தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர் கே. நாராயண சிவராஜ பிள்ளை. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் காலம் கி. பி.1879 முதல் கி. பி.1941 வரை ஆகும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிழக்கிந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் 1929 - இல் ‘Reader’ ஆக நியமிக்கப்பட்டார். இவருடன் சேர்ந்து ஈ. வி. அனந்தராம அய்யர், கே. வரதராஜூலு நாயுடு ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். பின் 1930 - இல் துறை மறுசீரமைக்கப்பட்ட போது இவரை முதுநிலை விரிவுரையாளராக நியமித்தது பல்கலைக்கழகம். இவர் 1936 - இல் பணி ஓய்வு பெற்றார். இவருடைய புலமை நெறியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இவர் பண்டைத் தமிழ் வரலாற்றாய்வையும் மரபு வரலாற்றாய்வையும் வலியுறுத்தினார். இவரது புலமையைப் பறைசாற்றி நிற்பவை: ‘பண்டைத் தமிழா;களின் காலவரிசை’ (The Chronology of Early Tamils - 1932) என்னும் நூலும் ‘தமிழகத்தில் அகத்தியர்’ (Agastya in Tamilnadu) என்னும் நூலும் ஆகும். இவ்விரண்டு நூற்களும் இவர் ஒரு வரலாற்றாய்வாளர் என்பதை உறுதி செய்கின்றன. இவர் பண்டைய இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் புலமை வாய்ந்தவர் என்பதற்கு மேலே கூறிய இரு நூற்களே சான்று.
இவருடைய புலமையை இவருடைய நூற்களில் காட்டும் மேற்கோள்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ‘தமிழகத்தில் அகத்தியர்’ என்னும் நூலில் வேதங்கள், அயித்ரேய பிரமாணம், மதுரைக்காஞ்சி, புறநானூறு, வீரசோழியம், தேவாரம், திருவிளையாடற் புராணம், காஞ்சி புராணம், சீகாளத்தி புராணம், தாண்டவராய சுவாமிகளின் பாடல்கள், தொல்காப்பியம், அகத்தியர் வைத்திய நூறு, அகத்தியர் வைத்தியம் பதினாறு, அகத்தியர் எட்டு, அகத்தியர் பூரண சூத்திரம் இருநூற்றுப் பதினாறு, அகத்தியர் கலைஞான சூத்திரம் ஆயிரத்து இருநூறு, அகத்தியர் சூத்திரம் இருநூற்றுப் பத்து, அகத்தியர் தீக்ஷாவிதி, பேரகத்தியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை), புறப்பொருள் வெண்பா மாலை, திவாகரம், அகப்பொருள் விளக்கம் முதலிய பல நூற்களைப் பயன்படுத்தியுள்ளார். இந்நூற்கள் எல்லாம் தேவை கருதியே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, ஆங்கில நூற்கள் சிலவற்றையும் தம் கருத்திற்கு அரண் சேர்க்கும் விதத்தில் எடுத்தாண்டுள்ளார். குறிப்பாக, சில நூற்களை இவண் குறிப்பிடலாம். மாக்ஸ் முல்லரின் ‘History of Ancient Sanskrit Literature’, பண்டார்கரின் ‘Early History of Deccan’, மெக்டோனிலின் ‘History of Sanskrit Literature’.
‘தமிழகத்தில் அகத்தியர்’ என்னும் நூல் பின்வரும் உட்தலைப்புகளைக் கொண்டமைகின்றது.
