விஷ்ணுசித்தர்
முனைவர் நா. கவிதா
இறைவனை இடையறாது நினைப்பதும், அவனை உண்மையாக, இயல்பாகத் தேடுவதும் ‘பக்திமை நெறி’ ஆகும். அத்தகைய பக்திமை நெறியால் தமிழில் பக்தி இலக்கியத்தை முறைப்படி வளர்த்தவர்கள் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். இறைவனிடம் தீவிர அன்பு கொண்டு, அதனால் அழிவற்ற முக்தியைப் பெற்றவர்கள் இவர்கள். ‘எங்கும் நிறைந்தவர்’, ‘எல்லா உயிர்களையும் காப்பவர்’ எனப் பொருள்படும் ‘விஷ்ணுவை’ முழு முதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் பன்னிரு ஆழ்வார்களும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இயற்றிய பாசுரங்கள் யாவும் எளிய தமிழ் வேதமாகத் திகழ்வது மறுக்க இயலா உண்மையே. அவ்வகையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றினை, அவர்தம் பாசுர உள்ளடக்கச் சிறப்பினை எடுத்துரைப்பதாக இவ்வியல் அமைந்துள்ளது.
விஷ்ணுசித்தர் தோன்றிய தல வரலாறு
பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய ஆழ்வார் பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசத்தில் ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவர் எழுந்தருளிய தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் தோன்றி வரலாற்றுச் சிறப்புகளே இவ்விடத்தில் நவிலப்பட உள்ளன. வடவேங்கடம் முதல் குமரி வரையிலும் எல்லையாகக் கொண்ட திராவிட நாட்டில் பாண்டிய நாடு தொன்று தொட்டு சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாட்டுக் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த வேடர்குலத் தலைவனுக்கும் அவன் மனைவி மல்லிக்கும் மகவாகத் தோன்றியவர்கள் வில்லி மற்றும் கண்டன் எனும் இரு புதல்வர்கள் ஆவர்.
சகோதரர்கள் இருவரும் வேட்டையாட காட்டிற்குள் சென்ற பொழுது கண்டனை புலி ஒன்று கொன்றது. இதை அறியாத வில்லி காடு முழுவதும் தனது சகோதரனைக் காணாது துன்பம் மிக அடைந்து, அதீத களைப்பின் மிகுதியால் மரத்தின் அடியில் நித்திரையில் மூழ்கினான். அச்சமயம் திருமகள் கேள்வன் திருமால் வில்லி கனவில் தோன்றி கண்டனின் நிலைமையை நவின்றதோடு தான் பள்ளி கொண்டுள்ள இடத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். முன்னொரு காலத்தில் காலநேமி என்ற அசுரனை அழிக்கும் பொருட்டு எழுந்தருளிய யாம் அரசமரத்தின் அடியில் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் சயனக் கோலத்தில் இருப்பதாகவும் அத்துடன் அக்காட்டை அழித்து நாடாக்கித் தமக்கு அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டு வருமாறு கனவில் கூறினார்.
அவ்வண்ணமே வில்லி வடபெருங்கோயிலுடையானைக் கண்டெடுத்து பெருங்கோயில் ஒன்றினை எழுப்பி அழகிய நகரினையும் உருவாக்கினார். புதிதாக உருவாக்கம் பெற்றமையால் அந்நகருக்கு புத்தூர் என்று பெயரிடப்பட்டது. வில்லியால் தோற்றுவிக்கப்பட்ட நகரமாதலால் வில்லிபுத்தூர் என்றும் வழங்கப்படலாயிற்று. இவ்வாறு தோற்றம் பெற்ற திருத்தலத்திலே நமது பெரியாழ்வார் அவதரித்தார்.
பெரியாழ்வாரின் அவதாரம்
வில்லிபுத்தூரில் வேயர் என்ற வகுப்பினைச் சார்ந்த முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில் தோன்றிய முகுந்த பட்டருக்கும் பத்மவல்லிக்கும் ஐந்தாவது மகவாக அவதரித்தவர் பெரியாழ்வார் ஆவார். குரோதன வருடத்தில் ஆனி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி திதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானிடம் மிகுந்த பக்திமை கொண்டிருந்தார்.
