தமிழ் மொழியோடு ஒன்றிணைந்திருந்த மலையாள மொழியானது கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழிலிருந்து பிறந்து ‘மலையாளம்’ என்ற தனித்த மொழி அமைப்பிற்கானத் தகுதியைப் பெறத்தொடங்கியது. இந்நிலையில் மலையாள மொழியில் யாப்பிலக்கணங்களைப் பற்றியதான குறிப்பிடத்தகுந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவைகள் இவ்வாய்வுக் கட்டுரையில் விளக்கிக் கூறப்படுகின்றன.
மலையாளத்தில் யாப்பிலக்கணங்களைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் கேரளக்கௌமுதி, விருத்த மஞ்சரி, விருத்த விசாரம், விருத்த சில்பம், மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘A History of Malayalam Metre’ போன்றவை குறிப்பிடத்தகுந்த நூல்களாக அமைகின்றன. 1904 -ல் சாகித்ய சஹகரன சங்கத்தால் வெளியிடப்பட்ட ஏ. ஆர். இராஜராஜ வர்மாவின் ‘விருத்த மஞ்சரி’ என்ற நூல் மலையாள யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்நூலில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. அதில் ‘பா, விருத்த ப்ரகரணம்’ என்ற எட்டாவது இயலில் மட்டும் கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, கிருஷ்ண காதை மற்றும் இருபத்துநாலு விருத்தம் போன்ற மலையாள விருத்தங்களைப் பற்றிய கருத்துக்களும், பிற அனைத்து இயல்களிலும் சமஸ்கிருத விருத்தங்களைப் பற்றிய கருத்துக்களும் விளக்கப்பட்டிருக்கின்றன. விருத்த மஞ்சரியில் ‘பா‘ விருத்த ப்ரகரணத்தைத்’ தவிர மீதமுள்ள அனைத்து இயல்களும் விருத்த ரத்னாகரம், விருத்த ரத்னாவலி என்ற இரு சமஸ்கிருத யாப்பு நூல்களை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை.
ஏறக்குறையத் தெளிவான முறையில் திரு.ஏ. ஆர். இராஜராஜ வர்மா அவர்கள் சமஸ்கிருதம் மற்றும் மலையாள யாப்புக்களின் விதிமுறைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருப்பினும், இந்நூலில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன என்று பிற்கால ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களில் திரு. குட்டிகிருஷ்ணமாரா, கே. கே. வாத்தியர் மற்றும் என். வி. கிருஷ்ணவார்யார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையாளத்தில் விருத்த மஞ்சரிக்குப் பிறகு உருவான ‘காந்த விருத்தம்’, ‘விருத்தசகாயி’, ‘ஸத்விருத்தமாலா’ போன்ற யாப்பிலக்கண நூல்களெல்லாம் மஞ்சரியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் தொடர்புடையனவாகவே அமைந்திருக்கின்றன என்று என். வி. கிருஷ்ணவார்யார் குறிப்பிட்டுள்ளார். இது மலையாள யாப்பிலக்கணங்களில் இன்றியமையாத நூலாக அமைகிறது. இவ்விருத்த மஞ்சரிக்கு முன்பு புதுப்பள்ளி பி. கெ. பணிக்கரின் ‘விருத்த ரத்னாகரம்’ கொச்சுண்ணி தம்புரானுடைய ‘காந்த விருத்தம்’ போன்ற நூல்கள் இருந்திருக்கின்றன. இவை இரண்டும் சமஸ்கிருத விருத்த சாஸ்திரங்களுடைய தழுவலாகும்.
