தாலாட்டு, ஒப்பாரி ஓர் ஒப்பீடு
வி. அன்னபாக்கியம்
முன்னுரை
நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாகும். நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடலின் பொருளாகின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி, விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடல்களில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடல்களில் முடிவடைகின்றது. நாம் இக்கட்டுரையில் தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்கள் பற்றியும், அவற்றிற்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றியும் காண்போம்.
தாலாட்டு - சொல்லாராய்ச்சி
தாய்மை உணர்வின் வெளிப்பபாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு என்பார் தமிழண்ணல்.
தாலாட்டு என்ற சொல் தால்+ஆட்டு என்ற சொல் சேர்க்கையால் பிறந்ததாகும். தால் என்பதற்கு நாக்கு, தொட்டில் என்ற இரு பொருளுண்டு. நாவை ஆட்டிப் பாடுதலால் தாலாட்டு என்றும், தொட்டிலை ஆட்டிப் பாடுதலால் தாலாட்டு என்றும் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பார் டாக்டர் சு. சண்முகசுந்தரம்.
தாலாட்டு என்ற சொல் இலக்கியத்திலும் நாட்டுப்புறத் தாலாட்டிலும் திரைப்படப் பாடல்களிலும் தாலாட்டு தாராட்டு தாலேலோ ராராட்டு ஓராட்டு ரோராட்டு என்று பலவாறாக வழங்கி வருகின்றன.
தாலாட்டுப் பாடலின் பொருளடக்கம்
தாலாட்டின் பொருளடக்கம் பொதுவாகக் குழந்தையைத் தூங்க வைப்பதுதான். தாலாட்டில் இல்லாத பொருளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் அவற்றில் அடக்கமாகி விடுகின்றன. அவற்றை
1. குழந்தையைப் பற்றியன
2. குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன
3. குழந்தைக்குகளின் உறவினர் பற்றியன
என மூன்று வகையாக பகுக்கலாம்.
ஒப்பாரி - சொல்லாராய்ச்சி
இறந்தவர்களை நினைத்துப் பாடப்படுவது ஒப்பாரியாகும். பெண்ணினத்தின் சோக உணர்ச்சி முழுமையாக வெளிப்படும் இடம் ஒப்பாரியாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தாரால் வெளியிடப்பட்ட அகராதி ஒப்பாரியை ஒப்ப+ஆரி என பிரித்து அழுகைப்பாட்டு என விளக்கம் தருகின்றது. தமிழ் அகராதி ஒன்று ஒப்புக்குச் சொல்லி அழுதல் என பொருள் விளக்கம் தருவதோடு, பெண்களால் பாடப்படுவது என்றும் கூறுகின்றது. தமிழில் ஒப்பாரி கையறுநிலை புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என பலவாறாக அழைக்கப்படும்.
ஒப்பாப் பாடலின் பொருளடக்கம்
ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவர்க்கும், தனக்கும் உள்ள உறவுமுறை பற்றியும், தன்னுடைய நிலைமை பற்றியும், குடும்பத்தின் நிலைமை பற்றியும் பாடுகின்றனர். ஒப்பாரிப் பாடலின் பொருள் அடிப்படையில்;
1. பாடப்படுபவர்கள் (கணவன், தாய், தந்தை, குழந்தை, மகள், சகோதரர், மாமனார், மாமியார், அண்ணி, அத்தை)
2. இடம் பெறும் செய்திகள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒப்பாரிப் பாடல்களில் ஈமச்சடங்குகள் விதியின் வலிமை புராண மாந்தர்களோடு, ஒப்பிடல் விதவையின் வேதனை இறந்தவரால் அடைந்த இழப்பு போன்ற செய்திகள் பொருளடக்கமாக அமைகின்றன.
தாலாட்டு ஒப்பாரி ஓர் ஒப்பீடு
ஒப்பீடு என்பது ஏதேனும் ஒருவகையில் ஒப்புமை உடைய இரண்டினை ஒப்பிட்டு நோக்குவதாகும். நாம் இங்கு பெண்களின் தனிச்சொத்தாகிய தாலாட்டு மற்றும் ஒப்பாரியை ஒப்பிட்டு அவற்றிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்.
தாலாட்டு ஒப்பாரிப் பாடல்களில் ஒற்றுமை
தாலாட்டு ஒப்பாரிப் பாடல்களில் உள்ள ஒற்றுமையானது
1. அமைப்பு அடிப்படை
2. பொருள் அடிப்படை
என்ற இருதலைப்பின்கீழ் ஆராயப்படுகின்றன.