பெற்றோர் வழங்கிய பெயர் விட்டுசித்தர் ஆகும். இவருக்கு வழங்கப்பட்ட வேறு பெயர்கள் பெரியாழ்வார், பட்டர்பிரான், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோன் கிழியறுத்தான், புதுவைக்கோன் போன்றவையாகும். தக்க வயதில் பெரியாழ்வாருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கியதுடன், அந்தணச் சிறுவனுக்குரிய உபநயனமும் குடுமி வைத்தலும் வேதப் பயிற்சியும் சிறப்புடன் நடைபெற்றன. அக்காலத்தில் குடும்பத்துடன் திருமாலுக்கு அநேக கைங்காயங்களைச் செய்தவரே பெரியாழ்வார்.
பூமாலையோடு பாமாலையும் சூடியவர்
பக்தபிரகலாதனைப் போன்று குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ணபக்தியில் சிறந்து விளங்கிய விஷ்ணுசித்தர் பரமனுக்கு அடிமை செய்வதில் மிக்க மகிழ்ச்சியான நிகழ்வு எது என்று ஆராய்ந்து உணர்ந்தார்.
முன்னொரு காலத்தில் கண்ணன் கம்சனை வதம் செயும் பொருட்டு, தன் தமையன் பலராமனுடன் மதுராபுரிக்கு எழுந்தருளினார். அப்பொழுது கம்சனுக்கு மாலை கட்டும் மாலாகாரனின் இல்லத்துக்குச் சென்று தனக்கும் ஒரு மாலை வேண்டும் என்று இரந்து நின்றார். பல யோகிகளும், மகான்களும் உன் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்க நீயோ அடியேன் இல்லத்திற்கே வந்து அருள் புரிகிறாய். நான் உனக்கு என்ன விதத்தில் கைம்மாறு செய்வேன் என்று நெக்குருகி அழகிய மாலையை கண்ணனுக்கு வழங்கினார்.
இத்தகைய லீலையில் மயங்கிய பெரியாழ்வார், நீர் பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, பலவகை மலர்செடிகளைப் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளாகக் கட்டி வில்லிபுத்தூர் பதியில் உள்ள வடபெருங்கோயிலில் எழுந்தருளிய பள்ளி கொண்டபிரானுக்குச் சூடி வழிபட்டு வரலாயினார். நந்தவனத்திலே பூத்துள்ள மலர்களின் நறுமணத்தை தான் முகர்ந்து விடாமல் இருக்க சிறிய ஆடையொன்றை மூக்கைச் சுற்றிக் கட்டிக் கொண்டு தூய்மையான கரங்களால் அம்மலர்களைக் கொய்து மாலை கட்டி மாலவனுக்குச் சூடுவார். இத்தகைய அன்றாட நிகழ்வுகளில் மூழ்கி திருமாலுக்கு அன்பு செலுத்திய பெரியாழ்வார் வாழ்வில் பூமாலையோடு பாமாலையும் சூடும் படியான ஒரு நிகழ்வினை திருமால் பாண்டிய நாட்டில் அரங்கேற்றினார்.
பாண்டியனின் பேரவைக் கூட்டம்
கயல் சின்னம் பொறித்த பாண்டியர் குலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்ற அரசன் தென்மதுரையில் ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு மன்னன் மாறுவேடத்துடன் நகரச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது திண்ணையில் ஓர் அந்தணனைக் கண்டு நீங்கள் யார்? என்று வினவினார். அதற்கு அந்தணன் வடதேசதிவ்ய தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று விட்டு ராகு, கேது தரிசனத்திற்காகச் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அத்துடன் மன்னனை நோக்கி ஒரு சுலோகம் ஒன்றினை எடுத்துரைத்தார்.
