நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு
ச. தனலெட்சுமி
நாட்டு மக்களின் நாகரீகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை, நாட்டுநடப்பை, உண்மையான முறையில் படம்பிடித்துக் காட்டுவதே நாட்டுப்புறவியலாகும். சமுதாய வாழ்வின் ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்கு முறைகளுக்கும் பாடல்கள் உள்ளன. ‘பாட்டினைப்போல் இன்பம் பாரின்மிசை இல்லையடா’என்றார் பாரதி. நாட்டுப்புறப்பாடலைப் பல வகையாகப் பாகுபடுத்துகின்றனர். அவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதுமான தாலாட்டுப் பாடல்களைப் பன்முகப் பார்வையில் காண்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
தாலாட்டுப் பாடல்கள்
தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசைவில் தாலாட்டு என்னும் நல்முத்துப் பிறக்கின்றது. எனவே தான் ‘தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் பரிசு தான் தாலாட்டு’ என்பார் தமிழண்ணல். தாலாட்டு என்ற சொல்லைத் தால்+ஆட்டு எனப் பிரிக்கலாம். தால் என்றால் நாக்கு என்றும், நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனும் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர்.
தாலாட்டை ராராட்டு, தாலேலோ, தாராட்டு, ஓராட்டு, ஓலாட்டு, ரோராட்டு, தொட்டில் பாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் வழங்கி வருகின்றன. மலையாளத்தில் தாராட்டு என்றும், தெலுங்கில் ஊஞ்சோதி என்றும், கன்னடத்தில் ஜோகுல என்றும் கூறுவர்.
தாலாட்டுப் பாடல்கள்- பன்முகப் பார்வை
1. தாலாட்டின் அமைப்பு
2. தாலட்டு - இலக்கியப் பார்வை
3. தாலாட்டு - மொழியியல் பார்வை
4. தாலாட்டு - சமுதாயப் பார்வை
5. தாலாட்டு - மானுடவியல் பார்வை
தாலாட்டின் அமைப்பு
“தாய் ஆழங்காண முடியாத அன்புக்கடல்.
அக்கடலில் விளைந்த வலம்புரிமுத்தே தாலாட்டு” (திரு. ஆறு. அழகப்பன், அன்னகாமு ஏட்டில் எழுதாக் கவிதைகள் பக்-62)
1. தாலாட்டின் தொடக்கம் மாறுபட்ட வகையின பாடுவோரின் மன-இன இயல்புகளுக்கேற்ப இம்மாறுபாடுகள் நிகழ்கின்றன. அனைத்து ஓசைகளின் சொற்கள்தாம் வேறுபட்டதே ஒழிய, இசை ஒன்று தான்.
“ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆராரும் பொன்னாலே” (காதல் வாழ்வு பக்.151)
2. பொருளற்ற ஓசைகள் மட்டுமல்லாது பொருள் உடைய சொற்களும் கலந்து வருவதுண்டு
“ஆராரோ ஆரிராரோ
ஆறிரண்டும் காவேரி” (தமிழ் நாட்டுப் பாடல்கள் பக்.85)
3. தாலாட்டின் முடிவுகளில் பெரும்பாலும் குழந்தையை, தாய் தூங்குமாறே வேண்டுகிறாள். ஒரு தாய் மெத்தைமேல் தூங்கச் சொல்கிறாள்.
“மேலுவலிக்காமே கண்ணே நீ
மெத்தைமேலே படுத்துறங்கு” (மலையருவி 221)
”ஒரு தாய் தொட்டிலில் தூங்கச் சொல்கிறாள்” (மலையருவி 230)
’ஒரு தாய் பொருள் தருவதாகச் சொல்லி அமைதிப்படுத்துகிறாள்” (மலையருவி 232)
4. குழந்தையை விளிக்க சில முன்னிலைப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். இது மரபாகிவிட்டது.
சான்று :கண்ணே, ஐயா,
5. பெரும்பான்மையான தாலாட்டுப் பாடல்கள் தாயே கூறுவது போன்ற ஒரு முகக்கூற்றாகவே அமையும். சில பாடல்களில் தாயின் வினாவுக்கு வேறு ஒருவர் விடை சொல்வதுபோல அமைவதுண்டு. (தாலாட்டு பக் 37)
சில பாடல்களில் குழந்தை பதில் சொல்வதாக அமைவதுண்டு
“யாரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை
பசித்திடவே நானழுதேன் பாசமுள்ள என்தாயே” (தாலாட்டு பக்.116)
இவ்வாறு பல்வேறு விதமான அமைப்புகளைத் தாலாட்டில் காண முடிகின்றது. இவ்வமைப்புகள் என்றும் இருப்பன. இவற்றில் உள்மாற்றம் நடக்கலாமே ஒழியே உருமாற்றம் நடைபெறுவதில்லை.
தாலட்டு - இலக்கியப் பார்வை
“நடையழகில் ஜெயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணிவாசகரையும், நாகரீக விளக்கத்தில் சங்கப் புலவர்களையும், ஒப்புமையாகப் பெற்று பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு” (தமிழண்ணல் தாலாட்டு பக்.1)
இலக்கியத்துக்கே இலக்கியமாகத் தாலாட்டுப் பாடல்கள் விளங்குகின்றன. இவற்றில் இலக்கியச் சுவைகளையும், இலக்கிய ஒப்புமைகளையும் இலக்கியக் குறிப்புகளையும் காணலாம். தாலாட்டில் சிறந்த கற்பனைகளைக் காணலாம். அக்கற்பனை ஆகாசக் கோட்டைகள் என்றாலும், அன்னையவள் கட்டும் அன்பு கோட்டைகளாகும்.