1. முன்னுரை
2. தமிழகத்தில் அகத்தியர் மரபு - பொதுமை, அகத்தியர் பிறப்பு
3. தொடக்க காலத் தொன்மக்கதைகள்
4. பிரதிபலிப்புகள் (Reflections)
5. தென்பகுதியில் அகத்தியரது யாத்திராகமம்
6. மரபின் மதிப்பீடு
7. பாரம்பரியத்தின் தென்மை (Antiquity of Tradition)
8. தமிழகத்தில் அகத்தியர் (Agastya in the Tamil Country)
9. அகத்தியர் மரபும் அவருக்குப் பிந்திய மரபும்
10. அகத்தியர் மரபு - ஜைன மதத்தின் தோற்றம்
11. அகத்திய மரபு ஏற்றுக் கொள்வதற்கான காரணங்கள்
12. இராமாயணத்தில் அகத்தியர் மரபு
13. அகத்திய மரபும் தொல்காப்பியமும்
14. அகத்தியரின் படைப்புகள்
15. அகத்தியச் சூத்திரங்களும் தொல்காப்பியமும்
16. அகத்தியச் சூத்திரங்கள் - ஒரு மோசடி
17. பிற்காலத்தமிழ் இலக்கியத்தில் அகத்தியர் மரபு
18. தமிழ்ப்புராண இலக்கியத்தில் அகத்தியர் மரபு
19. அகத்தியரைத் தெய்வநிலைக்கு உயர்த்துதல்
20. நிகழ்வதற்கரிய உள்ளார்ந்த நிலையை அடைதல்
21. அகத்தியர் - ஒரு தனிப்பட்ட வரலாறு
22. அகத்தியர் - ஒரு பாதி வரலாற்று நபர்
23. அகத்தியர் - உருவகத் தனமை கொண்ட பாத்திரம்
24. முடிவுரை
தமிழகத்தில் அகத்தியர் என்னும் நூலில் அவர் கூறுவன:-
பொதியில் மலையைக் குறிப்பிடல் (தாலமியின் வரைபடத்தில் உள்ளதையும் புறநானூறு - 2 ஆம் பாடலையும் சான்று காட்டுகின்றார்.) பொதிகை என்றொரு மலையைச் சுட்டல் - தென்பகுதியில் அகத்தியரைக் குறுமுனி என்று அழைக்கின்றனர் - அகத்தியரின் பிறப்பை அகத்தி மரத்தோடு தொடர்புபடுத்தல்.
இவர் ஒரு வரலாற்றறிஞர் என்பதற்குப் ‘பண்டைத்தமிழர்களின் காலவரிசை’ என்னும் நூலே சான்று. இந்நூலில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க நூற்களின் துணைகொண்டு பண்டைய தமிழர்களின் காலவரிசையை ஆராய்கின்றார் கே. என். சிவராஜ பிள்ளை. இந்நூலில் சேர, சோழ, பாண்டியர்களின் குடிவழியை ஆராய்கின்றார். சேரர்களின் குடி வழியைக் கணிக்கையில், கி. மு. 25 முதல் கி. பி. 200 வரை என்கின்றார். இக்காலக் கட்டங்களுக்கிடையே ஆண்ட மன்னர்களின் பெயரைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். கருவூர் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை முதல் சேரமான் கணைக்காலிரும்பொறை வரையுள்ள மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.
சோழர்களின் குடிவழியை கி. மு. 50 முதல் கி. பி. 200 வரை கணித்துள்ளார். இக்காலக் கட்டங்களில் வாழ்ந்த மன்னர்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துகின்றார். வெளியன் தித்தன் முதல் சோழன் கோச்செங்கணான் வரை ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பாண்டியர்களின் குடிவழியை கி. மு. 1 முதல் கி. பி. 175 வரை வரையறுத்துள்ளார். நெடுந்தேர்செழியன் முதல் கானப்பேரெயில் எறிந்த உக்கிரப்பெருவழுதி வரையுள்ள மன்னர்களை அட்டவணைப்படுத்தியுள்ளார்.
‘பண்டைத்தமிழர்களின் கால வரிசை’ (1932) என்னும் இந்நூல், நான்கு பகுதிகளைக் கொண்டமைகின்றது.
பகுதி - 1: சங்க இலக்கியம்: மதிப்பீடும் ஏற்பாடும்
பகுதி - 2: பத்து தலைமுறைகளின் அரசர்கள் பற்றிய அட்டவணை
பகுதி - 3: கால வரிசை: பத்துத் தலைமுறை அரசர்கள்
பகுதி - 4: முடிவுரை
சங்க இலக்கியம்: மதிப்பீடும் ஏற்பாடும் என்னும் முதல் பகுதி
முன்னுரை - திராவிட முன் வரலாறும் தென்னிந்தியாவும் - தென்னிந்திய வரலாற்றுக் காலமும் திராவிடப் பண்பாடும் - தமிழ் இலக்கியமும் வரலாற்று மதிப்பும் - பண்டைய தமிழிலக்கியத்தில் உள்ள பாடல்களே ஆதாரம் - சங்க இலக்கியத்தில் தமிழர்கள் - சங்க இலக்கியம்: அதன் குறைபாடுகளும் பின்னடைவுகளும் - சங்கம் பற்றிய கதை ஆய்வு - சங்கப் படைப்புகள்: சேகரிப்பும் ஏற்பாடும் - முதன்மைச் சான்றுகள் - சங்க இலக்கியம் மீதான இலக்கிய மதிப்பீடும் விளைவுகளும் - சங்கப் படைப்புகளின் வெற்றி: அந்நேரத்தில் அவர்களின் பரந்த மனப்பான்மை - ஒரே கால நிகழ்வுகளின் அட்டவணை முதலிய உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது.
