முன்னுரை
பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாகத் தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தைப் போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதே போல் இக்கால இலக்கியமான நாவல்களில் விழுமியங்கள் பற்றியத் தேடலில், நாவல்கள் தன்னில் தாங்கி நிற்கும் தொல் தன்மை, குடும்ப அமைப்பு, நட்பு, வாழ்வியல் சடங்கு என ஒவ்வொன்றும் விழுமியங்கள் தான். அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
விழுமியம்
தனக்கு எது தேவையோ, அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும். அஞ்ஞாடி நாவலில் ஒரு இனத்தின் ஒட்டுமொத்தப் பதிவும் காலங்கடந்த வரலாற்றையும் நமக்கு ஒரு சமூக விழுமியங்களாக தருகின்றன.
குடும்ப அமைப்பு
இந்தியப் புவிச்சூழலில் பரப்பில் குடும்பம் என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அது கலவைகளின் தொகுப்பு. அதாவது, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, பேரன், பேத்தி இப்படியாகத் தொடரும் வம்சவிருத்தியோடு அன்றிணைந்த சொல்பாடுதான் குடும்பம். ஒரு நபர் குடும்பத்தின் அங்கம் ஒரு குடும்பம். கிராமத்தின் அங்கம் என இவ்வாறாக நாட்டின் அங்கத் தன்மையினை பெற்றிருப்பதுதான். உலகச் சூழலில் குடும்பம் என்ற கூட்டமைப்பு தந்தை வழிச் சமூகமாகவே இன்று நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது. அதே போல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாவலில் குடும்ப அமைப்பு என்பது ஆசிரியர் கட்டமைக்கும் விதத்தினைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
அஞ்ஞாடி நாவல் பல தலைமுறைகளைக் கடக்கின்றது. சண்டிவீரி, நல்லான்குடும்பன், அடுத்து ஆண்டி கருப்பி, அடுத்த ராக்கன் - சொக்கம்மாள், வீரம்மா கருத்தையன், இவ்வாறாக ஜந்துக்களும் மேற்பட்ட தலைமுறைகளையே காட்டிச் செல்கின்றது நாவல்.
“வீரம்மா கருப்பிக்கு முதல் பேத்தி, சொக்கம்மாளுக்கு மூத்த மகள், பிள்ளைகளை ஊட்டி வளர்த்தார்கள். தொட்டிவீட்டுக்குக் கண்ணுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது ஆண்டியின் மனசு துள்ளியது” (1)
என்று ஆசிரியர் பல தலைமுறைகளை உள்ளதனை தனது நாவலின் விவரித்துச் செல்கின்றார்.
“ஏற்கனவே கலியாணத்துக்கு நோங்கிக் கொண்டிருந்த ராக்கன் அஞ்ஞை உண்டாகியிருப்பதால் நெருக்கவில்லை. குழந்தை பிறக்கட்டுமென்று இருந்து விட்டான். அவனுக்குங்கூடத் தம்பியையோ, தங்கச்சியையோ அள்ளிச் சீராட்டப் போகும் சந்தோஷம் அடிமனசில் குமிழியடித்தது. அதனால் இளவட்டங்களின் நக்கலைச் சட்டை செய்யவில்லை. கருப்பியைப் பெண்கள் கேலி செய்தார்கள். ‘ஆண்டிக் குடும்பன். வீட்ல ரெண்டு தொட்லு ஆடும்’, ‘மாமியா ஒரு பக்கமும் மருக ஒரு பக்கமும் உக்காந்து ஏறக்கட்டுவாக” (2)
மேற்கண்ட கூற்று அன்றை நடைமுறை வாழ்வியலில் ஒரு குடும்பத்தின் பண்பாட்டைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமின்றி அதனை அடுத்த தலைமுறைக்கும் அப்படியே கொண்டு சேர்ப்பதையும் காணலாம். நாவலில் வருகின்ற குடும்பர்கள், வண்ணார்கள், நாடார்கள், தேவர்கள், கோனார்கள், செட்டியார் என பல சமூகங்களின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. மேற்கண்ட குடும்பங்களின் வம்சா வழியினரைப் போன்றே வண்ணார்களின் தலைமுறையும் அடுக்கடுக்காக நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும், மேலும் ஆண்டிக் குடும்பனின் குடும்ப மதிப்பினையும் இதன் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
நட்பு