தாலாட்டு - மொழியியல் பார்வை
பாமர வழக்குகளைத் தாலாட்டில் அதிகளவு காணலாம். பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் இவ்வாறு மாற்றம் பெற்றுள்ளன.
சான்று:
புடிச்சிக்கட்ட - பிடித்துக்கட்ட
விக்கிது - விற்கிறது
பிரியம் - பாசம்
மருத - மதுரை
தாலாட்டுகளில் பழமொழிகளும் இடம் பெறுவதுண்டு “தை பிறந்தால் வழி பொறக்கும்’ என்ற பழமொழியானது தையி பொறக்குமடா “ உங்க தகப்பன் குடிஈடேற என்று வருகிறது.
கவர்னர், கேஸ் போன்ற ஆங்கிலச் சொற்களும் தாலாட்டில் கலந்துள்ளன. கோர்ட் என்பது அயக்கோடு என்றும், பங்களா என்பது மங்களா என்றும் மாற்றம் பெறுகின்றன.
சர்க்கார், உத்யோகம், ஜாடை, தாலுகா, சவரம் போன்ற பிறமொழிச் சொற்களும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுவதுண்டு.
கடுகடுண்ணு, பளபளப்பாய், முணுமுணுத்து குடுகுடுன்னு போன்ற குறிப்புத் தொடர்களும் தாலாட்டுப் பாடல்களில் கலந்துள்ளன.
சின்னபின்னம், சுற்றிமுற்றி, பன்றிகின்றி, அம்மான் செம்மான் போன்ற இணைச் சொற்களும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
அகஸ்மாத்தா, புழுங்கல், காரவீடு, வல்லாட்டு வாந்தல் போன்ற அருஞ்சொற்களும் தாலாட்டில் உண்டு.
ஐயர், குஞ்சரம், கழனி, அரியான் போன்ற இலக்கியச் சொற்களும் தாலாட்டில் இடம் பெறுகின்றன.
தாலாட்டில் நாட்டுப்புறப் பெயர்களும் கலந்திருக்கும்.
“சுப்பிரமணி கிட்ட போய்
மாயாண்டி கிட்ட போய்...”
போன்றவை சான்றுகளாகும்.
தாலாட்டு - சமுதாயப் பார்வை
மக்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தாலாட்டில் பார்க்க முடிகிறது. இவற்றை இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று, குழந்தையுடன் தொடர்பானவை, இரண்டு குழந்தையுடன் தொடர்பில்லாதவை
இலுப்பை மரத்தொட்டில் செய்தல் (மலை பக். 230)
தாதிமார் துணை (மலை பக். 250)
உடல் நோய்க்கு ஒற்றடம் (மலை பக். 233)
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளை இதில் காணமுடிகின்றன.
“முடி எடுப்பதாலும் காது குத்துவதாலும் எமனை ஏமாற்றலாம்”
நாட்டுப்புறத்தில் உள்ள சாதி அமைப்புக்களையும் தாலாட்டு படம் பிடிக்கின்றது.
வம்மிசமாம் செட்டிகுளம் (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 86)
கொறத்தி கொறமாட (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 86)
மக்கள் வணங்கும் தெய்வங்களையும் இத்தாலாட்டுகள் நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.
பச்சை நிறம் வள்ளி (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 95)
பவள நிறம் தெய்வானை (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 96)
சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளும் தாலாட்டில் தெளிவாகின்றன.
“ஏழை வீட்டுத் தாய் தன் குழந்தையை
ஏழைக் குடிசையிலே ஈரத்தரைமேலே
தாழம் பாய் போட்டு தவழ்ந்தோட வந்தாயோ” (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 2)
தாலாட்டு - மானுடவியல் பார்வை
தாலாட்டுகளில் தாய் மாமனுக்குத்தான் முதன்மையான இடம். குழந்தையின் அனைத்துச் சிறப்பு விழாக்களிலும் அவர் சிறப்பிக்கப்படுகிறார்.
“மாமன் மடியிலே மாலைபோட்டுக் குந்தவைத்து
கோடி உடுத்தி காது குத்துமென்பார் சுந்தரர்க்கு” (தமிழண்ணல் தாலாட்டு பக்.32)
பிள்ளை குடும்பத்துக்கு முக்கியமான உறுப்பு தாய், தந்தை, பிள்ளை மூன்றும் சேர்ந்ததை மானிடவியலார் நடுவகை குடும்பம் என்றும் முதல் நிலைக் குடும்பம் என்றும் உடனடிக் குடும்பம் என்றும் அழைப்பர். எனவே தான் குழந்தைக்காகத் தவமிருக்கின்றனர்.
தாய் தன் தாலாட்டில் சிலரைப் புகழ்கிறாள். குறிப்பாக, தந்தை, சகோதரன், கணவன் ஆகியவர்களையே போற்றுவதுண்டு.
தாலாட்டுப் பாடல்கள் குறித்தும், தாலாட்டுப் பாடல்களின் வேறு பெயர்கள் பற்றியும், தாலாட்டுப் பாடல்களின் அமைப்புக் குறித்தும் இலக்கியப் பார்வை, மொழியியல் பார்வை, சமுதாயப் பார்வை எனப் பல்வேறு வகைகளில் அணுகலாம் என்பதை அறியலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.