பத்து தலைமுறைகளின் அரசர்கள் பற்றிய அட்டவணை என்னும் இரண்டாம் பகுதி
ஆய்வில் உள்ள சிக்கல்கள் - மனிதர்களை (அரசர்கள்) அட்வணைப்படுத்துதல் - அட்டவணை விளக்கம் - சோழ அரசர்களின் வரிசை - புதிய கண்ணோட்டம்
முதல் தலைமுறை: வெளியன் தித்தன் காலம் தொடங்கி
சோழர் வரிசை: வெளியன் தித்தன்
பாண்டியர் வரிசை: குறிப்பிடப்படவில்லை
சேரர் வரிசை: குறிப்பிடப்படவில்லை
இரண்டாம் தலைமுறை: தித்தன் வெளியன் என்கின்ற போர்வைக்கோ பெருநற்கிள்ளி காலம் தொடங்கி
சோழர் வரிசை: தித்தன் வெளியன் என்கின்ற போர்வைக்கோ பெருநற்கிள்ளி
பாண்டியர் மற்றும் சேரர் வரிசை: குறிப்பிடப்படவில்லை.
மூன்றாம் தலைமுறை: முடித்தலைக்கோ பெருநற்கிள்ளியின் காலம் தொடங்கி
சோழர் வரிசை: முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி, கரிகாலன் - 2
பாண்டியர் வரிசை: நெடுமிடற் செழியன் என்கின்ற நெடுஞ்செழியன் - 1
சேரர் வரிசை: அந்துவன்சேரல் இரும்பொறை, பெருஞ்சோற்று உதயன் சேரலாதன்
நான்காம் தலைமுறை: வேல்பல் தடக்கை பெருவிரற்கிள்ளியின் காலம் தொடங்கி
சோழர் வரிசை: வேல்பல் தடக்கை பெருவிரற்கிள்ளி
பாண்டியர் வரிசை: பூதப்பாண்டியன்
சேரர் வரிசை: செல்வக்கடுக்கோ வாழியாதன், குடக்கோ - நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழு குட்டுவன்
ஐந்தாம் தலைமுறை: உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியின் காலம் தொடங்கி
சோழர் வரிசை: உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னி
பாண்டியர் வரிசை: பசும்பூண் பாண்டியன்
சேரர் வரிசை: குட்டுவன் இளம்பொறை, களங்காய்க்கண்ணி நெடுமுடி சேரல், கடல்பிறங் கோட்டிய வேல்கெழு குட்டுவன்
ஆறாம் தலைமுறை: கரிகாலன் காலம் தொடங்கி
சோழர் வரிசை: கரிகாலன் - 2
பாண்டியர் வரிசை: பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி
சேரர் வரிசை: சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஏழாம் தலைமுறை: நெடுங்கிள்ளி காலம் தொடங்கி
சோழர் வரிசை: நலங்கிள்ளி
பாண்டியர் வரிசை: தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
சேரர் வரிசை: சேரமான் குட்டுவன் கோதை
எட்டாம் தலைமுறை: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் தொடங்கி
சோழர் வரிசை: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
பாண்டியர் வரிசை: இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன், குடமுற்றத்துத் துஞ்சிய மாறன் வழுதி
சேரர் வரிசை: யானைக்கண் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் தலைமுறை: ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலம் தொடங்கி
சோழர் வரிசை: ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
பாண்டியர் வரிசை: முசிறி முற்றிய செழியன், உக்கிர பெருவழுதி
சேரர் வரிசை: சேரமான் மாரிவன்கோ, சேரமான் கோக்கோதை மாறன்
பத்தாம் தலைமுறை: சோழன் கோச்செங்கணான் காலம் தொடங்கி
சோழர் வரிசை: கோச்செங்கணான்
பாண்டியர் வரிசை: குறிப்பிடப்படவில்லை
சேரர் வரிசை: கணைக்காலிரும்பொறை
கால வரிசை: பத்துத் தலைமுறை அரசர்கள் என்னும் மூன்றாம் பகுதி
பின்வரும் தலைப்புகளைக் கொண்டமைகின்றது.
1. முன்னால் செய்ய வேண்டியவை
2. தலைமுறைகளின் காலவரிசை உறவு
3. தலைமுறைகளின் முழுமையான காலவரிசை
4. கிரேக்க மற்றும் ரோமன் எழுத்தாளர்களின் ஆதாரங்கள்
5. ஆய் அரசர்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும்
6. ஆய் நாட்டின் வெற்றி
7. இக்கால கட்டத்தின் பரிசீலனைகள்
8. உறுதிப்படுத்தும் சான்றுகள்: அரசியல் - நிலவியல் - வணிகவியல் - நாணவியல்
9. இருவகையான விசாரனைகள்
10. முந்தை முயற்சிகள்
இந்நூலின் நான்காம் பகுதி ஆய்வில் கண்ட முடிவுகள் பற்றிய விவாதங்களை முன்வைக்கின்றது.
