பாட்டி கதைகளும் கோட்பாடுகளும்
ப்ராய்டின் நண்பர் சி.ஜி.யுங் என்பவர் ஆழ்படிமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். உலகத்தில் உள்ள அத்தனை பேரும் அவர்களின் பாட்டி சொன்ன கதைகளையே திருப்பிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே இதன் அடிப்படை. அவ்விஷயம் யுங்குக்கு அவரது பாட்டியால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. எல்லாக் கதைகளையும் சுருக்கிச் சுருக்கிப் பாட்டிக் கதைகளாக ஆக்க முடியும், எல்லாப் பாட்டி கதைகளையும் பாட்டிகளாக ஆக்க முடியும், எல்லாப் பாட்டிகளையும் ஒரே பாட்டியாக ஆக்க முடியும். அந்தப் பாட்டியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவர் நிறுவினார். அந்தப் பாட்டி முன்னரே செத்துப் போய்விட்டாள் என்பதனால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இலக்கியத்தை அதன்பாட்டுக்கு விட்டுவிடலாம் என்பதே அவரது நம்பிக்கை. ப்ராய்ட் யுங் இருவரும் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்கள். ப்ராய்ட் எழுதிய நூல்கள் தெளிவாக புரியக் கூடியவை. யுங் எழுதிய நூல்கள் வாசித்த பின் ப்ராய்ட் புரியாமலாகிவிடுவார் என்பதனால் அவர்கள் இருவரையும் சேர்த்தே வாசிப்பது கல்வித்துறை மரபு.
அறநெறி அணுகுமுறை
மனித சமுதாயத்தின் மரபு வழிப்பட்ட அறவியல் கோட்பாடுகளை - நீதிநெறிகளை மையமாகக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை அணுகுவது அறிவியல் திறனாய்வாகும். (Moral / Ethical Approach) இலக்கியங்களில் காணப்படுகின்ற அறவியல் நெறிகளைத் தொகுப்பது இதன் நோக்கமல்ல. அறவியலின் அடிப்படையில் இலக்கியங்களை மதிப்பிடுவதும், குறிப்பிட்ட இலக்கியங்களை அறவியல் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்று காண்பதும் இலக்கியங்களிலுள்ள அறவியல் நெறியில் பண்புகளையும் ஆற்றல்களையும் காண்பதும் இவ்வணுகுமுறையின் நோக்கமாகும்.
இது, ஒருவகையில் சமுதாயவியல் திறனாய்வின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதற்கு உரியது. குறிப்பிட்ட ஒரு சமுதாயம் அல்லது ஒரு சமுதாயப் பிரிவு ஒரு குறிப்பிட்ட ஒழுக்க முறையினை அல்லது கருத்தமைவினைத் தனக்கு ஏற்புடையதென்று பலகாலமாக அங்கீகரித்திருக்கின்ற ஒன்றனைச் சமுதாய மதிப்பு என்று சொல்கிறோம். அறவியலும் இத்தகையதுதான்.
அறவியல் - விளக்கம்
நல்லது - கெட்டது; தீங்கற்றது - தீங்கானது; ஏற்புடையது - ஏற்புடையதல்லாதது என்ற முறையில் மனிதாபிமான உணர்வும், பிறர்க்குக் கேடற்ற நடத்தையும், சமுதாய நல்லுணர்வோடு தனிப்பட்ட மனிதனின் மனநலனும் கூடி வருகின்ற ஒரு விழுமியத்தைத் தான் (value) அறவியல் என்பது குறிப்பிடுகின்றது. இது காலந்தோறும் மாறுபடக்கூடும். சமுதாய அமைப்புக்கேற்ப மாறுபடக்கூடும். மேலும், இத்தகைய கருத்தமைவு சமுதாய அமைப்போடு சார்ந்திருப்பதாகலின், சமுதாயவியல் நெறியோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
இலக்கியமும் அறவியலும்
இலக்கியவுலகில் அறநெறிக் கோட்பாடு மிகவும் பழமையானது. அறவியல் அணுகுமுறையாளர்கள் இவ்வாறு உரிமை கொண்டாடுவார்கள். இலக்கியத்தில் ஊடும் பாவுமாக அறவியல் கோட்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது என்று அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். தமிழில் இந்தப் பார்வை புதிதல்ல. இலக்கியத்தில் மட்டுமன்றி, இலக்கியத்திற்கென்று எழுந்த உரைகளிலும் கொள்கைகளிலும் இத்தகையதொரு பார்வை உண்டு.
