கோவுண்ணி கூறும் தமிழ் யாப்பியல்
சிவா வெங்கடேஷ். ல
மலையாள மொழி இலக்கண நூல்களில் ஒன்றான ‘கேரளக் கௌமுதி’ வித்துவான் டி. எம். கோவுண்ணி நெடுங்காடி (1831-1889) அவர்களால் எழுதப்பட்டு, பூர்ணா பதிப்பகத்தாரால் (கோழிக்கோடு) 1878-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலில் பதினாறு இயல்கள் காணப்படுகின்றன. அதில் ‘விருத்தலோகம்’ என்பது பதிமூன்றாவது இயலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வியலில் சமஸ்கிருதம் மற்றும் மலையாள விருத்தங்களும், ‘தமிழ்முறகள்’ என்ற தலைப்பில் தமிழ் யாப்புக்கள் குறித்ததான சில சுருக்கமான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மலையாள இலக்கண நூலில் தமிழ் யாப்பியல் கருத்தமைவிற்கான காரணங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் கண்டறிந்து கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
இந்நூலில் பாவகைகளையும் மற்றும் அசை, சீர், அடி இது போன்ற தமிழ் யாப்பியல் உறுப்புக்களையும் குறித்ததான கருத்துக்கள் ஒரு சில சூத்திரங்கள் மூலம் கூறப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு விளக்கிக் கூறப்படுகிறது.
பாவகை குறித்த கருத்துக்கள்
289-வது சூத்திரத்தில் தமிழ் யாப்புக்களின் பாவகைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இதன் உரை விளக்கத்தில், “தமிழ் கவிதை இலக்கணத்தின்படி நான்கு துறை காணப்படுகிறது.
உ-ம் வெம்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா.
இவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஏராளமான விருத்தங்கள் உண்டு. இருபத்தியாறு சந்தஸ்களுக்கு ஒரு விதத்தில் இவை ஒத்துப் போகின்றன.” என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறர். ஆனால் அவை எவ்விதத்தில் ஒத்துப்போகின்றன என்பதற்கான சான்றுகள் தரப்படவில்லை. வேதங்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள இருபத்தாறு சந்தஸ்களும் மாத்ராக்ரமம் (மாத்திரை அடிப்படையில்), வர்ணக்ரமம் (எழுத்துக்களின் அடிப்படையில்), மாத்ராவர்ணக்ரமம் (மாத்திரை, எழுத்து அடிப்படையில்) என மூன்று விதங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், இந்நூல் 274-ம் சூத்திரத்தில் கூறியிருக்கிறது. இங்கு “சந்தஸ்” என்பது வடமொழி யாப்புக்களைக் குறிப்பதாகும். மேலும் “சந்தஸ்” என்பதற்கு வடமொழியில் பல அர்த்தங்கள் இருப்பதாக முனைவர். ம. பிரபாகரன் அவர்கள் “வீரசோழிய யாப்பு” (பக். 64) என்னும் தம் நூலில் “வடமொழி யாப்பியல்” பகுதியில் விரிவாகக் கூறியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
யாப்பியல் உறுப்புக்கள் குறித்த கருத்துக்கள்
தமிழில் எழுத்து முதல் தொடை ஈறாக உள்ள ஆறு யாப்பியல் உறுப்புக்களை 290-வது சூத்திரத்திலும், அவை ஒவ்வொன்றிற்கும் நிகரான, மலையாளத்தில் பயன்பாட்டிலுள்ள யாப்புக் கலைச்சொற்களை 291-வது சூத்திரத்திலும் கூறியிருக்கிறார். அவை பின்வருமாறு,
தமிழ் |
மலையாளம் |
எழுத்து |
வர்ணம் |
அசை |
மாத்ர (மாத்திரை) |
சீர் |
கணம் |
தளை |
யதி |
அடி |
பாதம் |
தொடை |
----- |
இச்சூத்திரத்திற்கான உரை விளக்கத்தில் ‘வர்ணம்’ முதல் ‘பாதம்’ வரையிலான சொற்கள் அனைத்தும், மலையாள மொழி யாப்புக்களின் கலைச் சொற்களென்றோ, வடமொழி யாப்புக்களின் கலைச் சொற்களென்றோ வெளிப்படையான குறிப்புகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் வடமொழிச் சொற்களாகும். எனவே, மலையாள யாப்பிலக்கணப் பயன்பாட்டிலுள்ள இச்சொற்களை மலையாள மொழி யாப்பிலக்கணக் கலைச்சொற்களாகக் கருதவியலாது.