அமைப்பு அடிப்படை
தாலாட்டுப் பாடல்கள் தாயின் மன இயல்பிற்கும், குழந்தையின் உறக்கத்தைப் பொறுத்தும் சுருங்கி விரியும் தன்மை உடையவை.
ஒப்பாரிப் பாடல்கள் இறந்தவரைத் தான் நேசித்த விதத்தில் உணர்வின் அடிப்படையில் வடிவம் பெறுகின்றது.
இவ்விரு பாடல்களும் எதுகை மோனையாக, வர்ணனையாக, வினாவிடையாக, பொருளற்ற ஓசைநயமாக, உவமையாக அமைந்து உள்ளன.
எதுகை மோனை அமைப்பு
இலக்கிய அடிகளில். எதுகை மோனை அமைந்தால் அவை படிப்பதற்கு எளிமையாகவும் சந்த நயத்துடனும் திகழ்கின்றன. எனவே எதுகை மோனைக்கு இசைவான கருத்துக் கிடைக்கவில்லை என்றாலும் பொருளற்ற சொற்களைப் பயன்படுத்தியேனும் எதுகை மோனைகளைக் காப்பாற்றத் தயங்குவதில்லை. இதனை;
“சின்னஞ் சிறுவிரலுக்கு சித்திரம்போல் மோதிரங்கள்
சின்னண்ணா கொண்டுவந்தார் சித்திரமே கண்வளராய்!”
என்று தாலாட்டிலும்
“கையில் கிளிவளத்தேன் கடலோரம் தப்பவிட்டேன்
மடியில் கிளிவளத்தேன் மலையோரம் தப்பவிட்டேன்”
“தாலி யெலைபுடுங்கி தருமரோடு பொண்பொறந்தேன்
வீலி யெலைபுடுங்கி வீமரொடு பொண்பொறந்தேன்”
என்று ஒப்பாரி பாடல்களிலும் காணலாம்.
>வர்ணனை
இலக்கியத்திற்கு மிகத் தேவையான ஒன்று வர்ணனை. இந்த வர்ணனையின் காரணமாக சொல்ல வருகின்ற கருத்துக்கள் நம் மனதில் எளிதாகப் பதிகின்றன. இத்தகைய வர்ணனைப் பகுதிகள் நாட்டுப்புற இலக்கியமான தாலாட்டு ஒப்பாரிப் பாடல்களில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. தாலாட்டில் குழந்தையின் கருவிகள் குழந்தையின் உறுப்புகள் பற்றிய வர்ணனைகள் இடம் பெறுகின்றன. இதனை;
“கண்ணே கமலப்பு கண்ணிரண்டும் தாமரைப்பு
மேனி மகிழம் பு மேற்புருவம் சண்பகப்பூ”
(குழந்தைப் பற்றிய வர்ணனை)
“பச்சை இலுப்பை வெட்டிப் பால்வடியத் தொட்டில் கட்டித்
தொட்டிலும் பொன்னாலே தொடுகயிறும் முத்தாலே
(குழந்தைக்குரியத் தொட்டில் வர்ணனை)
என்றப் பாடல்கள் வாயிலாக அறியலாம்.
குழந்தையைப் பற்றிய வர்ணனைத் தாலாட்டில் காணப்படுவது போல் இறந்தவரைப் பற்றிய வர்ணனை ஒப்பாரியில் காணப்படுகிறது. ஒப்பாரியில் வர்ணனைகள் உருவகமாகவும் குறிப்புமொழியாகவும் அமைகின்றன. இதனை;
“மாடப்புறாவே மழைக்கெல்லாம் எங்கிருந்தே ? (இங்கு குழந்தை - மாடப்புறாவாக உருவகித்தல்)
கொளத்திலே விட்டெறிஞ்சேன் - என்
கோருவையும் சங்கிலியும்
ஆத்திலே விட்டெறிஞ்சேன் - என்
அரணாவும் சங்கிலியும்”
என்று இறந்துபோன தன் குழந்தையைக் கோர்வை சங்கிலி அரைஞாணாக உருவகித்துப் பாடுவதன் மூலம் அறியலாம்.
உவமை நயம்
ஒன்றை இன்னொன்றுக்கு உவமித்து சொல்லும் உவமை நயம் தாலாட்டிலும், ஒப்பாரியிலும் காணப்படுகின்றன. தாலாட்டில் குழந்தையை ஏலக்காய், சந்தனப்பூ, முத்து, பவளம் என்று பலவாறாக உவமிக்கின்றாள். இதனை;
“ஏலக்காய் ஏனழுதாய் ? இளந்தோப்பு கால் நோக
ஜாதிக்காய் ஏனழுதாய் ? உன் சந்தனப்பு வாய் நோக”
என்ற பாடலால் அறியலாம்.