நிலப் பகுப்பிற்கும் அறமே அடிப்படை
குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணை ஒழுக்கம் பற்றிப் பேச வந்த தொல்காப்பியர், வெறுமனே, ‘ஐந்திணை’ என்று சொல்லி நிறுத்தாமல், அதற்கு ஒரு நீண்ட அடைமொழி தருகிறார். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ என்று பேசுகின்றார். ஐந்திணை என்பதற்கு அவர் கூறியுள்ள இந்த நீண்ட அடைமொழி, அறம் பற்றிய அவருடைய கருத்தோட்டத்தைக் குறிக்கின்றது. இன்னோரிடத்தில், ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்று புறனடை பேசுகிறார். சங்க இலக்கியத்திலோ அன்றைய காலத்து அறநெறிக் கருத்துக்கள் ஏராளம். குறிப்பாக அக இலக்கியத்திற்கு அறநெறிகள் அடிப்படை வாழ்நெறியைத் தந்திருக்கின்றன. பின்னர் வந்த காப்பியங்களில் ‘பாவிகம்’ என்பது, இத்தகைய அறநெறிகளின் சாரமாகவே விளங்குகின்றது.
சிலம்பில் அறம்
சிலம்பு கூறுகின்ற ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும்’ என்பனவும் கம்பன் கூறுகின்ற ‘அறம் வெல்லும் பாவந்தோற்கும்’ என்பதுவும் அவ்வக் காப்பியங்களின் கதை நிகழ்ச்சிகளையும் கதை மாந்தர்களையும் வழிநடத்திச் செல்கின்றன என்று அறநெறித் திறனாய்வு பேசுகிறது.
மேலை நாட்டிலும் அறம்
மேலைநாட்டுத் திறனாய்வுலகில் அறநெறித் திறனாய்வு, ஹொரேஸ் (Horace), ஃபிலிப்சிட்னி (Sir Philip Sydney), மாத்யு அர்னால்டு முதலியவர்களால் போற்றப்பட்டது. எஃப்.ஆர்.லீவிஸ் (F.R. Leavis), யுவர் விண்டர்ஸ் (Yur. Winters) முதலியோர்க்கும் இதில் உடன்பாடு உண்டு. அமெரிக்காவில் இந்நூற்றாண்டில் 20, 30களில் இதற்குச் செல்வாக்கு இருந்தது. ‘நவீன-மனித நேய வாதிகள்’ (New-Humanists) என்ற கொள்கையினர் இலக்கியத்தில் அறவியில் நெறியின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள், இர்விங் பாபிர் (Irving Babbit) மற்றும் பால்மோர் (Paul Elmore More), ஃபோய்ஸ்டர் (Norman Foerster) ஆகியோர்.
அறநெறித் திறனாய்வின் அடிப்படை
இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய ஒரு திறனாய்வே என்று கூறுகிற இவர்கள், இலக்கியத்தின் உத்தி என்பது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு வழிமுறையேயன்றி வேறில்லை என்றும், இலக்கியத்தின் நோக்கம் அல்லது முடிவு, மனிதனைப் பாதிக்கக்கூடியது; மனித சிந்தனையின் ஓர் அங்கமாக இடம்பெறக் கூடியது என்றும் வாதிடுகிறார்கள். மனிதனைப் பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவன அவனுடைய சிந்திக்கும் திறனும் ஒழுக்க நெறிமுறைகளுமே என்று இவர்கள் நினைவு கூறுகிறார்கள். நெறிமுறை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய கருத்துக்களை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தப் பார்வை அறநெறித் திறனாய்வுக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.
சமூகம் மார்க்சீய அடிப்படை
இறுக்கமான நெறிமுறை காரணமாகவும், மிகையான வலியுறுத்தல்கள் காரணமாகவும் இவ்வணுகுமுறை சில காலங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியது. முக்கியமாக அமெரிக்காவில் இலக்கியத்தின் பனுவலுக்கும் அதன் செய்ந்நேர்த்திக்கும் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிற நவீனத் திறனாய்வின் வருகையினால் இது செல்வாக்கிழந்தது. மேலும், டி.எஸ். ஏலியட் போன்றவர்கள், இர்விங் பாபிட் முதலியோரின் இவ்வணுகுமுறையை மறுத்தனர்.