1. முன்னர் செய்தவை
2. காலவரிசைகளின் உறவு
3. முழுமையான காலவரிசை
4. தமிழர்கள் அந்தந்தத் தலைநகரங்களில் தங்கள் ஆட்சியை நிறுவுதல்
5. சுதந்திரமாக ஆட்சி செய்தல்
6. ஆரியமயமாக்கத்தின் தொடக்கம்
7. சங்கக் கவிதைகளின் இயல்பு
8. சங்கக் கவிதைகளின் பதிப்பும் தாமதமும்
9. சங்க இலக்கியம்
10. எட்டுத்தொகை
11. பத்துப்பாட்டு
12. பதினெண்கீழ்க்கணக்கு நூற்கள்
13. தமிழ் இலக்கியப் படிப்பும் கற்றலும் - முந்தைய நிலை
14. திராவிட ஆட்சி அமைப்பும் நாகரிகமும்
15. முடிவுரை
இவ்விரு நூற்களையும் தவிர ‘உந்து என்னும் இடைச்சொற் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழமை’ (1929) குறிப்பிடத்தக்கது.
இந்நூல் பின்வரும் உட்தலைப்புகளைக் கொண்டமைகின்றது. முன்னுரை - வினைமுற்றே வாக்கியத்தின் உயிர்நிலை - உந்தீற்றுச் சொல்லும் பண்டைத்தமிழும் - உந்தீற்று வினைமுற்றின் பிரயோக காலம் - உந்தீற்றுச் சொற்களும் தொல்காப்பியமும் - உந்தீற்றுச் சொற்களும் நன்னூலும் - உந்தீற்றுச் சொற்களும் தமிழிலக்கண நூலாரும் - உந்தீற்று வினைமுற்றும் மலையாளமும் - உந்து விகுதியும் ஏனைய திராவிட மொழிகளும் - உந்து விகுதியும் பண்டைத்தமிழிலக்கியமும் - உந்து விகுதியின் உற்பத்தி - முடிவுரை.
கே. என். சிவராஜபிள்ளையின் நினைவு மலர் வெளியீடாக ‘சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி’ (1968) என்னும் நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் அவரின் நினைவாக வெளியிடப்பட்டது.
இந்நூல் முன்னுரை - உள்ளுறை - கண்ணி - உன்னமரம் - பறைந்தன - துவைத்த - உராஅய் - வால் - சூடு - அணங்கு - பைஞ்ஞிலம் - முக்கி - ஊதும் - தாடி - கதுவாய் - எய்யாதாகின்று - நள் - தா - யாண் - இடுக - தடம் - உரை - பாறு - குரால் - புரவு - போலாய் - வயலை - உகரச்சுட்டு - களர்படுபூவற்படு - பம்பு - பீள் - கருப்பை - தண்பணை - கொளீஇ - மொக்குள் - படப்பை - கொண்டியள் - மாற்றம் - நிரல் - குடை - வள்ளி - உகை - களரி - வைகல் - வெள்ளென - வளிவழக்கு - வேய்வை - போழ் - வாள்மடல் - பறவை - பதவு - கதழிசை - தொழுவர் - பாணி - கொண்டி - பொருநன் - தண்டல் - திரங்க - புன்றலை - பெரும்பட்டீரம் - எஃகு - பிற்சோ;க்கை - 1, 2, 3. முதலிய உடதலைப்புகளைக் கொண்டமைகின்றது.
இக்கட்டுரையின் நிறைவாக,
1. தமிழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக கே. என். சிவராஜபிள்ளை திகழ்கின்றார்.
2. இவருடை ஆய்வு வரலாற்று அணுகுமுறையைக் கொண்டதாக அமைகின்றது.
3. தம்கருத்தை நிலைநாட்ட சங்கப் பாடல்களையும் வடமொழி நூற்களையும் துணையாகக் கொள்கின்றார். இதிலிருந்து இவர் இருமொழி அறிஞர் என்பது புலனாகின்றது.
4. இவர் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் என்று கூறும் அளவிற்கு இவருடைய ஆய்வுகள் அமைந்துள்ளன. பண்டைய அரசர்களின் வழித் தோன்றல்களை அட்டவணைப்படுத்துவதன் வழி இவருடைய புலமையை அறியலாம்.