அப்துல்ரகுமானின் ‘நேயர் விருப்பம்’ கவிதையில் சமுதாயச் சிந்தனை
கோ. தர்மராஜ்
உலக மொழிகளினுள் உயர்வான மொழியாக கருதப்படுவது தமிழ் மொழி. அத்தமிழ் மொழி உலக மொழிகள் போற்றும் அளவிற்கு செவ்வியல் பண்பும், செம்மாந்த சீரமைப்பும் கொண்டு திகழ்கின்றது. அத்தகைய தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாகக் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புதுக்கவிதை புத்துயிர் பெற்று நாட்டில் நடக்கும் வறுமை, காதல், அரசியல், உழைப்பின் மகத்துவம், குடும்ப அமைப்பு நிலைகள் போன்ற சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாகக் காட்சியளிக்கின்றன. அந்த அடிப்படையில் அப்துல் ரகுமானின் புதுக்கவிதையில் ஒன்றான நேயர்விருப்பம் எனும் புதுக்கவிதையில் இடம் பெற்றிருக்கும் சமுதாயச் சிந்தனைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நேயர் விருப்பம்
தமிழ்க் கவிதை உலகில் முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும், நோக்கத்தையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனையும், சோதனையில் சாதனையும் செய்திருப்பவர் என்று அப்துல் ரகுமானைப் பற்றி கவிஞர் மீரா கூறுகின்றார். காலவரிசைப்படி பார்த்தால் ‘நேயர் விருப்பம்’ தான் முதல் கவிதைத் தொகுதியாக வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் ‘பால்வீதி’ அவருடைய முதல் தொகுதியாக முந்திக் கொண்டதால் இது இரண்டாவது தொகுதியாக வெளிவர வேண்டியதாயிற்று. நேயர் விருப்பத்தில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் கவியரங்கக் கவிதைகள். கவியரங்கத்தில் தமிழ்நாட்டில் முதன் முதலாக அரங்கேறிய புதுக்கவிதை ‘மண்’ (1963) பேரறிஞர் அண்ணா ஏழெட்டு முறை திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லிக் கேட்டுப் பாராட்டிய பெருமையும் இந்தக் கவிதைக்கு உண்டு. இரண்டே சீர் கொண்ட ஒரே அடி என்றும், இத்தனை சிறிய வடிவம் தமிழில் மட்டுமல்ல நான் அறிந்த வரையில் வேறு உலக மொழிகளிலும் இல்லை என்று அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.
உழைப்பின் மகத்துவம்
இன்றைய சமுதாயத்தில் உழைக்காமல் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று பலர் பகல் கனவு கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். அப்படி பட்டவர்களுக்கு உழைப்பின் சிறப்பையும், உழைப்பின் வாயிலாக வரும் வெற்றி தான் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று நேயர் விருப்பத்தில் ‘மண்’ என்னும் தலைப்பின் கீழ் வரும் கவிதை தொகுப்பு எடுத்துரைக்கிறது.
“நீங்கள் என்னைக்
காலால் மிதிக்கிறபோது
பெருமை அடைகிறேன்
ஆனால் என்னில்
பிச்சைப் பாத்திரம் செய்து
கையில் ஏந்துகிற போது
நான் அவமானப்படுத்தப்படுகிறேன்” (நேயர் விருப்பம், ப.14)
எனும் கவிதையில் சமுதாயத்தில் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பிச்சை எடுக்காமல், அனைத்துத் தரப்பு மக்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற நயமிக்க கருத்தினைக் கூறுயிருப்பதைக் காணமுடிகின்றது.
“என்னை ஆள விரும்புகிறவனை
நான் வெறுக்கிறேன்
என்னில் ஆக்க விரும்புகிறவனை
நான் காதலிக்கிறேன்” (நேயர் விருப்பம், ப.14.)
உழைப்பின் சிறப்பையும், மகத்துவத்தையும் எதார்த்தமாக கூறியுள்ளதை உணரமுடிகிறது.
காதல்
காதல் என்று சொல்லும் போது அஃறிணை, உயர்திணை உயிர்கள் மயங்கி விடும். உயர்திணை உயிகளான பல்வேறு கவிஞர்கள் தங்களுடைய புதுக்கவிதையில் காதலைப் பற்றிப் பாடாதவர்கள் இல்லை. அவற்றில் அப்துல் ரகுமானும் விதிவிலக்கல்ல என்பதை,
முத்தம்
“காதல் சபையில்
பேச்சுக்கு எதிராக நிறைவேறும்
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்” (நேயர் விருப்பம், ப.94.)
தாஜ்மஹால்
“பெண்டளையால் இயன்ற வெண்பா” (நேயர் விருப்பம், ப.93.)
தீக்கோழி
“கரைவரை வந்து பின்
திரும்பும் அலைகள் போல்
என்வரை வந்துபின்
மீளும்உன் பார்வைகள்!” (நேயர் விருப்பம், ப.87.)
‘கண்ணோடு கண்ணிணை நோக்கின்’ எனும் வள்ளுவர் கூறுவது போல, ஒரு பெண்ணின் காதல் பார்வை ஆண்மகனின் உள்ளத்தில் புகுந்து இன்பத்தை ஏற்படுத்துவதையும், அப்பார்வை அமையும் விதத்தினை மேலே கூறிய கவிதையில் கூறியிருப்பதைக் காணலாம்.
திருமணம் பற்றிய எண்ணம்
காதலுக்குப் பின் ஒரு ஆணும், பெண்ணும் கை கூடுவது இல்லற வாழ்வான திருமணம். அத்திருமண வாழ்வு நரகவாழ்வில் அமையாமல் சொர்க்க வாழ்வில் அமைய வேண்டும் என்பதைக் கூறியுள்ளார்.
“திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படமாட்டாது
திருமணங்கள் சொர்க்கத்தை
நிச்சயிக்கும்” (நேயர் விருப்பம், ப.62.)
ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண உறவு என்பது சொர்க்க வாழ்வையே உருவாக்க வேண்டும் என்று எதார்த்தமாகக் கூறியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு திருமணம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதனையும் பதிவு செய்துள்ளார். அதை,
“தாலிக் கயிறு ஒரு
ஆயுள் தண்டனையின்
கழுத்து விலங்காகாது!
திரவப் பெண்மைக்குத்
திடப்பொருள் கிண்ணமாய்
ஆண்மை இருக்குமங்கே!” (நேயர் விருப்பம், ப.63.)
என்ற கவிதையடியின் வழியே உணரலாம். மேலும், வளரும் நாடுகளில் நாட்டை உயர்த்தப் பொருளாதாரம் வளர்வதைப் போல, இங்கே அதற்கு மாறாக இந்திய நாட்டில் பெண்களை வீழ்த்த வரதட்சணை வளமாக வளர்வதைக் கண்டிக்கும் நோக்கில் ஆண்களுக்குக் சவுக்கடி கொடுத்துள்ளதாக அமைத்துள்ளார்.
“மணம் என்றால் பணம் கேட்கும்
ஆண்விபச்சாரத்தை
பிரம்மச் சாரியத்தால்
தண்டிக்கும் நீதியுண்டு!” (நேயர் விருப்பம், ப.63.)
கடவுள் கொடுத்த குறுகிய கால வாழ்நாளில் நிலையில்லா வரதட்சணைக் கேட்பதை விட்டுவிட்டுத் தன் இல்லற மனைவியுடன் இனிமையாக வாழ ஆண்கள் உணர வேண்டும்.
ஒப்பில்லாத சமுதாயம்
சமுதாயத்திலும், நாட்டிலும் காணப்படும் பலவித இன்னல்களை எளிமையான மொழிநடையில் வருத்தத்துடனும், வேதனையுடனும் கூறியுள்ளார்.
“பொருளியல் அறிஞர்கள்
புத்தகத்தில் காட்டும்
பூலோக சொர்க்கம்” (நேயர் விருப்பம், ப.56)
“அரசியல் வாதிகளின்
அலுக்காத வாக்குறுதி” (நேயர் விருப்பம், ப.56)
“நல்லதொரு சமுதாயம்
நாம் காண வேண்டும்
அதற்காக
எட்ட முடியாத
இலட்சியங்கள் தேவையில்லை” (நேயர் விருப்பம், ப.57)
நாட்டின் உண்மையான நிலைக்கு ஏற்ப மக்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய நிலையை மறந்து எதிர்பார்ப்புக்களை நாம் வளர்த்துக் கொள்ள கூடாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஓர் ஒப்பில்லாத சமுதாயம் எவ்வாறு அமையும் என்பதை அப்துல் ரகுமான் தன்னுடைய கனவாக மட்டும் கொள்ளாமல் அவை அமைந்தால் எவ்வாறு சிறப்பாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
“அனைவரும் ஓர் நிறை
அல்ல
உழைக்கும் சாதியே
உயர்ந்த சாதி
அங்கே
வயிறு மட்டுமல்ல
மனமும் நிறைந்திருக்கும்” (நேயர் விருப்பம், ப.65.)
“கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி” (நேயர் விருப்பம், ப.65.)
இருபத்தியோராம் நூற்றாண்டில் நம்நாடு நல்லதொரு சமுதாயமாக அமைய வேண்டும் என தன் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளாக வடித்துத் தந்திருப்பது சிந்தனைக்குரியதாகும்.
சித்திர மின்னல்கள்
தமிழ் மொழியில் இருக்கும் மிகப் பெரிய இலக்கியங்களையும் இரண்டே வரியில் சொல்லி முடித்த பெருமை அப்துல் ரகுமானையேச் சாரும். தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரம் பற்றிய சிந்தனை.
“பால் நகையாள் வெண்முத்துப்
பல் நகையாள் கண்ணகிதன்
கால் நகையாள் வாய்நகைபோய்
கழுத்துநகை இழந்த கதை“ (நேயர் விருப்பம், ப.91.)
உலகப்பொதுமறை திருக்குறளைப் பற்றி,
“மும்முலைத் தாய்” (நேயர் விருப்பம், ப.92.)
என்ற கவிதையடியில் சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய இரண்டையும் சுருக்கமாக மக்களுக்குப் வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம்.
முடிவுரை
* உழைக்காமல் இருக்கும் மூடர்களுக்கு உழைப்பின் மகத்துவத்தைக் கூறியுள்ள பாங்கினைக் காணமுடிகின்றது.
* இரு உயிர்களின் காதலுக்குக் கடைக்கண் பார்வை தான் காரணம் என்பதை உணரமுடிகின்றது.
* பெண்களின் துன்பக் கேனியான வரதட்சணையை ஆண்கள் புரிந்து கொண்டு, எந்த வித பொருட்களும் எதிர்பார்க்காமல் இல்லற நடத்த வேண்டும் என ஆண் வர்க்கம் உணரவேண்டும்.
* சமூக நேயர்களின் விருப்பத்திற்கிணங்க குறைபாடுடைய சமுதாயத்தை களையப் பட்டு, நிறைவுடைய சமுதாயமாக மலர வேண்டும் எனப் படைத்துத் தந்திருக்கும் படைப்பாளரின் சிந்தனைப் போற்றுதற்குரியதாகும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.