முதன் முதலில் மலையாள விருத்தங்கள் குறித்த கருத்துக்களைத் தொகுத்து, உதாரணங்களுடன் எடுத்துக் கூறிய பெருமை 1878 -ல் பூர்ணா வெளியீடாக வெளிவந்த வித்துவான் டி. எம். கோவுண்ணி நெடுங்காடியினுடைய ‘கேரளகௌமுதி’ என்ற நூலையேச் சாரும். இந்நூல் விருத்த மஞ்சரியை விட காலத்தால் முந்தியதாக இருப்பினும் மலையாள விருத்தங்களைப் பற்றியதான கருத்துக்கள் போதுமான அளவில் கூறப்படாததால் மலையாள யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் முதன்மையாகக் கொள்ளப் பெறவில்லை. இருப்பினும் “விருத்த மஞ்சரியின் பா‘ விருத்த ப்ரகரணம் என்ற இயலிலுள்ள அனைத்து யாப்புச் செய்திகளும் கேரளகௌமுதியின் வழி வந்தவைகள்தான்” என்று திரு.கே. கே. வாத்தியார் விருத்த விசாரம் என்ற தம் நூலின் முகவுரையில் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது.
இந்நூலிலுள்ள ‘விருத்த லோகம்’ என்ற இயலில் மலையாளம் மற்றும் சமஸ்கிருத விருத்தங்களும், ‘தமிழ் முறைகள்’ என்ற தலைப்பில் தமிழ் யாப்புக்கள் குறித்ததான கருத்துக்களும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வியலில் கூறியிருக்கும் சமஸ்கிருத விருத்தங்கள் ‘விருத்த ரத்னாகரா’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என். வி. கிருஷ்ண வாரியார் கருத்து தெரிவித்திருக்கிறார். கோவுண்ணி அவர்கள் விருத்தங்களை மாத்ரா விருத்தம், வர்ண விருத்தம் என இரண்டு வகையாகப் பிரித்து சீர்களில் (கணங்கள்) ‘லகு’(குறில்), ‘குரு’(நெடில்) என்பவைகளைப் பயன்படுத்தி சில விருத்தங்களை மட்டும் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலும், இந்நூலில் தமிழ் யாப்புக்களின் பாவகைகள், யாப்பியல் உருப்புக்கள், அசை குறித்தக் கருத்துக்கள் மற்றும் ‘அக்‘ரலோகம்’ என்ற தலைப்பில் தமிழ் எழுத்துக்கள் குறித்ததான கருத்துக்களும் அறிமுக நோக்கிலேயே கூறப்பட்டிருக்கின்றன.
பொதுவாக மலையாள இலக்கணத்தைப் பொருத்தளவில் கி.பி. 14-ம் நூற்றாண்டில் வடமொழியில் எழுதப்பட்ட ‘லீலாதிலகம்’ மலையாளத்தின் முதல் இலக்கண நூலாக அமைகிறது. இந்நூல் வடமொழி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிக்கலப்பில் உருவான மணிப்பிரவாள நடையில் அமைந்த பாட்டு இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது. இப்பாடல்கள் எதுகை, மோனை என்ற யாப்பு அமைப்பைக் கொண்டிருப்பதால் தமிழ் யாப்புக்களோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. லீலாதிலகம் கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சார்ந்திருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அதாவது கி.பி. 1909, 10-ல் அப்பன் தம்பிரான் அவர்களால் ‘மங்களோதயம்’ என்ற பத்திரிக்கையில் அதன் முதல் பகுதியானது தொடராக முதன் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே இந்நூலை முழுமையான மலையாள மொழிபெயர்ப்புடன் ஆத்தூர் பிர்ரடி என்பவர் 1917 -ல் வெளியிட்டிருக்கிறார்.
என். வி. கிருஷ்ணவாரியார் 1947 -ல் மெட்ராஸ் பல்கலைக்கழக மலையாளத்துறையில் ‘A Study of Malyalam Metre’ ( மலையாள விருத்தங்கள் ஓர் ஆய்வு ) என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக 1977 -ல் ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘‘A History of Malayalam Metre’ (மலையாள யாப்பு வரலாறு) என்பது மலையாள யாப்புக்களின் வரலாற்றைக் கூறும் ஒரு சிறந்த ஆய்வு நூலாக அமைகிறது. திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல் மலையாள யாப்புக்களின் வரலாற்றை ஆய்வதோடு திராவிட மொழிகளுக்கிடையேயான ஒப்பீட்டாய்வையும், குறிப்பாக சஸ்கிருதம், தமிழ் மொழிகளிலுள்ள யாப்புகளுக்கும், மலையாள யாப்புகளுக்குமிடையே காணப்படும் யாப்புக் கூறுகளை விவரிக்கும் முறையில் ஒப்பாய்வையும் மேற்கொண்டிருக்கிறது. பொதுவாக, மலையாள விருத்தங்கள் தாள சங்கீதங்களை அடிப்படையாகக் கொண்டவைகள் என்றும் குறிப்பிடுகிறார்.
