப்பட்ட ‘பெண்ணின் பூப்பினை’ மாற்று அரசியலாகப் பெருமிதப்படுத்தியுள்ளது.
1. அ. பிச்சை (பதி), பாரதிக்குப் பின் பெண்ணும் கவிதையும், ப.78
2. க. பஞ்சாங்கம், புதிய பெண்ணியக் கோட்பாட்டாளர் ஹெலன்சீக்சூ, ப.17.