ஒப்பாரியில் உவமைகளை அடுக்கி அடுக்கிச் சொல்லும் முறை காணப்படுகின்றன. சோகத்தைச் சொல்லி மாளாது அடுக்கடுக்காக உவமைகளை அள்ளி வைத்தாலும் துன்ப ஆறு தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் கரைமீறிப் பாயவே செய்கிறது. இதனை;
“தூண்டில் பட்ட மீனைப் போல
ஆ இழந்த கன்று போல
சோடி இழந்த அன்றில் போல
என்ற பாடலால் அறியலாம்.
வினாவிடையாக அமையும் தன்மை
வினாவிடையாக அமையும் தன்மை தாலாட்டிலும், ஒப்பாரியிலும் சிறப்பாக அமைந்துள்ளது. தாலாட்டில் தாயின் வினாவிற்கு குழந்தை அல்லது வேறு ஒருவர் விடை சொல்வது போல் அமைவதுண்டு. இதனை;
“மகிழம்பூ கொய்ய வந்த மகனாரை யாரடித்தார் ?
ஆரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை
பசித்திடவே நானழுதேன் பாசமுள்ள என் தாயே”
என்றப் பாடல் மூலம் அறியலாம்.
ஒப்பாரி பாடல்களில் கேட்கப்படும் வினா விடையற்ற ஒன்றாகவே காணப்படுகின்றன. காதலித்து மணந்தவன் மறைந்து விட்டதால் அவள்;
“சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டோட - என்னை
நில்லென்று சொல்லி நீங்க நிறுத்தி வனம் போகலாமா ?
என்று கேள்வி கேட்கிறாள்.
பொருளற்ற ஓசைநயச் சிறப்பு
தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்களிலும் ஓசை நயம் காரணமாக பொருளற்ற சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இந்த ஓசைநயம் என்பவை கேட்பதற்கு மிகவும் இனிமையானவை.
“ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
ராராரோ ராரிரரோ ராராரோ ராரிரரோ”
என்று சிறப்பாக அமைந்துள்ளது.
ஒப்பாரியில் இவை எதுகை மோனை காரணமாக பொருளற்ற சொற்கள் சேர்க்கப்பட்டு சிறப்பாக அமைந்துள்ளன. இதனை;
“பளனிமலை மேலே படியாறும் கோபுரமும்-என்னைப் பெத்த அப்பா
எளனிமலை மேலே எலையாறும் கோபுரமும் -
என்னைப் பெத்த அப்பா”
என்று பளனி, எளனி என பொருளற்ற சொற்கள் இணைந்து பாடலைச் சிறப்பிப்பதைக் காணலாம்.
உணர்வுகளை வெளியிடுவதில் ஒற்றுமை
தாலாட்டு, ஒப்பாரி இரண்டும் குறிப்பிட்ட நோக்கம் கொண்டு பயன் கருதிப் பாடப்படுகின்றன. பெண்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டு பாடுகின்றனர். இவை இன்ப உணர்வின் போது, தாலாட்டாகவும் துன்ப உணர்வின் போது ஒப்பாரியாகவும் வெளிப்படுகின்றன.
தாலாட்டு குழந்தையைத் தூங்க வைத்தல், சிறு வயதிலிருந்தே அதற்குத் தம் பண்பாட்டை ஊட்டல், தம் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்ளல் ஆகியவைகளை நோக்கங்களாகக் கொண்டு அமைந்துள்ளன.
இப்படி தாலாட்டும், ஒப்பாரியும் பலவாறாக ஒன்றுபட்டு திகழ்கின்றன. மேலும் வாழ்வின் பெருமை உறவின் சிறப்பு சமுதாயப் பண்பு பழக்கவழக்கம் இறையுணர்வு இவற்றிலும் ஒற்றுமை காணப்படுகின்றன.
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் உள்ள வேற்றுமை
தாலாட்டும் ஒப்பாரியும் பலவாறாக ஒன்றுபட்டு திகழ்ந்தாலும் அவற்றிற்கிடையே வேற்றுமைகளும் காணப்படுவதை முனைவர் சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றைக் காண்போம்.
