தன் வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் பச்சைவிரல்
வீ. உதயகுமார்

கேரளா மாநிலம் பாலாவில் பூவரணி என்னும் கிராமத்தில் 1941 ல் பிறந்தவர் தயாபாய். அவரின் இயற்பெயர் மேர்சி மாத்யூ ஆகும். அவர் பீகார் மாநிலம் ஹஸாரிபாக்கில் ஒரு கிருஸ்தவ மடாலயத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காகச் சேர்ந்த போதிலும் பயிற்சி முடிவதற்கு முன்பே மடாலயத்திலுள்ள பழங்குடியினப் பகுதியான மாஹோடாவில் கல்விப்பணி புரிந்தார். அன்று தொடங்கிய கல்விப்பணி இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார். கோண்டு பழங்குடிகளின் ஒருத்தியாகவே மாறிப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம் தான் ‘‘பச்சை விரல்’’ . காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்த ஒரு போராளியின் கதை தான் இந்த பச்சை விரல்.
1980-ல் MSW படிப்பின் ஆய்வேட்டுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாடா மாவட்டத்திலுள்ள சுர்லா காப்பகம் என்னும் பழங்குடி கிராமத்திற்குச் சென்றார். அவர் முதலில் சென்ற பழங்குடி கிராமம் ஆகும். கோண்டு இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுடன் பழகி எல்லாருக்கும் பிடித்தமான சகோதரி (பஹன்ஜி) ஆகிவிட்டாள்.
1981-ல் தீபாவளி தினத்தன்று தனக்கு மிகவும் பிடித்தமான ‘‘தின்ஸை’’ என்றும் பழங்குடி கிராமத்துக்குச் சென்றார். அவர் தொடர்ந்து 1981 முதல் 1995 வரை 14 ஆண்டுகள் அக்கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருவராகவே மாறிப்போனார். அந்தப் பழங்குடிகளின் உரிமைகளுக்காகவும் கலாசாரப் பாதுகாப்புக்காகவும் போராடினார். அவர்களுடைய முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றினார்.
தயாபாயின் தோற்றம்
தயாபாயின் கழுத்திலும் கைகளிலும் இரும்பு வளையங்கள், நெற்றியில் அரையணா அகலத்துக்குப் பொட்டு, முகத்திலடிக்கும் நிறத்தில் உடம்பைச் சுற்றிய கசங்கிய காட்டன் புடவை என்று காட்சியளிக்கும் ஒரு நாடோடிப் பெண்ணைப் போன்ற தோற்றம் அவள் தோற்றத்தால் பல சிக்கல்கள் அவளைத் தேடி வந்தன. ஆனால் இது போன்ற தோற்றத்துடன் ஒரு ஆண் இருந்தால் பல சிக்கல்கள் வருமா என்று நினைத்தால் அது கேள்விக்குறிதான்?
தோற்றத்தால் வரும் சிக்கல்கள்
இரயில் பயணத்தின் போது தயாபாயைப் பார்த்து ஒரு பிராணி இருக்கிறது. இது எங்கிருந்து வந்ததோ என்று ஒரு பெண் இழிவாக அவள் காதில் கேட்கும் அளவுக்குப் பேசிச் சிரிக்கின்றனர். பெண்ணை ஆண் இழிவு படுத்தியதைக் காட்டிலும், ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது இன்றைய சமுதாயத்தில் நிகழ்ந்து வருகிறது. அதையும் அவள் சாதாரனமாக எடுத்துக் கொள்கிறார்.
கிராமத்திற்குச் செல்லும் சாதாரணமான பேருந்தில் கூட அவள் தோற்றத்தைப் பார்த்து ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் தாண்டி ஏறினாலும் நடத்துனர் அவளைப் பாதி வழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு விடுகிறார். பெண்கள் எதிர்த்து பேசமாட்டார்கள் என்ற துனிச்சளில் இது போன்று நடக்கிறது. தயாபாய் நடத்துனரைப் பார்த்து ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசியதும் அவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்.
அவளை மிக எளியவளாக கருதுவதனாலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன. எளியவரையும் ஏழைகளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காலச்சாரம் இப்போது எங்கும் பரவிவிட்டது. சொல்லப் போனால் ஒரு விதத்தில் இதுவும் ஒரு அடக்கு முறைதான். ஆண் எப்படிப்பட்ட தோற்றத்தோடு இருந்தாலும் இது போன்ற சிக்கல்கள் வருவதில்லை. ஏன் என்றால் ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்தினால் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்.