சமஸ்கிருத விருத்தங்களில் ‘யதி’ (Metrical Pause) என்பது முக்கியமானது. வர்ண விருத்தத்தின் தனிச்சிறப்பாக ஒரு அடியின் நடுவில் (In the Middle of Line) ‘யதி’ என்கிற அமைப்பு காணப்படுகிறது. அதாவது ஒரு அடியின் நடுவில் நிறுத்திச் சொல்லுதலால் இதனைத் தமிழில் ‘நிறுத்தம்’ (Pause) என பொருள் கொள்ளலாம். இது செய்யுளை ‘நினைவுபடுத்தி ஒப்பித்தல்’(Recitation) என்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வேத சரணங்களில் (Vedic Stanzas) த்ரிஸ்துப் (Tristubh), மற்றும் ஜகதி (Jagati) வாரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் ‘அசை’ (Matrical Syllable) என்பது எழுத்துக்கள் சேர்ந்து வருவதும், ‘மாத்திரை’(Quantity) என்பது அவ்வெழுத்துக்களின் அளவைக் குறிப்பதாகவுமாகிறது. இந்நிலையில் அசையும், மாத்திரையும் வெவ்வேறு பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் ‘அசை’ என்றால் ‘மாத்திரை’ என்று மட்டுமே பொருள் கொள்ளும் விதத்தில் கேரள கௌமுதியில் குறிப்பிட்டிருப்பது மறுக்கப்படுவதும், ஆய்விற்குரியதாகவும் அமைகிறது. இதனையே ஏ. ஆர். இராஜராஜ வர்மா ‘விருத்த மஞ்சரி (பக்-76) என்னும் தம் நூலில் சமஸ்கிருதத்திலுள்ள ‘மாத்திரை’ என்ற சொல் தமிழில் ‘அசை’ என பொருள் கொள்ளப்படினும் இவை இரண்டும் வெவ்வேறு பொருட்தன்மைகளைக் கொண்டவை என்று கூறியுள்ளார்.
அடி குறித்ததான சூத்திரத்தில் (சூத் -293) அடிவகைகளைக் கூறிவிட்டு, “அவைகளுக்கு இங்கு உதாரணம் கொடுப்பது பயனற்றது” என்றும் நூலாசிரியர் தன் உரை விளக்கத்தில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
‘தொடை’ என்ற சொல்லிற்கு நிகரான சொல்லைக் குறிப்பிடாமல் “ஈரடி முதல் மேலெல்லாம்” என்று மட்டுமே உரை விளக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அசை குறித்த கருத்துக்கள்
292-வது சூத்திரத்தில் நேர், நிரை என இருவகை அசைகளைக் குறிப்பிட்டு, நேரசையை ‘லகு’ என்றும் நிரையசையை ‘குரு’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவை இரண்டும் சமஸ்கிருத சொற்களாகும். மேலும், மலையாளத்தில் ‘லகு’ என்றால் ‘குறில்’ என்றும் ‘குரு’ என்றால் ‘நெடில்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
கோவுண்ணி கருத்துக்கள் ஏற்பும், மறுப்பும்
“மலையாளத்திலுள்ள சில விருத்தங்கள் தமிழ் யாப்புக்களோடு ஒத்துப் போகின்றன” என்ற இந்நூலாசிரியரின் கருத்திற்கு மலையாள அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் உடன்படவும் செய்திருக்கின்றனர் அவை பின்வருமாறு,
மலையாளத்தில் துஞ்சனின் ‘கிளிப்பாட்டுக்கள்’ தமிழில் ஈரடிப்பாடல்களான குறளடியோடும், இருபத்தி நான்கு விருத்தங்களில் சில விருத்தங்கள் கலிப்பாக்களோடும் ஒரு விதத்தில் ஒத்துப்போகின்றன என்று கூறுவதோடு மட்டுமின்றி, அதற்கான உதாரணப் பாடல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். பைங்கிளிக் கண்ணியில் ‘அகமேவு……’, பராபரக்கண்ணியில் ‘சீராறு தைவதிருவருளாம்’, கலிப்பாவில் ‘பொன்னமாதர’ என தொடங்கும் பாடல்கள் உதாரணமாகச் சுட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாகச் சுட்டிய கலிப்பாடலானது இருபத்தி நான்கு விருத்தங்களில் ஒன்றான ‘சூர்யே வம்சே’ என்ற விருத்தத்திற்குப் பொருத்தமானது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.