சமுதாயவியல் திறனாய்வும், மார்க்சியத் திறனாய்வும் அடிப்படையில் அறநெறிக் கண்ணோட்டம் உடையனவே என்றும் அவர் கூறுகிறார். ஆனால், மார்க்சியவாதிகள் பேசுகிற மனிதன் பற்றிய படிமங்களும், மனித உறவுகளும், மேற்கூறிய அறநெறித் திறனாய்வாளர்களின் கருத்து நிலைகளிலிருந்து மாறுபட்டவையே என்பதனையும் வில்பர் ஸ்காட் ஒத்துக் கொள்கிறார்.
தமிழும் அறமும்
தமிழ் இலக்கியத்தில் அறநெறிப் பார்வைக்கு இடம் நிறையவே இருக்கிறது. ஏற்கனவே, நீதி நூல்கள், வள்ளுவர் காலம் முதல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை காலம் வரை நிறையவே இருக்கின்றன. இவை, அன்றைத் தமிழ்ச் சமுதாயத்தின் அறவியல் கோட்பாடுகளை அளவிட உதவிடும்.
ஔவையாரின் படைப்புக்கள் அனைத்தும் அறத்தையே போதிக்கின்றன. மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் போன்ற அனைத்தும் அறத்தையே வலியுறுத்துகின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினோறு நூல்கள் அறத்தையே மக்களுக்குப் புகட்டின.
சங்ககால மக்கள் வாழ்க்கையைத் தன் மனம் போன திசையில் செலுத்தலாயினர். ஆகவே அவர்களுக்கு அறம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. அவர்கள் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
எனவே அறத்தை அவர்களுக்குப் போதிக்க விரும்பியே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினென்றும் அறத்தையே வலியுறுத்தி மக்களை அறவழிக்கு அழைத்துச் சென்றன.
வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பது மட்டுமல்லாமல், சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த குடும்பம் - எப்படியிருக்க வேண்டும் என்று மரபு வழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. அதன் பாத்திரப் படைப்புக்களும், கருப்பின்னலும், சூழலும், உரையாடல்களும், இந்த அறநெறிக் கோட்பாட்டின் மூலமாகவே வெளிப்படுகின்றன. கமலாம்பாள் சரித்திரம் நாவலிலும் தொடர்ந்து தமிழ்ப் புனைகதைகளிலும் இதனைக் கண்டறியலாம்.
மேலும், சங்க இலக்கியம் முதல் இன்றையப் புதுக்கவிதை வரை, அன்றையக் காப்பியங்கள் முதல், இன்றையப் புனைகதை இலக்கியம் வரை, அறநெறித் திறனாய்வுக்கு வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.
பாரதியின் அறக்கோட்பாடு
பாரத சபதம் என்று வருணிக்கப்படும் பாரதியின் பாஞ்சாலி சபதம், பல அணுகுமுறைகளுக்கு உட்பட்டது. அறநெறிக் கண்ணோட்டத்துடனும் இதனைப் பார்க்கலாம்.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி செல்லும் எனுமியற்கை
மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும்”
வீமனின் கூற்றாகப் பாரதி கூறும் இக்கூற்று, இக்காவியத்தின் சாரமான நீதி. இதனை ஒட்டிய பல அறநெறிக் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போலவே தருமன், வீமன், சகுனி, துச்சாதனன், கர்ணன், விதுரன் முதலிய கதை மாந்தர்கள் படைக்கப்பட்டுள்ளனர். கதைமாந்தர் கூற்றாகவும், இடைபுகுந்து பேசும் ஆசிரியர் கூற்றாகவும், இயற்கை வருணனையாகும் நிகழ்ச்சிகளின் ஊடாகவும், பாரதியின் இந்த அறநெறிக் கருத்துக்கள் அழுத்தமாகவும், உணர்ச்சி வடிவமாகவும் பளிச்சிடும்படித் தெரிய வருகின்றன.
இந்த தருமம், வியாசர் கூறும் வருணாசிரமத்தை ஒட்டிய தருமம் அல்ல. பாஞ்சாலி சபதத்திலுள்ள அறநெறிகள் எல்லாம், ‘தேசியம்’ என்ற மையத்தை நோக்கியே நகர்கின்றன. கவிஞரின் கருத்துக்கள் எங்கெங்கே, என்னின்னவாறு என்னின்ன நோக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
முடிவுரை
அறநெறித் திறனாய்வில் முடிவாகக் கவனிக்கத்தக்கது. அறநெறிகள் என்பவை, காலம், இடம் எனும் தளத்திற்குட்பட்ட சார்புநிலைக் கொள்கைகளே; அதாவது, அவை என்றும் ஒரே மாதிரியாக இருப்பன அல்ல மாறக் கூடியவை; வளரக் கூடியவை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.