நட்பிலிருந்து தான் நாவலே தொடங்குகின்றது. இந்நாவலில் காணப்படுகின்ற நட்புக்குச் சாதிகள் இருந்தாலும் அதையும் தாண்டி சாதியெல்லாம் வெளியுலகத்திற்கு மட்டுமே உள்மனக்கிடக்கைக்குள் இல்லை அப்படியே இருப்பினும் வெறிகொண்டு இவர்களுடன் தான் பழக வேண்டும், பேச வேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பினும் அதனைத் தாண்டியே எல்லை தாண்டியதாகவே இருக்கின்றது. ஆண்டிக்கும், மாரிக்குமான நட்பு மிகவும் நெருக்கமானவை. அப்படிப்பட்ட நெருக்கம் சமூகக் கண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதனை,
“ஆண்டிக்கும் மாரிக்குமான இடையிலான நட்பு அவர்களை உடனிருந்து பார்க்கக்கூடிய கதாபாத்திரங்களுக்கு வினோதமாகத்தான் இருக்கிறது. விவசாயம் செய்கின்ற குடும்பர் வீட்டுப் பையனுக்கும் அவர்களுக்குச் சலவை செய்யக்கூடிய வண்ணார் வீட்டுப் பையனுக்குமான கூடாவுறவாகவே அதை மதிப்பீடு செய்கிறார்கள். எனவே ஒன்று கேலி பேசுகிறார்கள் அல்லது கோபப்படுகிறார்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுகிறார்கள்” (3)
என்று பேராசிரியர் டி. தர்மராஜன் அவர்கள் விமர்சிக்கும் திறன் சரியானதாகவே இருக்கின்றது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக,
“காலசனியனே நீ உழுகிறதுக்குப் பெறந்தாயா வெளுக்கிறதுக்குப் பெறந்தாயா” (4)
மேலும்,
“புழுக்க முண்ட ஒனக்கு ஒண்ணுந் தெரியாதோ. பெத்துவச்சிருக்கியே அதென்ன புள்ளையா. ஊரு சோத்த தின்னுட்டுக் கள்ளக் கறி வளத்துட்டுத் திரியுது. வண்ணாக் கழுதைக்கும் எம் புள்ளைக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா பேதியில போறவன்” (5)
மேற்கண்ட கூற்றுக்கள் எல்லாம் படிநிலை சமூக அமைப்பின் தனக்கும் கீழான சமூகத்தினரிடம் நட்போ, காதலே எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது. அதனை நட்புக்குள்ளாகும் இருவர் ஒத்துக்கொண்டாலுலம் சமூகத்தின் கண் எவ்வாறு இருக்கின்றது என்பதனை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கின்றார் பூமணி.
சமூகத்தின் தீண்டாமைப் பார்வையை நட்பு அலட்சியப்படுத்தும் போதும் அதனையும் தாண்டி அந்த இருவருக்குண்டான நட்பில் சாதியம் இழையோடி இருப்பதையும் ஆசிரியர் பதிவு செய்கின்றார்.
“தெருவுல சோறெடுக்கிறவன் கொட்டாரத்துக்கெங்க போனான்” (6)
ஆண்டிக்குடும்பன் மனதிலேயும் சாதிய மனோபாவம் நாவல் பூராவும் விரவிக் கிடக்கின்றது. இருப்பினும் அதனையும் மரபாக மீறவே செய்கின்றான். மேலும் சமூகப் படிநிலையின் தனக்கு மேலேயுள்ள சமூகத்தின் அடக்கமுறையை இயலாமையால் ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றார்கள் என்பதை,
“உயர்சாதிக் குடும்பர்களின் அடக்குமுறையை தாழ்ந்த சாதி வண்ணார்கள் சகித்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஓரளவிற்கு அஞ்ஞாடி கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவது ஆண்டிக் கதாபாத்திரங்கள் அடக்குமுறை நிறைந்த சூழலைத் தங்களின் சாத்வீக அணுகுமுறையின் மூலம் சுமூகமாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் காட்டும் கருணை, உருவாக்கும் பாதுகாப்பான சூழல் பேச்சின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் தரக்கூடிய நம்பிக்கை போன்ற அனைத்தும் குடும்பர்கள் வெளிப்படுத்தும் ஒடுக்குதல்களின் வெம்மையை வண்ணார்கள் சகித்துக் கொள்வதற்கான மனவலிமையை வழங்குகின்றன” (7)
என்ற பேராசிரியரின் கூற்றுப்படி சாதியப்படி நிலையில் உயர்வில் இருக்கும் குடும்பர்களின் சாதிய மனோநிலை தனக்கு கீழ் இருக்கும் வண்ணார் சமூகத்தின் மீதான ஒடுக்குதல்கள் தீட்டுதல் போன்றவை எல்லாம் வெறித்தனமான சாதி வெறியைப் பதிவு செய்யவில்லை. ஏனெனில் அஞ்ஞாடியில் தீண்டாமையை குடும்பர் சமூகம் வண்ணார்களுக்கும் கொடூரமாக வழங்கவில்லை. அதற்கு கருப்பின் (அஞ்ஞாடி), அனந்தி (வண்ணார்) வீட்டுப் பெண்களின் நட்பும் அதிகமாக இழையோடியிருப்பதையும், சமூகத்தின் சாதிய மனநிலை நட்புக்குத் தடையாயிருப்பினும், தடைதகர்ந்து அந்த நட்பு வளரும் மதிப்பினை அறிந்து கொள்ள முடிகின்றது.