கே. கே. வாத்தியார் ‘விருத்த விஜாரம்’ (பக்-22) எனும் தம் நூலில் “மலையாளம் மற்றும் தமிழ்மொழி யாப்புகளுக்கிடையே குறிப்பிடும்படியான ஒற்றுமைக் கூறுகள் ஒன்றுமில்லை” என கோவுண்ணியின் கருத்திற்கு மறுப்பு தெரிவிப்பது மட்டுமின்றி முனைவர். எஸ். கே. நாயர் “தெலுங்கினுடனோ, கன்னடத்துடனோ, மற்றும் தமிழினுடனோ மலையாளத்தை ஒப்பீடு செய்வோமேயானால் யாப்பிலக்கணத்தைப் பொருத்தளவில் குறிப்பிடத்தகுந்த ஒற்றுமைகள் ஒன்றுமில்லை” என ‘பாஷா விருத்தமஞ்சரி’ (ஜயகேரளம் ஆண்டு பதிப்பு) என்ற நூலின் முன்னுரையில் கூறியிருக்கும் கருத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும். எனவே, முனைவர். ச. எஸ். கே. நாயர் அவர்கள் யாப்பிலக்கணத்தைப் பொருத்தளவில் இவைகளுக்கிடையே குறிப்பிடத்தகுந்த ஒற்றுமைகள் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டிருப்பது மறுக்கத்தக்கதாகும். மேலும், ஏ. ஆர். இராஜராஜ வர்மா, குட்டிக்கிருஷ்ண மாரார், ஆர். நாராயண பணிக்கர், உள்ளுர் பரமேஷ்வர ஐயர், இளங்குலம், மற்றும் என். வி. கிருஷ்ணவாரியார் போன்றோர்கள் தமிழ், மலையாள மொழிகளுக்கிடையே ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்று கூறியிருக்கும் கருத்துக்களைப் பேராசிரியர் எஸ். சுப்பிரமணியன் அவர்கள் ‘The Commenness in the Metre of the Dravian Languages’ (பக்-398) என்ற தம் ஆங்கில நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
முடிவுரை
கேரள கௌமுதியில் கூறப்பட்டிருக்கின்ற தமிழ் யாப்பு குறித்த கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது கோவுண்ணி அவர்கள் போதுமான அளவில் தமிழ் யாப்பிலக்கணத்தைப் பற்றிய செய்திகளைத் தம் நூலில் முழுமையாகக் குறிப்பிடவில்லை. என். வி. கிருஷ்ண வாரியார், கே. கே. வாத்தியார் போன்றோர் கோவுண்ணியின் தமிழ் யாப்பு பற்றியதான தவறான புரிதலைத் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளன. எனவே, கோவுண்ணி அவர்கள் தமிழ் யாப்புச் செய்திகளை மேற்குறிப்பிட்ட சூத்திரங்களின் வழி சுருக்கமாகக் கூறியிருப்பது ஒரு அறிமுக நோக்கத்திற்காக மட்டுமே என்பது தெளிவாகிறது.
பயன்பட்ட நூல்கள் (Reference Books)
1. Kounni nedunkadi - Keralakoumuthi (1977) Published- DLA, Trivandrum
2. A. R. Rajaraja Varma - Viruthamanjari (1904)
3. K. K. Vathyar - Vrithavicharam (1967)
4. N. V. Krishna Warriar - A History of Malayalam Metre (1977) DLA, Trivandrum
5. S. Subramanyan - The Commenness in the Metre of the Dravian Languages (1977) DLA, Trivandrum
6. Dr. M. Prabhakaran - Veeracholiya yappu- 2014, Published Kaaviya.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|