‘விருத்த சில்பம்’ திரு.குட்டிகிருஷ்ணமாராரால் எழுதப்பட்டு 1952 -ல் மாரர் சாஹித்ய ப்ரகாசம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. விருத்த மஞ்சரியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு தொடர்புடைய யாப்பு நூல்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. இந்நூலில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாம் பகுதியில் மூன்று அத்தியாயங்களும் (இயல்கள்) இரண்டாம் பகுதியில் நான்கு அத்தியாயங்களும் உள்ளன. முதல் பகுதியில் சமஸ்கிருத விருத்தங்கள் பற்றிய கருத்துக்களும், இரண்டாம் பகுதியில் மலையாள மொழி யாப்பிலக்கணங்கள் பற்றிய கருத்துக்களும் விளக்கப்பட்டுள்ளன. மாரர் தன்னுடைய நூலிற்கு ‘விருத்த மஞ்சரி பாஸ்யம் (உரை)’ என்று பெயரிட்டுள்ளார். எனவே, இதன் மூலம் விருத்த மஞ்சரியில் கூறப்பட்டிருக்கின்ற யாப்பு குறித்த கருத்துக்களைத் திறனாய்வு நோக்குடனே அணுகியிருக்கிறார். இராஜராஜ வர்மா பா‘ விருத்தம் பற்றி குறிப்பிடாத பல வியங்களையும் மாரர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.கே. கே. வாத்தியார் அவர்கள் 1967 -ல் ‘விருத்த விசாரம்’ என்ற நூலில் மலையாள விருத்தங்களைக் குறித்து, அதாவது விருத்த மஞ்சரி, கேரளகௌமுதி ஆகிய யாப்பிலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன நோக்கில் தம் ஆய்வுக் கருத்துக்களை விளக்கியிருக்கிறார். இந்நூல் பற்றியதான கருத்துக்கள் நூல் அறிமுகத்தில் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
ச. வு. பாஸ்கரன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட (1973) Krala Historical Study) ‘Malayalam Poetics’ (மலையாளக் கவிதைகள்) என்ற நூலில் மலையாளக் கவிதைகளையும், குறிப்பாக கிருஷ்ண காதையை முக்கியப்படுத்தியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இந்நூலின் முதல் பகுதியில் மலையாளக் கவிதைகளும் மற்றும் அற்றின் கொள்கைகளும் கூறப்பட்டிருப்பதோடு மலையாளக் கவிதையியலில் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகளைக் குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதியில் கிருஷ்ணகாதையைக் குறித்ததான கருத்துக்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அறிஞர் கால்டுவெல் திராவிட மொழி இலக்கணங்களுக்கிடையேயான ஒப்பீட்டாய்விற்கு முதன்முதலில் வித்திட்டவராவார். இந்த வகையில் திராவிடமொழி யாப்பிலக்கணங்களுக்கிடையேயான ஒப்பீட்டாய்வை மேற்கொண்டதில் பேரா. எஸ். சுப்பிரமணியன் மற்றும் பேரா. அப்பன் தம்புரான் போன்றோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1977 -ல் பேரா. எஸ். சுப்பிரமணியன் அவர்கள் “The Commess in the Metre of the Dravidian Languages” என்ற தம் ஆங்கில நூலில் திராவிட மொழிகளுக்கிடையேயான யாப்பியல் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டிருப்பது சிறப்பிற்குரியதும், குறிப்பிடத்தகுந்ததுமாகும். எனவே, தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கிடையேயான யாப்பில் ஒப்பீட்டளவில் முதல் நூல் எனக் கருதலாம்.