வ.எண் |
தாலாட்டு |
ஒப்பாரி |
1 |
பிறந்த குழந்தைக்காகப் பாடப்படுவது. சான்று: "மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல் மலடி என்ற சொல்லை மாற்றப் பிறந்தாயோ" |
இறந்த ஒருவருக்காகப் பாடப்பெறுவது. சான்று: யாராரு கூப்பிட்டாலும் அசையாத மகராசா எமன் வந்து கூப்பிட்டதும் ஏறிட்டாரே பூந்தேரு |
2 |
குழந்தைக்காக மட்டுமே பாடப்பெறுவதால் தாலாட்டு ஒரே வகைதான் உண்டு. |
பாடல் கருத்துக்களை இறந்தவர்க்கு ஏற்ப மாற்றிக் கொள்வதால் ஒப்பாரி பல வகைப்படும். சான்று : பெற்றோர், கணவன், உடன்பிறந்தான், மகன், குழந்தை, கன்னிப்பருவத்து மகள், திருமணமான மகள், இவர்களுக்காகப் பாடுதல்.
|
3 |
தாலாட்டு இன்ப உணர்வு உடையது |
ஒப்பாரி துன்ப உணர்வு உடையது |
4 |
வாழ்க்கை என்னும் புத்தகத்திற்குத் தாலாட்டு முன்னுரை போன்றது |
வாழ்க்கை என்னும் புத்தகத்திற்கு ஒப்பாரி முடிவுரை போன்றது |
5 |
தாலாட்டு கலங்கரை விளக்கம் போன்றது |
ஒப்பாரி நினைவுச் சின்னம் போன்றது |
6 |
எதிர்காலக் கனவில் நிகழ் காலத்தை கண்மூட வைப்பது தாலாட்டு.
சான்று: (மகன் அதிகாரியாக விரும்புதல்) வெள்ளி எழுத்தாணி வெண்கலத்தால் மைக்கூடு தொட்டுக் கணக்கெழுதும் துரை ராஜா |
நிகழ்கால நினைவில் இறந்த காலத்தைக் கண் விழிக்கச் செய்வது ஒப்பாரி.
சான்று: (உடன்பிறப்பு) செண்டுப்பூப் போல சேர்ந்து பிறந்து விட்டு செண்டில் ஒருபூவு சிதைந்து விட்டாப் போலானோம். |
7 |
எப்படியெல்லாம் வாழ வேண்டும் என வரையறை செய்வது தாலாட்டு
சான்று: (சேமிக்கும் உணர்வைத் தூண்டுதல்) முப்பாட்டன் ஆண்ட முகப்பும் தலைக்கடையும் தப்பாமல் ஆளத் தவம்பெற்று வந்தவனே.
தேவைகளை எடுத்துச் சொல்லிப் பொறுப்புணர்வைத் தூண்டுதல். |
இப்படியெல்லாம் வாழ்ந்தாயே என ஏங்குவது ஒப்பாரி
சான்று: (மாமனுக்காக மருமகள்) மக்களை ஆதரிச்சீர் மன்னவர்க்கே புத்திசொன்னீர் மக்களைக் கடத்திவிட்டு மறந்தோடி ஏன் போனீர்
மாமனாரது நல்ல குணம் வெளிப்படுகின்றது. |
8 |
கண்மூடப் பாடுவது தாலாட்டு |
கண்மூடியப் பிறகு பாடுவது ஒப்பாரி |
9 |
தாலாட்டுப் பாடுதல் ஒரு சடங்கு இல்லை |
ஒப்பாரி பாடுதல் ஒரு சடங்காக உள்ளது |
10 |
தெய்வ சிந்தனை மிகுந்துள்ளது |
தெய்வ நிந்தனை மிகுந்துள்ளது |
11 |
புராணக் கதைகளும் தெய்வக்கதைகளும் விரும்பிப் பாடப்பெறுகின்றன |
ஒப்பாரியில் கதைகள் பாடப் பெறுதல் இல்லை |
12 |
எதுகை மோனை நயங்கள் ஒப்பாரி அளவிற்கு இன்றியமையாதன இல்லை |
எதுகை மோனை நயங்கள் மிகவும் இன்றியமையாதன |
10 |
ஒரே கருத்தைக் கொண்ட பாடல்கள் சில பொழுது நீண்டும் சில பொழுது சுருங்கியும் வருகின்றன.
சான்று: தாய்மாமனைப் பற்றிய பாடல் ஐம்பது அடிகளும் இருக்கலாம் பத்து அடிகளும் இருக்கலாம். |
ஒரே கருத்தைக் கொண்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுத்தங்களோடு பாடுதல் இதன் அமைப்பு
சான்று: தாலிக் கழட்டி வக்கத் தகுந்த வயசாயிடுச்சோ ? மிஞ்சிக் கழட்டி வக்க மிகுந்த வயசாயிடுச்சோ ? |
முடிவுரை
நாம் இக்கட்டுரையின் மூலம் தாலாட்டு, ஒப்பாரி சொல் ஆராய்ச்சி பற்றியும், அவற்றின் தன்மை பொருளடக்கம் பற்றியும் நன்கு அறிந்து கொள்ளலாம். மேலும் தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.