* மழைக்காலத்திற்கு வேண்டிய பொருளை மற்ற எட்டு மாதங்களில் சேகரிக்க வேண்டும். (வர்ஷார்த்தம் அஷ்டௌப்ரயதேத மாஸான்)
* இரவுக்கு வேண்டியவற்றை பகலிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். ( நிஷார்த்தம் அர்த்தம் திவஸம் யதேத)
* முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேட வேண்டும். (வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந)
* மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலேயே தேடிக் கொள்ள வேண்டும். (பரத்ர ஹேதோரிஹ ஜன்ம நாச)
மேற்கூறிய சுலோகத்தினைக் கேட்டவுடன் மன்னன் மனதில் மாபெரும் வருத்தம் ஒன்று தோன்றிற்று. தமது மறுமையாகிய பரலோக சுகானுபவத்திற்கு இதுவரையிலும் ஒன்றும் செய்யாமலேயே காலம் கழித்து விட்டோமோ என்று மனம் கலங்கினான். அத்துடன் வல்லபதேவன் தனது மன வருத்தத்தைத் தன் புரோகிதர் செல்வ நம்பிகள் என்பவரிடம் கூறினார்.
மறுமையில் பேரின்பம் அடைய வழி என்ன? என்பதை நாடு முழுவதும் உள்ள வித்வான்களைத் திரட்டி வேத விளக்கத்துடன் பரம்பொருளைப் பற்றி எடுத்துரைக்கச் சொல்வோம் என்று செல்வநம்பிகள் அருமையான வழிகாட்டினார். உடனே வல்லபதேவனும் மனம் மகிழ்ந்து பெரும் தனத்தை ஒரு துணியிலே கட்டி அப்பொற்கிழியைச் சபை மண்டபத்தின் நடுவெ ஒரு கம்பத்தில் கட்டி வைக்குமாறு கூறினார். மறுமைக்கான வழியினைக் காட்டும் வித்வான்களுக்கே இப்பொற்கிழி என்று பறைஅறைந்து கூறுமாறும் ஆணையிட்டார்.
விஷ்ணுசித்தரின் கனவில் வடபெருங்கோயிலுடையான் “உன் மூலம் உண்மைப்பொருளை உலகுக்கு உணர்த்த எண்ணம் கொண்டோம். ஆக நீர் சென்று பொற்கிழியை அறுத்துக் கொண்டு வருவீராக” என்றுரைத்தார். சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்ய வேண்டிய செயலை என்னால் எவ்வாறு செய்ய இயலும் என்று மனம் வருந்தி நின்றார். அதற்குப் பெருமாள் “உன்னுள் நான் அல்லவா பரத்தத்துவ நிர்ணயம் செய்யப்போகின்றேன். உமக்கு என்ன கவலை? செல்வீராக”என்று கூறி மறைந்தார்.
பாண்டியன் அவைக்குச் சென்ற விஷ்ணுசித்தரைக் கண்டு வேத சாத்திரங்களைக் கற்ற பண்டிதர்கள் எல்லாம் “இப்பெரியோர் கூட்டத்திற்கு இவரா அறிவுரை கூறுவது?” என்று மறுப்பு தெரிவித்தனர். ஆயனும் மிகச் சிறப்பாக விஷ்ணுசித்தர் பரம்பொருள் தத்துவத்தை தெளிவுடன் நவின்றார்.
வேதவிழுப்பொருளை நவில்தல்
விஷ்ணுசித்தர் திருமால் அருளால் மடை திறந்த வெள்ளம் போல வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை பின்வருமாறு உரைக்கலானார்.
* எவரிடத்திலே அனைத்துப் பொருளும் உருவாகின்றனவோ, எவரால் யாவும் நிலைபெற்றிருக்கின்றனவோ, எவரிடத்தில் இவையாவும் ஒன்றுடன் ஒன்றாக கலக்கின்றனவோ அவரே பரபிரம்மம்.
* வாக்கிலும், மனத்திலும், துதிக்கவும், அறியவும், அருமையாக எது இருக்குமோ அந்த பரபிரம்மத்தை அறிந்தவர்கள் எமனைக் கண்டும் அஞ்சார்.
* பரன் எனப்படும் விஷ்ணு சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுவனாக இருக்கின்றான்.