மலைவாழ் மக்கள் திட்ட அதிகாரி ‘‘தின்ஸை’’ கிராமத்துக்கு வறட்சிக் காலங்களில் நீர் தொட்டி கட்டுவதற்கான இடத்தைப் பார்த்து ஒப்புதல் அளித்தார். ஆனால் அவர் தயாபாயை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தார். அதனை அறிந்த அவர் திட்ட அதிகாரியை தங்கும் இடத்தில் விட்டுவரச் சொன்னார். நள்ளிரவில் தயாபாயின் வீட்டில் அவள் அருகில் நின்ற திட்ட அதிகாரியைப் பார்த்து பயந்து கத்தி ஊரைக் கூட்டாமல் அவர் வழியில் சென்று அவருக்குப் பாடம் புகட்டினாள்.
ஒரு ஆண் தனியாக இருந்தால் அவருக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும் என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால், ஒரு பெண் பிறந்ததில் இருந்து இறப்பு வரை ஆண் வர்க்கத்தைப் பார்த்துப் பயந்து வாழ வேண்டிய சூழல் உள்ளது. இன்றைய சூழலில் இது போன்ற நிகழ்வுகள் மாறிக் கொண்டு வருகின்றன.
ஒரு பெண் வீட்டில் திருமணம் ஆகாமல் தனியாக இருந்தால் எத்தனை பிரச்சனைகள் வரும், அவை அனைத்தும் தயாபாயிக்கும் வந்தது. அவற்றை எல்லாம் கடந்து வெளிவந்துள்ளார்.
நீ எங்கே போய்கிறாய்?
பொது வாழ்க்கையில் இறங்கிய ஒரு பெண், அதிலும் குறிப்பாக ஒரு சாதாரண கிராமத்தில் வாழும் பெண் பொது இடங்களில் நின்று கொண்டு இருந்தால் அவள் மீது கேட்கப்படுகின்ற முதல் கேள்வி ‘‘நீ எங்கே போய்கிறாய்?’’ என்று இப்படி கேட்பது ஒரு காவல் அதிகாரியாகவோ, இரயில் நிலையத்தில் கூலிக் காரனாகவோ, ஒரு அதிகாரியாகவோ, பள்ளி தலைமையாசிரியராகவோ, சகோதரியாகவோ, ஏன் உங்கள் சொந்த தந்தையாகவோ கூட இருக்கலாம். தனது உலகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மீது இத்தகைய வினாக்கள் காலங்காலமாக கேட்கப்பட்டு வருகின்றன. இந்த அதிரடித் தாக்குதலில் சுருங்கிப் போகும் பெண்கள் கிளைப்பரப்பி வளர்வதில்லை தங்களுடைய உலகம் எந்த அளவுக்குத் தங்களுக்கே தங்களுக்கானது என்ற உணர்வில்லாதவர்கள் அந்தப் புள்ளியில் இருந்து ஒரு அடி கூட முன்னேற முடியாமல் பின் தங்கிப் போகிறார்கள்.
இது போன்று ஒரு ஆண் நின்று கொண்டு இருந்தால் அவரிடம் ‘‘நீ எங்கே போய்கிறாய்?’’ என்ற கோள்வி அவர் மீது வீசப்படுமா? என்றால் அது நிகழ்வது கிடையாது. ஏன் என்றால் ஒரு ஆண் என்பவன் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவன். அதனால் தங்களுடைய உலகம் எந்த அளவுக்கு தங்களுக்கே தங்களுக்கானது என்ற உணர்வுடைய ஆண் எதிலும் வெற்றி கொள்கின்றான். ஆனால், பெண் என்பவள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையை உருவாக்கிவிட்டனர். இந்தச் சமூதாயம் எந்தச் செயலையும் செய்யவிடாமல் தடுக்கிறது. அதையும் தாண்டிச் செய்தாலும் இழிவாகவே பார்க்க கூடிய நிலைதான் உள்ளது.
கல்விப்பணி
தயாபாய் சாமர்களுக்கு (செருப்பு தைப்பவர்), தெரு பெருக்குபவர், தோட்டிகள் (மலம் அள்ளுபவர்) போன்றோரின் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பாள். ஆங்கிலப்பள்ளி அரிதாக இருந்த காலக்கட்டம். அதனால் உயர் சாதிக் குழந்தைகள் தங்கள் இடத்திற்கு வந்து கல்வி கற்றுக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதற்கு, இங்கு வந்து படித்தால் கற்று தருகிறேன் என்றாள். அதில் ஆத்திரம் அடைந்த உயர் சாதிக் குழந்தைகள் தயாபாய் தெருவழியாக செல்லும் போது ‘‘தோட்டிகளின் அக்கா’’ என்று சத்தமிட்டு கூறுவார்கள்.
காவல் துறை அதிகாரிகளின் அட்டூழியம்
பஞ்சாயத்துக்கு எதிராகவும், மின்சார இலாகாவுக்கு எதிராகவும், பட்வாரிக்கு எதிராகவும், ஏன் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகவும் கூடப் புகார் கொடுக்கப் பழங்குடி மக்கள் முன்வந்தார்கள். இதற்குக் காரணமாக இருந்த தயாபாய்க்கு பல மிரட்டல்கள் விடுத்தனர். அவர்களைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அதிகார வர்க்கத்தோடு போராட ஆரம்பித்தார்.