வாழ்வியல் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும்
மனிதர்களுடைய வாழ்வியலில் சடங்குகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் வளமும், நற்செயல் நிகழ வேண்டும் என வேண்டிப் பல்வேறு சடங்குகளை மேற்கொள்கின்றான். இவ்வாழ்வியல் முறைகளில் தமிழ் வாழ்வியல் சடங்கு முறைகளான பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு என ஒவ்வொரு பருவங்களுக்குத் தகுந்தாற் போலவே மனிதனின் சடங்குகளும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இவற்றில் நாம் பள்ளர் இனமக்களின் வாழ்வியல் சடங்குகளைக் காணலாம்.
அஞ்ஞாடியில் ஆண்டியின் மகள் வீரம்மாளுக்கு பெயர் சூட்டு விழா பதிவு செய்யப்படுகின்றது.
“ரெண்டு கூடார வண்டி கிளம்பியது. வண்டி நிறையப் பெண்கள். அரிவாற் கம்புடன் காவலுக்கு ஆண்கள் கூடாரத்தில் கட்டிய தொட்டிலை இறுகப் பிடித்திருந்த கருப்பி கலியாணப் பெண்ணாக உட்கார்ந்திருந்தாள். காதும், கழுத்தும், பிடிக்காமல் நகைகள் பாம்படம், தண்டட்டி முடிச்சு, கொட்டு முருகு, கொன்னப் புத்தட்டு பச்சைக்கல், பேசிறிப் பதக்கம், சங்கிலி காசுமாலை, கடலைக் காய்மணி, காப்பு தண்டை மிங்சி அடேயப்பா சாமியலங்காரம் தோற்றுப் போகும்” (8)
தங்கள் குலசாமி கலிங்கலூரணியில் இருந்து சில்லாங் குளத்துக்கு வண்டி கட்டிப் போய், அங்கு பிறப்புச் சடங்கினை நிகழ்த்தி விட்டு வருவதையும் அதற்கு ஆண்டியின் மனைவியின் அலங்காரத்திற்கு சாமி தோற்றம் போகுமென்ற வர்ணனை ஆண்டிக் குடும்பமானது குடும்பம் அவ்வளவு செல்வ செழிப்பாக இருந்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும்,
“சில்லாங்குளத்துக்குப் போய்ச் சாவல், கிடா வெட்டிப் பொங்கலை வைத்தார்கள். இருளப்ப சாமியைக் கும்பிட்டுக் குழந்தைக்கு மொட்டையடித்து பூப்போட்டுப் பார்த்து வீரம்மா என்ற பேர்விட்டார்கள். நல்லானும், சண்டிவீரியும் பாக்கி வைத்திருந்த நேமிக்கம் அத்தனையும் செல்லக்கட்டியாயிற்று” (9)
என்று ஆண்டியின் மகளுக்குப் பெயர்சூட்டி வந்ததை ஆசிரியர் மேற்கண்டவாறு பதிவு செய்கின்றார்.
வாழ்வியல் சடங்குகள் என்பது சமூக மதிப்புகளில் முக்கியமானதாக இருப்பதனை அறிய முடிகின்றது.
முடிவுரை
ஆதிகால மனிதன் தனக்கும் மேற்பட்;ட ஆற்றல் இருப்பதனை உணர்ந்தான், நம்பினான். இந்த நம்பிக்கையே மரபு நீட்சியின் தொடராக இன்று சமயம் என்ற உருவங் கொண்டுள்ளது. ஆதிமனிதனின் வழிபாட்டு முறைகள் எல்லாம் வேளாண்மை, உணவு, வேட்டையாடுதல் போன்றவற்றினைச் சார்ந்ததாக இருந்தது. அதேபோலத்தான் மருதநில மக்களாகிய வேளாண்குடிச் சமூகத்தின் வழிபாட்டு முறைகளும் மழை வேண்டி பயிர் செழிக்க, இந்திரனை வழிபடல், இந்திர விழா போன்ற பல்வேறு வழிபாடுகளைச் சார்ந்தே இச்சமூகம் இருந்து வந்துள்ளதை விழுமியங்கள் வழி அறியமுடிகின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. பூமணி, அஞ்ஞாடி, ப.88.
2. மேலது, ப.84.
3. டி. தர்மராசன், நான் ஏன் தலித்தும் அல்ல, ப.191.
4. பூமணி, அஞ்ஞாடி, ப.12.
5. மேலது, ப.15.
6. மேலது, ப.42.
7. மேலது, ப.49.
8. டி. தர்மராசன், நான் ஏன் தலித்தும் அல்ல, ப.197.
9. பூமணி, அஞ்ஞாடி, ப.86..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.