* ஓம்கார வடிவின்னான அந்த விஷ்ணு ஒருவனே ஆவான். வேத மொழிகளுக்கும் நாயகன் அவனே ஆவான்.
* ஜீவன்கள் அந்த ஓம்கார நாமத்தை உச்சரித்த உடனே மாபெரும் பலன் அடைகிறார்கள்.
* ஓம்காரத்தில் உள்ள முதல் ஸ்வரமான அகாரம் நமது பரமனையே குறிப்பிடுகின்றது.
* அந்த நாராயணன் ஒருவனே நமது பாவங்கள் யாவற்றையும் களைபவன் ஆவான்.
ஸ்ரீமன் நாராயணனே மேலான தெய்வம், அவனை சரண் அடைவதே சிறந்த மார்க்கம் என்று கூறினார். விஷ்ணுசித்தரின் மொழிகளைக் கேட்ட வித்துவான்கள் வாயடைத்துத் தலை கவிழ்ந்தனர். கிழி அறுத்து மாபெறும் புகழ் பெற்றார் விஷ்ணுசித்தர்.
“பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தாஎனன்று
ஈண்டிய சங்ம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று” (பாண்டிய பட்டர்)
என்ற பாடல் வரிகள் பெரியாழ்வார் பற்றிய புகழ் மொழிகளை பாண்டிய பட்டர் செல்வநம்பிகள் எடுத்துரைக்கும் பாங்கினைக் கூறிச் செல்கின்றன.
பட்டர்பிரானின் பல்லாண்டு பாமாலை
வேதங்கள் ஓத “பாண்டிய மாநகரிலே கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்” எனும் நாம வாழ்த்தொலிகள் முழங்க விஷ்ணுசித்தர் வீதி உலா வந்த விழா நடைபெற்றது. அச்சமயத்திலே திருமால் தேவர்களுடன் புடை சூழ கருட வாகனத்தில் பட்டர்பிரானுக்கும், அரசனுக்கும் காட்சி அளித்தார்.
முதலும் ஈறும் இல்லாத பரம் பொருள், அமரர்கள் அதிபதியும், பரமபதத்தில் சித்தரும், முத்தரும் வணங்க விளங்கும் பரம்பொருள் பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விஷ்ணுசித்தர் அவர் தம் எழிலுக்கு கண்பட்டுவிடுமோ என்று கவலையுற்று, தாய் அஞ்சுவது போன்று அஞ்சினார். உடனே தாம் அமர்ந்து இருந்த யானையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளையே தாளமாக்கிக் கொண்டு பல்லாண்டு எனும் பின்வரும் பாமாலையை பாடத்தொடங்கினார்.
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணாவும்
சேவடி செவ்வித் திருக்காப்பு” (நாலாயிர திவ்ய பிரபந்தம்-1)
நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடலாக இடம் பெற்றுள்ள இப்பாடலில் விஷ்ணுசித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் “பெரியாழ்வார்” என்று வைணவப் பெரியோர்கள் அழைக்கலாயினர்.
மாமுனிகளின் புகழ் மொழிகள்
மாமுனிகள் தனது “உபதேசரத்தினமாலையில்” உள்ள ஐந்து பாசுரங்களில் தொடர்ந்து பெரியாழ்வார் பெருமையைச் சிறப்புடன் எடுத்துரைக்கின்றார்.
* பதினாறாம் பாசுரம் - திருப்பல்லாண்டு பாடி நம் அனைவருக்கும் நலம் விளைவித்த பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் அவதரித்த ஆனியில் சுவாதியை வாழ்த்துவோம்.
* பதினேழாம் பாசுரம் - பெரியாழ்வார் அவதரித்த திருநாளைப் புகழும் ஞாநியர்க்கு ஒப்பார் எவருமிலர்.
* பதினெட்டாம் பாசுரம் - ஆழ்வார்கள் பிறரைக்காட்டிலும் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும் பேரன்பில் மிஞ்சியவர் ஆதலின் அவரே ஆழ்வார்களில் பெரியாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.