காவல்துறை அதிகாரிகளின் அட்டூயங்களை எதிர்த்துக் காவல்நிலையம் அருகில் உள்ள சந்தையில் ‘‘குரைக்கும் நாய்’’ (காவல்துறை அதிகாரி) என்ற பெயரில் காவல் அதிகாரிகளின் அட்டூழியங்களுக்கு எதிராகக் கார்ட்டூன் தட்டிகள் வைப்பதற்கு அவள் அஞ்சியதே இல்லை. அதிகாரிகள் என்னும் பண முதலைகள், அரசியல்வாதிகள் என்னும் விஷப்பாம்புகள் அப்பாவி மக்களையும், ஆதிவாசிகளையும் அழித்தொழிக்க வரும் போதெல்லாம் இந்த ‘‘குரைக்கும் நாய்’’ களத்தில் குதித்தது. இப்படிப்பட்ட போராட்டங்களின் போது காவல் அதிகாரிகளின் கைவரிசையால் அவளின் முன் வரிசைப் பற்கள் பலவற்றை இழந்திருக்கிறாள். தயாபாய் ஒரு பெண் என்பதால் காவல் அதிகாரிகள் உடனே கை நீட்டுகின்றனர். அதைக் கண்டு ஒதுங்காமல் பல போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டு இருக்கிறாள்.
‘‘ஐயோ ஐயோ என் மானத்தைக் காக்க யாருமில்லை !
என்னைக் காப்பாற்ற எவருமே இல்லை!
நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து நம்முடைய
சகோதரிகளின் மானத்தைக் காப்பாற்றுவோம்!
பெண் குழந்தைகளின் மானத்தைக் காப்பாற்றுவோம்!
அம்மாக்களின் மானத்தைக் காப்பாற்றுவோம்!
அவர்கள் தெருக்களில் சூறையாடப்படுகிறார்கள்
சந்தைகளில் விற்கப்படுகிறார்கள்’’
என்று தனது புலம்பல்களைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆதிவாசிக் கிராமங்களில் பதின்மூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் ஆசை வார்த்தையால் மயக்கிக் கடத்தப்படுகிறார்கள். அதற்குச் சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் பணக்காரர்கள், செல்வாக்கு படைத்தவர்கள் ஆகியோரிடம் கையூட்டு பெறுவதாலேயே வெளிப்படையான இந்தப் பெண் கடத்தலுக்கும், பெண்களை சந்தையில் விற்பதற்கும் காவல் அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர். பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு இந்த நிகழ்வு நடப்பது கிடையாது. இதனால் தான் ஆதிவாசி மக்கள் பதினான்கு, பதினைந்து வயதுள்ள பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
பழங்குடி விவசாயிக்கு ஏற்படும் சிக்கல்கள்
உயர் சாதிக்காரர்கள் ஹரை சந்தை வியபாரத்திற்குப் பொருட்களைக் கொண்டு வரும் மக்களிடம் குறைந்த விலையைக் கையில் திணித்து விட்டுத் தலையில் இருந்து பொருள்களை வலுக்கட்டாயமாக வாங்கிச் செல்கின்றனர். இதோடு நின்று விடாமல், போதைப் பொருள்களைக் கொடுத்துப் பொருள்களையும் அவர்களின் நிலத்தையும் உயர் சாதிக்காரர்கள் அபகரித்துக் கொள்கின்றனர். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
முடிவுரை
* தலித்துகளுடனும் தரித்திரர்களுடனும் கலந்து பழகியதால் வாழ்க்கை முழுவதுமே அவள் அவமானப்படுத்தப்பட்டாள்.
* அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கு ஆதிவாசிகளின் அறியாமை இரண்டுக்கும் பாலமாக இருப்பதைப் போன்ற சிறமம் வேறு ஏதும் இருக்க முடியாது.
* விரைவில் சலிப்படையச் செய்யும் சூழலில் உருவாகும் வாய்ப்புகளே அதிகம் என்றாலும் தொடர்ந்து அவர்களுக்காகப் போராடியவர்.
* உண்மையாகவே சமூக சேவை செய்பவர்களுக்கு வாழ்க்கை அத்தனை ஒன்றும் எளிதானதில்லை கல்வி அறிவும் அதிகாரமும் உள்ள செல்வந்தர்களிடம் தான் நாம் போராட வேண்டியிருக்கிறது.
* 1995 முதல் சிந்த்வாடா மாவட்டத்தின் பரூல் கிராமத்தில் இயற்கை விவசாயம், தண்ணீர் பாதுகாப்பு குறித்த தமது அனுபவப் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.