தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை பெறுவது எப்படி?
கணேஷ் அரவிந்த்
தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவிப் பணம் அளிக்கப்படுகிறது
ஆதரவற்ற முதியோர்
தமிழ்நாடு அரசு, கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிட்டு வரையறை செய்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்துச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
* அரசு பதிவு பெற்ற மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த மாமன்ற /நகர்மன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பம் ஆய்வு
இந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின்பான பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ400 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.