* பத்தொன்பதாம் பாசுரம் - நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரத்தில் பெரியாழ்வார் இயற்றிய “திருப்பல்லாண்டே” வேதத்திற்கு ப்ரணவம் போன்றதாகும். (காரணம் -திருமாலை அடைய கர்ம, ஞான, பக்தி போன்ற வழிகளைக் காட்டிலும் எம்பெருமானின் திவ்ய மங்கள சிலைக்கு மங்களாசாசனம் செய்வதே ஏற்புடையதாகும்)
* இருபதாம் பாசுரம் - திருப்பல்லாண்டு போன்றதொரு பிரபந்தமொழியும் இல்லை,பெரியாழ்வார் போன்று ஓர் ஆழ்வாரும் இல்லை என்று புகழ் பாடுகின்றார்.
இதனை,
“உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்?- தண் தமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே! நீ உணர்ந்து பார்”
என்ற வரிகளில் அறியலாம். இவை எல்லாவற்றினும் மேலாகத் தம் திருமகளான ஆண்டாளை எம்பெருமானுக்கு இல்லக்கிழத்தியாகத் தந்து மாமனாரான தனிப்பெருமையும் இவ் ஆழ்வார் ஒருவருக்கே உண்டு. இறைவனது சக்தியும், தமது அசக்தியும் கருதாமல் பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு அளவற்ற பெருமையுடையதாகும்.
பெரியாழ்வார் தோன்றிய காலம்
பெரியாழ்வார் சீமாறன் சீவல்லபன் காலத்தைச் சேர்ந்தவர் என்று வரலாற்று அறிஞர்கள் நிறுவுவர். ஆக இவர் தம் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கூறலாம். குரு பரம்பரை நூல்கள் பெரியாழ்வார் எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர் என்று கூறுவதால் இவர் கி.பி.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்நதவராக் கொள்ளலாம்.
பிரபந்தச் சாரம் சுட்டும் பெரியாழ்வாரின் சரிதச் சிறப்பு
பெரியாழ்வார் எப்பொழுதும் தனது சித்தத்தில் விஷ்ணுவை வழிபட்டு வந்தமையால் விஷ்ணுசித்தர் என்ற பெயர் இவருக்கு அமைந்தது என்றும் கூறுவர்.
“பேரணிந்த வில்லிபுத்தூ ரானி தன்னிற்
பெருஞ்சோதி தனிற்றோன்றும் பெருமா னேமுன்
சீரணிந்த பாண்டியன்றன் னெஞ்சு தன்னிற்
றியக்கற்மால் பரத்தவத்தைத் தறமாச்செப்பி
வாரணமேன் மதுரைவலம் வரவேவானின்
மால்கருட வாகன்னாய்த் தோன்ற வாழ்த்து
மேரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
றெழுபத்தொன்றிரண்டுமெனக் குதவு நீயே!”
என்ற பாடல் வரிகள் பெரியாழ்வாரின் வாழ்க்கை வரலாறாக எடுத்துரைத்த இவ்வியலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் யாவற்றையும் இயம்புவதாகத் திகழ்கின்றது. திருப்பல்லாண்டு (12-பாசுரங்கள்), பெரியாழ்வார் திருமொழி (461-பாசுரங்கள்) எனும் இரண்டும் பெரியாழ்வார் இயற்றிய பிரபந்தங்களாகும். இவ்வாறு பிரபந்தச் சாரம் இவர் தம் வாழ்க்கை வரலாற்றுடன் இயற்றிய நூல்களின் சிறப்பினையும் கூறிச் செல்கின்றது.
நவீன ஆராய்ச்சியின் முறைப்படி உணர்ச்சியும், பக்தியும் கலந்த மேற்கூறிய பெரியாழ்வார் கதைகளை சரித்திரச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில் கட்டாயமாகத் தயக்கம் ஏற்படும். ஆகவே தான் பெரியாழ்வார் பாடல்களிலேயே காணக் கிடைக்கும் அகச் சான்றுகளிலிருந்தும் மற்ற பக்தி சாராத இலக்கண, இலக்கிய நூல்களின் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் பெரியாழ்வார் காலத்தை ஓரளவுக்கு நம்மால் யூகிக்க இயலும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.